ஹிராகுட் போனதுமே எனக்கு உதவியாக இருந்தவர் செல்லஸ்வாமி என்று சொல்லியிருக்கிறேன். எங்கோ தமிழ் நாட்டு மூலையில் இருக்கும் கிராமத்திலிருந்து இங்கு வேலை பார்க்க வந்திருக்கும் 16 வயதுச் சிறுவனுக்கு வயதில் konjam மூத்த நண்பனாக சொல்லாமலேயே வழிகாட்டியாக இருந்தவர்களில் செல்லஸ்வாமி முக்கியமானவர். வயதில் நாற்பதைத் தாண்டிய எஸ். என். ராஜாவுக்கு அடுத்த படியாக என்று சொல்ல வேண்டும். அவர் இருந்த வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளியிருக்கும் ஜனார்த்தனன் என்பவரின் வீட்டில் இருந்த அவருடைய விதவைத் தாய்க்கும் சின்ன குட்டித் தங்கைக்கும் நான் பிரியமானது போல, அங்கு வந்த அமுத சுரபி பத்திரிகை மூலம் க.நா.சுப்பிரமணியத்தின் ஒரு நாள் தெரிய வந்தது போல, செல்லஸ்வாமி வீட்டில் நான் முதன் முதலாகப் படித்த ஆங்கிலப் புத்தகம் Andre Maurois என்னும் ஃப்ரெஞ்ச் எழுத்தாளரின் சுயசரிதமாகிய Call No Man Happy என்னும் புத்தகம் அதில் என்ன படித்தேன் என்பது இப்போது அனேகமாக மறந்துவிட்டது. என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், அது தான் புத்தகமாக ஒரு தொடக்கம். எனக்கு இப்போது வெகு மங்கலாக நினைவில் இருப்பதெல்லாம் அவரது இளம் வயது காதல்களைப் பற்றியும் ஷெல்லி, பைரன் போன்ற ஆங்கில கவிஞர்கள் மீது அவருக்கு இருந்து பிடிப்பு பற்றியும், அவர் பின்னர் French Academy யால் கௌரவிக்கப்பட்டது பற்றியும் எழுதியிருந்தார் என்று நினைக்கிறேன். இது ஒன்றும் எனது தேர்வு இல்லை. செல்லஸ்வாமி வீட்டில் இருந்தது, எளிதாகக் கிடைத்த முதல் புத்தகம். படித்தேன்.
அதில் இன்னொரு விசேஷம் அந்த புத்தகத்தின் மார்ஜினில் எளிய கோட்டுச் சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன. அந்தப் புத்தகத்தின் பக்கங்களை வேகமாகப் புரட்டினால் அந்த சித்திரங்கள் சலனிக்க ஆரம்பித்துவிடும். சலனப் படங்களின் ப்ரேம்கள் 16 ப்ரேம்கள் கொஞ்சம் கொஞ்சமாக அடுத்தடுத்த சலனத்தை படம்பிடித்திருப்பதால் வேகமாக அவை ஓட்டப்படும்போது சலனச் சித்திரத்தை நாம் பார்க்கிறோம். இதன் எளிய ஆரம்பப் பயிற்சி தான் அந்தப் புத்தகத்தின் மார்ஜினில் வரையப்பட்டிருந்த எளிய கோட்டுச் சித்திரங்கள்.
இது எனக்கு ஒரு புதிய வேடிக்கையான அனுபவமாக இருந்தது. எனக்கு மாத்திரமல்ல. செல்லஸ்வாமி வீட்டுக்கு வரும் நண்பர்கள் எல்லாருக்குமே அந்தப் புத்தகம் கண்களில் பட்டு விட்டால் அதை எடுத்து புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டி வேகமாக சலனிக்கும் அந்தச் சித்திரங்களை வேடிக்கை பார்ப்பது தான்.ஒரு பொழுது போக்காக இருந்தது. தெரிந்தவர்கள் மாத்திரம் அல்ல. புதிதாக யார் வந்தாலும், “ஒரு வேடிக்கை பாக்கறியா, “ என்று சொல்லி புதிய ஆளுக்கும் அதைப் பழக்கப் படுத்துவது வழக்கமாக இருந்தது. அந்த சீரியஸ் புத்தகம், கடைசியில் அது வீட்டுக்கு வருகிறவர்களுகெல்லாம் எளிதில் பார்க்கக் கிடைக்கும் ப்ளே பாய்” போன்ற ஒரு பத்திரிகையாயிற்று. “போதுமே எத்தனை தடவை அதைப் பார்த்தாச்சு” என்று செல்லஸ்வாமி அலுத்துக்கொள்வார்.
அதை நான் படிக்கத் தொடங்கியிருந்ததால் வேலைக்குச் சேர்ந்ததும் அந்த சந்தோஷத்தை மாமாவிடம் பகிர்ந்து கொள்ள அந்த வார சனிக்கிழமையே ஜெம்ஷெட்பூர் போயிருந்த போது Call No Man happay புத்தகத்தையும் எடுத்துச் சென்றிருந்தேன். அதைப் பார்த்த மாமா, “என்னடா படிக்கறே” என்று கேட்டு அதை வாங்கிப் பார்த்தார். “ முதலில் இதையெல்லாம் ஏண்டா படிக்கறே” என்று ஆரம்பித்தவர், புத்தகத்தின் சில பக்கங்களைப் படித்த பிறகு, “நல்ல புத்தகமாத்தான் படறது, அதை இப்படி கெடுத்து வச்சிருக்கே.” என்று முகத்தைச் சுளுக்கிக் கொண்டார். ”யாரோடதுடா இது?” என்றவர் அதில் செல்லஸ்வாமி கையெழுத்து இருந்ததைப் பார்த்து மௌனமானார்.
என் முதல் ஆங்கில வாசிப்புத் தொடக்கம் இப்படித் தான் இருந்தது என்று சொல்லத் தான். இதைத் தொடர்ந்து நான் படித்தது John Steinbeck – ன் Pasteurs of Heaven. ஸ்டைய்ன் பெக் மிகப் பெயர் பெற்ற அமெரிக்க எழுத்தாளர் என்பதோ, அவர் அமெரிக்க இயல்பு வாழ்க்கையை, எளிய விவசாய, மக்களின் வாழ்க்கையைச் சித்தரித்தவர் என்பதெல்லாம் பின்னர் தெரிந்து கொண்டது. அப்போது அதில் அவர் சித்தரித்திருந்த கலிபோர்னிய கிராம மக்களின் அன்றாட வாழ்க்கைச் சித்திரம் என்பது தான் இப்போது என் நினைவில் இருப்பது.
தமிழ் புத்தகங்கள் தான் நிறைய, அப்போது அங்கு கிடைத்த அளவில் படித்த்தேன் என்று சொல்ல வேண்டும். ஆங்கில இலக்கியம் படித்தது தமிழை விட குறைவு தான். அங்கு எனக்கு கிடைத்த அரிய நண்பனான மிருணால் காந்தி சக்கரவர்த்தியின் நட்பு காரணமாகவும், எனக்கு அதில் ஈர்ப்பு அதிகம் இருந்ததன் காரணமாகவும் பெர்னார்ட் ஷாவைத் தவிர நான் அதிகம் படித்தது ஆங்கிலத்தில் இலக்கியம் அல்லாத சரித்திரம், தத்துவம், அரசியல் சார்ந்த எழுத்துக்களே. தத்துவமும் எளிய முறையில் எனக்கு அறிமுகப்படுத்திய C.E.M. Joad, Will Du Rant, Bertrand Russel ஆகியோர் தான். C.E.M Joad என்றால் அவருடைய Guide to Philosophy, Guide to Philosophy of Science, Guide of Philosophy of Politics, Russel என்றால் அவருடைய Principia Mathematica ஓ அல்லது Logic and Mathematics ஒ போன்றவை அல்ல. என்னால் படிக்க முடிகிற அவருடைய Sceptical Essays, Portrait from Memory and other Essays, Marriage and Morals, Unpopular Essays, போன்ற popular books, Dialogue with Whitehead (Alfred North Whitehead) இப்படி. அந்த வயதில் மெட்ரிகுலேஷன் வரை படித்த ஒருவன் படிப்பதில் தெரிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவன் ஜீரணிக்கக் கூடிய புத்தகங்கள் எல்லாமே, அப்புறம் டா. ராதாக்ரிஷ்ணனின் Bhagavat Gita, Hindu View of Life, அரவிந்த கோஷின் Life Divine . ம் சேர்த்தி, எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறவற்றையெல்லாம் சொல்லி விட்டேன். இவற்றை எனக்கு வீட்டு வாசலில் கொண்டு சேர்த்தவர் இன்னும் என்னென்ன வெல்லாம் படிக்கலாம் என்று வழி காட்டியவர், என்னிலும் அதிகம் படித்தவரும் மூத்தவரும், மரியாதைக்குரியவரும், ஒரு தவம் போல, ஒரு துறவி வாழ்க்கையில் கொள்ளும் தொட்டும் தொடாததுமான உறவில் ஏதோ காய்கறி விற்பது போல எனக்கு வேண்டிய நான் கேட்ட, அவர் நான் படிக்க வேண்டும் என்று விரும்பிய புத்தகங்களை பத்து மைல் தூரத்தில் இருக்கும் சம்பல்பூரிலிருந்து சைக்கிளில் தொங்கவிட்ட பைகளில் எடுத்து வந்த கொடுத்த பாதி என்னும் அன்பர். இப்படி ஒரு புத்தகம் விற்பவரா, சைக்கிளில் தினம் இருபத்தைந்து முப்பது மைல்கள். ஏதோ ஹிந்து தினமணி விற்பவன் மாதிரி. அவர் மனைவி காலேஜிலோ அல்லது ஹைஸ்கூலிலோ ஆசிரியையாகப் பணி புரிவதாகச் சொல்லியிருக்கிறார், ஒரு நாள் பேச்சு வாக்கில். அவர் அருமையும் பெருமையும் எங்களுக்குத் தெரியும். என்னுடன் என் அறையில் இருந்தவர் அனைவருக்கும் அவர் எங்களுக்கு பெரியவர். மிகுந்த மரியாதைக்குரியவர். ஆனால் மற்ற இடங்களில்? என்னவோ தெரியாது. எங்கள் முன்னால் அவர் எப்போதும் சிரித்த முகத்துடன் தான் காட்சி தந்தார்
அந்த காலத்தில் அதாவது ஐம்பதுகளின் முன் பாதியில் பிரபலமாகியிருந்த Pearl S. Buck – கின் Good Earth. கொண்டு வந்து கொடுத்தார். எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. வாங் லங் என்னும் ஒரு சாதாரண எளிய விவசாயி படும் இன்னல் நிறைந்த வாழ்க்கையைச் சித்தரித்தது. அதில் இரண்டு காட்சிகள் எனக்கு இன்னமும் நன்கு நினைவில் இருக்கின்றன. ஒன்று சைனாவில் அவ்வப்போது வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு நிகழும். பயிர் விளைந்த நிலங்கள் எல்லாம் பாழாகும். அவை தூரத்திலிருந்து வரும்போதே ஏதோ தூரத்தில் வானம் முழுதும் கருத்த மேகங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது போலும் அவை பயங்கரமாக வேகத்தோடு நம்மை நோக்கி வருவது போலும் இருக்கும். வாங் லங்கும் சீன விவசாயிகளும் அதை அழிக்கப் படும் போராட்டத்தை மிக விரிவாக எழுதியிருப்பார் பக். அவர் சைனாவிலேயே தன் வாழ்நாளில் பெரும் பகுதியைக் கழித்தவர். சீன மொழி அறிந்தவர். ஒரு பழைய சீன classic, All Men are Brothers – ஐக்கூட ஆங்கிலத்தில்மொழி பெயர்த்திருக்கிறார் என்று நினைவு. That was Wang Lang’s birthday என்று ஆரம்பிக்கும் அந்த நாவல் கடைசியில் வாங் லங் மரணப் படுக்கையில் தன் மக்கள் சூழக் கிடக்கும் காட்சி. தன் கடைசி விருப்பமாக, ”நிலத்தை விற்றுவிடாதே, கிராமத்தை விட்டுப் போய்விடாதே” என்று தன் பிள்ளைகளைக் கெஞ்சுவான். அவர்களும் சரி என்று சொல்லிக்கொண்டே ப்ரஸ்பரம் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகை புரிந்து கொண்டார்கள்,” என்று நாவல் முடியும். எனக்கு மிகவும் பிடித்திருந்தாலும் பின்னர், நோபல் பரிசு சரியான ஆட்களுக்குப் போய்ச் சேர்வதில்லை என்பதற்கு பேர்ல் எஸ் பக்கிற்கு அப்பரிசு கிடைத்தது ஒரு உதாரணம் என்று உலவிய அபிப்ராயங்களைப் பின்னர் படித்த்தேன். அது எப்படி இருந்தாலும், அப்போது அவரது இன்னொரு நாவல், Pavilion of Women கிடைத்தது என்று பாதி கொண்டு வந்து கொடுத்தார். சீன தாசிகள் சமூகத்தைப் பற்றியது.
அது மட்டுமல்ல. புர்லாவில் இருந்த போதே Good Earth திரைப் படமும் பார்க்கக் கிடைத்தது. ஒரு அரிய அனுபவம். அறுபது வருடங்கள் கழித்தும் அது பற்றிப் பேசத் தகுந்த அனுபவம். மிகவும் பின் தங்கிய ஒரிஸ்ஸாவின் ஒரு அணைகட்டும் முகாமில் தற்காலிகமாக எழுப்பப் பட்டுள்ள ஒரு டெண்ட் கொட்டகையில் Good Earth பார்க்கக்கிடைத்த அதிர்ஷ்டத்தைப் பற்றி அறுபது வருடங்களுக்குப் பின்னர் எழுதுவேன் என்பது நினைத்துப் பார்க்க இயலாது. அதில் வாங் லங்காக நடித்திருந்த Paul Muni என்னும் உலகின் மிகச் சிறந்த நடிகராக அறியும் வாய்ப்பும் அங்கு தான் கிடைத்தது. அவர் அதிகப் படங்களில் நடித்ததில்லை என்று சொல்லப்படுகிறது. நான் அதில் ஒன்றையாவது பார்த்திருக்கிறேனே, இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் இருந்த காலத்தில், என்பதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் தான். வாங் லங்காக நடிப்பதற்கும் அக்காலத்திய சீன விவசாயியின் அன்றாட வாழ்க்கையை அறிந்து கொள்வதற்கும் அவனதே யான பேச்சு, நடை, பாவனைகளை அறிய முதலில் அங்கு வாழ்ந்து கற்றுக் கொண்டார் என்றும் பால் முனியைப் பற்றிச் சொல்லப்பட்டது
Marlon Brando, Toshiro Mifune, chhabi biswas Max von Sydow போன்று இன்னும் சிலர், பெயர்கள் சட்டென நினைவுக்கு வருவதில்லை, இப்பெரிய கலைஞர்களின் தரத்தில் உள்ள பால் முனியையும் ஒரு சில படங்களே நடித்திருந்த பால் முனியின் ஒரு படத்தையாவது அந்த முமாமில் பார்க்கக் கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது..