தமக்குள் எதிரியை தேடும்
மைதானத்தில் ஊடுபயிராக
மனிதம் துளிர் விடுகிறது.
உயிர் வலித்து
குருதி பருகும் உடல்
ஆத்மா எனும் அந்நியனுக்கு
அரிதாரம் பூசுகிறது.
ஒளி மறந்த தீயின் குளிர்
வேள்வியின் திசையெங்கும்
ஏடுதுவங்கும் உதிர்வின் பேச்சு.
பறக்கின்ற காற்றில்
உனது மூச்சுக்காற்று எது?
ஓடுகின்ற ஆற்றில்
நீ விட்ட கண்ணீர் எது?
பொன்னாடை போர்த்தி பொலிவேற்ற
மெய்களுக்கு
பாடைகட்டி பலியிடும் திருவிழாவை
ஆத்மீகமென ஆசுவாசப்படுத்திக்கொள்.
சுயமானம் எனும் ஆடையை
பூசையறையில் அடைவுவைத்து
பயம் எனும் கண்ணாடியிலையை
காலமெல்லாம் அணிந்துவர
சபிக்கப்பட்ட இனமானத்தவர் நாம்.
அறத்தை ஆணவக்கொலை செய்து
ஆணவத்தின் நிழலை
வழிபட வலியுறுத்தும் வல்லாதிக்கம் எங்கும்.
காடழித்து கழனியமைத்து
நாகரிக விதை விதைத்த
மண்ணின் மைந்தர்களுக்கு மட்டும்
`அகதி´ என பொட்டுக்கட்டி
காடுகளுக்கும், வனாந்தரங்களுக்கும்
நேர்ந்து விடப்படுகின்ற அமானுஷ்ய சக்தி
வந்தேறு குடிகளுக்கு வந்துவிடுகிறது.
கண்கள் பிடுங்கப்பட்டும்
வாய்கள் சிதைக்கப்பட்டும்
முன்னோரின் சாட்சியமாக
ஊர் எல்லைகளில் காவல் தெய்வங்கள்
காத்துக்கிடக்கின்றன,
காத்து நிற்கின்றன.