ஆய்வு: தொல்காப்பியத்தில் களவுக்கால மெய்ப்பாடுகள் – ஓர் ஆய்வு

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -முன்னுரை

தொல்காப்பிய களவுக்கால மெய்ப்பாடுகளில், சந்திப்பு முதல் புணர்ச்சி வரையில் நடைபெறும்; பன்னிரண்டு மெய்ப்பாடுகளை மூன்று நிலைகளாக அடுக்கலாம். அவை, காட்சி முதல் நிலைக்கண் நிகழும் மெய்ப்பாடுகள், வேட்கை இரண்டாம் நிலைக்கண் நிகழும் மெய்ப்பாடுகள், புணர்ச்சி மூன்றாம் நிலைக்கண் நிகழும் மெய்ப்பாடுகள் என்பனவாகும். இவற்றைக் குறித்து இக்கட்டுரை ஆராயவுள்ளது.

காட்சி

முதலில் தலைவனும் தலைவியும் எதிர்ப்படும்போது தலைவியின் உள்ளத்தில் எழும் காதல் முதற்குறிகளை உணர்த்துவது இது. மேலும், இருவரும் புதிதாக எதிர்ப்பட்டதும் தலைவியின் உள்ள உணர்ச்சியால் தோன்றும் அம்மெய்ப்பாட்டுக் குறிப்பு (முதல்நிலை மெய்ப்பாடுகள்) நான்கினையும்,

“புதுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல்
நகுநய மறைத்தல், சிதைவுபிறர்க் கின்மையொடு
தகுமுறை நான்கே ஒன்றென மொழிப” (மெய்.13)

என ஆசிரியர் கூறியுள்ளார். தலைவனும் தலைவியும் முதல் சந்திப்பில் அன்புறும் போது, தலைவியின் உள்ளத்துத் தோன்றும் காதலின் வெளிப்பாடு புதுமுகம் புரிதல், பொறிநுதல் வியர்த்தல், நகுநய மறைத்தல், சிதைவு பிறர்க்கின்மை என நான்கு மெய்ப்பாடுகளாக வெளிப்படுகின்றன.

புதுமுகம் புரிதல்

தலைமக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது நேருக்கு நேர் காதல் உணர்ச்சி ததும்புமாறு காணுவது காதலர்கள் தனது மனக்குறிப்பை முகத்தில் வெளிப்படுத்துவது. தலைவனின் காதல் பார்வைக்கு தலைவி மனம் இசைந்து தனது மனமும் கொண்ட முடிவை, விருப்பத்தை முகமலர்ச்சி என்ற உடல் மொழியால் தெரிவிக்கின்றாள். இரு மனமும் ஈர்க்கப்பட்டு இரண்டறக் கலக்கின்றன. விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவாக இது அமைகிறது. மன உணர்வுகளை முகத்தைப் போல் வெளிகாட்டும் திறமை வாய்ந்த கருவி வேறு எதுவும் இல்லை.

பொறிநுதல் வியர்த்தல்

தலைவன் விருப்பத்துடன் நோக்கிய நோக்குக்கு எதிர்ப்பார்வை பார்த்த தலைவி நாணம் கொள்கிறாள். அவள் உள்ளத்தில் காதல் உவகையாய் ஊற்றெடுக்கிறது. காதல் மனப்போராட்டத்தில் அடுத்து என்ன பேசுவதென்ற திகைப்பில், அச்சத்தில், ஒரு வகையான பயத்தில் மேனி பரவசமடைகின்றன. இந்நிலையில் அவளது நெற்றியில் குறு வியர்வைத் துளிகள் தோன்றி அவள் காம உணர்வை வெளிப்படுத்துகின்றன. இங்குறு வியர்த்தல் என்ற உடல்மொழி பெண்மையின் ஒருமித்த பண்புகளை வெளிப்படுத்துவதுடன் தலைவனைப் போல் உடனடியாக வெளியிடமுடியாத நிலையையும் சுட்டுகிறது.

நகுநயம் மறைத்தல்

தலைவனைக் கண்ட தலைவி அவன் கூறுவதைக் கேட்டோ (அ) அவன் பால் தோன்றும் குறிப்பினை அறிந்தோ தன் உள்ளக் குறிப்பினை உணர்த்த முற்படும்போது சிரிப்பு வருகிறது. இருந்தாலும் சிரிப்பை அடக்கிக்கொண்டு, அதனை அவர் அறியாது மறைப்பாள். இதுவே நகுநய மறைத்தல் எனும் மெய்ப்பாடாகும். இம்மெய்ப்பாடு உள்ள மகிழ்ச்சியின் வெளிப்பாடாகும்.

சிதைவு பிறர்க்கின்மை

ஒரு பெண் தன் காம உணர்வை வெளிப்படுத்துவது என்பது இயல்பான ஒன்று அல்ல. பெண்மைக்குரிய சாயலே அதனை வெளிக்காட்டா வண்ணம் வாழ்வின் அம்சங்களை ஒழுகுவது ஆகும். தனது உள்ளச்சிதைவை மற்றவர்க்கு புலனாகாமல் மறைக்க, கூந்தலில் மறைத்தல், தலைகுனிதல், கால்விரல்களால் நிலத்தைக் கிளறுதல் போன்ற செயல்களினால் முகத்தை வெளிக்காட்டாமல் மறைப்பாள். வேண்டிய மட்டும் மறைத் தொழுகுதல் பெண்ணின் இயல்பு. மேற்கூறப்பட்ட நான்கு மெய்ப்பாடுகளையும் களவிற்குரிய முதற் கூறுகளாகத் தொல்காப்பியர் வகுத்துரைத்துள்ளார்.

வேட்கை

அடுத்ததாக களவிற்குரிய இரண்டாம் கூறுகளாகத் தொல்காப்பியர் பின்வருவனவற்றை வகுத்துரைத்துள்ளார். தலைவனைக் கண்டு காதல் கொண்ட தலைவிக்கு அவனை அடைய வேண்டும் என்னும் உள்ள வேட்கை எழும், அவ்வேட்கையினைத் தலைவன் உணருமாறு மெய்ப்பாடுகளால் காட்டுவாள். அவை, கூழை விரித்தல், காதொன்று களைதல், ஊழணிதைவரல், உடைபெயர்த்துடுத்தல் என்னும் நான்கும் ஆகும். இவை வேட்கை மிகுதியால் தலைவியிடம் தோன்றும் மெய்ப்பாடுகள் ஆகும். இதனை,

“கூழை விரித்தல் காதொன்று களைதல்
ஊழணி தைவரல் உடைபெயர்த் துடுத்தலொடு
கெழீஇய நான்கே இரண்டென மொழிப.”(நூ.14)

எனத் தொல்காப்பியர் கூறியுள்ளார்.

கூழை விரித்தல்

கூந்தலின் மயிர்க்கால்கள் உணர்வு மிக்கன. உள்ள நெகிழ்வாலும், வேட்கை மிகுதியாலும் உணர்வு மிக்க மயிர்க் கால்களைக் கொண்ட தலைவியின் கூந்தல் நெகிழ்வடையும். இதுவே, கூழை விரித்தல் என்னும் மெய்ப்பாடாகும். இதன் வெளிப்பாடாகவே “கூந்தல், கண், நெற்றி, தோள் முதலியவற்றைப் பாராட்டுதல், கையைக் கண்களில் ஒற்றுதல் முதலிய சரிசெய்தல் நடத்தையில் செயல்களாக உள்ளன.”1 எனக் கொள்ளலாம்.

காதொன்று களைதல்

கைகளால் காதணிகளுள் ஒன்றைக் கழற்றுவது போல் முற்படுவாள் தலைவி. தன்னை அறியாது கையால் நிகழும் இச்செயலால் தலைவியின் வேட்கை மிகுதியினைத் தலைவன் அறிந்து கொள்வான்.

ஊழணி தைவரல்

தலைவி தான் அணிந்துள்ள தொடி, வளை முதலியவற்றைத் தலைவன் முன்னிலையில் நழுவாது செறிப்பது போலத் தழுவுதல் ஊழணிதைவரல் என்னும் மெய்ப்பாடு ஆகும். இம்மெய்ப்பாட்டால் தலைவியின் உள்ளப் பாங்கைத் தலைவன் அறிவான். புணர்ச்சி வேட்கை உடைய தலைவி தன் உள்ளத்துணர்வுகளை ஊழணி தைவரல் மெய்ப்பாடு மூலம் தலைவனுக்கு உணர்த்துகின்றாள்.

உடைபெயர்த்துடுத்துதல்

உடுத்திய உடையினைச் சரி செய்வதும், கலைத்து மீண்டும் உடுத்துவதும் இம்மெய்ப்பாடாகும். காதல் வேட்கையால் உள்ளத்துணர்ச்சி உடலில் வெளிப்படக் குழையும், உடலில் சரியும் உடையினைத் திருத்தி அணிந்து கொள்ளுவாள் தலைமகள்.

புணர்ச்சி

அடுத்ததாக களவிற்குரிய மூன்றாம் கூறுகளாகத் தொல்காப்பியர் பின்வருவனவற்றை வகுத்துரைத்துள்ளார். அவை, புணரச்சி மீதான ஆசை அதிகரித்த தலைமக்கள் தனியாக குறியிடத்துச் சந்திக்கின்றனர். உள்ளத்தில் புணர்ச்சி குறித்த எண்ணம் மிக்கு காணப்படுகின்றது. அந்நிலையில் புணர்ச்சிக்குரிய தலைவி, தன் உள்ளத்துப் புணர்ச்சியினை கீழ்காணும் மெய்ப்பாடுகளால் வெளிப்படுத்துவாள். அவை,

“அல்குல் தைவரல் அணிந்தவை திருத்தல்
இல்வலி யுறுத்தல் இருகையும் எடுத்தலொடு
சொல்லிய நான்கே மூன்றென மொழிப.”(
நூ.15)- என்பனவாகும்.

அல்குல் தைவரல்

இது புணர்ச்சி விருப்பத்தைத் தெரிவிக்கும் மெய்ப்பாடு. புணர்ச்சி வேட்கையுடைய தலைவி, தனது நெகிழ்வடையும் உடையைச் சரி செய்து பெண் குறியைப் பேணுவதே அல்குல் தைவரல் என்னும் மெய்ப்பாடாகும். “உடை பெரிதும் நெகிழ்ந்த நிலையில் தன் கையால் அற்றம் மறைத்தல் ‘அல்குல் தைவரல்’ எனப்படும்.”2 என அப்துல்கரீம் கூறுவர்.

அணிந்தவை திருத்தல்

தலைவன் வளையலையும், பிற அணிகளையும் இட்டும், தொட்டும் இணையன செய்வான். ஆனால், அதனை அவள் விரும்பாதவள் பொல அடிக்கடி சரிப்படுத்திக் கொள்ள முயல்வாள். இதுவே அணிந்தவை திருத்தல் மெய்ப்பாடாகும்.

இல்வலியுறுத்தல்

புணர்ச்சி வேட்கையினால் உள்ளம் தளர்வுரும். அப்பொழுது தன் உளநிலையைத் தலைவன் அறியாதவாறு, அதாவது புணர்ச்சியை விரும்பாதவள் போல் கூறுவது இம்மெய்ப்பாடாகும். இதனை உளவியலார், “உண்மையின் சில தொல்லையுறுத்தும் கூறுகளை அல்லது உண்மையின் சிறப்புக் கூறுகளை ஏற்க இயலாமையினால் தன்னியக்கமாகவும் தன்னியல்பாகவும் அவற்றை அறிநிலையில் இருந்து விலக்குவதே மறுப்பு.”3 என்பர்.

இருகையுமெடுத்தல்

புணர்ச்சி வேட்கையுடைய தலைவி, தன் இரு கைகளாலும் தலைவனைத் தழுவுதல் இம்மெய்ப்பாடாகும். “தன் மெய்த்தொட்டுப் பயிலும் தலைவன் தழுவக் குழைபவளுக்கு, முன் தான் கரந்த காதல் கைம்மிக, உடல் சிந்தை வசமாவதால், அவள் கருதாமலே கைகள் தாமே அவனைத் தழுவுவது இயல்பு என்கின்றார்”4 ச. சோமசுந்தர பாரதியார்.

புணர்ச்சிக்குப் பின் களவு வெளிப்படும் வரையில் நிகழும் மெய்ப்பாடுகள்

புணர்ச்சிக்குப் பின் களவு வெளிப்படுங்காறும் நிகழ்வன, பாராட்டெடுத்தல் முதல் கையறவுரைத்தல் வரை பன்னிரண்டு மெய்ப்பாடுகளாகும். இதனை, இயற்கைப் புணர்ச்சிக்கு அடுத்த நிலை, இற்செறிக்கப்பட்ட தலைவியிடம் நிகழும் மெய்ப்பாடுகள், தலைவியின் தனிமையில் தோன்றும் மெய்ப்பாடுகள் என மூன்று நிலைகளனில் இம்மெய்ப்பாடுகள் தோன்றும்.

இயற்கைப் புணர்ச்சிக்கு அடுத்த நிலை

களவிற்குரிய நான்காம் கூறுகளாகத் தொல்காப்பியர் இயற்கைப் புணர்ச்சிக்கு அடுத்த நிலையினை, பாராட்டெடுத்தல், மடந்தப உரைத்தல், ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல், கொடுப்பவை கோடல் எனும் நான்கு நிலையினில் தோன்றும் என்பதனை,

பாராட் டெடுத்தல் மடந்தப வுரைத்தல்
ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல்
கொடுப்பவை கோடல் உளப்படத் தொகைஇ
எடுத்த நான்கே நான்கென மொழிப.”(நூ.16)

எனும் நூற்பாவினில் கூறியுள்ளார்.

பாராட்டெடுத்தல்

புணர்ச்சிக்குப்பின் தலைமக்கள் ஒருவர் மற்றவரின் நல்லியல்புகளை வியந்து பாராட்டுதல் இம்மெய்ப்பாடாகும். இதனை, “புணர்ச்சி நிகழ்ந்த பின்னர்த் தலைமகனது பெருமையை நினைந்து தலைவி பாராட்டும் உள்ளக் குறிப்பினளாதல் ‘பாராட்டெடுத்தல்’ எனப்படும்.”5 என்று மு. பொன்னுசாமி கூறியுள்ளார்.

மடந்தப உரைத்தல்

பெண்களுக்கு இயல்பாக உள்ள பண்பு மடம். அம்மடம் கெட வேட்கையினைத் தலைவி, தலைவனிடம் உரைப்பது இம்மெய்ப்பாடாகும். இதனை, “தலைவனோடு காதல் அரும்புவதற்கு முன் தலைவியின் பேச்சில் நிலைப்புத் தன்மை இருக்கும். இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் அவளது பேச்சில் மாற்றம் இருக்கும். மாற்றம் தோன்ற உரைக்கவும் செய்வாள். விளையாட்டுப் பருவத்தே உலகியலறியாத் தன்மையோடு மடம் என்னும் இயல்பான குணம் உடையவளாக இருக்கும் தலைவிபால் புணர்ச்சிக்குப் பின் காமப் பொருட்கண் சிந்தையும் மொழியும் செல, மடம் கெட வேட்கை மிகுதியை உரைத்தலே மடந்தப உரைத்தல் என்னும் மெய்ப்பாடாகும்.”6 என மு. பொன்னுசாமி கூறியுள்ளார்.

ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல்

களவொழுக்கமானது தன் சுற்றத்தார்க்கும் ஏனையோருக்கும் அறிய வந்துவிடுமோ? எனும் காரணம் பற்றி தலைவியிடம் தோன்றும் நாணத்தையும், களவொழுக்கத்தில் இந்த குமரிக்கு இவரோடு தொடர்புண்டு எனக் கூறக் கேட்டு தலைவி நாணுதலையும், ‘ஈரமில் கூற்றம் ஏற்று அல் நாணல்’ என்பர். இதனை, “களவொழுக்கத்தில் இன்ன குமரிக்கு இன்னானோடு காதலுண்டு; தொடர்புண்டு என ஊராரும் சேரியாரும் கூறும் அருளில்லாத கூற்றைக் கேட்டு அலராயிற்றெனத் தலைவி நாணமடைவதே ‘ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல்’ என்னும் மெய்ப்பாடாகும்.”7 என மு.பொன்னுசாமி கூறியுள்ளார்.

கொடுப்பவை கோடல்

தலைவன் தலைவியைச் சந்திக்கும் போது கையுறையாகத் தருவனவற்றை உள்ள உறவை உலகோர் அறிந்து கழறுவர் எனக் கூறிய தலைவி அவனோடு தனக்குள்ள உறவின் ஆழத்தைப் புலப்படுத்துவான் வேண்டி ஏற்பாள். இதனை ‘கொடுப்பவை கோடல்’ என்பர். உறவின் பிணைப்பை வலுப்படுத்த விழையும் தலைவியின் உள்ளத்தை இம்மெய்ப்பாடு காட்டும்.

இற்செறிக்கப்பட்ட தலைவியிடம் நிகழும் மெய்ப்பாடுகள்

களவில் புணர்ச்சிக்கு ஆட்பட்டு தலைமக்கள் இரவென்றும், பகலென்றும் பாராமல் சந்தித்து வந்தனர். அவ்வாறு சந்தித்து வந்த தலைமக்களின் காதல் அலர், அம்பல் எனும் ஏதாவது ஒருவழியில் தலைமகளின் இல்லத்தில் உள்ளோர் அறிய தலைவி இற்செறிக்கப்படுவாள். அவ்வாறு இற்செறிக்கப்பட்ட தலைவியிடம் களவின் ஐந்தாம் கூறுக்குறிய மெய்ப்பாடுகள் தோன்றும். அவை, தெரிந்துடம்படுதல், திளைப்புவினை மறுத்தல், கரந்திடத் தொழிதல், கண்டவழி உவத்தல் என்பன. இவற்றை, தொல்காப்பியர் பின்வருமாறு வகுத்துரைத்துள்ளார்.

“தெரிந்துடம் படுதல் திளைப்புவினை மறுத்தல்
கரந்திடத் தொழிதல் கண்டவழி உவத்தலொடு
பொருந்திய நான்கே ஐந்தென மொழிப.”(நூ.17)
தெரிந்துடம்படுதல்

தலைவன் கூறுவனவற்றை ஆராய்ந்து அவற்றிற்கு உடம்படுதலும், உடன் போக்குக்கு உடன்படுதலும், தெரிந்து உடம்படுதல் என்னும் மெய்ப்பாடாகும். காதல் வயப்பட்ட நிலையில் தலைவன் கூறுவன அனைத்துமே தலைவிக்கு இன்பம் அளிப்பன. அவற்றால் தலைவன் கூறுவனவற்றை உணர்ந்து தன் உடன்பாட்டினைத் தெரிவித்துள்ளாள் என்பது இதன் பொருள்.

திளைப்புவினை மறுத்தல்

தலைவனோடு காதல் கொள்வதற்கு முன் ஏதும் அறியாத தலைவி உவகைதரும் விளைவுகளில் விருப்பத்துடடன் உள்ளத்தைச் செலுத்துவாள். காதல் கொண்டபின் நேரும் களவுப்பிரிவின் கண் ஆற்றாத் தனிமையில் உள்ளம் அழிவாள். முன்பு உவகைக்கு உரியவையாயிருந்த அனைத்தையும் வெறுப்பாள். இதுவே திளைப்பு வினை மறுத்தல் எனும் மெய்ப்பாடாகும். இதனை, “உள்ளம் ஓரிடத்தில் செயல் வேறிடம் என்றபோது உள்ளத்தின் வழி செயல் இல்லையாதலின் செயல் தடைபடுகின்றது. அதனால் விளையாட்டு ஆயமொடு திரிபவள் அவ்வுள்ள வேட்கை நலிதலான் அவ்வினையை மறுக்கின்றாள். இதைத் தொல்காப்பியர் திளைப்பு வினை மறுத்தல் என்பர்.”8 என பா. மாலினி கூறியுள்ளார்.

கரந்திடத் தொழிதல்

தலைமகள் பெற்றோரால் இற்செறிக்கப்பட்டதன் காரணமாகத் தன்னால் தலைவனோடு புணர மறுத்ததை நினைத்து மறுத்த ஏதத்திற்கு நாணியும், அஞ்சியும் அவன் முன்னர் செல்லாது வீட்டிற்குள்ளேயே மறைந்து கிடக்கும் எண்ணத்தை உடையவளாக இருத்தல் ‘கரந்திடத் தொழிதல்’ எனப்படும். இதனை, “கரந்திடத் தொழிதல் – அக்காலத்து இற்செறிக்கப்படுதலால் தான் அவனை மறுத்த ஏதத்திற்கு நாணியும் அஞ்சியும் அவற்கு வெளிப்படாது ஒழுகுதலை உடையளாதலும் தன்னிடத்தே தாங்குதலை இடத் தொழிதலென்றான்.”9 எனப் பேராசிரியர் கூறியுள்ளார்.

கண்டவழி உவத்தல்

தலைவன் வரைவோடுவரின் நன்று என நினைப்பாள். பிரிவாற்றாது தனித்து உறையும் தலைவி, தலைவனைக் கண்டு மகிழ்வாள். இதுவே கண்டவழி உவத்தல் எனும் மெய்ப்பாடாகும். இதனை, “களவொழுக்கத்தால், இற்செறிப்புற்ற தலைவி தன் காதலன் நினைவாகவே இருப்பாள். தலைவன் வரைவொடு வரின் நன்று எனவும் நினைப்பாள். பிரிவாற்றாது தனித்துறையும் தலைவி தலைவனைக் கண்டாங்கு கழிபேருவகையடைவாள். இதுவே கண்டவழி உவத்தல் என்னும் மெய்ப்பாடாகும்.”10 என மு. பொன்னுசாமி கூறியுள்ளார்.

தலைவியின் தனிமையில் தோன்றும் மெய்ப்பாடுகள்

தலைமக்கள் கூட்டத்தில் (இயற்கைப் புணர்ச்சியில்) மகிழ்ந்திருந்த தலைமக்கள், இற்செறிக்கப்படுதல் முதலியவற்றால் அவர்களின் கூட்டத்திற்கு இடையூறு நேரிடுகின்றது. அதன்வழி தலைமகனை சந்திக்க இயலாத தலைவி தனிமைப்படுகின்றாள். தனிமையில் இருக்கும் தலைவியை, தனிமைத்துயர் ஆட்டிப்படைகின்றது. இதன்வழி, புறஞ்செயச் சிதைதல், புலம்பித் தோன்றல், கலங்கி மொழிதல், கையறவுரைத்தல் எனும் மெய்ப்பாடுகள் தோன்றுகின்றன. இம்மெய்ப்பாடுகள் களவிற்குரிய ஆறாம் கூறுகளாகக் கொள்ளப்படுகின்றது. இதனைத் தொல்காப்பியர் பின்வருவனவற்றை வகுத்துரைத்துள்ளார். அவை,

“புறஞ்செய சிதைதல் புலம்பித் தோன்றல்
கலங்கி மொழிதல் கையற வுரைத்தல்
விளம்பிய நான்கே ஆறென மொழிப.”(நூ.18)

புறஞ்செய சிதைதல்

களவில் தலைவனைச் சந்திக்க இயலாத தலைவி, அவனது நினைவால் துயர் அடைவாள். அவளது நினைவு முழுமையும் தலைவனைப் பற்றியதாகவே இருப்பதனால் தன்னுடைய உடலை அழகு செய்யாமல் துயருடன் காணப்படுவது இம்மெய்ப்பாடாகும். இதனை, “காதல் வயப்பட்ட ஆண், பெண் இருவருக்கும் ஐந்திணை அன்பு கொண்டவராயின் அதில் அறிவுடன் கூடிய உடற்கூறுகள் செயல்படுகின்றன. ஆனால் கைக்கிளையிலோ ஒருபக்க அன்பாக உள்ளதால் புறஞ்செய சிதைதல் முதலிய உணர்வு வயப்பட்ட செயல்கள் நிகழ்கின்றன. இங்கு அறிவுக்கு வேலையில்லை.”11 என உளவியல் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்துள்ளார் க. மாலினி.

புலம்பித் தோன்றல்

தலைவி தலைவனோடு சேரமுடியாமல் பொலிவு இழந்து காணப்படுவாள். சுற்றம் இருப்பினும் தனியாளாகவே உணர்வாள். அதனை கூறவும் செய்வாள். இதுவே புலம்பித் தோன்றல் எனும் மெய்ப்பாடாகும். இதனை, “களவொழுக்கத்தில் ஆற்றாமையினால் அழியுந் தலைவி தன் விருப்பம் பெறவும் தான் வெறுப்பன விலக்கவும் வழி காணாமல் தாங்காத் தன்மையினால் ஏங்கும் நிலை ‘புலம்பித் தோன்றல்’ எனப்பட்டது”12 எனச் ச. சோமசுந்தர பாரதியார் கூறியுள்ளார்.

கலங்கிமொழிதல்

எவற்றை கூற வருகிறோம் என்பதறியாது மனத்தடுமாற்ற மடைந்து மற்றொன்றை கூறுவது ‘கலங்கி மொழிதல்’ எனும் மெய்ப்பாடாகும். இதனை, “தனிமையுள்ளதாகிய தலைவி கையும் களவுமாகப் பிடிபட்ட கள்வரைப் போன்று தான் சொல்லுவனவற்றை மனத் தடுமாற்றம் தோன்றச் சொல்லுதல் ‘கலங்கி மொழிதல்’ எனப்படும்.”13 என க. வெள்ளைவாரணர் கூறியுள்ளார்.

கையறவு உரைத்தல்

களவுக் காலத்தில் தலைவியிடம் இறுதியாக இம்மெய்ப்பாடு தோன்றும். தலைவனையே நினைந்து செயலற்ற தன்மையினை அடையும் தலைவி, தன் செயலற்ற தன்மையினை வாய்விட்டுக் கூறுதல் ‘கையறவு உரைத்தல்’ எனும் மெய்ப்பாடாகும்.

முடிவுரை

மேற்கூறிய தலைமக்கள் சந்திப்பு முதல் புணர்ச்சி வரை நிகழும் மெய்ப்பாடுகள் அனைத்தும் களவுக்கால மெய்ப்பாடுகள் ஆகும். இவை ஒவ்வொன்றும் தலைமக்களிடம் நிகழ்வன. காதலர்கள் சந்திப்பின் போது இக்களவுக் கால மெய்ப்பாடுகள் அனைத்தும் தோன்ற வேண்டும் என்ற கட்டாயமில்லை. இவற்றில் சில மெய்ப்பாடுகள் மட்டும் கூட தோன்றலாம். சில தோன்றாமலே இருக்கலாம். ஆனால், இவை பொதுவாக நிகழக்கூடிய களவுக்கால மெய்ப்பாடுகள் ஆகும்.

சான்றெண் விளக்கம்

1. து. சிவராஜ்,சங்க இலக்கியத்தில் உளவியல், ப.243.
2. அப்துல்கரீம், இளையோர் உளவியல், தொகுதி – 2, ப.74.
3. வெள்ளைவாரணர், தொல்காப்பிய நுதலிய பொருள், ப.174.
4. ச. சோமசுந்தர பாரதியார், மெய்ப்பாட்டியல், ப.53.
5. மு. பொன்னுசாமி, சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள், ப.117.
6. மேலது, பக்.118 – 119.
7. மேலது, ப.120.
8. பா. மாலினி, செவ்வியல்மொழிகள், இலக்கியங்கள், இலக்கணங்கள், ப.642.
9. பேராசிரியர்(உரை), தொல்காப்பியம், மெய். நூ.17.
10. மு. பொன்னுசாமி, சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள், ப.129.
11. பா. மாலினி, செவ்வியல்மொழிகள், இலக்கியங்கள், இலக்கணங்கள், ப.642.
12. ச. சோமசுந்தர பாரதியார்(உரை), தொல்காப்பியம், மெய். நூ.18.
13. வெள்ளைவாரணர், தொல்காப்பிய நுதலிய பொருள், பக்.176 – 177.


* கட்டுரையாளர்: – முனைவர் பீ. பெரியசாமி    முனைவர் பீ. பெரியசாமி, 22, சாஸ்திரி நகர் விரிவு., தமிழ்த்துறைத்தலைவர், பாட்டல் கம்பெனி அருகில், டி.எல். ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கஸ்பா, வேலூர் – 632 001. விளாப்பாக்கம் – 632 521-

periyaswamydeva@gmail.com