அஞ்சலி: மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன் நேற்று கொழும்பில் மறைவு! முற்போக்குச்சிந்தனைகளிலிருந்து தடம் புரளாதவர்!

நீர்வை பொன்னையன்இலங்கையின் மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன் நேற்று  ( மார்ச் 27 ஆம் திகதி)  வியாழக்கிழமை மாலை கொழும்பில் தமதில்லத்தில் மறைந்தார். உலகெங்கும் கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், இலங்கையிலும் ஊரடங்கு உத்தரவு  நடைமுறையிலிருக்கும் இக்காலப்பகுதியில் நீர்வை பொன்னையன் அவர்களின் மறைவும் எதிர்பாராமல் நிகழ்ந்துள்ளது. நாளை மறுதினம் 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இறுதி நிகழ்வுகள் நடைபெறவிருப்பதாக அறியப்படுகிறது.

இம்மாதம் 24 ஆம் திகதிதான் நீர்வைபொன்னையன் தமது 90 வயதையும் பூர்த்திசெய்திருந்தார்.  இறுதியாக அவர் எழுதி முடித்திருந்த நூலொன்றும்  அச்சாகி வெளிவரவிருந்தது. கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலின் பதட்டமான சூழ்நிலையினால் தமது புதிய நூலையும் பார்க்கமுடியாமல் நிரந்தரமாக கண்களை மூடிக்கொண்டார். இனி எம்மிடம் எஞ்சியிருக்கப்போவது நீர்வை பற்றிய நினைவுகள் மாத்திரமே.  அவர் பற்றி முன்னர் நான் பதிவுகளில் எழுதிய குறிப்புகளை கீழே பார்க்கவும்.


திரும்பிப்பார்க்கின்றேன். அறுபது ஆண்டுகாலமாக அயர்ச்சியின்றி எழுதிவரும் இலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வை பொன்னையன்.

இலங்கையில்  தமிழ்  கலை,  இலக்கிய  பரப்பில்  மாவை,   வல்வை, கரவை,    சில்லையூர்,  காவலூர்,  திக்குவல்லை,  நீர்கொழும்பூர், நூரளை,    நாவல்  நகர்,  உடப்பூர்,  மாத்தளை   முதலான  பல  ஊர்கள் பிரசித்தமாவதற்கு   அங்கு  பிறந்த  பல  கலைஞர்களும் படைப்பாளிகளும்   காரணமாக  இருந்துள்ளனர். ஊரின்  பெயரையே   தம்முடன்  இணைத்துக்கொண்டு இலக்கியப்பயணத்தில்   தொடரும்  பலருள்  நீர்வை   பொன்னையனும்   ஒருவர்.   இலங்கையில்  மூத்த இலக்கியப்படைப்பாளியான   அவர்  சமீபத்தில் அவுஸ்திரேலியாவுக்கு   வருகை  தந்து  சிட்னியில்  தமது  புதல்வியின்   குடும்பத்தினர்களுடன்  தங்கியிருப்பதாக  தகவல் கிடைத்து   அவருடன்  தொடர்புகொண்டேன். வடபுலத்தில்    நீர்வேலியில்  1930   ஆம்  ஆண்டு  பிறந்த  நீர்வை பொன்னையன்,    தமது    ஆரம்பக்கல்வியை    நீர்வேலி    அத்தியார் இந்துக்கல்லூரியில்    ஆரம்பித்து   பின்னர்    மட்டக்களப்பு  – கல்லடி சிவானந்தா   கல்லூரியிலும்  தொடர்ந்து  பயிற்றப்பட்ட  ஆங்கில ஆசிரியராக   கிழக்கிலங்கையில்  சம்மாந்துறை   முஸ்லிம் பாடசாலையில்    பணியாற்றிவிட்டு    இந்தியாவில்   கல்கத்தா பல்கலைக்கழகத்தில்   பயின்று  பட்டதாரியாக  தாயகம்  திரும்பினார்.

இலங்கை  தமிழ்  இலக்கிய  ஊடகத்துறையில்  நீர்வை  என்றே அழைக்கப்படுபவர்.    இலங்கை  சுதந்திரம்  பெறுவதற்கு  முன்பே  1947   ஆம்  ஆண்டளவில்  இடதுசாரிச்சிந்தனைகளினால்  கவரப்பட்ட  நீர்வை,   வடபகுதியில்  கம்யூனிஸ்ட்  கட்சியுடன்  தம்மை இணைத்துக்கொண்டு  பல  போராட்டங்களிலும்  கலந்துகொண்டவர். இலங்கை  இடது  சாரி  இயக்கத்திலும்  முற்போக்கு இலக்கியத்துறையிலும்   இவர்  இரண்டாம் தலைமுறையைச்சேர்ந்தவர்   என்பதும்  குறிப்பிடத்தகுந்தது.

இவரின்   முதலாவது  சிறுகதை   பாசம்.  யாழ்ப்பாணம்   ஈழநாடு இதழில்    வெளியானது.    இதுவரையில்    சுமார்  100  சிறுகதைகளையும்   எழுதியிருப்பவர்.  நீர்வைபொன்னையன்   காலத்து  எழுத்தாளர்கள்    என்று   பலரை குறிப்பிடலாம்.    இளங்கீரன்,  எஸ்.பொன்னுத்துரை,   கே. டானியல், அகஸ்தியர்,    டொமினிக்ஜீவா,   செ.கணேசலிங்கன்   முதலான  பலர் இவரைப்போலவே   இடதுசாரி    சிந்தனைகளுடனேயே    இலக்கிய இயக்கத்தில்    ஈடுபட்டவர்கள். இவர்கள்   மத்தியில்  பல்வேறு  கருத்துப்போராட்டங்கள் நிலவியபோதிலும்    முரண்பாடுகளை    நாகரீகமாக வெளிப்படுத்தியவர்கள்.    அதனால்  அவர்களின்  பின்னர்  உருவான அடுத்த  தலைமுறையினருக்கு    முன்மாதிரியாகவும்    விளங்கினர். இலங்கையிலும்    இந்தியாவிலும்  இடதுசாரிச்சிந்தனைகள்  சீன – ரஷ்ய   கம்யூனிஸ   கோட்பாடுகளுடன் இரண்டறக்கலந்திருந்தமையினால்    அந்நாடுகளுக்கிடையில் ஏற்பட்ட கருத்துப்பிளவுகள்   எங்கள்  தாயகத்திலும்   இந்தியாவிலும் பிரதிபலித்தன.

இலங்கையில்   மாஸ்கோ  சார்பு,  பீக்கிங்  சார்பு  நிலைப்பாடுகளுடன் ட்ரொஸ்கிய  நிலைப்பாடுகளும்   தவிர்க்கமுடியாத   அடையாளமாகின. நீர்வை   பொன்னையன்  சார்ந்திருந்த  சீன  சார்பு  கம்யூனிஸ இயக்கத்திலும்   பிளவுகள்  தோன்றின. எனினும்   – பொன்னுத்துரை   தவிர்ந்த  ஏனைய  பலர்  முற்போக்கு இலக்கிய   முகாமிலேயே  இறுதிவரையில்  தங்கினர்.  இடையில் டானியல்,   சில்லையூர்  செல்வராசன்,  ரகுநாதன்,  சுபத்திரன்,   புதுவை ரத்தினதுரை   முதலானோர்    தனியாக   பிரிந்துசென்றனர்.யாவற்றுக்கும்    அடித்தளம்  சித்தாந்த  மோதல்களே. அவர்களுக்குப்பின்னர்    நான்காவது  தலைமுறையில்   எனது  வயதை    ஒத்தவர்கள்   பலர்   இவர்கள்    அனைவருடனும்   இலக்கிய நட்புணர்வை    ஆரோக்கியமாகவே   தொடர்ந்து  வந்திருக்கின்றோம்.

நீர்வைபொன்னையன்   1960   களில்   இலங்கை  முற்போக்கு எழுத்தாளர்  சங்கத்தில்    இணைந்தவர்.    நானும்    சாந்தனும் திக்குவல்லை    கமாலும்   மேமன்   கவியும்  1970   இற்குப்பின்னர் அதில்    இணைந்தோம். ஆயினும்    மூன்றாவது   இலக்கியத்தலை முறையினரான செ.யோகநாதன்,    செ. கதிர்காமநாதன்   முதலான  எழுத்தாளர்களுடன்   இணைந்து    நீர்வை  பொன்னையன்   மூவர் கதைகள்   என்ற   தொகுப்பினை    வெளியிட்டார்.    நான் இலக்கியப்பிரவேசம்   செய்த   1970   காலப்பகுதியில்    குறிப்பிட்ட தொகுப்பு    எனக்கு    படிக்கக்கிடைத்தது.    அதனைப்படித்தவுடனேயே சிறு விமர்சனம்   எழுதி  பூரணி  இதழ்  இணை   ஆசிரியர்  என்.கே. மகாலிங்கத்திடம்  கொடுத்தேன். நான்    எழுதிய   முதலாவது  நூல்   விமர்சனம்  அதுதான்.   எனினும் அதனை   மேலும்  செம்மைப்படுத்தி  எழுதிக்கொண்டு வருமாறு மகாலிங்கம்   அதனைத்திருப்பித்தந்தார்.  அத்துடன்  இலக்கிய விமர்சகர்கள்    விரைவில்    உருவாகிவிடுவார்கள்.   ஆனால் ,  சிறுகதை, நாவல்,   கவிதை   எழுதும்  ஆக்க  இலக்கியகர்த்தாக்கள்தான் இன்றைய    அவசரத்தேவை    என்ற    கருத்தையும்    அவர் வலியுறுத்தினார். என்னை   சிறுகதை  எழுத்தாளனாகவே  அவர்  பார்க்க விரும்பியிருந்தார்   என்பதை    புரிந்துகொள்ள    முடிந்தது.   அதனால் அந்த   விமர்சனக்கட்டுரையை  செம்மைப்படுத்தும்  பணியில்  நான் மினக்கெடவில்லை. ஆயினும்   1970   காலப்பகுதியிலேயே    நீர்வைபொன்னையனின் கதைகளை    படிக்கத்தொடங்கிவிட்டேன்.     கொழும்பில் அக்காலப்பகுதியில்    மாவை    நித்தியானந்தன்,    சாந்தன்,    குப்பிழான் சண்முகன்,    நெல்லை. க. பேரன்    முதலானோர்    இணைந்து    கலை இலக்கிய    நண்பர்கள்   கழகம்   என்ற  அமைப்பினை   உருவாக்கி வெள்ளவத்தை   தமிழ்ச்சங்கத்திலும்  நண்பர்களின்    இல்லங்களிலும் மாதாந்தம்    சந்திப்புகளை    நடத்தினார்கள். இலக்கியம்,   ஓவியம்,  நாடகம்,  திரைப்படம்,  இசை,  நடனம்  முதலான துறைசார்ந்தவர்களின்   பணிகளை   ஆராயும்  தரமான  சந்திப்புகளாக நடந்தன.    நீர்வை  பொன்னையனையும்  அழைத்து ஒரு ஞாயிற்றுக்கிழமை   முற்பகல்  வேளையில்   இலக்கியச்சந்திப்பை கலை, இலக்கிய    நண்பர்கள்    கழகம்   நடத்தியது. அதில்   கலந்துகொண்ட பொழுதுதான்  நீர்வை  அவர்களை   நான் முதல்  முதலில்  சந்தித்தேன்.

நீர்வையின்   முதலாவது  சிறுகதைத்தொகுதி  மேடும்  பள்ளமும்   1961   இல்   வெளியானது.  இதற்கு  இலங்கை   முற்போக்கு  எழுத்தாளர் சங்கத்தின்    செயலாளர்  பிரேம்ஜி  ஞானசுந்தரன்  முன்னுரை எழுதியிருக்கிறார்.   அதனைத்தொடர்ந்து   உதயம்  என்ற    இரண்டாவது    தொகுப்பு   1970   இல்   வெளியானது.    இவரும் செ.யோகநாதனும்    செ. கதிர்காமநாதனும்    எழுதிய   சிறுகதைகளின் தொகுப்பு    மூவர்    கதைகள்  1971   இலும்   பின்னர்    சற்றுக்காலம் கடந்து   பாதை,    வேட்கை,     உலகத்து   நாட்டார்    கதைகள்   முதலான    தொகுப்புகளையும்    இலக்கியத்திற்கு    வரவாக்கிய   நீர்வை   பொன்னையன் ,  முற்போக்கு  இலக்கிய  முன்னோடிகள் வரிசையில்   இந்திய  எழுத்தாளர்கள்  பிரேம்சந்த்,  சரத்  சந்திரர், முல்க்ராஜ்    ஆனந்த்,    மற்றும்    ருஷ்யா    இலக்கிய   மேதை   மாக்ஸிம்   கோர்க்கி  முதலான  எழுத்தாளர்கள்  பற்றியும்  விரிவாக எழுதினார்.   குறிப்பிட்ட  தொகுப்பு    நூல்  2002   ஆம்   ஆண்டில் வெளியானது. நாம்    ஏன்   எழுதுகின்றோம்..?   என்ற    (2004)  நூல்   -இடதுசாரிச்சிந்தனைகளையும்    முற்போக்கு இலக்கியக்கோட்பாடுகளையும்   அவர்   எவ்வாறு உள்வாங்கிக்கொண்டார்   என்பதற்கான  பதிவாக  விளங்குகின்றது. நினைவலைகள்    என்ற   மற்றுமொரு  சுயவரலாற்று  நூல் சர்ச்சைகளையும்   ஏற்படுத்தியிருந்தது.

கொழும்பில்    இலங்கை   திரைப்படக்கூட்டுத்தாபனத்தில்   நீர்வை பணியாற்றிய   காலத்தில்   முற்போக்கு  எழுத்தாளர்  சங்கத்திற்கு இவரால்   அறிமுகப்படுத்தப்பட்ட  சிங்கள  அன்பர்தான்   கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான    ரத்ன   நாணயக்கார. இவர்   மகாகவி  பாரதியின்  சில  கவிதைகளை    சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளார்.    ரத்ன    நாணயக்காரவும்    அவரைப்போன்ற மற்றுமொரு    தமிழ்    அபிமானியான    கே.ஜி. அமரதாஸவும் சிங்களத்தில்   மொழிபெயர்த்த  சில  பாரதி  கவிதைகளை   சங்கம்  1982    இல்  பாரதி  நூற்றாண்டு  கால  கட்டத்தில் வெளியிட்டிருக்கிறது. பாரதி   நூற்றாண்டு  காலத்தில்  பிரதேச  அபிவிருத்தி  இந்து  கலாசார அமைச்சர்  செல்லையா   இராஜதுரை  தமிழ்நாட்டிலிருந்து இசையமைப்பாளரும்   முற்போக்கு  கலைஞருமான எம்.பி.ஸ்ரீநிவாசனை   இலங்கைக்கு   அழைத்திருந்தார். யார்   இந்த   ஸ்ரீநிவாசன்….? ஒரு   கால கட்டத்தில்  சென்னையில்  இடதுசாரி  கலை இலக்கியவாதிகள்   கூட்டாக  இணைந்து  தயாரித்து  வெளியிட்ட பாதை   தெரியுது  பார்  என்ற   திரைப்படத்தின்  இசையமைப்பாளர். இந்தப்படத்தில்   சில   காட்சிகளில்   ஜெயகாந்தனும்    வேண்டா வெறுப்பாக   தோன்றி  நடித்திருந்தார்.  எனினும்  படத்தின்  நீளம்  கருதி   அதனை  சுருக்கும்பொழுது  தான்  வரும்  காட்சிகளை ஜெயகாந்தன்   நீக்கச்சொன்னார். இந்தப்படத்திற்கும்   புதுவெள்ளம்   என்ற    சிவகுமார்   நடித்த படத்திற்கும்   இசையமைத்தவர்தான்  எம்.பி.ஸ்ரீநீவாசன்.    வெங்கட் சாமிநாதனின்    கதையான   அக்ரகாரத்தில்   கழுதை   என்ற   தரமான  படத்தில்  ஒரு  பேராசிரியராக  நடித்தவர்  ஸ்ரீநிவாசன்.   அடிப்படை    இந்துத்துவா   பழைமைவாதிகளும்  சநாதனவாதிகளும்   இந்தப்படத்தை   தடைசெய்வதற்கு  பெரும்  பிரயத்தனங்களில் ஈடுபட்டனர்.    எனினும்   அக்ரகாரத்தில்   கழுதை   விருதுகளை வென்றது.

ஸ்ரீநிவாசன்   இலங்கைக்கு  வருகைதந்தபொழுது   கல்வி   அமைச்சர் நாவலர்    நெடுஞ்செழியனும்   பாரதி  நூற்றாண்டு  விழாவுக்கு வந்திருந்தார். இவர்கள்    கலந்துகொண்ட    விழா   பம்பலப்பிட்டி சரஸ்வதி    மண்டபத்தில்    அமைச்சர்    இராஜதுரை   தலைமையில் நடந்தது. அன்றைய    விழாவில்     ஈழத்தின்    பிரபல    நடன  நர்த்தகி   கார்த்திகா கணேசரின்    பாரதி    சம்பந்தப்பட்ட   நாட்டிய   நாடகமும் அரங்கேறியது.    அதற்கு    இசையமைத்தவரும்    ஸ்ரீநிவாசன்தான்.

பல    மலையாளப்படங்களுக்கு    இசையமைத்து    விருதுகளும் பெற்றவர். எம்.பி. எஸ். என்று   இந்திய  திரையுலகில்  பேசப்பட்ட  இவர் பெங்களுரில்   சுமார்  முவாயிரம்  இளம்  பிள்ளைகளை   ஒரே சமயத்தில்  பாரதி  பாடல்களை   பாடவைத்து  அதற்கு  பின்னணி இசை   வழங்கி சாதனை    புரிந்தவர். பாரதியிடத்தில்  அவருக்கிருந்த    ஆழ்ந்த  பற்றுதலும்கூட   இலங்கை அரசு    அவரை    அழைத்தமைக்கு    பிரதான    காரணமாகவும்  கருதலாம். ஆனால்  – இதுபோன்ற  அழைப்புகள்  இன்றைய  சூழலில் சாத்தியமில்லை    என்பதும்    காலத்தின்   சோகமாகும்.  இந்தப் பிரபல   இசையமைப்பாளர்    எமது  நீர்வை பொன்னையனின் நல்ல   நண்பர்.    அன்றையதினம்   அவருக்கு   எமது    முற்போக்கு எழுத்தாளர்  சங்கப்பிரதிநிதிகளையும்  அறிமுகப்படுத்திவைத்த   நீர்வை ,  எம்மை  அழைத்துக்கொண்டு  பம்பலப்பிட்டியில்  அவர் தங்கியிருந்த   விடுதியில்    சந்திப்புக்கும்   ஏற்பாடு   செய்தார்.

இந்திய    இசையுலகில்   பெரிய   ஆளுமையான    ஸ்ரீநிவாசன்   1988 இல்   இலட்சத்தீவுக்கு   பயணம்    மேற்கொண்டபொழுது    அங்கு மரணமடைந்தார். ஸ்ரீநிவாசன்   பற்றிய   நினைவுப்பதிவை    நீர்வை   எழுதினாரா…? என்பது   குறித்த    தகவல்   இல்லை. தேர்ந்த   கலை,  இலக்கியவாதிகளுடன்  தொடர்புகளைப்பேணிவரும் நீர்வை   பொன்னையனுக்கும்  முற்போக்கு  எழுத்தாளர் சங்கத்திலிருந்த   சில  மூத்த  எழுத்தாளர்களுக்கும்  இடையில் அடிக்கடி   உரசலும்    உராய்வும்   உறவும்  மாறி  மாறி   தொடர்ந்தாலும் சங்கத்தின்   செயலாளர்  பிரேம்ஜி,    தலைமைக்குழு  உறுப்பினர் பேராசிரியர்    கைலாசபதி    ஆகியோரின்    அன்புக்கும்    மரியாதைக்கும் உரியவராகத்திகழ்ந்தவர். ஒரு   சமயம்  தஞ்சாவூர்  பல்கலைக்கழகத்தின்  விரிவுரையாளர் மூர்த்தி   ( இவர்   டானியல் –  பிரான்ஸில்  வதியும்  வி.ரி. இளங்கோவன்   ஆகியோரின்  தோழர்)  இலங்கை   வந்திருந்தபொழுது சங்கம் –  சோமகாந்தன்  இல்லத்தில்  ஒரு  மாலைவேளையில்  தேநீர் விருந்துபசாரத்தை    வழங்கியது. அச்சந்திப்பிற்கு   இளங்கோவன்தான்  மூர்த்தியை   அழைத்துவந்தார். நானும்   நீர்வையும்  சோமகாந்தனும்  பிரேம்ஜியும்  மாணிக்ஸ்ஸ_ம் சந்திரசேகரம்   மாஸ்டரும்    அதில்    கலந்துகொண்டோம். தொடக்கத்தில்   கலந்துரையாடல்  இயல்பாகவே  தொடர்ந்தது. ஆனால் ,  நேரம்  செல்லச்செல்ல  வாக்குவாதம்  சூடுபிடித்தது. குரல்கள்    உரத்து  ஒலித்தன.  திருமதி  பத்மா  சோமகாந்தன் அனைவரையும்    அமைதிப்படுத்த   முயன்றார்.  இறுதியில்  கருத்து மோதல்கள்  –  கருத்து  மோதல்களாகவே   தணிந்தன.  விவாதம்  இரவு எட்டு    மணிக்கு    மேலும்    தொடர்ந்தது. நீர்வை   தனது  கருத்துக்களை   அழுத்தம்  திருத்தமாகவே   சொன்னார்.   தஞ்சை  மூர்த்தியும்  அவரும்  கருத்தியலில்  மிகவும் மாறுபட்டிருந்தாலும்   இடதுசாரி  சிந்தனை   கொண்டிருந்தவர்கள்தான். அப்பப்பா…… இடசாரிகளிடம்தான்  எத்தனை  பிளவுகள்…?  எத்தனை கோலங்கள்….? அன்று  நான்  அவர்களின்  உரத்த  குரல்  கேட்டே   களைத்துவிட்டேன்.   எனினும்  அவர்கள்  நாகரீகமாகவே   தத்தமது வார்த்தைகளை    வெளிப்படுத்தியது  முன்மாதிரியாக  இருந்தது.

நீர்வை  – கொழும்பில்  விபவி  சுதந்திர  இலக்கிய  மாற்றுக்கலாச்சார மையம்  என்ற  அமைப்பிலும்  முற்போக்கு  கலை, இலக்கிய மன்றத்திலும்  இணைந்திருப்பவர்.  விபவி   என்ற   அமைப்பு   பல கருத்தரங்குகளையும்   இலக்கியப்போட்டிகளையும்   நடத்தி சாதனையாளர்களுக்கு    விருதுகள்    வழங்கியிருக்கிறது.

இலங்கை    முற்போக்கு   எழுத்தாளர்    சங்கம்    தளர்வுற்றவேளையில் அதனை    மீளக்கட்டியெழுப்பவும்  பாடுபட்டார்.   ஆனால்,  அவரது முயற்சிகள்  பலிதமாகவில்லை  என்பது   தெரிகிறது.    எப்பொழுதும் பொது    அமைப்புகளுக்கு    நிருவாகக்கட்டமைப்பு   அவசியமானது. நிருவாகக்கட்டமைப்பு   இல்லாத   எந்தவொரு    அமைப்பும் காலப்போக்கில்   குலைந்துவிடும். அதன்  பின்னர்   – அவற்றின்  நீண்ட நாள்  அங்கத்தவர்களே  ஒருவரை ஒருவர்   குறை  கூறிக்கொண்டு  பழிகளை  ஒருவர்  மீது  ஒருவர் சுமத்தி   காலத்தை   கடத்திவிடுவார்கள்.  இவ்வாறு தேங்கிப்போன  பல கலை – இலக்கிய  அமைப்புகள்  இலங்கையில்   மட்டுமல்ல    தமிழர் புலம்பெயர்ந்த  வெளிநாடுகளிலும்    பெயரளவில்    இருக்கின்றன.  இலங்கையிலும்   முற்போக்கு    எழுத்தாளர்  சங்கத்திற்கு   நேர்ந்ததும் அதுதான். எனினும் ,  நீர்வைபொன்னையன்  எப்பொழுதும்  கட்டமைப்பான நிருவாகத்தையே    விரும்பியவர்.     இயங்காத    அமைப்புக்கு    சேலைன்    ஏற்றி    நேரத்தை  வீணடிக்காமல்  தமது  நண்பர்  முகம்மது சமீமுடன்   இணைந்து  முற்போக்கு  எழுத்தாளர்  சங்கத்தின்  நீட்சியாக   இலங்கை  முற்போக்கு  கலை,  இலக்கிய  மன்றத்தை உருவாக்கினார். இந்த   அமைப்பு  குறுகிய  காலத்தில்  பல  ஆக்கபூர்வமான  பணிகளை    முன்னெடுத்திருக்கிறது. இதுவரையில்   27   நூல்களை  மும்மொழிகளிலும்  பல்துறை   சார்ந்து   வெளியிட்டுள்ளது.   ஈழத்து   முற்போக்கு  சிறுகதைகள்  என சுமார்   25   சிறுகதைகளை    தேர்வு செய்து  நூலக்கியிருக்கிறது. முற்போக்கு   இலக்கியத்தடத்தில்    புனைகதைச்சுவடுகள்  –  கவிதைச்சுவடுகள்   முதலான  இரண்டு   தலைப்புகளில் ஆய்வு நூல்களையும்    வரவாக்கியுள்ளது.

இந்த    அமைப்பு   கடந்த   ஆண்டில்    மூத்த   முற்போக்கு எழுத்தாளர்களின்    வாழ்வையும்   பணிகளையும்    கௌரவிக்கும் நோக்கத்துடன்  கொழும்பில்   விழா   எடுத்தது. நீர்வை  பொன்னையனிடம்    சில    சிறப்பியல்புகளும்   உண்டு. எவருடனும்   சமரசம்    செய்துகொண்டு    இலக்கியச்சோரம் போகமாட்டார்.    தனது    கருத்தில்   ஆழ்ந்த   நம்பிக்கை   கொண்டவர். எம்மத்தியில்    தமது  80   வயது  கடந்த  நிலையிலும் அவர் அயராமல்    எழுத்துப்பணியில்   ஈடுபட்டுவருவதும்    எமக்கெல்லாம் முன்மாதிரியானது.   60   வயதுக்கு    மேற்பட்ட  பல  மூத்த எழுத்தாளர்கள்   தற்காலத்தில்  சிறுகதை  எழுதுவதை   பெரும்பாலும் தவிர்த்தே   வருகிறார்கள். ஆனால்,  நீர்வைபொன்னையன்  இன்றும்  சிறுகதைகள் எழுதிக்கொண்டுதானிருக்கிறார்.   இவரது  பல  சிறுகதைகள் சமகாலத்தில்   தினக்குரல்   ஞாயிறு   இதழில் வெளியாகியிருக்கிறது.  நீர்வை   பற்றிய  இந்தப்பதிவினை  எழுதும்பொழுது  ஒரு வேடிக்கையான   உண்மையையும்  இங்கே  குறிப்பிடுதல் பொருத்தமாக   இருக்கும். சுமார்   அரை   நூற்றாண்டு    காலமாக    அயர்ச்சியின்றி    எழுதிவரும் நீர்வை   விருதுகளைத் தேடியோ   பொன்னாடை –  பூமாலைகளை நாடியோ   வெற்றுப்புகழாரங்களுக்காகவோ    ஏங்கி  நின்றவர்  அல்லர். மக்கள்    இலக்கியவாதிக்குரிய    அனைத்து   அடையாளங்களுடனும் தன் பணிகளைத்தொடரும்   நீர்வையின்   அட்டைப்படமோ அல்லது    அவரது    இலக்கியப்படைப்புகளோ    இதுவரையில் இலங்கையில்    மல்லிகை,    ஞானம்   இதழ்களில் வெளிவரவேயில்லை.  அவரது  அமைதியே   அவரது    ஆளுமை. அவருடைய   வாழ்வனுபவங்கள் கேட்டுத்தெரிந்துகொள்ளப்படவேண்டியவை.    பழகுவதற்கு   இனியவர்.  எளிமையானவர். முற்போக்குச்சிந்தனைகளிலிருந்து    தடம்   புரளாதவர்.   அவருடனான சந்திப்பு    இளம்   தலைமுறை   படைப்பாளிகளுக்கும்  பயன்  தரும்.

letchumananm@gmail.com