நீள் கவிதை: திக்குத்தெரியாத காட்டில்…….

நீள்கவிதை: திக்குத்தெரியாத காட்டில்…….

திசை – 1

ரயில்வண்டிகள் வழக்கம்போல் ஓடத்தொடங்கும்.
விமானங்கள் பறக்கத்தொடங்கும்.
கொரோனாக் காலம் என்பது கடந்தகாலமாகும்.
கதைகளில், கவிதைகளில் திரைப்படங்களில் பட்டிமன்றங்களில்
பேசுபொருளாகும்.
கேட்பவர்கள் பார்ப்பவர்களில் சிலர் சிரிப்பார்கள்;
சிலரின் முதுகுத்தண்டுகள் சில்லிடும்.
இனி வரலாகாத அந்த முப்பது நாட்கள் அல்லது
மூன்று மாதங்களின் நினைவு தரும் இழப்புணர்வு
சிலருக்குப் பொருட்படுத்தத்தக்கதாய்
சிலருக்குப் பொருளற்றதாய்
அருகருகிருக்கும் இரு மனங்களின் இடைவெளி
அதலபாதாளமாயிருக்க வழியுண்டு என நினைக்கையிலேயே
அதன் மறுபக்கமும் எதிரொலிக்கும் மனதில்.
மீண்டும் மனிதர்கள் கூடிப்பழகுவார்கள்.
கூட்டங்கூட்டமாக திருவிழாக்களைக் கண்டுமகிழ்வார்கள்
குழந்தைகளை அழைத்துக்கொண்டு
கடற்கரைக்குச் செல்வார்கள்.
கொரோனாவை மீறியும் நீளும் காலம்
நெருக்கும் கூட்டமாய் உந்தித்தள்ள
இருபக்கமாய் பிரிந்துவிட்டவர்கள் இன்னமும்
தேடித்திரிந்துகொண்டிருக்கலாம்.


திசை – 2

அந்த அநாமதேய பிராந்தியத்தில் தான்
சென்றிருக்கும் வீடு இருக்கிறது;
செல்லவேண்டிய வீடும் இருக்கிறது.
நிகழ்காலமும் எதிர்காலமும் இருமுனைகளாக
இடையே இருப்பவை ஒரு சில வீடுகளாக இருக்கலாம்
சில பல தெருக்களாக இருக்கலாம்
வீதிகளாக இருக்கலாம்
மீதமிருக்கும் கோபதாபங்களாக இருக்கலாம்
அநாமதேய பிராந்தியமென்றானபின்
அடுத்திருந்தாலும்
அந்த இரு வீடுகளுக்கிடையே
ஆயிரமாயிரம் மைல்களாக
அந்திசாயும் நேரத்தில்
எந்தப் பக்கம் திரும்புவது என்று தெரியாமல்
நின்றது நின்றபடி
தேடித்தேடி இளைத்திருக்கும்
ஏழை மனம்.


திசை – 3

பாதங்களுக்குப் போதிய பலம்வேண்டும்
திசையறியாத்த தொலைவின் காததூரங்களைக் கடக்க;
பழகவேண்டும் வழிகளில் தட்டுப்படும் இடர்ப்பாடுகள்….
காலணிகளை ஊடுருவி சுருக்கென்று குத்தும் கூர்கற்கள்;
தைக்கும் நச்சுமுட்கள்;
கண்ணீர் வந்தால் சற்றே இளைப்பாறுவதற்கு
நிழல் தரும் மரம் எங்காவது இருக்கும்
என்பதொரு நம்பிக்கை.
என்றாவதுதான் தட்டுப்படுமா நன்னம்பிக்கைமுனைகள்?
இப்போதெல்லாம் இரவில் வனவிலங்குகள் நடமாட்டம்
வாகனவீதிகளில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இத்தனையையும் கடந்து சென்றடையும் வீடு
பூட்டியிருக்க நேரலாம்
அல்லது தாளிடப்படலாம் வாசல்
ஈசலாய் எழுந்து மடியும் எண்ணங்கள் கட்டுச்சோறாய்
மனதிலொரு நெடும்பயணம் பொடிநடையாய்
நடந்தவண்ணம்…


திசை – 4

இங்கிருந்து பார்க்க முட்டுச்சந்துபோல்தான் தெரிகிறது.
ஒருவேளை மறுமுனையில் திறப்பிருக்கலாம்.
இருபக்கமும் பாதை பிரியலாம்.
இதுபோல் நடந்ததில்லையா என்ன?
ஆனால்
இரு நான்கு வருடங்களுக்கு முன்பு நடக்கமுடிந்ததைப் போல்
இன்று முடிவதில்லை.
நினைத்தபோது கால்கள் தூண்களாகி
நிலமூன்றி நின்றுவிடுகின்றன
நகர்த்தவே சக்தியில்லாத நிலையில்
நெடுமரமாய் வேர்பிடித்திருக்கும் கால்கள்
தன்னிலைக்குத் திரும்பக் காத்திருக்க நேர்கிறது.
இல்லை, சாம்சன் தலைமுடியாய் மீண்டும்
சக்தி திரண்டு
நிலத்தைப் பிளந்து தூண்களை வெளியே இழுத்து கால்களாக்கிக்கொள்ளும்படியாகிறது.
இதற்காகும் நேரம் பொதுவான காலக்கணக்கில் சேருவதில்லை.
அதிபிரம்மாண்டப் பெருங்காலம் அதன்போக்கில்
வருங்காலத்தை நோக்கிப் பாய்ந்தவண்ணமே.
அதன் சுழல்வேகத்தில் கழன்று மேலெழும்பும் கால்கள்
நடக்க முற்படுவதற்குள் இழுத்துச்செல்லப்படுகின்றன.
புயலடித்துத் தரைதட்டும் கப்பலாய்
அயல்வெளியில் கரைசேர்ந்து அரைமயக்கத்தில்
துவண்டுகிடக்கின்றன, கையறுநிலையில்…
என்றும் சென்று சேருமிடம் சேர கால்களுக்குக்
கருணை காட்டவேண்டும் காலம்.


திசை – 5

அனேக கிலோமீட்டர்கள் நடந்து சென்று
அன்னையைக் கண்டவர்
அவள் உடனே இறந்துவிடுவதையும் காண்கிறார்.
அனேக கிலோமீட்டர்கள் ஆம்புலன்ஸில்
அன்பு நண்பனின் இறந்த உடலிருந்த பெட்டியருகே
அப்படியே அமர்ந்திருக்கிறார் இன்னொருவர்.
ஒருவகையில் இருவரும் பரஸ்பரம் கால்மாற்றிக்கொள்கிறார்கள்.
உடலொன்றில் மரணம் நிகழும்போதெல்லாம்
உயிரோடிருக்கும் சில மனங்களும்
மரித்துவிடுகின்றன.
இறந்தவரின் உடல் ஒருபோதும் எழுந்து நடப்பதில்லை.
மரித்த மனங்கள் பலகாலம் திசையழிய
அலைந்தவாறே……


திசை – 6

அதன் இயல்பில் மனித உடலொன்றுக்குள் நுழைந்துவிட்ட தீநுண்மி
திசைமாறி எங்கெங்கோ திரிந்தலைந்து,
இறுதியில்
இருதயம், மூளை இன்னும் சில
இனமறியா பிறவேறுகளுடைய கூட்டிணைவிலானதாய்
பரவலாய் பேசப்படும் மனதையடைந்துவிட _
அது கடைந்தெடுத்த அமுதமாயொரு பெயரை
அத்தனை வலியிலும்
அதற்கேயான மாமருந்தாய்
மனனமாய் உச்சரித்துக்கொண்டிருக்கக் கண்டு
அதிர்ந்துபோய்
அன்பின் வெப்பத்தைத் தாங்கவொண்ணாமல்
அங்கிருந்து வெளியேறும் திசைதேடி
அலைக்கழியும்.


திசை – 7

காட்டின் வெளிச்சத்திற்கும் நாட்டின் வெளிச்சத்திற்கும்
கண்டிப்பாக வித்தியாசம் உண்டுதான்…..
எனில் _
காட்டின் நடுவில் தெரியும் நாட்டிலும்
நாட்டின் நடுவில் தெரியும் காட்டிலும்
மனதிலும் மூளையிலும் முளைத்த கால்களோடு
மீளாப்பயணம் மேற்கொண்டிருப்பது முட்டாள்தனமென்றால்
கெட்ட கோபத்துடன் திட்டுகிறது உள்.
தட்டுப்படாத திசையையும் தடத்தையும்
அங்கங்கே விட்டகுறை தொட்டகுறையாய்
கிட்டும் கனிகளும்,
மெட்டுக்கப்பாலான குயிலின் இன்னிசையும்
சரிக்கட்டிவிட
அன்றுபோல் என்றும் தொடரும் பயணம்
தனிவெளியொன்றின் பிடிபடா திசையில்…..


திசை – 8

பகலைப் பகலாக்கும் சூரியனின் மகிமை
பழுதற்றதுதான், என்றாலும்
அதன் கதிர்கள் வரிவரியாய் உள்வெளியெங்கும்
படர்ந்து சுட்டெரிக்கும்போது
அனத்தாமலிருக்கவியலாது.
மனதின் உடலோ உடலின் மனமோ _
இரும்பாலானதல்லவே எதுவும்….
துருப்பிடிக்கும் காலத்தே எல்லாமும், என்றபோதும்
கரிந்தெரியும் ரணத்தோடும் புண்களோடும் வெடிப்புகளோடும்
திரும்பத்திரும்ப தனக்கான ஒன்பதாவது திசைதேடி
தாகம் மிக பயணப்படும் மனதுக்கு
இருமருங்குமான இயற்கையழகைப் பருகக்கொடுத்து
அருள்பாலிப்பதும் அந்தக் கதிரோனேயாகும்.

lathaa.r2010@gmail.com