(29) – மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்

- வெங்கட் சாமிநாதன் -சமீபத்திய இரு தமிழ்ப் படங்களைப் பற்றி எழுதுவதாகச் சொன்னேன். அந்த இரண்டையும் பார்த்து வெகு நாட்களாகி விட்டன. ஆகவே சிறு சிறு தகவல்களுக்கு விரிவாகச் செல்ல முடியாது. அவசியமும் இல்லை. இங்கு எந்தப் படத்தைப் பற்றியும் கதா பாத்திரங்கள் ஒவ்வொருவராக, அல்லது காட்சிகள் எது பற்றியும் விரிவாகச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த போது மனதில் தோன்றியதையும் இப்போது அந்த இரு படங்கள பற்றி மனதில் படிந்துள்ள எண்ணங்கள் பற்றியும் சொன்னாலே போதும். அவற்றைச் சொல்லி நகர்வது தான் என் உத்தேசமும். யாரையும் என் தரப்புக்கு மனமாற்றம் செய்யும் நோக்கமில்லை. எது பற்றியும் அவரவர் தம் எண்ணங்களைச் சொல்லி சர்ச்சித்து ஒருவர் மற்றவர் எண்ணவோட்டங்களைப் புரிந்து கொள்வது என்பது இன்றைய தமிழ்ச் சூழலில், சினிமா பற்றியும் அரசியல் பற்றியும் சாத்தியமில்லை. அம்மாதிரியான ஒரு கலாசாரத்தை, சூழலை நாம் வளர்த்துக்கொள்ளவில்லை. தனக்குப் பிடிக்காத அல்ல்து  தாம் வணங்கித் தொழும், போற்றித் தோத்திரம் பாடும் நக்ஷத்திரங்களையோ, அரசியல் தலைமைகளைப் பற்றியோ ஒரு மாறிய அபிப்ராயத்தைச் சொல்லி விட்டாலே, உடனே ஜாதிக்குண்டாந்தடியை எடுத்து வீசும் மூர்க்கத்தனம் இங்கு பரவலாக வளர்ந்து முற்றிக் கிடக்கிறாது. தனக்குப் பிடிக்காதது எதுவும் பேசப்படக் கூடாது என்ற மூர்க்கத் தனம் இங்கு ஆட்சி செலுத்துகிறது. அவர்களுக்கு ஆண்டவன் அறிவையும் உணர்வுகளையும் எதற்குக் கொடுத்துள்ளான்? சரி ஆண்டவன் கொடுக்கவில்லை, தந்தை பெரியார் சொல்லிவிட்டார். இந்த சமாசாரங்கள் இவர்கள் மண்டையிலும் இதயத்திலும் எதற்கு இருக்கிறது?, இவர்கள் யாராலோ பிடித்து வைக்கப்பட்ட களிமண் பொம்மைகளாக, சூளையில் சுட்டு இறுகிவிட்டவையாக இருந்தால் அவற்றை நாம் என்ன செய்ய முடியும்?

இரண்டு படங்களைப் பற்றிப் பேசுகிறேன் என்று சொன்ன போதே பார்த்து சில நாட்களாகி விட்டன. எழுதி வரும்போது இவை பற்றிச் சொல்லலாம் என்ற நினைப்பு எழுந்தது. ஆனால் இந்த முறைக்கு இவ்வளவு போதும், அடுத்த தவணைக்கு எழுதலாம் என்ற எண்ணத்தில் அப்ப்டிச் சொன்னேன். அதன் பிறகு இன்னும் நிறையப் படங்கள் பார்த்தாயிற்று. முரண், எங்கேயோ எப்போதோ இரண்டின் நினைவுகளும் பின்னோக்கிப் பயணம் செய்து கொண்டே இருக்கின்றன.  ஆகவே தான் மனப் பதிவுகளை மாத்திரம் தான் எழுத முடியும்.

இரண்டு படங்களுமே தமிழ் சினிமாவுக்கு என்றே கட்டமைக்கப் பட்டுள்ள கதை சொல்லும் முறையும், கதைகளும் மிகவும் வித்தியாசப்பட்ட வகையைச் சேர்ந்தவை. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு போகிறோம். ஏதோ ஒரு காரணத்திற்காக. ஒரு காரிய நிறைவேற்றத்திற்காக. பஸ்ஸில் போகும் அறு[பது சொச்சம் பயணிகளும் ஏதோ ஒரு எதிர்பார்ப்போடு வாழ்க்கையின் ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு  கட்டத்துக்கு நகர்ந்து செல்கிறார்கள். அது பயணிக்குப் பயணி வித்தியாசப்படும். எல்லோருமே ஒரே நோக்கத்தோடு போகிறவர்கள். இல்லை. ஒருவர் வேலை தேடிப் போகலாம். ஒருவர் தீர்த்த யாத்திரை போகலாம். இன்னொருவர் தம் காதலியைத் தேடிப் போகலாம். இன்னொருவர் படிப்பிற்கு…இன்னொருவர் ஊர் சுற்றிப் பார்க்க. இப்படி வித்தியாசமான நோக்கங்கள் பல. வெகு சாதாரணமாக நடக்கும் அன்றாடம் நடக்கும் ஒரு வாழ்க்கைச் சித்திரம் இது. ஆனால் அதே போல பஸ்கள், ஆட்டோக்கள், ரயில்கள் விபத்துக்குள்ளாவதும் உண்டு. அபூர்வமாக, அல்லது அவ்வப்போது. நடக்காத விஷயம் இல்லை. இரண்டு பேருந்துகள் மோதிக்கொள்கின்றன. அவர்களுக்கு நாளைக்கு இத்தனை ட்ரிப் என்று கணக்கு. இல்லை, அடுத்த 147 பின்னாலே வரான். அவனை முந்திக்கொண்டால, அவன் சவாரியையும் லவட்டிக்கலாம். இப்படி எத்தனையோ காரணங்கள். ஆக நூறுக்கும் மேற்பட்ட மனிதர்களின் எதிர்பார்ப்புகள், ஆசைகள், திட்டங்கள் இங்கு நடைபெறாது, பெரும் சோகத்தைத் தம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின்றன.

நம் வாழ்க்கையில் இம்மாதிரி  எத்தனை பிரயாண விபத்துக்களைக் கேட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். நூற்றுக்கணக்கீல் இருக்கும். இவை சாதாரண மனிதர் வாழ்க்கையில் நிகழ்வன. அவர்களது வெகு சாதாரண ஆசைகளையும்  திட்டங்களைகயும் கூட நிர்மூல மாக்கிவிடுகின்றன. கிட்டத்தட்ட 80 வருட கால நமது சினிமா வரலாற்றில் இப்படி ஒரு விபத்து, மனித சோகம் எதையும் பதிவு செய்த ஒரு படம் கூட ஏன் காணவில்லை? முதலில் எந்த கதாசிரியரும் இதை நினைத்துப் பார்க்கவில்லை. மற்ற பெரும் தலைகளும், “அதெல்லாம் எடுக்காதுங்க. போண்டியாயிருவோம்” என்ற பதில்தான் வந்திருக்கும்.  

- வெங்கட் சாமிநாதன் -ஆக, இந்த கதை தமிழ் சினிமாவுக்கும் புதுசு. அது மட்டுமல்ல. நிறைய விஷங்களில் நம் தமிழ் சினிமா வரலாற்றை, பண்பாட்டை இது போன்ற படங்கள் மீறியிருக்கின்றன.  இந்த கதை சொல்லப்பட்ட முறை இருக்கிறதே, அதன் கட்டமைப்பு, (the structure and style of narration)  தமிழ் சினிமாவுக்குப் புதுசு. பாராட்டலாம். ஆனால்  இந்த படத்தில் காசு போட்டவரும் மற்றோரும் எந்த ரிஸ்கும் எடுக்கத் தயாராயில்லை. எதிரும் புதிருமாக வந்து மோதி விபத்துக்குள்ளான இரண்டு பஸ்களிலும் பிரயாணம் செய்த நூத்துச் சொச்சம் பிரயாணிகளில் இந்த படத்துக்குக் கிடைத்தவர்கள் இரண்டே இரண்டு காதல் தம்பதிகள் தான்.அவர்கள் கதைகள் தான் பெரும்பாலும் சொல்லப் பட்டுள்ளன. இன்னொன்று கொசுருக்காக ஒரு துண்டுக் கதை. ஒரு சின்ன பொன்ணை சைட் அடிக்கிற சோமாரி என்று தோற்றம் தந்தவன் ஒருவன்.அவன் கடைசியில் சம்பந்தப் பட்ட பெண் ஆசைக்கு ஆளானவனாகவே காட்டப்படுகிறான். ஆக, இதுவும் அதே காதல் சரக்குத் தான். கொஞ்சம் வித்தியாசமான காதலர் ஜோடிகள் இரண்டும். .ஒரு ஜோடி,  தூரத்திலிருந்து சைட் அடித்துக்கொண்டிருந்தவனை, கொஞ்சம் பம்பரம் ஆட்டிப் பார்க்கலாம் என்று இஷ்டத்துக்கு  அதிகாரம் செய்யும் ஒரு நர்ஸ். அவனை காஃபி பாருக்கு அழைத்துச் சென்று இரண்டு காஃபிக்கு 100 ரூபாய் செலவழிக்கத் தூண்டுபவள். பின், ஜவுளிக்கடைக்கு அழைத்துச் சென்று இது நல்லாருக்கும் அது நல்லாருக்கும் என்று வாங்கச் செய்து அவன் தலையில் பில்லைக் கட்டுகிறாள். என்னதான் காதல் வசப்பட்டிருந்தாலும், சக்திக்கு மீறி இப்படி அவள் சொன்னதெல்லாம் கேட்பானா, எப்போது ரெடியாக ஐந்தாயிரம் ஆறாயிரம் பணம் வைத்துக்கொண்டு திரிவானா என்பது சந்தேகம். அது போக, ஒரு நர்ஸாக வேலை பார்ப்பவள் காஃபிக்கு 40 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும் காபி பாருக்கு போகும் பழக்கமுள்ளவளாக இருப்பாளா என்பதெல்லாம் இந்தப் படத்துக்கு கதை வசனம் எழுதியவருக்குத் தான் வெளிச்சம். இந்தக் கேள்விகளை 2011—ல் இந்தப் படத்துக்கு எழுத வந்தவரைக் கேட்கிறேன். அண்ணாதுரை, மு.கருணாநிதி, ப.நீலகண்டன் போன்றார் எழுதிய காலத்தில் இருந்து கொண்டு கேட்கவில்லை.

இன்னொரு ஜோடி இதற்கு நேர் எதிர் குணம் கொண்டது. தனியாக ஒரு இண்டர்வ்யூவுக்குப் புறப்பட்ட பெண்ணுக்கு. எல்லாத்துக்கும் பயம். யாரைக்கண்டாலும் பயம். எந்த ஆணும் தன்னைக் கடத்திக்கொண்டு போகவே டெலிபோன் பூத்துக்கும் பஸ் ஸ்டாண்டுக்கும் கடைத் தெருவுக்கும் காலையிலேயே திட்டமிட்டு தான் அங்கு வந்திருக்கும் சமயம் பார்த்து எதிர்ப்படுவதாக ஒரு பயம். ஆனால் பயந்துகொண்டே அவனோடு பயணம் செய்து தன் அக்கா வீடு வரை கொண்டு வந்து விட உடன் செல்ல நேர்கிறது. பயந்து கொண்டே அவனைத் தனக்கு உதவியாக இருக்க கேட்கிறாள். திரும்பத் திரும்ப ஒவ்வொரு அடுத்த அடி வைப்புக்கும் கேட்கிறாள். அந்த சோமாரி கதாநாயகனும் சொன்னதையெல்லாம் செய்கிறான். முதல் தடவையாக தமிழ் சினிமாவில் இரண்டு வாயில்லாப் பூச்சிகளாக கதாநாயகர்கள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். இதை சூப்பர் ஸ்டார் என்ன, உலக நாயகன் என்ன, சிம்பு கூட ஒத்துக் கொண்டிருக்க மாட்டார். ரசிகர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

தமிழ் சினிமாவுக்கே உரிய செண்டிமெண்ட் என்கிற சரக்கை குடம் குடமாகக் கொட்டி அழுது வாளி வாளியாக நிரப்பும்,  உடனே டிம்பக்டுவுக்கும் நயாகரா நீர்வீழ்ச்சிக்கும் ஓடி டூயட் பாடும் கண்ராவிகளிலிருந்து ஒரு வழியாகத் தப்பித்தோம் என்ற நினைப்பே இந்த இரண்டு ஜோடிகளின் கொஞ்சி வசனம் பேசாத, நீர்வீழ்ச்சியில் டூயட் பாடாத சாதாரண வாழ்க்கையின் சில மணிநேரங்கள் (கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டிருந்தாலும்), அப்பாடா, தமிழ் சினிமா கனவுலக மாயா ஜாலத்திலிருந்து அன்றாட தமிழ் பெண்ணயும் ஆணையும் பார்க்கக் கிடைத்த ஆசுவாசம் மகிழ்ச்சி தருகிறது

இருந்தாலும் தமிழ் சினிமாவின் சந்தை விதிகளை அப்படி ஒரேயடியாக மீறிவிட முடியுமா என்ன? எதிர் வீட்டு மாடி நோக்கி தான் சைட் அடித்துக்கோண்டிருந்த பெண்ணுடன் கற்பனையில் ஒரு டூயட் புகுத்தாமல் இருக்க முடியவில்லை. ஆனால் இது நம்ம சூப்பர் ஸ்டார் ரகமோ உலக நாயகன் ரகமோ இல்லை. மலிவு விலை டூயட் தான். வேண்டாமாக இருந்தது.  இந்த டூயட்டினால் எத்தனை டிக்கட் அதிகம் விற்றிருக்கும்?. .   

காதல் தவிர வேறு அவஸ்தைகளில் தமிழன் உழல்வதோ, இல்லை அவனுக்கு வேறு ரக  சந்தோஷ எதிர்பார்ப்புகளோ கிடையாதா? அந்த இரண்டு பஸ்களிலும் இருக்கும் 100 – 120 பேருக்கு வேறு வேலையோ சிந்தனையோ கிடையாதா என்ன?

இந்த இரண்டு ஜோடியும் மேஜர் காதல் ஜோடி. படம் முழுக்க விரவியிருக்கும் ஜோடி. மூன்றாவது பத்திரிகையில் வரும் நகைச் சுவைத் துணுக்கு மாதிரி ஒரு சின்ன துணுக்குக் காதல் ஜோடி,.   இந்தக் காதலைத் தவிர நமக்கு வாழ்க்கையில் வேறு ஒன்றும் தெரிவதில்லை. அந்த 120 பேரில் ஒரு வியாபாரி இருக்கமாட்டானா, ஒரு மாணவன் இருக்க மாட்டானா, ஒரு நோயாளியைப் பார்க்கப் போகிறவன் இருக்க மாட்டானா? இந்தக் கதை எழுதியவரும் தயாரிப்பாளரும் இயக்குனரும் உண்மையாகச் சொல்லட்டும், பணத்தைத் தவிர வேறு சிந்தனை இருந்திருக்குமா அவர்களிடம்? இந்த கதை எழுதும்போதும் இயக்கும் போதும் காதலிலா அவர்கள் மயங்கிக் கிடந்தார்கள்? என் நினைவில் ஒரு அப்பா தன் மகளுக்கு கைபேசியில், “ இது வந்துட்டே இருக்கேண்டா கண்ணு, இதொ வந்துட்டேண்டா” என்று ஆறுதல் தருகிறார். ஒரு கழகக் கண்மனி இல்லை. ஒரு டீச்சரம்மா இல்லை..

இருந்தாலும் தமிழ் சினிமா இதுகாறும் வீழ்ந்துகிடந்த குப்பை மேட்டிலிருந்து எழுந்து வந்துள்ளது சந்தோஷமான காரியம். குப்பையிலேயே இதுகாறும் விழுந்து கிடந்ததால் எழுந்து வந்த பிறகும் கொஞ்சம் குப்பை கூளம் ஒட்டிக்கிடக்கும்  தானே. 

இரண்டு பஸ்களும் மோதிக்கொள்ளும் சமாசாரம்  வேடிக்கையானது. ஒரு அகன்ற நெடுஞ்சாலையில் அவை நேருக்கு நேர் மோதிக்கொள்கின்றன. நடக்காத சமாசாரம். உரசி கவிழும். ஆனால் இங்கு டிவைடரை அலட்சியம் செய்து ஒரே லேனில் இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொள்கின்றன. அப்படி இல்லாமலும் கதை சாத்தியம். பஸ் கவிழ்வதும் சாத்தியம். கவிழ்ந்த பின் விபத்தின் காட்சிகளும் தயாரிக்கப்பட்டவை தான்., நிகழ்ந்தவை என்று சொல்ல சாத்தியமில்லை. என்ன செய்ய? நம் தொழில் நுணுக்கம் ஆர்ட் டைரக்‌ஷன் அப்படியான ஒரு மரபு பெற்றது. தலையில் ஒரு கட்டு. நெற்றியிலிருந்து கன்னங்களில் வழியும் கொஞ்சம் சிவப்பு வர்ணக் குழம்பு. பிறகு இருக்க வே இருக்கிறது பேச வேண்டிய வசனம். தீர்ந்தது சமாசாரம். இப்படி 80 வருஷ காலம் குப்பை கொட்டியாயிற்று கொட்டி என்னென்னமோ திலகம், சிகரம், என்றெல்லாம் கூட பேர் வாங்கியாயிற்று. டெக்னிக்கில் நாம எங்கியோ போயிட்டொம்ல.

நம்ம சினிமா கதையில் நர்ஸ் மாத்திரம் தப்பித்துக்கொள்கிறாள். ஒரு காயமும் இல்லாது. துணுக்குக் காதல் ஜோடியில் ஒன்று காலி. எப்படியோ போகட்டும். இந்த இரண்டு காதல் ஜோடிகளும் பஸ்ஸில் ஏறும் வரையிலான நிகழ்ச்சிகள், அவர்கள் உறவுகளில் காணும் நெகிழ்ச்சிகள் எல்லாம் எனக்குப் பிடித்திருந்தன. அவை கொஞ்சம் மிகையாக இருந்த போதிலும். மிகை என்ற எண்ணம் தோன்றும் போதெல்லாம் நம்ம உலக நாயகனும் சூப்பர் ஸ்டாரும் இளைய தளபதிகளும் தோன்றும் காதல் காட்சிக்ளை நினைத்துக்கொள்வேன்.  மனம் நிம்மதி அடந்து விடும். இத்தனை நாளாக பேத்திக்கோண்டிருந்தவன், பாயைச் சுரண்டிக் கொண்டிருந்தவன் இப்போது ஏதோ நார்மலாக இரண்டு மூன்று வார்த்தை பேசினால் நமக்கு பெருத்த நிம்மதியின் ஆசுவாசம் ஏற்படாதா என்ன?

vswaminathan.venkat@gmail.com