ஹூஸ்டன்: ஹூஸ்டன் வாழ் இந்தியத் தமிழர்களின் தலைவர் திரு. சாம் கண்ணப்பன் டெக்சாஸ் நிபுணத்துவ பொறியியலாளர்கள் வாரியத்தில் (Texas Professional Engineering Board) நியமிக்கப்பட்டுள்ளார். டெக்சாஸ் மாநில கவர்னர் திரு. ரிக் பெர்ரி அவர்கள் ஹூஸ்டன் தமிழர்களின் அன்புத் தலைவர் திரு. சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் அவர்களையும் திரு. எட்வர்ட் சம்மர்ஸ் அவர்களையும் டெக்சாஸ் நிபுணத்துவ பொறியியலாளர்கள் வாரியத்தில் நியமித்துள்ளார். இந்த வாரியம் மேலும் ஐந்து வருடங்கள் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரியம் மூலம் தான் தகுதி பெற்ற பொறியாளர்கள் லைசன்சுகள் வழங்குதல், டெக்சாஸ் பொறியியல் பயிற்சி சட்டம் உறுதி மற்றும் டெக்சாஸ் தொழில்முறை பொறியியல் நடைமுறை சட்டம் இயற்றப்படுகிறது. திரு. சாம் கண்ணப்பன் அவர்கள் தமிழ் நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டரசன் கோட்டையில் பிறந்தவர். இவர் ஹூஸ்டன்ல் SNC-Lavalin ஹைட்ரோகார்பன்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் மூத்த வடிவமைப்பு பொறியியலாளராக உள்ளார். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்று மேலும் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து இயந்திர பொறியியல் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளார். இவர் ஹூஸ்டன் தமிழர்களின் இதயம் கனிந்த ஸ்ரீ மீனாக்ஷி கோவிலின் முதன்மை நிறுவனர்களில் ஒருவராவார். “மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்; ஒரு மாற்று குறையாத மன்னன் இவனென்று சொல்ல வேண்டும்……” என்ற கவிஞர் கண்ணதாசனின் வரிகளுக்கு இணங்க டெக்சாஸ் சபைதனில் மாபெரும் பெருமைகளை சுமந்து தமிழர்களின் பெருமைகளை மேலும் தலை நிமரச் செய்த திரு. சாம் கண்ணப்பன் அவர்களுக்கு ஹூஸ்டன் தமிழர்களின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். – sam.kannappan@gmail.com