ஆயிரம் வருடத் தூக்கம் – பஷீரின் நேர்காணலும் சில பத்திகளும் (டிட் ஃபார் டாட் நடத்திய ஒரு நேர்காணல் – 1984

வைக்கம் முகம்மது பசீர்தார்மீகமின்மையும் அக்கிரமமும் அநீதியும் இந்தளவுக்கு வெகுசாதாரணமாகி விட்டதற்கான காரணம், சமூகத்தின் மத உன்னதங்களின் வீழ்ச்சிதானே?

“நிச்சயமாக! மனிதனை மிருகங்களிலிருந்து வேறுபடுத்தி மனிதத்தன்மைக்கு உயர்த்துவது மதங்கள்தான். மதங்களில் மிகவும் இயல்பானதும் எளிமையானதும் இஸ்லாம்தான்.

கலாச்சாரச் சீரழிவில் இன்றைய இலக்கியத்திற்கும் திரைப்படத்திற்கும் பங்கிருக்கிறதல்லவா?

இருக்கிறது. இங்கே ஏராளமான வெளிநாட்டுப் படைப்புகள் இறக்குமதியாகின்றன. இணைசேர்வதைக் கற்றுக் கொடுப்பவைதான் இதில் அதிகம். ஆண்-பெண் போகமும் ஒரு பெண்ணைப் பல ஆண்கள் பல போகிப்பதும் எப்படி என்பதை அவை கற்றுத் தருகின்றன. அதையெல்லாம் வாசித்து விட்டு இங்கிருப்பவர்கள் எழுதத் தொடங்கினால்தான் ஆபத்து. இறக்குமதி செய்யப்படுபவைகளில் நல்லவைகளும் இருக்கக் கூடும். அப்புறம் திரைப்படங்கள். அவை மனிதனுக்கு நல்லவற்றைப் போதிப்பதும் ரசிக்க வைப்பதுமாக இருக்க வேண்டும்

முஸ்லிம்களின் பிரச்சினை பற்றித் தங்களது கருத்தென்ன?

முகம்மது நபிக்குப் பிறகு 5-6 நூற்றாண்டுகள் வரை, பொற்காலமாக இருந்தது. அதற்குப் பிறகு முஸ்லிம்கள் துயில் கொள்ள ஆரம்பித்தார்கள். 1000 வருடத் துயில். மெதுவாகச் சிலர் விழித்துக் கொண்டு எங்க உப்பப்பாவுக்கொரு ஆனை இருந்தது’ என்று சொல்லிப் பவுசு கொண்டாடுகிறார்கள். அறிவியல் சாஸ்திரத் துறைகளில் முதன் முதலாக உலகிற்கு அர்ப்பணிப்புச் செய்தவர்கள் முஸ்லிம்கள்தான். இதை நானாகச் சொல்லவில்லை. வரலாற்றாய்வாளர்களாகிய பென்சும், டோயன்பியும் சொன்னதுதான். அதெல்லாம் பழங்கதைகள். முஸ்லிம்கள் இப்போது தங்க வாசல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஹோனலூலு – நகரும் அரண்மனை சௌதி அரேபியாவில் பஹத் மன்னரின் கப்பல், ஆறு மாடிகள் உட்பட ஒரு ஹெலிபேடும் மருத்துவமனையும் அதிலிருக்கின்றன. ஆக மதிப்பு வெறும் 45 கோடி ரூபாய்தான். இங்கிலாந்தில் வைத்து இன்னும் கொஞ்சம் மெருகுபடுத்தினார்கள். 21 கோடி ரூபா செலவில். ஆக மொத்தம் 66 கோடி.

மாத்ருபூமி, மனோரமா போன்ற பத்திரிகைகளில் படித்த செய்தியில், பஹத் மன்னரின் சில கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வாகனத்தைப் பற்றியும் அறிய முடிந்தது. ரியாத், மக்கா, மதீனா, ஜித்தா ஆகிய நகரங்களில் கோடி கோடியாக செலவு செய்து அரண்மனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. இப்போது கடலில் ஒரு தீவை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான அரண்மனைகள் எழும்பும்.

இறைத்தூதர் முஹம்மது நபியைப் பற்றியும் குர்ஆனைப் பற்றியும் அறிந்திருப்பீர்கள். முஹம்மது நபிக்குச் சொந்தமாக ஒரு படுக்கை கூட கிடையாது. காலையில் எழுந்திருக்கும் போது ஈச்சமரத்தின் கீற்றுகளால் முடையப்பட்ட பாயின் அடையாளங்கள் அவரின் உடலெங்கும் பதிந்திருக்கும். நான் வேணுமென்றேதான் “(ஸல்)” சொல்லாமல் தவிர்த்திருக்கிறேன். இங்கு அதை எதற்காகக் குறிப்பிட வேண்டும்?

இறைவனின் தூதராக முஹம்மது பிறந்து வளர்ந்து மரணமடைந்த நாடு சௌதி அரேபியா. திருக்குர்ஆன் அருளப்பட்ட நாடு, குர்ஆனின் முதல் வார்த்தையே வாசிப்பீராக என்பதுதான். உங்களுக்குத் தெரியுமோ என்னவோ, 82 விழுக்காடு மனிதர்கள் எழுத்து வாசனை அறியாதவர்கள் என்று சொல்லப்படுகிறது. நான் சொல்வதையெல்லாம் டிட்ஃபார் டாட் பிரசுரிக்குமென்றால், இந்தப் பத்திரிகையை சில முஸ்லிம் தேசங்கள் தடை செய்யக்கூடும். இப்போது 50 முஸ்லிம் தேசங்கள் இருக்கின்றன. சுமார் 100 கோடி முஸ்லிம்களும் இருக்கிறார்கள். சுன்னி, முஜாஹித், ஜமாஅதே இஸ்லாமிய, காதியானி, அலி அல்லாஹ் முதல் 22 பிரிவு ஷீஆக்கள், மைதஸீன், துருசி, ஷாஃபி, ஹனஃபி, ஹம்பலி, மாலிக், அஃலே ஹதீஸ், அஃலே குர்ஆன் இப்படிப் போகின்றன அவை. இதில் உண்மையான முஸ்லிம்கள் யார்? இஸ்லாத்துக்குள் அரசாட்சி இருக்கிறதா? மன்னர்களும் சுல்தான்களும் சக்கரவர்த்திகளும் முஸ்லிம் தேசங்களில் ஏன் இப்படி இராணுவ ஆட்சி. அப்புறம் இந்திய முஸ்லிம்களின் பிரச்சினைகள். இந்தியப் பிரிவினைக்குப் பின் மேலும் தீவிரமடைந்திருக்கிறது. இந்தியாவை இரண்டாகப் பிளந்து விடக் கூடாது என்று மௌலானா அபுல்கலாம் ஆசாத்கான், அப்துல்கபூர் கான், ஷேக் முகம்மது அப்துல்லாஹ், மௌலானா அபுல் அஃலா மௌதூதி போன்ற ஏராளமான முஸ்லிம் தலைவர்கள் சொன்னார்கள். யார் கேட்டார்கள்? அப்படியாக இந்தியா பிளவுபட்டது? பிறகு என்ன நடந்தது? முஸ்லிம்களுக்கென்று பிடிவாதமாக நின்று அடைந்த பாக்கிஸ்தானில் இஸ்லாமிய நடைமுறைகள் இருக்கின்றதா? உலகளவில் முஸ்லிம்கள் மிக அதிகமாக வாழும் முஸ்லிம் தேசம், இந்தப் பாரத தேசம்தான். முஸ்லிம்களின் வீரம் அழிக்கப்பட்டு, இறைவா, என்னென்ன அனர்த்தங்கள். பாக்கிஸ்தானில் ஆறரைக் கோடி முஸ்லிம்கள். பங்களாதேஷில் ஏழரைக்கோடி முஸ்லிம்கள். கொஞ்சம் பழைய கணக்குத்தான். தேசம் பிரிக்கப்பட்டதன் மூலம் எந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது? முன்பு இராணுவம் காவல்துறை இரண்டிலுமே சரிபாதிக்கு மேலாக முஸ்லிம்கள் இடம்பெற்றிருந்தார்கள். இப்போது? இராணுவத்திலும் காவல்துறையிலும் இப்போது யார் இருக்கிறார்கள்? காக்காமார்களே, காக்காத்திமார்களே! இறைவா, அறிவைப் பயன்படுத்தாத இந்த இஸ்லாமிய மக்களைக் காப்பாற்ற யாரிருக்கிறார்கள்?

மத-இறை மறுப்பாளர்களைக் குறித்தும் வெறும் உலகாயத வாதம் குறித்தும் என்ன சொல்கிறீர்கள்?

அது சரி இப்போதைய பெரும் பிரச்சினை கடவுள்தான் இல்லையா? கடவுளோ மதமோ இல்லாத ரஷ்யாவிலும் சீனாவிலும் காவல்துறையும் சிறைச்சாலைகளும் நீதிமன்றங்களும் கிடையாதா? தூக்குமரங்கள் கிடையாதா? சீனாவும் ரஷ்யாவும் இராணுவத்தை எதிரெதிராக அணிவகுத்து நிறுத்தியிருக்கிறதல்லவா? அவர்களுக்குத்தான் மதமோ கடவுளோ கிடையாதே.

விமர்சனம் என்ற பெயரில் குர்ஆனைக் குறை கூறும் போக்கைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

குர்ஆனில் விமர்சிப்பதற்கு எதுவுமில்லை. மொழிபெயர்ப்பை நான் சொல்ல வரவில்லை. அப்புறம் விமர்சிப்பதற்கான இடங்களை குர்ஆனின் ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்தான் உருவாக்கிக் கொடுக்கிறார்கள். குர்ஆனில் சொல்லப்பட்டவைகளுக்கு எதிராகவே அவர்களின் வாழ்க்கையையும் போதனைகளையும் நம்பிக்கைகளையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். மற்றொரு விஷயம், குர்ஆனை வெறும் மொழிமாற்றம் மட்டும் செய்தால் போதாது. குர்ஆன் என்பது அருளப்பட்ட வேதம். அது உலகத்தின் இறுதி நாளை வரை குறிப்பிட்டுச் சொல்லியிருக்கும் ஒரு மார்க்க தரிசனம். எல்லா மொழிகளுக்கும் காலமாற்றங்களுக்கேற்ப மொழியிலும் லிபியிலும் அர்த்த வேறுபாடுகள் நிகழும். அப்படி நிகழ்ந்துமிருக்கிறது. எனவே குர்ஆன் அருளப்பட்ட காலத்தின் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அக்கால கட்டம் சார்ந்து சொல்லப்பட்ட பொருள் எதுவோ அதைப் படித்து புரிந்து கொண்டுதான் மொழிமாற்றம் செய்ய வேண்டும். இது மிகச் சிரமமான ஒரு விஷயமும் கூட. டாக்டர் மோரீஸ் புக்காய் இந்த விஷயத்தில் பல முயற்சிகளைச் செய்து மிருக்கிறார். இவரது பைபிள், குர்ஆன் சாஸ்திரம் படித்திருக்கிறீர்களா? இதில் நான் பத்துப் பிரதிகளை வாங்கி விநியோகித்திருக்கிறேன். சரி நான் கேட்கிறேனே, இந்த விமர்சகர்களால் எதைத்தான் விமர்சிக்க முடியாது? குர்ஆனை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்த அல்லாமா யூசுப் அலி, லண்டன் தெருவொன்றில் குடித்து விட்டு விழுந்து கிடந்ததாகச் சொல்லி பிரச்சாரம் செய்தார்களே சிலர். யூசுப் அலி குடிப்பதற்காகவென்றே லண்டனுக்குப் போயிருக்கிறார். சிறி நகரிலோ, டெல்லியிலோ, பம்பாயிலோ கல்கத்தாவிலோ அவருக்கு அது கிடைக்கவில்லை போலிருக்கிறது. லண்டன் தெருவொன்றில் யூசுப் அலி தளர்ந்து விழுந்ததும் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதுமான சம்பவம் உண்மைதான். அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். தளர்வாதமோ எதுவோ, அவரை எனக்குத் தெரியும். காஷ்மீரின் அடிவாரக் கிராமமொன்றில் ஒரு கூடாரம் அமைத்து அதில் வைத்து குர்ஆனை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் போது, நான் அங்கே போயிருந்தேன். அவர் மொழிபெயர்த்த குர்ஆனின் ஒரு ஜுஸ்உவின் காப்பியை எனக்குத் தந்துமிருக்கிறார். அக்காலகட்டத்தில் நான் முகம்மது அசதுடன் பரிச்சயமாகிறேன். “ரோடு டு மெக்கா”, “இஸ்லாம் ஆன் த க்ரோஸ் ரோடு” போன்ற நூல்களின் ஆசிரியர் இந்த முகம்மது அசத். இவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஒரு யூதர். லியோபோல்ட் வெயிஸ் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு அரேபியாவுக்குச் சென்று அரபு மொழியைப் படித்து விட்டு, காஷ்மீருக்கு வந்து சிறி நகரில் தங்கியிருந்தார். ஹதீஸ்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார் அப்போது. துணைக்கு கண்பார்வையற்ற ஒரு அரபுப் பண்டிதரும் இருந்தார். இஸ்லாம் ஆன் த க்ரோஸ் ரோடு என்ற நூலையும் ஹதீஸின் முதற் தொகுப்பையும் எனக்குத் தந்தார். அப்போது நான் ஷெக் அப்துல்லாவின் விருந்தினனாக இருந்தேன். ஷெக் அப்துல்லாவுடையவும் அசத், மௌதிகளுடையவும் ஆன்மாவுக்கு அல்லாஹ் நித்திய சாந்தி அருள்வானாக. இஸ்லாமிய மக்கள் அறிவைப் பிரயோகித்து சிந்தனை செய்வதில் அல்லாஹ் நாட்டம் செலுத்தி அருள் புரிவானாகட்டும்.

தமாம்


மர்ஹூம் பஷீர் அவர்களின் ’ஆனைவாரியும் பொன்குருசும்’ எனும் நூலில் 1992ல் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் அவராற்றிய செவிசாய்த்துக் கேளுங்கள் அந்திமப் பேரோசை சொற்பொழிவிலிருந்து  ஐந்து பத்திகள் –  ஆபிதீன் பக்க வாசகர்களுக்கு போனஸாக…(அனுப்பி உதவியது : ஹனீபாக்கா)

பகல் முழுவதும் சங்கீதத்தில் மூழ்கி மர நிழலில் அமர்ந்திருப்பேன். தனியாக இருக்கும் போது, எதிர்ப்புறம் இருக்கும் காலியான நாற்காலிகளை கவனித்துப் பார்ப்பேன். எனக்கு பாட்டுகள் என்றால் மிகவும் பிடிக்கும். மனதின் சமநிலை தவறியிருந்ததால், கோபம் வருவதற்கு பெரிய காரணங்கள் எதுவும் தேவையில்லை. கூட்டு வாழ்க்கையில் கோபம் வருவதற்கான காரணங்களும் நிறையவே இருக்குமல்லவா? எழுதுவோன் என்ற நிலையிலும் மனதிற்கு அமைதி தேவைப்பட்டது. என் மனதை சாந்தப்படுத்துவதற்கு இசை எப்போதுமே உதவியாக இருக்கும். சிறு வயது முதலே எனக்கு சங்கீதம் என்றால் மிகவும் பிடிக்கும். 60 வருடங்களுக்கு முன் இறந்து போன ஒரு பெண்மணியின் இனிமையான பாடலை இப்போது நான் கேட்கிறேன். இசைத்தட்டிலிருந்த பெயர் அழிந்து போய் விட்டது. அந்தப் பெண்மணி பாடுகிறாள். தங்கமே நீ இப்போது எங்கே இருக்கிறாய்? முடிவளர்த்த சூனிய வெளியிலா? எனக்கு லேசான அழுகை வரும் போலிருக்கிறது.

கொஞ்ச நாட்களுக்கு முன் எங்களுடைய அதாவது என் மனைவியுடைய கோழிக்கூண்டில் ஒரு பெரிய ராஜநாகம் நுழைந்து நான்கு வெள்ளை லகான் கோழிகளைக் கொன்று விட்டது. அப்போது இரவு 2மணி. கோழிகளின் கூச்சல் கேட்டு வீடே விழித்துக் கொண்டது. நான் போய் பார்க்கும் போது, விளக்குகளையெல்லாம் போட்டுக் கொண்டு மாதர் குல மாணிக்கங்கள் ராஜநாகக் கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். கம்புகளுடன் வேலிகளைப் பொத்துக் கொண்டு அக்கம் பக்கத்தினரும் வந்திருந்தார்கள். கல்யாணியின் மேற்பார்வையில் ஐந்தாறு பெண்கள் நானுட்பட இரண்டு ஆண்கள்,ஆட்சிப் பொறுப்பை அழகிகள் ஏற்றெடுத்திருக்கிறார்கள். மண்ணெண்ணெய் டப்பாவிலிருந்து உறிஞ்செடுக்கும் சிறிஞ்சி போன்ற ஒரு கருவியால் தட்சகனின் முகத்திலடித்தார்கள். ரொட்டி சுடுவது போல், சுற்றி மூன்று புறமும் கல். வெளியே பலகை அடுக்கி ஒரு புறம் கம்பி வலை. முன்புறம் வாசல். கம்பி வலையினூடேதான் தட்சக வதம் நடந்தது. அழகிகள் அரசு செய்வதை நானொரு பதினைந்து நிமிடம் கவனத்தேன். பாம்புக்கு பரம சுகம். அது மண்ணெண்ணெயில் குளித்துக் கொண்டிருந்தது. அழகாக சீறிக் கொண்டுமிருந்தது.

என் தகப்பனார் நிலத்தில் மேற்கோரமாக முடைந்த தென்னங்கீற்றுகளால் சின்னதாக ஒரு குடிசை கட்டினார். குடிசை கட்டுவதற்கு காலியான இடம் அங்கேதான் இருந்தது. அந்தச் சிறு குடிசையின் வடக்குப்புறம், சுத்தமாக தண்ணீருள்ள ஒரு பெரிய குளம் இருந்தது. குளக்கரையில் ஒரு பெரிய மாமரம். அந்த மரம் நிறைய சிவப்பு நிறத்திலான மாங்காய்கள். அந்த எட்டு ஒன்பது ஏக்கர் நிலத்தில் ஏராளம் மரங்களிருந்தன. தென்னை, மா, பலா ஐனி பாக்குமரங்கள் அப்புறம் வாழை முருங்கை பப்பாளி எனப் பல வகை மரங்கள். ஆற்றோடு சேர்ந்து நெடுநிலத்தில் நூறு நூற்றைம்பது அடி அகலத்தில் தோட்டத்திலிருந்து நான்கைந்தடியில் பள்ளமான ஒரு பகுதி. நாயின் கண்ணம் எனப்படும் பாய் முடைவதற்கான கோரை – ஆற்றைத் தொட்டு நீளமாக வேலி போல் நாயின்கண்ணத்தில் பூத்த வெள்ளை மலர்கள், மழைக் காலங்களில் அந்தப் பள்ளமான பகுதி, மழை வெள்ளத்தில் மூழ்கி விடும். நீர் வற்றிய பிறகு, அதில் நிறைய வண்டல் மண் படியும். நல்ல உரச்சத்துள்ள புது மண். அங்கு மானாவாரியாக நல்ல விவசாயம் நடக்கும். வெண்டக்காய், பாகற்காய், மிளகாய், பயறு வகைகள், புடலங்காய், வெள்ளரி, பீக்கங்காய், பூசணி, சேனைக்கிழங்கு, இஞ்சி, கும்பழங்காய், கரும்பு வகை வகையான காய்கறிகள்.

அது ஒரு மோசமான காலகட்டமாக இருந்தது. முஸ்லிம்களுக்கு அரபு மட்டுமே படிக்கலாம். மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி எல்லாம் நரகவாசிகளான காபிர்களின் மொழிகள். அவற்றைப் படிக்கவோ படிக்க வைக்கவோ கூடாது. என் பெற்றோர்கள் முதல் என்னை அரபு படிக்க வைத்தார்கள். குர்ஆன் முழுவதும் படித்தேன். இறை வசனங்கள்தான் குர்ஆன். அதன் தொடக்கமே வாசிப்பீராக. மனித குலத்தை எழுதுகோலால் எழுதக் கற்றுத் தந்த கருணாமயனான உன் இறைவனின் திருநாமத்தால் வாசிப்பீராக. மனித குலத்துக்கு எழுதக் கற்றுத் தந்தது அரபு மொழி மட்டுமல்லவே. மொழிகள் மனிதர்களிடையே ஏராளமாக இருக்கிறதல்லவா? எழுதவும் வாசிக்கவும் பயில வேண்டும். எவ்வளவோ காலமாற்றங்கள் நிகழ்ந்த பிறகும் முஸ்லிம் சமூகம் ஏன் இதைப் புரிந்து கொள்ளவே இல்லை இறைவா?

ஒரு நாள் சில பேர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, ஒரு ஆள் வந்து கொஞ்சத் தூரத்தில் தென்னை மரத்தில் சாய்ந்து நின்றார். மூன்று நான்கு தடவைகள் சிறைத்தண்டனை அனுபவித்த ஒரு திருடன்.  மற்றவர்கள் அனைவரும் போன பிறகு திருட்டு நண்பன் பக்கத்தில் வந்தான். நான் நாற்காலியைச் சுட்டிக்காட்டி உட்காரும்படி சொன்னேன். ஆனால் அவன் உட்காரவில்லை. தேநீர் கொடுத்தேன். அதை வாங்கிக் குடித்து விட்டு, தூரத்தில் குழாயடியில் சென்று தம்ளரை கழுவிக் கொண்டு வந்து ஸ்டூலில் வைத்தான். நான் கேட்டேன், “சௌக்கியந்தானே?”

“குருவைப் போன்றவர்களின் ஆசீர்வாதத்தால்”

நான் கேட்டேன், “அப்புறம் என்ன விசேஷங்கள்?”

“குருவின் ஆசீர்வாதத்துடன் எனக்கு ஒரு ரூபாய் வேண்டும். நான் ஒரு இடம் வரை போகப் போகிறேன். குரு, கை நீட்டம் தர வேண்டும்”.

நான் ஒரு ரூபாய் கொடுத்து விட்டு, திருட்டு மங்களகரமாக வெற்றி பெற வாழ்த்தினேன்.

***
நன்றி: காலச்சுவடு பதிப்பகம் , குளச்சல் மு. யூசுப், எஸ்.எல்.எம். ஹனீபா  (slmhanifa22@gmail.com ) , நளீம்

நன்றி: ஆபிதீன் பக்கங்கள் வலைப்பதிவு http://abedheen.blogspot.ca/2012/02/blog-post_13.html