நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதிய இவரின் தொகுப்பு நூல்களில் ஒன்று மேற்கண்டவாறு சுதாராஜ் பற்றிய அறிமுகத்தைத் தருகிறது. உண்மையில் சுதாராஜின் வாழ்வும் எழுத்தும் சமகோட்டில்தான். அதை நான் திரும்பிப் பார்க்க விரும்பியபோது, இந்தக் களத்தை அவரின் வாழ்வைவிட எழுத்துக்குப் பகிர்ந்து கொள்ளவே விரும்பினார். சுருக்கமாக சுய வாழ்வையும் விரிவாக இந்தப் பந்தியில் அடங்கக் கூடிய அளவிற்கு எழுத்துலக வாழ்வை பற்றியும் மனம் திறந்தார். பொறியியலாளரான இவர் பத்திற்கு மேற்பட்ட நாடுகளில் பணி புரிந்திருக்கிறார். அங்கெல்லாம் சந்தித்த சில விந்தையான மனிதர்களுடனான அனுபவங்களை மிகை குறைப்படுத்தாமல் நூலுருவாக்கியிருக்கிறார். இலக்கிய நூல், நாவல், மொழிபெயர்ப்பு நூல்கள் என பட்டியல் மிக நீளமானது. திரை கடலோடி தேடிய திரவியம் எல்லாம் எழுத்துக்காகவே அர்ப்பணித்தவர். எழுத்துலகிற்கு அவர் போட்ட பிள்ளையார் சுழியைப்பற்றி அவரிடமே பேசுவோம். மூன்று தடவைகள் இலங்கை அரசின் சாகித்திய விருதினைப் பெற்று பெருமைக்குரிய இவர் மின்னாமல் முழங்காமல் தன் எழுத்துப்பணியைப் பற்றி பேசத் தொடங்கினார்.
உங்களது பிறந்த இடம், கல்லூரிப் பற்றிக் கூறுங்கள்?
நான் யாழ்ப்பாணம் கந்தர் மடத்தைச் சேர்ந்தவன். கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆரம்ப வகுப்புகளிலும் ஐந்தாம் ஆண்டின் பின்னர் யாழ். இந்துக் கல்லூரியிலும் கல்வி பயின்றேன். பின்னர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியற்துறையில் கற்றேன். தொழில் நிமித்தம் வந்து சேர்ந்தது புத்தளத்திற்கு.
எழுதத் தொடங்கிய காலம் பற்றிய நினைவுகள்-
அப்போது நான் யாழ் இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். ஆறாம், ஏழாம் வகுப்புகளிலேயே சக மாணவ நண்பனொருவன், அம்புலிமாமா, கண்ணன் போன்ற சிறுவர் சஞ்சிகைகளைக் கொண்டு வருவான். இடைவேளைகளில் அந்தக் கதைகளை வாசித்து ஒருவர்க்கொருவர் பகிர்ந்து கொள்வோம். சிரித்திரன் சஞ்சிகையும் அதிலுள்ள தரமான நகைச்சுவைத் துணுக்குகள் காரணமாக மாணவர்களிடையே அறிமுகமாகியிருந்தது. சிரித்திரனில் பிரசுரமாகும் நல்ல சிறுகதைகள் என்னைக் கவர்ந்திழுத்திருக்கின்றன. உயர்தர வகுப்பிற் கற்றுக்கொண்டிருந்த போது, உயர்தர மாணவர் ஒன்றியம் எனும் அமைப்பை ஒருங்கமைத்து வாசிப்புப் பழக்கத்தை நண்பர்களிடையே வளர்த்துக் கொண்டோம். கல்லூரி நூல் நிலையத்திலிருந்தும், நண்பர்களின் பங்களிப்பினூடாகவும் பலவித புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்புக்கிட்டியது. வாராந்தர பத்திரிகைகளில் வரும் ஈழத்து எழுத்தாளர்களது சிறுகதைகளைப் படிக்கும் ஆர்வமும் ஏற்பட்டிருந்தது. உயர்தர ஒன்றியத்தின் ஊடாக ‘விஞ்ஞான தீபம்’ எனும் ஒரு சஞ்சிகையையும் வெளியிட்டோம். அதன் ஆசிரியராகவிருந்து, விடயதானங்களை சக மாணவர்களிடமிருந்து பெற்றுத் தொகுத்து கல்லூரியிலேயே வெளியிட்ட அனுபவம் எனது எழுத்துப் பணியின், ஆரம்பம்.
கல்லூரி நாட்களில் பெற்ற அனுபவங்கள்தான் உங்களை ஓர் எழுத்தாளனாக்கியதா?
அப்படியும் கொள்ளலாம். சிறு பராயத்தில் படித்த நீதி போதனைக் கதைகள், அவை எவ்வளவு தூரம் சரியோ, பிழையோ என்ற ஆராய்ச்சிக்கும் அப்பால் மனதை செம்மைப்படுத்தி உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்வை எதிர்கொள்ளும் பக்குவத்தைத் தந்திருக்கின்றன. கார்த்திகேசன் மாஸ்டர், தேவன், யாழ்ப்பாணம், சொக்கன் போன்ற ஆசிரியர்களிடம் இந்துக் கல்லூரியில் பாடம் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கார்த்திகேசன் மாஸ்டர் ஒரு கம்யூனிஸ்ட்வாதி என்பது வெளியில் எல்லோருக்கும் தெரியும். தனது கலகலப்பான நகைச்சுவையூட்டல்கள் மூலம் சமூக நோக்குகள் சிந்தனைகளை போதித்து மாணவர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டிருந்தவர் கார்த்திகேசன் மாஸ்டர், இவையெல்லாம் ஒரு சமூக நோக்குள்ள மனிதனாகவோ எழுத்தாளனாகவோ ஆவதற்கு உதவியிருக்கின்றன.
முதற் கதை பற்றி…
முதலில் எழுதிய இரு கதைகளைக் குறிப்பிடலாம். ஒன்று ‘இனி வருமோ உறக்கம்?’ எனும் சிறுகதை மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டிக்கு இக்கதையை அனுப்பினேன். பரிசு கிடைத்தது இளம் பராயத்தில் எதிர்பாலினரிடையே தோன்றும் மன உணர்வுகளையும் அல்லது மனப் பதட்டங்களையும் பற்றிய கற்பனை கலந்து எழுதப்பட்ட கதை இரண்டாவதாக எழுதியது. ‘பலாத்காரம்’ எனும் சிறுகதை. அதாவது நண்பனொருவனின் குடும்பத்துக்கு நேர்ந்த கதை. சிறுபராயத்திலேயே தந்தையை இழந்தவன். வசதி குறைந்த குடும்பம் சிறுகச் சிறுக சேர்த்து ஒரு காணித்துண்டு வாங்குவதற்காகப் பணம் கொடுத்த ஏமாற்றப்பட்டுவிட்டார்கள். அந்தக் கதையை நண்பன் கூறிய விதம், அவனது சோகமும் என்னைப் பாதித்தது. அந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது, என்ற குழப்பத்தில் ஆழ்ந்து போய் பின்னர் இன்னொரு நண்பனின் உதவியுடன் அந்த இளம் வயதில் அதைத் தீர்த்துக்கொண்ட விதம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அக்கிராமங்கள் தலைதூக்கும் போது அவற்றை அழிப்பதற்குப் பயன்படுத்த வேண்டிய ஆயுதம்தான் பலாத்காரம் எனும் கருத்துப்பட அக்கதையை எழுதினேன். அந்தக் கதைதான் சிரித்திரன் ஆசிரியரின் அறிமுகத்தை எனக்கு ஏற்படுத்தியது.
உங்கள் எழுத்தாக்கங்களுக்கு ஊக்கமளித்தவர்கள் பற்றி…
சிரித்திரன் சுந்தரையும் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களையும் முக்கியமாகக் குறிப்பிடலாம். நான் இலக்கியத்துறையைச் சேர்ந்தவனல்ல. எனது கல்வித்துறை வேறு. அப்போது எனக்கு எந்த இலக்கியவாதிகளையோ எழுத்தாளர்களையோ சஞ்சிகை ஆசிரியர்களையோ அறிமுகம் இல்லை. எனது கதைகளின் தரம் எப்படியிருக்கும் என்ற கேள்விகள் எனக்குள் இருந்தது. அதனால்தான் ஆரம்பத்தில் சிறுகதைப் போட்டிகளுக்கு சில சிறுகதைகள் அனுப்பிப் பார்த்ததுண்டு. போட்டிக்கு அனுப்பப்பட்ட கதையைப் பார்த்து, என்னைத் தொடர்புகொண்டு அறிமுகமான சிரித்திரன் சுந்தரின் உறவு அவரது இறுதிக்காலம் வரை தொடர்ந்தது. சிரித்திரனைத் தொடர்ந்து வெளிவந்த எனது கதைகளைப் பார்த்து எனது வீடு தேடி வந்து சந்தித்து கதைகளைச் சிலாகித்துக் கூறி மல்லிகையிலும் எழுதுமாறு கேட்டுக்கொண்டவர் டொமினிக் ஜீவா அவர்கள். இதை ஏன் குறிப்பிடுகிறேனென்றால் அப்போது பொடிப்பயலாக இருந்த என்னை அவர் வீடு தேடிவரவேண்டிய அவசியமே இல்லை. ஆனால் அது அவரது பெருந் தன்மையான சுபாவம். இளம் எழுத்தாளர்களின் தரமறிந்து அவர்களை ஊக்குவித்து,
தட்டிக்கொடுத்து மல்லிகை மூலம் வளர்த்தெடுக்திருக்கிறார். அன்று தொட்ட நட்பு இன்றுவரை தொடர்கிறது. நேர நெருக்கடி காரணமாமாக எழுதுவது தள்ளிப் போய்க் கொண்டிருந்தாலும் தனது சலிக்காத வற்புறுத்தல்களினால் எழுதவைத்திடுவார். அப்படி மல்லிகையில் பிரசுரமான கதைகளே அதிகம்.
உங்கள் குடும்பம் மனைவி பிள்ளைகள் பற்றி….
நான் எழுதுவதுபோலவே நல்ல சிநதனைகளுடன் வாழ்பவன். அவ்வாறுதான் எனது காதற் திருமணமும் நடந்தேறியது. நான் சிரித்திரனில் எழுத்தாளனாக இருந்த காலத்தில் அவள் சிரித்திரனின் அபிமான வாசகி, எங்களைச் சேர்த்து வைத்ததற்கு அந்தத் தொடர்பும் ஒரு காரணம் பிள்ளைகள் இப்போது வளர்ந்துவிட்டார்கள். மூத்தவர்கள் இருவரும் பெண்கள். அடுத்த ஆண்பிள்ளைகள் றோயல் கல்லூரியிற் படிக்கிறார்கள். சில சிறுவர் இலக்கிய நூல்களை பிள்ளைகள் எழுதியிருக்கிறார்கள். கடைசி மகன் அனுஷியன் றோயல் கல்லூரி நாடகவிழாவிற் பங்கு பற்றி சிறந்த பிரதிக்கான பரிசும் பெற்றிருக்கிறான். குடும்பத்தைப் பற்றி குறிப்பாகக் கேட்ட படியால் இந்தத் தகவல்களைக் கூறியிருக்கிறேன்.
‘மனைவி மகாத்மியம்” எனும் நூலுக்கு சென்ற ஆண்டின் (2009) சாகித்திய விருதும் கிடைத்திருக்கிறது. அதுபற்றிக் கூறுங்கள்.
அவ்வப்போது வெளிவரும் எனது சிறுகதைத் தொகுதிகளுள் ஒன்றுதான் ‘மனைவி மகாத்மியம்’ பன்னிரண்டு சிறுகதைகளைக் கொண்ட தொகுதி, ஒவ்வொரு குடும்பத்திலுமுள்ள ‘மனைவி’ எனும் ஒரு மகத்துவமான பாத்திரத்துக்கு இலக்கிய அந்தஸ்து கொடுப்பதற்காகவே புத்தகத்துக்கு அந்தப் பெயரை தெரிவு செய்தேன்.
ஒவ்வொரு குடும்பங்களிலும் ஆணாதிக்கம், பெண்ணுரிமை என்ற பேச்சுக்களுக்கே இடமிருக்கக் கூடாது. அங்கு குடும்பம் மட்டும்தான் இருக்கவேண்டும். ஆண்கள் தங்கள் மனைவியரை கெளரவமாக மதிக்க வேண்டும். ஒருவருக்கொருவர் தன்னலமற்ற அன்புடனும் புரிந்துணர்வுடனும் விட்டுக்கொடுத்தலுடன் இருந்தால் இதையெல்லாம் சாத்தியப்படுத்தலாம். இந்த விடயங்கள் மனைவி மகாத்மியம் தொட்டுக்காட்டுகிறது.
இந்திய கலைஞர்களின் படைப்பு இங்கே ஆக்கிரமித்து இருப்பதால் எங்களின் எதிர்காலம் சூனியமாகிவிட்டது என்று இலங்கை கலைஞர்கள் நாற்பதாண்டுகளாக கூறி வருகிறார்கள். இந்நிலையில் இருபத்துக்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டிருக்கும் உங்களின் அனுபவம் எப்படி? அதுவும் இந்திய சஞ்சிகைகளுக்கிடையே இது ஒரு சாதனையாக நீங்கள் நினைக்கிறீர்களா?
வாசகர்கள், ரசிகர்கள் சுவை வித்தியாசமானது. எதையும் நாம் திணிக்க முடியாது. சாதாரணமாக 1992ம் ஆண்டு ஆனந்த விகடன் வைர விழா போட்டியில் நான் எழுதிய ‘அடைக்கலம்’ சிறுகதை முதற் பரிசை பெற்றது. அந்தக் கதையின் கருவை தமிழகத்தின் பிரபல டைரக்டர் அதை சினிமாவாக்கினார். அத்திரைப்படம் இலங்கையிலும் தமிழகத்திலும் மகோன்னத வெற்றியைப் பெற்றது. அதே கருவை நான் இலங்கையில் தயாரித்திருந்தால் என் நிலை என்னவாகியிருக்கும். இலங்கை ரசிகர்கள் அப்படியொரு ரசனையில் ஊறிவிட்டார்கள்.
எழுத்துத்துறையிலும் நம்மவர்கள் பின் நிற்கவில்லை. வாசகனும்- விநியோகஸ்தரும் கைகொடுக்க வேண்டும்.
எனது முதலாவது நூலாக பலாத்காரம் சிறு கதைத் தொகுப்பு வெளிவந்தது. நூலுருப் பெற்ற கலாநிலையப் பதிப்பகத்திலேயே அவர்களது அச்சக ஊழியர்களுக்கு வடை பாயச விருந்தளித்து நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. முதற் பிரதி பெறவேண்டிய எனது ஆசிரியரும், அந்த நூலுக்கு முன்னுரை எழுதியவருமாகிய தேவன்- யாழ்ப்பாணம் அவர்கள் கல்லூரியில் அந்த வேளை பாடம் நடத்திக் கொண்டிருந்த காரணத்தால் வரமுடியவிலலை. புத்தகத்தை எடுத்துக்கொண்டு சைக்கிளில் கல்லூரிக்குச் சென்று முதற்பிரதியை அவரிடம் கையளித்து மனத் திருப்தியடைந்தேன். இரண்டாவதாக ‘இளமைக்காலங்கள்’ நாவல் வீரகேசரிப் பிரசுரமாக வந்தது. பொதுவாக எனது நூல்கள் வெளியீட்டு விழாக்கள் இல்லாமலே வெளிவந்தன.
சிரித்திரன் பிரசுரமாக வெளிவந்த ‘கொடுத்தல்’ சிறுகதைத் தொகுப்புக்கு திக்குவயல் தர்மகுலசிங்கம் சில அறிமுக விழாக்களை செய்திருக்கிறார். பின்னர் மல்லிகைப் பந்தல் வெளியிட்ட எனது நூல்களுக்கு ஆசிரியர் டொமினிக் ஜீவா வெளியீட்டு விழாக்களை ஏற்பாட செய்து பிரபல்யப்படுத்தினார்.
இறுதியாக வந்த மனைவி மகாத்தியம், உயிர்க்கசிவு ஆகிய நூல்களுக்கு தேசிய கலை இலக்கிய பேரவையைச் சேர்ந்த நண்பர் சோ. தேவராஜா கைலாசபதி கேட்போர் கூடத்தார் வெளியீட்டு விழாக்களில் ஒழுங்கு செய்து நடத்தினர். ஆனால் எழுத்தாளர்கள் புத்தக விற்பனை கருதியே வெளியீட்டு விழாக்களை ஏற்பாடு செய்கிறார்கள் என்ற கருத்துத் தவறானது.
யாரின் கையையும் நம்பி உருவாவதல்ல எழுத்து. மூலதனமில்லா கரு. கலையுலகு வித்தியாசமானது இலங்கை தமிழ் எழுத்தாளர்களின் புத்தக விற்பனை என்பது இன்றும் கேள்விக்குரியதாகவே உள்ளது. இயக்க ரீதியாகவோ அல்லது தனியார் புத்தக நிறுவனங்களோ உண்மையான ஈடுபாட்டுடன் செயற்பட்டால் புத்தக விற்பனை கஷ்டமான காரியமல்ல.
ஆயிரம் புத்தகங்களாவது விற்கக் கூடிய விநியோக வலையமைப்பை ஏற்படுத்த வேண்டும். எனது முதற் புத்தகம் பலாத்காரம் ஆயிரம் பிரதிகள் அடிக்கப்பட்டது.
ஆர்வமேலீட்டால் இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள புத்தக கடைகளுடன் தொடர்பு கொண்டு விநியோகம் செய்தேன். நம்புங்கள்… மிக விரைவிலேயே கையிருப்பி லிருந்து புத்தகங்களெல்லாம் கொடுத்துத் தீர்ந்துவிட்டன.
விந்தை என்னவென்றால் பின்னர் பணத்தைச் சேகரிப்பதற்காக கடைகளைத் தேடிச்சென்று படிகளில் ஏறி இறங்கி அலுத்துபோய்விட்டதால் சீச்சீ.. அந்தப் பழம் புளிக்கும் எனக் கைவிட்டேன். இந்த நிலைமைதான் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களைப் பொறுத்தவரையில் இன்றைக்கும் …
நன்றி: http://www.thinakaran.lk/Vaaramanjari/2011/12/11/?fn=f1112113