நீங்களும் நூலாசிரியர் ஆகலாம்: ஆழியின் புதிய திட்டம்.

செ.ச.செந்தில்நாதன்தமிழில் நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் முளைத்துவருகின்றன. அது தமிழ், சீரிளமைத்திறம் வாய்ந்த மொழிதான் என்பதற்கான ஓர் அடையாளம். ஆனால் பதிப்பகங்களின் எண்ணிக்கையில் பாதி அளவுகூட தமிழில் சிறந்த புனைவுசாரா (non-fiction) எழுத்தாளர்கள் இன்று இல்லை. இந்த நிலையில் மாற்றத்தைக் கொண்டுவர ஆழி பப்ளிஷர்ஸ் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்குகிறது. அதன் மூலம் புதிதாக நூல் எழுத ஆர்வமுள்ளவர்கள், தொழில்முறை நூலாசிரியர்களாக ஆவதற்கான பயிற்சியை அது வழங்கவுள்ளது. நம்மில் பலருக்கு பல்வேறு துறையில் நிபுணத்துவமோ, தீராத ஆர்வமோ அல்லது ஆழ்ந்த அனுபவ ஞானமோ இருக்கலாம். அது அரசியல், நாட்டு நடப்பு, வரலாறு, வாழ்க்கை வரலாறு, மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம், சமூகம், கலாச்சாரம், இயற்கை, சுற்றுச்சூழல், உளவியல், வாழ்வியல் என எந்தவிதமான அறிவுத்துறை சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம்.

அறிவாக நம்மிடத்தில் தேங்கியுள்ள பலவற்றை ஒரு குறிப்பிட்ட தலைப்பின்கீழ் தொகுத்து நூலாக வெளியிட நம்மில் பலருக்கு ஆசை உண்டு. ஆனால் எங்கிருந்து தொடங்குவது எப்படி தொடர்வது எங்கே முடிப்பது என்றெல்லாம் நிறைய அச்சங்கள் தோன்றி நம்மை நூலாசிரியராக ஆகவிடாமல் தடுத்துவிடுகின்றன.

நாம் எந்தவிதமான வாசகர்களுக்கு அதைச் சொல்லவிரும்புகிறோமோ அவர்களுக்குப் பிடித்தமான, புரிகிற நடையில் ஒரு நூலாக அதை வடிக்கும் கலை ஓர் அற்புதமான கலையாகும். அந்தக் கலை ஒரு பிறவிக்கலை அல்ல. மாறாக நாம் அவற்றை முறையாக பயின்று கற்றுக்கொள்ளமுடியும்.

மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், வேளாண் அனுபவசாலிகள், பள்ளி அல்லது கல்லூரி ஆசிரியர்கள், மென்பொருள் நிபுணர்கள் என துறைசார்ந்த அறிவுபெற்ற பலரும்கூட இக்கலையை பயில விரும்புகிறார்கள். நீங்களும் நூலாசிரியர் ஆகலாம் என்கிற இந்தப் பயிற்சி அந்த விருப்பத்தை உங்களுக்கு நிறைவுசெய்வதற்காகவே உதயமாகிறது.

ஐந்து மாதங்களிலான இந்தப் பயிற்சி இரண்டு பகுதிகளைக் கொண்டது.

முதல் பகுதி நீங்களும் நூலாசிரியர் ஆகலாம் என்கிற இலவசமான மின்-பாடங்களின் தொகுப்பாகும். இதை நீங்கள் எங்களுடைய மின்னஞ்சல் முகவரிப்பட்டியலில் இணைந்துகொள்வதன் மூலம் இலவசமாக பெறலாம். இரண்டு மாதங்களுக்கு வாரம் ஒரு மின்-பாடம் உங்களுக்கு மின்னஞ்சல் வழியாக வந்து சேரும்.

இரண்டாம் பகுதி ஒரு விருப்பப் பகுதியாகும். இதை நீங்கள் விரும்பினால் தேர்ந்தெடுக்கலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம். கட்டாயமில்லை.

இந்த கட்டத்தில், நீங்கள் ஆழியில் நேரடி பயிற்சியைப் பெறுவீர்கள். நூலாசிரியராக ஆக விரும்புபவர்களுக்கு உண்மையில் இது ஓர் அற்புதமான வாய்ப்பாகும். இதன்படி மூன்று மாதத்தில் ஒரு நூலை எழுதி முடிக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அது ஒரு சிறிய, எளிதில் முடிக்கக்கூடிய ஒரு நூலாகவே இருக்கும். எந்த தலைப்பு, எவ்விதமான நூல் என்பதை நாம் இணைந்துமுடிவுசெய்வோம். ஒரு தலைப்பைத் தேர்வு செய்தபிறகு, அந்த நூலை எழுதத் திட்டமிடுவது முதல் எழுதி முடிப்பது வரையிலான அந்த மூன்று மாத காலகட்டத்தில் ஆறு தடவை – ஆறு சனிக்கிழமைகளில் – நீங்கள் ஆழி அலுவலகத்தில் என்னை அல்லது என் சக ஆசிரியர்களை சந்திப்பீர்கள்.

ஒவ்வாரு சந்திப்பும் காலையில் 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1 மணிக்கு முடியும். அந்தச் சந்திப்பின்போது நூலாக்கம் தொடர்பான எல்லா வழிகாட்டல்களையும் எங்களிடமிருந்து நீங்கள் பெறலாம். உங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம். நீங்கள் எழுதியிருப்பதை படித்துப்பார்த்து உரிய விமர்சனங்களும் ஆலோசனைகளும் உங்களுக்குக் கூறப்படும். ஆழியில் நாங்கள் பெற்ற எல்லா அனுபவங்களையும் உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் நாங்கள் ஆர்வமாயிருக்கிறோம். சக பயிற்சியாளர்களுடன் நீங்கள் கலந்துரையாடவும் அது ஒரு நல்ல வாய்ப்பு.

அந்த நூலை நீங்கள் சிறப்பாக எழுதிமுடிக்க நாங்கள் உதவுகிறோம். ஆனால் அந்த நூலை நீங்கள் ஆழி வழியாகத்தான் பதிப்பிக்கவேண்டும் என்று எந்த கட்டாயமுமில்லை. வேறு எந்த பதிப்பகத்துக்கும் அதை நீங்கள் தரலாம். சொந்தமாகவும் வெளியிடலாம். ஆழி மற்றும் அதன் அதன் கிளை பதிப்பகங்களான மெரீனா புக்ஸ், பேப்பர்போட் புக்ஸ் மூலமாக வெளியிடுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.

முதல் பகுதி முற்றிலும் இலவசமான பயிற்சி. விருப்பப் பகுதியான இரண்டாம் பகுதி ஒரு கட்டணப் பயிற்சியாகும். இதற்கான பயிற்சிக்கட்டணம் ரூ.3000. மன்னிக்கவும், மின்-பாடங்களை இலவசமாகத் தரலாம். நேரடி பயிற்சியை அவ்வாறு தருவதற்கில்லை. இது வெறுமனே நேரம் அல்லது பணம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல, பெறக்கூடிய அறிவுக்காக நீங்கள் செலுத்தும் மிகவும் நியாயமான ஒரு கட்டணம்தான். யாருடைய நேரமும் முயற்சியும் வீணாகிவிடக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம்.

நேரடி பயிற்சிகள் குறிப்பிட்ட சனிக்கிழமைகளில் மட்டுமே வழங்கப்படும். அதற்கான கால அட்டவணை முன்னதாக உங்களுக்கு வழங்கப்படும். எனவே அதில் கலந்துகொள்வதற்காக திட்டமிடுதல் சுலபம்தான். இந்த பயிற்சி இப்போதைக்கு சென்னையில் மட்டும்தான். வெளியூரிலிருந்து வருபவர்கள் விரும்பினால் ஆறு தடவை என்பதை மூன்று தடவையாக்கி, நாள் முழுக்க பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்வோம். ஆனால் மாதம் ஒரு நாள்தான் அதைச் சாத்தியப்படுத்தமுடியும். நூலெழுதுவதில் நீங்கள் பெறும் முன்னேற்றத்தை அலசி ஆராய்ந்து வழிகாட்டும் பயிற்சி என்பதால் ஒரே மூச்சில் எல்லா நேரடி பயிற்சிகளையும் அளிக்க இயலாது.

மீண்டும் சொல்லவிரும்புகிறேன். பயிற்சியின் இரண்டாம் பகுதியில் நீங்கள் விரும்பினால் மட்டும் சேரலாம். இலவச மின்-பாடங்களைப் பெற எந்த நிபந்தனைகளும் இல்லை.

தமிழ்கூறு நல்லுலகம் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் நட்சத்திர எழுத்தாளர்களாக நீங்கள் உயரவேண்டும் என்பதே எங்கள் ஆர்வம், நோக்கம் எல்லாம். அதன் மூலம் நீங்களும் நாங்களும் மட்டுமல்ல, தமிழ் பதிப்புலகமும் தமிழ் வாசகர்களும் பயன்பெறுவார்கள்.
எழுத்து, செம்மையாக்கம், மொழிபெயர்ப்பு, நூலாக்கம், பதிப்பு என பலதுறைகளில் கடந்த இருபதாண்டுகளாக எனக்குக் கிடைத்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்தப் பயிற்சியை நான் தொடங்கியிருக்கிறேன்.

இந்த இடத்தில் என்னைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்: நான் 1992-94ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலில் முதுகலை முடித்தேன். 1995-99ல் இந்தியா டுடேயில் உதவி ஆசிரியராக பணி புரிந்தேன். பிறகு 2000-2011 காலகட்டத்தில் மொழிபெயர்ப்பு, கணித்தமிழ், பதிப்பு, இதழியல், மொழியியல் துறைகளில் பல திட்டப்பணிகளில் பங்கேற்று நிறைய அனுபவங்களைச் சேகரித்தேன். 2007ல் ஆழி தொடக்கம். 2008ல் ஓபாமா என்று ஒரு வாழ்க்கை வரலாற்று நூலையும் 2009ல் டிராகன் – புதிய வல்லரசு சீனா என்ற ஒரு நூலையும் எழுதினேன். இப்போது சில நூல்களை எழுதிக்கொண்டிருக்கிறேன், சிலவற்றை மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறேன். இடைச்செருகலாக, கடந்த ஓராண்டு காலமாக மீண்டும் இந்தியா டுடே இதழில் தமிழ்ப் பதிப்பின் சீஃப் காப்பி எடிட்டராக இருக்கிறேன். இந்த மாத இறுதியில் அங்கிருந்து வெளியேறி மீண்டும் முழுமூச்சாக ஆழி பணிகளுக்காக திரும்புகிறேன். இந்த இரு பதிற்றாண்டுகளில் நான் பெற்ற எழுத்து, பதிப்பு அனுபவங்கள் பலப்பல. அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கான உந்துதலே இந்தப் பயிற்சியை அளிக்க நான் ஆர்வம்கொண்டிருப்பதற்கு அடிப்படைக் காரணமாகும்.

வாருங்கள். உங்கள் ஆர்வத்தை விவரமாக எழுதுங்கள். zsenthil@gmail.com என்ற முகவரிக்கு அதை அனுப்புங்கள். செப்டம்பர் முதல் வாரத்திலிருந்து மின்-பாடங்களைப் பெறுங்கள். வாய்ப்பும் விருப்பமும் இருந்தால் நேரடி பயிற்சிக்கும் வாருங்கள்.

அன்புடன்
செ.ச.செந்தில்நாதன்

பி.கு.: இந்த இடுகையை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் உற்றார் சுற்றம் நட்பு வட்டாரத்தில் நூலாசிரியராக ஆக ஆர்வம் உள்ளவர்களிடமும் இதை பகிர்ந்துகொள்ளுங்கள்.

S. Senthil Nathan
Publisher, Aazhi Publishers
CEO, Langscape
Transwift.com is a division with Langscape

NEW ADDRESS:
Aazhi Publishers / Langscape,
1A, Thilgar Street
Sri Balaji Nagar, Thundalam
Ayyappan Thangal
Chennai 600077 Tamil Nadu India
91-99401 47473
91-44-26791474
senthil@aazhipublishers.com
senthil.nathan@langscape.com
senthil@transwift.com

http://www.aazhipublishers.com
http://www.langscape.com
http://www.transwift.com

zsenthil@gmail.com