1956 – இது எவ்வளவு முக்கியத்வம் பெறும் என்று அப்போது தெரிந்ததில்லை. திடீரென்று என்னை இன்னொரு செக்ஷனுக்கு மாற்றினார்கள். சொல்லலாம் தான், ஊரை விட்டுப் போய்விட வில்லை. அலுவலகமும் அதேதான். அதே கட்டிடம் தான். இருந்தாலும் அலுவலகத்தில் இருக்கும் நேரம் எல்லாம் உடனிருந்து என்னேரமும் பார்வையின் வட்டத்துக்குள் இருந்து கொண்டிருந்த சோப்ரா, மிருணால், மஞ்சு சென்குப்தா, எல்லோரையும் விட்டு வேறு தளத்துக்கும் வேறு அறைக்கும் செல்வதென்றாலும் எந்த அளவுக்கு இழப்பு இருந்ததோ அது இழப்பு தானே. அந்த வயதில் இந்த இழப்பும் இழப்பாகத் தான் மனத்தை வருத்தியது. மஞ்சு சென்குப்தாவும் மிக அன்புடன், அன்னியோன்யத்துடன் இருந்தாள். காரணம் என் சினேக சுபாவம் மட்டுமல்ல, மிருணால் அவளிடம் என்னைப் பற்றி என்னென்னவோ புகழ்ந்து பேசியிருப்பதும் காரணம் என்பது எனக்குத் தெரியும். அவளிடம் மட்டுமல்ல. தன் எல்லா வங்காள நண்பர்களிடமும் தான். போகும் செக்ஷனில் எல்லோரும் புதியவர் அல்லர் தான். சக்கர் அணைக்கட்டில் வேலை பார்த்துவந்தவர்கள் உத்தம் சந்த்தும், ஹரி சந்த்தும் ஓய்வு பெற்று இப்போது இங்கும் வேலைக்குச் சேர்ந்தார்கள். ஒய்வூதியம் பெறுகிறவர்கள். எனக்கு அப்போது வயது 22-23 என்றால் அவர்கள் அறுபதைத் தாண்டியவர்கள். மிக அனுபவஸ்தர்கள். அவர்கள் இப்போது இந்த புதிய செக்ஷனில் இருந்தார்கள். பழையவர்களோடு மீண்டும் நெருக்கம் ஏற்பட்டது.
சில புதியவர்களும். இருந்தார்கள். அதில் ஒரு மலையாளி. என் வயதுக்காரன். நான் அந்த செக்ஷனில் சேர்ந்த போது ஒரு மலையாள நாவலைப் படித்துக்கோண்டிருந்தான். என்ன புத்தகம் அது? என்று கேட்டது தான் தாமதம் தகழி சிவசங்கரன் பிள்ளை என்னும் மலையாள எழுத்தாளரது என்றும் அது அவரது மட்டுமல்ல, இதுவரைக்கும் வந்த மலையாள நாவல்களிலேயே மிகச் சிறந்த நாவல் என்றும் சொன்னான். அந்த நாவல் செம்மீன் .அந்த வருடம் தான் வெளிவந்திருந்தது, மீனவ மக்களின் வாழ்க்கை பற்றியது என்றும் முன்னர் தோட்டிகளைப் பற்றியும் ஏழை விவசாயிகளைப் பற்றியும் அவர் எழுதியிருக்கிறார் என்று சொன்னான். இவ்வளவு சொல்லும்போது அவர் மிகச் சிறந்தவரோ என்னமோ, கவனிக்க வேண்டிய ஒருவர் என்பது மனதில் பதிந்தது. ஒரு பதிப்பகத்தார் ஹோட்டலில் அறை ஒன்றை அவருக்கு எடுத்துக்கொடுத்து புத்தகம் எழுதிக்கொடுத்த பின் வெளியே வரலாம் என்று சொல்லி எழுத வைத்தது என்று வேறு பெருமையாகச் சொல்லிக் கொண்டான். இப்படி அறையில் அடைத்து வைத்து ஒரு பெரிய எழுத்தாளரை எழுத வைக்கமுடியுமா, அதுவும் மீனவ வாழ்க்கை பற்றி எழுத வைக்க முடியுமா? என்று யோசித்தேன். ஒரு நாவல் தோட்டிகளைப் பற்றி, இன்னொன்று விவ்சாயிகளைப் பற்றி, இப்போது மீனவர்களைப் பற்றியா? இப்படி முறை வைத்து ஒவ்வொரு வகுப்பாக, ஜாதியாக எழுதி வருகிறாரா என்ன, வேடிக்கையாக இருக்கிறதே என்று யோசித்தேன். அவனிடம் சொல்லவில்லை. அதுவும் அவ்வளவு பெருமைப் படுகிறவரைப் பற்றி!
இரண்டு வருடங்கள் கழித்து தகழியின் ரண்டிடங்கழி தமிழ்ல் படிக்கக் கிடைத்தது. யாரொ ஒரு பிள்ளை மொழிபெயர்த் திருந்தார். மலையாள சொற்களையே பெரும்பாலும் பயன்படுத்தியிருந்தார். அது புரியாத வேற்றுச் சொற்களாகவே தோன்றவில்லை. மலையாள மொழி பேசுபவர்களது வாழ்க்கை என்பதை உணரச் செய்தது. மொழி பெயர்ப்பென்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் என்றும் தோன்றிற்று. பின்னர் செம்மீன் நாவலும் படிக்கக் கிடைத்த போது அந்தக் காதல் வலுவில் உருவாக்கப்பட்டதோ என்றும் தோன்றிற்று. அந்த விதத்தில் எனக்கு ரண்டிடங்கழி பிடித்திருந்தது
அந்த செக்ஷனின் தலைமை அதிகாரியாக இருந்தவர் தேஷ் ராஜ் பூரி என்னும் பஞ்சாபி. முதன் முதலில் ஹிராகுட்டில் வேலைக்குச் சேர்ந்த போது நான் இருந்த செக்ஷனின் அதிகாரி. ஓய்வு பெறும் வயதில் இருந்தவர். ஆரம்பத்தில் என்னிடம் அந்நாட்களில் ஒரு சமயம் கடுமையும் ஒரு சமயம் ஆதரவுமாக மாறி மாறி இருந்தவர் இப்போது ஐந்து வருஷங்களுக்குப் பிறகு திரும்பத் தன் கீழ் வேலைக்கு வந்துள்ள என்னிடம் நான் ஆச்சரியப்படும் அளவுக்கு ஆதரவாகவே இருந்தார். என் வேலை முடிந்ததும், நான் என் இருக்கையில் இருப்பது அபூர்வம். மிருணாலையும், செல்லஸ்வாமியையும் (அவர் இப்போது அணைக்கட்டு நிர்வாகத்தின் பிரதம புள்ளி விவர அதிகாரி ஆகியிருந்தார்) மஞ்சு சென்குப்தாவையோ அல்லது அடுத்த கட்டிடத்தில் இருந்த FAO அலுவலகத்தில் உள்ள நண்பர்களோடோ வம்பளக்கப் போய் விடுவேன். தேஷ் ராஜ் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை. வேலையை முடித்துவிட்டுத்தானே போகிறான், எதையும் கவனிக்காமல் தாமதப்படுத்துவதில்லை. பின் என்ன? என்று ரொம்ப தாராளமாக நடந்து கொண்டது எனக்கு சந்தோஷமாகவும் ஆச்சரியம் தருவதாகவும் இருந்தது. புதிய இடத்தில் யாரிடமும் எனக்கு விரோதம் இல்லை எனினும், யாரிடமும் பாசமோ ஒட்டுதலோ இருக்கவில்லை. அது பழைய நண்பர்களிடம் தான்.
என் பார்வைக்கு ரீடர்ஸ் டைஜஸ்ட் என்ற பத்திரிகை வந்தது. நான் அதை வாங்கவில்லை. எனினும் அவ்வப்போது அது என் பார்வைக்கு வந்தது எப்படி என்று நினைவில் இல்லை. நம்மூர் மஞ்சரி மாதிரி, உலகத்து பத்திரிகைகளில் வந்துள்ள சுவாரஸ்யமான விஷயங்களை அது தேர்ந்தெடுத்து பிரசுரிக்கும். கடைசி 20 அல்லது 30 பக்கங்களில் ஒரு புத்தகத்தின் சுருக்கமும் அது கொண்டிருக்கும். அப்படி வந்த புத்தக சுருக்கம் ஒன்று, The Dreyfus Affair என்று பிராபல்யம் பெற்றது. ட்ரைஃபஸ் ஃப்ரெஞ்ச் ராணுவத்தில் இருந்த ஒரு அதிகாரி. அவன் ஜெர்மனிக்கு ராணுவ ரகசியங்களை அனுப்பும் ஒற்றனாக இருந்தான் என்று குற்றம் சாட்டப்பட்டு, ஆயுள் சிறை தண்டனை தரப்பட்டு ஒரு தீவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டான். அவன் குற்றமற்றவன் என்றும் ராணுவத்தில் உள்ள வேறு அதிகாரியைக் காப்பாற்று வதற்காக அநியாயமாக இவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று அந்நாளைய கலைஞர்களும், எழுத்தாளர்களும் அவனுக்காக வாதாடினர். அதில் எமில் ஸோலா என்னும் உலகம் அறிந்த ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் முன்னணியில் இருந்தார். அவர் ப்ரெஞ்ச் ராணுவத்தையும் அரசாங்கத்தைக் குற்றம் சாட்டி J accuse (நான் குற்றம் சாட்டுகிறேன்) என்று ஒரு குற்றப்பத்திரிகையை வெளியிட்டார். இது பின்னர் உலகப் பிரசித்தி பெற்ற எழுத்தாயிற்று. கடைசியில் ட்ரைஃபஸ் குற்றம் அற்றவன் என்பது நிரூபிக்கப் பட்டு, திரும்பவும் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு உயர் பதவிகளும் பெற்றான், அந்த ராணுவ வீரன். அவனை ஒரு வீரனாக தீவிலிருந்த சிறைசாலையிலிருந்து ஃப்ரான்ஸுக்கும் பாரிஸ் நகரத்துக்கும் அழைத்து வரப்பட்டது ப்ரெஞ்சு மக்கள் அனைவரும் கூடி அவனை வரவேற்று கொண்டாடியது ஒரு பெரிய சரித்திரப் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சியானது.
அன்னாட்களில் பிரசித்தி பெற்ற நாவல் நாநா எழுதியது எமிலி ஸோலா. இப்போது எந்தப் புத்தகக் கடையிலும் நாநா பார்க்கக் கிடைப்பதில்லை. நாநா ஒரு ஒரு பிரசித்தி பெற்ற நடிகையின் கதை. மிகவும் ஏழ்மையும் தாழ்மையும் நிறைந்த ஆரம்பத்திலிருந்து தொடங்கி நடிகை ஆனபிறகு மிகவும் எல்லோராலும் புகழப்பட்ட விரும்பப்பட்ட, நிலைக்கு வந்த நாநா கடைசியில் மிகவும் பரிதாப நிலைக்கு (அம்மை நோய் கண்டு) தள்ளப்படுகிறாள். அப்போது படிக்க மிகவும் உணர்ச்சிவசப்பட்டு படித்தாலும் பின்னர் அனேகமாக எல்லா நடிகைகளின் வாழ்க்கையும் இப்படித்தான் தொடங்குகிறது. பின் ஒரு உச்சம், பணத்தில் வாழ்க்கை வசதியில் புகழில் பின்னர் ஒரு சோகமயமான முடிவில் தள்ளப்படுதல் என்பது மாறாத ஒரு அம்சமாகிப் போகிறது என்பது தெரிந்தது. அன்றிலிருந்து இன்று வரை, சமீபத்திய சில்க் ஸ்மிதா வரை, ஏன் சில்க் ஸ்மிதா,? நம் எலலாருக்கும் தெரிந்த நேற்றைய நாநா அவர், ஆதலால் தைர்யமாகச் சொல்லலாம், சாவித்ரியைச் சொல்லலாமா, ஏன்,? கொஞ்சம் யோசித்தால் நம்மிடையே ஃநாநாக்கள் நிறைய கிடைப்பார்கள். ஆனால் அன்று நாநா படித்த போது, அதன் இயல்பு வாழ்க்கை, யதார்த்த சித்திரிப்பு, அது ஒரு அதீதத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தது, அதன் இலக்கிய முக்கியத்வத்தையும் மீறி, அதன் பாலியல் உள்ளடக்கத்தால் சில்க் ஸ்மிதா மாதிரி வேறு வித புகழும் பெற்றிருந்தது. இப்போது நாநா பற்றி ஏதும் யாரும் பேசுவதைக் காணோம்.
எமிலி ஸோலா நிறைய நாவல்கள் எழுதியுள்ளார். சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றியும். ஜெர்மினல் என்னும் நாவலில். இயல்பான வாழ்க்கையை அதன் எல்லா விவரங்களோடு யதார்த்தமாகச் சித்தரிப்பவராக அவர் புகழ் பெற்றவர். கிட்டத்தட்ட இருபதுக்கும் மேல் நாவல்கள் எழுதியவர். நாநா முதலில் படித்து பின்னர் எமிலி ஸோலா அநியாயமாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறைத்தண்டனை அனுபவிக்கும் ஒரு அப்பாவியை அரசுக்கும் ராணுவத்துக்கும் எதிராக குரல் எழுப்பி அவனுக்கு விடுதலை பெற்றுத் தரும் போராட்டத்தில் முன்னணியில் எமில் ஸோலா இருந்ததைப் படித்த பின் நாநா படிக்கத் துண்டப்பட்டேனா இல்லை நாநா படித்த ஆர்வத்தில் ட்ரைஃபஸ் வழக்கில் ஆர்வம் காட்டினேனா தெரியவில்லை
.
எமில் ஸோலா வாழ்ந்ததும் ட்ரைஃபஸ் வழக்கு நடந்ததும் 19-ம் நூற்றாண்டின் கடைசி பத்துக்களிலும், 20-ம் நூற்றாண்டின் முதல் பத்துக்களிலும். ட்ரைஃபஸ் பின்னர் மேஜராகி முதலாம் உலக யுத்தத்திலும் பங்குகொண்டான் என்று படித்த நினைவு. இது போன்று உலகத்தில் வேறு எந்த வழக்காவது தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுதலை தந்த நிகழ்வு உண்டா அதற்கு ஒரு எழுத்தாளர் முன்னணியில் நின்று போராடிய சரித்திரம் உண்டா என்பது தெரியவில்லை. இதெல்லாம் நான் அந்நாட்களில் மிக உற்சாகத்துடன் படித்தவை. அவை ஒரு ஆதர்சமாகக் கூட எனக்குத் தோன்றியவை.
இதே இழையில் இதே பார்வையில் அன்று மிகவும் பேசப்பட்ட இன்னுமொரு பெயர் இத்தாலிய நாவலாசிரியர் அல்பெர்ட்டோ மொரேவியா என்பவர். அவர் பேசப்பட்டது, அவரும் எமில் ஸோலா போல கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேல் நாவல்கள் எழுதிக் குவித்துப் புகழ் பெற்றிருந்த போதிலும், அன்று ஐம்பதுக்களில் மிகவும் பேசப்பட்டது ரோம் நகரத்துப் பெண் (Woman of Rome) என்ற நாவல் தான். சாதாரணமாக இலக்கியம் நாவல் என்று படிக்கும் வழக்கம் இல்லாதவர்கள் கூட அது பற்றித் தெரிந்திருந்தார்கள். இரண்டாம் உலகப் போர் காலத்தில் நாஜிகளின் ஆதிக்கம் இத்தாலியிலும் ரோம் நகரத்திலும் உணரப்பட்ட காலத்தில் அவர்களிடமும் போலீஸ் அதிகாரத்திடமும் சிக்கிய ஒரு பெண்ணின் வாழ்க்கை அது. அல்பெர்ட்டோ மொரேவியா அன்றைய இத்தாலி வாழ்க்கையைச் சித்தரித்தவர். அன்றைய அதிகாரத்தின் பாதிப்பைச் சித்தரித்தவர். தெருவில் சுற்றித் திரியும் பாலியல் பெண்களின் வாழ்க்கையை மாத்திரம் எழுதியவர் அல்லர். மிக எளிதான மொழியில் எளிதான கதை சொல்லல் அவரது . எந்தவித புதிய உத்திகளின் சிறப்பிற்கும் அறியப் பட்டவர் அல்லர்.
இந்த இழையில், சித்தார்த்தா என்னும் ஹெர்மன் ஹெஸ்ஸி எழுதிய ஜெர்மன் நாவலைப் பற்றிய நினைவு தான் அடுத்து வருகிறது. இந்த சித்தார்த்தா, நாம் அறிந்த கௌதம புத்தர் இல்லை. ஆனால் கௌதம புத்தர் காலத்தில் வாழ்ந்த ஒரு இளைஞன். அவரே போல வாழ்க்கையின் அர்த்தம் என்ன எனக் காணும் தேடலில் இறங்கியவன். அவனுடன் கோவிந்தா என்னும் அவனது நண்பன். கோவிந்தன் சன்னியாசியாகி புத்தர் சென்ற வழிப் போக, சித்தார்த்தன் கமலா என்னும் தாசியிடம் தஞ்சம் அடைகிறான். அவள் அவன் இன்னும் கற்றிராத காமம் பற்றி அறிய பெரும் செல்வத்துடன் வரப் பணிக்கிறாள். அவன் அதிலும் வெற்றி பெற்று பெரும் செல்வத்துடன் கமலாவிடம் வருகிறான். பின் அதுவும் மாயை எனத் தெரிந்து தன் நண்பன் கோவிந்தாவைத் தேடிச் செல்கிறான்.. இப்படி கதை நீண்டு செல்லும். ஹெர்மன் ஹெஸ்ஸி எழுதிச் செல்லும் கதை ஏதோ நம் புராணம் இதிகாசம் எதிலிருந்தோ உருவியது போலத் தோன்றும். ஆனால் அப்படி அல்ல. இந்திய வேத புராண கால மரபில் வரும் கதை ஒன்றைத் தான் அதன் வழிக் கற்பனை செய்கிறார். இயற்கையும், வாழ்க்கையும் எதிர் எதிரான இரு அம்சங்களைத் தன்னுள்ளே கொண்டது. நாம் அதை அதன் முழுமையில் அறிந்து கொள்ள வேண்டும். எது ஒன்றையும் பிரித்து அதை மட்டும் ஸ்வீகரித்து மற்றதை நிராகரிப்பது வாழ்க்கையை, உண்மையை அதன் முழுமையில் அறிந்ததாகாது என்று சொல்ல வருகிறார் ஹெர்மன் ஹெஸ்ஸே. ஜெர்மானிய அறிவுலகம் என்றுமே இந்திய தத்துவத்தில் அது எந்தப் பிரிவாக இருந்தாலும் சரி பெரும் கவர்ச்சியும் ஈடுபாடும் கொண்டது. ஹெர்மன் ஹெஸ்ஸி மாத்திரம் அல்லர். மாக்ஸ் ம்யூல்லர், ஆர்தர் ஷோப்பன் ஹோவர் எனப் பலரை நாம் காணலாம். முதல் அணுகுண்டு நியூ மெக்ஸிகோ பாலவனத்தில் வெடித்துச் சோதிக்கப்பட்டபோது அதிலிருந்து எழுந்த ஒளிமண்டலம் ராபர்ட் ஓபன்ஹைமருக்கு பகவத் கீதையில் படித்த ஸ்லோகம் வர்ணித்த ஆயிரம் சூரியன்களைவிட பிரகாசம் மிக்கதாகத் தோன்றியதாம்.
இது இந்த இழையில் சொல்லக் காரணம், கமலா என்ற தாசி மொரேவியாவின் ரோமானியப் பெண்ணோ எமிலி ஸோலாவின் நாநாவோ நினைவு படுத்தியதால் அல்ல. அந்த சமயத்தில் Illustrated Weekly of India –வில் சித்தார்த்தா தொடராக ஆங்கிலத்தில் வெளிவந்தது. ஹெர்மன் ஹெஸ்ஸியைப் பற்றி நான் அறிந்தது வீக்லியில் அந்த சமயத்தில் வெளி வந்த அந்த தொடர்தான் காரணம். இது சாகித்ய அகாடமியால் தமிழிலும் மொழிபெயர்க்கப் பட்டு வெளிவந்துள்ளது. தமிழில் மொழிபெயர்த்தவர் ஐம்பதுகளில் பெரிதும் அறியப்பட்ட திருலோக சீதாரம். வைரமுத்து சகாப்தம் இது. இன்று திரிலோக சீதாராம் பெயரையும் அவர் கவிதையையும் நினைவில் வைத்திருப்பவர்கள் ஓரிருவர் இருக்கக் கூடும்