[பதிவுகள் வாசகர்களுக்கு எழுத்தாளரும், இலக்கிய ஆய்வாளருமான திரு. நுணாவில் கா.விசயரத்தினத்தை அறிமுகப்படுத்தத் தேவையில்லை. அவரது கட்டுரைகள் பல பதிவுகளில் ஏற்கனவே வெளியாகியுள்ளன. அவரது ‘பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்’ என்னும் நூலுக்கு இலங்கை எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் (மட்டக்களப்பு) வழங்கும் 2011ஆம் ஆண்டுக்குரிய மிகச்சிறந்த இலக்கிய ஆய்வு நூலுக்கான விருது கிடைத்துள்ளது. வாழ்த்துகிறோம். – பதிவுகள்] இலங்கை எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் (மட்டக்களப்பு) அனைத்துலக ரீதியில் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் இலக்கிய நூல்களுக்குப் பல பரிசுகளை வழங்கி வருகின்றனர். அதில் 2010இல் வெளிவந்த சிறந்த தமிழ் நூல்களாக இருபது (20) ஆசிரியர்களின் நூல்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. இந்த வகையில் லண்டன் எழுத்தாளரும், இலக்கிய ஆய்வாளருமான நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்களின் ‘பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்’ என்ற நூல் தமிழ் மொழியில் வெளிவந்த மிகச் சிறந்த இலக்கிய ஆய்வு நூலெனத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந் நூலின் ஆசிரியர் நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்கள் கொழும்புக் கணக்காய்வுத் திணைக்களத்தில் கணக்காய்வு அத்தியட்சகராக (Superintendent of Audit) கடமையாற்றி ஓய்வு நிலை பெற்றவர். அரசு, சபை, கூட்டுத்தாபன சேவைகளின் கணக்குகளைக் கணக்காய்வு செய்து, அறிக்கைகளைச் சிறீலங்கா நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பித்து, நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழுக் கூட்ட விவாதங்களிற் பங்கேற்றிய அனுபவமும் உடைய இவர், ஒரு பட்டதாரியும் பட்டயம் பெற்ற கணக்காய்வாளரும் ஆவார்.
‘பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கெடும்’ எனும் பரிசு பெற்ற இந் நூல், 20 அத்தியாயங்கள், 220 பக்கங்களுடன், பிரித்தானிய நூற்றாண்டு இல்லம் (Century House) வெளியீட்டாளராகவும் தமிழ் நாடு மணிமேகலை பிரசுரம் உதவியாளராகவும் கொண்டது. பேராசிரியர் கோபன் மகாதேவா அவர்களின் அறிமுக முன்னுரையும் கலாநிதி சிவ தியாகராசாவின் ஆய்வுரையுமுடன் பிரபல பத்திரிகைகளாகிய இலங்கை வீரகேசரி, இலண்டன் தமிழர் தகவல், சுடரொளி, இலண்டன் சைவ மகாநாடு முதலிய சஞ்சிகை ஆகியவற்றில் வெளிவந்த ஆக்கங்களைக் கொண்டது.
இக் கட்டுரைகளின் கருப் பொருட்கள் ‘மங்கையர் உடன்கட்டை ஏறல்’, ‘மதங்கள், புராணங்கள் எழுப்பிய உயிர்ப் பலிகள்’, ‘இன்றைய உலகும் தமிழர் கலாசாரமும’, ‘மேல் நாட்டுக்கேற்ற சைவமுறைகள்’, ‘பரிணாம வளர்ச்சியும் மனித வரலாறும்’ முதலியவற்றையும் தமிழ் சங்கங்களும் அவற்றின் இலக்கிய முத்துக்களும், கண்ணதாசன், மகாத்மா காந்தி பணிகள், போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளன.
‘கணினியை விஞ்சும் மனித மூளை’, ‘தொல்காப்பியத் தேன் துளிகள்’, ‘இலக்கிய, அறிவியல் நுகர்வுகள், ‘‘Essentials of English Grammar’ ஆகியவை நூல்கள் இன்று பரிசு பெறும் நூலாசிரியர் நுணாவிலூர் கா. விசயரத்தினத்தின் மற்றைய படைப்புகளாகும்.
இலங்கை, இந்தியா, கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் பத்திரிகை, சஞ்சிகை, இணையம் ஆகியவற்றில் வெளிவந்த நூற்றுக் கணக்கான இலக்கியம், அறிவியல், சமயம், புவியியல், உயிரியல், கலாசாரம் ஆகிய ஆய்வுக் கட்டுரைகளினதும் ஆசிரியராகிய நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்கள் இன்று இலண்டனில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். பேராசிரியர் கோபன் மகாதேவா அவர்களின் தலைமையில் நடை பெறும் ‘பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கத்தில்’ திரு கா. விசயரத்தினம் அவர்கள் ஓர் மூத்த உறுப்பினரும், அதன் இன்றைய ஒருங்கிணைப்பாளரும் ஆவார். சென்ற 23-09-2012 அன்று ‘எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்’- மீன்பாடும் மட்டுநகரில் மகாஜனா கல்லூரியின் வணபிதா சிறிதரன் சில்வெஸ்டர் பேரரங்கில் நடந்தேறிய விருது வழங்கல் விழாவில் திரு விசயரத்தினம் அவர்களுக்கு, ‘புலவர் ந.ஜெகதீசன் தமிழியல் விருது’ வழங்கிப் பாராட்டப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.