கோலாலம்பூரிலிருந்து 12 கி.மீ தொலைவில் பத்துமலை முருகன் 140 அடி உயரத்தில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார்.272 படிகள் ஏறிச் சென்றால் குகையில் புராதான முருகனைச் சந்திக்கலாம் என்றார் ஏ ஆர் சுப்ரமணியன். கவிஞர். மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்க நிர்வாகிகளில் ஒருவர்.மலேசிய தொலைத்தொடர்புத் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். அங்கு 55லேயே ஒய்வு. நான் கடவுள் மறுப்பாளன் என்பதை மறந்தீரா ” என்று கேட்டு வைத்தேன். பத்து என்றால் கல். பத்துமலை கல் மலை என்று பெயர். சுண்ணாம்பும்லைதான் அது. அடர்ந்த காடுகள் அதன் பின்னணியில். விலங்குகள், விதம்விதமான மரங்கள் அழகூட்டுகின்றன.பழங்கால கொக்காலிகா மரம் , விதவிதமான மஞ்சள் நிற மரங்கள், கொஞ்சம் வெற்றிலை மணம்.நம்மூர் ஆண்மைச் சின்னம் குரியன் பழங்கள் மலிவாக்க் குவிந்து கிடக்கின்றன.பொரிகடலையும். இடது பக்கம் மினி வள்ளுவர் கோட்டம். சின்ன திருவள்ளுவர். கொஞ்சம் கொஞ்சும் திருக்குறள்கள்.
கோலாலம்பூர் வழக்கறிஞர் குமாஸ்தா தம்புசாமி பிள்ளை கனவில் வந்து முருகன் கோவிலை அங்கு ஏற்படுத்த அம்பாள் சொல்ல அவர் ஆயத்தம் செய்திருக்கிறார்.. சுற்றிகும் இருந்த கெண்ட், சுங்கைதுவ, செங்கம்பட், செபோங், பத்து ரப்பர் எஸ்டேட் தொழிலாளர்களின் ஈடுபாட்டால் நிறுவப்பட்டிருக்கிறது. சில காலம் பிரிட்டிஸ் அரசு அதை மூட முயற்சிகள் எடுக்கவும், நீதிமன்ற வழக்கும் இந்துக்களுக்கு நம்பிக்கை தந்திருக்கிறது. தைப்பூசநாளில் காவடி, தேர், பூஜைகள் என்று பத்து லட்சம் பேர் கலந்து கொள்ளும் அமர்க்களம்.
சற்றே தூரத்தில் தெரிகிறது அரசு தமிழ்ப்பள்ளி. மலேசியா முழுக்க 700 தமிழ்ப்பள்ளிகள். அரசு, வெளிக்கட்டமைப்பில் சிறப்பானத் தோற்றங்கள். குறைந்து வரும் அரசு மான்யங்கள், உதவித்தொகைகள்,தமிழர்கள் சீனம், ஆங்கில மொழிகளில் தங்களின் குழந்தைகளை படிக்க அதிகம் விரும்புவது ஆகியவை தமிழ்ப்பள்ளிகளை பலவீனப்படுத்தி வருகின்றன நோம்புகாலத்தையொட்டி வீதிகளில் இனிப்புப்பலகாரக்கடைகள் எங்கு தென்படுகின்றன, விதவிதமான வர்ணங்களில் இனிப்புப் பலகாரங்கள். ஏஆரெஸ் வாங்கிக் குவிக்கிறார். அந்த இனிப்புகளுக்கு கேட்துவாட் என்று நாமம்.அதிகம் சாப்பிட வேண்டாம் என்று அன்பு கட்டளை. அடுத்து இரு நாட்களின் நாவல் பட்டறைக்கு இடையூறு ஆகி விடக்கூடாது இது என்கிறார்.மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்தும் மலேசியா நாவல் பயிற்சிப் பட்டறையில் முதல் நாள் தமிழ் நாவல் வரலாறு பற்றிய உரை, அடுத்த நாள் என் நாவல் அனுபவம் உரை, இரவில் சிறுவர் கதை பரிசளிப்பில் தமிழ் சிறுகதை பற்றிய உரை இருக்கின்றன. பத்துமலை ஏற வேண்டிய வேலை இல்லாததால் இருக்கும் நேரத்தைக் கழிக்க கூட இருக்கும் பிரகாசைப் பார்க்கிறேன்.திராவிடர்கழக கூட்டம் ஒன்றுக்கு செல்ல வேண்டியிருப்பதை ஞாபகமுட்டுகிறார். நானும் இங்கு வந்து திராவிடர் கழக நடவடிக்கையை கவனிப்பது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. கிள்ளான் போக வேண்டும். ” எங்கள் தலைவர்கள் பக்திமான்கள் “ என்கிறார் ஏஆர் எஸ்.அவர் குறிப்பிட்ட்து மலேசியா எழுத்தாளர் சங்கத்தலைவர் ராஜேந்திரன், துணைதலைவர் எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு பற்றி.. பத்திரிக்கையாளர் ராஜேந்திரன் -கலைஞர், வைரமுத்து நணபர். திராவிட பாரம்பரியத்துக்காரர். ஆனால் பிரதோசம், அமாவாசை, பவுர்ணமி, என்று விரதம் இருந்து கோவில் செல்பவர். கார்த்திகேசு மலேயா தமிழர்களின் வாழ்வை தீவிரமாக அவரின் 5 நாவல்களும் சிறுகதைகளிலும் சித்தரித்தவர். அவரின் கடவுள் ஈடுபாட்டை எங்கும் வெளிபடுத்தாதவர்.
மலேசியா அர்சியல் அமைப்புச் சட்டம் “ கப்பர் சாயான் “ என்கிறது. “ கடவுள் மேல் நம்பிக்கை வை” கடவுள் மறுப்பை வெளிப்படையாகப் இங்கு பேச முடியாது. தலைமறைவு இயக்கம், தன்னார்வக்குழு போல்தான் செயல்படவேண்டும். பதிவு, புதுப்பித்தல் சம்பந்தமாக தி.கவிற்குச் சொந்தமான 2 கட்டிடங்களை அரசு எடுத்துக் கொண்டு விட்டது. கட்சியும் இளைய தலைமுறையினரிடம் பலவீனமாகவே இருக்கிறது. “ இருக்கு .. ஆனா இல்லே “ நிலைமைதான்… பெரியார் திராவிடர் கழகப் பிளவு, கோவை இராமகிருஸ்ணன், கொளத்தூர் மணி பிரிவு பற்றிச் சொல்கிறேன். பிரகாசிற்குத் தெரியவில்லை. “ எங்கள் தலைவர் வீரமணிதான்”. மலேசியாவின் பெரும்பான்மையான வாசகர்கள் மு.வ., நா.பா., அகிலன் தாண்டி வரவில்லை.தி.க அரசியலில் வீரமணி தான் தலைவர்,25 ஆண்டுக்கு முன்னால் எல்லாம்.
பெரியார் சிலையைப்பார்க்க கோலாலம்பூரிலிருந்து 250 கி.மீ நிபோங் போக வேண்டும். மலேசியாவின் ரப்பர் தோட்டப் பகுதிக்குச் சென்ற பெரியாரின் சாமியார் தோற்றத்தைப் பார்த்த தமிழ் பெண்ணொருத்தி ” என் மகளுக்கு வயித்திலே புழு பூச்சி ஆக மாட்டீங்குது. நீங்க ஆசீர்வாதம் பண்ணனும்” என்றிருக்கிறாள்.” பெரியார் நாகம்மையைச் சுட்டிக்காட்டி “ இவங்க என் சம்சாரம். இவங்களுக்கும் குழந்தையில்லே. டாக்டரை நம்புங்க.” என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.
வாகன நெரிசல். மெதுவாக ஊர்ந்து போகிறோம்.ஏஆர்எஸ் தொலை பேசி செய்து கிள்ளான் போய் விட்டீர்களா என்கிறார். வாகன நெரிசல் பற்றிச் சொல்கிறோம்.” பத்து மலை முருகன் அருள் உங்களுக்கு கிடைக்கவில்லை. தி.க கூட்ட்த்திற்கு போக அவர் அனுமதி தரவில்லை ” என்கிறார்..
“பெரியாரின் ஆசீர்வாதம் இருக்கிறது “
வெகு தாமதமாகிவிட்டது. இனி போய் பிரயோஜனமில்லை. வழியில் தென்படும் புத்தர் கோவில் ஒன்றி இளைப்பாறுகிறோம். பிரமாண்டமான சிலைகள். புத்தரின் சாயல்களைத் தேடுகிறேன். விதவிதமான ஏற்றப்படுவதற்கான மெழுகுவர்த்திகள். இலவச சிடிகள் குவிந்து கிடக்கின்றன. 12 ஆண்டுகளுக்குஒரு முறை வந்து செல்லும் ராசிகளின் உருவங்கள் மனித, மிருக உருவங்களாய் நிற்கின்றன. வில் அம்புகளை குவித்து வைத்திருக்கும் குடுவைபோன்றதில் நிறைய குச்சிகள். குலுக்கி நிமிர்த்தினால் ஒன்று வெளித்தள்ளிக் கொண்டு வருகிறது.அதில் ஒரு எண் எழுதப்பட்டிருக்கிறது. 45. அந்த எண் உள்ள பளுப்பு சிவப்பு நிற சீட்டை எடுக்கிறேன். ஒரு பக்கம் சீன, கொரியா எழுத்துக்கள் இன்னொரு பக்கம் ஆங்கிலத்தில் அது இப்படி சொல்கிறது: நல்ல சகுனம். எல்லாம் நல்லபடியாகச் செல்கிறது. இப்போது உங்கள் வாழ்க்கையின் மிகச் சிறந்த தருணங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். கடந்த் காலத்தின் சிறந்த உழைப்பின் பயனை அனுபவிக்கிறீர்கள். நல்லவர்கள் உங்களோடு சேர்கிறார்கள். நல்ல திருமண வாழ்க்கை அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்.