21-ம் அத்தியாயம்: குருடனுக்குத் திருமணமா?
சிவநேசர் ஆங்கில நூல்களை வாசித்தறிவதில் எவ்வளவு ஆர்வம் காட்டி வந்தாரோ, அவ்வளவு ஆர்வம் தமிழ் நூல்களையும் வட மொழி நூல்களையும் கற்பதிலும் காட்டி வந்தார். சிறு வயதில் அவரது தந்தையார், அன்று வாழ்ந்த பெரிய இடத்து மனிதரின் வழக்கப்படி தமது வாழ்க்கையையே முற்றிலும் ஆங்கிலமயமாக்கி இருந்தார். அதன் பயனாக வீட்டில் ஆங்கிலத்திலேயே எல்லோரும் பேசினார்கள். பிள்ளைகளின் படிப்பிலும் ஆங்கிலத்துக்கே இடம் தரப்பட்டது. தமிழ்க் கலாசாரத்தின் சின்னங்களான தலைப்பாகை போன்றவற்றுக்கு ‘அமராவதி’யில் என்றும் முக்கிய இடமிருந்த போதிலும் தமிழ் மொழிக்கு இரண்டாவது இடமே தரப்பட்டது. தலைப்பாகை அந்தஸ்தைத் தருவதாகவும், தமிழ் மொழி அந்தஸ்தைக் குறைப்பதாகவும் கருதப்பட்டதே இதற்குக் காரணம். தலையில் தலைப்பாகையும் வாயில் ஆங்கிலமுமே ‘ஒண்ணாந்தர’ அந்தஸ்து என்று எண்ணப்பட்டது. இந்நிலையை மாற்ற அவர்கள் குடும்பத்தில் முதல் நடவடிக்கை எடுத்துக் கொண்டவர் சிவநேசரே.
சிவநேசர் என்றும் அறிவிலே அளவில்லாத தாகங் கொண்டவர். பிளேட்டோ அரிஸ்டாட்டில் போன்ற கிரேக்க ஞானிகளின் கருத்துகள் தொடக்கம் திருக்குறள், பகவத் கீதை வரைக்கும் அறிவுலகின் சிறந்த சிருஷ்டிகளிலெல்லாம் புகுந்து வெளி வந்தவர் அவர். ஆரம்பத்தில் கீழை நாட்டு நூல்களைக் கூட, ஏன் திருமூலரின் திருமந்திரத்தைக் கூட ஆங்கில மொழி பெயர்ப்பில் தான் கற்றார். ஆனால் நாளடைவில் இவ்வித படிப்பு அவருக்குத் திருப்தியளிக்காது போகவே, ஒரு சமயம் தென்னாட்டில் சிதம்பரத்துக்குப் போயிருந்த போது, அங்கே தாம் சந்தித்த ஒரு சிறந்த செந்தமிழ் வட மொழிப் பண்டிதரைத் தமக்கு இந்த மொழிகளைப் புகட்டுவதற்காகத் தம்முடன் கூடவே அழைத்து வந்துவிட்டார் அவர். இவ்வாறு இலங்கை வந்து சேர்ந்தவரே சின்னைய பாரதி அவர்கள்.
சின்னைய பாரதியிடம் அவர் வட மொழியையும், தமிழையும் ஒழுங்காகக் கற்றதோடு தமது குடும்ப முகாமையில் நடைபெற்ற ஒரு பாடசாலையில் அவரைத் தமிழ்ப் பண்டிதராகவும் நியமித்து விட்டார். சின்னைய பாரதியார் இலங்கை வரும் போது அவருக்கு வயது இருபத்தேழு. சிவநேசருக்கோ முப்பது வயதிருக்கும். இப்பொழுதோ இருவரும் ஐம்பத்தைந்தைத் தாண்டி விட்டார்கள். சின்னைய பாரதியார் பிள்ளை குட்டிகளுடன் ஒரு பெரிய குடும்பஸ்தராகியும் விட்டார். பாடசாலையில் கிடைக்கும் சம்பளம் போக, பாரதிக்கு சிவநேசரும் தாராளமாகப் பண உதவி செய்து வந்தார். அத்துடன் அவர் வசிப்பதற்குப் பெரிய வீடும் வளவும் கூடக் கொடுத்திருந்தார்.
சின்னைய பாரதியார் ஒவ்வொரு நாளும் இரவு ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை சிவநேசரைக் காண வருவது வழக்கம். அப்பொழுது இருவரும் நூல்களைப் பற்றியும் அறிவுப் பிரச்சினைகளைப் பற்றியும் பேசிக் கொள்வார்கள். அப்படிப்பட்ட பிரச்சினைகள் இல்லாத நேரங்களில் இருவரும் சிவநேசரின் பெரிய நூல் நிலைய அறையில் வெவ்வேறு இடங்களில் இருந்து நூல்களை வாசிப்பார்கள். குறிப்பெழுதுவார்கள். கட்டுரைகள் கூட எழுதுவார்கள். சின்னைய பாரதியார் சமீபகாலமாகத் திருக்குறள், பகவத் கீதை பற்றி ஓர் ஒப்பியல் ஆராய்ச்சி நூலை எழுதிக் கொண்டிருந்தார். சிவநேசரின் எண்ணத்தில், கருத்துகளைப் பொறுத்தவரையில் பாரதியர் ஒரு கர்நாடகப் பேர்வழி. இதன் காரணமாக சில சமயம் அவரது கருத்துகளை வாசித்துவிட்டு, சிவநேசர் சிரித்துவிடுவார். நமது கருத்துகளை எடுத்துரைத்துத் திருத்தங்கள் செய்ய ஆலோசனைகளைக் கூறுவார்.
ஸ்ரீதரின் கண்கள் குருடான பிறகு அவர்களின் இவ்விரவுச் சந்திப்பு சில காலம் நின்று போயிருந்தது. சிவநேசரின் மனம் ஒரு நிலையில் இல்லாததே இதற்குக் காரணம். ஆனால் காலம் செல்லச் செல்ல நிலைமை மாறியது. சிறிது சிறிதாக மீண்டும் புத்தக உலகில் மூழ்கலானார் சிவநேசர். பாரதிக்கும் அவருக்குமிடையில் பழைமை போல் உரையாடல்களும் ஆரம்பித்தன.
சிவநேசரும் பாரதியும் ஓரிரவு இவ்வாறு “அமராவதி”யின் சலவைக்கல் தளமிட்ட விறாந்தையில் உட்கார்ந்து திருமூலர் திருமந்திரத்தின் சில செய்யுட்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, மாடியில் ஸ்ரீதரின் அறையிலிருந்து மோகனாவின் தத்தை மொழி கேட்டது. இரண்டு மூன்று தினங்களின் முன்னர் காலை வேளையில் தோட்டத்தில் கேட்ட அதே காதலின் ஏக்க மொழிகளே அவை. “பத்மா பத்மா” என்ற உள்ளத்தை உருக்கும் ஓலம்.
சிவநேசர் அதைக் கேட்டதும் நிலை குலைந்து போனார். “திருமந்திரத்தை” ஒரு பக்கம் மூடி வைத்து விட்டுச் சிறிது நேரம் கிளியின் கூவலை மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் அவர். எங்கும் பேரமைதி சூழ்திருந்த இரவிலே “பத்மா பத்மா” என்று கிளியோசை பலமாக ஒலித்தது. சின்னைய பாரதியும் கையில் வைத்திருந்த புத்தகத்தை மடியில் குப்புற வைத்துவிட்டு சிவநேசரின் கலவரமடைந்த முகத்தை நோக்கினார்.
“பாரதி. மோகனாவின் ஓலத்தைக் கேட்டாயா? அதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்றார் சிவநேசர்.
“நினைப்பதற்கு என்ன இருக்கிறது? பத்மா என்ற வார்த்தையை மிகவும் தெளிவகவும் உரமாகவும் கிளி மிழற்றுகிறது” என்றார் பாரதி.
“அவ்வளவுதானா நீ கவனித்தது? அதில் தோய்ந்துள்ள உணர்ச்சி உன் உள்ளத்தைத் தொடவில்லையா?” என்றார் சிவநேசர்.
இதற்கிடையில் மீண்டும் மோகனா “பத்மா பத்மா” என்று கதறியது.
பாரதி திடுக்கிட்டுப் போனார். ஆம். சிவநேசர் கூறியது உண்மைதான். இருளையும் அமைதியையும் பீறிவந்த அந்த ஒளியிலே கிளி தன் உள்ளத்தின் சோகத்தையும் ஏக்கத்தையும் பத்மா மீது தான் கொண்ட பரிவையும் கலந்து விட்டிருந்தது போன்ற ஓர் உணர்வு அவருக்கு ஏற்பட்டது. அது சாதாரண கிளிப் பேச்சாகத் தோன்றவில்லை. ஓர் மனித இதயத்தின் காதற் குமுறலிலே பிறந்த ஏக்கப் பாட்டாகக் கேட்டது பத்மா என்ற அச்சொல்.
“ஆம் ஐயா. நீங்கள் சொன்னது முற்றிலும் சரி. உள்ளத்தை ஈர்க்கும் உணர்ச்சிக் குமுறலாக ஒலிக்கிறது மோகனாவின் குரல். அது பிரிவு நோயினால் வாடும் ஒரு தலைவனின் குரல் போல் ஒலிக்கிறது எனக்கு. சங்க காலத்துப் புலவர் ஒருவர் இதைக் கேட்டிருந்தால் இதை வைத்து ஓர் அகத்துறைச் செய்யுளையே பாடி விட்டிருப்பார்.”
“பாரதி, கிளி செய்யும் ஓசையானாலும் இது கிளியின் குரலல்ல. ஒரு காதலனின் குரல்தான் அது. என் மகன் ஸ்ரீதரின் குரல்” என்றார் சிவநேசர்.
“ஸ்ரீதரின் குரலா? ஓ! இப்பொழுது ஞாபகம் வருகிறது. அம்மா ஒரு சமயம் சொன்னார். ஸ்ரீதர் கொழும்பில் ஒரு பெண்ணைக் காதலித்ததாகவும் நீங்கள் அதைத் தடுத்துவிட்டதாகவும் அந்தப் பெண்தான் பத்மாவா?”
“ஆம். அவளை நினைத்து ஸ்ரீதர் தனிமையில் எழுப்பும் குரலைக் கிளி அப்படியே பயின்று ஒப்புவிக்கிறது. அதனால் தான் அதனைக் கிளியோசை என்னாது காதலனின் குரல் என்று நான் குறிப்பிட்டேன். பாரதி, இந்தக் குரலை நான் இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னர் ஒரு தடவை கேட்டேன். இப்பொழுது இரண்டாம் முறையாகக் கேட்கிறேன். இக்கிளியோசை ஸ்ரீதரின் நெஞ்சைத் திறந்து காட்டுவது போல் வேறு எதுவும் காட்ட வில்லை. மோகனா தன் ஆசை எஜமானனுக்காகப் பரிந்து பேசுவதற்கு இந்த உபாயத்தை அனுஷ்டிக்கிறது. ஆம், நான் தீர்மானித்து விட்டேன். ஸ்ரீதர் இஷ்டம் போல் பத்மாவை மணக்க நான் அனுமதிக்கப் போகிறேன். ஸ்ரீதரின் உள்ளம் இப்படி ஏங்கிக் கொண்டிருப்பதை என்னால் தாங்கிக் கொண்டிருக்க முடியாது.”
“ஐயாவின் முடிவை நான் வரவேற்கிறேன். மனம் போல் மாங்கல்யம் அமைய வேண்டுமென்பார்கள். காதலுக்கு எதிரான நாம் ஒரு போதும் தடை விதிக்கக் கூடாது. ஆனால் இவை உங்களுக்கு எடுத்துரைக்க நான் அஞ்சினேன். உங்களைப் போன்ற எல்லாம் தெரிந்தவருக்குப் புது ஆலோசனைகள் அவசியமில்லை. நீங்களே சரியான முடிவுக்கு வந்துவிட்டீர்கள்”
சிவநேசர் சின்னைய பாரதியிடம் பத்மா விஷயமாகக் கொழும்பு போவதற்கு ஒரு நல்ல நாள் பார்க்கும்படி உத்தரவிட்டார். அடுத்த நாட் காலை நல்ல நேரம் பார்த்துக் கொண்டு வருவதாகக் கூறி விடை பெற்றுச் சென்றார் பாரதி.
இதன் பின் விஷயங்கள் மிக விரைவாக முன்னேறின. பாக்கியத்திடம் தமது புதிய முடிவைப் பற்றிக் கூறிய சிவநேசர் “ஸ்ரீதர் எங்கள் குடும்பத்தின் ஒரே குருத்து. அவன் எப்படியும் திருமணம் செய்தேயாக வேண்டும். ஸ்ரீதரின் கண் பார்வை கெட்டதும் கந்தப்பசேகரர் அவனைக் கை விட்டுவிட்டார். ஆகவே எங்களுக்கும் வேறு வழியில்லை. அத்துடன் அவனுக்கும் இஷ்டமான இடமிது. பேசிப் பார்ப்போம்.” என்றார்.
பாக்கியத்துக்கு ஒரே ஆனந்தம். இது விஷயம் நிறைவேறினால் ஸ்ரீதரின் சிரித்த முகத்தைப் பார்க்க முடியுமே என்பது அவளது எண்ணம். “அப்படியானால் இன்னும் இரண்டு மூன்று நாட்களிலேயே கொழும்பு போய்க் காரியங்களை முடிப்போம்” என்றாள் அவள்.
ஆனால் சிவநேசர் திடீரென்று “பத்மா என்ற அந்தப் பெண் ஸ்ரீதர் கண் பார்வை இழந்தவள் என்றறிந்த பிறகும் அவனை மணமுடிக்கச் சம்மதிப்பாளா? எங்கள் முயற்சி வீண் முயற்சி ஆகுமோ தெரியவில்லையே” என்றார்.
பாக்கியம் “ஸ்ரீதர் கூறுவதன் படி பத்மா அற்புதமான பெண். அவனை உண்மையாக நேசிப்பவள். அப்படிப்பட்ட பெண் தன் காதலன் கண் பார்வையை இழந்ததற்காக அவனை வெறுத்தொதுக்க மாட்டாள். உண்மையில் இப்படிப்பட்ட துர் அதிர்ஷ்டம் அவனுக்கு நேர்ந்ததே என்று அனுதாபமும் சேர்ந்து முன்னிலும் பார்க்க அதிக அன்பு காடுவாள்” என்றாள்.
முதலில் பாக்கியத்தால் சிவநேசரின் மன மாற்றத்தை நம்பவே முடியவில்லை. மலையை அசைத்தாலும் அசைக்கலாம், தன் கணவனின் மனதை ஒரு போதும் அசைக்க முடியாது என்பதே அவள் சிவநேசருடன் நடத்தி வந்த நீண்ட கால இல்லற வாழ்க்கையின் அனுபவம். ஆனால் அசையாத மலை கூட பூகம்பத்தால் நிலம் கொந்தளிக்கும் போது தன் இடம் பெயரத் தானே செய்கிறது? சிவநேசர் மனமும் மோகனாவின் ஓலம் ஏற்படுத்திய புயலிலே அசையத் தொடங்கிவிட்டது. அதை அவரே பாக்கியத்துக்கு விளக்கியும் விட்டார்.
“பாக்கியம், நீ மோகனா “பத்மா” என்று கூச்சலிட்டதைக் கேட்டிருக்கிறாயா? ஸ்ரீதர் கிளிக்கு அந்த வார்த்தையைப் பேசப் பழக்கி வைத்திருக்கிறான். அதைக் கேட்க, என்னால் சகிக்க முடியவில்லை. இதற்கு ஒரு முடிவு வேண்டும். அந்தக் கிளிப் பேச்சுத்தான் என் மனத்தை மாற்றி விட்டது” என்றார் அவர்.
பாக்கியம் இந்தச் சுப செய்தியை ஸ்ரீதரிடம் சொல்ல அவன் படுக்கை அறைக்கு ஓடோடிச் சென்றாள். ஆனால் அங்கே அவள் கண்ட காட்சி அவளைத் திகைக்க வைத்தது. ஸ்ரீதர் கட்டிலிலே தலையணைக்கு மேல் தலையணையாக அடுக்கி வைத்து, அதில் சாய்ந்து கொண்டிருந்தாள். சோகத்தின் உருவாய்க் காணப்பட்ட அவன் படுக்கப் போவதற்காகக் கறுப்புக் கண்னாடியைக் கழற்றி விட்டிருந்ததால் கண்ணீர் தாரை தாரையாகப் பெருகிக் கொண்டிருப்பதைக் கண்டு துடி துடித்தாள் அவள்.
“ஸ்ரீதர், என்ன இது? எதற்காக அழுகிறாய்?” என்றாள் பாக்கியம்.
“எதற்காகவா? எனக்கா அழுவதற்குக் காரணமில்லை. கண்ணிழந்ததற்காக அழலாம். இப்பொழுது பத்மாவுக்காக அழுது கொண்டிருக்கிறேன். அம்மா, குருட்டுக் கண்களால் பார்க்க முடியாதிருக்கலாம். ஆனால் அவற்றால் அழ முடியும். என் கண்களால் அந்த உபயோகமாவது எனக்கிருக்கிறதே. அது போதும்.” என்றான் ஸ்ரீதர்.
பாக்கியம் கண் கலங்கி நின்றாள். “ஸ்ரீதர், இனி மேல் நீ அழ வேண்டியதில்லை. உன் பத்மா உனக்குக் கிடைக்கப் போகிறாள். அப்பா மனம் மாறிவிட்டார். அதைச் சொல்லத்தான் இங்கே ஓடோடி வந்தேன்” என்றாள்.
ஸ்ரீதர் “உண்மையாகவா?” என்றான்.
“ஆம். எல்லாம் உன் மோகனா செய்த வேலை. அது பத்மா பத்மா என்று கூவுவதைக் கேட்ட அவரது அசையாத மனம் கூட அசைந்துவிட்டது. நாளை அல்லது மறு தினம் பத்மாவைப் பெண் பார்க்க நாங்கள் இருவரும் கொழும்பு போகிறோம் ஸ்ரீதர்,” என்றாள் பாக்கியம்.
“இல்லை அம்மா, அது மோகனாவின் வேலையல்ல. மோகனாவின் பேச்சு அவரது மனதைத் தொட்டிருக்கலாம். ஆனால் கொட்டாஞ்சேனை மாரியம்மனுக்கு என்னுள்ளத்தில் இரகசியமாக நான் நேர்த்திக் கடன் வைத்திருக்கிறேன். அப்பா மனம் மாற வேண்டும். பத்மாவை நான் அடைய வேண்டுமென்று கேட்டிருந்தேன். அது பலித்து விட்டது. அம்மா, பத்மாவின் வீடும் கொட்டாஞ்சேனையில் தான். அங்கு போகும் வழியில் மாரியம்மனுக்கு என் பெயரால் தேங்காய் உடைக்க மறக்காதே.” என்றான்.
பின் தாயும் மகனும் வேறு பல விஷயங்களைப் பற்றிப் பேசினார்கள். மோகனாவைக் கூண்டுக்கு வெளியே எடுத்துக் கட்டிலில் வைத்துக் கொஞ்சி விளையாடினான் ஸ்ரீதர். அதற்குத் தன் கையாலேயே பாலும் பழமும் ஊட்டி மகிழ்ந்தான் அவள். “பத்மா வரட்டும். மோகனாவுகுப் புதிய கூடொன்று செய்விக்க வேண்டும். வெள்ளிக் கூடு. அதில் மோகனா உட்கார்ந்து ஊஞ்சலாட வெள்ளி வளையமொன்றும் தொங்க விட வேண்டும்,” என்று கூறினான் அவன்.
பாக்கியம், “ஸ்ரீதர், பத்மாவுக்கு உன் கண் பார்வை போனது தெரியுமோ என்னவோ? அது தெரிந்தாள் என்ன சொல்வாளோ?” என்றாள்.
அதற்கு ஸ்ரீதர், “என்னம்மா நீ அப்படிச் சொல்கிறாய்? உனக்குப் பத்மாவைப் பற்றித் தெரியாததால் இப்படிப் பேசுகிறாய். அவள் என்னை உண்மையாக நேசிப்பவள். ஒரு போதும் அவள் என்னை நிராகரிக்க மாட்டள். தன் கணவன் நோயாளி என்பதற்காக நளாயினி அவனை நிராகரித்தாளா?? பத்மாவும் அப்படிப்பட்டவள் தான்” என்றான்.
அவன் நம்பிக்கை வீண் போவது நூற்றுக்கு நூறு நிறைவேறித் தன் குலம் தழைக்க வேண்டுமென்று மாவிட்டபுரம் முருகனை வேண்டிக் கொண்டாள் பாக்கியம்.
ஸ்ரீதர், “அம்மா, எனக்குக் கண் தெரியாவிட்டாலும், இருளிலே கூட, உன் உருவம் அப்படியே தெரிகிறது. அப்பாவின் உருவம், பத்மாவின் உருவம் யாவும் தெரிகின்றன. பிறவிக் குருடனுக்கு இவை கூடத் தெரியாதல்லவா? நான் இப்படிப்பட்ட காட்சிகளை மனதிலே இடையிடையே கற்பனை செய்து கொள்ளுகிறேன். அது எனக்கு நல்ல பொழுது போக்காயிருக்கிறது.” என்றான்.
பாக்கியம் ஸ்ரீதரின் காலம் மாறி வருகிறதென்றும், பத்மாவுடன் அவள் பார்வையும் சீக்கிரம் திரும்பிவிடும் என்றும் ஆறுதல் கூறினான். “ஆம் அம்மா, காலம் மாறி வருகிறதென்று தான் எனக்கும் தெரிகிறது. இல்லாவிட்டால் அப்பாவின் மனம் மாறியிருக்குமா?” என்றான்.
அதன் பின் பாக்கியத்தைத் தன்னுடனே இருந்து பேசிக் கொண்டிருக்க வேண்டுமென்று வற்புறுத்தினான் ஸ்ரீதர். “முடியாது. அப்பாவிடம் போய்க் கொழும்புப் பிரயாணத்தைப் பற்றிப் பேசவேண்டும். நீ படுத்துத் தூங்கடா. பெண்டாட்டியைப் பற்றி நினைத்துக் கொண்டு தூங்கு.” என்றாள் பாக்கியம், அவனை உற்சாகப்படுத்துவதற்காக.
ஸ்ரீதர் “போம்மா, நீ என்னைப் பரிகாசம் செய்கிறாய். நான் உன்னுடன் கோபம்” என்றான்.
அதன் பின் பாக்கியம் அறையை விட்டுப் போய்விட, ஸ்ரீதர் கட்டிலில் எழுந்து உட்கார்ந்து கொண்டு ஆடினான், பாடினான், குதூகலித்தான். சிறிது நேரம் வானொலியில் இசை கேட்டான். அதன் பின் பத்மாவும் தானுமாகக் கொழும்பிலே மிருக வனத்திலும், கல்கிசைக் கடற்கரையிலும், கால்பேசிலும், ஐஸ்கிறீம் பார்லரிலும் சேர்ந்து கழித்த நேரத்தை எல்லாம் நினைவுபடுத்திக் கொண்டான். “தனக்கு நல்ல காலம் வந்துவிட்டது. அதனால் தான் பத்மா கிடைக்கிறாள்” என்றெண்ணிய அவள் “தானாகவே மங்கிய கண் மீண்டும் தானாகவே ஒளி பெற்று விடலாம்.” என்று கூட எண்ணினான். அந்த எண்ணத்தில் தன் விழிகளை உருட்டி உருட்டிப் பார்த்தான் அவன். கண் இமைகளை மூடிக் கொண்டு “ஒளியே வா, ஒளியே வா” என்று சொல்லியவண்ணம் தன் கண்களைத் தன் விரல்களால் தடவி விட்டான் அவன். உலகில் எத்தனையோ அதிசயங்கள் நடப்பதாகக் கூறிக் கொள்ளுகிறார்கள். மாரியம்மா, என் கண்களென்னும் கதவைச் சற்றே திறந்துவிட மாட்டாயா? பத்மாவைப் பார்க்க எனக்கு என் கண்களைத் தர மாட்டாயா?” என்றெல்லாம் தனக்குள்ளே ஏதேதோ பேசிக் கொண்டான் அவன்.
“ஆண்டவனே, நான் காலையில் நித்திரை விட்டெழுந்து என் கண்களை விரிக்கும் போது அங்கே இருள் திரை தோன்றக் கூடாது. சூரியனின் ஒளியும் வீட்டின் சுவர்களும் மோகனாவின் வர்ணச் சிறகுகளின் அழகும் என் கண்களுக்குத் தெரிய வேண்டும். எனக்கு அருள் புரிவாய் கடவுளே” என்றூ சொல்லிக் கொண்டே படுக்கையில் படுத்தான் அவன்.
இவை நடந்து மூன்று தினங்கள் கழித்து கொழும்பு ஹோர்ட்டன் பிளேஸ் ‘கிஷ்கிந்தா’விலிருந்து சிவநேசரும் பாக்கியமும் கொட்டாஞ்சேனை கொலீஜ் ரோட் 48/12ம் இலக்க வீட்டை நோகித் தமது பிளிமத் காரில் புறப்பட்டார்கள். சின்னையபாரதி குறித்துக் கொடுத்திருந்த நல்ல நேரத்தில் கார் கொட்டாஞ்சேனையை நோக்கிப் புறப்பட்டது. கார்¢ல் சிவநேசரையும் பாக்கியத்தையும் டிரைவரையும் தவிர, கிளாக்கர் நன்னித்தம்பியும் இருந்தார். அவர் டிரைவருக்குப் பக்கத்திலிருக்க, சிவநேசரும் பாக்கியமும் பின்னாசனத்திலிருந்தார்கள். சிவநேசர் வெள்ளை தலைப்பாகையணிந்து மிகக் கம்பீரமாக விளங்கினார். பாக்கியம் வைர நகையும், தங்க நகையும் பட்டும் பீதாம்பரமுமாகக் காட்சியளித்தாள்.
கொலீஜ் ரோட்டுக்குத் திரும்பும் இடத்துக்குச் சமீபமாக மாரியம்மன் கோவில் வந்ததும், பாக்கியம் காரை நிறுத்தும்படி செய்து ஸ்ரீதர் கேட்டுக் கொண்ட பிரகாரம் தேங்காய் உடைத்தாள். “அம்மனே, மாரியம்மா, ஸ்ரீதரின் எண்ணமெல்லாம் வெற்றிகரமாக நிறைவேற வேண்டும்” என்று அவள் மாரியம்மனை வேண்டிக் கொண்டாள். அத்துடன் உண்டியலில் பத்து ரூபா நோட்டொன்றை இட்டாள்.
சிவநேசர் தம் வருகை பற்றி பத்மாவுக்கோ பரமானந்தருக்கோ முன்னறிவிப்பு கொடுக்கவில்லை. திடீரெனப் போயிறங்கி எல்லாவற்றையும் விரைவில் பேசி முடிவெடுத்துக் கொண்டு யாழ்ப்பாணத்துக்கு மீண்டு ஸ்ரீதரின் திருமணத்தைத் தாமதமின்றி முடித்துவிட வேண்டுமென்பது அவரது எண்னம். அதன்படி அவரது பிளிமத் கார் பத்மா வீட்டுக்கு முன்னால் போய் நின்றதும் வீட்டினுள்ளேயிருந்து அவரை பார்த்த பத்மா திகைத்துவிட்டாள். முதலில் ஸ்ரீதர் தான் வந்த்¢ருக்க வேண்டுமென்று எண்ணினாள் அவள். கமலநாதன் விஷயமாக அவள் வெகு தூரம் போய்விட்டதால் ஸ்ரீதரைச் சந்திருப்பதற்கு அவள் விரும்பவில்லை. இதனால் அவள் மனம் அதிக குழப்பமும் கலவரமுமடைந்தது. ஆனால் அந்தக் குழப்ப நேரத்தில் அவளுக்குக் கை கொடுத்துதவ நல்ல வேளையாக அடுத்த வீட்டு அன்னமாக்கா சமீபத்திலேயே இருந்தாள். அன்னமாக்கா காலையில் பலகார விற்பனையை முடித்துக் கொண்டு பத்மாவுடன் அரட்டையடிப்பதற்கு அங்கு வந்திருந்தாள்.
அன்னமாவின் அரட்டையெல்லாம் எப்பொழுதும் பத்மாவின் கல்யாண விஷயம் பற்றியதுதான். விதவையான அவளுக்குப் பத்மாவின் காதல் விவகாரங்களைப் பற்றிப் பேசுவதில் ஒரு திருப்தி. காலையில் அவள் பத்மாவிடம் கேட்ட முதற் கேள்வி “கல்யாணத்துக்கு இன்னும் நாள் குறிக்கவில்லையா?” என்பதுதான். இரண்டு மூன்று தினங்களின் முன்னர் அவள் கமலநாதனின் தாயாரைச் சந்தித்திருந்தாள். அப்பொழுது கமலநாதனின் தாயார் அன்னமாவிடம் தன் மகன் பத்மாவைத் திருமணம் செய்வதில் தனக்குத் திருப்தியே என்று கூறியிருந்தாள். அதை எடுத்துக் கூறி, “மாமிக்கு மருமகளை நன்கு பிடித்துப் போயிருக்கிறது.” என்று சொன்னாள் அன்னம்மா.
இப்படி அவர்கள் பல கதையும் பேசிக் கொண்டிருந்த போது தான் சிவநேசரும் பாக்கியமும் அங்கு வந்து இறங்கினார்கள். தந்தை பரமானந்தர் வெளிப்புறத்தில் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தார். கார் சத்தத்தைக் கேட்டதும் அவர் பத்திரிகை வாசிப்பதை நிறுத்தி இத்தகைய பென்னம் பெரிய காரில் தம் வீட்டுக்கு வந்திருப்பது யார் என்று தமது மூக்குக் கன்னாடிக் கூடாகப் பார்த்தார்.
பத்மாவோ அன்னம்மாக்காவைக் கிள்ளி, “அன்னம்மாக்கா, இது ஸ்ரீதரின் கார். நான் உள்ளேயிருக்கிறேன். நீ போய் என்ன விஷயம் என்று பார்த்து வா. கமலநாதனோடு இவ்வளவு தூரம் போன பிறகு ஸ்ரீதரைக் காண நான் விரும்பவில்லை. எனக்கென்னவோ போலிருக்கிறது” என்றாள்.
அன்னம்மாவும் “சரி பார்த்து வருகிறேன்.” என்று வெளியே வந்தாள். பத்மாவோ வசதியான ஓர் இடத்தைத் தெரிந்தெடுத்து வந்தவர்களை யாருமறியாமல் கவனித்துக் கொண்டிருந்தாள்.
சிவநேசர் காரை விட்டிறங்கி கதவண்டை வந்து “பரமானந்தர் வீடு இது தானா” என்று கேட்டார். “ஆம்” என்று கூறிக் கொண்டே தம் இருக்கையை விட்டெழுந்து பரமானந்தர் கிளாக்கர் நன்னித்தம்பி “அமராவதி வளவு ஸ்ரீதர் தம்பியின் அப்பா சிவநேசப் பிரபு உங்களைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறார்” என்றார்.
“ஓ வாருங்கள்” என்று அவரை வரவேற்ற பரமானந்தர் சிவநேசரும் பக்கியமும் அமர்வதற்கு நாற்காலிகளைக் காட்டினார். அதன்பின் உபசாரப் பேச்சுகள் பரிமாறி முடித்ததும் சிவ நேசர் விஷயத்துக்கு நேரே வந்துவிட்டார்.
“என் மகன் ஸ்ரீதருக்கு உங்கள் மகள் பத்மாவைத் திருமணம் செய்து தரும்படி கேட்பதற்காகவே வந்திருக்கிறோம்.” என்றார் சிவநேசர்.
பரமானந்தருக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. “அந்த எண்ணம் எனக்கும் இருக்கத்தான் இருந்தது. ஆனால் ஸ்ரீதர் மூன்று நான்கு மாதமாக இங்கு வரவுமில்லை. கடிதம் எழுதவுமில்லை. அதனால் நிலைமையில் குழப்பங்கள் ஏற்பட்டுவிட்டது?” என்றார் அவர்.
சிவநேசர் “என்ன குழப்பம்?” என்றார்.
“ஸ்ரீதரை எதிர்பார்க்க முடியாது என்று போனதும், பத்மாவுக்கு வேறு திருமணத்துக்கு இங்கு ஒழுக்கு செய்து விட்டோம்,” என்றார் பரமானந்தர்.
“ஆனால் திருமணம் இன்னும் நடக்கவில்லையே?”
“இல்லை.”
“அப்படியானால் அந்தத் திருமணத்தை நிறுத்திவிட்டு ஸ்ரீதர் – பத்மா திருமணத்தை நடத்த முடியாதா?”
“அது மிகவும் சிரமமான காரியமல்லவா? வாக்குறுதிகளை எப்படி மீறுவது?”
சிவநேசருக்கு இவ்வார்த்தைகள் ஏமாற்றத்தை அளித்தனவென்றாலும் சமாளித்துக் கொண்டு, “என் ஒரே மகன் ஸ்ரீதர். அவன் பத்மாவைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்வதில்லை என்று பிடிவாதமாயிருக்கிறான். ஆகவே கட்டாயம் நீங்கள் என் கோரிக்கையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்” என்றார்.
“எனக்குச் சம்மதம்தான். ஆனால் பத்மா என்ன சொல்லுகிறாளோ?” என்றார் பரமானந்தர்.
“கூப்பிட்டுக் கேளுங்கள். கட்டாயம் அவள் ஒப்புக் கொள்வாள். ஸ்ரீதரை அவள் ஒருபோதும் நிராகரிக்க மாட்டாள் என்றாள் பாக்கியம்.
“சரி கூப்பிட்டுக் கேட்போம். அன்னம்மா, பத்மாவைக் கொஞ்சம் வரச் சொல்.” என்றார் பரமானந்தர். அன்னம்மா பத்மாவை அழைக்க உள்ளே சென்றாள்.
அன்னம்மா “என்ன விஷயம்?” என்றாள் பத்மா.
அன்னம்மா விஷயத்தை விளக்கினாள்.
“நான் என்ன செய்ய? எனக்கொன்றும் விளங்கவில்லை”
“விளங்குவதற்கு என்ன இருக்கிறது? குருடனைக் கட்டப் போகிறாயா? உன்னைப் போல் சகல வகையிலும் சிறந்த ஒரு பெண்ணை யாராவது ஒரு குருடனுக்குக் கொடுப்பார்களா? பணமிருக்கிறது என்ற திமிரிலே பெண் கேட்டு வந்திருக்கிறார்கள்.”
“அப்போது நான் என்ன சொல்ல?”
“என்ன சொல்வதா? முடியாது என்று சொல்லிவிடு.”
சிறிது நேரத்தின் பின்னால் பத்மா வெளியே வந்த போது பாக்கியம் அவளைக் கண்டு அப்படியே அசந்து போனாள். “அழகான பெண். வீட்டுக்கு அலங்காரமாயிருப்பாள். அவள் நிச்சயம் சம்மதிப்பாள்” என்று தனக்குள் தானே கூறிக் கொண்டு அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று ஆவலுடன் அவளது முகத்தைப் பார்த்தாள் அவள்.
பரமானந்தர் பத்மாவைப் பார்த்து “உன்னை ஸ்ரீதருக்குக் கல்யாணம் பேசி வந்திருக்கிறார்கள். உன் விருப்பமென்ன?” என்று கேட்டார்.
பத்மா சிறிது நேரம் பேசாதிருந்துவிட்டு, பின்னர் பாக்கியத்தைப் பார்த்து “அவருக்கு இரு கண்களும் பொட்டையாகி விட்டன என்கிறார்களே. அது உண்மையா?” என்று கேட்டாள்.
இந்தக் கேள்வி சிவநேசரையும் பாக்கியத்தையும் திடுக்கிட வைத்துவிட்டது. பாக்கியம் அதை ஒருவாறு சமாளித்துக் கொண்டு, “ஆம் உண்மை தான்” என்றாள். அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை.
“அப்படியானால் நீங்கள் குருட்டுப் பிள்ளைக்குப் பெண் கேட்க வந்திருக்கிறீர்கள். கண்ணில்லாதவரைக் கட்டிக் கொண்டு கஷ்டப்பட என்னால் முடியாது” என்றாள் பத்மா.
பத்மா கூறிய இவ்வார்த்தைகள் சிவநேசரையும் பாக்கியத்தையும் மட்டுமல்ல, பரமானந்தரைக் கூடத் திகைக்க வைத்து விட்டது.
“பத்மா, நீ அப்படிப் பேசக் கூடாது. ஸ்ரீதர் முன்னர் நல்ல கண்களோடு தானே இருந்தான்? அந்த நேரத்தில் நீ அவளைக் கல்யாணம் செய்திருந்து பின்னர் அவன் கண்கள் பொட்டையாயிருந்தால் நீ என்ன செய்திருப்பாய்?” என்றார் பரமானந்தர்.
“அவ்விதம் நடவாமல் கடவுள் என்னைக் காப்பாற்றிவிட்டார். அப்படிக் காப்பாற்றப்பட்ட பின்னரும் நாமாகவே போய்க் கஷ்டத்தில் மாட்டுவதா?” என்றாள் பத்மா.
இதற்கிடையில் அங்கு நின்று கொண்டிருந்த அன்னம்மாவும் பேசினாள். “தங்கச்சி சொல்வது சரிதானே? கண் தெரியாத மாப்பிள்ளையோடு காலம் கழிப்பது இலேசான காரியமா? இக் கல்யாணம் சரி வராது. இந்தப் பேச்சை இவ்வளவோடு விட்டுவிடுவதே நல்லது” என்றாள்.
சிவநேசருக்கு அதன்மேலும் அங்கிருக்கப் பிடிக்கவில்லை. “சரி வருகிறோம்.” என்று கிளம்பிவிட்டார் அவர். பாக்கியமும் எழுந்தாள். கிளாக்கர் நன்னித்தம்பியும் எழுந்து விட்டார்.
கார் ‘கிஷ்கிந்தா’வை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சிவநேசர் முகத்தில் என்றுமில்லாத கவலை மட்டுமல்ல. கோபமும் பொங்கிக் கொண்டிருந்தது. பாக்கியமோ கலங்கிப் போயிருந்த தன் கண்களைத் தன் சேலையால் துடைத்துக் கொண்டிருந்தாள்.
பொங்கி வரும் அழுகைக்கிடையே “நான் என்ன செய்வேன்? ஸ்ரீதருக்கு என்ன சொல்லப் போகிறேன்?” என்றாள் அவள்.
கிளாக்கர் நன்னித்தம்பியோ, “தம்பிக்கு இந்தச் செய்தியைச் சொல்லக் கூடாது. இதை அவரால் தாங்க முடியாது” என்றார்.
அன்று ‘கிஷ்கிந்தா’வைச் சூழ்ந்த இருள் மிகவும் பயங்கரமாயிருந்தது. “அடுத்து என்ன செய்வது?” என்ற பிரச்சினைக்கு முடிவு காண முடியாது சிவநேசரும் பாக்கியமும் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தார்கள்
[தொடரும்]
அறிஞர் அ.ந.கந்தசாமி
[ ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் ‘மனக்கண்’. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ‘பதிவுகளில்’ ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான ‘களனி வெள்ளம்’ , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். ‘தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். – பதிவுகள்]