இயமராசன் தமிழருக்கு அளித்த வரம்

 நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்) -மனித மூளை என்றும் தீவிரமாக யோசித்துப் பழையன தவிர்த்துப் புதியன காணும் படலத்தில் ஓடிக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். அதிலும் தமிழர் தரம் ஒரு படி மேலேன்று கூறுவர். இந்த வகையில் ஒரு முக்கிய தீர்மானம் எடுப்பதற்காக புத்திசீவிகளான தமிழர் ஒன்று கூடி, அவைத் தலைவராக ஒருவரை நியமித்து, அவர் அத்தீர்மானத்தைச் சபையோர்முன் பின்வருமாறு சமர்பித்தார். “அன்பர்களே! தமிழர்களாகிய எங்கள் வாழ்வியலில் இன்றெல்லாம் பல சிக்கல்கள் நிறைந்துள்ளன. அதனால் நாம் நினைத்தவாறு ஒன்றும் செய்ய முடியாத நிலை எழுந்துள்ளது. நாம் போடும் திட்டமெல்லாம் நிறைவாக்கமுன் எம் இறப்பு முந்திவந்து யாவையும் குலைத்து விடுகின்றது. எங்கள் தேட்டம் எல்லாவற்றையும் சீராக ஒழுங்கு செய்வதற்கு அவகாசம் கிடைப்பதில்லை. எங்கள் பிள்ளைகள், மனைவியர் ஆகியவர்களுடன் நீடூழி வாழலாம் என்பது தவிடு பொடியாகி அவர்களையும் நடுத் தெருவில் விட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது. பிள்ளைகளுக்கும் திருமணம் நடாத்தாது தவிக்க விட்டுச் செல்கின்றோம். நாம் வட்டிக்குக் கொடுத்த பணமும் கைநழுவிப் போகின்றது. இவ்வண்ணம் பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். பலன் ஏதும் கிடையாது. இதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு. அதுதான் எங்கள் இறப்பு நாள், திகதி, மாதம், ஆண்டு ஆகியன எங்களுக்கு முன்கூட்டியே தெரியவேண்டும். இதற்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இயமராசனுக்கு மனுக்களை அனுப்பவேண்டும். இதற்குரிய உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள். வணக்கம.;”  என்று கூறி அமர்ந்து விட்டார்.

இதைக் கேட்ட மக்கள் யாவரும் மிகவும் சந்தோசப்பட்டு அப் பிரேரணையை ஆமோதித்தனர். அவைத் தலைவர் மக்களுக்கு நன்றி கூறி, நீங்கள் இனி மனுக்களை இயமராசனுக்கு அனுப்பும்படி கூறிச் சென்றார். எல்லா மக்களும் அதற்கான மனுக்களை இயமராசனுக்குத் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.

கதிரவன் மண்டலத்துக்கு அப்பாலுள்ள பிரபஞ்சத்தில் அமைந்துள்ள சுவர்க்கலோகத்திலுள்ள இயமராசனின் பணித்துறையில் என்றுமில்லாதவாறு கோடிக்கணக்கில் மனுக்கள் வந்து சொரியத் தொடங்கின. இது இயமராசனைக் கலங்க வைத்துவிட்டது. என்னசெய்வதென்று அறியாது சற்று அமர்ந்து ஆலோசிக்கத் தொடங்கினான் சூரியனின் முதற் பிள்ளையான இயமராசன்.

அன்று இயமராசனின் மந்திராலோசனைக் கூடத்து மணி தொடர்ந்து அடித்தது. சற்று நேரத்தில் இயமராசனின் ஆலோசகர்கள், தேவதூதர்கள், தேவர்கள், சித்திரகுப்தன் ஆகியோர் திகிலடைந்த நிலையில் வந்து கூடத்தில் அமர்ந்து கொண்டனர். இயமராசன் எருமைக் கடாவில் வந்து இறங்கிச் சபையோருக்கு நன்றி கூறித் தன் உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்து

“என் அன்பானவர்களே! மண்ணில் வாழும் தமிழ் மக்கள் மாத்திரம் கோடிக் கணக்கான மனுக்களை அனுப்பியுள்ளனர். அதில் தங்களினதும், இனிவரும் சந்ததியினரதும் இறக்கும் நாள், திகதி, மாதம், ஆண்டு ஆகியவற்றை முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டுமென்று கோரியுள்ளனர். இது தொடர்பில் உங்கள் கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் தந்துதவுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்.”  என்று கூறி முடித்தார்.

சபையிலுள்ள சிலர் அதைக் கொடுக்கலாம் என்றும், வேறு சிலர் கொடுக்கக் கூடாதென்றும், மற்றையோர் நடுநிலை வகித்தும் இருந்தமையால,; வாக்கெடுப்பில் விட்ட பொழுது கொடுக்கலாம் என்று முடிவானது.

இயமராசன் உடனே செயலில் இறங்கினார். வானத்தில் பெரும் ஒலியுடன் ஒளிப் பிழம்பு ஏற்பட்டது. மக்கள் பெரும் பீதியடைந்தனர். என்ன நடக்கப் போகின்றதோ என்று யாவரும் வானத்தைப் பார்க்கையில்:-

“என் அன்புக்குரிய தமிழ் மக்களே! நான் இயமராசன் கதைக்கின்றேன். உங்கள் மனுக்களைப் படித்துப் பார்த்தேன். உங்களை மகிழவைப்பதுதான் என் முதற் பணி. எனவே நீங்கள் கேட்டபடி உங்கள் இறப்புத் திகதிகளை இப்பவே தரவுள்ளேன். உங்களின் பெயர், விலாசம், பிறந்த நாள், திகதி, மாதம், ஆண்டு ஆகியனவும், இறக்கும் நாள், திகதி, மாதம், ஆண்டு போன்ற விவரங்களையும் ஒளிப் பிழம்பாக வானத்தில் நீங்கள் பார்க்கலாம். இதை நீங்கள் வானத்தில் ஒவ்வொரு நாளும் மாலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணிவரை பார்க்கலாம். விதிகள், நிபந்தனைகள் அடங்கிய இந்த நீண்ட பட்டியலை மாவட்ட ரீதியாக அமைத்துள்ளேன். அந்தந்த மாவட்டப் பட்டியலை அந்தந்த மாவட்டத்தில் காட்டப்படும். எனவே உங்களுக்குச் சிரமம் இருக்காது. மேலும் இப் பட்டியல்கள் யாவும் கணிணியிலும் பதிவாக்கம் செய்துள்ளேன். நீங்கள் வீட்டிலிருந்தவாறே அவற்றைப் பார்க்கலாம், பிரதிகள் எடுக்கலாம், பாவிக்கலாம்.

ஓன்று கூற மறந்து விட்டேன். நீங்கள் ஆள்மாறாட்டம் செய்வதில் நிபுணர் என்பது எனக்குத் தெரியும். இதைத் தவிர்ப்பதற்காக உங்கள் அனைவரினதும் முதுகில் ஒரு சிறு வெண்மையான நட்சத்திரம் இட்டுள்ளேன். இது உங்களுக்கு நன்மையைத் தரும்.

  நான் இனி என் பணியாளர்களுடனும், பாசக்கயிற்றுடனும், எருமைக் கடாவில் பூவுலகம்  
  வந்து  உயிர்களைக் கவர வரமாட்டேன்.  அத்தொழிலை இனி  நான்  சுவர்க்கத்தில் 
  இருந்து கொண்டே தொழிற்படுவேன். உங்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும்  
  கூறி விடைபெறுகின்றேன்.” என்று இயமராசன் கூறி முடித்தார்.

இதைச் செவியுற்ற மக்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துத் தழுவினர், சிரித்தனர், வெடி கொழுத்தினர், நடனமாடினர், துணங்கைக் கூத்தும் ஆடினர், இனிப்புப் பண்டங்களும் பரிமாறினர், பூப்பறித்துப் பூசையும் செய்தனர், தொடருந்து, உந்துவண்டிகள், மகிழுந்து ஒன்றும் ஓடவில்லை, கந்தோரும் நடக்கவில்லை, மக்கள் வீடுகளில் இருக்கவில்லை, அவர்கள் றோட்டிலும் தெருவிலும் கூடி நின்று கதைத்துக் கும்மாளம் போட்டுக்கொண்டு இருந்தனர்.

இவ்வண்ணம் ஒரு வாரம் ஓடிச் சென்றது. இறப்பவர்கள் குறித்த திகதியில் அவரவர்கள் வீடுகளில் இருந்தவாறே இறந்து வந்தனர். ஏனெனில் அவர்களின் இறப்புத் திகதி அண்மித்ததும் தம் வீட்டை விட்டு வெளியில் போகமாட்டார்கள் அல்லவா! வைத்திய சாலையில் அனுமதித்திருந்தவர்களையும் நேரம் தப்பாது வீட்டுக்குக் கொண்டுவந்து விடுவர். எனவே இறப்புகள் எல்லாம் அவரவர் உற்றார் உறவினர் பக்கத்தில் இருக்கத் தத்தமது வீடுகளில்தான் நிகழ்ந்தன. இது ஒருவகையில் பலரைச் சந்தோசப் படுத்தியது. ஆனாலும் நடைமுறையில் பற்பல பிரச்சினைகள் எழத்தொடங்கின. முன்பிருந்த இறப்பு முறைக்கும் தற்பொழுதுள்ள புது இறப்பு முறைக்கும் இடையில் உள்ள நன்மை, தீமைகளை அலசி ஆராயத் தொடங்கியதில் தீமைகள்தான் அதிகம் என்ற நிலைக்கு வந்துள்ளனர் மக்கள். அவ்வாறெழுந்த நன்மை, தீமைகளையும் ஈண்டுக் காண்போம்.

நன்மைகள்
உற்றார் உறவினர் பக்கத்தில் சூழ்ந்திருக்கச் சாவு நிகழ்வது. இறக்கவுள்ளவர் தன் விருப்பத்தையும், ஆசைகளையும் கூறிச் செல்லக் கூடிய சந்தர்ப்பம் உள்ளது. குறிப்பிட்ட தினத்துக்குமுன் எச்சந்தர்ப்பத்திலும் இறக்க மாட்டார் என்பது திடமாகிறது. தான் மறைத்தும் முடக்கியும் வைத்திருக்கும் பணம், பொருள், தேட்டம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வாய்ப்புண்டு. வெகுநாட்களாகக் கோபங்காட்டித் தூரத்தில் வைத்திருந்த உறவுகளை அழைத்துச் சந்தோசம் கொண்டாடும் வாய்ப்பும் உள்ளது.

தீமைகள்
தன் இறப்பை அறிந்த நேரத்திலிருந்து அவன் இறக்கும்வரை என்றும் இறந்து கொண்டே இருக்கும் உணர்வுடன் நடமாடுகிறான். படித்து முடித்து உத்தியோகம் பார்க்க விண்ணப்பித்தால் இறப்புப் பத்திரம் சமர்ப்பிக்குமாறு புதுப் பிரச்சினைகளை உருவாக்குகின்றனர் வேலை வழங்குநர். இறப்புப் பத்திரம் சமர்ப்பித்தாலும் இன்னும் பத்து ஆண்டுகளில் வாழ்நாள் முடிந்து விடும் என்று விண்ணப்பத்தை நிராகரித்து விடுகின்றனர். வங்கியில் கடன் எடுக்கச் சென்றால் அங்கும் இறப்புப் பத்திரம் சமர்ப்;பிக்குமாறு கோருகின்றனர். இறப்புப் பத்திரத்தைப் பொறுத்தே கடன் தொகை அமைகின்றது.
திருமணம் புரிவதில் அமோகப்பட்ட சங்கடங்கள் ஏற்படுகின்றன. இறப்புப் பத்திரத்தைத்தான் முதலில் கேட்கிறார்கள். இறப்பு அண்மித்திருந்தால் திருமணம் செய்து கொடுக்க மறுக்கின்றனர். இறப்பு 40 ஆண்டுகளுக்குப்பின் என்றாலும் ஒத்து வருகின்றனர் இல்லை. பெண் வீட்டாரிடம் சீதனம் கேட்கலாமென்றால் அதுவும் சரிவருகின்றதில்லை. அவர்கள் இறப்புப் பத்திரத்தைப் பார்த்துவிட்டு முகம் சுளிக்கின்றனர். சீதனம் வேண்டாம் என்றாலும் இறப்புப் பத்திரம் குறுக்கிட்டு முன்வந்து நிற்கின்றது. ஆணும் பெண்ணும் உரிய காலத்தில் திருமணம் புரியாது தவிக்கின்றனர். ஒத்த வயதுத் திருமணங்கள் நடவாது பெரிய வயது வித்தியாசத்தில் திருமணங்கள் நடந்தேறுவதையும் நொந்த மனத்துடன் காண்கின்றோம். காதல் விடயத்தில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதையும் காண்கின்றோம். முன்போல் தானே எழும் காதல் தற்பொழுது எழுவதில்லை. ஆண், பெண் ஆகிய இருவரும் தமது இறப்புப் பத்திரங்களைப் பார்த்து எல்லாம் சரி என்று இருவரும் சம்மதித்த பின்தான் காதல் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் பூங்காவனங்களில் காதலர்கள் கூட்டம் அலை மோதும். இன்றெல்லாம் அவை அவர்கள் நாட்டமில்லாது வெற்றிடமாய் உள்ளன. வட்டிக்குப் பணம் எடுக்கலாமென்றால் அங்கும் இறப்புப் பத்திரம் முன் நிற்கிறது. இறப்பு அண்மித்திருந்தால் வட்டியைக் கூட்டித் தரலாம் என்று கேட்டாலும் ஒத்து வருகின்றார்களில்லை. பணத்தை வாங்கிக் கொண்டு, அதைக் கொடுக்காது இழுத்தடித்து விட்டு இறந்து போவர் என்ற பயம் இருக்கத்தான் செய்கிறது. காரியம் நடக்க வேண்டுமென்ற உந்தலில்  தன்னை ஆள்மாறாட்டம் செய்து தான் தமிழன் இல்லை என்று கூறித் தன்னிடம் இறப்புப் பத்திரமும் இல்லை என்று வருபவர்களின் விவரத்தைக் கணிணியில் பார்த்தபின், முதுகில் வெள்ளை நட்சத்திரத்தைக் காட்டும் என்று கேட்க, எல்லாத் திருகுதாளங்களும் வெளிப்படையாகியுள்ள பல சந்தர்ப்பங்கள் நடந்தேறியுள்ளன. சொற்ப காலந்தான் வாழலாமென்ற சில ஆண்கள் தாங்கள் இறக்குமுன் திருமணம் புரிய வேண்டுமென்ற ஆசையால் தம்மை விரும்பும் பெண்களுக்குப் பெரிய சீதன வரிசை கொடுக்க முன்வந்தும் ஒரு பெண்ணும் இணக்கம் தெரிவிக்காதது ஆண்களின் மனத்தைத் தைத்துக் கவலையளித்தது. அண்மையில் இறக்கவுள்ளவர்களை நற்காரியங்களில் பங்கேற்க விடாது ஒதுக்கி வைக்கும் முறை ஒன்று புதிதாக முளைத்துள்ளமை பலரை வாட வைத்துள்ளது.

ஒரு சில தீமைகள்தான் மேற் காட்டப் பட்டுள்ளன. இன்னும் அதை விரித்துக் கொண்டே போகலாம். இன்றைய காலகட்டத்தில் இத் தீமைகள் மனித வாழ்வியலில் புகுந்து அளப்பரிய கேடுகளையும,; தீங்குகளையும் கொடுத்து வருகின்றன. இதற்குப் பரிகாரம் தேட மக்கள் எழுந்தனர். பழைய நிலைதான் சிறந்ததென ஒரு சாராரும், வேறு சிலர் இயமராசனுக்கு மனுக்களை அனுப்பி முந்திய நிலைக்கு மாற்றித் தரும்படி கேட்கலாம் என்றும், வேறொரு சாரார் இப்ப இயமராசனைக் கேட்டால் கோபிப்பாரென்றும், வேறொரு சிலர் சிவனை நாடுவதுதான் சிறந்ததென்றும், பெண்கள் குழுவினர் ஒரு பெண் தெய்வத்தை நாடினால் பலன் கிடைக்கலாம் என்றும் பலதரப்பான கருத்துக்களைத் தெரிவித்தனர். இக் கருத்துக்கள் மேலும் ஒரு தீர்வை எடுக்க முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. எனவே பெரியோர் சிலர் இந்த விடயத்தைச் சில காலத்துக்குக் கிடப்பில் போட்டுப் பின் பார்ப்போமென்று ஆலோசனை கூற அதை மக்களும் ஏற்றுக் கொண்டனர். ‘நுழலும் தன் வாயாற் கெடும்.’         

wijey@talktalk.net