அறிமுகம்
எழுத்தாளர்களும் ரசிகர்களுமாகிய இலக்கியவாதிகளிடையே நன்கு பரிச்சயமானவர் வசந்தி. இலக்கியக் கூட்டங்களில் அடிக்கடி காண முடியும். தமிழ்ச்சங்க நிகழ்வுகளில் சுறுசுறுப்பாக ஓடித்திரிவார், அர்ப்பணிப்பும் ஈடுபாடும் கொண்ட அத்தகைய எழுத்தாளாரது நூல் இது. அத்துடன் அவரது முதலாவது சிறுகதைத் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. வசந்தி பற்றிய எனது முதல் மனப்பதிவு இவர் ஒரு நுண்மையான ரசனையுணர்வு கொண்டவர் என்பதாகவே இருந்தது. அடிக்கடி சந்திக்கும் ஒருவரல்ல என்ற போதும், நேரடி உரையடல்களின் போதும், நூல் வெளியீட்டு விழாக்களின் கருத்துரைகளின் போதும் அவர் சிந்தும் கருத்துக்கள் எம்மை வியக்க வைக்கும். அவை அவரது பரந்த வாசிப்பையும், ஆழமான ரசனை உணர்வையும் புலப்படுத்தவனவாக இருக்கும். பிறகு அவரது சிறுகதைகளை வாசிக்க முடிந்தது. என்ன எழுதுகிறார் என வேலோடு வாசித்தோம்;. நானும் மல்லிகை வாசகனாதலால் பெரும்பாலும் மல்லிகையில் அவரது சிறுகதைகளை வாசிக்க முடிந்தது. இப்பொழுது அவற்றின் உச்சமாக அவரது படைப்புகளை நூலாக இங்கு காண்கிறோம். சிறுவர் இலக்கியத்திலும் இவரது பங்களிப்பு இருக்கிறது. இது பற்றி பின்னர் பார்க்கலாம்.
வசந்தியின் படைப்புலகம்
இவரது படைப்புலகம் எப்படிப் பட்டது? அது பற்றி ஆழமாகவும் விரிவாகவும் பேசுவதற்கு என்னால் முடியாது. இருந்தபோதும் ஒரு வாசகன் என்ற ரீதியில் உங்களுடன் பகிர்வதற்கு என்னிடம் சில கருத்துக்கள் உள்ளன.
கதை சொல்லும்முறை.
இவரது கதையாடல் பல்வகைப்பட்டது.
சிறுகதைகளை ஆரம்பிக்கும் முறை
இதற்குள் என்ன ஒளிந்திருக்கிறது என எமது ஆர்வத்தைத் தூண்ட வைக்கும் நடையுடன் சில தருணங்களில் தனது படைப்பை ஆரம்பிக்கிறார். சுவார்ஸமாக சம்பவங்களை அடுக்கிச் செல்கிறார். மாறாக ஓன்றுடன் ஒன்று தொடர்பில்லாத விடயங்களைச் சொல்வது போல தொடங்கி இறுதியில் முடிச்சுப் போட்டு வைக்கும் கதை சொல்லும் உத்தியையும் பல படைப்புகளில் காண முடிகிறது.
இவை காரணமாக தொய்வின்றி தொடர்ந்து வாசிக்க வைக்கிறது. ‘உயிர்க் கூடு’ கதை ஒரு நல்ல உதாரணம். கொழும்பிலும் வெளி நாட்டிலும் நடக்கும் வெவ்வேறு சம்பவங்களுடன் தொடர்பற்ற காட்சிகள் போலக் கதை ஆரம்பிக்கிறது. இறுதியில் பிறந்த மண்ணில் வாழ்ந்த வீட்டின் மறக்க முடியாத நினைவுளுள் ஆழவைத்துத் துயருற வைக்கிறது. இவரது படைப்புகளில் ஓவ்வொரு வரியையும் ஆழ்ந்து படிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. களமும் கருவும் சில குறியீடுகளுக்குள் புதைந்து கிடப்பதுண்டு. இதனால்தான் அவரது கதையில் ஒவ்வொரு சொல்லும் தவிர்க்க முடியாதவை ஆகின்றன.
நூலின் முதற் கதை ‘புதியதோர் உலகு’ என்பதாகும். அது இவ்வாறு ஆரம்பிக்கிறது. ‘யன்னல் ஓரத்தில் வைத்திருந்த பவுடர் ரின்னை காணாமல் தேடினாள். இரவு நடந்த வதையில் அது உருண்டு கீழே விழுந்திருந்தது. நிலத்தில் சிந்தியிருந்த பவுடரைத் தொட்டு முகத்தில் பூசிக் கொண்டாள். பவுடரின் வாசத்தை மிஞ்சிக் கொண்டு குப்பென்று பீடியின் மணம்’. இது அவள் பற்றி, அவளது வீட்டின் பொருளாதார நிலை பற்றி அவள் வாழும் சூழல் பற்றி, குடும்ப உறவின் சிக்கல் பற்றிக் கோடி காட்டவில்லையா? இதே போல ‘கூர்ப்பு’ என்ற கதை இவ்வாறு ஆரம்பிக்கறது. ‘சிரிப்பை அடக்கிக் கொண்டு ஓரக் கண்ணால் இன்னுமொரு தரம் பார்த்தேன். ஓம்! சஞ்சீவனின் தலைமயிர் வெட்டு ஒரு புது ஸ்டைலில் இருக்குது. ஆளின்ட தோற்றமே வேறுவிதமாய் மாறிட்டுது.’ தலைமயிர் வெட்டு பற்றிய அந்தக் குறிப்பு அவனது வாழ்வில் ஏற்றடப் போகும் மாற்றங்களுக்கான குறியீடு போல அமைகிறது. ஆனால் சுவார்ஸமான சம்பவங்களைப் பதிவு செய்யும் வெறும் கதை சொல்லியாக மட்டும் அவர் இல்லை. கதைக்கு அப்பால் வாசகனது உணர்வுகளுடன் பேசுபவையாகவும் அவரது எழுத்துகள் பல இருக்கின்றன என்பதையும் குறிப்பிட வேண்டும்.
கரு
படைப்பின் கருவைப் பொறுத்த வரையில் அவரது சமூக அக்கறை ஒவ்வொரு படைப்பிலும் வெளிப்படுகிறது. இருந்தபோதும் எமது இனப்பிரச்சனை, போர் இவற்றினால் ஏற்பட்ட அவலங்கள் அதிகமாகப் பேசப்படுகின்றன. இதன் நீட்சியாக புலம்பெயர் வாழ்வும் அதனால் ஏற்படுகிற பண்பாட்டுச் சிதைவும் பேசப்படுகின்றன. பெண்ணியம் பல படைப்புகளில் மறைந்து நிற்கிறது. தீவிர பெண்ணியவாதியாக உரத்துக் குரல் எழுப்பாது பெண்களின் பிரச்சனைகளை சில சிறுகதைகளில் சொல்லிச் செல்கிறார். விழிம்பு நிலை மக்கள், சிறுவர்களை வேலைக்கமர்த்தல், ஆகியவையும் கருப்பொருளாயிருந்தன. பெரும்பாலான அவரது பாத்திரங்கள் நினைவில் நிற்குமாறு செதுக்கப்பட்டுள்ளது.
நடை
ஒரு படைப்பினுடைய பலம் அது சொல்லப்படும் நடையில் இருக்கிறது. படைப்பின் கரு முக்கியமானதாக இருந்தபோதும், பாத்திரங்கள் உயிரோட்டமானவையாக இருந்தபோதும் எழுத்தின் நடையானது நயமானதாக, ஆர்வத்தைத் தூண்டுவதாக, படைபின் சூழலுக்குள் வாசகனை உள்வாங்குவதாக, வாசிப்பிற்கு உகந்ததாக, இல்லாவிடின் வெற்றியடைய முடியாது. நடையானது எளிமையாக இனிமையாக இருப்பது விரும்பத்தக்கது. நடை என்பது ஓர் படைப்பாளியின் தனித்தன்மையை வெளிப்படுத்த வல்லது. ரசனையுள்ள வாசகனால் ஒரு நல்ல படைப்பாளியின் படைப்புகளை பெயர் சொல்லாதபோதும் இது யாருடையது என்று மட்டுக்கட்ட முடியும். புதுமைப்பித்தனுடையது எள்ளலும் கிண்டலும் நிரம்பியது, கல்கி கற்பனை வளமும் நகைச்சுவையும் நிறைந்த நடையைக் கொண்டவர். ஆழமும் உள்ளொளியும் ந. பிச்சமூர்த்தியின் நடையின் பலமாகும். ஜெயகாந்தனின் நடை ஆழமும் விரிவும் கொண்டது, சுஜாதாவின் நடையானது சுருக்கமும் செறிவும் இதமான வாசிப்பிற்கும் ஆனது. மேலும் அகிலன், சுந்தர ராமசாமி, ஜெயமோகன், ஜானகிராமன், ராமகிருஸ்ணன் போன்றோரும் தனித்துவமான நடை கொண்டவர்கள். இவர்கள் புனைபெயருக்குள் மறைந்திருந்தாலும் படைப்பின் நடைகாட்டிக் கொடுத்துவிடும். இலங்கையிலும் உமா வரதராஜன், சாந்தன், திசேரா, ராகவன் போன்றோர் தனித்துவமான நடையழகு கொண்டவர்கள். உமா வரதராஜன் தன் மனவெளியில் பயணிக்கும் அதே நேரம் நாசூக்கான கிண்டலுடன் கூடிய நடையில் எழுதுவார். சாந்தன் குறள் போல நறுக்கெனச் சொல்பவர். ராகவன் வித்தியாசமான எழுத்து முறைகளைப் பரிசோதித்து வந்தபோதும் அவருக்கான ஒரு நடை எங்காவது தலைகாட்டிவிடுகிறது. தெளிவத்தை இதமான தமிழில் நெருக்கமான நடையில் சொல்வார். வட்டாரத் தமிழ் கமாலின் படைப்புகளில் கமழ்ந்து வரும்.
ஒரே எழுத்தளர் இரண்டு வகை நடைகளைக் கையாள்வதும் உண்டு. ஆசிரியர் கூற்றாக வரும்போது அவரது வழமையான நடையில் இருக்கும். ஆனால் பாத்திரங்கள் பேசும்போது பாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப நடை மாறக் கூடும். இது பெரும்பாலும் பேச்சு நடையாகவே இருக்கும். வசந்தியின் படைப்புகளிலும் இவ்வாறே நடை மாற்றங்களை அவதானிக்க முடிகிறது.
‘என்னை அடிச்சதிலை அவருக்குக் களைப்பாக்கும்’ என யாழ்ப்பாணத்தில் ஒரு பாத்திரம் பேசும் அதே நேரம், மற்றொரு பாத்திரம் அதே கதையில் ‘பெரிய இஸ்டைலா பொறப்பட்டுப் போறாளுவ..’ என்கிறது. இது பேபி நோனா என்ற பாத்திரம்.
பேச்சு வழக்கு ஆங்காங்கே வெளிப்படாலும், வசந்தியின் தமிழ்நடை கம்பீரமானது. நல்ல தமிழில் சொல்லப்படுவது. மனித நேயத்தை வெளிப்படுத்துவது எனலாம். அத்துடன் படிப்பவரைக் கடைசி வரை சலிப்பூட்டாமல் தன்னோடு அரவணைத்துச் செல்கிறது. இருந்தபோதும் தனக்கேயான தனித்துவ நடையை தேடிக் கொண்டிருப்பதாகவே படுகிறது.
நோக்கு நிலை உத்தி
சிறுகதைகளைப் பொறுத்த வரையில் அவை சொல்லப்படும் கோணமும் முக்கியமாதாகும். சிறுகதைகள் பல கோணங்களில் சொல்லப்படலாம். இதை நோக்கு நிலை உத்தி என்பார்கள். பெரும்பாலானவர்கள் ஆசிரிய நோக்காகவே கதைகளைச் சொல்வார்கள். அவ்வாறு ஆசிரியர் கதை கூறும்போது, ‘நான்’ ‘என்னை’ போன்ற கூற்றுகளால் தன்னை ஒரு பாத்திரமாக வெளிப்படுத்தாமல் படர்க்கையில் கதை கூறுவதே சிறந்த முறை எனப் பலரும் கருதுகிறார்கள். வசந்தியின் படைப்புகளில் பெரும்பாலனவை அத்தகைய ஆசிரியர் நோக்காகவே சொல்லப்பட்டிருப்பதை இத் தொகுப்பில் காண்கிறோம். இதற்கு மாறாக ஆசிரியர் தானே முக்கிய பாத்திரமாக நின்று சொல்வதும் உண்டு. வசந்தியும் அவ்வாறான கதை கூறல் முறையையும் பரீட்சித்துப் பார்த்திருப்பதைக் காண்கிறோம். ‘கூர்ப்பு’, ‘பாத்திரமறிந்து’, ‘கனவு மெய்ப்பட…’ ஆகிய மூன்று மட்டுமே அவ்வாறானவையாகும். நோக்கு நிலை உத்தியில் மற்றொன்று, முக்கியப் பாத்திர நோக்கு என்பதாகும். இங்கு ஆசிரியர் கதை சொல்வதில்லை. முக்கிய பாத்திரமானது தனது நோக்கில் தனது மொழியில் கதைச் சொல்லிச் செல்லும். வசந்தி அந்த முறையையும் பரீட்சித்துப் பார்த்திருக்கிறார்.
‘எந்தையும் தாயும்’ என்ற சிறுகதையில், முக்கிய பாத்திரம் தானே கதை கூறுவதாக அமைந்துள்ளது. அதாவது இது ஆசிரியர் கூற்றாக அமையவில்லை. பெற்றோர் வெளிநாட்டில் வசிக்க இங்கு பெரியம்மாவுடன் வாழும் ஒரு சிறுவனின் பார்வையாக அவனது ஆசாபாசங்களை அவனது மொழியிலேயே சொல்வதாக அமைந்துள்ளது.
தொகுதியில் உள்ள சிறுகதைகளை ஒன்று சேரப் பார்க்கும் போது ‘காலமாம் வனம்’ மிகவும் வித்தியாசமான கலைநேர்த்தி கொண்ட படைப்பாக அமைந்துள்ளது. போரினால் பாழ்வெளியான நிலமும், மக்கள் ஒடி ஒதுங்கிவிட அனாதரவாகக் கிடக்கும் மண்ணாகவும் சோகம் விதைத்து நிற்கிறது. குறியீடாகவும் மயங்க வைக்கும் நடையிலும் எழுதப்பட்டுள்ளது. வசந்தியின் படைப்பாளுமையில் மைல்கல் எனச் சொல்லக் கூடிய படைப்பு இது.
அழகிய அட்டைப்படத்தை வடிவமைத்த மேமன் கவி பாராட்டுக்குரியவர். வன்மத்துடன் சுட்டெரித்துப் பொசுக்கினாலும் எமது வாழ்வும் வளமும் பண்பாட்டுக் கோலங்களும் அபிலாசைகளும்; முற்றாக அழிந்துவிடவில்லை. தூரத்தில் பசுமையின் கீற்று தென்படுகிறது என்ற நம்பிக்கையைச் சுட்டுகிறது. ஆனால் அடடைப்படத்தின் அச்சுப் பதிவு சிற்ப்பாக இல்லை என்பதையும் சொல்லியே ஆகவேண்டும்.
0.0.0
நூல் பற்றி அதிகம் சொல்லியாகிவிட்டது. இனி நூலாசியரான வசந்தி பற்றி ஓரிரு வார்த்தைகள். தமிழும் இலக்கியமும் இசையும் இவரோடு குழந்தைப் பருவம் முதல் இணைந்து பயணித்து வருகின்றன. தகவம் இராசையா மாஸ்டரின் புதல்வியாக இருந்தமை இவருக்குக் கிடைத்த பெரும் பேறாகும். தாயார் அர்ப்பணிப்புடனும் ஒழுங்காகவும் பணியாற்றிய ஆசிரியையாவார். ‘வசந்திக்கு இலக்கியமும் படைப்பாக்கத் திறனும் முதுசொம். அவை தந்தையாரிடமிருந்து பெரும் சொத்தாகக் கிடைத்தவை’ என சகோதர எழுத்தளாரான கோகிலா மகேந்திரன் ஓரிடத்தில் குறிப்பிட்டதை இங்கு நினைவு கொள்ளலாம்.
வசந்தி அவர்கள் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாத் தன் பணிகளைச் செய்து வருபவராக இருக்கிறார். கொழும்பு தமிழ்ச் சங்கப் பணிகளில் ஆட்சிக் கழ உறுப்பினராக பல ஆண்டுகளாக தன்னை அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகிறார். இப்பொழுது நடைபெற்று நிறைந்த உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டின் போது இவரது பணி நேர்த்தி வியக்க வைப்பதாக இருந்தது. சிறுகதை பற்றிய அரங்கின் இணைப்பாளராக இருந்து அரங்கானது மிகவும் நேர்த்தியாகவும் நேர ஒழுங்கு வழுவாமல் நடைபெறுவதற்கு அவர் பின்ணியிலும் நேரடியாகவும் ஒழுங்கமைத்தமை மற்றவர்களுக்கு பாடமாக இருக்கக் கூடியதாக இருந்தது. வங்கியில் 19 வருடங்கள் அதிகாரியாகப் பணியாற்றியதும் இவரது நேர ஒழுங்கிற்கு காரணமாயிருந்திருக்கலாம். தந்தையார் ஆரம்பித்து வைத்த தமிழ் கதை வட்டம் இவரது பங்களிப்பில் உயிர்த் துடிப்போடு இயங்குவதை அனைவும் அறிவோம்.
இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பாக இருக்கிறது. ஆயினும் நீண்டகாலமாக ஈழத்து இலக்கியப் பரப்பில் இவரது ஆளுமை பல்வேறு துறைகளில் துலங்கியுள்ளது.
சிறுவர் இலக்கியத்தில் இவரது பங்களிப்பு பலமாக இருந்திருக்கிறது. சிறுவர் இலக்கிய நூல்கள் பல இலரால் எழுதப்பட்டுள்ளன.
குடை நடை கடை
மண்புளு மாமா வேலை செய்கிறார்
அழகிய ஆட்டம்
பச்சை உலகம்
இவற்றுள் குடை நடை கடை என்ற நூலானது தமிழியல் விருது பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இவற்றுக்கு மேலாக பல திறனாய்வுக்கட்டுரைகளும் இவரால் எழுதப்பட்டுள்ளன. பல நூல் வெளியீடு மற்றும் விமர்சன அரங்குகளில் இவரது குரல் தீர்க்கமாக ஒலித்திருக்கிறது. நூல் விமர்சனங்களுக்கு அப்பால் பரத நாட்டியம், மற்றும் சமயம் சார்ந்த விடயங்களிலும் இவரது தெளிவான வித்தியாசமான பார்வைகளால் வியக்க வைத்துள்ளார்.
இந்த நூலுக்கான வெளியிட்டுரையை ஆற்றுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆதற்கான வாய்ப்பைத் தந்ததற்கு வசந்திக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நன்றி. ராசையா மாஸ்டர் இன்று இருந்திருந்தால் எவ்வளவு சந்தோசம் அடைந்திருப்பார். தன்னைப் போல தன் மகளும் இலக்கியப் பணி செய்வதையிட்டு மகிழ்ந்திருப்பார்.
மறைந்த அந்தத் தந்தையின் பூரிப்பிற்கு இணையான மகிழ்வுடன் இந் நூலுக்கான வெளியீட்டுரையை ஆற்றியத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைகிறேன்.