நத்தார் தினக் கவிதை: நத்தார் வாழ்த்துக்கள்!

விருந்தளித்து மகிழ்கின்றோம்
விழாக்கோலம் பூணுகிறோம்
வருத்தத்தை எமக்காக‌ தாங்கி
வரவேற்ற கர்த்தரின் வரவுக்காக‌

இயேசு  என்றொரு மகான்
இயற்றி வைத்த வேதங்கள்
இதயத்தில் சுரக்கும் அன்பினை
ஈந்து வாழும் வகையதற்கே

பிறந்தது மாட்டுத் தொழுவமதில்
சுரந்தது அன்பெனும் பெருஞ் செல்வம்
இறந்தது மானிடர் எமக்காக , அறிவோம்
சிறந்தது அவர்தம் போதனைகள்

அழுபவர் கண்களின் நீர்தனை
அன்புடன் துடைத்திடும் மனம் கொண்டு
அடுத்தவர் வாழ்வில் துயரினைக் கண்டு
அழுதிடும் நெஞ்சினை அடைந்திடும் வழி

விளக்கிடும் வகையில் வாழ்ந்திட்ட தேவமைந்தன்
வியந்திடும் கருத்துக்கள் மொழிந்திட்டான்
விடிந்திடும் வாழ்க்கை உழைப்பவர் வாழ்வில்
விரைந்திட்டு நாமும் வரைந்திடுவோம் காவியம்

சுயநலம் நிறைந்த நானீன உலகில்
சுயம்தனை அறிந்திட தேவனை அறிவோம்
பரநலம் நோக்கி எடுத்திடும் அடிகள்
பரந்த உலகின் நோக்கினை மாற்றட்டும்

அருள்மிகு ஜீவகுமாரன் உதித்த காலமதில்
அன்பு ஒன்றே வழியெனக் கொண்டு
அகிலம் முழுவதும் அமைதி வேண்டியே
ஆண்டவன் தனை பிரார்த்தித்திடுவோம்

அன்பினிய உள்ளங்கள் அனைத்திற்கும்
அன்புடன் கூடிய நத்தார் வாழ்த்துக்கள்
அன்பு கலந்தே அளித்து மகிழ்கிறோம்
ஆனந்தமாய் வாழிய, வாழியவே !

ssakthi@btinternet.com