ஜனவரி 2013 கவிதைகள் -2

ஜனவரி 2013 கவிதைகள் - 1

 கொம்பு முளைத்த மனிதர்கள்

– துவாரகன் –

புதிய நட்சத்திரங்கள்
வானத்தில் மின்னத்தொடங்கிய காலம்முதல்
வீதியில் நடந்து கொண்டிருந்த மனிதர்களுக்கு
கொம்பு முளைக்கத் தொடங்கியது.

கோயிற் கச்சான் கடையில்
விற்பனைக்கு வைத்த
மிருகங்களின் வால்களையும் காதுகளையும்
விருப்பமானவர்கள் அணிந்து கொண்டார்கள்.

மாடுகள் போலவும்
நரிகள்போலவும்
நாய்கள் போலவும்
குரங்குகள் போலவும்
ஓசையிடக் கற்றுக்கொண்டார்கள்.

தாவரங்களையும் கிழங்குகளையும்
தின்னத் தொடங்கினார்கள்.
ஆற்றில் நீர் குடிக்கவும்
சுவடறிந்து இடம்பெயரவும்
இரைமீட்கவும்
பழகிக் கொண்டார்கள்.

வீடுகள் எல்லாம் வெறிச்சோடின.
காடுகள் எல்லாம்
புதிய மிருகங்களால் நிரம்பி வழிந்தன.

உண்மை மிருகங்களின்
கொம்புகளும் காதுகளும்
உதிர்ந்து கொண்டிருக்க,
மீண்டும்
வால்கா நதிக்கரையில் இருந்து
கூன் நிமிர்த்தியபடி நடந்து வருகிறார்கள்
புதிய மனிதர்கள்.

kuneswaran@gmail.com


இரவு விழித்திருக்கும் வீடு

–  எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை –

ஜனவரி 2013 கவிதைகள் - 1

நீ கதிரறுக்கும் வயல்பூமியை மஞ்சளால் போர்த்திய
அம் மாலை நேரம் எவ்வளவு அழகாயிருந்தது
இறுதியாக செஞ்சாயத் தேனீரும் கறுப்பட்டித் துண்டும்
சுமந்து வந்து அருந்த வைத்த உன் மனைவியின்
காலடித் தடத்தில் முழுவதுமாக இருள் உறைந்த
உனது தற்கொலைக்கு முன்னதான அக் கணம் வரை

பயிர்களை விதைக்கையில் நீயெழுப்பிய இனிய கீதம்
அம் மலைச்சரிவுகளில் இன்னும் அலைகிறது
மேய்ப்புக்காக நீயழைத்துச் செல்லும் செம்மறிகள்
ரோமம் மினுங்க வந்து காத்துக் கிடந்தன
களைகளகற்றுமுன் வலிய கைகளை
நெடுங்காலமாய்க் காணா பூமி வரண்டிருந்தது
மூதாதையர் தோண்டிய கிணற்றில்
ஒரு துளி நீரிருக்கவில்லை

நிலம் வெடித்துப் புழுதி கிளம்பும் காலங்களில்
அயல்கிராமங்களுக்கு கல்லுடைத்துச் சீவிக்கச் செல்லும் சனம்
அனல்காற்றில் வெந்துருகிச் சில காசு பார்க்கும்
விவசாயம்தான் மூச்சென வீராப்பாய் நீயிருந்தாய்

தந்தையைத் தேடியழும் பாலகிக்கு எதுவும் தெரியவில்லை
நச்சுச் செடிகளுக்கென தெளிக்க வைத்திருந்த கிருமிநாசினியை
உன் குடிசைக்கு எடுத்து வருகையில்
மனைவிக்கும் தவறாயெண்ணத் தோன்றவில்லை
விதைக்கும் காலத்தில் சேற்று மண்ணில் நீ தூவிய விதைகள்
கடன்களாய் முளைத்திருந்தன
உன் எதிர்பார்ப்புக்களையெல்லாம் வெள்ளத்தில் சுமந்துசென்று
ஆற்றில் சேர்த்தது பருவம் கடந்து வந்த மழை

வெயிலின் முதல் கிரணம் முற்றத்தில் வீழ்ந்த
அன்றினது விடிகாலையில் உன்னோடு ஓய்ந்த பாடல்
எழவேயில்லை உன் வீட்டில்
எல்லோரையும் உறங்க வைத்த அன்றைய இரவு
விழித்திருந்தது என்றென்றும்

mrishanshareef@gmail.com


[மரபுக் கவிதைகளில் எனக்குப் பிடித்த வடிவம் அகவல். அதிலும் குறிப்பாக நிலைமண்டில ஆசிரியம். மிகவும் சட்டதிட்டங்கள் மிக்க நேரிசை வெண்பா போன்ற மரபின் வடிவங்கள் எனக்குப் பிடிப்பதில்லை. வெண்பாவிலும் சிறிது தளர்ந்த இன்னிசை வெண்பா பிடிக்கும்.  அதை விட அகவல் பிடிக்கும். அதிலும் நேரிசை ஆசிரியப்பாவை விட (இங்கு இறுதியடிக்கு முதலடி முச்சீர் அடியாகவிருக்க வேண்டும்) இன்னும் சுதந்திரமான நிலைமண்டில ஆசிரியப்பா பிடிக்கும்.  அந்த வகையில் நிலைமண்டில ஆசிரியப்பா வழியிலொரு கவிதை கீழே:-]

கவிதை: தேடல்!

– வ.ந.கிரிதரன் –

ஜனவரி 2013 கவிதைகள் - 1

இந்த விசும்பும், சுடரும், ஒளிரும்
அந்தக் கோளும் எல்லாம் எனது
நெஞ்சில் வினாக்கள் எழுப்பும் மேலும
விரியும் நெஞ்சில் இன்பம் தருமே.
எத்தனை முறைநான் பார்த்து மென்ன
அலுப்ப தில்லை. அலுப்ப தில்லை.
எண்ணப் புள்ளும் சிறக டித்து
விரிவு, தெளிவு, அறிவு மற்றும்
புரியும் ஆற்றல் வேண்டிப் பறக்கும்.
நூலும் எழுத்தும் இயற்கை உயிர்கள்
எல்லாம் எத்துணை இன்பம்! இன்பம்!
இன்ப மிதுபோல் வேறொன் றுண்டோ?
இந்த விருப்பு இங்கு எதற்கோ?
இந்த இருப்பு இங்கு எதற்கோ?
விரியு மிந்த அண்ட வெளியும்
ஒளிதன் எல்லை தாண்டி விரியும்
அண்ட வெளிக ளிருப்பி னவற்றை
அறியு மாற்றல் எனக்குத் தருவாய்
இயற்கைத் தாயே! இயற்கைத் தாயே!
நினைவில் தெரியு மிந்த உலகு
இருக்கும் ஒன்றா? அன்றி இருப்பது
தெரிவ தெல்லாம் மின்னின் விளைவா?
பொருளு லகில் தெரிவ தெல்லாம்
இருப்பதா அன்றி சித்த விளைவா?
சிந்தனைத் தொடரோ தொடரும். தொடரும்.
இத்தரை மீதில் இருக்கும் வரையில்
சித்தமும் தேடலை நிறுத்துவ தில்லை.