முகநூற் குறிப்புகள்: சீர்காழி தாஜின் முகநூற் பதிவுகள் பற்றியதொரு கலந்துரையாடல்

முகநூற் குறிப்புகள்: சீர்காழி தாஜின் முகநூற் பதிவுகள் பற்றியதொரு கலந்துரையாடல்

எழுத்தாளர் சீர்காழி தாஜ் எனது முகநூல் நண்பர்களில் முக்கியமானவர்களிலொருவர். அவர் அவ்வப்போது முகநூலில் இடும் பதிவுகள், சிறு குறிப்புகளாகவிருக்கட்டும் அல்லது குறுங்கவிதைகளாகவிருக்கட்டும், கலந்துரையாடலைத் தூண்டுபவை. அவரது எழுத்தில் வெளிப்படும் பாசாங்கற்ற உண்மையின் தெளிவும், தனக்குச் சரியென்று பட்டதை மனம் நோகாதவாறு துணிச்சலுடன் கூறும் பண்பும் , மற்றும் ஆங்காங்கே விரவிக்கிடக்கும் அங்கதமும் என்னை மிகவும் கவர்ந்தவை. அண்மையில் முகநூலில் அவர் சில குறுங்கவிதைகளைப் பதிந்திருந்தார். அவை பற்றிய முகநூலில் பதிவு செய்த எனது கருத்துகளையும் (கவிதை வடிவில்), அவற்றையும் பதிவுகள் வாசகர்களூடன் பகிர்ந்துகொள்வதன்பொருட்டு இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

தாஜ்:
பொழுது போன நேரம்
எத்தனை விளக்குகளை
ஒளிர விட்டென்ன?
இரவுதான் நட்சத்திர நாயகன்.

கிரிதரன்:
இத்தனை சுடர்கள் இரவினில் சுடர்ந்தும்
இரவின் ஆதிக்க மிருப்பது எதனால்?
இரவு கருமையில் இருப்ப தெதனால்?
இதற்கொரு காரணம் அறிவிய லுலகினில்
உண்டு. விரியும் வெளியில் தெரியும்
சுடர்கள் இருக்கும் காலம் ஒளியின்
வேகத்தால் ஒன்றென இருப்ப தில்லை.
இரவு சுடரின் நாயகன் இருப்பது
இதனால் தானே. இதனால் தானே! 🙂

தாஜ்:
//இரவு கருமையில் இருப்ப தெதனால்?
இதற்கொரு காரணம் அறிவிய லுலகினில்
உண்டு. விரியும் வெளியில் தெரியும்
சுடர்கள் இருக்கும் காலம் ஒளியின்
வேகத்தால் ஒன்றென இருப்ப தில்லை.// இதனூடான அறிவியலை இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதுங்கள் கிரி. பிளீஸ்.

கிரிதரன்:
வெளி விரிந்துகொண்டிருக்கிறது. சுடர்கள் வெவ்வேறு ஒளியாண்டுத் தொலைவுகளில் இருக்கின்றன. எமக்கு ஒரே நேரத்தில் அவை சுடர்வதாகத் தெரிந்தாலும் வெவ்வேறு காலகட்டங்களிலிருந்து அவை சுடர்ந்துகொண்டிருக்கின்றன. விரியும் வெளியினூடு எம்மை வந்தடையும் அவற்றின் ஒளியும் நீர்த்துப் போய்விடுகின்றது. இது போன்ற காரணங்களினாலே இவ்வளவு சுடர்களிருந்தும் இரவு வான் ஒளிராமல் இருண்டு கிடக்கின்றது.

நண்பர் தாஜின் கவிதையின் வரிகளான //பொழுது போன நேரம்
எத்தனை விளக்குகளை
ஒளிர விட்டென்ன?
இரவுதான் நட்சத்திர நாயகன்// என்பதை நான் புரிந்து கொண்டதன் அடிப்படையில் என் கருத்தினை முன் வைத்தேன். பொழுது போன நேரம் எத்தனை விளக்குகளை ஒளிரவிட்டென்ன என்பதிலுள்ள விளக்குகளை நான் நட்சத்திரங்களாகக் கருதினேன். அவ்விதம் அவை பல ஒளிர்ந்தாலும் இரவுதான் நட்சத்திர நாயகன் என்பதை நான் இருண்டிருக்கும் இரவுதான் அந்த ஒளிரும் நட்சத்திரங்களின் நாயகனென்று கருதிக்கொண்டேன். ஏனென்றால் இவ்வளவு சுடர்கள் (நட்சத்திரங்கள்) இருந்தும் , ஒளிர்ந்தும் அவற்றால் இரவின் கருமையினை நீக்க முடியவில்லை. இரவின் ஆதிக்கத்தை நீக்க முடியவில்லை. அதனால் இரவுதான் நட்சத்திரங்களின் நாயகன் என்று புரிந்துகொண்டதன் அடிப்படையில்

//இத்தனை சுடர்கள் இரவினில் சுடர்ந்தும்
இரவின் ஆதிக்க மிருப்பது எதனால்?
இரவு கருமையில் இருப்ப தெதனால்?
இதற்கொரு காரணம் அறிவிய லுலகினில்
உண்டு. விரியும் வெளியில் தெரியும் //

என்று என் கருத்தினை முன் வைத்தேன். 🙂

ஒருவேளை கவிஞர் இவ்விதம் எண்ணாமல் இன்னுமொரு அர்த்தத்தில் கூறியிருக்கலாம். அவ்விதமிருந்தாலும் நான் இவ்விதம் விளங்கிக்கொண்டதற்கேற்ப கவிஞரின் சொற்கள் விழுந்திருக்கின்றன. நல்லதொரு கவிதை. வாழ்த்துகள்.

தாஜ்:
அன்பு கிரி… உங்களது விளக்கத்திற்கு நன்றி. நீங்கள் நட்சத்திரங்களின் ஒளியை குறிப்பிட்டு சொல்வதறியாமல் நான்தான் கேள்வி எழுப்பி விட்டேன். நீங்கள் சந்தேகப்பட்டிருப்பது மாதிரி //இன்னுமொரு அர்த்தத்தில்…// உருக்கொண்ட வரிகள்தான் அவை. என்னையும்/ காலத்தையும்/ தேய்மானத்தையும்/ பளிச்சிடும் அவசர அவசர செயல்பாடுகளையும் முன்வைத்து எழுதப்பட்ட வரிகளது. நீங்கள் அர்த்தப்படுத்திக் கொண்டதும் சரி. வெறும் நான்கு வரிகள்தானே..!! சாதாரணம் காட்டிவிடுங்கள்.

கிரிதரன்:
நண்பர் தாஜுக்கு, ஒரு கவிதை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி புரியலாம். சில வேளைகளில் அதை எழுதியவரின் அர்த்தத்தையும் கடந்து இங்கு நடந்தமாதிரி நடக்கலாம். இதனால்தான் ஒரு படைப்புக்குப் பல உரைகள் சாத்தியமாகின்றன. இந்த விடயத்தில் பிரெஞ்சுத் திறனாய்வாளரான ‘ரோலண்ட் பார்த்’தின் புகழ்பெற்ற கட்டுரையான ‘ஆசிரியரின் மரணம்’ என்பதை நினைவில் கொள்வது நல்லது. அந்தக் கட்டுரையில் ஒரு படைப்பொன்றினை அதனைப் படைத்த ஆசிரியரின் நோக்கம், வாழ்க்கைப் பின்னணியில் ஆராய்வதைக் கடுமையாக எதிர்த்திருப்பார். அந்தப் படைப்பினை அர்த்தப்படுத்திக்கொள்வதற்கு அதனைப் படைத்தவர் முக்கியமில்லாதவர். அந்தப் படைப்பின் மூலமல்ல முக்கியம். அது யாரைச் சென்றடைகின்றதோ அதுவே முக்கியம். படைத்தவரின் பின்னணியில் ஒரு படைப்பினை அர்த்தப்படுத்திக்கொள்வது அந்தப் படைப்பின் மீதான வாசிப்பின் மீது தடைகளை ஏற்படுத்தி விடுகின்றதென்பதவர் கருத்து. தாஜின் இந்தக் கவிதை வரிகளை நான் அர்த்தப்படுத்திக் கொண்டது இதனைப் படைத்த தாஜின் அர்த்தத்தினின்றும் வேறானபோதும் என்னைப் பொறுத்தவரையில் என் அர்த்தத்திற்குச் சரியாகவே அந்த நறுக்குக் கவிதை வரிகள் அமைந்திருக்கின்றன. இதனை இன்னுமொருவர் இன்னொரு கோணத்தில் புரிந்துகொள்வார். இத்தகையதொரு சூழலில் //சாதாரணம் காட்டிவிடுங்கள்// என்று கூறும் உரிமையினை நீங்கள் அந்த வரிகளை முகநூலில் பதிவு செய்ததுடன் இழந்து விட்டீர்கள். இப்பொழுது அந்த வரிகள் முகநூல் வாசகர்களின் பல்வேறுபட்ட வாசிப்பினை வேண்டி நிற்கின்றன. 🙂


தாஜ்:
புண்ணிய பூமியில்
எத்தனை ஜனத் திரள்!
எங்குத் தேடினாலும்
மனிதனைக் காணோம்.

கிரிதரன்:
பாலியல் வன்முறை ஜாதிக் கலவரம்
நாளும் பொழுதும் நடக்கும் பூமியைப்
புண்ணிய பூமி எனல் தகுமோ?
நண்பரே! வெந்த புண்ணில் வேலினைப்
பாய்ச்சிடும் வார்த்தைகள். மானுடர் நெஞ்சினை
வருத்திடும் மண்ணிது. இனிமேல் கூறுவோம்
புண்செயும் பூமி என்று.
மானுடர் உள்ளம் பண்படும் வரையில். 🙂

தாஜ்:
புண்செய்யும் பூமியென்பது அர்த்தப்படவே செய்கிறது. கலாச்சாரப் பண்பாட்டின் கூறுகள் நம்மீது ஏற்றிவைத்திருப்பதெல்லாம் ‘புண்ணிய பூமி’ இதுவென்று. முதல் பூஷ்வா சுரண்ட தொடங்கிய கணத்தில் அவன் படிப்பித்த ஆதிப் பாடமாக இருக்கும் இந்தப் ‘புண்ணிய பூமி!’ கிரி சரியாதான் பேசுகிறேனா?


தாஜ்:
யாரும் இல்லாத ஊருக்கு
நான் ஏன்..
இத்தனை அவசியமாக
விரைந்து கொண்டிருக்கிறேன்?

கிரிதரன்:
இல்லாத ஊருக்கு விரைவதன் அவசியம்
ஏனென்று கேட்கும் நண்பரே. காரணம்
யாரு மற்ற ஊரில் நிலவிடும்
தனிமை நாடிய விருப்பினால் போலும். 🙂

தாஜ்:
//தனிமை நாடிய விருப்பினால் // மனிதன் இல்லாத இடம்தான் ஏது கிரி? தனிமையில் கூட அவனது நல்லதும் கெட்டதுமான சிந்தைதானே நம்மை ஆள்கிறது. எந்த ஞானியாலும் அதனிடமிருந்து தப்ப முடியுமா என்ன? நான் சுட்டும் விரைவு…, நிஜத்தில் உங்களுக்கு புரியாததுமல்ல.


தாஜ்:
பொழுதெல்லாம்
தேடியலைகிறேன்.
அனுபவம் கூட
கூடிவர மறுக்கிறது!

ஹிம் ரஷீத்:
ஏதோ ஒரு சக்தி நமக்கு மேல் இருக்கிறது என்று சொல்கிறார்களே…அதனுடைய வேலையாக இருக்குமோ??

தாஜ்:
//ஏதோ ஒரு சக்தி நமக்கு மேல் இருக்கிறது // ஆமாம் இருக்கிறது. இது விரிவான தளத்தில் வியக்க, வியக்க பேச வேண்டிய ஒன்று. இந்த நாலுவரி கவிதை மொழி நான் உணர்ந்த தனிச் சங்கதி. காலத்தில் சாதாரணமாக வாய்க்கக் கூடிய அனுபவம், அலைகிற சிலபோது கூடிவருவதில்லை என்கிற எதிர்மறை வியப்புதான் அந்த நான்கு வரிகள். அவ்வளவுதான். நிறைய எழுதி சிரமம் தந்துவிட்டதாக நினைக்கிறேன். Anyway.. ரஷீதுக்கு நன்றி.

கிரிதரன்:
பொழுது எல்லாம் தேடி அலைவதும்
அனுபவம் தானே! கூடவே நிழலென
அனுபவம் வருகையில் கூடி உம்முடன்
கூடிவர வில்லை என்பதி லென்ன
நியாய முண்டு. கூறுவீர் நண்பரே! 🙂

தாஜ்:
அன்பு கிரி.. அனுபவமும் நாளும் கூடினால்தானே அந்த அனுபவத்திற்கும் ஓர் அழகிருக்க முடியும்? செக்கு மாட்டுத்தனம் என்ன அனுபவத்தைத் தந்துவிட முடியும் சொல்லுங்கள்?