மின் பல்புகள் மங்கி மறைகின்றன. காட்சி தொடங்குகிறது. பஸ்சில் பயணிக்கிறான் ஒருவன். சொகுசு பஸ் அல்ல. கட கட லொட லொட எனகட்டை வண்டி போல ஒலிக்கும் வண்டி. பயணிப்பவன் ஆஜானுபானவன். வடபுலத்தானின் சொல்லப்பட்ட கருமை நிற மேனி. முகத்தில் காரணம் சொல்ல முடியாத வெறுமை. இளமைக்குரிய உற்சாகம் பரபரப்பு ஆவல் யாவும் மரணித்துவிட்டதான பாவம். இவன் கூடவே யன்னல் வழியே பயணிக்கும் பாதை வெளியும் வெறுமையானது. வெற்றை வெளிகள், கருகிய வனங்கள், புற்களும் மரணித்துவிட்ட பூமி. படிப்படியாக சூழலில் மாற்றம் தெரிகிறது. ஓரிரு பாழடைந்த வீடுகள். பின்னர் வேலியடைப்பிற்குள் சிறிய வீடுகள், மதிலுடன் கூடிய வீடு என மாற்றத்தை உணர முடிகிறது. இவை யாவும் படத்தின் பெயர் விபரங்கள் காட்டப்படும்போது பின்னணியாக ஓடிக்கொண்டிருந்தன. மாறிவரும் காட்சிப் பின்புலம் எதை உணர்த்துகிறது. காட்சி மாற்றம் போலவே அவனது வாழ்விலும் செழிப்பு மலரும் என்கிறதா? ‘இனி அவன்’ என்பது படத்தின் பெயர். வாகனத்திலிருந்து இறங்கி நடக்கிறான். நீண்ட தூரம் நடந்து செல்கிறான். தனது பாதங்களைத் தனது சொந்த மண்ணின் வெறுமையான வீதிகளில் ஆழப்பதித்து, கிராமத்தை நோக்கி நடக்கிறான். முகத்தில் ஒருவித ஏக்கம். வீதியையும் வருவோர் போவோரையும் இவன் பார்க்கிறான். ஆனால் பார்க்காதது போல போகிறார்;கள் சிலர். பார்த்தும் பார்க்காதது போல வேறு சிலர். பார்க்காதது போலப் பாவனை பண்ணித் தாண்டிச் சென்றதும் அவன் பார்க்காத வேளை அளந்து பார்த்து நடக்கிறார்கள். பார்த்துவிட்டு முகத்தை மறுபக்கம் திருப்புவோர், முகம் சுளிப்போர் என வேறு சிலர். ஆனால் யாரும் அவனுடன் பேச வரவில்லை. ஏன் என்று கேட்கவும் இல்லை.
ஒரு பையன் பார்த்துவிட்டு ரிவேஸ் கியரில் ஓடி மறைகிறான்……
கதையின் படி அவன் ஒரு முன்னாள் போராளி. ஆனால் அது காட்சிப்படுத்தப்படவில்லை. இடக்கு முடக்கான கேள்வி ஒன்று மூலம் பிற்பாடு வெளிப்படுகிறது. ‘தலைவர் செத்தாப் பிறகு நீ எப்படித் திரும்பி வந்தாய்.’
அந்தக் கேள்விக்குள் எத்தனை கேட்காத அர்த்தங்கள் தொங்கிக் கிடக்கின்றன.
‘கடைசிச் சண்டையிலை நிக்காமல் நழுவி விட்டாயா?,’ ‘காட்டிக் கொடுத்துத் தப்பினாயா?,’, ‘உன்னை எப்படி வெளியிலை விட்டவங்கள்?’ தாங்கள் இழந்தவற்றிற்கு ஈடாக ஏதாவது பரிகாரம் கிடைக்கும் என்று காத்திருந்தவர்களின் வேதனையில் பிறந்த எண்ணங்களாக அவை இருக்கலாம்.
நீண்ட அழிவுப் போருக்குப் பின்னர் போரையும் அதற்கான காரணத்தையும் பலரும் மறந்து போகின்ற இன்றைய காலகட்டத்தில் முன்னை நாள் இயக்கப் போராளிகளின் நிலையை மிக யதார்த்தமாகப் பார்க்கும் சினிமா இது.
முன்பு இவனைக் கண்டால் பயபக்தியோடு நின்றவர்கள் இப்பொழுது இளக்காரமாகப் பார்க்கிறார்கள். இவன் முகம் கண்டு வஞ்சினம் கொள்பவர்கள் வேறு சிலர்.
பின் ஒரு நாளில் இவன் வீடு திரும்பும்போது வாசலில் ஒரே களோபரம். ஒரு கிழவன் திட்டிக் கொண்டிருக்கிறான். முகத்தில் வன்மம் பீறிட மண் அள்ளிப் போட்டுத் திட்டுகிறான்.
‘நீ செத்துப் போவாய். உன் பிணத்தின் மீது மண் அள்ளிப் போடுகிறேன்’ என்பதான அர்த்தம் சொல்லாமல் சொல்லப்படுகிறது. ‘எங்கள் பிள்ளைகளை இயக்கத்திற்கு கொண்டுபோய் பலி கொடுத்தவன் நீ. நாங்கள் கதறி அழ, நீ உயிரோடை குசாலாத் திரியிறாயா’ என்ற கேள்வி அந்த மண் அள்ளிப் போட்டுத் திட்டுவதில் தொக்கி நிற்கிறது.
தங்களது அவசரத் தேவைகளுக்கு உதவக் கூடிய குiஒநன னநிழளவை ஆகக் கருதும் தங்க நகைகளை இராணுவத்திடமிருந்தும் கள்வர்களிடமிருந்தும் காப்பாற்ற மண்ணில் புதைத்து வைத்திருக்கும் பழக்கம் தமிழ் மக்களிடம் முன்பு இருந்தது. தனது மகனின் தொழில் முயற்சிக்கு உதவத் தாய் அவ்வாறு தங்க நகையை எடுத்துக் கொடுக்கும் ஒரு காட்சி வருகிறது.
ஆம் இது போன்ற எமது காலாசாரத்தின் சில பண்புகளை சிங்கள மக்களுக்கும் உலகத்திற்கும் எடுத்துச் சொல்வதற்கு அசோக ஹந்தகம எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது.
ஒரு காலையில் இவன் படுக்கையில் கிடக்கிறான். நித்திரை வி;ட்டெழுந்து வாசலுக்குப் போன இவனது மனைவி குய்யோ முய்யோ எனக் கதறியபடி ஓடி வருகிறாள்.
இவனது வீட்டு வாசலில் பாடையில் கிடத்தியபடி ஒரு பிணம். வாயைக் கட்டி, வெள்ளைத் துணியால் மூடியபடி கிடக்கிறது. பரபரத்து ஓடுகிறான் இவன். இயற்கையாக இறந்த ஒருவனை இவனது வீட்டு வாசலில் கிடத்தி வஞ்சம் தீர்த்திருக்கிறது சமூகம்.
இயக்கம் செய்த பிழைகளுக்கு இவன் ஒருவன் மீது மட்டும் குற்றம் காண்பது நியாயமா? இயக்கத்தில் இருந்தவர்கள் அதன் சட்டதிட்டங்களுக்கு அடிபணியத்தானே வேண்டும். அந்நேரத்தில் சமூகமும் கூட வாய் மூடி மௌனமாகத்தானே இருந்தது. முதலில் கோவப்பட்டு ஏசும் இவன் பின் அமைதியாகி தானும் ஒருவனாகக் கைபிடித்து பாடையத் தூக்கி சுடலைக்குச் செல்ல உதவுகிறான்.
கட்டளைகளுக்கு அடங்க வேண்டியதுதான் இவர்களது நியதியா? வேறொரு இடத்தில் இவ்வாறு சுட்டிக் காட்டப்படுகிறது.
‘பிரபாவைக் கேள்வியா கேட்டனீங்கள்? எதிர்க் கேள்வி கேளாமல் நான் சொல்லுறதைச் செய்’
ஆம் காலம் மாறிவிட்டது. தங்கள் தலைவனது சொல்லுக்கு கீழ்ப்படிந்த அவர்கள், இன்று வயிற்றுப்பாட்டிற்காக யார் யாரோ சொல்வதற்கெல்லாம் தலை ஆட்டி அடி பணிய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
அப்படி சொன்னவர் வேறு யாருமல்ல. இவனது திடகாத்திரமான உடலையும், முரட்டுச் சுபாவத்தையும் கண்டவுடன் உடனடியாக தனது நகைக் கடையில் செக்கியூரிட்டியாக வேலை கொடுத்த கன்னாதிட்டி முதலாளிதான்.
பாத்திரங்கள் யாவும் வடபுலத்தைச் சார்ந்தவை. பல பாத்திரங்கள் மிகச் சிறியவை ஆயினும் மனதில் நிற்குமாறு செய்கிறார் இயக்குனர். இவனது தாய், இவனது ஊரிலுள்ள கடை முதலாளி. இவனைத் திட்ட வருபவன், அவளது தந்தை, யாழ் நகைக் கடை முதலாளி, அவர்களை இயக்கத்தில் மாட்டிவிட்டு தான் விலகி வெளிநாட்டில் சொகுசாக வாழ்பவன் எனப் பலர்.
பாத்திரங்களுக்கு ஏற்ப பொருத்தமான ஆட்களைத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களது நடிப்பும் மிக இயல்பாக இருக்கிறது. அவர்கள் பேசும் தமிழ் அந்த மண்ணுக்கு உரியதாக இருக்கிறது. ஆனால் பிரதான பாத்திரங்களான இவன், இரு இணைக் கதாநாயகிகளின் தமிழ் சற்று இடறுகிறது. அவற்றில் மண்ணின் மணத்தைக் காண முடியவில்லை. மலையகத் தமிழாகவே ஒலிக்கிறது. ஆனால் இந்தியத் திரைப்படங்களில் எமது தமிழ் கொச்சைப்படுத்துவதோடு ஒப்பிடுகையில் இது அக்கறைப்பட வேண்டிய விடயம் இல்லை.
பாத்திரங்கள் அம்மா, அப்பா, முதலாளி எனப் பாத்திரங்களாகவே இருக்கிறார்கள். எந்த ஒரு பாத்திரத்திற்கும் பெயர் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கதாநாயகனின் உடல் அமைப்பு ஆஜானூபவான தோற்றம், இறுகிய முகம் ஆகியன ஒரு முன்னாள் போராளிக்கு ஏற்றதாக இருக்கின்றன. காலில் ஊனம் உற்றவன் போன்ற சற்று நெளியும் நடை இயல்பாக இருக்கிறது, ஆனால் முகபாவங்கள் சரியாக வரவில்லை. கதாநாயகனாக நடிப்பவர் தர்ஷன் தர்மராஜ்.
கள்ளக் கடத்தல் வருகிறது. தமிழ் மக்களது இன்றைய யதார்த்ததைப் புரிந்து கொள்ள முடியாத சிங்கள மக்களின் நிலையை இந்தக் கள்ளக் கடத்தல் விவகாரம் புலப்படுத்துகிறது, தமிழர்களின் வாழ்வியலின்; பழைய பக்கங்களிலிருந்து இன்னமும் அவர்களில் பலர் மீளவில்லை. இன்றைய சூழலில் அங்கு எங்குமே இவ்வாறான கடத்தல்கள் நடப்பதாக நான் அறிந்ததில்லை. 80களின் முற்பகுதிகளுக்குப் பின்னர் இத்தகைய கள்ளக் கடத்தல்கள் அங்கு நடக்க வாய்ப்பேயில்லை. கடலில் இறங்குவதற்கே இராணுவத்திடம் அனுமதி வாங்க வேண்டிய நிலையில், அதுவும் இரவு பகலாக கடற்கரையெங்கும் இராணுவத்தினரால் பாதுகாக்கப்பட்ட நிலையில் இது சாத்தியமில்லை. ஒருவேளை சாத்தியமாக இருந்தால் கூட அதற்கான தேவை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
யாழ்ப்பாணச் சாதீயம் பற்றிய தவறான கருத்திலிருந்தும் மற்றச் சமூகத்தினர் மீளவில்லை. பல சிங்கள ஆங்கில அரசியல் விமர்சகர்கள் இன்றும் அங்குள்ள சாதீயம் பற்றி எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் சாதி எதிர்ப்புப் போராட்டங்கள், இயக்கம், விடுதலைப் போராட்டம் ஆகியவற்றின் எழுச்சியுடன் சாதீயம் அடங்கிவிட்டது. முற்றுமுழுதாக ஒழிந்துவிட்டதாகச் சொல்ல முடியாது. ஆயினும் அந்தளவு தீவிரமாக இப்பொழுது இல்லை.
திருமணம் போன்ற விடயங்களிலேயே கடுமையாகப் பார்க்கப்படுகிறது. அரசியலில் அறவே கிடையாது. மீனவ சமூகத்தைச் சார்ந்தவர் விடுதலை இயக்கத்தின் தலைவராகவும், முடிதிருத்தும்; சமூகத்தைச் சார்ந்தவர் இயக்கத்தின் மிக முக்கிய அரசியல் தலைமைப் பணியிலும் இருக்க முடிந்திருக்கிறது. கிறீஸ்தவ சமூகத்தைச் சார்ந்த எஸ்.ஜே.வி.செல்வநாயகம் மக்கள் மனம் கவர்ந்த தமிழ்த் தலைவராக இருந்திருக்கிறார். அவர் மறைந்து பல சகாப்தங்களான பின்னர் இன்றும் கூட எல்லாத் தமிழர்களாலும் மதிக்கப்படுகிறார்.
ஆனால் தெற்கு அரசியலில் இன்றும் பௌத்த சிங்கள பின்புலம் அற்ற ஒருவர் நாட்டின் உயர் பீடங்களில் ஏற முடியாத நிலைதான் உள்ளது. தலைவர்கள் மட்டுமின்றி அவர்களது பாரியார்கள் கூட பௌத்த சிங்கள முகமூடிகளை அணிந்தே சமூக நிகழ்வுகளில் இறங்க வேண்டியுள்ளதைக் காண்கிறோம். எம்மிடையே சாதி வேறுபாடின்றி உயர்ந்து வர முடிவதானது, சமூகத்தின் திறந்த மனப்பான்மையைக் காட்டுகிறது என்று சொல்ல முடியாது. யதார்தங்களுக்கு வளைந்து வாழ வேண்டிய சிறுபான்மை இனத்தின் நிலை எனக் கொள்ளலாம்.
இருந்தபோதும் இந்த விடயத்தில் அசோக ஹந்தகமவின் பார்வை மிகச் சரியானதாகவே இருக்கிறது. அவளின் திருமணத்தை சாதிவேறுபாட்டைக் காட்டி தந்தை கடுமையாக எதிர்ப்பது மட்டுமே சாதீயம் பற்றிய அவரது யதார்த்தமான விமர்சனமாக இருக்கிறது. அவரது ஏனைய திரைப்படங்களிலும் தமிழர் பிரச்சனையின் நியாயங்களை சொல்வதற்கு அசோகா கந்தகம தயங்கியதில்லை. அதேபோல பிரசன்ன விதானகே மற்றொருவருவராவார்.,
முன்னாள் போரளிகளின் அவல நிலை, சமூகத்தால் ஒதுக்கப்படுதல், புனர்வாழ்வு செப்பமாக அமையாமை போன்ற பல விடயங்களையும் இத் திரைப்படம் தொடாதது போலத் தொட்டுச் செல்கிறது. அதேபோல பூதாகரமான வேலையில்லாப் பிரச்சனை, ஊழல்கள் ஆகியவையும் சொல்லப்படுகின்றன.
என்னுடன் இத் திரைப்படம் பற்றிப் பேசிய ஒருவர் ‘எமது கலாசாரத்தைப் புரிந்து எடுக்கப்படவில்லை’ என்றார். கணவனும் குழந்தைகளும் இருக்க வேறொருவனின் பின் திரியும் பெண் பாத்திரமானது மேட்டுத்தன மனபாவம் கொண்ட தமிழர்களுக்கு உவப்பாக இருக்கப் போவதில்லை. எமது சமூகத்தில் கண்ணகி காலம் முதல் போற்றப்படும் கற்பு பற்றிய பார்வையின் தொடர்ச்சியாகவே இந்த மனோபாவத்தைக் கொள்ளலாம். உண்மையில் தமது உயிர் வாழ்விற்காகவும், பொருளாதாரச் சுமைகளிலிருந்து மீள்வதற்காகவும் தமது உடலைத் தாரைவார்க்க வேண்டிய நிலையில் பலர் இருந்திருப்பதை, இன்னமும் இருப்பதை இணைய ஊடக மற்றும் பத்திரிகைச் செய்திகள் மூலம் அறிய முடிகிறது.
அசோக ஹந்தகம வின் அந்தப் பெண் பாத்திரம் ஒரு முன்னாள் இயக்கப் போராளி. மிக ஏழ்மையான நிலையில் வாழ்கிறது. குடிசை வீடு, மூன்று குழந்தைகள், வேலையிழந்த கணவன். தனது குழந்தைகளுக்கு உணவு கொடுக்கவும் பால்மா வாங்கவும் அவள் சில சமரசங்களுக்கு உட்பட வேண்டியதாயிற்று. ஆனால் அவள் கடுமையாக ஏமாற்றப்படுகிறாள் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறாள் என்பதே யதார்த்தம். நிரஞ்சனி சண்முகராஜாவின நடிப்பு இயல்பாகவும், பாத்திரத்திற்கு ஏற்ப எமது கலசாரத்திற்கு ஏற்றளவு கவர்ச்சியாகவும் இருந்தது. தங்கேஸ்வரி, தைரியநாதன், ராஜ கணேசன், மால்கம் மசோடோ, போனிபாஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
காட்சிகள் பெரும்பாலும் யாழ் குடாநாட்டில் எடுக்கப்பட்டுள்ளன. யாழ் மார்கற், கே.கே.எஸ் வீதி, தாமோதர விலாஸ், நல்லூர் கோயில், இடிந்த கோட்டையின் பகுதிகள், வல்லைவெளி, தீவுப் பகுதிகள் போன்றவற்றை என்னால் இனங்காண முடிந்தது. பின்னணிக் காட்சிகள் மிக அழகாகவும் இயற்கையாகவும் இருப்பதற்கு மேலாக அந்த மண்ணின் இன்றைய நிலையைக் காட்டுகின்றன.
போரினால் முற்றிலும் சிதிலமடைந்த பூமியின் தோற்றம், அங்கு வாழும் மக்களின் வீடுகள் கடைகள் யாவும் வண்ணம் பூசப்படாமலும், சிதிலங்களுடனும் காணப்படுகின்றன. நவீன மோஸ்தாருகளுக்குள் புக முடியாதிருப்பதானது அங்குள்ள பொருளாதார மந்தத்தைக் காட்டுகிறது. ஏ 9 போன்ற வீதிகள் செப்பமாக இருந்தாலும் மக்கள் மண்ணும் புழுதியும் பறக்கும் வீதியில் வெறும்காலுடன் அலைவதைக் காண்கிறோம்.
சன்னா தேசப்ரியாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகாக விரிகிகன்றன. ஓரிடத்தில் மற்றொருவன் இவனுக்கு ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறான். அருகிகிலிருந்த நிழல் மரவெள்ளி மரத்தின் கிளைகள் ஆடுகின்றன. அம் மரத்தில் சாத்தியிருந்த தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு அவன் விலகிச் செல்கிறான் என்பது குறியீடாகப் புலப்படுகிறது.
இவனது பழைய காதலியாகவும், புலிகள் பிடித்துச் செல்வதிலிருந்து தப்புவதற்காக, வேறு ஒருவனுக்கு மனைவியாகி முதல் இரவே ஷெல் வீச்சு அதிர்வில் அந்தக் கிழட்டுக் கணவனை பறிகொடுத்து, பிள்ளை ஒன்றையும் பெற்றெடுத்த பாத்திரத்தில் சுபாஷினி பாலசுப்பிரமணியம் இயல்பாக நடித்திருக்கிறார்.
பூட்டியிருந்த வீட்டிற்குள் இருந்து இவன் வெளிவருவதையும், அவனுடன் இணைந்து தனது மகள் குழந்தையுடன் வீட்டை விட்டே வெளியேறுவதையும் மௌன சாட்சியாக அவளது தாய் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அதேபோல இவன் அவளுடனும் அவளது குழந்தையுடனும் தங்கள் வீட்டுக்கு வருவதை அவனது தாயும் மறுப்பு ஏதும் சொல்லாது ஏற்றுக் கொள்வதைக் காண்கிறோம்.
நாட்டு நடப்புகளுக்கு ஏற்ப தமது பண்பாட்டுகளில் ஏற்படும் நடைமுறை மாற்றங்களை எமது சமூகமானது எவ்வாறு சலசலப்பின்றி ஏற்றுக் கொள்கிறது என்பதை இவை காட்டுகின்றன. ஒரு வசனம் கூட இல்லாது அவ்வாறு வெளிப்படுத்துவதில் இயக்குனர் வெற்றி பெறுகிறார். நவீன திரைப்படங்கள் போலவே இத் திரைப்படத்திலும் வசனங்கள் மிகக் குறைவாகவே இருக்கிறது.
எடிட்டிங் சற்று இறுக்கமாகச் செய்யப்பட்டிருக்கலாம். ஒரு காட்சியில் இருந்து மற்றக் காட்சிக்கு தாவும் இடங்கள் சறுக்குகின்றன. பல காட்சிகளில் பாத்திரங்கள் எதுவும் பேசாமல் அசைவு இயக்கமின்றி நட்டதடி போல நிற்பது உறுத்தலாக இருக்கிறது. சூழலில் வெறுமையை உணர்த்த இதனைப் பயன்படுத்தி இருக்கக் கூடும். இருந்தாலும் அது தனது எல்லையை மீறிவிட்டதாகவே நான் உணர்ந்தேன். நல்ல பின்னணி இசையால் பார்வையாளனின் சோர்வை நீக்கி உணர்வுகளைத் தீண்டியிருக்கலாம். ஆனால் பின்னணி இசை அவ்வாறு ஒத்துழைக்கவில்லை. இசை கபிலா பூகாலராச்சி.
“இனி அவன்” அழகான தலைப்பு. எழுத்துக்களை இணைத்து வாசித்தால் இனியவன். ஆனால் அவனால் இனியவனாக வாழ முடியவில்லை. துப்பாக்கியோடு வாழ்ந்தவன் வன்முறைக் கலாசாரத்தை விட்டு ஒதுங்க முயல்கிறான். முதலாளி தற்பாதுகாப்பிற்காகத் தந்த கைத் துப்பாக்கியையும் வாங்க மறுக்கிறான். ஆனால் வயிற்றுப்பாட்டிற்காக அலையும் அவனை சட்டவிரோத கடத்தலில் மாட்டிவிடுகிறார் முதலாளி. அசோகா ஹந்தகமாவின் தனித்துவமான பாணியை இத்திரைப்படத்திலும் தரிசிக்க முடிகின்றது. தனித் தட்டுவென் பியபண்ண, அக்சரயா, விது போன்றவை இவரது பெயர் பெற்ற ஏனைய சினிமாக்களாகும்.
இத் திரைப்படமானது ஐரோப்பா திரைப்பட விழா, கேன்ஸ் திரைப்பட விழா, டொரொன்டோ திரைப்பட விழா, லண்டன் திரைப்பட விழா போன்றவற்றிலும் காட்டப்பட்டு மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றுக் கொண்டதாக அறிகிறேன்.
ஆடலும் பாடலும் கேளிக்கைகளும் கொண்ட மசாலா இந்தியத் திரைப்படங்களைப் பார்த்துக் பழகிய எமது தமிழ் ரசிகர்களுக்கு இது வித்தியாசமான திரைப்படமாக இருக்கும். ஏனெனில் நல்ல தரமான உலகத் திரைப்படங்கள் பார்ப்பது போன்ற உணர்வைக் கொடுக்கிறது. அவ்வாறான பரிச்சயத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் இது எமது பிரச்சனைகளைப் பேசுகிறது. எமது நிஜ வாழ்வைக் காட்டுகிறது. அத்துடன் எமது மொழியிலேயே பேசுகிறது. எனவே ஆதரவளிக்க வேண்டியது எமது கடமை.
“தன் இனத்திற்குள்ளிருந்தே அவனுக்கு ஆப்பு வைக்க முயலும் பாலியல் வக்கிரம் பிடித்த கடத்தல் முதலாளியும், புகலிடம் தேடிச் சென்றவர்களும் அவனது மாற்றத்திற்கு வழிவிடுவார்களா, அவனை ஒழித்து அழித்துவிடுவார்களா, மீண்டும் வன்முறையில் இறங்கச் செய்வார்களா? அல்லது போரில் தோற்ற அவன் தனது வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெறுவானா?’
கேள்விகள் மனதை அழுத்த அரங்கைவிட்டு வெளியேறுகிறேன்.