“சின்னாங்கு இல்லேலா!
அல்லாம்மா வேணாம்லா!
பின் நவீனத்துவம்னா என்னாலா!
சாந்த லெட்சுமிக்குத் தத்தாவ்லா!”
”இந்த தாமானுக்குப் போக எப்படியும் முக்கால் மணி நேரமாவது ஆகும். 120 ரிங்கிட்டுக்குக் குறையாது.” டேக்சி ஓட்டுநர் சொல்ல ,முப்பந்தைந்து ஆண்டுகட்கு முன்பு படித்த மலாய்மொழியில் உரையாடுவது ஸ்வேதாவுக்கு இன்பமாகத்தான் இருந்தது. ஆனால் சுட்டெரிக்கும் வெயிலில் காருக்குள் குளிர்சாதன வசதி இல்லாததால் சரீரமெங்கும் வியர்த்துக்கொட்டியது. கழுத்தைச்சுற்றிப் போட்டிருந்த துப்பட்டாவைக் கழற்றி கையில் பிடித்து விசிறிப் பார்த்தாள்.இட்லிப்பானையாய் வெந்துகொண்டிருந்த உஷ்ணத்துக்கு முன்னே அது பெப்பே காட்டியது. கார்க்கண்ணாடிக்கதவை திறந்தாலாவது சற்றே வெப்பம் தணியாதா, என்று திறந்தபோது வெயிலின் உக்கிரத்தில் சரேலென்று உள்ளே நுழைந்த காற்று கூட அனலாய் தகித்தது. என்ன வந்தாலும் சந்திக்காமல் போவதில்லை, எனும் வைராக்கியத்தோடு வந்திருந்ததால், இந்த முக்கால் மணிநேர தகிப்பை சகித்தே ஆகவேண்டும். ஆயாசமாக இருந்தது. எந்த நேரத்தில் இந்த பணியை ஏற்றுக்கொண்டோம் , என்று அப்படி பரிதவிப்பாக இருந்தது.இதுவரை சந்தித்த அனுபவங்களை மீண்டுமொரு முறை நினைத்துப் பார்க்கவும் மனசு கசந்தது.
ஸ்வேதா பெண்கள் பத்திரிகையில் குறிப்பிட்ட செய்தித்துறையைச் சார்ந்தவள் .அதனாலேயே வாழ்க்கையில் பலரையும் சந்தித்த அனுபவம் அவளுக்கு உண்டு. அந்த அனுபவங்களையெல்லாம் பன்முகப்பரிமாணத்தில் அசராமல் எல்லா இசங்களையும், உயிர்த்துவம் , வாழ்வியல் கூறு, எனப்பல நீட்சிகளில், நேர்காணல்களாகவும், சமயத்தில் கவிதைகள், அவ்வப்போது புனைப்பெயரில் பெண்கள் கட்டுரைகள், ஏன் அரசியல் பார்வையில் கூட சில கட்டுரைகள்கூட எழுதியிருக்கிறாள். இதனால் கண்டடைந்த வாசகர்களின் நிறைவை மறுப்பதற்கில்லை.ஆனால் அண்மைய காலமாக,பெண்களின் எழுத்து பற்றி பரவலாக வந்த சில கருத்துக்களை ஜீரணிக்கவே முடியவில்லை. அதற்குக்காரணம் சில அரைவேக்காடுகளின் தத்துப்பித்து விமர்சனமும், சுய அட்சதையைத் தலையில் போட்டுக்கொண்டு சில கசடுகள் செய்த பம்மாத்து விமர்சனமும், நேற்றுப்பெய்த மழையில் ஒண்டவந்த ஈசல்கள் கெட்ட கேட்டுக்கு, இவர்கள் வரவுக்குப்பின் தான் உலகமே இந்த மண்ணை திரும்பிப்பார்க்கிறது, என அஜால் குஜால் பேட்டி கொடுப்பதுமாய் , வந்த சில சேதிகளால் சுரணையுள்ள சிலர் கொதித்துப்போயினர். ஸ்வேதா பணிபுரியும் பத்திரிகை ஆசிரியரும் பெண்ணே என்பதால் அவருக்கும் சிலிர்த்துக்கொண்டு வந்தது.. புதுக்கவிதை எழுச்சியைக் கொடுத்தவரும், பின் நவீனத்துவ நாடகங்களால் உலக அரங்கில் பேசப்படவேண்டிய ,சாதனையாளருமான இலக்கியவாதி ,இருக்குமிடம் தெரியாமல் புத்தனாய் அமைதி காக்க ,இந்த அரைகுறைகளின் அலட்டலில் ஸ்வேதாவுக்கும் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
இன்னொரு முக்காத்துண்டு அலட்டல், பெண்எழுத்து என்றாலே முட்டை சம்பாலும் கோழிக்கறியும் தான், அதற்கும் அப்பால் இவர்களால் என்ன சிந்திக்கமுடியும்? என்று தன் பங்குக்கு அம்மண ஜோக் அடித்தது. தெளிவுறவே அறிந்திருந்தால் தானே தெளிவு தர மொழிந்திடமுடியும்? ஆனால் ஸ்வேதாவின் பத்திரிகை ஆசிரியர் , இந்த அரைவேக்காடுகளுக்கு பதிலடி கொடுக்கவாவது ஒரு கட்டுரையின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தியபோது, கேட்டுக்கொண்டிருந்த அத்தனை பேருக்குமே அப்படியே மிளகாயை அரைத்துப் பூசினாற்போல் எரிந்துகொண்டு வந்தது. மூத்த பெண்ணிலக்கியவாதிகளின் நேர்காணலுக்கு ஸ்வேதாதான் கட்டுரையாளர் என்று முடிவானபோது, ஸ்வேதா ஒரு அட்சரம் மறுப்பு சொல்லவில்லை. ஆனால் அது எவ்வளவு பெரிய குறுக்குவெட்டு என்பதை அவள் அப்போது அறியவில்லை.
இலக்கியம் படைத்தல் பற்றி ஸ்வேதாவுக்கென ஒரு கோட்பாடு இருந்தது. புனைவிலக்கியம் படைத்தல் ஒன்றும் வியாழவட்டம் அல்ல. அது ஆத்மாவின் ராகம். வன்தொடர் குற்றியலுகரத்துக்கும் மென்தொடர் குற்றியலுகரத்துக்குமான வேறுபாடுகூடத் தெரியாமல், முப்பத்தெட்டு இலக்கணப்பிழைகளோடு கதைகள் எழுதிவிட்டு, நாங்கள் மண்வாசனை பொழியப்பொழிய எழுதுகிறோமாக்கும், ‘என்று ஜிஞ்சிண்ணாக்கடி வசனம் பேசுபவர்களைக்கூட மன்னித்துவிடலாம். ஆனால் லா, போட்டுப்பேசுவது மட்டுமே சிங்கப்பூர், மலேசிய இலக்கியம் என்று, விவஸ்தையே இல்லாமல்,கதையில் வரும் சொல் பிரபஞ்சத்துள் தேவையற்ற இடங்களிலெல்லாம்,” இல்லலா, என்னாலா, வா லா, போ லா, என்றெழுதி, மொழிவெளியையே அசிங்கப்படுத்தும் அனாமத்துக்களை மட்டும் அவளால் மன்னிக்கவே முடியவில்லை.இந்த கோரத்தைப்படித்துவிட்டு தமிழ்நாட்டுக்கு செல்லும்போது, வாங்க லா , ? என்று பேசவந்தவர்களைப் பார்த்து நேசமாக ஒரு வார்த்தை பேசத்தோன்றவில்லை.பாமரர்களின் பேச்சுவழக்கில் லா, உண்டுதான் , ஆனால் கற்றவர்கள் உரையாடும் சபையில் எங்குமே இந்த பம்மாத்து வசனம் கேட்டதில்லை. என்றாலும் கதையாடலின் கட்டுமானம் பற்றிய பிரக்ஞை போலும் தெரியாத மொழிச்சிதைவைக் கொடுக்கும்,கசடுகளின் சுய அட்சதையோ எழுதவே கூசுகிறது. உலகமே சிங்கப்பூரை திரும்பிப்பார்க்க வந்தது, இந்த அரைவேக்காடின் எழுத்து படித்தபிறகு தானாம். எப்படி மன்னிப்பது ? 90களுக்குப்பிறகு சிங்கப்பூருக்கு பிழைப்பு நாடிவந்த இந்த கில்மாக்களுக்கு இப்படி எழுதுவதற்கு வெட்கமில்லையா?
சிங்கப்பூரில் உலக அரங்கில் பேசவேண்டிய அற்புதமான நாடகாசிரியன், பின் நவீனத்தை சிங்கப்பூரில் அறிமுகப்படுத்திய அறிவுஜீவி இருக்குமிடம் தெரியாது அமைதி காக்க, கூசாது இப்படி சுயமாய் இணைய தளங்களில் சுய புராணம் பாட என்ன தடித்தனம் இருக்கணும்? யாகம் அல்லவா இலக்கியம் படைத்தல் என்பது.சமகால இலக்கியம் பற்றிய எந்த துணுக்குமே தெரியாவிட்டாலும் ,உள்ளீடின் உருவகமாவது வாசகனைச் சென்றடைய வேண்டாமா?
வாழ்க்கையின் நிஜங்களுக்கு எந்த வகையிலும் மாற்றுக்குறையாமல் , ஒரு துறவியின் ஸ்பரிசம்போல், பட்டும்படாமல் அமானுஷ்யமாய், வாசகனின் உள்ளுறைந்த உணர்வில் , குறைந்த பட்சம் ஈஷிக்கொள்ளவாவது முடியுமென்றால் ஒரு படைப்பாளி பின்னர் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை. ஆழ்மன நுணுக்கங்களின் பிரத்யட்சங்களை சுவாரஸ்யமாகக் கூற அனுபவம் எனும் விளை நிலத்தின் துல்லியம் மட்டுமே போதாது, என்பதில் ஸ்வேதாவுக்கு அழுத்தமான நம்பிக்கை இருந்தது. களப்பணி செய்தும், நேரில் சென்று சந்தித்தும் , போலியின் நிழல்ரேகை இருந்தால் கூட, அதை செம்மைப்படுத்தாமல் அவள் எழுத்து வந்ததில்லை. ஆனால் முழுமூச்சாய் இக்கட்டுரையில் இறங்கியபிறகுதான் மொட்டைப் பாலைவனத்தில் தவிக்கும் ஒட்டகமாய் தகவலுக்கு ஆலாய்ப்பறக்க வேண்டியிருந்தது. ஸ்வேதா இதை எதிர்பார்க்கவேயில்லை. குறிப்பிட்ட ஒருசிலரை மட்டுமே தொலைபேசியில் பிடிக்க முடிந்தது.மகிழ்ச்சியோடு பேசிய சிலர்,ஆய்ந்து ஓய்ந்து ” இலக்கியமா? ஹ்ம்ம், இன்னுமா எம்பேரை நினைவு வச்சுக்கிட்டு கூப்பிடறே ? என்று தூங்கி எழுந்தாற்போல் அலுத்துக்கொண்டவரும், “ கதையா? அதையெல்லாம் நான் விட்டு ரொம்ப நாளாச்சு, நம்ப கதையே பெருங்கதையாயிருக்கு, இதிலே என்னா பேசச்சொல்றே ? “ என்று சலித்துக்கொண்டவர்களும், ஆமாம், நான்தான் , இப்ப எதுக்கு அதெல்லாம் ?என்று பட்டென்று போனை வைத்தவர்களுமாக , ஸ்வேதாவுக்கு இவர்களை பேட்டி காண்பதே பெரிய சவாலாக இருந்தது.
ஒரு கட்டத்தில் பேசாமல் எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுவிட்டு, பழைய செய்தியாசிரியராகவே வேலையைத் தொடரலாமா என்று கூடத்தோன்றிவிட்டது. ஆனால் அசரீரி கூட ததாஸ்து சொல்லவில்லை. கர்மவினை யாரைவிட்டது? குபுக்கென்று உடம்பு குலுக்கிப் போட்டது. ஏதோ பெரும்பாறை மேல் ஏறி இறங்கினாற்போல் வண்டி சட்டென்று நின்றுவிட்டது. ஸ்வேதாவுக்குக் கவலையாக இருந்தது.சாலையெல்லாம் குண்டும் குழியுமாக, இடுங்கி நசுங்கிக் கிடக்கும் ஒரு குற்றுயிராய் தெரிந்த தாமான் வீடுகளும், படுதா போட்ட படிக்கட்டுக்கடைகளுமாக,ஏனோ இந்த ஏரியா மட்டும், அந்த வட்டாரத்துக்கே திருஷ்டிப்பொட்டாய் தெரிந்தது. ”கையில் இருந்த முகவரியைப்பார்த்தால் இது தாமானும் அல்ல. கம்போங்கும் அல்ல “ என்றான் டேக்சியோட்டி. அப்படியானால் யாரிடம் தான் கேட்பது?
டேக்ஸி சுற்றிச் சுற்றி வந்தது.
அட ! யாரோ ஒரு வயதான பெண்மணி , பார்த்தால் இந்திய மாதுபோல் –கைலியும் பாஜுவும் அணிந்து, வீட்டுக்கு முன்னால் போட்டிருந்த நீண்ட பெஞ்சில் ஏதோ வைத்து விற்றுக்கொண்டிருந்தார். துணிந்து கேட்டுவிட ஸ்வேதா அருகே செல்ல, முகவரியை வாங்கிப்பார்த்த அந்த பெண்மணி ஆச்சரியமாகப் பார்த்தார்.
”இந்த முகவரியில உங்களுக்கு யாரைப் பாக்கணும்?”
”சாந்தலெட்சுமி, கதையெல்லாம் கூட எழுதுவாங்களே”
”என்ன சொல்றீங்க ? கொஞ்சம் சத்தமாச்சொல்றீங்களா?” ,மீண்டும் சத்தமாய் முழங்கியபோதும் சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் விழிக்க, தொண்டையின் முழுவீச்சையும் பிரயோகித்து, எம்பியகுரலில் ஸ்வேதா உரத்துக் கத்தினாள்.
”அட, என்றவாறே ட்ர்ஷ்ஷ் “ என்று வாய் திறந்து சிரித்தபோது இரண்டு பக்க பற்கள் இல்லை.தலைமுடி சுத்தமாய் நரைத்திருந்தது.
” நான் தான் சாந்தலெட்சுமி! என்ன விஷயம்! அட! ? “
கலர் கைலியும், மேலே இடுப்புவரை நீண்ட அரைக்கை பாஜுவும் அணிந்து தாட்டியாய், கனத்து , யாரோ செங்கோயான் பொம்பள , மாதிரி நின்ற இவரா சாந்தாலெட்சுமி ? நம்பவே முடியவில்லை,.35 ஆண்டுகட்கு முன்பு பூங்கொத்தைப்பிடித்திக்கொண்டு, பெரிய பெரிய பூக்களிட்ட ஒரு அழகான புடவையில் மலர்ந்து சிரித்த தோற்றத்தில் சாந்தலெட்சுமி அனுப்பிய புகைப்படம் இன்றும் ஸ்வேதாவின் ஆல்பத்தில் உண்டு. சாந்த லெட்சுமி மட்டுமல்ல. அன்று மும்ம்முரமாய் எழுதிக்கொண்டிருந்த கிம்மாஸ் வசந்தி,பினாங்கு மரகதம், தாப்பா பூங்காவனம்,சிரம்பான் யவனா, என்ற புனைப்பெயரில் எழுதும் மங்கம்மா, என 20க்கும் மேற்பட்ட பெண்கள் ஸ்வேதாவுக்கு பேனாத்தோழிகளாக தொடர்பில் இருந்தார்கள். பின் திருமணமாகி அவரவர் வாழ்க்கை, குழந்தைகள், குடும்பம் , என ஓடிக்கொண்டிருக்க கடிதத்தொடர்பு நீடிக்கவில்லை. ஆனால் அவர்கள் அத்தனைபேரிலும் சாந்தலெட்சுமி போன்ற சிலரே தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தனர். சாந்தலெட்சுமியின் எழுத்து பற்றி,பேசவேண்டுமென்றால் இலக்கியத்தின் மூலை முடுக்கில் கூட வைக்கத் தகுதியில்லை, என்று பலராலும் விமர்சிக்கப்பட்டவர்.அப்படியும் சாந்தலெட்சுமி எழுதுவதை நிறுத்தவில்லை.என் கடன் எழுதுவதே என்பது போல் அவர் கதைகள் ஏதாவது ஒரு பத்திரிகையில் பிரசுரமாகிக்கொண்டுதான் இருந்தன.
“நீ , நீங்க?”
”ஸ்வேதா!“
”அட, யாரு? யாரு? ஸ்வேதா ஓமணக்குட்டனா?? , என்னுடைய பேனாத்தோழி ஸ்வேதாவா!,? அப்படியே பாய்ந்துவந்து கட்டிக்கொண்ட சாந்த லெட்சுமியை நிதானத்துக்குக் கொண்டுவர சில நிமிஷங்கள் பிடித்தது.
”ரெட்டைச்சடைபோட்டு, கருப்புகலர் காலர் வைத்த பனியனில் நீ அனுப்பின படம் இன்னும் கூட எங்கிட்டேஇருக்கு தெரியுமா, ஆமாம், என்ன விஷயமா என்னைப் பாக்க வந்திருக்கே“ விஷயத்தைக் கூறியதும் நாணிக்கண் புதைக்கவில்லையே தவிர அப்படி ஒரு வெட்கம். முகத்தில் பளிச்சிட்ட பிரகாசத்தை மறைக்கத்தெரியவில்லை சாந்த லெட்சுமிக்கு.
”பேட்டியா ?என்னையா ? இதுவரை யாருமே என்னை பேட்டி கண்டதேயில்லையே, நான், என்ன பேசப்போறேன் ?பரபரப்பில் குரல் நடுங்கியதுமொதல்லே கோப்பி கலக்கறேன். ஒரு வா குடிச்சுக்கிட்டே பேசலாமே? வரக்கோப்பியை தனக்கு எடுத்துக்கொண்டு, பால் கலந்த காப்பியையும் , மேஜையில் விற்பனைக்கு வைத்திருந்த பலகாரங்களில் சிலதையும் ஒரு தட்டில் வைத்து நீட்டியபோது கைகளில் கறுப்பாய் தழும்பு கிடந்தது. அதற்குள் காதில் பொருத்த வேண்டிய கருவியை சாந்த லெட்சுமியின் மகள் வந்து காதில் மாட்டிவிட்டாள். பிறகு கத்திப்பேச வேண்டியிருக்கலை.
”என்னா பாக்கறே, ஒடம்பு ரொம்ப வெயிட் போட்டுடுச்சி,.டைபட்டிக் வேற, சதா மனஉளைச்சல் வேற, அதனால்தான் சாப்பாட்டுல கொஞ்சம் கட்டுப்பாடு, ஒரு வரக்கோப்பி நாலு தாவா பிஸ்கட் போதும், முக்கா நாள ஓட்டிடுவேன். என்னா சொல்லச் சொல்றே? கல்யாணம் ஆவும்போதே 34 வயசாயிடுச்சி, ! ஆர்மியில இருக்கற அவர் என்னுடைய வாசகனா கடிதம் போடும்போது சந்தோஷமாத்தான் இருந்திச்சு. பிறகுதான் எங்களுக்குள்ளே காதல் கனிஞ்சது.கல்யாணமாகி மூத்த பையன் பொறக்கற வரைக்கும் பெரிசா பிரச்சினையொண்ணும் இல்லே.அடுத்தடுத்து மூணு பிள்ளைகள் பொறந்தப்புறம் அவரோட குடிப்பழக்கம் கொஞ்சம் அதிகமாயிடிச்சு. எப்படியும் அவரால குடிய நிறுத்த முடியல, எல்லாம் பொருளாதாரப்பிரச்சினைதான், வேறென்ன? ஆர்மியிலெருந்து வெளியானப்புறம் எங்கேயுமே சரியான வேலை கிடைக்கலை, ஒரு இடத்தில புல்லு வெட்டற வேலைதான் கிடைச்சது, அதுவும் நிலக்கலை. அந்த கோவத்திலேயே சதா அடி, சண்ட, ஒரு கட்டத்தில மப்பு தலைக்கேறி, கீழே கிடந்த அல்லூர் சுத்தப்படுத்தற இரும்புக்கழியாலயே போட்டு சாத்திட்டாரு,. மூணு நாளைக்கப்புறம்தான் எனக்கு காது கேக்காமப்போனதே தெரிஞ்சுது.டாக்டர் கிட்டெயெல்லாம் போவலை, விஷயம் தெரிஞ்சதும் என்கையைப் பிடிச்சுக்கிட்டு அப்படி அழுதாரு. பிறகு கொஞ்சம் நாள் ஒழுங்காதான் இருந்தாரு. திரும்பவும் ஒரு நாள் குடிச்சுட்டு வந்தப்போ மாதவிடாய் நேரம் பாரு.அசந்து தூங்கிட்டேன். பசியோட வந்தவருக்கு கண்ணு மண்ணு தெரியல,! அவருக்கு குளிக்க வெந்நீர் போட்டிருந்த அடுப்பிலிருந்து ,அப்படியே எரியற கொள்ளிக்கட்டையாலே சூடு போட்டுட்டாரு , போயேன்,! குப்புறப்படுத்துக் கிடந்ததாலே பின்னாலயோட போச்சு. இல்லேன்னா மூஞ்சி, முகறையெல்லாம் வெந்து போயிருக்கும்.. அதுக்கப்புறம் தான், காசுப்பிரச்சினையினாலதானே சண்டை வருதுண்னு நான் வேலைக்குப்போகத்தொடங்கினேன். ஃபேக்டரியில” டாய்லெட் க்லீனர்” வேலைதான் கிடைச்சது.
அந்த கால எட்டாம் வகுப்பு தமிழ் படிச்ச எனக்கு வேறென்ன வேலை கிடைச்சுடும் ? ராத்திரி ஃபேக்டரியில கழிவறை துப்புரவுவேல, காலையில கொஞ்சம் தூங்கிட்டு , இப்படி ஏப்போஏப்போ, கறிபஃப், கோரேங் பீசாங் ,னு எனக்குத்தெரிஞ்ச பலகாரங்களையும் செஞ்சு விக்கறேன்.செலவுக்கு பிரச்சினையில்ல. ஏதோ வாழ்க்கை ஓடுது, ஆனா இதையெல்லாம் பேட்டியில எழுதிடாதே, இனி இலக்கியம் பற்றி கேள்வி கேளு, நான் சொல்றேன். ! விதிர்விதிர்த்துப் போயிருந்த ஸ்வேதாவால் பேசவே முடியவில்லை.அடிபட்டு, மொத்துப்பட்டு, ஃபேக்டரியில் இரவுவேலை செய்துகொண்டு, வீட்டுவேலை, அதோடு பலகாரம் செய்து விற்றல் என, குடும்பத்துக்காக ஓயாது உழைத்துக்கொண்டிருக்கும் இவளுக்கு கதை எழுத எப்படி நேரம் கிடைக்கிறது? ” ஓ, ! அதுவா, நான் எழுத்தாளினி பாரு, என்னா வேலை செஞ்சுக்கிட்டிருந்தாலும் , மனசெல்லாம் ஏதாவது கற்பனையிலேயே தான் மூழ்கிக்கிடக்கும், ஏன் கேட்கறே ? பகலெல்லாம் நேரமே இருக்காதுங்கறது உண்மைதான். இரவு வேலைக்குப் போகும்போது, விடியற்காலை மூணுமணிக்கே வேலை முடிஞ்சுடும் பாரு, அப்புறமா அங்கிருக்கற நீண்ட கல் பெஞ்சில குப்புறப்படுத்துக்கிட்டு , கொண்டுபோற நோட்டுப்புத்தகத்திலே எழுதுவேன். இடையிலே யாராவது டாய்லெட்டுக்குப்போறவங்க பாத்தாக்கூட சிரிச்சுக்கிட்டே போயிடுவாங்க, ! பொழுதுவிடியற வரைக்கும் இப்படியே ஓய்வு கிடைக்கற நேரமெல்லாம் எழுதிக்கிட்டே தான் இருப்பேன் ? போனமாதம்கூட முத்தாரம் பத்திரிகையில என் சிறுகதை ஒண்ணு பிரசுரமாச்சே, படிச்சியா? யாரோ ஒரு வாசகர் கூட உற்சாகமாக ஒரு வார்த்தை பாராட்டியிருந்தார். அதுதானே ஸ்வேதா ஒரு படைப்பாளிக்கு பெரிய ஊக்கம் ?”
”நிச்சயமா, !அப்படீன்னா, எதிர்வினையை எப்படி எதிர்கொள்ள முடிகிறது??”
”நான் அதைப்பற்றியெல்லாம் ரொம்ப கண்டு கொள்றதில்லை ஸ்வேதா, குசினியில உள்ள கரித்துணி மாதிரியிருக்கே இவுங்க எழுத்து,, சமையல் கட்டுக்கு அப்பால் வெளியுலகை எப்பத்தான் இவுங்க அண்ணாந்து பார்ப்பாங்க, னு ? கூடஒரு குப்பைமேதாவி என்னைப்பற்றி எழுதனான்.படிச்சப்ப கொஞ்சம் கவலையாத்தான் இருந்திச்சு ! ஆனால் இந்த இலக்கியம் கூட இல்லன்னா நான் இப்ப உயிரோடயே இருக்கமாட்டேன் தெரியுமா? ஏன் பொய் சொல்லணும் ? ஒருமுறை அப்படித்தான், குடிவெறியில , இந்த மூணு குழந்தைகளும் அவருக்குப்பொறக்கலைன்னு சொல்லிட்டாரு, எல்லாவற்றையும் பொறுத்துக்கிட்ட எனக்கு அதை மட்டும் தாங்க முடியலை. பொழுது எப்படா விடியும், இவரு வெளியே போனவுடனே போயி ராச்சூன் மருந்தை வாங்கிவந்து குடிச்சிடலாம்னு தான் காத்துக்கிட்டிருந்தேன், அவர் போனவுடனே அவசரம் அவசரமா வெளியே கடைக்குப்போறேன். உங்க கதை வந்திருக்கேம்மா, !ன்னு கடைக்காரர் சிரிக்கறாருன்னா பாரேன். பத்திரிகையை வாங்கிப்பார்த்தா, என்னோட சிறுகதை, –அய்யோ, என்ன சொல்ல, ! ஸ்வேதா, அன்னைக்குத்தான் முடிவெடுத்தேன் ஸ்வேதா, ! இந்த உலகமே எதிர்த்தாலும் சரி, என்ன துன்பமே வந்தாலும் சரி, நான் என் உயிரை மட்டும் மாய்ச்சுக்கவே மாட்டேன், ஏன்னா நான் எழுத்தாளினி பாரு, பேனா புடிச்ச இந்த கையால நான் எழுதிக்கிட்டேதான் இருப்பேன், என்ன சொல்றே ? “ விம்மிவெடித்துக்கொண்டு வந்த அழுகையை அடக்க ஸ்வேதா மிகவும் சிரமப்பட வேண்டியதாயிற்று. அடிவயிற்றினின்று எழுந்த கேவலை தேம்பதேம்ப அடக்க வேண்டியிருந்தது.ஒரு வார்த்தை கணவர் கடுமையாகப்பேசினாலே ஒரு வாரத்துக்கு நினைத்து நினைத்து அழுபவளுக்கு, சாந்தலெட்சுமி கூறிய தகவல்கேட்டு ,விக்கி விக்கி அழவேண்டும்போல் இருந்தது. -சூடு போடுவானா ? பிருஷ்டத்தில்லேயே தேய்த்துவிட்டானா? இரும்புக்கழியால் அடித்து காதை செவிடாக்கிவிட்டானா? ஸ்வேதாவைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்தாள் சாந்தலெட்சுமி, ” பின் நவீனத்துவம், புதுமைப்புரட்சியாகவெல்லாம் எழுதணும்னு சொல்லிக்கறாங்க, ! ஆனா எனக்கு வாழ்க்கையே போராட்டமாயிருக்கு, ஒவ்வொரு நாளும் காலை நிம்மதியா விடிஞ்சாலே போதும்னு இருக்கு, இருந்தாலும் கற்றுக்கொள்ள ஆசையாத்தான் இருக்கு, யாராச்சும் , இந்த வட்டாரத்திலே, பின்நவீனத்துவம் பற்றி வகுப்பு எடுக்கறதா இருந்தா, உண்மையிலேயே கற்றுக்க ஆசையாதான் இருக்கேன் ஸ்வேதா, ! எங்கேயிருந்தாவது தொடங்கணும் தானே ? , !” அதற்குள் ”குவே “வாங்க சிறு மலாய்க்கார சிறுமிகள் சிலர் வந்தனர், இரண்டு பெண்மணிகள் கடனுக்கு வாங்கிப்போயினர். வந்தவர்களிடம் சிரித்த முகத்துடனேயே குவே, விற்றுக்கொண்டே சாந்த லெட்சுமி பேசினாள். அது நேர்காணல் மொழியாக இல்லாமல், சடக்கு மேலே வழிந்தோடும் கித்தாப்பால் மொழியாகத்தான் இருந்தது. தமிழ்கூறு நல்லுலகில் புதுமையும், போஸ்ட் மோடர்னிஸமும் கொடிகட்டிப் பறக்க, ஒட்டுப்பால் எழுத்தையும் நமக்கு யாராவது அறிமுகம் செய்ய வேண்டாமா? பேச்சிலும் கூட பனிப்புல்லின்மேல் முத்துப்போல் மின்னும் எந்த பளீரிடலும் இல்லை. சில இலக்கியசொகுசுகளுக்கே உரித்தான அலட்டல் நடிப்பும் , வெற்று பந்தா வும் கூட அறியாத அப்பாவியாகத்தான் பேசினாள். இரண்டுமணி நேரம் இடையறாத அருவியாய் பேசினாள்.ஒலிப்பதிவுசெய்வதைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல், அப்படியே அவளது மொழியிலேயே , ஆனால் பிழையில்லாத தமிழில் தான் பேசினாள்.
சாந்த லெட்சுமியை பலகோணங்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டு , விடைபெறும்போது தயங்கிநின்றவளை அன்பு வழிய வழிய அப்படியே நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள் ஸ்வேதா.
” இந்த முத்துமாலை உனக்கு ரொம்ப அழகாயிருக்கு ஸ்வேதா, “ என்று கபடமின்றி சிரித்த சாந்த லெட்சுமியின் கழுத்தில் அப்படியே அந்த முத்துமாலையை, கழற்றிப்போட்டு, மீண்டும் ஒருபுகைப்படம் எடுத்துக்கொண்டாள். நேர்காணலை அப்பொழுதே எழுதவேண்டும்போல் ஸ்வேதாவுக்கு பதறிக்கொண்டு வந்தது. கணினியை மடியில் வைத்துக்கொண்டு தட்டச்சு செய்யத் தொடங்கியபோது, பொலபொலத்துக்கொண்டு வந்தது. சாந்த லெட்சுமிக்கு பின்நவீனத்துவம் தெரியாதுதான், ஏன் சமகால இலக்கியம்பற்றிய பிரக்ஞை கூட இல்லைதான்.ஆனால் தான் கண்டதை, தன்னுடைய சிந்தனையை அகம் புறம் சார்ந்த எந்த நிலையிலும் சாயாமல் ,சுயம் மட்டுமே எழுத்தாய் வாழும் இவள் எழுத்தில் எந்த புதிய சிந்தனையும் கிட்டத்தில் கூட போகவில்லை. ஈவிரக்கமற்ற ஆணாதிக்க கொடுமையில் எந்த பிழையுமே காணாமல், ” என்ன இருந்தாலும் அவரு என் கணவர் தானே, இன்னைக்கும் நான் சாந்தலெட்சுமி ஏகாம்பரம் தானே, ”என இயல்பாய் ஏற்றுக்கொண்ட பாங்கே பழங்காலத்து பெண் தெய்வங்களின் நீட்சிதான், அதே பாணிதான் இவளது எழுத்திலும் கூட தொடர்கிறது, .யதார்த்த இலக்கியமோ, இயல்பியல் பார்வையோ, அதன் அரிச்சுவடி கூட இவள் அறிய மாட்டாள்.
எந்த கலப்படமுமில்லாமல், கூடுமானவரை தன்னுடைய இயல்பிலேயே தான் எழுதுகிறாள்.? ஆனால் பின்நவீத்துவத்தின் அவதாரமே நாங்கள் தான் என்று கொஞ்சமும் லஜ்ஜையின்றி,பிறமொழி இலக்கியத்தின் தழுவல்களைத் திருடி தங்கள் பெயரைப்போட்டுக்கொண்டு திரியும், களவாடி ஜம்பங்களுக்கு முன்னால், சாந்த லெட்சுமியின் எழுத்து நிஜத்தின் தரிசனம். ஒருபக்க செவிப்பறையே கிழிந்து டமாரம் ஆன நிலையிலும், பிருஷ்டம் வெந்து பழுத்த நிலையிலும் கை, காலெல்லாம் சூடுபட்டு தழும்பேறிய உடல் கோலத்திலும் , ” என்ன இருந்தாலும் அவரு என் கணவரு பாரு, என்ன செய்ய, வாழ்ந்துதானே ஆகணும்? , ” என வாழும் இவளுக்கு பின் நவீனத்துவம் எப்படித்தெரியும்? பெண்ணிய சிந்தனாவாதிகள் எவருமே இவளை திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள் என்பது கூட உண்மைதான். நிதர்சனத்தின் அச்சு அசலாய முகம் இவளது எழுத்து. நூற்றாண்டு மாறலாம்,மரபுகளும் கூட மரிக்கலாம்..ஆனால் பெண்ணின் இருப்பு அற்ற வாழ்க்கை எங்கேனும் சாத்தியமாகியிருக்கிறதா? சுயம் மட்டுமே வாழ்க்கையாய், எழுத்தாய் , இவ்வளவு துக்கத்திலும் உதட்டைக்கடித்து , அழுகையை விழுங்கிக்கொண்டு, சுயபச்சாதமற்ற வாழ்க்கை, மட்டுமே வாழ்ந்து , அதையே ,எழுதிக்கொண்டிருக்கும் சாந்த லெட்சுமி இலக்கிய வாசலில் கையேந்த வேண்டிய அவசியமென்ன ? இவளைப்பற்றி விமர்சிக்கும் தகுதி எந்த ஜம்பத்துக்கிருக்கிறது ? ராஜபாட்டையே வந்து எதிரில் நின்றாலும் மண்டியிடாமல், கணவரை விட்டுக்கொடுக்காத, இந்த ஒற்றையடிப்பாதை நடையில் என்ன தவறிருக்கிறது.? துப்புரவு வேலை செய்தும் ,கழிவறைக்கு வெளியே படுத்துக்கொண்டு கிட்டும் சொல்ப நேரத்தில் கதை எழுதும் மாதரசி, நீ எந்த நூற்றாண்டுப்பெண் ????????? சாந்த லெட்சுமியை நினைக்க நினைக்க ஸ்வேதாவுக்கு நெஞ்சுடைந்து அழுகை வந்தது. தட்டச்சு செய்ய முடியாமல் மடிக்கணிணியை மூடியபோது, அட ! அப்பொழுதுதான் ஸ்வேதாவுக்கு ஒரு அரிய விஷயம் ஞாபகத்துக்கு வந்தது.அவ்வளவு நேரமும் பேசிய பேச்சில் ஓரிடத்தில் கூட சாந்த லெட்சுமி , லா ‘ , போட்டுப் பேசவில்லை. வெளியே வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது.