(கடந்த தை முதல் நாளன்று (சனவரி 14) தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் நடத்திய தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருவள்ளுவர் பிறந்த நாள் ஆகிய முப்பெரும் விழாவில் திரு கந்தர் சிவநாதன் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டிருந்தார். திரு கந்தர் சிவநாதன் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் கணிதம் அறிவியல் ஆகிய துறைகளில் இளங்கலை (சிறப்பு) பட்டத்தையும் அமெரிக்காவிலுள்ள ஒறிக்கன் பல்கலைக் கழகத்தில் முதுகலை (சிறப்பு) பட்டத்தையும் பெற்றவர். இவர் தாயகத்தில் ஆசிரியர் ஆகவும், கணித விரிவுரையாளர் ஆகவும் யாழ் பல்கலைக் கழகப் பதிவாளர் ஆகவும் இணை வட்டார கல்விப்பணிப்பாளர் ஆகவும் பணியாற்றியவர். இன்றைய உலகின் காலங்காட்டி மற்றும் அதிசய வானில் ஒரு பஞ்சாங்க உண்மை விளக்கம் என்ற இரண்டு அறிவியல் நூல்களை எழுதி வெளியிட்டவர். இவர் தாயக மக்களது வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்ப தன்னால் ஆன பங்களிப்பை நல்கி வருகிற கொடையாளர். தமிழின உணர்வாளர். பொங்கல் புத்தாண்டு விழாவில் அவர் ஆற்றிய உரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.)
அன்பான உறவுகளுக்கு எனது தலைசாய்ந்த வணக்கத்தையும் இனிய பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இப்பெரு நாளில் என் இதயத்தில் பொங்கியெழும் சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
இன்றைய விழா புத்தாண்டு, தைப்பொங்கல், திருவள்ளுவர் பிறந்ததினம், திருவள்ளுவர் யுகம் 2044, ஆகிய நான்கு முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது. இத்திருநாளில் ஆடிப்பாடி அகமகிழ்ந்து இன்பமுடன் சுதந்திரமாகக் காலத்தைக் களித்தோம். ஆனால் இன்று, தாயகத்தில், அவலம் நிறைந்த நாளாக பொங்கல் நாள் உள்ளது. ஐரோப்பாவில் கொலைக்கஞ்சிய நிலையில் மனப்பீதியுடன் பொங்கல் கொண்டாடப்படுகிறது. கனடா, ஐக்கிய அமெரிக்காவில் வாழும் புலம் பெயர்ந்தோர் கனத்த நெஞ்சுடன் பொங்கல் கொண்டாடுகிறார்கள். சுதந்திரமாக, தமிழர்கள் எல்லோரும் சோந்து பொங்கலைக் கொண்டாடும் நாள் எப்போது என்று ஆவலுடன் ஏங்கித் தவிக்கின்றோம்.
“நினைத்தாலே கண்கள் பனிக்கிறது
கல்லாக நெஞ்சம் கனக்கிறது
முள்ளாக மனதை உறுத்துகிறது
பனியாக குருதி உறைகிறது
சொல்லில் அடங்கா துயரமது
சொல்லத் துடிக்குது என் இதயமது”
எனத் தமிழரின் நிலைகண்டு பதைத்துத் துடிக்கின்றார் வைத்திய கலாநிதி வனிதா வரதன் அவர்கள். தமிழன் சிந்தனையுடன் செயற்பட்டு மீண்டடும் சுதந்திரப்பள்ளுப் பாடுவான் என்பதில் ஐமிச்சமில்லை.
அன்பர்களே!
மனிதநேய உணர்வுடன், அல்லற்படும் தமிழர்களின் அரசியல் மேம்பாட்டிற்கும் துயர் துடைக்கும் பணியிலும் அறியாமையை நீக்குவதிலும் மூடக் கொள்கைகளை அழித்தொழிப்பதிலும் அர்ப்பணிப்புடன் அயராது பொது நலச் சேவை செய்யும் செயல்வீரன் தலைவர் நக்கீரன் ஐயாவிற்கு எனது பணிவான அன்பையும் வணக்கத்தையும் தெரிவிக்கின்றேன்.
பொங்கல் கூறும் பல பணிகளில், படைப்பாளிகள் கழகம், கனடாவில் உள்ள புலம்பெயர்ந்த தமிழ மக்களுக்கு அவசியம் எனக் கருதி சில பணிகளைச் செய்கின்றது. கழகத்தவரின் சேவைக்கு எனது பாராட்டைத் தெரிவிக்கிறேன்.
தமிழர் புத்தாண்டு
புவியில் இருந்து பார்க்கும் போது ஞாயிறு புவியைச் சுற்றி வருவது போன்ற மாயத் தோற்றத்தைத் தோற்றுவிக்கிறது. இந் நகர்வின் போது ஞாயிற்றின் பின்னணியில் ஓரைகள் மாறி மாறி வருகிறது. புவி ஞாயிறை சுற்றிவரும் காலத்தை – அதாவது ஒரு ஓரையில் (இராசி) நுழைந்து மறுபடியும் அதே ஓரையில் புகும் காலத்தை தமிழர்கள் ஓர் ஆண்டாகக் கணித்தனர்.
ஞாயிற்றின் தோற்றப்பாதையில் குறிகாட்டிகளாய் அமைந்துள்ள 12 ஓரைகளைக் கடக்கும் காலப்பகுதிகள் 12 ஞாயிற்றுக் காலப்பகுதிகளாகப் கொண்டுள்ளன. இக்காரணத்தால் ஓரு ஆண்டு சரியாக 365.25 நாட்கள் என்பதைத் தமிழர் ஆதிகாலத்திலேயே அறிந்துள்ளனர்.
ஒவ்வொரு ஓரையும் 30 பாகை கொண்டது. ஒவ்வொன்றும் ஞாயிறு எனப்படும். அவையாவன சுறவம், குடவூற்று, மீன், ஆடு, மாடு, இரட்டையர், நண்டு, மடங்கல், கன்னி, எடைக்கோல், தேள், வில் என்பனவாகும். ஒவ்வொரு ஓரையிலும் ஞாயிறு புகும் நாள் அந்தந்த மாதங்களுக்குரிய மாதப் பிறப்பாகக் கணித்தார்கள். தை ஞாயிறு சனவரி 14 இல் தொடங்குகிறது. சீராகக் கூறின் ஆடு ஞாயிறு என அழைக்கலாம். உரையாசிரியர் நச்சினாக்கினியர் ஓர் ஆண்டு ஆவணியில் தொடங்கி ஆடியில் முடிந்ததாகக் கூறுகிறார். புவியின் அச்சுத் திசைமாறு இயக்கத்தினால் சமவிரவு மீன் ஓரைக்கு இப்போது நகர்ந்துள்ளது. தமிழர்கள் வானியல் அறிவில் சிறந்து விளங்கினார்கள். ஞாயிறு மறைப்பு (சூரிய கிரகணம்) நிலா ஞாயிறுக்கும் புவிக்கும் இடையில் ஒரு நேர்க்கோட்டில் வருவதால் ஏற்படுகிறது என்றும் நிலா மறைப்பு (சந்திர கிரகணம்) புவி நிலாவுக்கும் ஞாயிறுக்கும் இடையில் ஒரு நேர்க்கோட்டில் வரும்போது ஏற்படுகிறது என்றும் அறிந்திருந்தார்கள்.
தமிழர்களின் ஆண்டுக் காலங்காட்டியில் தமிழரின் புத்தாண்டு தை முதல் நாளாகும். இத்தினத்தில், ஞாயிறு, தனது தோற்றப்பாதையில் வில் ஓரையைக் (தனு இராசி) கடந்து, சுறவம் ஓரைக்குள் (மகர இராசி) புகும் நாளாகும். ஞாயிற்றின் தோற்ற நகர்வை அடிப் படையாகக் கொண்டு காலங்காட்டி அமைத்த பெருமை தமிழர்களுக்கு உரியது. ஏனைய ஆதிகால நாகரிகமடைந்த மக்கள் திங்கள் காலங்காட்டியைப் பின்பற்றினாகள். அதனால் அவர்களால் ஆண்டுக் காலம்காட்டியைச் சீராக அமைக்க முடியவில்லை.
வெவ்வேறு நாகரிக மக்கள், தங்கள் சூழலிற்கும் வாழ்க்கை முறைகளுக்கும் ஏற்ப வெவ்வேறு ஆண்டுத்தொடக்கத்தைக் கொண்டுள்ளனர். தமிழர்கள் வாழ்வில் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற முதுமொழி பல காரணங்கள் பற்றி தோற்றம் பெற்றுள்ளது.
தை மாதம் தமிழர்களுக்கு அறுவடைக்காலமாகும். பொருளாதார மேம்பாட்டை எதிர்நோக்கி அடியெடுத்து வைக்கும் நாளாகும். சூரியன் தனது தென்திசைப் பயணத்தை முடித்துக் கொண்டு வடதிசைப் பயணத்தைத் தொடங்கும் காலமாகும். அதாவது ஞாயிறு, தனது தோற்றப்பாதையில் வில் ஓரையைக் (தனு இராசி) கடந்து, சுறவம் ஓரைக்குள் (மகர இராசி) புகும் நாளாகும்.
சேர, சோழ, பாண்டிய, யாழ்ப்பாண மன்னர்களின் ஆட்சிக்குப் பின் தமிழர்கள் இன்று வரைக்கும் அடிமை வாழ்க்கை நடத்தி வருகின்றனர். வெளிப்படையாகக் கூறின் அடிவருடி வாழ்க்கையை நடத்துகின்றனர். இன்றைய நிலையில், பல்லாண்டு காலமாக தமிழர் கட்டி எழுப்பிய பண்பாட்டு விழுமியங்கள் சீரழிக்கப்பட்டுள்ளன. “சுதந்திரம் இல்லாமல் தமிழர் எதையும் செய்ய முடியாது” என்ற யதார்த்த நிலையில் இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, 2009, மே மாதம் புத்த – சிங்கள இராணுவ கொலை வெறியர்களினால் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைத்து தங்கள் துக்கங்களைக்கூட வீடுகளில் கொண்டாடமுடியாத துர்ப்பாக்கிய நிலையில் தமிழர் இருககின்றனர். பல்லாண்டுகால அடிமை வாழ்க்கையில் தமிழர் தங்கள் மொழி, கலை, பண்பாடுகள் யாவற்றையும் மறந்து, இழந்து இழிநிலையில் இருக்கிறார்கள் என்பது மெத்த உண்மையாகும்.
தைப்பொங்கல்
தைப்பொங்கல், பல விழுமியங்களைக் கொண்டிருந்தது. பிராமணர்களின் ஆதிக்கத்தினால் அவைகள் எல்லாம் சீரழிக்கப்பட்டு பண்பிழந்து வெறும் அரிசிப் பொங்கல் நிகழ்வாகத் தேய்ந்துள்ளது.
ஓராண்டு வாழ்வின் செயற்திறனாய்வு, சுதந்திரம், தன்னம்பிக்கை, முயற்சி, இயற்கையின் மேன்மையும் அதன் முக்கியத்துவமும் அறநெறி வாழ்வு, அன்புநெறி, நன்றி, பழையன கழிதலும் புதியன புகுதலும் வீரம், உறவு (பொதுநலத்திற்கு முக்கியத்துவம்), பொருளாதாரம், கல்வியின் மேன்மை ஆகிய விழுமியங்களை வலிமைப்படுத்தும் நாட்களாகத் தைப்பொங்கல் அமைந்திருந்தது. அந்நிலை மீண்டும் வரவேண்டும் என்ற வகையில் தைப் பொங்கல் கொண்டாடப் படவேண்டும் என்பதை தமிழர்கள் நன்கு உணர்ந்து செயற்படவேண்டும்.
எடுத்துக்காட்டாக, சுதந்திரம் இல்லாமல் மனிதன் எதையும் சாதிக்க முடியாது என்பதை தமிழர்கள் எல்லோரும் உணரவேண்டும். இந்தப் பொங்கல் நாளில், தாயகத்திலுள்ளவர்கள், புலத்திலுள்ளவர்கள் தங்கள் நிலைமையை நன்கு ஆராய்ந்து எவற்றைச் செய்துள்ளோம், எவற்றைச் செய்யவேண்டும் என்பவைபற்றி ஒன்றுகூடி ஆராயும் நாளாகக் கொண்டாடப்பட வேண்டும்.
உறவுமுறையை எடுத்துக்கொள்வோம். தமிழர்களாகிய நாங்கள் எங்கள் உரிமைகளை, சுதந்திரத்தைப் பெறுவதற்கு உறவு முறை விரிவாக்கப்படல் வேண்டும். இதற்கு நுட்பமான அரசியல் ஞானமும், பலவகைத் தந்திரங்களும் அத்தியாவசியமாகும். அரசியல் கட்சிகளுடனும் அரசியல் அறிஞர்களுடனும் மனித உரிமை இயக்கங்களுடனும் அரசியல் தலைவர்களுடனும் நெருங்கிய உறவை ஏற்படுத்த வேண்டும். எங்கள் உரிமைகளைப் பெறுவதற்கு உலக உறவு முறைமைகள் முக்கியமாக இருப்பதை நன்கு உணர்ந்து இந்த பொங்கல் நாளில் அவற்றிற்கான செயல்முறை வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
சுயநலத் துரோகிகளிற்கு இடமளியாது, பொது நலச் சேவைகள் முன்னெடுக்கப் படவேண்டும். ஊடுரிவிகள் செயற்படாது இருக்கும் வகையில் திறமையுடன் சேவைகள் இருக்க வேண்டும். பொதுநலச் சேவையில் ஈடுபடுபவர்கள் அறிவு, ஆற்றல், தந்திரம், மனிதநேயம், அஞ்சாமை, தன்னம்பிக்கை, அர்ப்பணிப்பு, வீரம் ஆகிய பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.
சுயநலத்திற்காக, பொதுநலச்சேவையில் ஈடுபடுபவர்களை இனம் கண்டு முளையிலே கிள்ளி எறியப்பட வேண்டும்.
அன்பர்களே! இவ்வாறு தைப்பொங்கல் கூறும் பல விழுமியங்களை ஆராய்ந்து காலத்திற்கேற்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டு செயற்படவேண்டும். இது இன்றைய கட்டத்தில் முக்கியமானதாகும் எனக் கூறி விடை பெறுகிறேன். வாய்ப்பிற்கு நன்றி. பொங்கலோ பொங்கல்!