சே குவேராவும் யாசர் அரபாத்தும் காட்டிய ஹாலிவுட் சினிமா

யமுனா ராஜேந்திரன் -பிப்ரவரி 18 ஆம் திகதி இரண்டு கட்டுரைகள் வாசிக்க முடிந்தது. கட்டுரைகளின் காலப்பொருத்தம் உண்மையில் ஆச்சர்யமாக இருந்தது. இலண்டன் த இன்டிபென்டன்ட் பத்திரிக்கையில் நெஞ்சை அறுக்கும் வலி கொண்டதாக, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய புதல்வன் சிறுவன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட முறை குறித்த கோரமான படம் வெளியாகி இருந்தது. புகைப்படம் தொடர்பாக ஆவணப்பட இயக்குனர் ஹாலும் மக்ரே ஒரு கட்டுரையும் எழுதி இருந்தார். ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைத் திரைப்பட விழா நிகழ்வில் திரையிடப்படும் ஹாலும் மக்ரேவின் நோ பயர் சோன் ஆவணப்படத்தில் இடம்பெறும் புகைப்படங்களே த இன்டிபென்டட்டில் வெளியாகியிருந்தது. மகிந்த அரசின் ‘கருணை அரசியலுக்கு’ சிறுவன் பாலச்சந்திரனின் படுகொலை நடத்தப்பட்ட முறை ஒரு சான்று. இதே 18 ஆம் திகதி குளோபல் தமிழ் நியூஸ் தளத்தில் நிலாந்தனின் படம் பார் பாடம் படி கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. நிலாந்தனுக்;கு ஹாலும் மக்ரேவின் ஆவணப்படமும் கூட ஹாலிவுட் சினிமாவின் அங்கமாகத்தான் தோன்றியிருக்கும் என நினைக்கிறேன்.

இலங்கை தொடர்பான ஜெனிவா மனித உரிமை நடவடிக்கைகளை ஹாலிவுட் சினிமா என்கிறார் நிலாந்தன். நிலாந்தனின் மேதைமை கொண்ட புரிதல் அது; இருக்கட்டும். முன்போலவே வரவிருக்கும் ஜெனிவா நடவடிக்கையை ஹாலிவுட் படம் போல் பார் என்கிறார் நிலாந்தன். ஜெனிவா நடவடிக்கைகளில்  அவர் படித்த பாடம் என்ன என்பது குறித்தோ அல்லது பிறர் படிக்க வேண்;டிய பாடம் என்ன என்பது குறித்தோ ‘நடைமுறையில்’ எதுவும் நிலாந்தன்; கட்டுரையில் இல்லை.

மகிந்த சிங்கள மொழிச்சினிமா காட்டுவதைப் போல இருக்கிறது நிலாந்தனின் கட்டுரை.

மேற்கத்திய நாடுகள் மனித உரிமையின் பேரில் தன்னை மின்சார நாற்காலியில் உட்கார வைக்க முயற்சி செய்கின்றன என ஒரு முறை அழுதார் மகிந்த. ஜெனிவா மனித உரிமைத் தீர்மானங்கள் இலங்கைக்குத் தவிர்க்க முடியாதபடி ஆபத்தான பொறிமுறை என்றார் பிரான்சின் இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக. ஐநா மனித உரிமைத் தீர்மானத்துக்கான போராட்டம் என்பதும் ஐநா அங்கீகாரம் பெறுவது என்பதும் அல்ஜீரிய விடுதலை இயக்கத்தவர் முதல் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தவர் வரையிலும் ஒரு போராட்ட முறையாக உள்ளது. பிரான்சஸ் ஹாரிசன் முதல் மே பதினேழு இயக்கத்தவர் வரை ஐநா சபையைக் குற்றம் சாட்டுவது, அதன் அலுவலகங்கள் முன்பாகப் போராட்டங்களை முன்னெடுப்பது என்பது ஐநா சபையின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து அதனை நேர்பட திரும்பச் செய்வதற்குத்தான்.

ஐநா சபையின் அலகொன்றில் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் நிராகரிப்பை மீறித்தான் பாலஸ்தீனம் இடைக்கால அரசுக்கான அங்கீகாரத்தைப் பெருவாரியான வாக்குகள் மூலம் பெற்றிருக்கிறது. இது மிக மிகச் சமீபத்திய நிகழ்வு.

சே குவேரா ஐநாவில் உரை நிகழ்த்தினார். அரபாத் நிகழ்த்தினார். நேபாளத்தின் பிரசன்டா நிகழ்த்தினார். நிலாந்தனின் பாஷையில் இவர்களெல்லாம் ஹாலிவுட் கதாநாயகர்கள். அல்ஜீரிய-பாலஸ்தீன-நேபாள மக்கள் அனைவரும் ஹாலிவுட் நடிகர்கள்.

மகிந்த எந்தவித விசாரணைக்கும் உட்பட முடியாது என்கிறார். நிலாந்தன் ஜெனிவா மனித உரிமை நடவடிக்கைகளே ஹாலிவுட் சினிமா போல மாயை என்கிறார். சேனல் நான்கின் ஆவணப்பட இயக்குனர் ஹாலும் மக்ரே பாலச்சந்திரன் கொல்லப்பட்ட முறை குறித்துத் தேடி அதனை ஆவணப்படுத்துகிறார். ஜெனிவா நடவடிக்கைகள் இருக்கட்டும்; மகிந்தவின் பேச்சுக்கள் இருக்கட்டும்; ஹாலும் மக்ரேவின் விசாரணைகள் நாசமாகப் போகட்டும்; தமிழராக நீங்கள் படித்த பாடம் என்ன நிலாந்தன்? நீங்கள் படித்த அந்தப் பாடத்திலிருந்து தமிழராக நீங்கள் முன்வைக்கும் அரசியல் அல்லது தேர்ந்து கொண்ட அரசியல் பாதை என்ன நிலாந்தன்?

rajrosa@gmail.com