ஒரு முறை செல்லப்பா என்னை பி.எஸ் ராமையாவிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். அந்தக் காலத்தில் நான் ராமையாவின் எழுத்து அதிகம் படித்ததில்லை. அவருடைய சிறுகதைத் தொகுப்பு ஒன்று, மலரும் மணமும் என்ற தலைப்பு என்று நினைவு, அதைப் படித்திருக்கிறேன். அதில் நிறையப் பேர்களால் பாராட்டப் பெற்ற நக்ஷத்திரக் குழந்தைகள் என்ற கதையில் குழந்தையின் கேள்வியும் அதன் துக்கமும் மிகவும் செயற்கையாகத் தோன்றியது. எந்தக் குழந்தை, ”நக்ஷத்திரம் விழுந்துடுத்து, யாரோ பொய் சொல்லீட்டா அதனாலே தான்”, என்று அழும்? ஆனால் அவர் எந்தக் காரியத்தைத் தொட்டாலும் அதில் மற்ற எவரையும் விட அதிகம் சாகஸம் காட்டக் கூடியவர் என்பதில் எனக்கு பிரமிப்பு. மணிக்கொடிக்கால எழுத்தாளர் எவரையும் விட அக்கால மோகமான சினிமாவில் அதிகம் தன் சாமர்த்தியத்தைக் காட்டியவர். ஜெமினியின் படங்களுக்கு கதை வசனம் எழுதியவர். சினிமாவைப் பற்றி ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனல் அதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை. பிச்சமூர்த்தி, வ.ரா பி.எஸ் ராமையா, ச.து.சு. யோகியார் எல்லோரும் சேர்ந்து ஒரு திரைப்படம் எடுக்க முயன்றாரகள் என்று கூட கேள்விப்பட்டிருக்கிறேன். ஏதோ சொன்னதை, தனக்குத் தெரிந்ததைச் செய்வதற்கும் மேலாக அந்தத் துறையே தனக்கு அத்துபடி ஆகிவிட்டது போல ஒரு புத்தகமே எழுதும் சாகஸம் பி.எஸ் ராமையாவின் ஆளுமையைச் சேர்ந்தது தான். ஆனந்த விகடனோ இல்லை குமுதமோ நினைவில் இல்லை, ஒரு தொடர் கதை எழுதச் சொன்னால் அதற்கும் அவர் ரெடி. குங்குமப் பொட்டு குமாரசாமி என்ற அந்த தொடர்கதை ஒரு வருட காலமோ என்னமோ வந்தது. கதைக்கான பாத்திரங்களையும் சம்பவங்களையும் கணக்கின்றி கற்பனை செய்து கொள்வதில் மன்னன் தான். மாதிரிக்கென்று அவர் கதைகள் சில படித்திருக்கிறேன். அப்போது அவர் வாரம் ஒரு கதை எழுதித் தருகிறேன் என்று சொல்லி ஒரு வருடத்துக்கும் மேலாக தவறாது வாரம் ஒரு கதை எழுதித் தந்தவர். அந்தக் கதைகளில் நான் மாதிரிகென்று ஒரு சில படித்ததில் அவரது ஒரு கதையில் நாலு கதைகள் பிய்த்து எழுதத் தேவையான சம்பவங்களும், திருப்பங்களும், தேவையான கதா பாத்திரங்களும் இருக்கும்.
சேவா ஸ்டேஜ் நாடகம் எழுதித்தரக் கேட்டால் அதற்கும் ரெடி அவர். தேரோட்டி மகன் ஒன்று தான் எனக்குத் தெரியும். இன்னும் எத்தனை நாடகங்கள் எழுதிக் கொடுத்திருக்கிறாரோ. தெரியாது. அவர் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்தது, ஒரு நாள் குதிரைப் பந்தயத்துக்குச் சென்ற அனுபவம் பற்றியது. இது போல அவர் தன் அனுபவங்களை எழுதினால் மிக சுவாரஸ்யமாக இருக்கும். மன்னன், தன் ஜீவனத்துக்கு தொடாத துறை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். மணிக்கொடி இதழுக்கு அவர் விளம்பர ஏஜெண்டாக வருவதற்கு முன் பார்த்தது சப்ளையர் வேலை, ஒரு ஹோட்டலில். அதன் பிறகு மணிக்கொடியையே எடுத்து அதை சிறுகதை இதழாக ஆக்கி, சரித்திரமே படைத்தது. காங்கிரஸ் கதர் ஸ்டாலில் நிருவாகம். அங்கு பார்த்த மௌனியின் அரட்டையைப் பார்த்து, நீங்கள் கதை எழுதலாம் என்று ஊக்குவித்து கதை எழுதப் பெற்று அவருக்கு மௌனி என்றும் பெயர் சூட்டியது. செல்லப்பாவின் சரஸாவின் பொம்மை கடைசி வரியை மாற்றி எழுதி அவரை மணிக்கொடி கதைக்காரராக மாற்றியது. எல்லாம் அவரது பன்முகத்திறனைச் சொல்லும் செல்லப்பா தனக்கு ஞானஸ்னானம் செய்வித்து சிறுகதைக்காரனாக ஆக்கிய அந்த கடைசி வரியையும், (ஏதோ தீக்ஷை கொடுத்து தன்னையும் மடத்தில் சேர்த்துக்கொண்ட மாதிரித் தான்), அந்த கணத்தையும் பெரிதாகக் கொண்டாடும் சிறு சிறு சைகைகள் தான் இவை. சைகைகளே யானாலும் செல்லப்பாவின் வாழ்க்கையில் இவை பெரிய திருப்பங்களைத் தோற்றுவித்த சைகைகள் பி.எஸ் ராமையாவின் மிகக் குறிப்பிடத்தக்க மதிப்பு வாய்ந்த எழுத்துக் காரியமாக நான் நினைப்பது அவர் எழுதிய மணிக்கொடிக் காலம் தான்.
செல்லப்பா தன் குருஸ்தானத்தில் வைத்து மரியாதை செய்தது பிச்ச மூர்த்தியையும் பி.எஸ் ராமையாவையும் தான். இருவரும் (செல்லப்பாவும் ராமையாவும் )வத்தலக்குண்டுக் காரர்கள் என்பதை மட்டும் சொல்வது செல்லப்பாவை கேலியாகப் பேச விரும்புகிறவர்கள் செய்யும் காரியம். ஆனால் அதுவும் ஒரு காரணம் தான். அதுமட்டுமே இல்லை என்பது செல்லப்பா விஷயத்தில் மிகப் பெரிய காரணம். செல்லப்பாவின் மதிப்பீட்டில் பி.எஸ் ராமையா மிகப்பெரிய சிறுகதை ஆளுமை. தமிழிலேயே எல்லோரையும் மீறி உயர்ந்து நிற்கும் ஆளுமை. இதனால் தான் செல்வராஜின் மலரும் சருகும், ந. சிதம்பர சுப்பிரமணியத்தின் நாகமணி, மண்ணில் தெரியுது வானம், நா. பார்த்த சாரதியின் ஆத்மாவின் ராகங்கள், ஹெப்ஸிபா ஜேசுதாசனின் முதல் நாவல் போன்றவற்றையெல்லாம் பாராட்டத் தோன்றியதோ என்னவோ.
என்னவானாலும் ராமையாவைப் பார்க்க வேண்டும் என்று கிளம்பியதும், “நீங்களும் வாங்கோ” என்று என்னையும் அழைத்துச் சென்றது, அந்த மரியாதை உணர்வின் வெளிப்பாடு தான். ராமையா ஏதோ ஒரு சிறிய வீட்டின் தெருவை நோக்கிய கம்பி க்ராதி போட்ட முன் வராண்டாவில் உட்கார்ந்திருந்தார். எங்கு என்பது இப்போது என் நினைவில் இல்லை. என்னை அவருக்குத் தெரிந்திருக்கும் என்று நான் நம்பவில்லை. ஆனால் என்னை அன்னியன் என்று பாவிக்காமல் செல்லப்பாவையும் என்னையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே பேசினார். பேசினார். எனக்கோ செல்லப்பாவுக்கோ பேச இடம் கொடுக்க வில்லை. கம்பனைப் பற்றி ரொம்பவும் உற்சாகத்தோடு பேசி வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எழுத்து பத்திரிகையை அவர் மதித்தவர் இல்லை. புதுக்கவிதையை அவர் மதித்தவர் இல்லை. படிக்காத மேதை. மிகவும் சுவாரஸ்யமான மனிதர். நான் மதிக்கும் சிறு கதை எழுதாவிட்டால் என்ன? நாம் ஒரு மனிதரை மதிக்க தொட்டதையெல்லாம் ஆளத் தெரிந்த, சுவாரஸ்யமாக கையாளத் தெரிந்தவராக இருந்தால் போதாதா என்ன? சம்பாதிக்காமல் இருந்திருக்கலாம். அவர்கள் குடும்பத்தினரே கூட அவர் எழுத்தை மதித்ததில்லை. செல்லப்பாவுக்கு அதில் மிகவும் வருத்தம்.
மலரும் மணமும் தொகுப்பிற்குப் பிறகு (அதுவும் எப்பவோ நாற்பதுகளில் வந்தது) ராமையாவின் சிறுகதைகள் எதுவும் தொகுக்கப்படவில்லை என்று தான் நினைக்கிறேன். அதில் ராமையாவுக்கே அக்கறை இருக்கவில்லை. செல்லப்பா போய்க் கேட்டதற்கு, இருந்ததையெல்லாம் ஏதோ பழைய பேப்பர் காரனுக்கு வைத்திருந்த பழைய பேப்பர் குவியலாக எடுத்து வந்து செல்லப்பா முன் போட்டு, ” இந்தா, இதை என்னவேணுமானலும் பண்ணிக்கோ,” என்று சொன்னாராம். அதை எந்தக் கதையின் பக்கங்களும் விட்டுப் போகாமல் சீர் செய்து, வருஷ வாரியாகப் பிரித்து அடுக்கி வைத்த பிறகு, அது திரும்பப் பெறப் படுகிறது. செல்லப்பாவின் சிரத்தையும் உழைப்பும் வீணாவது பற்றி அவருக்கு வருத்தம் தான். ஆனால் அவர் நாணயம் மிக்கவர். சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவர். அக்கதைகளின் சுருக்கத்தை மாத்திரம் எழுதி ஒரு புத்தகமாக்கி, தனக்கு விளக்கு விருது அளிக்க வந்தவர்களிடம் அந்தப் பணத்தை ராமையா கதைக்குறிப்புகளை வெளியிட பயன் படுத்திக்கொள்ளச் சொல்லி விட்டார். தமிழ் நாடு அளிக்க வந்த கௌரவம் அல்ல இது. அமெரிக்காவில் வாழும் தமிழ் அன்பர்கள் தொடங்கிய விளக்கு விருதுவை முதலில் பெற்றவரே செல்லப்பா தான். அவருடைய அதுகாறும் பிரசுரமாகாத கையெழுத்துப் பிரதிகள் பல ஆயிரப் பக்கக் கணக்கில் இருக்க, ” ”அதெல்லாம் கிடக்கட்டும், அப்புறம் பார்த்துக்கலாம்” என்று சொல்லி, அதை விட, முதலில் ராமையாவின் கதைகளின் சுருக்கமாவது வெளிவந்து பாதுகாக்கப் படவேண்டுமென்பதில் அவருக்கு அக்கறை இருந்தது. அவருக்கு அன்றாட வாழ்க்கைச் செலவுக்கே வழியில்லாது தடுமாறிக் கொண்டிருந்த காலம். அந்தக் காலம் என்ன, எப்போதுமே அவர் அப்படித்தான் இருந்தார்.
செல்லப்பா அவ்வளவு மதித்த ராமையா எழுத்து பத்திரிகை வரத்தொடங்கியதும் வருவோர் போவோரிடம் கிண்டல் தான் செய்து வந்தார். “நம்ம செல்லப்பா பத்திரிகை கொண்டு வரான் தெரியுமோ? செல்லப்பா எழுத்துவின் ஆசிரியராக்கும், தெரியுமோ?” ஆனால் செல்லப்பா அதையெல்லாம் கண்டுகொண்டவர் இல்லை.
ராஜராஜ சோழன் விருது ஒரு லக்ஷமோ என்னவோ பெறுமான விருது அதை 20 பேருக்கு ஆளுக்கு ஐயாயிரமாக சமமாக பங்கிட்டுக் கொடுப்பது என்று தஞ்சை பல்கலைக் கழக விருது வழங்குவோர் தீர்மானித்துள்ளது கேட்ட செல்லப்பா, “இதென்ன புது வழக்கம். யாருக்காவது ஒருத்தருக்குக் கொடுங்கள். இல்லையெனில் எனக்கு வேண்டாம் இந்த பரிசு” என்று உதறியவர். இப்படி பங்கிட்டுக் கொடுப்பது என்ற வழக்கமில்லாத வழக்கத்தைக் கண்டுபிடித்ததன் பின்னிருந்த அரசியல் என்னவோ தெரியாது. மரபை மீறும் புதிய சிந்தனையாளர்களைக் கொண்டதல்லவா தமிழ நாடு.
அவருடைய ஜீவனாம்சம் நாவல் தொலைக்காட்சியில் (அரசாங்க தொலைக் காட்சியில் தான்) தொடராக வந்தது. அந்தத் தொடரின் லட்சணத்தைப் பார்த்ததுமே அவருக்கு வந்த கோபத்தில் மனதாரத் திட்டுவதைத் தான் அவரால் செய்ய முடிந்தது. ஆனால் அவருக்கு எந்த வருவாயும் தராத முறைப் பெண் நாடகத்தை பெண்ணேஸ்வரன் மேடையேற்றிய போது, அவருக்கு அது திருப்தி தந்திருக்கிறது. சந்தோஷம் தான். சிறுகதைக் காரராக எழுத்துவில் தெரியவந்த ந.முத்துசாமியின் கூத்துப் பட்டறையோ, பாண்டிச்சேரி நாடகப் பள்ளியோ அதைத் தொடவில்லை செல்லப்பாவுக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. பார்க்கப் போனால், கூத்துப் பட்டறையும் சரி, இந்திரா பார்த்தசாரதியின் வழிகாட்டலில் இயங்கிய சங்கரதாஸ் நாடகப் பள்ளியும் சரி, ஒருவரை மற்றவர் கண்டுகொண்டதில்லை. அவரவர்க்கு அவரவர் நாற்றங்கால். அவரவர் நாடகங்களையே போட்டு இன்னம் முடிந்த பாடில்லை.
செல்லப்பா எத்தகைய வறுமையிலும் அலட்சியத்திலும் வாழக் கற்றுக்கொண்டவர். ஒரு கால கட்டத்தில் கலைமகள் பத்திரிகை தன் ஆரம்ப பண்டித உலகைத் தாண்டி வெளியே எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த காலம். அப்போது கி.வா.ஜ ஆசிரியராக மணிக்கொடி எழுத்தாளர்களோடு பழகிய காலம். ந.பிச்சமூர்த்தி, லா.ச.ராமாமிருதம், தி.ஜானகிராமன், சி.சு செல்லப்பா, க.நா. சுப்பிரமணியம், த.நா. சேனாபதி, த.நா. குமாரசாமி, போன்றோர் எழுதி வந்த காலம். காண்டேகர், பகவதி சரண் வர்மா, சரத் சந்திரர் நாவல்கள் மொழிபெயர்ப்பில் கலைமகளில் வெளிவந்து கொண்டிருந்த காலம். பின் அது என்ன காரணத்தாலோ தடைபட்டது. அகிலன் பவனி வரத் தொடங்கினார். அந்த சமயத்தில் தான் கி.வா.ஜ.வே எழுதியிருக்கிறார்: செல்லப்பாவுக்கு 47 கடிதங்கள் எழுதியிருப்பேன். கலைமகளுக்கு எழுதுங்கள் என்று கேட்டு. ஆனால் செல்லப்பா எதற்கும் பதில் எழுதியவரில்லை. தினமணி கதிரிலும் செல்லப்பா உதவி ஆசிரியராக இருந்தார் என்று நினைவு, துமிலன் ஆசிரியராக இருந்த போது, (யார் யாருக்கு உதவி பாருங்கள் காலத்தின் கோலத்தை). அப்போது கருத்து வேறு பாட்டில் உதறிவிட்டு வந்தவர். இருப்பினும், கி.வா.ஜ அப்படி திரும்பத் திரும்ப வேண்டி எழுதியும் நீங்கள் ஏன் எழுதவில்லை? என்று நான் கேட்டேன். உடனே செல்லப்பா பாய்ந்தார். “பெர்சனலா சொன்னதையெல்லாம் இப்படி வெளியே சொல்லப் படாது” என்று சத்தம் போட்டார். இது தனிப் பேச்சில் சொன்னதில்லை. தீபம் பத்திரிகையில் எழுத்து வரலாறாக நீங்கள் எழுதியது தான்” என்று நான் சொன்னதும், குரல் தணிந்து,” சரி விடுங்கள். இப்போ என்ன அதுக்கு?” என்றார். இன்னொரு முறை, வேறு ஏதோ சந்தர்ப்பத்தில், (அனேகமாக தினமணி கதிர் சமாசாரமோ என்னவோ) பெரிதாக சத்தம் போட்டார். “மதியாதார் வீட்டுப் படி ஏறலாமோ. அங்கே என்னத்துக்கு கால் வைக்கறது?”
இவ்வளவுக்கும் இடையே தான், எழுத்துவின் புதிய கண்டுபிடிப்பாக, செல்லப்பாவின் செல்லப்பிள்ளையாக சிவராமூ திருகோணமலையிலிருந்து சென்னை வந்து தனக்கு தமிழ் நாட்டில் தெரிந்த ஒரே மனிதராக செல்லப்பாவின் வீட்டில் கிட்டத்தட்ட ஒரு மாதகாலமோ என்னவோ தங்கியிருந்ததும். செல்லப்பாவின் ஒரே வாரிசு, மணி சிறு பையன். விளையாட்டுப் பையன் மாமி சொல்லக்கேட்டிருக்கிறேன். “அவனுக்கு சாப்பிடவே தெரியாது. கறி, கூட்டு சாதம், சாம்பார் எல்லாத்தையும் ஒண்ணாக் கலந்துப்பான். மோரும் அதிலே தான் ஊறுகாயும் அதிலே தான். அவரோ நானோ தான் எப்படிச் சாப்பிடறதுன்னு சொல்லிக் கொடுப்போம். அப்படி இருந்த பிள்ளைதான் அவன். மணி கழுத்தைப் பிடிச்சு நெருக்கிண்டு, இப்படியே நெருக்கித் திருகிடட்டுமா? -ன்னு கேக்கறான். என்ன சொல்றது?. “ அப்படி உனக்கு அவன் கழுத்தைத் திருகணும்னு தோணித்துன்னா திருகிக்கோயேம்பா. அவன மாதிரி நீயும் எனக்கு ஒரு பிள்ளைதான். கொன்னுடு” –ன்னேன். செல்லப்பா மனம் வருந்திக் கேட்டுக்கொண்டிருந்தார், மாமி இதைச் சொன்ன போது. அவர் எதுவும் சொல்லவில்லை .”ச்ச என்னமோ போ” என்று அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார். செல்லப்பாவுக்குத் தான் தன் விமரிசன அவதாரத்தில், எழுத்து நடத்தும் சோதனையில் எத்தனையோ ரக எழுத்தாளர்களைச் சந்திக்க வேண்டி வந்தது. மாமிக்கு என்ன தலைவிதி, எல்லா ரக மனித ஜீவன்களையும் சகித்துக்கொள்ள வேண்டுமென்று? வறுமைக்கிடையே செல்லப்பாவின் பிடிவாதங்களையும் கோப தாபங்களையும் சமாளிப்பதே பெரும் பாடு.
மாமி சமாளிக்கவேண்டி வந்த ஜீவன்களில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். சிலசமயங்களில் ஒரு நாள், சில சமயங்களில் ஒரு வாரம் என. ”இங்கேயே இருந்துடுங்கோ. பேசீண்டிருக்கலாம்”.
என்று சொல்லிவிடுவார். ஒரு சமயம் எழும்பூர் ஸ்டேஷனிலிருந்து இறங்கியதும் பக்கத்தில் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து குளித்துவிட்டு அவரைப் பார்க்கப் போனபோது அவர் அந்த அறையைக் காலி செய்ய வைத்து ஞானக் கூத்தன் தங்கியிருந்த தோப்பு வெங்கிடாசல முதலி தெரு மாடி அறையில் இடம் தேடிக்கொடுத்தார். “இங்கே பக்கத்திலே இருந்தாத்தானே பேசக் கொள்ள சௌகரியமா இருக்கும்!” என்றார். அவருடைய வீட்டிலேயே ஒரு வாரம் தங்கி இருந்திருக்கிறேன். எனக்கு வயிறு சரி இல்லாமல் போனது ஒரு சமயம். தருமு சிவராமுவுக்கு சாப்பிடறது எப்படி என்று சொல்லிக்கொடுக்க வேண்டிவந்தது போல, வயிற்று வலியின் போது சிகித்சை எப்படி எடுத்துக்கொள்வது என்று செல்லப்பா சொல்லிக்கொடுத்தார். “சுண்டைக்காயை வறுத்துப் பொடி செய்யச் சொல்லியிருக்கேன். மாமி கொண்டு வருவா, கொஞ்சம் பொறுங்கோ,:” என்று சொல்லி வந்ததும், சாத்தைக் கொஞ்சம் குழிச்சுக்குங்கோ, ஊம் பொடியைப் போடு.. போட்டதும் சட்டுனு சூடு அடங்கறதுக்குள்ளே சாத்தைப் போடு மூடுங்கோ, கொஞ்ச நாழி கழிச்சு சாத்தை நன்னா கலந்து சாப்பிடணும்” என்று படிப்படியாக சொல்லிக்கொடுத்தார். இந்த பத்தியமெல்லாம் எனக்குப் புதிதாக இருந்தது.
ஒரு சமயம் ” வாங்கோ, பொன்னுத்துரை வந்திருக்கார் போய் பார்த்துட்டு வரலாம்,” என்று செல்லப்பா செல்ல கிளம்பினோம். ஆர்காட் ரோடில் புத்ர என்ற அச்சகம் இருக்கும் இடத்தில் அப்போது ஒரு சின்ன ஓட்டு வீடு தான் இருந்தது. பழைய கிராமத்து வீடு மாதிரி. பொன்னுத்துரை இருந்தார். அவர் மனைவியும். பின் அவரது நண்பர், பிரசுரகர்த்தர், எம் ஏ. ரஹ்மான் பொன்னுத்துரைக்கு எல்லா காரியங்களிலும் உதவியாக இருப்பவர். பொன்னுத்துரை அக்காலங்களில் கலாநிதி கைலாசபதியும் கா.சிவத்தம்பியும் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் தனித்து நின்று வாள் சுழற்றிக்கொண்டிருந்தவர். கா.சிவத்தம்பியாவது மிதவாதி என்று சொல்லவேண்டும், கைலாசபதி அடியொற்றிச் சென்றாலும். நின்று நிதானித்து எப்படியோ வாதமிட்டுக்கொண்டிருப்பார்.
ஆனால் கைலாசபதி நம்மூர் முற்போக்கு மேடையில் பேசுவது போல கொஞ்சம் பாமரத்தனமான சீற்றம் நிறைந்த வார்த்தைகளைக் கொட்டுவார். ஆரம்ப காலத்தில் எஸ் பொன்னுத்துரையைப் பாராட்டி ஏதோ எழுதியிருப்பார் போலும். அம்பலவாணர் என்ற புனைபெயரில்
.
சிவராமூ பொன்னுத்துரையிடம் கைலாசபதியைக் கேலி செய்யவே, ”அம்பலவாணர் தான் கைலாசபதி என்று உமக்குத் தெரியாது ,” என்று சிவராமூவின் அறியாமையைக் கிண்டல் செய்தாராம். ஆனால் வெகு சீக்கிரம் பொன்னுத்துரைக்கு அவரது அறியாமையே தெரிய ஆரம்பித்தது. காரணம் பொன்னுத்துரை அம்பலவாணரின் மடத்தில் சேர்ந்து குட்டித் தம்பிரானாக மறுத்தது தான். பின் என்ன? சக்கரவ்யூகத்தில் நுழைந்து தனித்தே வாள் சுழற்ற ஆரம்பித்தது தான். இதெல்லாம் அன்றைய அம்பலவாணருக்கு புரிய வராது. எஸ் பொன்னுத்துரையின் கிண்டலுக்கு அம்பலவாணர் சற்றும் நேர் நிற்கும் திறமை அற்றவர். கிண்டல் என்கிற சமாசாரம் முற்போக்கு சந்தையில் என்றைக்கும் எவருக்கும் கிட்டாத சமாசாரம். பின்னர் பொன்னுத்துரை கலாநிதி கைலாசபதி எம். ஏ. பி. எச் டி யின் புகழ் பாடியே பல நூல்கள் வெளியிட்டுள்ளார். அதில் ஒன்று எனக்கு நினைவில் இருப்பது “ பந்த நூல் மூலமும் நச்சாதார்க்குமினியர் உரையும்” அது அம்பலவாணர் அடி பணிந்து துதித்தேற்றி முக்தி பெற்று சிவபதம் அடைந்த பக்த கோடிகளைப் பற்றிய புராணம் சொல்லும் ஒரு பழைய சுவடியின் மூலமும் உரையுமாகும் அது. கைலாசபதியால் இந்தக் கிண்டலையெல்லாம் தாங்கவும் முடியாது. எதிர்கொண்டு பதிலளிக்கவும் முடியாது. அவர் தன் பக்த கோடிகளை ஏவி விடுவார். அது அவரது போர் முறை. கைலாசபதியின் எழுத்துக்கள் சில இலங்கைப் பத்திரிகைகளிலிருந்து எடுத்து எழுத்துவில் மறு பிரசுரம் செய்திருந்ததிலிருந்து எனக்கு கைலாசபதியின் எழுத்துக்களோடும் கருத்துக்கள் என்று சொல்லப்பட்டனவோடும் பரிச்சயம் தொடங்கியிருந்தது. கைலாசபதி என்ன, இலங்கை தமிழ் எழுத்தோடான எனது பரிச்சயம் தொடங்கியதே சரஸ்வதி எழுத்து பத்திரிகைகளினால் தான்.
கைலாசபதியின் வீர் தீரப் பிரதாபங்களை லீலைகளைப் பற்றி எழுதியதிலிருந்தும் பொன்னுத்துரை தனித்து நின்று தன் வழியில் செல்லும் தகைமையிலிருந்து எனக்கு அவரிடமும் அவர் எழுத்திலும் பிடித்தம் ஏற்பட்டிருந்தது. அவரைச் சந்திப்பதில் எனக்கும் சந்தோஷம் தான். பேசிக்கொண்டிருந்தோம் வெகு நேரம். போன உடனேயே நானும் அவரும் இலங்கைத் தமிழர் பிரசினைகளையும் அரசியல் நிலவரத்தையும் பற்றியுமே பேசிக்கொண்டிருந்தோம். செல்லப்பா ரொம்ப நேரம் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு இலக்கியம் தவிர வேறு எதிலும் அக்கறை இருந்ததில்லை. காந்தியோடு அவரது அரசியல் ஆரம்பித்து அதோடு முடிந்தும் விடும். “பிறகு ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து,” என்னை அவரோடு பேச விடுங்களேன். வேண்டியது அரசியல் பேசியாயிற்று. அவரோடு எனக்கு இலக்கியம் பேசணும்” என்றார் கடுமை தொனிக்க. பேசினோம். அதில் நான் கலந்து கொள்ள முடியுமே. என்ன பேசினோம் என்பதெல்லாம் நினைவில் இல்லை. ஆனால் எல்லோருமே, பொன்னுத்துரை, ரஹ்மான் இருவருமே சுவாரஸ்யமாக பேசும் மனிதர்கள். ”வீட்டுக்கு வாருங்கள்” என்று அழைத்தார் செல்லப்பா. இவ்வளவுக்கும் பொன்னுத்துரை செல்லப்பாவிடம் ஏதும் நெருக்கம் காட்டியவரில்லை. அந்தக் கால சேர சோழ பாண்டியர்கள் சந்தித்துப் பேசிக்கொண்டது போல. அவரவரது ராஜ்யங்கள் தனி. நட்புடன் பேசுவோமே. என்பது போலத் தான். பற்றி இலக்கியம் என்ற சொற்றொடர் அக்கால கட்டத்தில் க.நா.சுவினால் பிரபலப் படுத்தப் பட்டிருந்தது. அந்த இலக்கிய சர்ச்சைக்கு பொன்னுத்துரையின் பங்களிப்பு இப்படியாக இருந்தது. குருவிச்சை இலக்கியம் என்று சொல்வது தான் அதற்கு சரியான சொல். பயிருக்கு அருகில் அதைச் சார்ந்து வாழ்ந்து பயிரைக் கெடுக்கும் குருவிச்சை. பற்றி இலக்கியம் என்பது தமிழறியாதார் கூற்று என்று விளக்கமும் தந்திருந்தார் என்று நினைப்பு.
மறு நாள் நான் வீட்டை விட்டு சீக்கிரமே கிளம்பியிருந்தேன். தேவ சித்திர பாரதி என்னும் புனை பெயர் கொண்ட முகம்மது இப்ராஹீம் என்னும் அன்பர், ஜெயகாந்தனிடம் அதீத விஸ்வாசம் கொண்டவர், ஞான ரதம் என்ற பத்திரிகை நடத்தியவர். அதில் நானும் சிவராமூவும் எழுதியிருந்தோம். அது பற்றி பின்னர் எழுதுகிறேன். அவர் எங்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்திருந்தார். க.நா.சுவுக்கும் செல்லப்பாவுக்கும் மணிவிழா சிறப்பிதழ் வெளியிட்டவர். அவரோடு பேசிக்கொண்டிருந்து விட்டு நான் ”கிளம்புகிறேன் செல்லப்பா வீட்டுக்கு,” என்று சொல்லிக் கிளம்பினேன். ”செல்லப்பாவை நானும் பார்க்கணும் நானும் வருகிறேன்,” என்று அவரும் அவரோடு ராமசாமி என்று நினைப்பு இருவரும் கிளம்பினர்.
நாங்கள் போய்ச் சேர்ந்த போது பொன்னுத்துரையும் ரஹ்மானும் செல்லப்பாவோடு பேசிக்கொண்டிருந்தனர். அப்போதும் எனக்கும் செல்லப்பாவுக்கும் வாக்கு வாதம் இடையில் எப்படியோ தொடங்கி விட்டது. அப்போது எப்படியோ பேச்சு எங்கோ திரும்பி பாதை தவறி Installation, constructionism என்று திரும்பியது. என்னளவில் இதை ஒரு அதீத எல்லைக்கு இட்டுச்செல்கிறார்கள். இந்த table fan கூட ஒரு புதிய வடிவமைப்பு தான் இதிலும் ஒரு ஒழுங்கு இருக்கிறது. முதலில் இந்த வடிவம் ஒரு abstraction தான். ஆனால் உபயோகத்துக்கு வந்து விட்ட பிறகு இதன் அரூபம் மறைந்துவிடுகிறது.” என்று இப்படி ஏதோ பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. இது நினைவில் இருக்கக் காரணம் அந்த சூழலுக்கு ஒத்திராத, தனித்துக் காணும் விஷயமாக இருக்கவே அது நினைவில் நின்று விட்டது. இலக்கிய சம்பந்தமாக பேசியது மறந்து விட்டது. அது எப்போதும் பேசிக்கொண்டே இருப்பது. அது செல்லப்பாவின் கோபத்தைத் தீண்டினால் தான் நினைவிருக்கும் ஒன்றாகிறது. “இப்ப இங்கே இவாளை அழைச்சிண்டு வந்தது இதப் பேசறதுக்கா?” என்று அவருக்கு கோபம். அவரது நிதானத்தை இழக்கும் வகையில் வேறு ஒரு காரியத்தையும் செய்துவிட்டேன்
எல்லோருக்கும் அங்கு தான் சாப்பாடு. பேச்சு எப்போது நின்றது!. எல்லோரும் சாப்பிட்டு முடிந்து வாசற்படி வரை கொண்டு விட்டு வரும் வரை பேச்சு தொடர்ந்தது. திரும்பி வந்து கூடத்தில் உட்கார்ந்தோம். அப்போது செல்லப்பா கேட்டார்,” ஆமாம் இவர்கள் எப்படி உங்களோடு சேர்ந்து கொண்டார்கள்?” என்றார். செல்லப்பா இருக்கும் நிலையில் விருந்து வைப்பதே சிரமமான காரியம். அதிலும் நாலுபேர் திடீரென்று ஆறு பேரானால், …….” நான் அவர்களைப் பார்க்க வருகிறேன் என்று சொல்லியிருந்தேன். கிளம்பும் போது செல்லப்பாவை நாங்களும் பார்க்கணும் வரோம்” என்று கிளம்பிவிட்டார்கள். இப்படி நடக்கும் என்று நினைக்க வில்லை.. எனக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை’ அதோட வீட்டுக்கு வாங்கோ என்று கூப்பிட்டால் அது சாப்பிடறதுக்கும் கூப்பிடறதுன்னு எனக்கு தோணலை” என்றேன். “ சரி போறது விடுங்கோ. அதைப் பத்தி ஒண்ணும் இல்லே. ஆனால் திடீரென்று எதிர்பாராமல் வந்து விட்டால் கஷ்டமாப் போயிடறது என்றால்……”. அவருடன் பழகிய நீண்ட காலத்தில் அன்று ஒரு நாள் தான் அவர் தன் கஷ்டங்களைப் பற்றி ஏதோ பேச்சு வாக்கில் சொல்லாமல் சொன்னது.
ஆரம்ப காலத்திலிருந்தே அவர் சம்பாத்தியத்துக்கு என்று எங்கும் வேலையில் இல்லாதிருந்த காலம் தான். எழுத்து நடத்திய போதும். அது நின்று விட்ட போதும். சில வருஷங்கள் கழித்து அவர் எழுத்து பிரசுரம் நடத்திய போது தான், அவற்றை நா. பா.வின் பாஷையில் தெருவில் புடவை விற்கிறவன் மாதிரி சுமந்து சென்றதில் தான் ஏதோ கொஞ்சம் பணம் பார்க்க முடிந்தது என்று சொல்லியிருக்கிறார். அந்த ஆரம்ப வருஷங்களில் அவர் கடைக்கு எடுத்துச் செல்ல ஒரு கூடையில் கத்தரிக்காய், வெண்டைக்காய் நிரப்புவது போல கிளி, குருவி என்று காகிதத்தில் பல வர்ணங்களில் பொம்மைகள் செய்து வைத்திருப்பார் பார்த்திருக்கிறேன். எங்கே எடுத்துச் செல்வார், எப்போது விற்பார் என்பது தெரிந்ததில்லை. நான் கேட்டதில்லை. வாடிக்கையாக ஒரு சில கடைகள் இருக்கும் என்று யூகிக்கிறேன்.