தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை (2)

நோயல் நடேசன்சிவா சுந்தரம்பிள்ளை அவசரமாக எடுத்த முடிவின் விளைவாக ஆறு மாதங்கள் வேலையற்று  நிற்க வேண்டி இருந்தது. அந்தக் காலங்கள் மிகவும் முக்கியமானவை. பல இடங்கைளை பல மனிதர்களைப் பார்த்து பழகிய நாட்கள்.  அந்த ஆறுமாத காலத்தில் விக்ரோரியாவில் பல இடங்களில் இரு நாட்கள் , ஒரு கிழமை என விடுப்பு எடுக்கும் மிருகவைத்தியர்களுக்குப் பதிலாக வேலை செய்தான். அறிமுகமற்ற சிறு நகரங்கள் மற்றும் மெல்பன் புறநகர்ப் பிரதேசங்கள் என சில இடங்களில் வேலை செய்யும்போது அந்தப் புதிய இடங்களும் , புதிய மனிதர்களும் திரில் அனுபவமாக இருந்தாலும் மனதில் நிரந்தர வேலை இல்லையே என்ற அழுத்தம் பனை ஓலைப் பையில் சரசரக்கும் உயிர் நண்டு போல் எப்போதும் குடைந்து கொண்டிருக்கும். விக்ரோரியாவில் பக்கஸ்மாஸ் மெல்பேனில் இருந்து நுாறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. அதிகமாக பால் மாட்டுப்பண்ணைகள் உள்ள பிரதேசமாகும். சிவா சுந்தரம்பிள்ளை வேலைக்கான நேர்முகத்திற்குச் சென்ற போது அங்கு ஏற்பட்ட அனுபவம் வாழ்கையில் மறக்க முடியாதது மடடுமல்ல. வாழ்வையே வேறு பாதையில் திருப்பியது. சிறிய சம்பவங்கள் நெருப்புப்பொறி போன்று பெரிய காட்டை அழிக்க கூடியவை. சுந்தரம்பிள்ளையின் எதிர்காலத்தை புதிதாக மீண்டும் புதிதாக வார்பதில் பக்கஸமாஸ் வைத்தியரும் அங்கு நடந்த நேர்முகமும் பங்காற்றியது.

சுந்தரமபிள்ளையின் இலங்கை மற்றும் இந்தியாவின் வேலைக்கால அனுபவத்தை கேட்டுவிட்டு அந்த பக்கஸமாஸ் மிருக வைத்தியர், ‘இந்தப் பகுதியில் பண்ணை மாடுகள் மத்தியில் வேலை செய்வதற்குரிய தகுந்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறது. அதனால் எனக்கும் உங்களைப் பிடித்து இருக்கிறது. ஆனால் இங்குள்ள விவசாயிகள் உங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என நினைக்கிறேன்’ என்றார்.

அந்தப் பதில், காச நோய் உள்ளவன், கோழையும் இரத்தமும் கலந்து முகத்தில் காறித் துப்பியது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தியது. நீ ஒரு வெளிநாட்டவன் என்பதை அந்தப் பதில் உணர்த்தியது. அந்த மனிதர் அவுஸ்திரேலியருக்கே உரிய நேர்மையை கடைப்பிடித்து முகத்துக்கு நேரே சொன்னது உண்மையாக இருந்தாலும் சிவா சுந்தரம்பிள்ளைக்கு பலநாட்களாக பழுதாகிய வேர்க்கடலை ஒன்றைக் கடித்தது போல் நாக்கில் பலமான கசப்பாக இருந்தது. அவரின் அந்தப் பதில், ஒரு விதத்தில் புதிய முடிவை எடுக்க வைத்தது. பால்பண்ணை விவசாயிகள் மத்தியில் தொழில் செய்ய முடியாது. இனிமேல் மாடுகளின் வைத்திய அனுபவத்தை வைத்து இந்த நாட்டில் தொழில் பார்க்க முடியாது.  உனது பழய அனுபவங்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு புதிதாக செய். என்ன செய்வது என்று சிந்தனை செய் என உள்ளுணர்வு அழுத்தம் திருத்தமாக கூறியது .

அதற்கு ஒரே இடம் நகரம் மட்டுமே. ஆனால் அங்கு நாய் பூனைகளுக்கு மட்டுமே வைத்தியம் பார்க்க முடியும். அந்தப் பகுதியில் ஏட்டுப்படிப்பு மடடும்தான். எந்த தொழில் அனுபவமோ கிடையாது. சவரத்தொழில் செய்ய விரும்புவன் மண்முட்டியில் கத்தியால் மழித்து பழகுவதுபோல் ஆரம்பத்தில் இருந்து தொடங்கவேண்டும்.

ஏழு வருடகாலமாக இலங்கையிலும் இந்தியாவிலும் பெற்ற மாடுகளுடனான வைத்திய அனுபவத்தை மூட்டை கட்டிவிட்டு, இந்நாட்டின் நகரப்பகுதிகளில் நாய் பூனைகளுக்கு வைத்தியம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்பதை அந்தப்பதில் உணரவைத்தது. ஆனால் அதற்கு அனுபவபம் தேவை.

புது அனுபவத்தை கட்டாயம் தேடிப் போகவேண்டும் என்ற உணர்வின் விளைவாகத்தான் அவுஸ்திரேலியாவில் உள்ள  பெரிய அந்த மிருக வைத்தியசாலையில் வைத்தியர் தேவை என்ற விளம்பரத்தை மிருக வைத்திய ஜேர்னலில் பார்த்துவிட்டு அந்த வேலைக்கு விண்ணப்பித்தான். அந்த வேலைக்கான நேர்முகம் காலை பத்து மணியளவில் இருப்பதாக உடனடியாக பதில் வந்திருந்தது.
இரயில்வே நிலையத்தில் இறங்கி கோபேர்க் செல்லும் ட்ராமில் ஐந்து நிமிட பயணத்தில் அந்த வைத்தியசாலைக்குரிய தரிப்பு வந்தது. எலிசபத் வீதியில் உள்ள அந்தத் தரிப்பில் இறங்கி சில நிமிட பொடி நடையில் கிளைத் தெருவில் உள்ள வைத்தியசாலையின் வாசல் பகுதிக்கு வந்து சேர்ந்தான் சுந்தரம்பிள்ளை.

வைத்தியசாலை வெள்ளை வர்ணமடித்த உயரமான  சுவர்களுக்கு நீல இரும்பு கதவுகளுடய முன்பகுதியை கொண்டது. வெளியில் இருந்து பார்த்தால் எதுவும் தெரியாது. சின்னதாக இரும்புக் கதவுகளில் வைத்தியசாலையின் பெயர் எழுதப்பட்டிருந்தது. இரண்டு மாடிகளை கொண்ட பழய மோஸ்தரில் அமைந்த ப வடிவில் அமைந்த ஆடம்பரமில்லாத கட்டிடத்தின் ஒரு பக்கத்தில் மோட்டார் கார்களுக்கு ரயர் மாற்றும் கடையும் மறுபுறத்தில் கார் எஞ்ஜினை பழுதுபார்க்கும் கடைக்கும் இடையில் இருந்தது. இந்த பகுதி நகரத்தின் மத்திய பகுதியில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர்  அருகில் இருந்தபோதும் கைத்தொழில்பேட்டையின்  சுற்றாடலை கொடுத்தது. இரும்புக் கதவுகளின் வழியாக சென்றதும் இடது பக்கத்தில் உடனே வைத்தியசாலையின் கட்டிடத்துள் செல்ல முடியும்.அங்குள்ள வரவேற்பு பகுதியின் இடது பக்கத்தில் பலர் சிறிதும் பெரியதுமான பலவித நாய்களை வைத்துக்கொண்டு இருந்தார்கள். சிலர் வரவேற்று பகுதிக்கு தள்ளி நின்றார்கள். அவர்களது நாய்கள் பெரிதாக இருந்தன.எல்லா நாய்களும் சங்கிலிலோ அல்லது தோல் வாரிலோ கட்டப்பட்டு கைகளால் பிடிக்கப்பட்டு பாதுகாப்பாக இருந்தன. சில நாய்கள் ஒன்றை ஒன்று பார்த்தும் மணந்து கொண்டும் முகத்தை மெதுவாக உரசிக்கொண்டு சினேகமாக இருந்தன. இவைகளுக்கு எதிரே வரவேற்பு பகுதியின் வலது பக்கத்தில் ஆள் உயரத்திற்கு பலகையால் தடுப்பு சுவரால் மறைக்கப்பட்டு அங்கே பூனைகளை பெட்டிகளில் வைத்து நாய்களின் கண்களில் இருந்து மறைத்து வைத்துக்கொண்டு இருந்தார்கள். சில நாய்கள் பூனைகளின் மணத்தை நுகர்ந்துகொள்ள மூக்கை பூனைகளின் திசையை நோக்கி நீட்டிக்கொண்டிருந்தன. பூனைகளைத் தழுவிவரும் காற்று அவைகளின் அமைதியை குலைத்தது.

 ஒரு வயதான அவுஸ்திரேலியர் உள்ளே செல்லாமல் வாசலில் நின்றார். எழுவது வயது மதிக்கக் கூடிய அவரது தலையில் மயிர்கள் எதுவும் இல்லை. கருமையான மூக்கு கண்ணாடி அணிந்திருந்தார். வெள்ளை பாண்டு வெள்ளைச் சட்டை என உடையணிந்த மனிதரின் வலது கையில் வெள்ளிப் பிரம்பு இருந்தது. இடது கையில் பிடித்திருந்த சங்கிலியில் அடுத்த முனையில்  ஒரு சந்தனக்கலரான லாபிரடோர் இன நாயொன்று நின்றது. வாசலுக்கு அருகே வந்த சிவா சுந்தரம்பிள்ளையின் இடுப்புக்கு கீழ்ப் பகுதியை முன்னாலும் பின்னாலும் முகர்ந்து விட்டு ஏதோ புரிந்து கொண்டது போல் அந்த நாய் மீண்டும் தன் தலையை தொங்கப் போட்டவாறு மீண்டும் தனது எஜமானரிடம் சென்றது.

‘இவனுக்கும் எங்களை பரிசோதித்து மருந்து கொடுக்கிற பலன் கிடைக்கின்றதா என இன்று தெரியும். இவன் எங்களை மிருகாபிமானத்துடன் நடத்துவானா?’ என்ற ஏக்கம் அந்தப் பிராணியின் முகர்வில் இருக்கலாம் என்று சிவா சுந்தரம்பிள்ளை தனக்குள் நினைத்துக்கொண்டான். இந்த இடத்தில் வேலை கிடைத்தால் அதை விட அதிஸ்டம் தேவையில்லை என்ற நினைப்பும் உடனடியாக வந்தது.

இரண்டு பெண்கள் ரிசப்சனினில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தவர்கள் தங்களது வேலையை முடித்து விட்டு போகும் வரையும் காத்திருந்து ரிஷப்சனில் இருந்த இரு பெண்களிடம்  தன்னை அறிமுகப்படுத்த வரிசையில் காத்துக் கொண்டான். ஒருத்தி நடு வயதில் மிகத்தாட்டியாக அங்கிருந்த சிறிய இடத்தை அடைத்துக்கொண்டிருந்தாள். அவளது அங்கங்கள் ஒவ்வொன்றும் அணிந்திருந்த நீல யூனிபோமை தாண்டி வருவதற்கு திமிறியபடி முயற்சித்தன. பொன்னிறத்தலை மயிரை கொண்டையாக போட்டிருந்தாள்.

கண்ணுக்கு அவள் மையிட்டது சற்று அதிகமாக இருந்தது என நினைக்கத் தோன்றியது.அங்கங்கள், அலங்காரம்  எல்லாவற்றிலும்  அவுஸ்திரேலிய செல்ல செழிப்பின் பிரதிநிதியாக காட்சியளிதாள். மற்றவள்  அழகாக, மற்றவளுக்கு சகல விதத்திலும் மாறுதலாக நின்றாள். அவள் ஒல்லியான தோற்றத்துடன் தனது கரிய நிறமான  கூந்தலை முதுகு எங்கும் கார்மேகமாக படர விட்டிருந்தாள்.
யாரிடம் முதலில் அறிமுகம் செய்வோம் என மனத்தில்  வெள்ளி நாணயத்தை சுண்டிப்பார்த்த போது ஒல்லிப் பெண் கருங் கூந்தலைக் கொண்ட தலையாக வானத்தை நோக்கி விழுந்தது.

சாதி, சமய, மொழி ரீதியான வேறுபாடு மட்டுமல்ல உடல் ரீதியான வேறுபாடு கூடாது என்ற ஞான உணர்வு தலைகாட்டியதும் இருவருக்கும் வஞ்சகம் இல்லாமல் பொதுவாக அறிமுகம் செய்து கொண்டான்.

இளமையாகவும் ஒல்லியாகவும் இருந்த பெண் கண்கள் விரிய  ‘நீங்கள் பார்க்க வேண்டியவர் டொக்டர் காலோஸ் சேரம். என்னை பின் தொடருங்கள்’ என கூறியபடி வரவேற்பு அறையின் இடது பக்கத்தில் அமைந்த கொரிடோர் வழியாக பனியில் சறுக்கியபடி செல்பவள்போல் இடுப்பை வைத்துக்கொண்டு சென்றாள். அந்த நீண்ட கொரிடோரின் அவளைத் தொடர்வது இலகுவாக இருக்கவில்லை. அவளைப் பின் தொடர்ந்த போது மத்தியில் உள்ள ,இரண்டாவது இலக்க அறையின் கதவில் இரண்டு முறை தட்டிவிட்டு காத்திராமல் உள்ளே சென்றவளை சிவா சுந்தரம்பிளை பின்தொடர்ந்தான்.

‘இதோ இவர் உங்களைத் தேடி வந்துள்ளார், காலோஸ்’எனக்கூறிவிட்டு பின்னர் திரும்பி ‘இவர்தான் நீங்கள் தேடி வந்த பெரியவர்’ என குறும்புத்தனமான புன்னகையால் அந்த அறையை நிறைத்து விட்டு வெளியேறினாள்.

அந்த டொக்டர் தன்னை காலோஸ் சேரம் என பலமான கை குலுக்கலுடன் அறிமுகப்படுத்திய பின்னர், வேறு எதுவும் பேசாது தன்னைபின் தொடர்ந்து வரச் சொல்லிவிட்டு முன்னால் மிக வேகமாக சென்றார். மனிதர் நின்று அழைத்து போவதற்கு முயற்சிக்காதது வியப்பைக் கொடுத்தது. ஆறடி உயரம் விரிந்த தோள்களும் உள்ள  மனிதர், இடுங்கிய கண்களைக் கொண்ட சீன முகத்துக்குச் சொந்தமானவர். சீனர்களில் எத்தனை பேர் ஆறடியில் இருப்பார்கள்? முகத்தைப் பார்த்த போது கடுகடுப்பாக இருந்தது. முகத்தில் மருந்துக்குகூட சிரிப்பு இல்லை. பார்வைக்கு ஒரு கறார் பேர்வழி போல் தெரிந்தது. இவரின் கீழ் வேலை செய்வது இலகுவான காரியமாக இராது என நினைத்துக் கொண்டு அவரைப் பின்தொடர்ந்து சிறிய படிகள் வழியாக மேல்மாடியில் உள்ள ஒரு அறையுள் சுந்தரம்பிள்ளையும் சென்றான்.

அந்த அறையில் ஏற்கனவே அந்த நாற்காலிகள் மேசையுடன் அடைத்தபடி இருந்தது.

எதுவும் சீராக இருக்கவில்லை. மேசையில் கடிதங்கள், புத்தகங்கள் ,கோப்புகள் என நிரம்பி இருந்தது. சுவர்கள் வெறுமையாக இருந்தது. அலுவலகம் போல் இருந்தாலும் அழகுணரவோ ஒழுங்கோ இல்லாத அறையாக இருந்தது.   அங்கு தடித்த மீசையுடன் கனமான மூக்குக் கண்ணாடி அணிந்த உயரமான சுமார் ஐம்பது வயதுள்ள ஒருவர் இருந்தார். அவரது இளநீல சட்டையின் வழியே அவரது  வயிறு அவர் அமர்ந்திருந்த கதிரையின் கீழ் எட்டிப் பார்த்தது. அவர் அறையை மட்டுமல்ல தனது உடலையும் சீராக பராமரிக்கவில்லை. இவைகள் ஒன்றுக்கொன்று தொடர்பானவையா?

அவரது மேசையில் குவிந்திருந்த கோப்புகளுக்கு இடையில் ஒரு சாம்பல் நிறமான பூனை அமைதியாக தூங்கிக்கொண்டிருந்தது. மேசையில் அந்த மனிதர் புத்தகங்களை வைத்தும் எடுத்தும் வேலை செய்து கொண்டிருக்கும்போது இந்தப் பூனையால் கண்களை மூடியவாறு உறங்க முடிகிறது?  தான் இருப்பது வேறு உலகத்தில் என நினைக்கிறதா?’

`இவர்தான் புதிதாக சேர்ந்த மிருக வைத்தியர். இவர்தான் ஜோன் எங்கள் கணக்காளர்.’ என காலோஸ் சேரம் இருவருக்கும் பரஸ்பரம் அறிமுகப்படுத்தியபோது சுந்தரம்பிள்ளை  திடுக்கிட்டான்.

‘எப்படி இவரால் இப்படி சொல்ல முடிகிறது? ஏற்கனவே தீர்மானித்துவிட்டாரா?

இல்லை இது நேர்முகத்துக்கு வரும் எல்லோரிடமும் நம்பிக்கை தருவதற்காக கூறும் ஒரு வழக்கமான வார்த்தையா? மனத்தை நோகடிக்காமல் நாசுக்காக வேலை இல்லை என பல தடவை சொல்லக் கேட்டிருக்கிறான். இது எதிர்மாறாகவல்லவா இருக்கிறது? பல நேர்முகங்களில் நன்றாக செய்ததாக எண்ணியவை. ஆனால் முடிவில் சறுக்கியதால் தன்னம்பிக்கை குறைந்து விட்டது. ஆனாலும் மனக்குழப்பத்தை வெளியே காட்டவில்லை ஜோன் காட்டிய கதிரையில் சுந்தரம்பிள்ளை உட்கார்ந்தான். அப்பொழுது மேசையில் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்த பூனை பேச்சு சத்தத்தை கேட்டு எழுந்து மெதுவாக சுந்தரம்பிள்ளையின் மடியில் இறங்கி கால்களை நீட்டி உடலை வளைத்து சோம்பல் முறித்தது. இதைக் கண்ட கணக்காளர் ஜோன் ‘கொலிங்வூட்டுக்கு புதிய டொக்டரிடமும் பற்றுதல் வந்துவிட்டது போல“ எனக் கூறி விட்டு வெளியேறினார்.

‘இன்று வேலை செய்யலாமா?’ என சேரம் கேட்டார்.

‘நான் அதற்குத் தயார்’ என்றான் ஆச்சரியத்தை வெளிக்காட்டாமல் ‘முக்கியமான விடயம் ஒன்று உங்களுக்குச் சொல்லவேண்டும். அதாவது இங்கே நடக்கும் வேலைத்தல அரசியலில் ஈடுபடக்கூடாது. இதை நான் ஆரம்பத்திலேயே சொல்கிறேன். தற்பொழுது இங்கே பலர் எனக்கு எதிராக சதி செய்கிறார்கள்.

இவர்களது வலையில் நிச்சயமாக நீங்கள் விழுந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இப்பொழுதே சொல்கிறேன்”. என்று அவர் கூறியபோது, கொலிங்வூட் மெதுவாக வயிற்றில் முன்காலை வைத்து பின்னங்கால்களில் நின்றபடி சுந்தரம்பிள்ளையின் காதருகே முகத்தை உராய்ந்தது.

‘இந்த மனிதன் இப்படித்தான். கொஞ்சம் நாகரீகம் குறைவு. நீ அதை பொருட்படுத்தாதே. மனதில் எதையும் மறைத்து வைத்திருக்கத் தெரியாது’

மெதுவான மழலையான குரலில் அந்த வார்த்தைகள் வந்தது.

சுந்தரம்பிள்ளைக்கு காலோஸ் சேரம் கூறிய விடயம் அதிர்ச்சியை தந்தது. ஆனால் பூனையின் குரல் உடலை பனிப்பாளங்களின் நடுவே வைத்தது  சுந்தரம்பிள்ளைக்கு போன்று இருந்தது.

‘இந்தப் பூனை பேசுகிறது! அதுவும் இந்த வைத்தியசாலையின் தலைமை வைத்தியரைப் பற்றி என்னிடம் புறம் சொல்லுகிறது. இது மர்மப் பூனையாக இருக்குமா? இல்லை.

மனித ஆவி இந்தப் பூனையின் உடலில் உட்புகுந்துவிட்டதா? ஆங்கிலப்படங்களில் வரும் காட்சியை போல் இருக்கிறதே? பூனையின் குரல் மற்றவர்களுக்கு கேட்டது போல் தெரியவில்லையே? காலோஸ் திரும்பி பார்க்கவில்லையே? எனக்கு மட்டும் தனியாக கேட்கும் போது இது ஒரு ஹலுசினேசன் தன்மையல்லவா? எனது காதுக்குள் குரல் கேட்பது மனப்பிறழ்வு எனும் சிஸ்சோபிறினியாவின் குணக் குறியல்லவா?

முப்பத்தி மூன்று வயது சிஸ்சோபிறினியா வருகிற வயதில்லையே! பெரும்பாலும் பதினெட்டு அல்லது இருபது வயது பருவத்தில்தான் இந்த மன நோய் வருவதாகக் கேள்விப்பட்டுள்ளேன். இங்கு வர முன்பு நன்றாக இருந்தேனே என தலையை பிசைந்து கொண்டு  சுந்தரம் பிள்ளை மௌனமாக இருந்தபோது “என்ன இந்த ஆளிடம் அதாவது உனது எதிர்கால மேலாளரிடம் எவ்வளவு சம்பளம் என கேட்டாயா?” என அந்தப் பூனை மீண்டும் கேட்ட போது சிறிது அதிகாரம் கலந்து இருந்தது.

இந்த நாட்டில் வேலைக்கான நேர்முகத்தின் போது கேட்கும் கேள்விகளில் நீங்கள் எவ்வளவு வேதனம் எதிர்பார்க்கிறீர்கள்? என்பதும் ஒன்று.

இலங்கையில் வேலைக்கு இவ்வளவு வேதனம் என்ற விதிமுறையில் பழகி வந்தவர்களுக்கு, ஆளுக்கு ஒரு வேதனம் என்பது எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்து விடுகிறது. மிகவும் சங்கடத்தில் ஆழ்த்திவிடுகிறது. ஆரம்பத்தில் இவ்வளவு வேதனம் தரும்படி கேட்பது எப்படி? இதைவிட இந்த வேலை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற சந்தேகத்தில் இருக்கும் போது எவ்வளவு என்று வேதனத்தைப்பற்றிக் கேட்க முடியும்?

இப்படியாக மனம் அலை மோதிக்கொண்டிருந்த வேளையில், அதே விடயத்தை தெளிவாக பூனை பேசுவது சுந்தரம்பிள்ளைக்கு விசித்திரமாக இருந்தாலும் அந்தப் பேச்சில் நியாயம் இருப்பதுபோல் தோன்றியது. எதற்கும் எவ்வளவு சம்பளம் என்ற கேள்வியை கேட்டு வைப்போம் என நிமிர்ந்தபோது காலோஸ்,  சுந்தரம்பிள்ளையின் பயோ டேற்றாவை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது.
சிறிது நேரத்தில் நிமிர்ந்து பயோடேற்று இருந்த காகிதங்களை உயர்த்தி காட்டியபடி‘இந்த வேலையை உமக்கு நாம் தருவதற்குக் காரணம் இந்த இரண்டு காகிதங்கள் அல்ல. உம்மைப் பற்றி நோத்கோட்டைச் சேர்ந்த கீத் டெவர் எனக்கு உம்மைப் பற்றி  கூறிய சிபாரிசுதான். அவர் இந்த வைத்தியசாலையில் முன்பு என்னோடு வேலை செய்தவர்’எனச் சொல்லி விட்டு, அந்த அறையின் யன்னலருகே அந்த பயோ டேற்றாவை எடுத்துக்கொண்டு சென்றார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு கீத் டெவர் என்ற மிருகவைத்தியர் விடுமுறைக்காக இரண்டு வாரங்கள் சென்றபோது அவரது இடத்தில் வேலை செய்த பின் அவரை தனது பயோடேற்றாவில் நடுவராக போடுவதற்கு சுந்தரம்பிள்ளை அனுமதி கேட்டு அதில் பதிவுசெய்திருந்தான்.

தனக்கு வேலை கிடைத்த வித்தார இரகசியம் புரிந்து விட்டதால் சுந்தரம்பிள்ளையின் மனத்தில் அமைதி துளிர்விட்டது. இந்தத்தருணத்தில் கலந்துரையாடலை கொலிங்வூட்டுடன் வைத்துக்கொள்வோம் என நினைத்துக்கொண்டான்.

“அதென்ன கொலிங்வூட் எண்டு கண்டறியாத பெயராக இருக்கிது. வழக்கமாக நிறத்தை கொண்டுதானே பூனைகளை அழைப்பது. அல்லது  புஸ் புஸ் என அழைக்கலாமே?“ `அதெல்லாம் உங்களது ஊரில். கொலிங்வூட் என்பது மிகவும் பிரபலமான காலபந்துக் குழுவின் பெயர். அந்த பெயரை செல்லமாக எனக்கு வைத்திருக்கிறார்கள்“` ‘அப்படியா? ஏய் கொலிங்வூட் எத்தனை நாட்களாக இங்கே வசிக்கிறாய்?

‘எத்தனை நாட்களா? எத்தனை வருடங்கள் என்று கேள்’

‘அப்படியே கேட்கிறேன்’

இந்தப் பூனை வாயால் மட்டுமல்ல மனத்திலும் அழிச்சாட்டியம் பிடித்தது போல் இருக்கிறது. கவனமாகப் பேசவேண்டும்.
‘குட்டியாக வந்தேன். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகிவிட்டது.’

‘எப்படி மனிதக் குரலில் பேசமுடிகிறது?’

‘இருபத்துநாலு மணி நேரமும் இந்த ஆஸ்பத்திரியில் இருக்கிறேன். இங்கு உள்ளவர்கள் பேசுவதை அவதானித்து வந்துள்ளேன். தற்போது உன்னிடம் மட்டுமே எனது மொழித் திறமையை காட்ட உத்தேசம்.’

‘என்னிடம் மட்டும் ஏன் இந்த ஓர வஞ்சனை காட்டுகிறாய்?’ கொஞ்சம் நகைச்சுவையாக ‘புதிதாக சேர்ந்த உனக்கு மட்டுமே எனது மொழி புரியும். உயர்ந்த அதிர்வலைகளில் எனது சத்தம் வருகிறது. மற்றவர்களுக்கு கேட்கும் அதிர்வலையில் கேட்காது.’

‘அது எப்படி?எனக்கு மட்டும் எப்படி அதிக அதிர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது?’

‘நீங்கள் உங்கள் சொந்த மொழியை உரத்த குரலில் பேசுவதால் எனது அதிர்வலைக்கு இசைவாக்கம் அடைந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன். நான் மற்றவர்களோடும் பேசினேன் அவர்களுக்கு புரியவில்லை. ஆனால் அவர்கள் பேசுவது எனக்கு எப்பொழுதும் புரியும்.“ ‘தாயை பழித்தவனை தாய் தடுத்தால் விடுவேன். தாய்மொழியை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்’ என்ற பாரதிதாசன் பாடலுக்கேற்ப ஆத்திரத்தில் ‘நீ ஒரு பூனை கூதி’ என்றான் சுந்தரம்பிள்ளை.

‘வார்த்தையின் அர்த்தம் புரியாவிட்டாலும் ‘நீ கெட்ட வார்த்தையை பாவிக்கிறாய் என்பது தெரிகிறது. இது எந்த ஊர் கெட்ட வார்த்தை?’
‘இது சென்னைத் தமிழ். அங்குதான் சில வருடங்கள் இருந்தேன்.’

இந்த நேரத்தில் காலோஸ் சேரம் தலையை நிமிர்த்திக் ஜன்னல் அருகே இருந்துவந்து கொண்டு கொண்டு ‘சம்பள விபரத்தை ஜோனிடம் பேசி விட்டு கீழே வரவும்’ என கூறிவிட்டு பதிலை எதிர்பாராமல் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றார். அப்பொழுது உள்ளே வந்த கணக்காளர் ஜோன் ஒரு வெள்ளை காகிதத்தை சுந்தரம்பிள்ளையிடம் தந்தார்.

அது நியமனக் கடிதம். அதில் நியமனத்துடன் சம்பள விபரமும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் நிருவாக சபை செயலர் என ரொன் ஜொய்ஸ் என்பவர் ஒப்பமிட்டிருந்தார். 

uthayam@optusnet.com.au