தொடர் நாவல்: வேர் மறந்த தளிர்கள் (5,6 &7))

 5 உழைக்கும் கரங்கள்
 
வே.ம.அருச்சுணன் – மலேசியாஅதிசயமாக பெற்றோர் இருவரும் சொல்லி வைத்தது போல் அன்று சில நிமிட இடைவெளிக்குப்பின் ஒருவர் பின் ஒருவராக இல்லம் திரும்புகின்றனர்.சில வேளைகளில் அப்படி அபூர்வமாக நடப்பதுண்டு. வந்து சேர்ந்ததும் சேராததுமாகப் பசியுடன் காத்திருக்கும் பார்த்திபனைப் பார்க்கிறார் அம்மா.அவன் அமைதியுடன் தொலைக்காட்சியின் முன் அமர்ந்து நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். சோர்வுடன் காணப்பட்டான்!  பெற்ற வயிறு அல்லவா? அம்பிகைக்கு மனசு அடித்துக் கொள்கிறது!   நீண்ட நேரம் மகனைப் பிரிந்திருந்த சோகம் அவர் முகத்திலும் தெரிந்தது.செக்கச்சிவந்த மேனி,மூக்கும் விழியுமாக இருக்கிறான்.தனக்குப் பிறந்த பிள்ளையா இப்படி அழகாக இருக்கிறான்? தன் கண்ணே பட்டுவிடும் போல இருக்கு! மனதுள் தோன்றிய எண்ணத்துடன்,மகனை நோக்கிச் செல்கிறார்.அருகில் அம்மா வருவதுகூடத் தெரியாமல் சோர்வுடன் தொலைக்காட்சியில் ஏதோ நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மகனின்   தலையைப்      பாசமுடன்  தடவிக்கொடுக்கிறார்.  

“வந்து நேரம் ஆயிடுச்சா பார்த்திபா… ?” மிகுந்த பாசமுடன் கேட்கிறார்.

“வந்து கொஞ்ச நேரம் ஆவுது…..!” அமைதியாகக் கூறுகிறான்.

 “ஏதும் சாப்பிட்டியாப்பா?” கரிசனத்துடன் கேட்கிறார்.

“இல்லம்மா…..!” எந்தவிதச் சலனமும் இல்லாமல் சுருக்கமாகப் பதில் கூறுகிறான்.
 
தனக்கு அம்மா என்ற தகுதியைக் கொடுத்தவன் ஆயிற்றே! முப்பது ஆண்டுகளுக்கு முன் திருமணம் என்ற பந்தத்தில் காலடி எடுத்து வைத்தபோது புதிய சொந்தங்களையும் உற்றார் உறவினர்களையும் சந்தித்த அன்றே, வாழ்வு எனக்குப் புதுப்புது அர்த்தத்தைக் கொடுத்தது! 
தெம்பையும், தெளிவையையும், நம்பிக்கை விதையை வாழ்வில் விதைத்தது! எனக்கு முன்னால் உடன் பிறந்த அண்ணனோ அல்லது அக்காளோ இருந்ததில்லை. எனக்குப் பின் தம்பியோ அல்லது தங்கையோ பிறந்ததில்லை! குடும்பத்தில் நான் ஒரே பிள்ளை. சொல்லவும் வேண்டுமா? சீருடனும் சிறப்புடனும் வளர்ந்தேன்.நான் நினைத்தது நடந்தது.கேட்டது கிடைத்தது. எந்தக் குறையும் இல்லாமல் வளர்ந்தேன்.
        
எனது பெற்றோர், கிள்ளான் பட்டணத்திற்கு அருகிலிருக்கும் மிட்லண்ஸ் தோட்டத்தில் அப்பா அரிகிருஷ்ணன் ‘டிராக்டர்’ ஓட்டுனராகவும் அம்மா இருசம்மாள் வெளிக்காட்டு வேலை செய்யும் சாதாரண தொழிலாளிகளாகத் தொழில் புரிந்தாலும் என்னை வளர்ப்பதில் அவர்கள் தனிக்கவனம் செலுத்தி வந்தனர்.எங்களோடு என் சித்தப்பா அறிவுமதி இருந்தார்.என் அப்பா குடும்பதிலும் இருவர் மட்டுமே. அப்பாவுக்குத் தம்பி அறிவுமதி மட்டும் இருந்தார்.
 
“அரிகிருஷ்ணன்…….! டக்க….வேகமா ஓட்டுப்பா……. மணி ஆயிடுச்சு……! வெட்டுக்கு ஆளெல்லாம் சீக்கிரமாக் கொண்டு போய் விடனும்!” மற்ற தொழிலாளர்களோடு முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் முருகன் கங்காணி  துரிதப்படுத்துகிறார்.
 
“கங்காணி…….! கவலைப் படாதிங்க…….இன்னும் பத்து நிமிஷத்துல  அவரவர் வெட்டுலக் கொண்டு போய் விட்டுடுறேன்! நேற்றா….இன்றா…. டக்கு ஓட்டுறேன்…..! சொன்னபடி வேலைக்காட்டுல ஆட்களை விட்டிடுறேன்……! நீங்க……எதுக்கும் கவலைப் படாதிங்க கங்காணி!        
 
“அட…..நீ ஒன்னுப்பா…..!  நேற்று கொஞ்சம் லேட்டா போனதுக்கு, நாக்கப் பிடிங்கிகிட்டு சாகரமாதிரி திட்டினாரே….சிங்கம்கிராணி அதுக்குள்ள நீ மறந்துட்டியா அரி…?” “இரவு மழை பேஞ்சதால, காலையில ரோடு ஈரமா இருந்துச்சு.அதனால, டக்க மெதுவா ஓட்ட வேண்டியதாச்சி…அதான் நேற்றுகொஞ்சம் லேட்டு! இன்றைக்கு….. அந்தப் பிரச்னை இல்லை…..! இதோ……! ” டிராக்டரைச் சற்று வேகமாக இயக்குகிறார் அரிகிருஷ்ணன்.
 
காலை மணி ஆறரையை நெருங்கிக் கொண்டிருந்தது. ஆறரை மணிக்கெல்லாம் அவரவர் வெட்டுகளில் தொழிலாளர்கள் வேலைகளைத் தொடங்கிவிட வேண்டும்.சில நிமிடங்கள் தாமதம் என்றாலும் சிங்கம்கிராணி விட்டுக் கொடுக்கமாட்டார்! தொழிலாளர்கள் முன்னிலையிலேயே தயவு தாட்சண்ணியம் இல்லாமல் கடுமையாகத் திட்டத்தொடங்கிவிடுவார். கடிமனம் நிறைந்த அவரிடம் திட்டு வாங்க அவர் தயாராகவில்லை! காலையில்   ஆண்களும் பெண்களுமாக  இரப்பர் மரம் சீவும் இருபது தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்த டிராக்டரில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். காலைப் பொழுது பளபளவென விடிந்து கொண்டிருந்தது!           
         
வலப்புறம் மேட்டு நிலத்திலிருந்து, இடப்புறம் கீழ்நிலத்திற்குச் செல்ல சாலையை  மின்னல் வேகத்தில் குறுக்கே பாய்ந்தது முரட்டுப் பன்றி ஒன்று! இதைச் சிறிதும் எதிர்பாராத டிரைவர் நிலைத் தடுமாறினார்! வலப்பக்கமாக அமர்ந்திருந்தப் பெண் தொழிலாளர்கள் அதர்ச்சியில் அந்தக் காடே அதிரும் படியாகக் கூச்சலிட்டனர்!
 
சமயோசிதமாக வண்டியை வலதுப் புறமாகத் திருப்பியதால் பன்றி வண்டியில் மோதுவதிலிருந்து தவிக்கப்பட்டது! எனினும்,வண்டி வலது புறத்தில் அமைந்துள்ள சிறிய கால்வாயில் இறங்கிவிட்டது! இரண்டு பெண் தொழிலாளர்கள் வண்டியிலிருந்து வெளியே தூக்கி எறியப் பட்டனர்! கை,கால் மற்றும் முகங்களில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது!      
 
இரும்புச் சட்டத்தில் மோதிக்கொண்ட  முருகன் கங்காணியின் நெற்றியில் காயம் பட்டு இரத்தம் பீரிடுகிது!
 
“ஐயோ….! கங்காணிக்கு மண்டை ஒடைஞ்சிடுச்சு…..!” பெண் தொழிலாளி பேச்சாயி அலறத்தொடங்கி விட்டார்!

“ பேச்சாயி…..! உன்னோடத் துண்டைச் சீக்கிரம் கொடு……!” முகம் துடைக்கத் தோளில் போட்டிருந்த பேச்சாயின் துண்டை வெடுக்கென எடுத்து கங்காணியின் முகத்தில் பீரிட்டுக்கொண்டிருக்கும் இரத்தத்தை நிறுத்தும் முயற்சியில் அவசரம் காட்டுகிறார் காசியம்மாள்! கட்டுப் போட்டும் இரத்தம் நிற்கவில்லை! இரத்தம் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருந்தது!அவரது முயற்சியில் ஒரளவு வெற்றியும் பெறுகிறார். எனினும், முருகன் கங்காணி மயக்கமடைகிறார்! இதைப்பார்த்தப் பெண்தொழிலாளிகளில் சிலர் அழத்தொடங்கிவிட்டனர்!  டிரைவர் அரிகிருஷ்ணன் யாதொரு காயமுமின்றி தப்பியது அதிர்ஸ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். சகதொழிலாளர்களுக்குத் தைரியம் சொல்லி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருகிறார்.
 
ஆண் தொழிலாளர்கள் டிரைவரோடு சேர்ந்து கொண்டு அடுத்தக் கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு நிலைமையைச் சமாளிப்பதில் மும்முறம் காட்டினர்! கறுப்பு நிறத்தில் ஏறத்தாழா மூன்றடி உயரத்திலிருந்த அந்தப் பன்றி எங்கோ ஓடி மறைந்திருந்தது! எனினும்,பெண் தொழிலாளிகள் அந்த மிருகத்தைக் கண்ட அதர்ச்சியில் மீளாமல், நடுங்கிபடி வண்டியைவிட்டு இறங்காமல் இருக்கையிலேயே அமர்ந்திருந்தனர்!


6 கடவுள்கள்  
 
வே.ம.அருச்சுணன் – மலேசியாசில வேளைகளில் தோட்டத்தை ஒட்டியுள்ள பச்சைக் காட்டிலிருந் பன்றிகள் இப்படித் தென்படுவதுண்டு. ஒருநாள் பால்மரம் வெட்டும் தொழிலாளர்களைக் கண்காணித்துக் கொண்டுவருகையில் தெய்வநாயகம் கங்காணியைத் திடீரெனக் கரடி தாக்கிக் காயப்படுத்தி விட்டது!    எம்பிமணியம், காளி, மலையாளத்துக்கிரு‌ஷ்ணம்,  தாசன்மற்றும் கோட்டைக்கறுப்பன் ஆகியயோர்  வழக்கமாக ஒவ்வொரு வார இறுதியிலும் பன்றி வேட்டைக்குப் பத்து நாய்களோடு  செல்லும் அவர்கள் சிறிய, பெரிய அளவிலானப் பன்றியோடுதான் வீடு திரும்புவார்கள்.வெறும் கையுடன் ஒரு நாளும் வீடு திரும்பியதில்லை!  பன்றியோடு திரும்பும் அந்த நாட்களில் தோட்ட மக்கள் பலருக்குத் திருநாள்தான்! பலர் முன்கூட்டியே ஆர்டர் கொடுத்திருப்பதால் பன்றியை வெட்டிக் கூர்போட்ட சிறிது நேரத்திலேயே இறைச்சிகள் அனைத்தும் விற்றுமுடிந்துவிடும்!
 
ஏழுமணி வாக்கில் மேற்பார்வைக்காக அந்தப் பக்கமாக ஜீப்பில் வந்த சிங்கம் கிராணி விபத்து நடந்த இடத்திற்கு வந்துவிடுகிறார்! என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த அரிகிருஷ்ணன் கிராணியிடம் விசியத்தைக் கூறவே பதறிப்போன சிங்கம் கிராணி,மயக்கமுடன் இருக்கும் முருகன் கங்காணியையும்,காயமடைந்த சிலரையும் தன் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு தோட்ட மருத்துவமனைக்குக் காற்றாய்ப் பறந்து செல்கிறார்!
 
‘கள்ளுக்குள்ளும் ஈரமுண்டு’ என்பதை சிங்கம் கிராணியின் அன்றைய துரித நடவடிக்கைகள் மெய்ப்பித்துக் கொண்டிருந்தன! அவரது கருணை உள்ளத்தை எண்ணி அரிகிருஷ்ணனின் கண்கள் குளமாகிப்போகின்றன!
 
தாத்தா வேலுகங்காணியும், பாட்டி மருதாயும் இறந்தப்பின் அப்பா தான் சித்தப்பா அறிவுமதியைப் படிக்க வைத்துள்ளார்.  அறிவுமதி மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். பெயருக்கேற்றார் போல் கல்வியில் அவர் சிறந்து விளங்கினார்.
 
நான் முதலாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்த வேளை.சித்தப்பா கிள்ளான் பட்டணத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
 
“ வணக்கம் சார்….!”

“வணக்கம்,யாரு….. அறிவுமதியா?”

“உங்களிடம் ஆறாம் ஆண்டு படிச்ச அதே அறிவுமதியேதான் சார்!”

மகிழ்ச்சிப் பொங்க இருவரும் கைகுலுக்கிக் கொள்கின்றனர்.    “அறிவுமதி….இன்றைக்கு வேலைக்கு லீவு போட்டிட்டிங்களா….!”

“ஆமாங்க சார்……! அண்ணன் மகள் அம்பிகையை ஒன்றாம் வகுப்பில சேர்க்க வந்திருக்கேன்…..!“மகிழ்ச்சி…..மகிழ்ச்சி…..! அண்ணன், அண்ணி வரலியா….?“அவர்கள் இருவருக்கும் வேலை! அதான்…..நான் அழைச்சிட்டு வந்தேன்.நான்தான் வரனும்னு அம்பிகை வேறு அடம் பிடிச்சிச்சு…..!”

“ஓ…..அப்படியா…!”
 
“உங்க மாதிரி….படித்தப் பெற்றோர்கள் மொழிப் பற்றுடன் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்பும் போதுதான் இந்த நாட்டில் தமிழ்மொழி தொடர்ந்து வாழும்! உங்களுக்கு எங்களின் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்!” தலைமையாசிரியர் மா. கோவிந்தசாமி அங்கு ஒரு சிற்றுரையையே ஆற்றிவிடுகிறார். 
                 
அவர் காட்டிய வகுப்பறைக்குச் சென்ற அறிவுமதி, அம்பிகையை முதலாம் ஆண்டு ஆசிரியை திருமதி அழகம்மாவின் வகுப்பில் சேர்க்கிறார். பல ஆண்டுகளாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்குச் சிறப்பாகப் பாடம் சொல்லிக் கொடுத்து மாணவர்களைக் கல்வியில் கைதூக்கி விட்டவர் எனும் நற்பெயருக்குச் சொந்தக்காரராவார் திருமதி.அழகம்மா.
 
இவரைப் போன்று ஆசிரியர்கள் தமிழ்ப்பள்ளிகளில் அன்று இருந்ததால்தான்  கல்வியில் மாணவர்கள் மிகச்  சிறந்த  தேர்வு  நிலையை அடைந்திருக்கின்றனர்.தாயன்புக் காட்டிக் குழந்தைகளுக்குப்     போதித்துக் கடை மாணாக்கர்களையும் தலைமாணாக்கராக்கும்  மனோபாவம் மிக்கவர்.
 
அர்ப்பணிப்பு நிறைந்த அழகம்மா ஆசிரியையைச் சந்தித்ததில் அறிவுமதி மிக்க மகிழ்ச்சி.அவர்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு அம்பிகையை அவரிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியுடன் இல்லம் திரும்புகிறார்.
 
“ வணக்கம் அம்மா…..!”

“ வணக்கம்………உன் பெயர்  என்னம்மா? அன்புடன் ஆசிரியை அழகம்மா கேட்கிறார்.

“அம்பிகையா நல்ல பெயராக இருக்கிறதே….!உன்னுடைய எதிர்கால ஆசை என்ன அம்பிகை?” ஆவலோடு கேட்கிறார்.

“ஒரு நிறுவனத்திற்குத் தலைமை ஏற்கவேண்டும்,அதுவே எனது இலட்சியம்!” என்று அழுத்தமாகச் சொன்னேன்.அவர் முகத்தில் புன்னகை தோன்றி மறைகிறது!

“உன்னுடைய இலட்சியம் நிச்சயமாக நிறைவேறும்.நம்பிக்கையுடன் படி நிச்சயம் வெற்றி பெறுவாய்!” என்று என்னை உற்சாகப் படுத்திப் பேசியது எனக்குப் புது நம்பிக்கைப் பிறந்தது! 
 
அவரைப் பார்த்தவுடன் அவரிடம் மனம் விட்டு பேசவேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் உதிக்கிறது! முதல் நாள் அவர் காட்டிய அன்பு, கல்வியில் உயர்ந்த நிலையை அடைந்து விட முடியும் என்ற நம்பிக்கையக் கொடுத்தது.மூன்றாண்டுகள் மட்டுமே அவரிடம் கல்வி கற்கும் நிலை. அவர் பணி ஓய்வு பெற்ற போது,நான் மிகவும் வருந்தினேன்! 
 
முப்பத்தைந்தாண்டுகள்  மிட்லண்ஸ் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் ஆசிரியர் பணியைத் தொடங்கி,அதே பள்ளியில் முப்பத்தைந்தாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற பெருமைகுரியவர்.
 
பணி ஓய்வு பெற்ற நாள் அன்று பள்ளி மாணவர்களோடு,பள்ளியில் அவரிடம் கல்வி கற்ற நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் மு.சீரியநாதன் தலைமையில் ஒன்று கூடித் தங்களின் நன்றிக்கடனைச்  சிறப்பான வழியனுப்பு மூலம்  செய்தது ஆசிரியை அழகம்மாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீரைப் பெருக்கெடுத்து ஓடச்செய்துவிட்டது!


7 அழகம்மா டீச்சர்

வே.ம.அருச்சுணன் – மலேசியாவழியனுப்பு நிகழ்வில் தலைமையாசிரியர் திரு.இரத்தினம் அவர்கள், “மிட்லண்ஸ் தோட்டத் தமிழ்ப் பள்ளிக்குக் கடந்த பத்து ஆண்டுகளாகத் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றிருந்த வேளையில் ஆசிரியை அழகம்மாள் அவர்கள் மாணவர்களுக்குப் போதிக்கும் திறனை நேரில் கண்டு ஆச்சரியப் பட்டதாகக் கூரினார்! தன்னிடம் கொடுத்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகக் கடுமையாக உழைப்பதில் அவருக்கு நிகர் அவர் என்றால் அது மிகையில்லை என்பதுடன், ஆசிரியர் தொழிலுக்குப் பெருமைச் சேர்த்த ஆசிரியர்களில் மாமணி!….இந்தப் பள்ளிக்குக்கிடைத்த மாணிக்கம்!” என்று அவர் உரையை நிறைவு செய்தபோதுக் கூட்டத்தினர் பலத்தக் கையொலி எழுப்பி தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டனர்.   விடுப்பு எடுத்துக்கொண்டு தான் படித்தப் பள்ளியிலேயே என்னையும் சேர்த்தவிட்ட அவரது தமிழ்ப்பற்றையும் தமிழை வாழவைப்பது தமிழர்களாய்ப் பிறந்த நமது அனைவரின் கடமை என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கும் சித்தப்பாவை என்னால் மறக்க முடியாது!
 
தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரையிலும் வகுப்பில் முதல் நிலையிலேயே வருவேன். பல பரிசுகளையும் பாராட்டையும் பெற்ற போது எனது பெற்றோர்களைக் காட்டிலும் சித்தப்பாவே அதிகம் மகிழ்ச்சி அடைந்தார்.
 
ஒவ்வொருமாதக் கடைசியிலும்  அவர் வேலைப் பார்க்கும் நிறுவனத்தில் சம்பளம் வழங்குவார்கள். சம்பளம் கிடைத்தவுடனே முதல் வேலையாகத் தோட்டத்தையொட்டி அமைந்திருக்கும்  கிள்ளான் பட்டணத்தில் இருக்கும் திரு.வி.க.புத்தகச்சாலைக்கு  அழைத்துச் செல்வார். ரெம்பா ஸ்தீரிட் சாலையில் ( இப்போது ஜாலான் துங்கு கிளானா) காயத்திரி பட்டுமாளிகை அமைந்திருக்கும் கட்டிடத்திற்கு எதிர்ப்புறத்தில்தான் நாட்டின் பிரபல கவிஞர் தி.ப.இளஞ்செழியன்  அறுபதாம் ஆண்டுகளில் மிகவும் சிறப்புடன் நடத்தி வந்தார்.
 
கிள்ளான் பட்டணத்தைப் பொறுத்தவரையில் அறிவுஜீவிகள் ஒன்றுகூடும் இடமாக இருந்தது! பலருக்கு அவர் ஒரு முற்போக்குக் கவிஞராகப்  பரிச்சயம் பெற்றிருந்தாலும்,பழகுவதற்கு இனிமையாகப் பழகும் அவர் வரும் வாடிக்கையாளர்களின் பல்வேறு குணாதிசங்களுக்கு ஏற்ப நூல்கள் வாங்கி வைத்து அவர்களின் முகங்களில் புன்னகை மலர்களைப் பூத்துக்குலுங்கச் செய்யும் வித்தை அவருக்குக் கைவந்தகலையாகும்!          
            
“சித்தப்பா…..திருக்குறள் மனனப் போட்டிக்காக திருக்குறள் படிக்க வேண்டி இருக்கு…..!” அம்பிகை ஆவலுடன் கூறுகிறாள்.
 
“அதற்கென்ன, திருக்குறள் புத்தகம் வாங்கிட்டாப் போது…..! கவிஞரே……! திருக்குறள் புத்தகம் எடுத்துக் கொடுங்கையா…..!”
    
“ திருக்குறளுக்கு எளிய முறையில் விளக்கம் எழுதியுள்ளார் டாக்டர் மு.வ. அவர்கள்.அவர் குறளுக்கு எழுதிய எளிய விளக்கம் அனைவரும் எளிதில் படித்துப் புரிந்து கொள்ளும் விதத்தில் இருக்கிறது. கையடக்க நூல்; விலையும் மிகவும் மலிவு. இதுதான் அந்த நூல்!” அறிவுமதியிடம் நூலைப் பவ்வியமாகக் கொடுக்கிறார் கவிஞர்.
 
நூலைக் கையில் எடுத்தவுடனே அறிவுமதி பக்கங்களைப் பிரட்டுகிறார். குறளுக்கு அளிக்கப்பட்டிருந்த விளக்கம் அவரை மிகவும் கவர்கிறது.சில வினாடிகள் யோசிக்கிறார்!

“ என்ன….மதி…..! ஏதோ….யோசனை செய்வது போல இருக்கே….?”

மனதில் பட்டதை அறிவுமதியிடம் கேட்கிறார்.

“ உயர்ந்த விளக்கம்,ஆனால் நூல் விலை மிகவும் மலிவாக இருக்கிறதே….!”     
      
“மக்களிடம் பரவலாக நூல் போய்ச் சேரவேண்டும் என்ற நோக்கில் பதிப்பகத்தார் மலிவாக வெளியீடு செய்திருப்பதாகத் தெரிகிறது.நல்ல விசியம்தானே அப்படியாவது அதிகமான மக்கள் பயன் பெறமுடியும் அல்லவா?” கவிஞர் ஓர் எழுத்தாளர் என்ற முறையில் அவர் தன் கருத்தைத் தெளிவாகக் கூறுகிறார்.
 
“கவிஞரே…..உங்களிடம் இப்போது எத்தனைப் பிரதிகள் இருக்கின்றன….கொஞ்சம் பார்த்துச்சொல்லுங்கள்…..!”
“ஐம்பது பிரதிகள் இருக்கின்றன….!”

“அத்தனைப் பிரதிகளையும் எடுத்து வையுங்கள் நான் வாங்கிக் கொள்கிறேன்….!”

“மதி….அத்தனைப் பிரதிகள் வாங்கி என்ன செய்யப் போகிறீர்..!” ஆச்சரியத்துடன் வினவுகிறார்.

“நான் படித்தப் பள்ளிக்கு அதனை அன்பளிப்புச் செய்யப் போகிறேன்….!”

“கேட்கவே…..நல்லா இருக்கு மதி..! இதைத்தான் தமிழ்த்தொண்டுன்னு சொல்லனும்….!” 
 
அன்று சித்தப்பா செய்ததை நினைத்து அவரைப் பாராட்டினேன்! என்னைப் போன்ற பல மாணவர்களும் அரிய நூலை வாசிக்கச் சந்தர்ப்பத்தை வழங்கிய அவர் பாராட்டுக்குரியவர்தானே?” 
 
என் பொது அறிவை வளர்த்துக்கொள்ளும் வகையில் அவ்வப்போது பல அரியத் தகவல்களைக் கூறி என்னை வியப்பில்  ஆழ்த்துவார்.குறிப்பாக நாட்டின் வரலாற்றுத் தகவல்களைக்கூறுவதில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்வார்!

[தொடரும்]

arunveloo@yahoo.com