ப.மதியழகன் (மன்னார்குடி) கவிதைகள்!
என்ன தேசமோ
உங்களுக்குப் புரியாததைச்
சொன்னால்
பைத்தியம் என்பீர்கள்
உங்கள் பேச்சுக்கு
தலையாட்டாமல் நின்றால்
கோட்டி பிடித்து விட்டதென
ஊருக்குள் வதந்தி பரப்பி
விடுவீர்கள்
உங்களை அனுசரித்து
போகவில்லையென்றால்
முதுகுக்குப் பின்னால்
முணுமுணுப்பீர்கள்
உங்களுக்கு
ஒத்துவரவில்லை என்றால்
சமயம் பார்த்து
துரோகம் இழைப்பீர்கள்
உங்கள் வேடத்தை
அம்பலப்படுத்தினால்
முடவனாக்கி
மூலையில் உட்கார
வைப்பீர்கள்
திரைமறைவில் இதையெல்லாம்
செய்து கொண்டு
பொது வாழ்வில்
புனிதர் பட்டம்
பெற்றுக் கொள்வீர்கள்.
புதிர்
வாழ்க்கை புதிர் போடுகிறது
விடையளிக்க முடியாமல்
நாட்களை கடத்துகிறார்கள்
மனிதர்கள்
பழுத்த இலை
மரத்துடனான பிணைப்பை
முறித்துக் கொண்டு
கீழே விழுந்தது
பூக்கின்ற பூவில்
எத்தனை கனிகளாகும் என்று
யாருக்கும் தெரியாது
நீர்க்குமிழிகள் உணர்த்தும்
வாழ்வின் நிலையற்ற தன்மையை
மயானத்திற்கு வழிகாட்டும்
பெயர்ப் பலகைகள்
வெளவால்கள் குடியிருக்கும்
மர்ம மாளிகைகள்
நிம்மதியை தொலைத்துவிட்டு
தேடுபவர்களுக்கு
யார் இளைப்பாறுதல்
தருவார்கள்
உடைந்த படகைப் பிடித்துக் கொண்டு
கரையேறியவனுக்குத் தான் தெரியும்
வாழ்வின் அருமை.
அம்புலி
அந்தகாரம் கவிந்த வானத்தில்
நிலா உடைபட்டுக் கிடந்தது
ரதத்தில் வந்து கொண்டிருந்த
சூரிய பகவான்
அச்சாணி கழன்றதை
கண்டுகொள்ளாமல விட்டுவிட்டான்
கால் முளைத்த இரவு
களங்கத்தோடு காட்சி தரும்
சந்திரனைக் கையிலெடுத்து
விளையாடியது
மனிதர்கள் ஓடிக் கொண்டே
இருக்கிறார்கள்
மரணம் நிழலாகப்
பின் தொடர்வதால்
என் வீட்டிற்கு வந்த நிலா
ஊஞ்சலில் ஆடியபடியே உறங்கியது
நிறைந்த பெளர்ணமியில்
நிலாவைக் காணாது மக்கள்
குழப்பமடைவார்கள் என்பதால்
விழுந்தடித்துக்கொண்டு ஓடியது
கரையை சத்தமில்லாமல்
முத்தமிட்டுச் செல்லும் அலைகள்
வன்புணர்ச்சிக்கு ஆசைப்பட்டு
வானம் வரை எழும்பும்.
தருணம்
பரிதியைக் காணோம்
வானில் பரிதியைக்
காணோம்
வனத்தில் திசைதெரியாமல்
தொலைந்ததா
கள்வர்கள் கைகளில்
அகப்பட்டுக் கொண்டதா
எரிந்து எரிந்து
சாம்பலாய்ப் போனதா
ராட்சச பாறைகள் மோதி
தூள் தூளாய் ஆனதா
மக்களின் செயல்களைக்
காணப் பிடிக்காமல்
மலைகளின் இடையே
ஒளிந்து கொண்டதா
நிலவிடம் பந்தயம் கட்டித்
தோற்றதா
இருளைக் கிழித்து ஒளியைப்
பரப்பும் வேலையில்
அலுப்பு தட்டிவிட்டதா
இயற்கைக்குப் பயந்து
நடக்க முடியாதென
மானிட இனத்தை
முழுமையாக கைவிட்டு
விட்டதா.