வைகறைப் பொழுதினில்
வைகறை வருவது
மனதுக்கு இனியது
சிறுகதை தாங்கி
சிறப்புடன் திகழ்வது
சிந்தைக்குச் சிறந்தது!
ஆம்! இளம் பெண் எழுத்தாளரும், கவிதாயினியும், பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் துணை ஆசிரியருமான தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, தனது இரண்டாவது நூலாக வைகறை என்ற சிறுகதை நூலை வெளியிட்டிருக்கிறார். இவர், ஏற்கனவே `இன்னும் உன் குரல் கேட்கிறது’ என்ற பெயரில் கவிதைத் தொகுதி ஒன்றினை வெளியிட்டிருந்தார். வாசகர் மனதில் அந்தக் குரல் ஒலித்துக்கொண்டிருக்கும் வேளையில்தான் வைகறை சிறுகதைத் தொகுதியும் வந்துவிட்டது. இந்நூல் இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் 27வது வெளியீடாகும். இளம் எழுத்தாளர்களை இனங்கண்டு ஊக்குவிப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் மேற்படி மன்றம், கவிதாயினியும் பூங்காவனம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான வெலிகம ரிம்ஸா முஹம்மதின் `தென்றலின் வேகம்’ என்ற கவிதைத் தொகுதியினையும் ஏற்கனவே வெளியிட்டு வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள பிரபல படைப்பாளியும், மூத்த எழுத்தாளருமான திரு. நீர்வை பொன்னையன் அவர்கள், சகல சிறுகதை எழுத்தாளர்களுக்கும் பொருந்தும் வகையில் மிகவும் அழகான, பொருத்தமான, பயனுள்ள சில கருத்துக்களைக் கூறியிருப்பது பிரயோசனமானதாக இருக்கிறது. சிறுகதை இலக்கணம் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு அவரது கருத்துக்கள் பயன்பெறுகின்றன. பொதுவாக சிறுகதை ஒன்று ஆரம்பம், வளர்ச்சி, முதிர்வு (கிளைமேக்ஸ்) போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது பொதுவான விதி. சிறுகதைக்கு அமைப்பு என்று ஒன்று இல்லை, எப்படியும் கதை சொல்லியாக இருந்தால் போதும் என்ற எண்ணத்தில் எழுதுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் மொழி வளமும், பிரயோகமும், நடமாடும் பாத்திரப் படைப்புகளும், எதிர்பாராத திருப்பமும்தான் சிறுகதைக்கு சுருதி சேர்க்கின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனால் திரு. நீர்வை பொன்னையன் அவர்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கள் பயிற்சிச் சிறுகதையாளர்களுக்கும், பயிற்சி பெற்றுத் திகழும் சிறுகதையாளர்களுக்கும் அறிவுரைகளைத் தரக்கூடியதாக இருக்கிறது.
தியத்தலாவை எச்.எப். ரிஸ்னா, ஏற்கனவே தினகரன், தினக்குரல், வீரகேசரி, நவமணி, சுடர் ஒளி போன்ற இலங்கையின் முன்னோடிப் பத்திரிகைகளிலும், ஞானம், மல்லிகை, செங்கதிர், ஜீவநதி, ஓசை போன்ற முன்னணி சஞ்சிகைகளிலும் எழுதி வருபவர். இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள அளவில் சிறியதும், பெரியதுமான 21 சிறுகதைகளில் அநேகமானவை மேற்படி பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
கவிதையாகத் தோன்றி, காப்பிய உருக்கொண்டு, உரைநடை மாற்றம் பெற்று இன்று இருக்கும் நிலைக்கு சிறுகதை இலக்கியம் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது என்பதையும், அதிலே பல ரகக் கதைகள் பல பெயர்களில் அழைக்கப்படக்கூடியதாக உருவத்திலும், உள்ளடக்கத்திலும் வேறுபட்டதாக சிறுகதை வடிவம் பெற்றுள்ளது என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் சிறுகதைக்கு வரைவிலக்கணம் கூறியுள்ள அன்ரன் செக்கோ, எட்கார் அலன்போ, எம்.ஈ. பாற்ஸ், எரிக் சேர்விக், ஹர்தோன், கா. சிவத்தம்பி, மார்க்ஸிம் கார்க்கி, புதுமைப்பித்தன் போன்ற பிரபல எழுத்தாளர்கள் சொல்லியிருக்கும் கருத்துக்களை விளக்கியிருக்கிறார் திரு. நீர்வை பொன்னையன் அவர்கள்.
ரிஸ்னாவின் இந்தத் தொகுப்பில் காதல் கதைகள், முஸ்லிம்களின் வாழ்வில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சனைகள் போன்றவற்றை பிரதிபலிக்கும் பல்சுவைக் கதைகள் அடங்கியுள்ளன. நூலில் முதலாவதாக இடம்பெற்றிருக்கும் அழகன் என்ற கதை அளவில் சிறியதாக இருந்தாலும் அருமையானதொரு பாங்கினைக் கொண்டதாக அமைந்துள்ளது. கதையை முழுமையாகப் படித்த பின்புதான் அதனைக் காதல் கதையாக எடை போடுபவர்கள் இறுதியில் ஏமாற்றத்தைக் கண்டுகொள்வார்கள். ஏனெனில் ரசிப்பு, சிரிப்பு, தொடுகை, உரையாடல் எல்லாம் காதலுக்குச் சொந்தமான பண்புகள் போல் காணப்படுவதுதான். அதே போன்று விதி என்ற சிறுகதை தோட்டத் தொழிலாளர்களின் வருமானக் குறைவினால் தமது பெண் பிள்ளைகளை கொழும்பில் உள்ள வீடுகளுக்கு அனுப்பி வைக்கும்போது பிள்ளைகள் படும் துயரினையும், நகர வாழ்வின் தன்மைகளையும், மனித நேயமற்ற மனிதர்களின் பண்புகளையும் விளக்குவதாக அமைந்துள்ளது.
மாற்றம் என்ற பெயரில் எழுதப்பட்டிருக்கும் கதையானது, தோட்ட மக்களின் வறுமை நிலையினைக் காட்டுவதோடு காலங்காலமாக அவர்கள் தேயிலைத் தோட்டத்தோடும், அழுக்கு உடைகளோடும்தான் இருக்க வேண்டும் என்பதல்ல, படித்து, முன்னேற வேண்டும் என்ற தைரியத்தை ஊட்டக்கூடியதாக அமைந்துள்ளது. யதார்த்தமாக இருந்தாலும் கற்பனை வளம் பாத்திரப் படைப்புக்களை நன்றாக சித்தரிக்கிறது. தோட்டக்காட்டான் என்று அடைமொழி வழங்கி சித்திரா டீச்சரினால் கேவலமாக பார்க்கப்பட்ட முரளி என்ற சிறுவன் படித்து, முன்னேறி டாக்டர் பட்டம் பெற்று பிரபலம் அடைந்த பின்புதான் கைராசிக்கார டாக்டராக வந்திருக்கிறான். அதை அறியாமல் சித்திரா டீச்சர் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்கத் திட்டமிட்ட போதும் அது நிராசையாகிப் போனதால் அவமானம் தாங்காமல் தலைகுனிவுக்கு உள்ளாகிறார். இதனை அருமையான படிப்பினை ஊட்டும் கதை என்று சொல்லாம்.
அதே போன்று உறவுகள் என்ற கதை ஒரே குடும்பத்தில் பிறந்து, வளர்ந்த அண்ணன் தம்பிகளுக்கிடையே ஏற்பட்ட பிளவு, விபத்தில் சிக்கிய சகோதரனை தனது இரத்தத்தைக் கொடுத்து காப்பாற்றியதனால் மறைந்தது.
மேலும் தேயிலைச் செடிகளுக்கு உரமாய் உழைக்கும் அப்பாவி ஜீவன்களின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும் போது அட்டைக்கடியிலும், பாம்புப் புற்றுகளிலும் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முழங்கால் அளவுக்கு பொலித்தீன் பைகளைக் கட்டிக் கொண்டு தேயிலை சுமை சுமக்கும் அவர்கள் மீது கருணைகாட்ட எந்தத் தலைவன் முன்வந்தான்? காலங்காலமாக தேர்தல் காலங்களில் மாத்திரம் இந்தத் தோட்டங்களில் பாதம் பதித்து போலிப் பாசம் காட்டி இறுதியில் ஏமாற்றும் இந்த ஏமாற்று வித்தைக்காரர்களை தொடர்ந்தும் தலைவர்களாக ஏற்றுக்கொள்வதா? என்ற கேள்வி மூலம் தோட்டங்களில் நிலவும் அரசியல் நிலவரம் துலாம்பரமாகிறது.
அதே வேளை தோட்டப் பாடசாலைகளில் படிக்கப் போகும் பிள்ளைகளின் நிலவரங்களையும் எடுத்துக்காட்ட கதாசிரியர் மறக்கவில்லை `காலில் செருப்பில்லாமலும், புத்தகப் பை இல்லாமலும் வருகின்ற அப்பாவி மாணவர்களை நிறுத்தி வைத்து கேள்வி கேட்கவும், பிரம்பினால் தோலுரிக்கவும் தெரிந்த ஆசிரியர் அந்த மாணவனின் வீட்டு நிலவரத்தைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்து வைத்திருப்பாரா? வேண்டாம். தெரிந்துகொள்ள முயற்சியாவது எடுத்திருப்பாரா? ஐந்தாறு பிள்ளைகளின் சாப்பாட்டுத் தேவையையே பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் ஒரு குடும்பத்துக்குள் இருந்து கல்வி கற்பதற்காக புறப்பட்டு வரும் அந்த மாணவனை தட்டிக்கொடுக்க ஒருவருமில்லை. ஆனால் அயன் கலையாத ஆடையுடனும், பொலிஷ் பண்ணப்பட்ட சப்பாத்துடனும் வரும் ஒரு சில மாணவர்களுக்கு ஆசிரியர்கள் என்னே கௌரவம் கொடுக்கிறார்கள்?’ என்று மாணவர்களை வேறுபடுத்திப் பார்க்கும் ஆசிரியர்களைப் பற்றியும் சொல்லி கதையை சிறப்பாக நகர்த்தியிருக்கிறார்.
இன்று பெண் எழுத்தாளர்கள் என்ற வகையில் நிறையப் பேர் எழுதி வந்தாலும் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களில் ஒரு சிலரே எழுதுவதைக் காண முடிகிறது. மூத்த தலைமுறை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் வயது மூப்பு, குடும்பப் பிரச்சினை, நேரமின்னை போன்ற பல்வேறு காரணங்களினால் எழுதுவதிலிருந்து தம்மை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். என்றாலும் இளைய தலைமுறை எழுத்தாளரான எச்.எப். ரிஸ்னா தொடர்ந்தும் சமூகத்துக்காக, சமூகத்திலுள்ள பிரச்சினைகளைப் புரியவைப்பதற்காக, சமூக சீரழிவுகளை சீர் செய்வதற்காக எழுத வேண்டும். சிறுகதை எழுத்தாளராக வர ஆசைப்படுபவர்கள் இந்நூலை வாங்கிப் படிப்பதன் மூலம் சிறந்ததோர் அறிவைப் பெற்றுக்கொள்ள முடியம். எச்.எப். ரிஸ்னாவுக்கு எனது வாழ்த்துக்கள்!!!
நூல் – வைகறை
வகை – சிறுகதை
நூலாசிரியர் – எச்.எப். ரிஸ்னா
வெளியீடு – இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்
தொலைபேசி – 0775009222, 0719200580
விலை – 300 ரூபாய்
அனுப்பியவர்: riznahalal@gmail.com