அண்மையில் The Rapids Of A Great River கவிதைத் தொகுப்பினைப் பார்த்தேன். உலகப் புகழ்பெற்ற ‘பென் குவின்’ நிறுவனத்தாரின் இந்தியக் கிளையினரால் வெளியிடப்பட்ட தொகுப்பு. தமிழக மற்றும் இலங்கைத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. மொழிபெயர்த்துத் தொகுத்திருப்பவர்கள்: லக்சுமி ஹோல்ம்ஸ்ட்ரோம், சுபஸ்ரீ கிருஷ்ணசாமி K.. ஸ்ரீலதா ஆகியோர். பென்குவின் தமிழ்க் கவிதைத் தொகுப்பு என்று முன் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைக் கவிஞர்களில் சேரன், சோலைக்கிளி, அவ்வை, திருமாவளவன், செழியன், சிவசேகரம், சண்முகம் சிவலிங்கம், எம்.ஏ.நுஃமான், பிரமிள், சு.வில்வரத்தினம், கி.பி.அரவிந்தன் என்று பலரின் கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. தமிழக மற்றும் இலங்கைக் கவிஞர்களின் கவிதைகளை உள்ளடக்கியதாகத் தொகுப்பு வெளிவந்திருப்பது மகிழ்ச்சியளிப்பது. ஆனால் இந்தத் தொகுப்பில் கவிதைகள் தொகுக்கப்பட்ட விடயம் பற்றிச் சில கேள்விகள் என் மனதிலெழுந்தன. அதனை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென்று எண்ணுகின்றேன்.
‘பென்குவின் தமிழ்க் கவிதைத் தொகுப்பு’ என்று குறிப்பிடுவதற்குப் பதிலாகத் ‘தொகுப்பாளர்களின் தேர்வுத் தமிழ்க் கவிதைகள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தால் மிகவும் பொருத்தமாகவிருக்கும். தமிழ்க் கவிதை என்பது தமிழகம், இலங்கை ஆகிய இருநாடுகளில் உள்ளவர்களால் மட்டும் எழுதப்படுமொன்றல்ல. சிங்கப்பூர், மலேசியா என்று அதன் பரப்பு விரிந்தது.சிங்கப்பூரில் இளங்கோவன் போன்ற கவிஞர்களின் கவிதைகள் கவனத்துக்கெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ‘பென்குவின் தமிழ்க் கவிதைத் தொகுப்பு’ என்று வெளியிடும் தொகுப்பென்பதால் மிகவும் பரந்த அளவில் பல்வேறு நாடுகளில் இருந்தும் வெளியாகும் கவிதைகளைப் பற்றி விரிவானதொரு ஆய்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதனடிப்படையில் கவிதைகள் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இலங்கைத் தமிழ்க் கவிஞர்களைத் தெரிவு செய்யும் பலர் செய்யும் தவறு எண்பதுகளுக்குப் பின்னர் எழுதும் கவிஞர்களின் கவிதைகளையே அதிகமாகக் கவனிப்பது. இதற்கு இவ்விதம் கவிதைகளைத் தொகுக்கும் தொகுப்பாளர்களுக்குக் கவிதைகளைத் தெரிவு செய்து கொடுக்கும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் இலக்கியக் காவிகள் ஆகியோரும் காரணமானவர்கள். உதாரணத்துக்கு, ஈழத்துக் கவிதைகளை எடுத்துக்கொண்டால், கவிதைகளைத் தெரிவு செய்யும் போது ஆரம்ப காலக் கவிதைகளிலிருந்து, மறுமலர்ச்சிக் காலகட்டம், 56ற்குப் பிற்பட்ட காலகட்டம், 77ற்குப் பிற்பட்ட காலகட்டம் 83ற்குப் பிற்பட்ட காலகட்டம், 90ற்குப் பிற்பட்ட காலகட்டமென்று வெளியான கவிதைகளைக் கணக்கெடுத்திருக்கலாம். ஈழத்தின் மரபுக் கவிஞர்கள் பலரைத் தவிர்க்க முடியாது.
மகாகவி, நீலாவணன், முருகையன் , வேந்தனார், திமிலைத்துமிலன், கவீந்திரன் (அ.ந.கந்தசாமி) , கவிஞர் கந்தவனம் (இலங்கையிலிருந்த காலகட்டத்தில் இவர் எழுதிய மரபுக் கவிதைகள் ) என்று விரிவானதொரு பட்டியலுண்டு. இவர்களது கவிதைகளையெல்லாம் விட்டுவிட்டு அண்மைக்காலக் கவிஞர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துத் தொகுக்கப்பட்டிருக்கும் தொகுப்பொன்றுக்குப் பரந்த அளவில் கொடுக்க வேண்டியதொரு தலைப்பான ‘தமிழ்க் கவிதைத் தொகுப்பு’ என்னும் தலைப்பினைக் கொடுத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. மிகவும் கண்டனத்துக்குரிய விடயமென்னவென்றால் தொகுப்பின் முன்னுரையில் மஹாகவியைப் பற்றியும் அவரது அகலிகை கவிதை பற்றியும் குறிப்பிட்டிருக்கின்றார்கள். ஆனால் தொகுப்பில் அவரது கவிதை ஒன்றுமில்லை. ஆனால சில கவிஞர்களின் ஒன்றுக்கும் மேற்பட்ட கவிதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. எதனால்?
எனக்கு மிகவும் பிடித்த ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகள் சில:
1. விளக்கு – நீலாவணன்
வீடிருண்டு கிடக்கிறது – விளக்கேற்றல் வேண்டும்.
வெளியேபோய் வெகுநேரம் தாமதமாய் மீண்டேன்!
காடுகளின் ஊடே ஓர் காடாகிவீடும்
காட்சிதரும் மையிருட்டு! கள்வர்கள் – பேய் – பாம்பு!
ஓடோடித் திரும்புகிறேன். ஓர் துணையும் இல்லை!
உள்ளிருந்து பேசுவதும் யார்? உற்றுக்கேட்டேன்…..
வீடிருண்டு கிடக்கிறது – விளக்கேற்றல் வேண்டும்.
வெளியேபோய் வெகுநேரம் தாமதமாய் மீண்டேன்!
காலமெனும் கருங்கிழவன் காத்திருந்தான். எண்ணெய்
கலங்களிலே ~~கலன்கலனாய் நிறைந்திருந்த துண்மை!
கோல எழில் விளக்குகளும் குறைவில்லை! குச்சி
குறையாத தீப்பெட்டி மூலையிலே து}ங்கும்!
மூளவில்லை – விளக்கெரிய முடியவில்லை! உள்ளே
மூதேவி அரசுசெய்ய முயல்கின்றாள்! வல்லே…..
வீடிருண்டு கிடக்கிறது – விளக்கேற்றல் வேண்டும்.
வெளியேபோய் வெகுநேரம் தாமதமாய் மீண்டேன்!
எண்ணெய் விளக் காய்விடுமா? எண்ணெயைவிட் டெரிக்கும்
ஏனந்தான் விளக்காமோ? எரிகின்ற திரியா?
மின்னி இரைந் தே புகைந்து எரியுந்தீக் குச்சி
விளக்காமோ? விளக்கென்னில் மேற்குறித்த யாவும்
ஒன்றுகுறை யாமலுள்ளே உள்ளனவே! ஏனும்
உள்ளுக்குள் ஒளியில்லை! வழிதெரியவில்லை!
வீடிருண்டு கிடக்கிறது – விளக்கேற்றல் வேண்டும்.
வெளியேபோய் வெகுநேரம் தாமதமாய் மீண்டேன்!
இருட்டில் மெய்ப் பையின்பை துழாவுகிறேன். சாவி
எடுத்தில்லின் தலைவாசல் கதவுதிறக் கின்றேன்!
திருட்டொன்றும் போகவில்லை! உள்ளறையும் திறந்து.
தீப்பெட்டி எடுத்ததனைக் கிழித்து விளக்கேற்றித்
தெருப்பக்கச் சன்னல்களைத் திறந்துவைத்தேன்! தனியே –
திருடர், பிற பயமின்றித் தெம்பொடிருக் கின்றேன்!
வீடிருண்டு கிடக்கவில்லை – விளக்கேற்றிவிட்டேன்
வீதியிலே போவார்க்கும் ஒளிவிழுதல் கண்டேன்!
தினகரன் 31.5.69
2. புள்ளி அளவில் ஒரு பூச்சி
– மஹாகவி –
புத்தகமும் நானும்,
புலவன் எவனோதான்
செத்த பின்னும் ஏதேதோ சேதிகள் சொல்ல
மனம்
ஒத்திருந்த வேளை!
ஓழுங்காக அச்சடித்த
வெள்ளைத் தாள் மீதில்,
வரியின் முடிவினிலே,
பிள்ளைத் தனமாய் பிசகாகப் போட்ட காற்
புள்ளியைக் கண்டு
புறங்கையால் தட்டினேன்.
நீ இறந்து விட்டாய்!
நெருக்கென்ற தென்நெஞ்சு
வாய் திறந்தாய், காணேன்,
வலியால் உலைவுற்றுத்
“தாயே’ என அழுத
சத்தமும் கேட்கவில்லை.
கூறிட்ட துண்டுக் கணத்துள் கொலையுண்டு
ஓர்
கீறாகத் தேய்ந்து கிடந்தாய்,
அக்கீறுமே
ஓரங்குலம் கூட ஓடியிருக்கவில்லை.
காட் டெருமை காலடியிற்
பட்ட தளிர்போல,
நீட்டு ரயிலில்
எறும்பு நெரிந்ததுபோல்,
பூட்டாநம் வீட்டிற் பொருள்போல
நீ மறைந்தாய்.
மீதியின்றி நின்னுடைய
மெய் பொய்யே ஆயிற்று
நீதியன்று நின்சா,
நினையாமல் நேர்ந்ததிது,
தீதை மறந்து விட மாட்டாயோ சிற்றுயிரே!
காதில் அப்பூச்சி கதை ஒன்றே வந்துவந்து
மோதிற்று;
மீண்டும் படிக்க முடியவில்லை
பாதியிலே பக்கத்தை மூடிப்
படுத்துவிட்டேன்.
மஹாகவியின் ‘வீடும் வெளியும்’ தொகுப்பிலுள்ள ‘மீண்டும் தொடங்கும் மிடுக்கு’ கவிதையும் எனக்கு மிகவும் பிடித்த அவரது இன்னுமொரு கவிதை. முயற்சி மிக்க, விவசாயியின் தளரா உழைப்பின் பெருமையினை வெளிப்படுத்தும் அற்புதமான கவிதை.
‘மப்பன்றிக் காலமழை காணா மண்ணிலே
சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது.
ஏர்
ஏறாது. காளை இழுக்காது.
எனினும் அந்தப்
பாறை பிளந்து பயன் விளைப்பான்
என் ஊரான்’
என்று தொடங்கும் கவிதை இயற்கையின் சீற்றத்தால் பயிரெல்லாம் பாழாகிவிட்ட நிலையிலும் முயற்சி முற்றும் தளராத விவசாயின் தளரா முயற்சியினை விபரிப்பதுடன் பின்வருமாறு முடியும்:
‘முற்றும் சிதற்வைக்கும் வானத்தைப்
பார்த்தயர்ந்து நிற்கும் பழக்கமற்றோன்
வாழி, அவன்
ஈண்டு முதலில் இருந்தும் முன்னேறுதற்கு
மீண்டும் தொடங்கும் மிடுக்கு.’
3. சிந்தனையும் மின்னொளியும்!
– அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) –
சாளரத்தின் ஊடாகப் பார்த்திருந்தேன் சகமெல்லாம்
ஆழ உறங்கியது அர்த்த ராத்திரி வேளையிலே,
வானம் நடுக்கமுற, வையமெல்லாம் கிடுகிடுக்க,
மோனத்தை வெட்டி யிடியொன்று மோதியதே!
‘சட்’ டென்று வானம் பொத்ததுபோல் பெருமாரி
கொட்டத்தொடங்கியது. ‘ஹேர்’ ரென்ற இரைச்சலுடன்
ஊளையிடு நரியைப் போல் பெருங்காற்றும் உதறியது.
ஆளை விழுத்திவிடும் அத்தகைய பேய்க்காற்று
சூறா வளியிதுவா உலகினையே மாய்க்க வந்த
ஆறாத பெருஊழிக் காலத்தின் காற்றிதுவா?
சாளரத்துக் கதவிரண்டும் துடிதுடித்து மோதியது.
ஆழிப்பெரும் புயல்போல் அல்லோலம் அவ்வேளை
உலகம் சீரழிவிற்ற(து); அப்போ வானத்தில்
மாயும் உலகினுக்கு ஒளிவிளக்கந் தாங்கிவந்த
காயும் மின்னலொன்று கணநேரம் தோற்றியதே.
கொட்டுமிடித்தாளம் இசைய நடம் செய்யும்
மட்டற்ற பேரழகு வான்வனிதை போல் மின்னல்
தோன்றி மறைந்ததுவே; சிந்தனையின் தரங்கங்கள்
ஊன்றியெழுந்தன இவ் வொளிமின்னல் செயல் என்னே?
வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ?
சாவும் பிறப்புமக் கணநேரத் தடங்குமன்றோ?
ஐனனப் படுக்கையிலே ஏழைமின்னல் தன்னுடைய
மரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற
சேதி புதினமன்று; அச் சேதியிலே நான் காணும்
சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு
ஓடி மறைகிறது; வாழும் சிறு கணத்தில்
தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே!
சேவையதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன்
ஆவிபிரிந்து அகல்வானில் கலந்ததுவே!
என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன்.
மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும்.
வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே
நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்.
ந்த வாறாகச் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டேன்.
புந்தி நடுங்கப் புரண்டதோர் பேரிடி; நான்
இந்த உலகினிற்கு வந்தடைந்தேன்; என்னுடைய
சிந்தனையால் இச்சகம்தான் சிறிதுபயன் கண்டிடுமோ?
-அறிஞர் அ.ந.கந்தசாமியின் ஆரம்பகாலக் கவிதையியிது. ஈழகேசரியில் வெளிவந்தது. இவரது ‘துறவியும் குஷ்ட்டரோகியும்’, ‘எதிர்காலச்சித்தன் பாடல்’ போன்ற கவிதைகளும் முக்கியமானவை.
4. மரபுக் கவிஞர் வேந்தனாரின் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். கவிதை படைத்திட்ட பண்டிதர்களில் இவர் வித்தியாசமானவர். முற்போக்குச் சிந்தனை மிக்க இவரது கவிதைகள் எனக்குப் பிடிக்கும்.
“பாடுகின்றோர் எல்லோருங் கவிஞ ரல்லர்
பாட்டென்றாற் பண்டிதர்க்கே உரிமை யல்ல
ஓடுகின்ற பெருவெள்ளப் பெருக்கே போல
உணர்ச்சியிலே ஊற்றெழுந்த ஒளியால் ஓங்கி
வாடுகின்ற மக்களினம் மாட்சி கொள்ள
மறுமலர்ச்சிப் பெருவாழ்வை வழங்கு மாற்றல்
கூடுகின்ற கொள்கையினால் எழுச்சி கொண்டு
குமுறுகின்ற கோளரியே கவிஞ னாவான்”
என்ற வேந்தனாரின் கவிதை வரிகள் எனக்குப் பிடித்த கவிதை வரிகள்.
5. கவிஞர் கந்தவனம் இலங்கையிலிருந்த காலத்தில் வெளியிட்ட ‘பாடு மனமே’, ‘கீரிமலையினிலே’ மற்றும் ‘இலக்கிய உலகம்’ போன்ற தொகுப்புகள் முக்கியமானவை. அவற்றில் அவரது பல நல்ல கவிதைகளுள்ளன. மேலும் இன்று தமிழர்கள் புலம் பெயர்ந்து உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழ்கின்றார்கள். ‘தமிழ்க் கவிதைத் தொகுப்பு’ என்னும் பெயரில் தொகுப்பு இருக்குமாயின் தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளிலிருந்தும் வெளிவரும் படைப்புகள் வாசிக்கப்பட வேண்டும். பின்னரே அவ்வாசிப்பின் அடிப்படையில் தேர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவர்களைப் பற்றிய விபரங்களை ஓர் உதாரணத்துக்காக இங்கு குறிப்பிட்டேன். இவர்களைப் போல் பல கவிஞர்கள் உள்ளனர். அவர்களது கவிதைகளைப் பற்றியெல்லாம் அறிவதற்கு விரிவானதொரு தேடல் அவசியம். அதன்பின்பே காத்திரமானதொரு தொகுப்பு சாத்தியம். எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற தொகுப்புகளை வெளியிட ஆர்வமாகவிருக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். நூலைத் தொகுப்பதற்கு மிகுந்த உழைப்பு வேண்டும். பிறர் உங்களுக்குத் தரும் ஒரு சில நூல்களை மட்டும் ஆதாரங்களாக வைத்துக்கொண்டு தொகுக்க முனையாதீர்கள். நீங்களும் உங்களது தேடலைப் புரிய வேண்டும். அதன் மூலமே காத்திரமானதொரு தொகுப்பு சாத்தியம். தொகுக்கப்பட வேண்டிய படைப்புகளைப் பற்றிய உங்களது தேடலும், வாசிப்பும் இதற்கு மிகவும் அவசியம்.
இச்சமயத்தில் பதிவுகளில் (மார்ச் 2008 இதழ் 99) முன்னர் பூபாலசிங்கம் பதிப்பகம் வெளியிட்ட கவிதைத் தொகுப்பொன்று பற்றி எழுதியிருந்த கருத்துகளை இச்சமயத்தில் இங்கு மீண்டும் பகிர்ந்து கொள்ளலாமென்று நினைக்கின்றேன். அது கீழே:
சிறு குறிப்பு: பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடாக ’20ம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்’!
அண்மையில் இலங்கை பூபாலசிங்கம் புத்தகசாலையினரின் வைரவிழா வெளியீடாக வெளிவந்த ’20ம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்’ நூலினைப் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நன்கு செலவழித்து அழகான அட்டைப்படத்துடன் வெளிவந்த கவிதை நூல் தொகுப்பாசிரியரின் அலட்சியத்தால் அடைந்திருக்க வேண்டிய பெருமையினை அடையமுடியாமல் போனது துரதிருஷ்ட்டமானது. ’20ம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்’ என்னும் பெயருக்கு மாறாகத் தொகுப்பாசிரியர் ‘எனக்குப் பிடித்த ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்’ என்று பெயரிட்டிருந்தால் மிகவும் பொருத்தமாகவிருந்திருக்கும். பொதுவாக ஆய்வுக்கட்டுரைகளை அல்லது ஆய்வு நூல்களை விரைந்தெழுத வேண்டுமென்ற அவசரத்தால், தேடல் அதிகமற்று, கையில் கிடைக்கும் படைப்புகளை மட்டுமே வைத்துக் கொண்டு, தமது எழுத்துத் திறமையினை மூலதனமாக்கி ஆக்கங்களைக் குறைப்பிரசவத்தில் பிரசவிக்கும் அரைகுறை ‘க(ல்)லாநிதிகளை’ப் போல் இத்தொகுப்பின் தொகுப்பாசிரியரும் அவசரப்பட்டிருக்கின்றார். விளைவு: நல்லதொரு தொகுப்பாக இருக்க வேண்டிய நூல் அதன் சிறப்பிழந்து, 20ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள பற்றியதொரு பிழையான பிம்பமாக வெளியாகியுள்ளது.
இத்தொகுப்பிலுள்ள முக்கிய குறைபாடுகளுக்கு இத்தொகுப்புக்காக ஆக்கங்கள் பெறப்பட்ட முறையுமொரு முக்கியமான காரணம். நூலின் முன்னுரையில் தொகுப்பாளர் பின்வருமாறு கூறுகின்றார்:
‘இத்தொகுப்பு பற்றிய அறிவித்தல் எல்லா ஊடகங்களினூடும் வெளியிடப்பட்டு கவிஞர்களுடைய படைப்புகள் கோரப்பட்டன. நிறைய ஆர்வலர்கள் படைப்புகளை அனுப்பியுதவினர். அப்படைப்புகளுள் தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான கவிதைகளோடு ஏனைய மூத்த கவிஞர்களுடைய தரமான சில கவிதைகளை (வகைமாதிரிகளானவை) , இணைத்து , தமிழ் அகரவரிசை ஒழுங்கில் இத்தொகுப்பு உருவாக்கப்பெற்றுள்ளது. இக்கவிதைகள் 1901ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிக்குள் எழுதப்பெற்றவை’
இக்கவிதை நூலினை மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் உடனேயே இத்தொகுப்பிலுள்ள மிகப்பெரும்பான்மையான கவிஞர்கள் அறுபதுகள், எழுபதுகளில் அறிமுகமான கவிஞர்களேயென்பதை உடனடியாகவே புரிந்து கொள்வார்கள். பெயருக்கு ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை, விபுலானந்தர், சோமசுந்தரப் புலவரென இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலக் கவிஞர்களின் சில கவிதைகள் முக்கியத்துவமற்ற வகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாகக் கல்லடி வேலுப்பிள்ளையின் ‘பிரிவுத்துயர்’ என்னும் கவிதையின் சில பகுதிகளே பிரசுரிக்கப்பட்டுள்ளன. அது போல் ஈழத்துக் கவிதையுலகில் சாதனை படைத்த ‘கவீந்திரன்’ அறிஞர் அ.ந.கந்தசாமியின் ‘வில்லூண்டி மயானம்’ கவிதையும் குற்றுயிரும், குலையுயிருமாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நட்சத்திரன செவ்விந்தியன், கல்வயல் வே . குமாரசாமி, இளவாலை விஜயேந்திரன், ச.வே.பஞ்சாட்சரம், நிலாவாணன், மு.பொன்னம்பலம்.. எனப் பலரின் ஒன்றிற்கு மேற்பட்ட பல கவிதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவ்விதம் ஒரு சிலரின் கவிதைகள் தேவைக்கதிகமாக ஒரு தொகுப்பில் இடம்பெறுவதற்குத் தொகுப்பாசிரியர் என்ன காரணத்தைக் கூறப்போகின்றார்? இத்தகைய தொகுப்பு முறை நூலின் சமநிலையினைக் குலைத்து விடாதா? மேலும் நூல் அகரவரிசைப்படி அமைந்திருக்கத் தேவையில்லை. தொகுப்பு பல்வேறு காலகட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, அப்பிரிவினுள் அகரவரிசைப்படி அமைந்திருக்கலாம். இவையெல்லாம் தொகுப்பாசிரியரின் அசிரத்தையையே காட்டுகிறது.
இவ்விதமாகத் தொகுப்பானது முறையாக 20ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகளையோ அல்லது கவிஞர்களையோ உரிய முறையில் பிரதிபலிக்கவில்லை. உண்மையில் தொகுப்பாசிரியர் குறைந்தது இலங்கைச் சுவடிகள் திணைக்களத்திற்காவது விஜயம் செய்து, குறிப்ப்பிட்ட காலகலட்டங்களில் வெளிவந்த பத்திரிகை, சஞ்சிகைகளை முதலில் ஆராய்ந்திருந்திருக்க வேண்டும். அவ்வாறு அவர் ஆராய்ந்திருப்பாராயின் இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகின் பல்வேறு காலகட்டங்களையும், அக்காலகட்டங்களுக்குரிய கவிஞர்களையும் முறையாக, சரியாக இனங்கண்டு கொண்டிருப்பார். அத்துடன் அக்காலகட்டக் கவிஞர்களின் நல்ல கவிதைகளையும் அவர் அவ்வாய்வின் மூலம் அறிந்திருக்க முடியும். அதன் பின்னர் அக்காலகட்டங்களைப் பிரதிபலிக்கும் வகையில், அக்காலகட்டத்திற்குரிய கவிஞர்களின் கவிதைகள் தேந்தெடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். பத்திரிகைகள், சஞ்சிகைகளில் விளம்பரங்கள் ‘போட்டி’களுக்குக் கொடுப்பதுபோல் கொடுத்து விட்டுக் கிடைப்பதிலிருந்து தொகுப்பதுக்கென்ன ஆற்றல் வேண்டியிருக்கிறது.
மேலும் உலகின் பல்வேறு கண்டங்களுக்கும் (அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவென..) புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியிலிருந்து மிகப்பெரியதொரு தொகுப்பே போடுமளவுக்குக் கவிதைகள் வெளிவந்துள்ளன; வெளிவந்தவண்ணமிருக்கின்றன. அப்புலம்பெயர்ந்த இலக்கியத்தினைப் பிரதிபலிக்கும் கவிதைகள் இதுவரையில் இங்கு முறையாகத் தொகுக்கப்படவில்லை. தமிழகத்திலிருந்து ‘நிழல்’ பதிப்பகம் அரைகுறைப் பதிப்பொன்றினை வெளியிட்டிருந்தது ஞாபகத்திற்கு வருகின்றது.
சுருக்கமாகக் கூறப்போனால் இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துத் தமிழக் கவிதைகளின் வெவ்வேறு காலகட்டங்களும் முறையாக அடையாளங்காணப்பட்டு, அக்காலகட்டங்களில் வெளிவந்த பல்வேறு வகையான கவிதைகள் சொல்லப்பட்ட பொருளின் அடிப்படையில் இனங்காணப்பட்டு, வகைப்படுத்தப்பட்டு (ஆன்மிகக் கவிதைகள், முற்போக்குக் கவிதைகள், சிறுவர் கவிதைகள், காதற் கவிதைகள், தத்துவக் கவிதைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள்.. இவ்விதமாக வகைப்படுத்தப்பட்டு), அவற்றைப் பிரதிபலிக்கும் கவிஞர்களின் முக்கியத்துவத்துக்கேற்ப, பங்களிப்பிற்கேற்பத் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். அதனைத் தொகுப்பாளர் தவறவிட்டுள்ளார். அதன் மூலம் நல்லதொரு முயற்சி உரிய பலனின்றி வீணடிக்கப்பட்டுள்ளதாகவே கருதவேண்டியிருக்கிறது.
இனியாவது இலக்கிய ஆய்வுகள் , தொகுப்புகளைச் செய்ய விரும்பும் ஆய்வாளர்கள் அல்லது தொகுப்பாளர்கள் முதலில் தாங்களாகவே களத்திலிறங்கி முறையான ஆய்வுகளைச் செய்யும் திறனை வளர்த்தெடுக்க வேண்டும். பலவேறு இலக்கியக் காலகட்டங்களை முறையாகப் பிரதிபலிக்கும் ஆய்வுகளும், தொகுப்புகளும் வெளிவருவதற்கு இத்தகைய களப்பணி மிகவும் முக்கியமானது. கிடைப்பதை வைத்து ஆய்வென்ற பெயரில் எழுதுவதற்கும், தொகுப்பதற்கும் பட்டப்படிப்பேதும் தேவையில்லை. தேடலும், அர்ப்பணிப்பும் ஆய்வொன்றின் வெற்றிக்கு முக்கியமானவை.
http://www.geotamil.com/pathivukal/literature_boopalasingam_poetryanthology.htm