ஹெக்கோடு சுப்பண்ணா (1932-2005)! இருப்பு தெரிந்தாலல்லவா இழப்பு வருத்தும்

[ பதிவுகள் இணைய இதழின் செப்டம்பர் 2005 இதழ் 69 இல் வெளியான கட்டுரை. ஒரு பதிவுக்காக ஒருங்குறியில் மீள்பிரசுரமாகின்றது. -பதிவுகள் ]  

ஹெக்கோடு சுப்பண்ணா (1932-2005)!- வெங்கட் சாமிநாதன் -போனமாதம் மூன்றாம் வாரமோ என்னமோ ஒரு நாள் வெளி ரங்கராஜனிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. இரங்கல் கூட்டம். ஹெக்கோடு சுப்பண்ணா (1932-2005} மறைந்து விட்டார். திகைப்பாகவும் வேதனையாகவும் இருந்தது. எப்படி இந்தச் செய்தியை பத்திரிகையிலிருந்து என் பார்வை தவறவிட்டது? வெளி ரங்கராஜனைக் கேட்டேன். பங்களூரிலிருந்து வந்த நஞ்சுண்டன் மூலம் தான் தனக்கு இந்தச் செய்தி தெரிந்ததாகவும், உடனே அவசர அவசரமாக ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று என்றார். அடுத்த இரண்டாம் நாள் நஞ்சுண்டனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். சென்னை பதிப்பை விட்டுத்தள்ளுங்கள், பங்களூர் பதிப்பில் கூட ஹிந்துவில் இந்த செய்தி வரவில்லை என்று அவர் சொன்னார். சரிதான் தமிழ் மரபு காப்பாற்றப் பட்டு விட்டது என்று நினைத்துக் கொண்டேன். சென்னையிலிருக்கும் லா.ச.ரா வே யாரென்று தெரிந்திராத, பைத்தியக்காரக் கூத்தாட்டத்திற்கும், சினிமாவுக்கும் வித்தியாசம் தெரியாத ஹிந்துவுக்கு, யாரும் அதற்கு எடுத்துச் சொன்னாலும்,  கர்னாடகாவில் ஏதோ ஒரு ஒதுங்கிய கிராமத்தில் நாடகம் போடும் பாக்குத் தோட்டக் காரராகத்தான் ஹிந்து பத்திரிகை அதைப் புரிந்து கொண்டிருக்கும்.. ஹிந்துவின் முகச்சித்திரமே இது வென்றால், மற்ற தமிழ் பத்திரிகைகளைப் பற்றிப் பேசுவது வீண். அந்த காலத்தில், சோழ நாட்டுத் தூதுவன் குதிரையேறி பாண்டி நாட்டுக்கு ஓலை கொண்டுவந்தால் தான் சோழநாட்டு செய்தி தெரியும் என்ற கதையாயிற்று இன்று. கர்னாடகாவிலிருந்து வந்த தூதுவர் சொல்லித்தான் நமக்குச் செய்தி தெரிகிறது. 

“வங்காளத்துக்கு ரவீந்திரர் என்ன செய்தாரோ, அதைச் சுப்பண்ணா கர்நாடகத்திற்குச் செய்தார்” என்று நஞ்சுண்டன் கருத்துக் கூறியிருந்தார். ரவீந்திரரைப் போல வள்ளத்தோல், சிவராம் கரந்த் என்று இன்னும் சில பெயர்கள் அவ்வரிசையில் என் மனத்தில் நிழலாடிச் செல்கின்றனர். நாம் ஒரு ரவீந்திரரையோ, காரந்தையோ, வள்ளத்தோலையோ நம் மண்ணில் எதிர்பார்க்க முடியாது. அதெல்லாம் இயற்கை வழங்கும்  அருளின் பாற்பட்ட விஷயங்கள். அவர்கள் பிறக்கும் போது, காலம் வரும்போது பிறக்கட்டும். ஆனால், மாங்கன்றாக, தென்னங்கன்றாகக் கிடைத்த ஒன்று, அது தனக்கு இயற்கையான வளர்ச்சி பெறலாமே. அதை எதிர்பார்க்கலாமே. நெல் வளர்ந்து விழலாவானேன்?

இருபது இருபத்திரண்டு வருடங்களுக்கு முன் தில்லியின் தேசீய நாடகப் பள்ளியில் படித்து வந்த கிருஷ்ணமூர்த்தி என்னும்  கர்னாடகாவிலிருந்து வந்த மாணவருடன் ஒரு நாள் மாலையும் இரவுமாக அவர் அறையில் நானும் ராஜேந்திரனும் நிறைய பேசிக்கொண்டிருந்தோம். அப்போது தான் அவர் ஹெக்கோடுவில் இயங்கி வரும் நீநாசம் ( நீலகண்டேஸ்வர நாட்டிய ஸேவா சங்கம்) பற்றியும், கே.வி. சுப்பண்ணா ஒர் பாரம்பரிய நாடக மன்றத்தைத் தன் தந்தையிடமிருந்து பெற்றவர், அதை எப்படியெல்லாம் உருமாற்றி, தன் கிராமம் ஹெக்கோடுவையும் அதன் சாதாரண கிராம மக்களையெல்லாம் எத்தகைய ஒரு பெரிய இயக்க மாற்றத்திற்கு இட்டுச்செல்வதில் ஈடுபட்டிருக்கிறார் என்றெல்லாம் பெரிய கதையாக சொல்லிவந்தார். அத்தோடு தான் அங்கு தேசீய நாடகப் பள்ளியில் நாடகக் கல்வி பயில வந்துள்ளதற்கும் காரணம், நீநாசமும், சுப்பண்ணாவும் தான் காரணம் என்றும், தன் கல்வி முடிந்ததும், திரும்பிப் போகப் போவது, ஹெக்கோடுவுக்கும், நீநாசம் நாடக மன்றத்திற்கும் தான் என்றார். அப்படியே அவர் சொன்னபடியே படிப்பு முடிந்ததும் நீநாசத்துக்குத் தான் திரும்பிச் சென்றார். சினிமா, நாடகம், நாடகப் பயிற்சிப் பட்டறைகள், தரமான உலகத் திரைப்படங்கள் என்-றல்லாம் அங்கு நடப்பவை பற்றியெல்லாம் சொல்லி வந்தார். அன்று என் முன் ஒரு புதிய உலகமே விரிவதாகத் தோன்றியது. சுப்பண்ணாவும் சரி, ஹெக்கோடுவில் அவரது முயற்சிகளும் சரி, – ரவீந்திரரைப் பற்றிச் சொன்னார் நஞ்சுண்டன் – வேறு எங்கும் நடந்திராத செயல்பாடுகளாகவும் முயற்சிகளாகவும் தான் எனக்குப் பட்டன. இவை பற்றி வெளியிட்டுள்ள பிரசுரங்களை  கிருஷ்ணமூர்த்தி மூலம் ஹெக்கோடுவிலிருந்து தருவித்து அவற்றையும்  மொழிபெயர்த்து, அப்போது என் பொறுப்பில் இருந்த யாத்ரா வில் கே.வி.சுப்பண்ணா சிறப்பிதழாக கொணரச் செய்தேன். (யாத்ரா, இதழ் 50-51. 1984). அவரது செயல் பாடுகள் நம்மவருக்கு ஒரு படிப்பினையாக, வழிகாட்டியாக இருக்கும் என்ற நினைப்பு எனக்கு. ஆனால், க.நா.சு. செய்தது போல், ஒரு விஷயத்தை பண்ணிப் பண்ணி 45 வருடங்கள் தொடர்ந்து பிரசாரம் செய்தால் ஒழிய யாருக்கும் எதுவும் உறைப்பதில்லை, நம் மண்ணில் எதுவும் முளைவிடுவதில்லை. நஞ்சுண்டனிடமும், வெளி ரங்கராஜனிடமும் அவர்களிடம் 20 வருடங்களுக்கு முன் யாத்ரா இது பற்றி தமிழர்களிடம் பேசியுள்ளது என்றேன். அவர்களுக்கு அது தெரிந்திருக்கவில்லை.

ஹெக்கோடு ஒரு சிறிய கிராமம். அல்லது பத்திருபது வீடுகள் என்று கொத்துக் கொத்தாக பரந்து கிடக்கும் குட்டி கிராமங்களின் தொகுப்பு. அதன் மையம் ஹெக்கோடு. நாகரீகம் பாழ் செய்யாத இடம். நாகரீகத்தின் சின்னமான சினிமா பார்க்கவேண்டுமாயின் சில மைல்கள் தூரத்திலிருப்பது சாகர். ஒரு தாலுகாவின் அதிகார மையம். சுப்பண்ணாவின் தந்தை ஒரு விவசாயி, அங்கு விளைவது பாக்கும் நெல்லும். சுப்பண்ணா படித்தது பட்டம் பெற்றதெல்லாம் மைசூரில் உடன் படித்தவர்களும் கன்னட இலக்கியத்தில் பெருந்தலைகள். ஹெக்கோடுவுக்குத் திரும்பி வந்த சுப்பண்ணாவுக்கு கிடைத்தவை தந்தையார் பார்த்து வந்த விவசாயமும், 1949 வாக்கில் தொடங்கி நடத்தி வந்த நீலகண்டேஸ்வர நாட்டிய சங்கமும் தான். கிராம மக்களுக்குத் தெரிந்தது அம்மண்ணின் பாரம்பரிய யக்ஷகானம், பின் அண்டியிருக்கும் மகாராஷ்டிரத்திலிருந்து வந்த பார்ஸி நாடகம். இரண்டுமே அவர்களுக்கு பிரியமானவைதான். அப்பாவிடமிருந்து பெற்ற பார்சி நாடகமன்றத்தை, மைசூரிலிருந்து திரும்பியதும், தான் கன்னட மக்களுக்கும், அந்த கிராம மக்களுக்கும் என்ன கொடுக்க வேண்டும் என்று விரும்பினாரோ அதற்கேற்ப நீநாசம் மன்றத்தை மாற்றி அமைத்தார். மத்திய அரசு, கர்நாடக அரசு, மற்றும் பொதுஸ்தாபனங்களின் நிதி உதவி பெற்று, ரங்கமந்திரம் என்றொரு நாடக அரங்கொன்றை தன் கிராமத்தில் எழுப்பினார். இது நடந்தது 1972-ல். இது போன்ற ஒரு  நாடக அரங்கு கிராமத்தில் அமைந்துள்ளது இந்தியாவிலேயே இதுதான் என்று தெரிகிறது. அப்போது மராட்டியில், ஹிந்தியில், வங்காளியில் துளிர்த்த புதிய நாடகங்களையெல்லாம், ஐரோப்பிய, சமஸ்கிருத நாடகங்கள் பலவற்றை கன்னடத்தில் மொழிபெயர்த்து மேடையேற்றினார். த’ன் மேடையேற்றிய நாடகங்களை வெளிமாநிலங்களுக்கும், தில்லிக்கும் எடுத்துச் சென்றார். நாடகப் பள்ளி ஒன்றைத் துவக்கினார். தன் நாடகப் பள்ளிக்கு வேண்டிய புத்தகங்களையெல்லாம் கன்னடத்தில் தானே மொழிபெயர்த்துக் கொண்டார். தில்லி தேசீய நாடகப் பள்ளியின் நாடகப் பயிற்சிப் பட்டறைகள் ஹெக்கோடுவுக்கும் கொணரப்பட்டன. ஹெக்கோடுவில். இதற்கெல்லாம் வேண்டிய பணம் அவருக்கு பல அமைப்புகள், அரசு. பல்கலைக்கழகம் போன்றவற்றிலிருந்து கிடைக்கிறது, 

நீநாசம் அமைப்பின் கிளையாக 1973-ல் நீநாசம் திரைப்பட சங்கமும் அமைக்கப்பட்டது. இது இந்தியாவின், உலகின் தரம் வாய்ந்த திரைப்படங்கள், திரையிட பயன்படுகிறது. அவ்வப்போது, திரைப்பட விழாக்களும் நடைபெறுவதுண்டு. திரைப்படங்கள் கொடுப்பது,  திரைப்பட ரசனைப் பயிற்சி வகுப்புகள் நடத்த உதவுவதும் புனேயில் உள்ள  Film and Television Institute of India தான். இவ்விழாக்களும், திரைப்படங்களும் ஹெக்கோடு மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு இலவசமாகவே கிடைக்கின்றன. திரையில் படம் ஓடும்போது, சுப்பண்ணாவும், காஸரவல்லி போன்ற இயக்குனர்களும் கன்னடத்தில் மொழிபெயர்த்துச் சொல்லிக்கொண்டு வருவார்கள். திரைப்படம், நாடகம் பற்றிய பயிற்சிப் பட்டறைகளும் வகுப்புகளும் கன்னடத்திலேயே நடைபெறும். அதற்கு பிரஸன்னா, கர்னாட், காஸரவல்லி, காரந்த் போன்ற கன்னட நாடக திரைப்பட கலைஞர்களும், புனே Institute-ன் பேராசிரியர்களும் தில்லி தேசீய நாடகப் பள்ளியின் ஆசிரியர்களும் பங்கெடுத்துக் கொள்ள வருவார்கள். திரைப்பட விழாவிற்குப் பிறகு, கிராம மக்கள் ரசித்தது எப்படங்களை, ரசித்தது எதற்காக, இம்மாதிரியான, ஸாகர் டவுனில் அவர்களில் சிலர் பார்த்திருந்த வியாபார கன்னடப்படங்களிலிருந்து வேறுபட்ட இப்படங்களை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் போன்ற விவரங்களை அறிவதற்கான கள ஆராய்வும் நடைபெறும். படம் திரையிலோடும்போதே அவர்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பதை அறிய நீநாசம் மன்றத்தைச் சேர்ந்தவர்களே அரங்கில் மக்களிடையே அமர்ந்து கவனித்து குறித்துக் கொள்கிறார்கள். படம் முடிந்தபிறகு அது பற்றி கிராமத்துப் பார்வையாளர்களோடு உரையாடல் நடக்கும். 
 
ஆக, இது வெறும் பொழுது போக்காக, இலவச சினிமா காட்டும்  விவகாரமாக ஆகிவிடாது, மக்களின் ரசனையில் மாற்றங்கள் நிகழ்வதை அறியும்  சாத்தியங்களையும்   கொண்டுள்ளது. யாத்ரா 84-ல் பிரசுரித்த சுப்பண்ணா சிறப்பிதழ் பேசிய 1977- வருட திரைப்பட விழாவில் பெர்க்மனின் Wild Strawberries, சார்லி சாப்ளினின் Gold Rush, ராபர்ட் ·ப்ளாஹர்ட்டியின், Nanook of the North, டி சிகாவின் பைஸைக்கிள் திருடன், ரேயின் பாதேர் பஞ்சலி, ஐஸ்ன்ஸ்டைனின் Battleship Potempkin, அகிரா குரஸாவாவின் ரோஷோமோன், Incident at Owl Creek, Wages of Fear, Wedding, Happy anniversary என்று ஹெக்கோடு கிராமத்து ஜனங்கள் பார்க்கக் கிடைத்த படங்களின் பட்டியல் நீள்கிறது. அவர்களுக்கு புரியாது போனது பெர்க்மனின் படம் தான். மற்றவைகளை படம் முடியும் வரை விஸில் அடிக்காது, கலவரம் செய்யாது, காமென்ட் அடிக்காது  அமைதியாக இருந்து பார்த்தார்கள். தனக்கு இடம் கிடைக்கவில்லை என்று ஒரு 12 வயது சிறுமி அழுகிறாள். சார்லி இறந்து விட்டார் என்று சொன்னபோது, ‘யாரு, செருப்பைக் கடிச்சுத்தின்னுக்கிட்டிருந்தானே அந்த கோமாளியா? என்று ஒரு கிழவி கேட்கிறாள். மொத்தத்தில் தரமான படங்களுக்கும் தாம் அன்னியரில்லை, ரசனையை வளர்ப்பது, பாழ்படுத்துவதும் வியாபார, அரசியல் சக்திகள் தான் என்பது இங்கு நிரூபனமாகிறது, ஒவ்வொரு முறையும். நம்மவர்கள் ஏதோ ” ஊர் ரோடையெல்லாம் பெயின்ட் அடிச்சுட்டு வா, இல்லே கட்டிலை ஆட்டிவிட்டு முனகச் சொல்லு, அப்பத்தான் படம் பார்க்க வருவேன்” என்று  மக்கள் கூடி தீர்மானம்போட்டு இவர்களுக்கு அனுப்பி வைத்து போல, ஜனங்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்று மூன்று தலை முறையாக நம் சினிமா கலைஞர்கள் தம் ஆபாசக் கூத்தடிப்புக்கு காரணம் சொல்லி அதைக் கலை என்றும் பெருமைப் பட்டுக்கொள்கிறார்களே, அந்த ஆபாசம் அவர்களிடமிருந்துதான் உற்பத்தி ஆகிறதே தவிர மக்களிடமிருந்து அல்ல என்பதை மீண்டும் மீண்டும் கே.வி.சுப்பண்ணா ஹெக்கோடுவில் நிரூபித்து வந்தார். 

இன்னுமொன்று. ஹெக்கோடுவும் கர்நாடகாவும் யக்ஷகானத்தின் பாரம்பரியத்தில் வந்தவை தான். சுப்பண்ணாவும் அது பற்றி பெருமை கொள்ளும் வாரிசு தான். ஆனால் அதற்காக வேர்களைத் தேடிப்போகிறேன், நவீன நாடகம் காணப் போகிறேன் என்று  இது யக்ஷகானத்திலிருந்து பெற்றதாக்கும் என்று கோமாளி வசனமும் அபிநயமும் செய்யவில்லை. கர்நாடகாவில் யாரும் அப்படிச் செய்வதில்லை. தங்களது ‘ஒற்றைப்பரிமாண சமாசாரம்” என்று யாரும் அங்கு சொல்லவும் இல்லை. அது பற்றி அவர்கள் கவலைப் படுவதுமில்லை. இது தமிழ் மண்ணுக்கே உரிய மேதமை. 

பார்ஸி நாடகங்கள் நடத்தி வந்த நீநாஸம் மன்றத்தை ஒரு அகில இந்திய திரைப்பட, நாடக மையமாக மாற்றி, ஹெக்கோடு  கிராமத்து மக்களுக்கு அவர்கள் பழகிய பார்ஸி, யக்ஷகானங்களை மீறி, அகில இந்திய பரப்பிலும், உலக பரப்பிலும் விரிந்து கிடக்கும் நாடக, திரைப்பட உலகங்களுக்கும் பாக்கியதாரர்களாக ஆக்கிக் காட்டியுள்ளார்.  அவர் பெற்ற ஹெக்கோடு அல்ல அவர் விட்டுச் சென்றுள்ள ஹெக்கோடு. அதன் குணத்தை, தரத்தை, அதன் எதிர்பார்ப்புகளின் குணத்தை மாற்றிச் சென்றுள்ளார். அவருக்கும் பல்கலைகழக, சங்கீத நாடக, கர்னாடக அரசு மான்யங்கள் கிடைத்தன. Ford Foundation மான்யங்கள் கிடைத்தன. மாக் சே சே விருதும் பரிசும் கிடைத்தது. இந்த மான்யங்கள் பரிசுகள் எல்லாம் சுப்பண்ணா பார்ஸி நாடக நீநாஸத்தை மாற்றி அமைத்துத் தன் வழி கண்ட பிறகு அதைத் தொடர விஸ்தரிக்கக் கிடைத்தவை. மான்யங்களிலேயே வாழ்ந்தவர் அல்லர் அவர். அது நின்றதும் செயலற்றுப் போகிறவரும் அல்லர். மான்யங்களும் விருதுகளும் அவர் தன்னை உயர்த்திக்கொள்ள அல்ல. தன் கிராமத்தை, தன் மக்களை, தன் கன்னட பிராந்தியத்தின் குணத்தை மாற்ற அவருக்கு அவை உதவின. தான் விட்டுச் செல்லும் ஹெக்கோடும், கன்னட நாடும் மக்களும் தான் பெற்றதை விட ஒர் உயர்ந்த தளத்திற்கு உயர்த்திவிட்டுச் சென்றுள்ளவர். இம்மாதிரியான ஒரு கொடையை நாம் ஒவ்வொருவரும் நம் மக்களுக்கு, தமிழ் நாட்டுக்கு, அவரவர் இயன்ற அளவுக்குக் கொடுக்க முடியும். நாட்டையும் மக்களையும் வளப்படுத்த முடியும்.  ஆனால் பட்டங்களும், மான்யங்களும், பணமும் செல்வாக்கும், நம்மிடையே பலருக்கு நாட்டின் மக்களின் தரத்தை ஆபாசப்படுத்தி தன் செல்வத்தை, பிராபல்யத்தை பெருக்கிக் கொள்வதிலேயே முனைப்பாக இருந்து வருவது நம் சரித்திரம். ஒரு தாகூர், காரந்த், வள்ளத்தோல் இல்லாமலேயே நாம் நம்மால் முடிந்த அளவுக்கு செயலாற்றியிருக்க முடியும். ஆனால் நம் நோக்கங்கள் வேறாகவே இருந்து வந்துள்ளன. தன் செல்வத்தையும், பிராபல்யத்தையும் பெருக்கிக் கொண்டுள்ள நம் தமிழ் இலக்கிய கலைப் பெரும் தலைகள் எத்தனை பேர் இவற்றை சம்பாதிக்க தான் கொடுத்தது எத்தரத்தது என்பது பற்றி வெட்கமில்லாமல் சொல்லிக் கொள்ளமுடியும்? இப்படி ஒரு செல்லப்பா, ஒரு க. நா.சு. சொல்லமுடியும். வேறு……?

வெங்கட் சாமிநாதன்/14.8.05 
swaminathan_venkat@rediffmail.com

மூலம்: பதிவுகள்  செப்டம்பர் 2005 இதழ் 69 -மாத இதழ்