மீள்தலின் பாடல்
– எம்.ரிஷான் ஷெரீப் –
ஓய்வுகளின்றி ஓடித்திரிந்த உடல்
தொய்வுகளேதுமின்றி
எழுதிவந்த விரல்கள்
வெளியெங்கும் புன்னகையை விதைக்கும்
இதழ்களோடும் விழிகளோடும்
சேர்ந்தெப்பொழுதும் மூடியே இருந்தன
இரவு பகல் காலநிலையென
மாறும் காலக்கணக்குகளறியாது
ஆஸ்பத்திரிக்கட்டிலில் மயங்கிக்கிடந்தேன்
ஓயாத பேச்சுக்குள் சிக்கித்தவித்த நாவு
மௌனத்தைப் போர்த்தி உறங்கிப்போனது
கண்களில் பேரன்பு பொருத்தித் தலைகோதி
ஆரோக்கியத்தைச் சொட்டுச் சொட்டாக ஏற்றி
எனது புலம்பல்களைச் சகித்தபடி
நடமாடிய செவிலித்தாய்களில்
அக்கா உன்னைக் கண்டேன்
ஆறுதலும் அக்கறையும் மிகுந்த வார்த்தைகளை
உன்னழுகையில் குரல் இடராது
தொலைபேசி வழியே கசியவிட்டாய்
நகர்ந்த நொடிகளனைத்திலுமுன்
பிரார்த்தனைகளினதும்
நீ அதிர்ந்தெழும் கொடிய கனவுகளினதும்
மையப்பொருளாக
நானிருந்தேனெனப் பின்னரறிந்தேன்
நீ பார்த்துப்பார்த்துச் செதுக்கிய
கவிதையின் முகத்தினை
மீளப்பொருத்தியபடி
தம்பி வந்திருக்கிறேன்
எல்லாக்காயங்களையும்
முழுதாயாற்றிடக் காலத்துக்கும்
சிறிது காலமெடுக்கலாம்
எனினும்
‘மீளவும் பழைய ஆரோக்கியத்திடம்
மீண்டுவிட்டேன்’ என
இப்போதைக்கு உன் வரிகளைச்
சொல்வதன்றி வேறறியேன்
– எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com
அரசியல் கொக்குகள்
– வே.ம.அருச்சுணன் – மலேசியா –
அழகிய நாடு
அற்புத வளங்கள்
கல்வி குறைவென்றாலும்
அறிவான மக்கள்
பேதம் அறியா
அன்பு தெய்வங்கள்
மாறா குணங்கள்
அமைதியான வாழ்க்கை
பொது நலம்
கடந்து நூற்றாண்டில்……!
புதிய மனிதர்கள்
விநோத சிந்தனைகள்
சுய கௌரவம்
பொது வாழ்வில்
சுரங்கம் அமைத்து
நாட்டை மறந்து
வீட்டை வளர்க்க
சித்து விளையாட்டு
சுயநலம்
இந்த நூற்றாண்டில்……!
மகாத்மாக்கள்
சென்ற நூற்றாண்டு முதலே
பயணித்துவிட்டார்கள்……!
இன்று,
அரசியல் வானில்
அநீதிகளுக்கு மகுடம்
அறப்போர்
ஓரமாய் ஒதுங்கிக் கொண்டது
அடாவடிகள்
தலையெடுப்பால்
நதிகள் நாசமாயின
நீர்வாழ் அழிந்தன…….!
பொய்யான
அரசியல் சுனாமியால்
மக்கள் சிரச்சேதம்
கூடி வாழ்ந்த மூவினம்
மண்ணாகியது
வம்பும் வழக்கும்
தொடராகின…..!
நாட்டின் அமைதி
அவர்கள் விரும்பாதது
கலங்கி குட்டையில்
மீன் பிடிக்கும்
அரசியல் கொக்குகள்……!
மக்களை
மாக்களாக்கும்
அரசியலாரிடம் எச்சரிக்கை
துஸ்டனைக் கண்டால் தூரவிலகு
பெரியோர் சொன்னது தப்பாகா……!
நாட்டு நலம்
முன்னெடுத்து
சபதம் எடுத்திடு
மக்கள்
அரசியலாரிடமிருந்து
நாட்டைக் காக்திடு……!
நாடு
இடுகாடாய் மாறு முன்னே
சுதந்திரத்தைக் காத்திடு
சிம்மாசனத்தில் அமர்ந்து
எக்காளமிடும் அரசியலார்
திமிரினை அடியோடு
வீழ்த்திடுவீர்……!
நாட்டைக் காக்கும்
வீரத்திருமகனே
நாளைய பொழுது
நலமாய் இருக்கட்டும்
வெற்றிமுரசு வேகமாய் ஒலிக்கட்டும்………!
“எசக்கியம்மன்”
– ருத்ரா (இ.பரமசிவன்) –
“எலெ சொள்ள மாடா
என்னத்தலெ சொல்லுதது?
ஓம் மாடு
ஏ(ம்) வயப்பக்கம் தாம்லெ
வாய வைய்க்கிது.
பெரவு
ஏங்கிட்ட எதும் சொல்லப்டாதுலெ.
ஓம் மாடே
கசாப்புக்கு போட்டுரலாமா?
இல்ல
ஓம் கால ஒடிச்சுடலாமா?”
அவர் உறுமி விட்டு சென்றார்.
சொள்ளமாடனுக்கு
என்னண்ணே வெளங்கலெ.
அவன்
மாடு பின்னெ
வாலப் புடிக்காத கொரயாத்தான்
மேச்சுகிட்டு வாரான்.
“மெனக்கிட்டு வந்து
ஏசிட்டு போராரே.
ஏ(ன்)
வாய்ல என்னத்த வெச்சிருந்த?
ஒண்ணுமே கேக்கல?”
தாத்தனின் பேரன் சீறினான்.
“எல ஓஞ்சோலியப்பாருல”
துண்ட ஒதறிக்கிட்டு போய்ட்டான்.
கெழவன்.
அவனாக புலம்பிக்கொண்டே போனான்.
“நா(ன்)மாட்ட அந்தப்பக்கமே
போவ விடுததுல்ல.
அது வழியாப் போரதே
அவருக்கு அக்யானியமா இருக்கு.
மாடு பயிருல வாய வச்சுரும்ணு.
அதுக்காவ நம்ம
இப்டி அச்சப்படுத்தாவளாம்.
கக்கத்துல இருக்க முண்ட
அரிக்கின்னு
கொஞ்சம் அசச்சாலே
இவங்களுக்கு
சொரம் தா(ன்).
எங்க எல்லாம்
மாத்திப்டுவானுங்களோன்னு.
அதாம்ல
இத்தன “சவுண்டு”…”
எதிரே வரும்
மாசானத்திடம் மோதிப்போய்..
நின்னுட்டான் கெழவன்.
“ஏஞ்சொள்ள மாடா
கண்ணு என்ன பொடதீயிலா?”
“அட!ஒண்ணுமில்லப்பா
ஏதோ நெனப்புலெ..”
கெழவன் தொண்டயில
மீனு முள்ளு மாட்டிகிட்டாப்ல
கக்கலும் கதக்கலுமாய்
குழறினான்.
இப்ப மாட்ட
அந்த தெசைக்கே கொண்டு போரதுல்ல.
மாடும் தப்பிச்சுது
அவங்காலுந் தப்பிச்சுது.
பயிரும் பச்சப்பசேலா இருக்கு.
வரப்பு புல்லுல கூட நெல்லு
மொளைக்கும் போலதான் இருக்கு.
எல்லாம் தப்பிச்சுது.
ஆனா
திடீர்னு ஒருநா
அங்கிருந்து ஒண்ணும்
இங்கிருந்து ஒண்ணும்
கய்ய கோத்துக்கிட்டு
ஓடிப்போய்ருச்சுக.
“எலேய்ய்ய்ய்…ய்ய்”
கெழவன்
வெல வெலத்தான்.
வீறிட்டான்
எசக்கியம்ம(ன்) கொடைக்கி
இந்த வெச
ஆடு ரத்தமா?
ஆளு ரத்தமா?
சங்கதியை நீ அறியாயோ?
– கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை –
தாய்க் குலமே நீயின்று
தனித் துவத்தை இழந்ததுமேன்?
ஆய் விங்கே நடத்தவில்லை
ஆனாலும் உன்நிலை கண்டதினால்
பாய்ந்து வரும் வேதனையை
பகிர்ந்திடவே நான் முயன்றேன்
தேய்ந்து வருமுன் நிலைபற்றித்
துளியேனும் நீ சிந்தித்தாயா?
ஒரு காலம் கல்வியறிவில்
உனக்கக்கறை அவ்வளவாய்
பெருகி வரவில்லை யெனினும்
பெருமித மடைகிறேன் நீயின்று
அறிவென்ன!ஆய கலைகளென்ன!
அனைத்திலுமே ஆண்களுடன்
சரி நிகராய் முன்னேறும்
சாதூரியம் பெற்றுவிட்டாய்.
உயர் கல்வி கற்பதுவும்
உத்தியோகம் பார்ப்பதுவும்
பயன் நல்கும்.என்றாலும்
பொறுப்புள்ள தாயாய் நிதம்
நயங் கொண்டே இயங்குவதில்
நீ காட்டும் ஆர்வத்தால்
பயன் அதிகம் இல்லையென்ற
புதிர் உனக்கும் புரியவில்லையா?
இன்று பல வாலிபர்கள்
ஏன்? வாலைக்குமரிகளும்
பண்பாடு கலாச்சாரம்
புனித முறும் ஒழுக்க நலன்
என்னவென்று தெரியாது
அகம் போன போக்கினிலே
சென்று கொண்டே இருக்கின்ற
சங்கதியை நீ அறியாயோ?
தான் பிறந்த தாய் நாடே
தனக்கென்றும் பொன் நாடாம்
வான் முகட்டில் வாழ்ந்தாலும்
விண் வெளியில் ஊர்ந்தாலும்
மேன்மையுறத் தன் நாட்டின்
மேன்மைக்காய் ஒவ்வொரு
ஆண் மகனும் பெண்மணியும்
அரும்பணி புரிதல் கடமையே!
இன்றேனோ அநேகரிடம்
இல்லையன்றோ இப்பண்பு
நன்கிதனை ஆய்ந் திட்டால்
நிச்சியமாய் உன் தவறே
மன்னிப்பாய் மாதாவே!
மதலைக்கு நீயூட்டும் பாலோடு
அன்பகிம்சை நாற்றுப்பற்று
அழுதா நீ ஊட்டினையோ?
மறந்து விட்டேன் ‘மகராசி’
மேனியழகு கெடுமென்று
வெறும் புட்டிப் பாலையன்றே
விரும்பி நீயும் ஊட்டுகிறாய்.
பெருகி வரும் தாய்ப் பாசம்
புனித முறும் தேசப்பற்று
அருகி வரும் காரணமே
இன்னும் புரியவில்லையா?
கற்றாய்ந்து நன் முறையில்
கடமைகளைச் செய்யாது
பெற்றோரையும் மதியாது
பெரியோரையும் மதியாது
கற்பிக்கும் ஆசானையும் மதியாது
கடும் போராளிகள் போல
பற்பல இளைஞர் யுவதிகளும்
பாவிகளாகி அலைகின்றார்.
சோலைக் கிளி ஆனபல
சுதந்திரத் தாய்மாரின்
வேலைக்காரப் பெண்களின்
வீட்டு ஆயாமார்களின்
சோலைத்தலைப்பில் வளர்கின்ற
சேய்களுக் கெங்கே தாயன்பு?
ஆல் போல் வளர்ந்து நித்தம்
ஆர்க்கப் போதிய வாய்ப்புண்டு.
வரலாறு படைத்த பல
வீர மணித் தாய்மார்கள்
சரித்திரமே அன்னார்கள்
சமூகம் நாடு உயர்வடைய
அரும் பணிகள் புரிந்ததனை
அழகாகச் சொல்லுவதைத்
தெரியவில்லை யெனில் மீண்டும்
தெளிவாகப் பயின்றிடுவாய்.
இந் நிலை நீடித்தால்
எதிர் காலம் நிலையற்று
அந்த ரத்தில் வாழுகின்ற
அவல நிலை நிச்சியமாய்
வந் தெங்கள் அனைவரையும்
வாட்டி விடும் அறிவாயோ!
நொந் துள்ளம் தளராதே
நெஞ் சுறுதி பூண்டிருவாய்!
அடங் காத காளையர்கள்
அறம் மதியா வாலிபர்கள்
மடம் போன கன்னியர்கள்
மாற்றானின் நாகரிகம் தத்துவங்கள்
உடன் கொண்டு-நன்னெறிகள்
உதா சீனம் செய்தந்தோ
தடம் புரளும் இளஞர்கள்
திருந்த வழிசெய்தல் உன்கடனே.
ஆசைக்கடல்
வேலணையூர் -தாஸ்
உன் விழி வழி வழிகிற ஆசை அழைக்கிறது.
அந்த அறை முழுவதும் நிரம்பியிருக்கிறது
நமது காதல்
காம பனியாகிப் பொழிகிறாய்
காதல் நீராய் உருகுகிறாய் ——-
அமுத கடலில் துளிநீர் அருந்தி வியர்க்கிறேன்.
அள்ள அள்ள கடெலன விரிகிறது காமம்.
முத்தங்களால் தீமுட்டுகிறாய்
விழிகள் சொருகி உதடுகள் கடித்து உறைகிறாய்.
காதருகே சுருளும் ஒற்றை முடியில்
ஒளிக்கிறது உயிர்…….