லாங்ஸ்ரன் ஹியூஸ் கவிதைகள்

லாங்ஸ்ரன் ஹியூஸ் கவிதைகள் [தமிழில் : அ. யேசுராசா]

லாங்ஸ்ரன் ஹியூஸ்

அமெரிக்காவில் மிஸூரியிலுள்ள ஜோப்லின் என்ற சிறிய நகரத்தில் 1902 இல் பிறந்த கறுப்பினத்தவர். “இரவைப் போன்று கறுப்பானவன் / எனது ஆபிரிக்காவின் ஆழங்களைப் போன்று கறுப்பானவன்” என்பவை அவரது வரிகள்.ஆங்கிலத்தில் எழுதியவர். கறுப்பர்களுக்காய்ப் புலம்பல் மற்றும் கவிதைகள், ஒருபுதிய பாடல், அன்புக்குரிய அழகிய மரணம் முதலிய அநேக கவிதைத்  தொகுப்புக்கள் வெளியாகியுள்ளன. புனைகதை,நாடகம், சுயசரிதை நூல்களையும் எழுதியுள்ளார். 1967இல் மரணமானார். 
                                                         
1  கறுப்பர்களுக்காய்ப் புலம்பல்

ஒரு காலத்தில் நான்
சிவப்பு மனிதனாய் இருந்தேன்.
ஆனால் வெள்ளை மனிதர்கள் வந்தார்கள்;
கறுப்பு மனிதனாயும் நான் இருந்தேன்,
ஆனால் வெள்ளை மனிதர்கள் வந்தார்கள்.

காட்டிலிருந்து அவர்கள் என்னைத் துரத்தினர்;
வனங்களிலிருந்து என்னை
அவர்கள் எடுத்துச் சென்றனர்.
எனது மரங்களை நான் இழந்தேன்;
எனது வெள்ளி நிலவுகளையும் இழந்தேன்.

நாகரிகமெனும் காட்சிக் கூண்டில்
அவர்கள் என்னை அடைத்தனர் –
இப்போது,
நாகரிகமெனும் காட்சிக் கூண்டில் 
அடைக்கப்பட்ட  பலரோடும்
மந்தையானேன் நான்!

நன்றி : வெளிச்சம்
தை – மாசி 1992

2.  முடிவு

சுவரின்மீது அங்கே
மணிக்கூடுகள் இல்லை
காலமும் இல்லை,
காலைதொடங்கி மாலை வரைக்கும்
தரையின் குறுக்கே நகரும்
நிழல்களும் இல்லை.

கதவின் வெளியே
அங்கு,
இருளும் இல்லை;
ஒளியும் இல்லை.

அங்கு கதவே இல்லை!

நன்றி : கவிதை
ஐப்பசி – கார்த்திகை 1994

நன்றி: முகநூல் நண்பர்களின் பதிவுகள்