“ஒரு நபர் தனக்காக மட்டும் பாடுபட்டால், ஒரு வேளை பிரபலமான அறிவாளியாகலாம். மாபெரும் ஞானியாகலாம், மிகச்சிறந்த கவிஞராகலாம், ஆனால் உண்மையான மனிதராக முடியாது” என தனது பள்ளிப்பருவத்திலே எழுதியவர் காரல் மார்க்ஸ். சக மனிதர்கள் குறித்தும் அம்மனிதர்களின் வாழ்வுக் குறித்தும் உயரிய நிலையில் சிந்தித்து செயலாற்றியமையே வரலாற்றினுடைய மனிதராக அவர் போற்றப்படுவதற்கான அடிப்படையாகும். மனித குல வளர்ச்சிப் போக்க்pல் அறிவு என்பது சமுதாயம் சார்ந்த விடயமாகும். எனவே அவ்வறிவு எப்போதும் விஞ்ஞானம் தழுவியதாக அமைந்திருப்பதுடன் செருக்ககோ நேர்மையீனமோ இல்லாது சமூக வளர்ச்சியை முன்னெடுத்து செல்வதாக அது அமைந்துக் காணப்படுகின்றது. பிரம்ஜி என்ற ஆளுமையின் பணிநலன் பாரட்டு நிகழ்வு குறித்த சிந்திக்கின்ற போது மேற்கறிக்க வரிகள் ஞாபகத்திற்கு வருகின்றன.
இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் பொதுவான வளர்ச்சியிலும், குறிப்பாக அப்பரிமாணத்தை ஆழமாகவும் அகலமாகவும் வளர்த்தெடுப்பதிலும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முக்கிய பங்கினை வகித்துள்ளது. அவ்வியக்கத்தின் பொதுவான வளர்ச்சியையும் முற்போக்கு நிலைப்பட்ட செயற்பாடுகளையும் முன்னெடுத்து செல்வதில் பிரேம்ஜிக்கு முக்கிய இடமுண்டு. அவர் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், பதிப்பாளர் என பல்துறைசார்ந்த ஆளுமைகளை கொண்டிருப்பினும் 1950 களில் இ.மு.எ.ச.த்தின் வீறுக்கொண்ட எழுச்சியும் அதன் பின்னணியிலான பிரேம்ஜியின் அமைப்பாக்க செயற்பாடுகளுமே அவரை சமூக முக்கியத்துவம் உடைய மனிதராக்கியது. அதற்காக அவரது ஏனைய துறைசார்ந்த பங்களிப்புகள் புறக்கணிக்கதக்கதல்ல.
இவர் யாழ்பாணத்திற்கு வடக்கேயுள்ள அச்சுவேலி கிராமத்தில் 17-11-1930 அன்று பிறந்தார். தந்தையின்பெயர் நடராஜா தாயின் பெயர் பவளம்மா. பேர்ற்றோரால் இவருக்கு சூட்டப்பட்ட பெயர் ஸ்ரீ கதிர்காம தேவ ஞானசுந்தரம். தமது இளமைக்கால முதலாகவே எழுத்துத் துறையில் ஆர்வம் காட்டியிருந்த ஞானசுந்தரம் வாலிப முன்னணி என்ற பத்திரிக்கையில் பிரேமா என்ற புனைப்பெயரிலே எழுதிவந்திருக்கின்றார். பின் ராமகிருஷ்ணன் என்ற மலையாள தோழரின் ஆலோசனைக்கு அமைய ‘பிரம்ஜி’ என தமது பெயரை மாற்றிக் கொண்டதாக ராஜ ஸ்ரீகாந்தன் குறிப்பிடுகின்றார். பிரம்ஜி என்பது புகழ்பெற்ற மலையாளக் கவிஞரொருவரின் பெயராகும். இதுவே ஞானசுந்தரம் என்ற மனிதர் பிரம்ஜியாக மாறிய கதை, வரலாறு.
அவர் முன்னணி(1948), தேசாபிமானி(1949), சுதந்திரன்(1953-1956), சோவியத் செய்திகளும் கருத்துக்களும் நாளாந்த செய்தி மடல்(1958-1972), சோவியத்நாடு(1972-1991), சோசலிசம்: தத்துவமும் நடைமுறையும்(1978-1989) சக்தி(1980-1989) போன்ற பத்திரிக்கைகளில் பத்திரிகை ஆசிரியராகம் துணை ஆசிரியராகவும் அரசியல் விமர்சகராகவும் கடமையாற்றியிருக்கின்றார். 1964 இல் லெனின் நூற்றாண்டையொட்டி நடாத்தப்பட்ட பத்திரிக்கையாளர் மகாநாட்டில் சிறந்த பத்திரிக்கையாளருக்கான விருதை பெற்றுள்ளார். 1964 இல் உருவாக்கப்ட்ட எழுத்தாளர் கூட்றவுப் பதிப்பகத்தில் பிரம்ஜி பணிப்பாளராக கடமையாற்றியிருக்கின்றார். மேலும் இலங்கை தமிழ் ஆலோசனைச் சபையின் செயலாளர்(1971-1975), யாழ் பல்கலைகழக அமைப்புக் குழு செயலாளர், பத்திரிகை கமிட்டியின் உறுப்பினர்(1973), இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபன ஆலோசனைச் சபை உறுப்பினர்(1972-1974), இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபன பணிப்பாளர் சபை உறுப்பினர்(1995), இலங்கை தேசிய நூலகச் சபை மதியுரைக் குழு உறுப்பினர்(1997), தினகரன் ஆசிரிய பீட ஆலோசகர்(1997), இன விவகாரங்கள் சம்பந்தமான உயர்மட்ட ஊடகக் கமிட்டி உறுப்பினர்(1997) என பல பதவிகளையும் வகித்திருக்கின்றார். பின்னர் கனடாவிற்கு குடிபெயர்ந்து விட்டார். தொடந்தும் அவர் சமூக செயற்பாடுகளில் ஆர்வம் காட்டிவருகின்றார்.
மக்களுக்கு சோதனையானக் காலக்கட்டத்தில் இடர்பாடுகளையும் முரண்பாடுகளையும் கண்டு அவற்றிலிருந்து தப்பிச் செல்லாமல் அதற்கான அவற்றினை எதிர் கொண்டு அதற்கான தீர்வுகளை முன் வைக்க முனைகின்றவரே வீரனாவார். அந்த வீரனுக்குரிய தன்மையே மேதாவிலாசத்தின் அடிப்படையாகும். அந்த வகையில் பிரேம்ஜியின்; மேதாவிலாசத்தின் அடைப்படைகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:
1. உலகில் ஏற்பட்டுள்ள ஆழமான மாற்றங்களை புரிந்துக் கொண்டமை
2. இப்புரிந்துக் கொள்ளலின் அடிப்படையில் மார்க்சிய தத்துவத்தை மாறிவருகின்ற சூழலுக்குக்கேற்ப புனரமைப்பதன் அவசியத்தை உணர்ந்துக் கொண்டமை
3. பொது மக்களின் மீதும் ஸ்தாபனங்களின் மீதும் நம்பிக்கை கொண்டு பொது மக்களின் நலனுக்காக தம்மை அர்பணித்து கொண்டமை
ஐம்பதுகளின் பிற்பகுதியில் சர்வதேச ரீதியாக பல மாற்றங்கள் நிகழ்ந்துக் கொண்டிருந்த அரசியல் மாற்றங்கள் இலங்கையிலும் தாக்கம் செலுத்தியது. உலகின் சகல பாகங்களையும் பொறுத்தமட்டில் இக்கால பகுதியில் பலமான மக்கள் இயக்கங்கள் தோற்றம் பெற்றன. இந்நாடுகளில் தொழிலாளர்கள் இயக்கங்கள் பாசிசத்தையும் ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து ஆர்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடாத்தின. அத்தகைய வீரியமிக்க சூழலில் அத்தகைய விடுதலையுணர்வுக்கு விய+கம் அமைக்ககூடிய தத்துவமான மார்க்கியத்தை தமக்கு ஆதர்சமாக கொண்டு சமூகமாற்றத்திற்றத்திக்கான இயங்காற்றலை சாத்தியமாக்கியவர் பிரம்ஜி.
மார்க்சிய தத்துவத்தை தமக்கு ஆதர்சனமாக கொண்ட பிரம்ஜி அதனை யதார்த்த வாழ்விலிருந்து அந்நியப்பட்டு வரட்டுத்துவமாக பியோகிக்கவில்லை. வுரட்டு மார்க்ஸியர்கள் சிலர் அறிந்தோ அறியாமலோ ஐரோப்பிய சமூகச் சூழலி;ல் காணப்பட்ட வர்க்க பிளவை அப்படியே இனக்குழு வாழ்க்கை முறையை கொண்டிருந்த எமது சூழலிலும். பிரயோகிக்க முற்பட்டனர். ஊகங்களுக்கு அப்பால் யாதார்த்த வாழ்வுத் தரும் படிப்பினைகளை கையிலெடுப்பதற்கு இவர்களது இரும்பு மண்டைகளும் இறுகிய மூளைகளும் இடம் தர மறுத்தன. இந்த சூழலில் நமக்கான இலக்கிய கோட்பாட்டை முன்னிறுத்தியவர்களில் பிரம்ஜி முக்கியமானவர். ஒருவகையில் உழைக்கும் மக்கள் உலகளவில் பெற்ற அனுபவங்களின் சாரத்தை உள்வாங்கி அதனை நமது பண்பாட்டுக்கும் சூழலுக்குமேற்றவகையில் பிரயோகித்தார் என்பதை அவரது எழுத்துக்கள் சிறப்பாகவே அடையாளம் காட்டியிருக்கின்றன. 1957 ஆம் ஆண்டு கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த மநாட்டில் சோசலிஸ யதார்;த்தவாதம் பற்றிய சிந்தனைகள் முன் வைக்கபபட்ட போது அவ்விலக்கிய போக்கு நமது சுழலுக்கும் பண்பாட்டுக்கும் பொருத்தமற்றதாகவே அமைந்திருந்தது.
நமது பண்பாட்டுத்தளத்தில் மண்வாசைன என்ற இலக்கிய வடிவமும் அதன் தர்க்க ரீதியான வளர்ச்சியான தேசிய இலக்கிய கோட்பாடு அமைந்திருந்ததை உணர்ந்து செயற்பட்டமையுயே இ. மு.போ.எ.ச. முக்கிய பங்களிப்பாகும். மண்வாசைன இலக்கியம் என்ற இலக்கிய போக்கை முதன் முதலில் பிரதானப்படுத்தியவர் பிரம்ஜி. அதற்கான கோட்பாட்டு உருக்கத்தை செய்தவர் பேராசிரியர் க. கைலாசபதி. மேலும் தேசிய இனப்பிரச்சனைக் குறித்தும் பிரம்ஜி கவனமெடுத்திருந்தமை இவ்விடத்தில் முக்கியமாக குறித்துக்காட்ட வேண்டியதொன்றாகின்றது.
பிரம்ஜி 1957 ஆண்டு ஜுன் 02ஆம் திகதி இ.மு.எ.ச. ஆரம்பித்த நாளிலிருந்து அவரே அதன் வினைத்திறன் மிக்க செயலாளராக இருந்து வருகின்றார். அவருடைய இந்த பதவிக்கு எவரும் போட்டியிட்டதாக இல்லை. அந்தளவிற்கு அவரது ஆளுமையும் பங்களிப்பும் அவ்வியக்கத்தின் வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்பை நல்கியுள்ளது.அவ்வியக்கம் வீறுக் கொண்ட இயங்கிய இரு தசாப்த காலம் இலங்கை வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அவர் தமது செயற்பாடுகளை தனிநபர் சார்ந்த செயற்பாடுகளாகவோ அல்லது குழு செயற்பாடுகளாகவோ அவர் மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. அவர் தாம் சாந்த இயக்கத்தினூடாக பரந்துப்பட்ட மார்க்சிய முற்போக்கு ஜனநாயக சக்திகளை அணித்திரட்டியிருந்தார்.முற்போக்கு எழுத்தாளர்கள் பொது மக்களுடன் தொடர்புக் கொண்டிருப்பதுடன் அவர்களது அன்றாட வாழ்வுடனும் போராட்டங்களுடனும் ஒன்றுக் கலக்க வேண்டும் என்ற கருத்தை தமது அமைப்பினூடாக முன்னெடுத்தவர் பிரம்ஜி.
சகல ஜனநாயக மார்க்சிய சக்திகளும் ஒன்றினைதல் என்பது ஒரு அமைப்பு அல்லது கட்சி சார்ந்த உணர்வை மற்றக் குழுக்களின் மீது திணிப்பதல்லஇ மாறாக ஒவ்வொரு அணியிலும் காணப்படக் கூடிய சமூகம் சார்நத கூறுகளை சாதகமாக பயன்படுத்தி ஒன்றாக செயற்பட வேண்டும் என்பதே அதன் பொருள். இதற்கு மாறான குழுநிலைவாதம் ஒரு வெகுஜன அமைப்பை உருவாக்காது என்பதே அதன் பொருள். மாறாக வெற்றுக் கோங்களினால் நிலை நிறுத்து முற்படுகின்ற எந்தவொரு அமைப்பும் சமூகத்திற்கு பயன்படப்போவதில்லை. அழிவையே கொண்டு வரும். இவ்வம்சத்தை பிரம்ஜி சரிவர உணர்ந்திருந்தார் என்றே எண்ணத் தோன்றுகின்றது. இந்நிலையில் அவர் தமிழர்களை மாத்திரமின்றி சிங்கள முற்போக்கு சக்திகளின் ஆதரவையும் திரட்டியிருந்தார். மேலும் தமது ஸ்தாபத்தின் கொள்கைக் கோட்பாடுகளையும் சிங்கள மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்வதிலும் இவரது முக்கிய பங்ளிப்புகளை பலர் பதிவாக்கியுள்ளனர். 1975 இல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மநாட்டு மண்டபத்தில் பிரம்ஜி தலைமையில் நடைப்பெற்ற இ.மு.எ.ச. தேசிய ஒருமைப்பாட்டிக்கான சிங்கள தமிழ் எழுத்தாளர் மநாடு’ முக்கியமாக குறிப்பிடத்தக்க தொன்றாகும். யாவற்றுக்கும் மேலாக பிரம்ஜி தாம் இயங்கியகாலத்தில் தன்னை எப்போதுமே முன்னிறுத்தியதில்லை என்தையும் அவர் தமக்குகிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் பிறருக்கு வழங்கி ஊக்கப்படுத்தினார் என்பதையும் பல தோழர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்.
இருப்பினும் காலப்போக்கில் நசிவு தரும் தேசிய சர்வதேச அரசியல் சூழலில் பிரம்ஜியும் தளர்வடைந்தார் என்பதும் கவனத்திலெடுக்கத்தக்கது. 1962-1963 களில் சர்வதேச கம்ய+னிச இயக்கத்தில் உருவான முரண்பாடு இ.மு.எ.ச த்தையும் பாதித்திருந்தது. காலப்போக்கில் இவ்வியக்கத்தில் மொஸ்கோ சார்புக் கொண்டிருந்த திரிபவாதிகளின் கருத்தே மேலோங்கிய நிலையில் துரதிஸ்டமாக பிரம்ஜி;யும் அவ்வணியை நாடுகின்றவராக இருந்தமையினால் இவ்வமைப்பின் பின்னடைவு தொடங்கியது எனலாம். இவ்வடத்தில் பிறிதொரு விடயம் பற்றியும் குறித்துக் காட்ட வேண்டியுள்ளது. புரட்சிகர சீன அணியை சார்ந்திருந்த சிலர் எடுத்துக்காட்டாக கே. டானியல், கே. கைலாசபதி, செ. கணேசலி;ங்கம் முதலானோர் முற்போக்கு அணியை கைப்பற்றல் அல்லது புரட்சிகர எழுத்தாளர் சங்கம் ஒன்றை அமைக்கும் திட்டம் தோல்வி அடைந்ததை செ. கணேசலிங்கம் நினைவுக் கூறுவர். இந்த பின்னணியில் தேசிய கலை இலக்கிய பேரவை என்ற அமைப்பின் உருவாக்கம் முக்கியமானதொன்றாகும். இது தொடர்பில் திருக்கோணமலையில் நடைப்பெற்ற கூட்டம் இதற்கான முன்னோடி முயற்சியாகவே அமைந்திருந்தது எனக் கூறலாம். சீனசார்புடன் இணைந்திருந்த பலர் இவ்வமைப்புடன் இணைந்து செயற்பட்டனர்.
எது எவ்வாறாயினும் ஒரு முற்போக்கு மார்க்கியவாதியின் அனுபவ பகிர்வு, அவர்கள் பற்றிய மதிப்பீடகள், ஆய்வுகள் யாவும் சுமவிமர்சனமாகவே அமையும் இவ்வகையில் பிரம்ஜி பொறுத்த சுமவிமர்சனங்கள் வெளி வரவேண்டியது காலத்தின் தேவையாகும். இன்றைய சூழலில் புதிய அரசியல் பண்பாட்டு பாதையில் உருவாகிவரும் எண்ணற்றவர்களுக்கு இவ்வாளுமைகளின் வாழ்வும் வளமும் வழிகாட்டி நின்கின்றன. இத்தகைய சிறப்பு மிக்க பிரம்ஜி என்ற மனிதர் தொடர்ந்து எமக்காக இயங்க வேண்டும் என்பதே அவரது பாதையில் பயனிக்கின்ற இளைய தலைமறையினரின் எதிர்பார்ப்பாகும்.