பூங்காவனம் இலக்கிய வட்டத்தின், கலை இலக்கிய சமூக சஞ்சிகையான பூங்காவனம் 13 ஆவது இதழ் பூத்து தற்போது வாசகர்கள் கைகளில் மணம் பரப்பிக்கொண்டிருக்கிறது. ஷஅன்னையும் பிதாவும் முன்னரி தெய்வம்| என ஒளவையார் தாய் தந்தையரின் முக்கியத்துவத்தைப் பற்றி சொல்லும் போது குறிப்பிடுகின்றார். உண்மையில் சகலவற்றிலும் தாய்க்கும், தந்தைக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு என்பதைப் பலர் மறந்துவிடுகின்றனர். பொருளாதாரத்தின் பலம் அவர் கையில்தான் இருக்கிறது. அவரது உழைப்பு இன்றேல் குடும்பத்தின் வாழ்வு நிலை வழுக்கி வீழ்ந்துவிடும். அன்னையர் தினத்தைப் போல தந்தையருக்கும் தினம் ஒன்று இருக்கிறது என்பதனை வாசகர்களுக்கு நினைவூட்டி அவர்களைக் கன்னியப்படுத்த வேண்டும் என்பதை சஞ்சிகை ஆசிரியர் சுட்டிக் காட்டியிருக்கிறார். பூங்காவனத்தின் உள்ளே நான்கு சிறுகதைகள், எட்டுக் கவிதைகள், இரண்டு கட்டுரைகள், இரண்டு நூல் மதிப்புரைகள் என்பவற்றோடு வாசகர் கடிதமும், நூலகப் பூங்காவும் வழமை போல் இடம் பிடித்துள்ளன. செல்விகள் ரிம்ஸா முஹம்மத், எச்.எப். ரிஸ்னா இருவரும் ஆரவாரம் எதுவுமின்றி அமைதியாக இலக்கியச் சேவை புரிந்து வரும் திருமதி பவானி தேவதாஸ் அவர்களை நேர்கண்டு அவர் மூலமாக பல இலக்கியத் தகவல்ளைத் தந்து இருக்கிறார்கள். திருமதி. பவானி தேவதாஸ் கண்டியில் பிறந்து வளர்ந்து விஞ்ஞான ஆசிரியையாகி கல்விச் சேவை செய்தவர். ஸிந்து கன்னியா என்ற பெயரில் இவருக்கு ஒரே ஒரு மகள் மாத்திரம் இருக்கிறார்.
1883 ஆம் ஆண்டு கலவரத்தின் போது தமிழருக்காக ஓடும் ரயில் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நீத்தா என்ற 17 வயதுச் சிங்களப் பெண்ணின் கதையை வீரகேசரியில் எழுதியதன் மூலம் எழுத்துலகில் நுழைந்து, பவானி தேவதாஸ் என்ற பெயரில் இவர் எழுதி வருகிறார். இலங்கை வேதகாமக் கல்லூரிக்காக சில ஆங்கில புத்தகங்களையும், விசுவாசிகளுக்கு வழிகாட்டி, சமாதான உருவாக்கம் போன்ற சமய சார்பான நூல்களையும், முரண்பாடுகளுக்கு மத்தியில் பெண்கள் என்ற நூலை தமிழாக்கம் செய்திருக்கிறார். ரூபராணி ஜோசப்தான் இவரது எழுத்துலக குரு. பவானி தேவதாஸின் சிறுகதைத் தொகுப்பு நூலான விடுமுறைக்கு விடுமுறை என்ற நூலை புரவலர் புத்தகப் பூங்கா வெளியிட்டு இருக்கிறது.
கிண்ணியா எஸ். பாயிஸா அலியின் இல்லாத ஒன்றுக்காய், வெலிப்பன்னை அத்தாஸின் நல்ல எதிர்காலம் அமைந்திட, புத்தளம் ஜுமானா ஜுனைட் எழுதிய பெண்கள், கிண்ணியா பி.ரி. அஸீஸின் காட்டின் நடுவே விட்டுச் சென்றது கொடுமை, மிகிந்தலை ஏ. பாரிஸின் வைகாசியிலாவது, பூவெலிகட எம்.எஸ்.எம். ஸப்ரியின் தாயைப் போற்றும் சேய், மருதமுனை ராபி எஸ். மப்ராஸின் மாறுகிறது, மருதூர் ஜமால்தீனின் பெருமைக்குரியவன் ஆகிய கவிதைகள் இதழில் இடம் பிடித்துள்ளன. சிறுகதைகளைப் பொறுத்த வரையில் எஸ்.ஆர். பாலசந்திரனின் கோழிகள், கலைவாதி கலீலின் விருது 10 ஐம்பது ரூபா ஸ்ரீ சீறோ, சூசை எட்வேட்டின் உறவுகள் பலவிதம், சானாஸ் பர்வீனின் கானல் நீர் என்ற சிறுகதைகளும் இடம் பெற்றுள்ளன.
கோழி வளர்ப்பில் அதிக அக்கரை கொண்டுள்ள ரங்கநாதனின் சங்கடங்களை எடுத்து விளக்குகிறது கோழிகள் என்ற சிறுகதை. இன்று இலக்கியவாதிகளுக்கும், கலைஞர்களுக்கும் வழங்கப்படுகின்ற கௌரவ விருதுகள் அதன் மதிப்பை இழந்து காணப்படுகின்றன. அவை தகுதியானவர்களுக்கு வழங்கப்படாமல் பணத்திற்கும், பட்டம் பதவியில் உள்ளவர்களின் செல்வாக்குக்கும், அரசியல் வாதிகளின் அரவணைப்பிலும் வழங்கப்படும் விருதாக மாறி இருக்கிறது என்பதை விருது 10 ஐம்பது ரூபா ஸ்ரீ சீறோ என்ற கதை விளக்குகிறது. அதே போல காதலிப்பதற்கும், சல்லாபங்கள் செய்வதற்கும் காதலர்கள் தற்போது சிறந்த தந்திரமான வழிகளைக் கையாளுகின்றனர் என்பதற்கு உறவுகள் பலவிதம் என்ற கதை நல்லதொரு எடுத்துக்காட்டு. வாடி வீட்டுக் கட்டணம் எதுவுமின்றி தமது ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள, பழக்கம் பிடித்துக்கொள்பவர்களின் வீடுகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை இக் கதையை வாசித்தால்தான் அறிந்து கொள்ள முடியும்.
பணம் படைத்தும் உரிய வாழ்க்கை கிடைக்காத பெண்களும், கிடைத்ததைக் கொண்டு சீரோடு வாழும் சிறப்பான பெண்களின் வாழ்க்கையும் சமூகத்தில் ஏராளம் என்பதனையும் உற்றார் உறவினர் அற்றுப் போன பின்னர் எவரும் முன்வருவதில்லை என்ற உண்மையை காணல் நீர் என்ற சிறுகதை விளக்குகின்றது.
பாரதியின் பெண்ணியக் கருத்தும் இன்றைய மௌனித்த நிலையும் என்ற தலைப்பில் தம்பு சிவசுப்பிரமணியத்தின் கட்டுரையும், திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரனின் அசையும் படிமங்கள் என்ற நூலுக்கான புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் எழுதிய நூல் விமர்சனத்தையும் காணலாம். அதே போல கிண்ணியா ஜே. பிரோஸ்கானின் தீக்குளிக்கும் ஆண் மரம் என்ற நூலுக்கான நூல் மதிப்பீட்டை தந்திருக்கிறார் வெலிகம ரிம்ஸா முஹம்மத்.
வழமை போல கவிஞர் ஏ. இக்பாலின் இலக்கிய அலசல் இவ் இதழிலும் தொடர்கிறது. அதே போல வாசகர் கருத்துக்களும் பதின்நான்கு நூல்களின் விபரங்களும் தரப்பட்டிருப்பதுடன் இதுவரை வெளிவந்த பூங்காவனம் சஞ்சிகைகளின் முன் அட்டைப் படங்களும் அட்டையின் உட்பக்கத்தில் காணப்படுகின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக புதுவரவாக வந்திருக்கும் வெலிகம ரிம்ஸா முஹம்தின் கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை என்ற இரசனைக் குறிப்புக்கள் அடங்கிய தொகுதி பற்றியும், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை என்ற இரசனைக் குறிப்புக்கள் அடங்கிய தொகுதி பற்றியும் விபரங்கள் இடம் பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும். பூங்காவனம் தொடர்ந்தும் பூத்துக் குலுங்க வாழ்த்துக்கள்!!!
சஞ்சிகை – பூங்காவனம் இதழ் 13
பிரதம ஆசிரியர் – வெலிகம ரிம்ஸா முஹம்மத்
வெளியீடு – பூங்காவனம் இலக்கிய வட்டம்
தொலைபேசி – 0775009222
மின்னஞ்சல் – poongavanam100@gmail.com
விலை – 100 ரூபாய்