27 கைகொடுத்த இல்லம்
இவர்கள் இவ்வளவு சுயநலமா இருப்பாங்கனு நான் கனவுலக்கூட நினைச்சுப் பார்க்கலிங்க!” மனைவி கடுங்கோபங் கொள்கிறார். வெளிப் பகட்டுக்காகப் பல்லித்துப் பேசி, நயவஞ்சகத்தோடுப்பழகும் வேடதாரிகள் நமக்கு இனியும் வேண்டாம் என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்து விட்டனர் கணவனும் மனைவியும். பெற்றோர் பேசிக் கொண்டிருந்ததை, பார்த்திபன் கேட்டதும் பெரும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைகிறான்! தான் செய்த தவற்றினால் குடும்ப மானம் காற்றில் பறந்துவிட்டதே என்று தன்னையே நொந்து கொள்கிறான். பெற்றெடுத்த தாய்க்கும், பல சிரமங்கள்பட்டு வளர்த்த அப்பாவிற்கும் எவ்வளவு பெரிய அவமானத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டேன்! யாரிடமும் தலைவணங்காத பெற்றோருக்குத் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டேனே என்று மிகுந்த கவலை கொள்கிறான்! தனது செயலுக்காகக் கூனிக் குறுகிப்போகிறான்! நான் முந்தி நீ முந்தி என்று போட்டிப் போட்டுக் கொண்டு தனக்குப் பெண் கொடுக்க வந்த உறவினர்கள், இப்போது கண்டும் காணாததுபோல் நடந்து கொண்டது குடும்பத்தார் எதிர்ப்பார்க்காத ஒன்று! இதுநாள் வரை மலைபோல் நம்பிக் கொண்டிருந்தவர்கள் தங்களை நட்டாற்றில் தவிக்கவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார்களே என்று எண்ணிப்பார்த்த போது அவனுக்கு உறவினர்கள் மீது கோபம் கோபமாக வந்தது!
“பெண்ணைப் பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகள் பிரச்னை ஏதுமின்றி வாழ்வதைத்தானே எல்லாப் பெற்றோர்களும் விரும்புவார்கள்? அவர்கள் கிடக்கிறார்கள் சுயநலமிக்கவர்கள். கடவுள் உனக்கென ஒரு பெண்ணை இந்தப் பூமியில் படைக்காமலா இருப்பார்? நீ எதற்கும் கவலைப் படாதே பார்த்திபன்.” அப்பா ஆதரவுடன் பேசிய பின்னரே, பார்த்திபன் மனம் சற்று ஆறுதல் அடைகிறான்! நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று அமைதியானான்.
ஒரு முறை எதிர்ப்பாராமல் செய்துவிட்ட தவற்றுக்கு மன்னிப்பே கிடையாதா? மனிதன் திருந்துவதற்கு வாய்பே தராத மனிதர்கள் என்ன மனிதர்கள்? சந்தர்ப்பச் சுழ்நிலை ஒரு நல்ல மனிதனையும் கெட்டவனாக்கிவிடலாம் அல்லவா? இந்த உண்மையை ஏற்க மறுக்கும் அவர்களிடம் நான் ஒருபோதும் மண்டியிடப் போவதில்லை என்று முடிவுக்கு வருகிறான் பார்த்திபன்! எதிர்காலத்தில் தனக்கும் ஒரு நல்ல வாழ்க்கை நிச்சயமாக அமையும் என்ற நம்பிக்கை மட்டும் அவன் உள்ளத்தில் தொக்கி நின்றது !
தன் தனிமையப் பயன்படுத்தி,என்னைத் தப்பான வழியில் கொண்டு சென்று போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாக்கி என் வாழ்வைத் திட்டமிட்டு அழித்த அந்தத் தீய நண்பர்கள் அழிந்து போனார்கள்! அவர்களிடையே ஏற்பட்ட நட்பை ஒரு கெட்டக் கனவாக பார்த்திபன் நினைக்கிறான்.கௌரமான குடுப்பத்தின் நல்ல பெயரைக் கூடா நட்பால் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிட்டேனே! தனக்கு மன்னிப்பே கிடையாது!
சிறைவாசம் அவனுக்கு நல்ல படிப்பினையைக் கொடுத்திருந்தது! அது வாழ்வின் உன்னதத்தைத் தெளிவுபடுத்தியிருந்தது! அர்த்தமுள்ள வாழ்வை இனி வாழ்வதென்ற கொள்கையை ஏற்றுக்கொண்டான்!
தனக்கு இன்னும் பல நல்ல நண்பர்கள் இருகின்றார்கள். அவர்கள் என் குண நலன்களை அறிந்தவர்கள். என் நல்வாழ்க்கையில் அக்கறை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தனக்கு நிச்சயம் உதவுவார்கள் என்று நண்பர்களின் உதவியைப் பார்த்திபன் நாடினான். நண்பர்கள் பலரும் அவனுக்கு உதவ முன் வந்ததை எண்ணி ஆறுதல் கொண்டான்.
நெருங்கிய நண்பன் கோமகன், பார்த்திபனின் பள்ளித் தோழன்; மிகவும் நல்லவன். பிறருக்கு உதவும் நற்குணமுள்ளவன். பார்த்திபனின் நிலைக்கா மிகவும் வருத்த மடைந்தவன். பார்த்திபனுக்காக எதுவும் செய்ய மனம் கொண்டவன்.
மகனின் திருமணம் குறித்து மிகவும் நம்பிக்கையுள்ள கோமகனிடன்தான்அம்பிகை பேசினார்.அவர்களுக்குஉதவ முன்வந்தான். செயலிலும் உடனே இறங்கினான். பார்த்திபன் இல்லத்திற்குச் சென்று அவனதுப் பெற்றோர்களைக் கண்டு பேசினான். கோமகன் பார்த்திபன் பெறோர்களுக்கு நல்ல பழக்கமிருந்தது. அவன் மீது நல்ல மரியாதையும் நம்பிக்கையும் கொண்டிருந்தனர்.
பார்த்திபன் அவன் பெற்றோர் மூவரும் கோமகனை வரவேற்கின்றனர். வரவேற்பு அறையிலுள்ள சோபாவில் அமர்கின்றனர். வழங்கப்பட்ட தேநீரை அருந்திய பின்னர் கோமான் பேசத் தொடங்கினான். வீட்டிலுள்ள அனைவரும் அவன் பேசுவதையே உன்னிப்பாகக் கேட்கின்றனர்!
அத்தியாயம் 28 வாழ்க்கை
“அம்மா ….. நான் பேசுவதைத் தப்பாகக் எண்ண வேண்டாம் ” என்று கூறியபடி மூவரையும் பார்க்கிறான்.
“தேவை இல்லாத பயம் வேண்டாம் …..சொல்ல வந்ததைத் தயங்காமல் சொல்லுப்பா நாங்க எதையும் தப்பா எடுத்துக்க மாட்டோம்”! அம்பிகைதான் அவனுக்குத் தைரியத்தைக் கொடுக்கிறார். கோமகன் மீண்டும் ஆர்வத்துடன் பேசத் தொடங்குகிறான்.
“எனக்கு வேண்டிய ஒருவர்,கடந்த இருபது வருசமா காப்பார் பட்டணத்தருகில் தன் சொந்த நிலத்தில் ‘ரீத்தா அன்பு இல்லம்’ என்ற பெயரில் ரீத்தா அம்மையாரும்,மாறன் அங்கிளும் மிகச்சிறப்பாக அனாதை இல்லத்தை நடத்தி வருகிறார்கள்.
“அந்த இல்லம் எங்கே இருக்கு…..தெளிவா சொல்லுங்க….!” தினகரன் கேட்கிறார்.
“கிள்ளானிலிருந்து கோலசிலாங்கூர் செல்லும் வழியில், இருபதாவது கிலோ மீட்டரில் இருக்குங்கையா….!” தெளிவு படுத்துகிறான் கோமகன்.
“அங்கு தங்கி இருப்பவங்க அனைவரும் நம்மவர்களா….?” விபரம் அறிய விரும்புகிறார் அம்பிகை.
“அங்கு இருப்பவர்கள் எல்லாரும் நம்மவர்கள்தாம்.நான் பத்து வருசமா அந்த இல்லத்துக்கு உதவி செய்துவருகிறேன். அந்த இல்லத்தில் பல பெண்கள் இருக்கிறார்கள்.அவர்களில் பலர் சிறுவயதிலிருந்து ரீத்தா அம்மையார் கண்காணிப்பில் வளர்ந்தவர்கள்.நன்றாகப் படித்துள்ள அழகும் அறிவும் நிறைந்த பெண்கள் பலர் இருக்கிறார்கள். அந்தப் பெண்களில் பிடித்த யாரையாவது பார்த்திபனுக்குத் திருமணம் செய்து வைக்கலாமே” என்று சொன்ன போது பெற்றோர் அதிர்ந்து போகின்றனர்!
இப்படிப்பட்ட ஒரு கருத்து கோமகனிடமிருந்து வரும் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. மூவரும் என்ன கூறுவது என்று தெரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு பதில் ஏதும் கூறாமல் மெளனம் காக்கின்றனர்.
“என்னம்மா……நான் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்துட்டீங்களா?” கோமகன்தான் மெளனத்தைக் கலைக்கிறான் !
“வந்து……கோமகன் என் ஒரே மகனுக்கு அனாதை இல்லத்தில் போய்ப் பெண் எடுப்பதா…? அதான் தயக்கமா இருக்கு …!” அம்பிகை தயங்கியபடிக் கூறுகிறார்.
பார்த்திபன் எந்தவித உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல் , அமைதியாக அமர்ந்திருக்கிறான்!
“அம்மா … இதில் என்னம்மா தயக்கம் வேண்டி இருக்கும் ? எல்லாம் நம் மனதைப் பொறுத்தது. பெரும் மனசு வைச்சு, அந்தப் பிள்ளைகளுக்கு நம்மைப் போன்று நல்ல உள்ளம் படைத்தவர்கள்தாம் உதவ முடியும். திக்குத்தெரியாத அந்தப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றியப் புண்ணியம் உங்களைச் சாரட்டும்! நல்லவர்கள்தாம் நல்ல காரியங்களைச் செய்ய முடியும்!” கோமகன் சொல்லியதைக் கேட்டு அம்பிகையால் எதுவும் பேசமுடியவில்லை!
“நீங்க மனசு வைச்சா, இந்த நல்ல காரியம் நாளையே நடக்கும்!” உறுதியுடன் கூறுகிறான்.
“ஊர் உலகம் என்ன நினைப்பாங்கனு தயக்கமா இருக்கப்பா…..!” கவலையுடன் கூறுகிறார் அம்பிகை.“உங்க மனவேதனைக்கு யார் ஆறுதல் சொல்வாங்கச் சொல்லுங்கம்மா…?”
கோமனும் அம்பிகையும் பேசுவதைக் அமைதியுடன் கவனித்துக் கொண்டிருந்த தினகரன் தனது கருத்தைக் கூறுகிறார்.
“அம்பிகை….நாம இப்படியே மற்றவங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தால்,மகனுக்கு ஒரு நல்ல காரியத்தைச் செய்ய முடியாது. கோமகன் சொல்வது போல செயிறதுல தப்பே கிடையாது!”
“அம்மா….ஆதரவற்றப் பிள்ளைகளுக்கு உங்கள் பிள்ளை மூலமாக உதவுவது தெய்வத் தொண்டுக்குச் சமம்! நல்லா யோசிச்சுச் சொல்லுங்கம்ம……! உங்கப் பையனின் வாழ்க்கை ஆண்டவன் புண்ணியத்தால நல்லா நடக்கும்.
என் வார்த்தையை நீங்கத் தாராளமாக நம்பலாம்.அந்த இல்லத்தில் பெண் எடுத்த பையன்கள் மற்றவங்கப் போற்றும் அளவுக்கு மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். நீங்கள் எதற்கும் கவலைப் படாம சரின்னு பதில் சொல்லுங்கம்மா!” அம்பிகையை வற்புறுத்துகிறான் கோமகன்.
“என்னங்க……! நீங்க என்ன சொல்றீங்க?” அம்பிகை கேட்கிறார்.
“கல்யாணம் செஞ்சிக் குடுத்தனம் செய்யப் போற மகனைக் கேளு அம்பிகை.பார்த்திபனுக்குச் சம்மதம்னா எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை….!”பட்டனவர்த்தனமாகத் தினகரன் தனது கருத்தைக் கூறுகிறார்! “பார்த்திபன்….நீ யாருக்கும் இல்லாம உன் மனசில உள்ளத ஒளிவுமறைவு இல்லாமச் சொல்லிடுப்பா…!” அம்மா அழாக்குறையாகக் கேட்கிறார்.
“அம்மா இது என் வாழ்க்கை! நான் முடிவு செய்துவிட்டேன்.ஆமாம், கோமகன் எனக்காகத் தேடித் தந்த வாழ்க்கை எனக்குப் பிடிச்சிருக்கு! உதாசினம் செய்த சொந்தங்களை விட நமக்கு எந்த உறவும் இல்லாத பிறத்திப் பெண்தான் நமக்கு ஒத்துப் போகும்.
அத்தியாயம் 29 தெய்வத்தாய்
ஒரு நல்ல நாளாப் பாருங்க போய்ப் பெண்ணைப் பார்த்துட்டு வருவோம். பெண் பிடிச்சிருந்த அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணத்தை முடிச்சிடுங்க!” மிகுந்த நம்பிக்கையோடு கூறுகிறான் பார்த்திபன்.அவன் கூறியதைக் கேட்டு பெற்றோர் மகிழ்ச்சி அடைகின்றனர்.! இன்னாருக்கு இன்னாரென்று இறைவன் வகுத்த வழியை மனிதன் மாற்ற இயலுமா? நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற எண்ணத்தில் கோமகன் வழிக்காட்டுதலில் பார்த்திபன் தன் குடும்பத்தோடு பெண் பார்க்கச் செல்கிறான்!
வாழ்க்கையில் முதன் முதலாக ஓர் அனாதை இல்லத்திற்குச் செல்கிறான்! அதிலும் தன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கக் குடும்பத்தோடுச் செல்வது பதற்றமாக இருந்தாலும், எல்லாரும் செய்வது போல் உற்றார் உறவினரோடு போகாமல் பெண் பார்க்கப் பெற்றோருடனும், நண்பர்களுடனும் புடைச் சூழச்செல்வது அவனுக்குப் பெருமையாக இருந்தது!
தான் செய்த தவற்றுக்குப் பிராய்ச்சித்தமாக அனாதை இல்லத்தில் பெண் எடுப்பது மகிழ்வதாகக் கூறிக்கொள்கிறான்! அந்தப் பராமரிப்பு இல்லத்திற்குச் சென்றபோது,இல்லத்தை நிர்வகிக்கும்அறுபது வயது மதிக்கத்தக்க அம்மையார் ரீத்தாவும் மாறனும் வருகை புரிந்த அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றனர்! இல்லத்தைச்சேர்ந்த பெரியோர்கள் சிலரும் அங்கிருந்தனர். நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் போன்று அவர்கள் இனிமையாகப் பழகுகிறார்கள். கோமகன் எல்லா ஏற்பாடுகளையும் முறையாகச் செய்திருந்ததால் தடுமாற்றம் ஏதுமின்றி பெண் பார்க்கும் படலம் சீராகவும் சிறப்பாகவும் நடைபெறுகிறது!
ஏற்கனவே,புகைப்படம் கொடுத்திருந்ததால் பார்த்திபனுக்கோ அவனது பெற்றோருக்கோ பெண்ணை அடையாளம் கண்டுக் கொள்வதில் சிரமம் இல்லாமல் போய்விட்டது. இருபத்துமூன்று வயதே நிரம்பப் பெற்ற மணப்பெண்ணின் பெயர் தமிழரசி. அவள் பார்க்க மிகவும் அழகாக இருந்தாள். எஸ்.பி.எம். வரையில் கல்வியைப் பெற்றிருக்கும் அவள் தனியார் நிறுவனம் ஒன்றில் கணினித்துறையில் வேலை செய்கிறாள். கைநிறையச் சம்பாதிக்கிறாள்!
ஆடம்பரம் ஏதுமின்றி மிகவும் யதார்த்தமான முறையில் உடை அணிந்து,மாப்பிள்ளைக்குக் தேநீர் வழங்க அன்னநடைப் பயின்று வருகிறாள்! தேநீர் மற்றும் பலகாரங்களை மாப்பிளைக்குக் கொடுத்துவிட்டு மாப்பிள்ளைக்கு அருகில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்கிறாள்! அவள் தோழி அங்கு வந்த அனைவருக்கும் தேநீர், பலகாரங்களை வழங்குகிறாள்! கொடுக்கப் பட்டத் தேநீரை அனைவரும் சுவைத்து மகிழ்கிறார்கள்!
அதேவேளையில் பெண்ணிடம்,பார்த்திபன் பெற்றோர் சில சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள்! அவர்களின் முகங்களில் தவழ்ந்த புன்னகை மலர்களைக் காணும் போது அவர்களுக்குப் பெண்ணைப் பற்றிய நல்லெண்ணம் உருவாகிவிட்டது என்பது உறுதியாகிவிட்டது!
சிவந்த மேனியும் கனக்கச்சிதமான உடல் வாகுவையும் கொண்ட தமிழரசியை மணந்து கொள்ள முழுச்சம்மதம் தெரிவிக்கிறான் பார்த்திபன்! சொந்தத்தில் பார்த்திருந்தால்கூட இப்படியொரு பெண் அமைந்திருக்க முடியுமா? என்ற வியப்புக் கிடையே அம்பிகை முழுச்சம்மதம் தெரிவிக்கிறார்.
கணவர் தினகரனுக்கு மட்டுமென்ன? பார்த்தவுடனே அவருக்கும் பெண்ணை மிகவும் பிடித்து விடுகிறது! மனைவி அமைவதெல்லாம் இறைவன் வகுத்த வழி என்பதை உணர்கிறார்.பார்த்திபனுக்குகாகவே பிறந்தவள் தமிழரசிதான் என்ற உண்மையை அவரது மனம் ஏற்றுக் கொள்கிறது!
எல்லாருக்கும் பெண்ணைப் பிடித்திருந்தது. பெண்ணுக்கும் மணமகனைப் பிடித்துவிட்டது! மகன் விரும்பியது போலவே ஒரு நல்ல நாளாகப் பார்த்து அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணத்தை வைத்துக் கொள்வதென அங்குக் கூடியிருந்தவர்கள் முடிவெடுக்கின்றனர். தேவை இல்லாதப் பேச்சுக்கு இடம் இல்லாமல் விரைவிலேயே சம்பந்தம் பேசி முடிக்கின்றனர்.
திருமணத்திற்குரிய நாளும் அன்றே குறிக்கப்படுவது இல்லத்தினை நிர்வகிக்கும் அம்மையாருக்கு ஆச்சரியமாகப் போய்விடுகிறது! திருமணத்தைத் தமிழரசி தங்கியிருந்த இல்லத்திலேயே சிறப்பான வகையில் நடத்த வேண்டும் என்று பார்த்திபன் கூற அங்குக் கூடியிருந்த அனைவரும் ஒப்புதல் அளிக்கின்றனர்! மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக் கூறி அனைவரும் விடைப் பெற்றுச் செல்கின்றனர்.
அடுத்த சில வாரங்களில் திருமண ஏற்பாடுகள் மளமளவென நடைபெறுகின்றன.கோமகன் பார்த்திபனுடன் கூடவே இருந்து அனைத்துத்திருமணஏற்பாடுகளையும்முன்னின்ற செய்கிறான்.கோமகனின் உதவி பார்த்திபனுக்குப் பேருதவியாக இருக்கிறது!
பெற்றோருடன் சென்ற பார்த்திபன் திருமண அழைப்பிதழை மிகவும் நெருங்கிய உறவினர்கள் சிலருக்கும்,தன்னுடன் வேலை செய்யும் நண்பர்கள், பெரியோர்கள் ஆகிய அனைவருக்கும் அழைப்புகொடுக்கின்றா.
அந்த இல்லத்தில் இருக்கும் திருமண மண்டபம் நிறைந்து காணப்படுகிறது.இருநூறு பேர் அமரக்கூடியச் சிறிய மண்டபமாக இருந்தாலும் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.அந்த இல்லத்தின் தொண்டூழியர்கள் வரவேற்பைச் சிறப்பாகக் கவனித்துக் கொள்கின்றனர்.
இல்லத்தின் காப்பாளர்கள், வட்டாரச் சமூகப் பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பெற்றோர்கள் முன்னிலையில் பார்த்திபன் தமிழரசி ஆகியோரிடையே திருமணம் எந்தவிதச் சிக்கலுமின்றி இனிதாய் நடைபெறுகிறது!
இல்லத்தில் தங்கியிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறியோர்,பெரியோர்,முதியோர் அனைவருக்கும் விலையுயர்ந்த பரிசுகளும் ஆடைகளும் மணமக்கள் தங்களின் திருமணப் பரிசாக வழங்கிச் சிறப்பிக்கின்றனர்.சுவை மிகுந்த உணவுகள் வகைகள் விருந்தில் படைக்கப்படுகின்றன.வருகை தந்த அனைவரும் திருமணவிருந்தை மகிழ்ச்சியுடன் உண்டு மகிழும் காட்சியைக் கண்டு மணமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறார்கள். இருப்பவர்களுக்குக் கொடுப்பதைக் காட்டிலும் இல்லாதவர்களுக்குக் கொடுத்து மகிழும் உள்ளம் பேருள்ளம் என்பதை அறிந்த பார்த்திபனின் பெற்றோர் தன் மகனின் தயாள குணத்தை எண்ணி வியக்கின்றனர்.இந்த இளம் வயதிலேயே பார்த்திபன் ஏழைகளின் துயரம் அறிந்து உதவும் மனதை எண்ணி பெருமையடைகின்றனர் பெற்றோர்.
அத்தியாயம் 30 ஆயிரங்காலத்துப் பயிர்
தன்னைப் பெற்று வளர்த்த பெற்றோர், ரீத்தாஅம்மையார், மாறன் மற்றும் பெரியோர்கள் பலரின் கால்களில் விழுந்து புதுமணத்தம்பதியினர் ஆசிபெறுகின்றனர்.திருமணத்திற்கு வந்த அனைவரும் மணமக்களை மனதார வாழ்த்திச் செல்கின்றனர். திருமணத்தை முன்னிட்டுப் பார்த்திபன், ‘ரீத்தா அனாதை’ இல்லத்திற்கு ரிங்கிட் மலேசியா ஐயாயிரத்தை அன்பளிப்பாக புதுமணத் தம்பதியினர் இருவரும் ஒருசேர ரீத்தா அம்மையாரிடம் வழங்கிய போது அவர் ஆச்சரியப் பட்டுப் போகிறார்.
மேலும்,திருமணத்திற்குப் பிறகும் அனாதை இல்லத்திற்குத் தங்களின் சேவைத் தொடரும் என்ற இனிய செய்தியை அம்மையாரிடம் கூறிய போது மகிழ்ச்சிப் பெருக்கால் புதுமணத் தம்பதியினர் இருவரையும் கட்டியணைத்து முத்தமழைப் பொழிகின்றனர்!
பெற்றோர் இருவரும் மகனின் அன்புள்ளத்தை எண்ணி வியந்து போகின்றனர்.கூடி நின்றவர்கள் ஆச்சரியத்தால் புருவங்களை உயர்த்தி நிற்கின்றனர்!
அந்த அனாதை இல்லத்தை நிமிர்ந்து பார்க்கிறான் பார்த்திபன்,அருகில் ரீத்தா அம்மையாரைச் சுற்றி குழந்தைகள் சூழ்ந்து நிற்கின்றனர்.அந்தக் குழந்தைகளின் அன்புப்பிடியில் அவர் தன்னை மறந்து நிற்கின்றார்.தான் பெற்றெடுக்காத அந்தப் பிஞ்சி உள்ளங்களுக்கு அடைக்கலம் தந்து ஆறுதல் கூறும் அவர் தெய்வமல்லவா?
தனக்கும் குழந்தை பிறக்கும்.இறைவன் தந்த பரிசை இமைப்பொழுதும் பிரியாமல்,அன்பையும் பாசத்தையும் ஊட்டி வளர்ப்பேன்! கண்ணை இமை காப்பது போல் காப்பேன்.
என் அன்பைக் கொட்டி வளர்ப்பேன்! ஒரு போதும் தன் பெற்றோர் அன்பைத் தராமல்,நோகடித்ததால் அன்பைத் தேடிச் சென்ற போது,தவறான நண்பர்களின் சேர்கையால்,தீய பழக்கத்திற்கு ஆளாகி ஒரு போதைப் பித்தனாக மானமிழந்து,மரியாதைக்கெட்டு, போலீஸ்காரர்களின் துப்பாக்கிச் சூடுபட்டு அதிர்ஸ்டவசமாக உயிர்தப்பி,சிறைவாசம் அனுபவித்தக் கொடுமைகள் நிச்சயமாக உயிரினும் மேலான என் குழந்தைக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்வேன்!
“பார்த்திபன்….! ஏன்பா மகிழ்சியான இந்த நேரத்தில கண் கலங்கிற?” அம்மாதான் கண்களில் திரண்டு நின்ற கண்ணீரைச் சட்டென்று யாருக்கும் தெரியாமல் தன் சேலைத் தலைப்பால் துடைக்கிறார். மணப்பெண்ணாக அருகில் நின்றுக் கொண்டிருந்த தமிழரசிக்கு ஒன்றும் விளங்காமல் பார்த்திபனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்!
ஒருவேளை, முதலிரவின் போது தமிழரசி கேள்வி கேட்டால், தன்னைப் பெரிதும் பாதித்த அந்த விசியத்தை புது மனைவியிடம் பார்த்திபன் கூறுவானோ என்னவோ?
மனிதன் எப்படி எப்படியெல்லாமோ வாழநினைக்கிறான். ஆனால், நம்மைப் படைத்த இறைவன், இப்படித்தான் வாழவேண்டு என்று நியதியை ஒவ்வொரு மனிதனுக்கும் நீதியாக அமைத்துக் கொடுக்கிறான்! இன்னாருக்கு இப்படிதான் வாழ்வு அமையும் என்பது ஆண்டவன் கட்டளை. இறைவன் கொடுத்ததை மனிதன் தடுக்க முடியாது! இதை உணர்ந்து நடக்கும் மனிதன் எந்நாளும் மகிழ்வுடன் வாழ்கிறான்!
இதோ, ஆண்டவன் ஆசியுடன் புதுவாழ்வை மிகுந்த நம்பிக்கையுடன் தொடங்கிவிட்ட அன்பு மகன் பார்த்திபன் மருமகள் தமிழரசி ஆகியோரைப் பெற்றோர் தினகரன் அம்பிகை தம்பதியினர் பூரிப்புடன் பார்க்கின்றனர்!
அவர்கள் மட்டுமா பூரிப்புடன் இருக்கின்றனர்? புதுமணத் தம்பதியினரை வாழ்த்த வந்த அணைத்து நல்லுள்ளங்களின் முகங்களிலும் பூரிப்பு நிறைந்து காணப்படுகிறது!
பார்த்திபன் புத்துணர்ச்சியோடு தன் புது மனைவியின் கரங்களை இனிதாகப் பற்றியவாறு வானமே எல்லையாக வாழ்ந்து காட்ட பவிசுடன் நடந்து செல்கிறான்!
தங்கள் உதிரத்தில் உதித்த மகன், இல்லறத்தில் நல்லறம் காண இறைவனின் ஆசிக்காகப் பெற்றோர் தங்களின் இரு கரங்களையும் கூப்பி இறைவனிடம் மனதார இறைஞ்சுகின்றனர். அப்போது அவர்களின் கண்களில் ஆனந்த கண்ணீர் ததும்பி வழிகிறது!
முற்றியது