சோபாசக்தியின் நாவல்கள் ‘கொரில்லா,ம் குறித்து’

 ஆய்வுச்சுருக்கம்:

ஷோபாசக்தி சு. குணேஸ்வரன் ஷோபாசக்தியின்  ‘கொரில்லா’, ‘ம்’ ஆகிய நாவல்கள் ஈழப்போராட்ட அரசியல் வரலாற்றைப் புனைவாக்கிய படைப்புக்களாகும்.  புகலிடத்தில் இருந்து வெளிவந்தவற்றுள் உள்ளடக்கத்தாலும்  உருவத்தாலும் புனைவுமொழியாலும் வித்தியாசங்களைக் கொண்டவை. ‘கொரில்லா’ ஈழப்போராட்டம் தொடங்கிய வரலாற்று ஓட்டத்தை ஒரு பகுதியாகச் சித்திரிக்கிறது. தமிழ்ப் போராளி அமைப்புக்களின் ஆரம்ப காலச் செயற்பாடுகள், அவற்றுக்கிடையிலான முரண்பாடுகள்  ஆகியவற்றை நிஜ மாந்தர்களின் கதைகளின் ஊடாகச் சொல்கிறது. ‘ம்’ நாவலும் இந்தப் போராட்ட அரசியலின் தொடர்ச்சியான வீழ்ச்சியினைப் பேசுகிறது. நாவல்கள் இரண்டிலும் அதிகாரமும் துரோகமும் தப்பித்தலும் இயலாமையும் நிறைந்திருப்பதைக் காணலாம். இவற்றில் வெளிப்படும் எள்ளலுக்கூடாக ஈழ அரசியல் பற்றிய விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. இரண்டு நாவல்களும் மரபுமுறையான கதை சொல்லும் உத்தியை நிராகரிக்கின்றன. முதலில் ஒரு போராளியாக இருந்து பின்னர் எழுத்தாளரான ஷோபாசக்திக்கு போராட்டச்சூழல் அன்னியமானதல்ல என்பதும் இங்கு குறிப்பிடவேண்டும். இவ்வகையில், ஈழப் போராட்ட வரலாற்றைப் புனைவாக்கிய புகலிட நாவல்கள் என்றவகையில்  தமிழ்ச்சூழலில் கவனத்திற்குரியனவாகவும் விரிவான ஆய்விற்குரியனவாகவும் அமைந்துள்ளன.

அறிமுகம்

மேற்குலக நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்ற இலங்கைப் படைப்பாளிகளில் ஷோபாசக்தி கவனத்திற்குரியவர்.    ஷோபாசக்தி பிரான்சில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். இவரின் ‘கொரில்லா’, ‘ம்’ ஆகிய நாவல்களும், ‘தேசத்துரோகி’, ‘எம்ஜிஆர் கொலைவழக்கு’ ஆகிய சிறுகதைத் தொகுதிகளும் புனைவிலக்கியங்களாக வந்துள்ளள. ஷோபாசக்தியின் ‘கொரில்லா’, ‘ம்’ ஆகிய இரண்டு நாவல்களும் தமது கதைகளுக்கு அடிப்படையாக இனப்போராட்ட சூழலை எடுத்துக் கொள்கின்றன. கொரில்லா ஈழப்போராட்ட அரசியலை மையப்படுத்திய நாவல். அதேபோல ‘ம்’ நாவலிலும் பேரினவாத ஒடுக்குமுறையின் விளைவுகளில் ஒன்றான வெலிக்கடைப் படுகொலைச் சம்பவங்களும், தமிழர்கள் மீதான இனவெறித் தாக்குதல்களும் விரிவாகப் பதிவாகியுள்ளன. இந்த வகையில் ஷோபாசக்தியின் புனைவுகளான கொரில்லா, ம், ஆகிய இரண்டு நாவல்களையும்  மையமாகக் கொண்டதாக இக்கட்டுரை அமைந்துள்ளது

‘கொரில்லா’  நாவல்

‘கொரில்லா’ நாவல் ஈழப் போராட்ட அரசியலைப் புனைவாக்கிய வித்தியாசமான படைப்பு. அகதியாகப் பிரான்சில் தஞ்சம் கோரும் யாக்கோபு அந்தோணிதாசன் என்ற இளைஞனின் அகதி விண்ணப்பத்துடன் இந்நாவல் தொடங்குகின்றது.

     இலங்கையில் உயிர்வாழ முடியாத நிலையிலே அங்கிருந்து தப்பி, பிரான்சுக்கு உள் நுழைந்து அகதியாக ஏற்றுக்கொள்ளுமாறு கோருகிறார். பிரான்சில் இவரின் அகதி விண்ணப்பம் மூன்று முறையும் நிராகரிக்கப்பட்டு உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு பணிக்கப்பட்டபோதும் மேன்முறையீடு செய்வதாக அமைகின்ற கடிதத்தில் ஒருபகுதியுடன் நாவல் தொடங்குகின்றது.

     “எனது தாய்நாட்டில் எனக்கும் குடும்பத்தினருக்கும் இலங்கை – இந்திய இராணுவத்தினராலும் தமிழ்ப் போராளிக் குழுக்களினாலும் ஏற்பட்ட கொடுமைகளால் எனது உடல் மனநிலைகள் சிதைவடைந்த நிலையிலும் இரண்டு வருட சிறைவாசத்தின்  பின்பும் எனது உயிரைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு சிறிலங்காவில் இருந்து தப்பி வந்து தங்கள் நாட்டில் அரசியல் தஞ்சத்தைக் கோரினேன். ஆனால் எனது தஞ்சக் கோரிக்கையை நீங்கள் மூன்று தடவைகள் நிராகரித்து விட்டீர்கள். என்னை பிரான்ஸை விட்டு உடனே வெளியேறுமாறு பொலிசார் கட்டளைக்கடிதம் அனுப்பியுள்ளார்கள். நான்   வெளியேறி எங்கே செல்வது? எனது தாய் நாட்டில் எனக்கு நடந்த கொடுமைகளையும் ஏற்பட்ட உயிர் அபாயத்தையும் நான் விபரமாக தங்களுக்குத் தெரிவித்திருந்துங்கூட நீங்கள் ‘25 ஜூலை 1952 ஜெனிவாச் சட்டத்தின் இரண்டாவது பிரிவின்’  கீழ் மூன்று தடவைகளும் எனக்கு அரசியல் தஞ்சத்தை நிராகரித்துள்ளீர்கள். ” (1)

     என்றவாறு அமைகின்ற இந்நாவலின் தொடக்கம் அகதியாக தஞ்சம் கோருவதாக அமைந்துள்ளது. ஏனைய பகுதிகள் ஈழப்போராட்ட அரசியல் பற்றி போராளிகளின் செயற்பாடுகள் பற்றி, மக்களின் நிலை பற்றி எள்ளலும் துயரமும் ததும்ப வெளிப்படுத்துகின்றது.

    யாழ்ப்பாணத்தில் தமிழ்ப்போராளி அமைப்பிலிருந்து விலகி, இலங்கை அரசாங்க படைகளினால் சித்திரவதைப்பட்டு அங்கிருந்து கொழும்பு வந்து பிடிபட்டு பின்னர் அங்கிருந்து தப்பிப் பிரான்சில் அகதியாக தஞ்சம் கோருவது வரையிலான பல கதைகள் இந்நாவலில் சொல்லப்படுகின்றன.

     போராளி அமைப்புக்களின் செயற்பாடுகள், அவற்றின் முரண்பாடுகள், மக்களின் பங்களிப்புகள், இராணுவத்தினரின் நடவடிக்கைகள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் , தமிழர்களின் உள்ளுர் அரசியல் எனப் பல சம்பவங்களை புனைவாக்குகின்றது கொரில்லா.

     இந்நாவலில் இராணுவத்தினரிடம் பிடிபட்டவர்களின் நிலை பற்றி வரும் ஒரு சித்திரிப்பு பின்வருமாறு அமைகிறது.

     “இராணுவத்தினரது வாகனத்துக்குள் தூக்கியெறியப்பட்டு விழுந்த என்னை ஒரு இராணுவத்தினன் மிகுந்த ஆதரவோடு தூக்கி இருக்கையில் உட்கார வைத்தான். நான் இரத்தத்தால் தோய்ந்த ஒரு இருக்கையில் உட்கார வைக்கப்பட்டிருப்பதைக் கவனித்தேன். என் அருகே இரத்தத்தில் தோய்ந்த ஒரு பெரிய சட்டிப் பனங்காய் அளவான பொதி இருப்பதையும் கண்டேன். என்னை ஆதரவோடு தூக்கிய அந்த இராணுவத்தினன் அந்தப் பொதியை எடுத்து என் மடியில் வைத்திருக்குமாறு இளித்துக் கொண்டே சொன்னான். மெள்ள பொதியை எடுத்து மடியில் வைக்கும்போதுதான் அது ஒரு உரச்சாக்கிலே பொதியப்பட்டிருக்கும் மனிதத் தலை என்பதை உணர்ந்து கொண்டேன். எனக்காகவும் இவர்கள் ஒரு உரச்சாக்கை வைத்திருக்கிறார்கள் என நம்பத் தொடங்கினேன்.” (2)

     இவ்வாறான அதிர்ச்சி நிரம்பிய பகுதிகள் இந்நாவலில் மிகச் சாதாரணமாக தொடர்ச்சியாக சொல்லப்படுவதைக் கண்டுகொள்ளலாம்.

     ஈழப்போராட்ட அரசியலை மையப்படுத்திய நாவலென்றாலும்; அதில் மக்கள் இலங்கை அரசினால் பட்ட துயரச்சம்பவங்களும் எடுத்துக் காட்டப்படுகின்றன.

தமிழர்கள் கைது செய்யப்படுதல், மக்கள் மீதும் குடியிருப்புகள் மீதும் தாக்குதல்கள் செய்வது, நெடுந்தீவு குமுதினிப் படுகொலைச் சம்பவம், யாழ். கோட்டை சம்பவங்கள் என்பன எல்லாம் இந்நாவலில் பேரினவாத ஒடுக்குமுறையின் பதிவுகளாகவுள்ளன.

‘ம்’ நாவல்

ஷோபாசக்தியின் மற்றொரு நாவல்தான் ‘ம்’. இதுவும் ஈழப்போராட்ட அரசியலின் இன்னொரு புனைவு. ஆனால் கொரில்லா ஏற்படுத்திய பாதிப்பினை ‘ம்’ ஏற்படுத்தியதா என்பது கேள்விக்குரியது. ‘ம்’ நாவலிலும் பேரினவாத ஒடுக்குமுறையின் விளைவுகளில் ஒன்றான வெலிக்கடைப் படுகொலைச் சம்பவங்களும், தமிழர்களின் மீதான இனவெறித் தாக்குதல்களும் விரிவாகப் பதிவாகியுள்ளன.

     ‘ம்’  என்ற நாவல் உண்மைச்சம்பவங்களும் புனைவும் கலந்த படைப்பு. தன் மகளின் கர்ப்பத்திற்குக் காரணமான நேசகுமாரனின் கதையுடன் நாவல் தொடங்குகிறது. ஈழத்தில் போராளி அமைப்புக்களுடன் தொடர்புட்ட காரணங்களால் இலங்கை அரச படைகளினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைப்படுதல் பின்னர் சிறையிலிருந்து தப்புதல்,  போராளிகளிடம் பிடிபடுதல் என்று தொடங்கிய கதை இறுதியில் புகலிடத்தில் இன்னொரு இளைஞர் கூட்டத்தினரிடம் அகப்பட்டு சித்திரவதைப்படுதலோடு முற்றுப்பெறுகிறது.

     நாவலின் தொடக்கம் மற்றும் இறுதிப்பகுதிகளைத் தவிர ஏனையவற்றில் ஈழத்தின் அரசியல் வரலாறு சொல்லப்படுகிறது. ஈழப்போராட்டம் ஆரம்பித்தபோது இருந்த இளைஞர்களின் செயற்பாடுகள், கைதுகள், சித்திரவதைகள், காட்டிக்கொடுப்புக்கள், தண்டனைகள், சகோதரப்படுகொலைகள் என்பவற்றின் ஒரு குறுக்கு வெட்டுமுகமாக இந்நாவல் அமைந்துள்ளது.

     இந்நாவலில் வரும் நேசகுமாரன் என்ற பாத்திரம் முற்றிலும் வன்முறையும் துரோகமும் இயலாமையும் நிறைந்த பாத்திரமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் போராளி அமைப்புடன் இணைந்து செயற்படுகின்றமை. பின்னர் கைது செய்யப்பட்டபின்னர் தான் தப்பிக்கொள்வதற்காக தனக்கு உதவியவர்களைக் காட்டிக்கொடுத்தல் என யதார்த்தமும் இயலாமையும் நிறைந்த பாத்திரமாக அமைந்துள்ளது.

     இந்நாவலில் இழையோடும் முக்கியமாக இரண்டு அம்சங்களை குறிப்பிடலாம். ஒன்று அவலமும் இயலாமையும் துரோகத்தனமும் நிறைந்த கதைக்கூறுகள். மற்றையது போராளிகளின் போராட்டம் சார்ந்த எள்ளல் நிறைந்த கதைக்கூறுகள்.

     இதில் முதலாவது அம்சமே நாவல் முழுவதும் விரவியுள்ளது. நேசகுமாரன் இராணுவத்தினரிடம் கைது செய்யப்பட்டதுமுதல் இதை அவதானிக்கலாம்.

     கைது செய்யப்பட்டு சித்திரவதைப்படுதல், சிறிகாந்தமலர் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொல்லப்படுதல், கலைச்செல்வன் தப்பியோடும் சந்தர்ப்பத்தில் பெற்றோர் முன்பாகவே சுட்டுக் கொல்லப்படுதல், வெலிக்கடைச் சிறையில் கண்முன்னாலே மனிதர்கள் கோடரியாலும் பிற ஆயுதங்களாலும் வெட்டியும் சுட்டும் அடித்தும் கொல்லப்படுதல். பிடித்துவைக்கப்பட்டிருந்த சக போராளிகள் இன்னொரு போராளி அமைப்பால் கூட்டாகக் கொலை செய்யப்படுதல்  ஆகிய சம்பத்திரட்டுக்கள் இந்நாவலில் பதிவுபெற்றுள்ளன. 

     “இது எமது வாழ்வு. இதுவரை நாம் அநுபவித்த துயரக் கொடுமையை, துன்பக் கொடுமையை-வாழ்வியல் அழிவுகளை, சமூகச் சிதறலை- சமூகசீவியத்தின் உடைவைச் சொல்கின்றவொரு படைப்பாக, நாம் வாழ்ந்த-வாழும் வாழ்வை, அதன் நிசத் தன்மையோடு, குரூரம் நிறைந்த போராட்ட வாழ்வை, தோழமையைத் துண்டமாகத் தறித்த கோழைத் தனத்தை, அதன் மொழியூடே மனித அழிவைச் சொல்லுதல் ‘ம்’இனது மனிதக் கோசமாகவும், கலைப் பண்பாகவும் எம் முன் விரிந்து காட்சிப்படுத்துகிறதென்று கூறிக் கொள்வதுதாம் என்னைப் பொருத்தவரை சாத்தியம்.”  (3)

     மறுபுறம் எள்ளல் நிறைந்த கதைக்கூறுகள் ஈழப்போராட்டம் சம்பந்தப்பட்டவையாக உள்ளன.

      முதற்தாக்குதலுக்கு செல்லும் நேரம் பதற்றத்தைத் தவிர்ப்பதற்கு கள்ளுக் குடித்துவிட்டு வந்ததாகச் சொல்லும் கலைச்செல்வனுக்கு நேசகுமாரன் தண்டனை கொடுக்கும் பகுதியொன்று நாவலில் வருகிறது.

 “ஒரு பனையைக் கட்டிப்பிடிக்குமாறு நேசகுமாரன் உத்தரவிட்டான். கலைச்செல்வன் கட்டிப்பிடித்தான். நேசகுமாரன் இடுப்பு பெல்டை அவிழ்த்துக் கலைச்செல்வனின் முதுகில் வீசினான். இரண்டு மூன்று அடிகள் அடித்தவன் நிறுத்திவிட்டு தோழர் நான் செய்வது சரிதானே என்று கலைச்செல்வனிடம் கேட்டான்.” (4)

     இயக்கங்கள் தொடர்பான இந்த எள்ளல் இந்நாவலில் பல இடங்களில் தொடர்கிறது.  நேசகுமாரன் பிடிபட்டபோது அவனின் தகப்பன் எப்போதோ வீட்டைவிட்டு ஓடிப்போன தோட்டப்புறச்சிறுவனின் மரணத்தைக் காரணம் காட்டி நாங்களும் மாவீரர் குடும்பம் என நடித்தல், சிறையில் மூலைக்கு மூலை இயக்கங்களாக பிரிந்திருத்தல், கொள்ளைச்சம்பவத்தில் பிடிபட்டவர்கள் மீதான கேள்விகள், கலை நிகழ்ச்சிகளில் இடம்பெறும் பொது அறிவுப் போட்டிகள்… இவ்வாறாக பல சம்பவங்களை இந் நாவலின் எள்ளலுக்கு எடுத்துக்காட்டுக்களாக குறிப்பிடலாம்.

மதிப்பீடு

உள்ளடக்கத்தில் மட்டுமல்லாமல் உருவத்திலும் நவீன இலக்கியத்தின் சில எத்தனங்களை இரண்டு புனைவுகளும் காட்டி நிற்கின்றன.

     நாவல்கள் இரண்டும் நேர்கோட்டிலான கதைசொல்லலைச்  சிதைக்கின்றன. ஷோபாசக்தியிடம் இந்த வடிவமாற்றம் அவரது இப்புனைகதைகளில் மிக வலுவாகத் தெரிகின்றது அதேபோல் சிறுகதைகளிலும் பின்நவீனத்துவ உத்தியில் இந்த வடிவச் சிதைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இந்த வடிவமாற்றத்தை புறநிலையிலும் அகநிலையிலும் கண்டுகொள்ள முடியும்.

     ஈழத்தமிழ்ப் படைப்புக்களிலேயே  கொரில்லாவின் சித்தரிப்பு வித்தியாசமானது. கடிதம், கவிதை, அடிக்குறிப்பு, உண்மைச் சம்பவங்கள், பந்தி பிரிக்கப்பட்டு இலக்கங்கள் இடப்பட்டு கதை கூறுதல், என மரபின் சாத்தியங்களை நிராகரித்து புதியதொரு புனைவாக காட்சிதருகிறது.

இதனை ‘நுண் சித்தரிப்புகள் கூறும் மாற்று வரலாறு’ என்று ஜெயமோகன் குறிப்பிடுகின்றார். அவர் மேலும் ,

“….வரலாறு என்ற விசித்திரமான, குரூரமான அபத்தமான, நுரைபோல உடைந்தழிந்தபடியே இருக்கும் ‘கதை’ குறித்து நம்மிடம் சொன்னபடியே இருக்கிறது…….நடை, உதிரிச் சித்தரிப்புகளின் கூட்டமாக உள்ள கட்டமைப்பு, அங்கதம் நிரம்பிய வரலாற்றுத் தரிசனம் ஆகியவற்றில் இந்நாவலுக்குச் சமானமாகச் சொல்ல தமிழிலக்கியத்தில் ஒரே ஒரு நூல்தான் உள்ளது.  ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’…..” (5)

     என்று எழுதுகின்றார்.

     அதேபோல ‘ம்’ நாவலின் தொடக்கத்திலும் இறுதியிலும் வருகின்ற கதைகள் நாவலின் இறுதிப்பகுதியில் வருகின்ற குதிரைவண்டி பற்றிய குட்டிக்கதை என்பன உள்ளீடாக குறியீடாகக் கருதுவதற்கு வாய்ப்புண்டு. இந்நாவலிலும் கொரில்லா போன்று சிறுசிறு தலைப்புக்கொடுத்து கதை சொல்லப்படுகின்ற அமைப்பு காணமுடிகிறது. முன் பின் பகுதிகளைத் தனியே பிரித்தெடுத்தால் ஏனையவை கட்டுரைகள் போல தோற்றம் கொள்ளக்கூடிய நிலை உண்டு. ஆனாலும் ஷோபாசக்தியின் புனைவுமொழி அதனை வெற்றிகரமான படைப்பாக்கி விடுகின்றது.

     இவ்வாறாக ஷோபாசக்தியின் புனைவுகளில் அவை எடுத்துக் கொண்ட பொருட்பரப்பு, அவற்றைச் சொல்வதற்குக் கைகொடுக்கும் பின்நவீனத்துவ இலக்கிய நெறி, அதற்கேற்ற சொல்லாடல் என்பவற்றைக் குறிப்பிடலாம். புலம்பெயர்ந்தோரின் தமிழ்ப்புனைவுகளில் அதன் அரசியலாலும் அழகியலாலும் பெரிதும் வித்தியாசப்பட்டிருக்கும் ஷோபாசக்தியின் புனைவுகள் மிக நுண்மையான  ஆய்வினை வேண்டி நிற்கின்றன.

அடிக்குறிப்புகள்

(1) ஷோபாசக்தி; (2001),  கொரில்லா, சென்னை, அடையாளம், பக்.13
(2) ஷோபாசக்தி; (2001),  கொரில்லா, சென்னை, அடையாளம், பக்.45
(3) ப.வி சிறீரங்கன்; (2006), மூன்றாவது மனிதன், இதழ் 17,. கொழும்பு,  பக்.102
(4) ஷோபாசக்தி; (2004),  ம், சென்னை, கறுப்புப்பிரதிகள், பக். 38
(5) ஜெயமோகன்;  காலம், கனடா, இதழ் 16
 
(இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் 2013 யூலை 6 -7 ஆந்திகதிகளில் நிகழ்த்திய 3வது சர்வதேச ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

நன்றி கலைமுகம், யாழ்ப்பாணம், இதழ் 56, ஒக்-டிசம் 2013

kuneswaran@gmail.com