வல்லமை என்ற இணைய இதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை காட்சிப்பிழை. அவுஸ்திரேலியாவில் வதியும் சுதாகரன் இலங்கை பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரி. முன்னர் நியூசிலாந்தில் வாழ்ந்துவிட்டு அவுஸ்திரேலியா மெல்பனுக்கு வந்தவர். பல வருடங்களாக சிறுகதை, கட்டுரை, பத்தி எழுத்துக்கள் எழுதுபவர். இலங்கையிலும் தமிழகத்திலும் மற்றும் வெளிநாடுகளிலும் நடந்த பல சிறுகதைப்போட்டிகளில் பரிசில்கள் பெற்றவர். அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தில் பல பதவிகளிலிருந்து சிறந்த பங்களிப்பு செய்துவருபவர். சq;கத்தின் 10 ஆவது எழுத்தாளர் விழாவை (2010) முன்னிட்டு நடத்தப்பட்ட சர்வதேச சிறுகதை, கவிதைப்போட்டிகளை திறம்பட நடத்தியிருப்பவர். தற்பொழுது சங்கத்தின் செயற்குழுவில் இதழாசிரியராக பணியாற்றுபவர். குறிப்பிட்ட வல்லமை இணைய இதழின் சிறுகதைப்போட்டிக்கு வந்த கதைகளை தேர்வு செய்தவர் தமிழகத்தின் பிரபல இலக்கியவிமர்சகர் வெங்கட்சாமிநாதன். குட்டுப்பட்டாலும் படவேண்டும் மோதிரக்கையினால் என்பார்கள். வசிட்டவர் வாயால் பிரம்மரிஷிப்பட்டம் என்பார்களே அதேபோன்றதுதான் வெங்கட்சாமிநாதனின் தேர்வு. சுதாகரனின் காட்சிப்பிழை வல்லமை தொகுத்த பரிசுக்கதைகளின் தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. பாலகிருஷ்ணனுக்கும் கனடாவில் வயது முதிர்ந்தவர்கள் தஞ்சமடையும் இல்லத்திலிருக்கும் தெமட்டகொட அங்கிளுக்கும் இடையே அப்படி என்னதான் பிரச்சினை?
இலங்கையில் அந்த அங்கிளின் தெமட்டகொட வீட்டில் வாடகைக்கு குடியிருந்த பொழுது பாலகிருஷ்ணனுக்கு வந்த அம்மை நோய்தான் பிரச்சினை. அங்கிளின் புறக்கணிப்பு பாதிப்பு பாலகிருஷ்ணன் கனடா வந்த பின்பும் தொடருகிறது. பாலகிருஷ்ணனுக்கு அமிர் என்று ஒரு மாமா. அவர் பற்றிய விதந்துரைப்பு எப்படி என்று பாருங்கள். அவருக்கு எட்டுச்சகோதரங்கள். அந்த எட்டுப்பேருக்கும் குறைந்தது 40 பிள்ளைகள். பேரப்பிள்ளைகளையும் கணக்கெடுத்தால் அறுபதாவது தேறும். அப்படியானால் சுமார் 100 பேர் பாலகிருஷ்ணனை கேட்கும் கோள்வி தெமட்டகொட அங்கிளைப் போய் பார்த்துவிட்டீர்களா? தற்காலத்தில் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்கள் தேடியது அநேகம். வீடு, தொழில், வருமானம், வாகனம் இப்படி அனைத்தும் தேடிவிட்டு சொந்த ஊரிலில்லாத வசதி வாய்ப்புகளையெல்லாம் பெற்றபின்பும் தொலைத்துவிட்ட ஒரு விடயம் இருக்கிறது. எங்கே…சொல்லுங்கள்…? நாம் தொலைத்த பல விடயங்களில் மிகவும் முக்கியமானது. மகிழ்ச்சி. பாலகிருஷ்ணனும் தெமட்டகொட அங்கிளும் மாத்திரமல்ல இக்கதையில் வருபவர்கள் அனைவரும் தொலைத்துவிட்ட மகிழ்ச்சி பற்றித்தான் காட்சிப்பிழை சொல்கிறது. மகிழ்ச்சி தொலைவதற்கு அடிப்படை ஆணவம். அதாவது ஈகோ.
எப்பொழுதோ ஒரு கால கட்டத்தில் அம்மைநோயினால் பாதிக்கப்பட்ட பாலகிருஷ்ணனை தெமட்டகொட அங்கிள் ட்றீட் பண்ணியவிதம் சரியில்லைத்தான். ஆனால் அவர் இப்பொழுது ஒரு முதியோர் இல்லத்தில் முடங்கிவிட்டார். அவரைப்பார்க்கத்தடுக்கிறது பாலகிருஷ்ணனின் ஈகோ. எனினும் பாலகிருஷ்ணன் தனது மனைவி கலைச்செல்வியுடன் அவரைப்பார்க்கச்செல்லுகிறான்.
கலைச்செல்வியை அடையாளம் கண்டுகொண்ட தெமட்டகொட அங்கிள் பாலகிருஷ்ணனை அடையாளம் காணத்தவறிவிடுகிறார். எனினும் விடைபெறும்பொழுது பாலகிருஷ்ணனை அருகே அழைத்து அவனது கையைபிடித்து விரல்களை அசுரப்பலத்துடன் அமுக்கினார்.
அந்த உணர்வை வாசகர் வேறு விதமாக நினைப்பார். ஆனால் கதையை எழுதும் சுதாகரன் பாலகிருஷ்ணன் மீது அந்த தெமட்டகொட மாமாவுக்குள்ள கோபம் இன்னமும் தணியவில்லை என்று எழுதுகிறார்.
நான் நினைக்கிறேன். சாகும் தறுவாயிலிருக்கும் ஒருவர் எல்லாக்கோபங்களையும் மறந்து வாஞ்சையுடன் கைவிரல்களை அமுக்கினார் என்றுதான். உங்களில் பலருக்கு இந்த அனுபவம் இருக்கலாம். டேய் நீ கள்ளண்டா என்று கோபத்தில் ஒருவனைப்பார்த்துச் சொல்வதற்கும் பெற்றோர்கள் தமது ஆண் குழந்தையைப்பார்த்து செல்லமாக டேய் நீ கள்ளண்டா எனச்சொல்வதற்கும் எவ்வளவோ வித்தியாசமிருக்கின்றன. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்போம். நீண்ட இடைவெளிக்குப்பின்னர் தன்னைப்பார்க்க வரும் – தன்னால் ஒரு காலத்தில் அம்மைத்தழும்புகளுக்காக வெறுக்கப்பட்ட பாலகிருஷ்ணனை முதலில் அடையாளம் காணத்தவறினாலும் பின்னர் சில கணங்களில் தன் தவறையுணர்ந்து விடைபெறும் தருணத்தில் கைவிரல்களை அழுத்திப்பிடிப்பதிலும் அவர் வடிக்கும் கண்ணீரிலும் தெரிகிறது.
அந்த தெமட்டகொட அங்கிளை விட்டுப்பிரிந்துசென்ற விவாகரத்துப்பெற்ற மனைவியும் வந்து பார்த்துவிட்டுப்போன பின்னர் அவரது உயிர் பிரிகிறது. ஆனால் அவரைப்பார்த்துவிட்டு வந்த பாலகிருஷ்ணனோ தாங்கள் அவரைப்பார்த்த விடயம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதில் அவதானமாக இருக்கிறான். அவன் மனைவிக்கோ தனது தந்தையிடமாவது அவரைப்பார்த்த தகவலை சொல்லிவிடவேண்டும் என்ற ஆர்வம். ஆனால் அவரைப்பார்க்கவேயில்லை என்றுதான் சாதிக்கவேண்டும் என்கிறான் பாலகிருஷ்ணன். இங்கே அவனது ஈகோ மாத்திரமல்ல ஆணாதிக்கமும் துலக்கமாகிறது. காட்சிப்பிழை பொருத்தமான தலைப்பு. மனிதர்களின் உள்ளத்தை உளவியல் சார்ந்து எழுதுகிறார். இதுபோன்ற சம்பவங்கள் எங்கும் எந்த நாட்டிலும் எந்த இனத்திலும் நடக்கலாம். இக்கதை இலங்கை வாழ்வுக்கும் புகலிட வாழ்வுக்கும் முடிச்சுப்போடுகிறது. வந்தவர்கள் தமது உடை – உடைமைகளுடன் மட்டும் வரவில்லை ஈகோ சார்ந்த இயல்புகளுடனும் வருகிறார்கள் என்ற தொனி இக்கதையில் கேட்கிறது. இனி இச்சிறுகதையை படித்துப்பாருங்கள். http://www.vallamai.com/?p=24862