சிற்றிதழ்களில் முதன்மையானதும், இலக்கிய உலகின் லட்சினையுமான ‘கணையாழி‘ மீண்டும் வெளிவருகிறது. சில வருடங்களுக்கு முன் சில பல காரணங்களால் வெளிவராமல் இருந்த ‘கணையாழி’ இதழ்; வரும் ஏப்ரல் 13ம் தேதி முதல் மீண்டும் வெளிவரயிருக்கிறது. தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் எம்.ராஜேந்திரன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு, பபாசியின் தலைவர் சொக்கலிங்கம் அவர்களை (கவிதா பதிப்பகம்) பதிப்பாளராகக் கொண்டு கணையாழி இதழ் வெளிவருகிறது. இது கணையாழியின் நீண்ட நெடிய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். சிற்றிதழ்களின் வாழ்வுக்காலம் குறுகியது எனும் நியதியைத் தகர்த்துப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வெகுசில இதழ்களே வெளிவந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய இதழ்களில் முக்கியமானது: ‘கணையாழி’ மாத இதழ். செய்திகளையும், சுவையான பகுதிகளையும் தாங்கிய இதழாகப் தினமணியின் முன்னாள் ஆசிரியார் மற்றும் பத்திரிக்கையாளர் கி. கஸ்தூரிரங்கனால் டெல்லி வாழ் தமிழர்களுக்காக 1965 இல் டெல்லியில் தொடங்கப்பட்டது.
தொடக்க நாட்களில் இது புது தில்லி வட்டார அறிவிஜீவிகளுக்காக நடத்தபட்டதாக ஒரு கணிப்பு நிலவியது. பின்னர் சற்று விரிவடைந்து இலக்கிய தன்னுணர்வுகளைத் தூண்டியதாக சொல்லப்படுகின்றது. திஜானகிராமன், என்.எஸ். ஜெகநாதன், சுஜாதா, பாலகுமாரன்,அசோகமித்ரன், க.நா.பாலசுப்ரமணியன்,இந்திரா பார்த்தாசாரதி ஆகியோருடைய படைப்புகள் வெளிவந்தன.
1965 லிருந்து 1970 வரை டெல்லித் தமிழர்களுக்காக அரசியலை முதன்மையாகப் படுத்திய செய்திப் பத்திரிகையில் உலக நாட்டு நடப்புகள், இலக்கியத் தொடர் கட்டுரைகள். அரசியல் பேட்டிகள், பொருளியல் செய்திகள், நகைச்சுவைத் துணுக்குகள் ஆகியன வெளியாகியது. 1970 லிருந்து 1975 வரை அரசியலுடன் புதுக் கவிதைகளுக்கும் இடம் அளிக்கப்பட்டது. சிறந்த கதைகள், நாடகங்கள், சமூகவியல் சிந்தனைகள் ஆகியவை இடம் பெறலாயின. 1975 லிருந்து 1980 வரை கதைகள் துணுக்குகளுக்கு முதன்மை தரப்பட்டது. அரசியல் செய்திகள் துணுக்குகளாக அளிக்கப்பட்டன. தொடர் கதைகளுக்கு இடம் அளிக்கப்பட்டது. 1980 முதல் 1985 வரை அரசியல் பெரும் பகுதி நீக்கப்பட்டு குறுநாவல்களின் ஆதிக்கம் தொடங்கியது.கதை கவிதைகளும் அதிகம் இடம் பெறத் தொடங்கின. கணையாழி, படிப்படியாகச் சில மாறுதல்களைப் பெற்றது.
1995 முதல் கி. கஸ்தூரிரங்கனால் தொடர்ந்து நடத்தப்பட்ட கணையாழி, நின்று போகக் கூடிய சூழலில் தசரா அறக்கட்டளை சிறிது காலம் பொறுப்பேற்று நடத்தியது குறிப்பிடத்தக்கது. கணையாழி’ 1965 முதல் 1991 வரை பெரிய வடிவிலும், 1991 ஜனவரி முதல் 1993 வரை டைஜஸ்ட் வடிவிலும் 1993 டிசம்பர் முதல் பழைய வடிவிலும் வெளிவந்தது.
நான்காவது இதழிலிருந்து அசோகமித்திரன் பொறுப்பாசிரியர் ஆக்கப்படார். 1968 செப்டம்பர் திங்கள் முதல் இந்திரா பார்த்தசாரதி ஆசிரியர் குழுவில் இணைந்தார். இது முதல் கல்வியாளர் தொடர்பும் பாதிப்பும் கணையாழியில் ஏற்பட்டது. 1972 ஆம் ஆண்டிலிருந்து கே. சினிவாசன் ஆசிரியர் குழுவில் இல்லை. இந்திராபார்த்தசாரதி போலந்தில் இருந்த காலத்தில் முழுக்க அசோகமித்திரன் பொறுப்பில் கணையாழி இருந்தது. 1987 பிப்ரவரி திங்களில் இந்திரா பார்த்தசாரதி மீண்டும் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றார். 1988 ஜீன் திங்களில் அசோக மித்திரன் பொÚப்பிலிருந்து விலகிக்கொண்டார்.
ஆசிரியர் பொறுப்பில் இருந்தவர்களைப் பொறுத்துக் கணையாழியின் இலக்கியத்தன்மையில் ஏற்ற இறக்கம் இருந்திருக்கிறது. கணையாழியில் ஆசிரியர் பொப்றுபு மாறிமாறி அமைந்தால் ஒரு கலவைத் தன்மை பெற்றதாக இருந்தது .மாலன், மலர் மன்னன், இயக்குநர் ஜெயபாரதி, ஞாநி, அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோரும் கணையாழிப் பொறுப்பேற்று நடத்தியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப காலத்தில் பத்திரிக்கையாளருக்கு பெரும் பங்கு இடமளித்த கணையாழி பிறகு எழுத்தாளருக்கு இடம் அளிக்கத் தொடங்கியது. திஜானகிராமன், அசோகமித்த்ரன் ஆகியோர் கணையாழியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழிலக்கியத்திற்கு கணிசமான பங்களிப்பைத் தொடர்ந்து அளித்து வரும் ‘கணையாழி’ மீண்டும் வருவது நமக்கெல்லாம் மகிழிச்சியே….!
நன்றி: http://tamilanveethi.blogspot.com/2011/03/re-launch-of-kanaiyazhi.html
கணையாழி இணையத்தளம் : http://www.kanaiyazhi.com