‘பாட்டி சொன்ன கதைகள்’ என்பது இங்கு நாம் நயங்காணவிருக்கின்ற நூலின் பெயர். லெ.முருகபூபதி இதனைப்படைத்திருக்கின்றார். இதிலே இருப்பவை உருவகக்கதைகள். பன்னிரண்டு கதைகள் இங்கே இருக்கின்றன. இந்த நூலுக்கு பெயர் வந்த காரணம், இதனை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்த உந்துசக்தி என்பனவற்றை நூலாசிரியர் தம்முடைய முன்னுரையிலே விரிவாகச் சொல்லியிருக்கிறார். “இரவிலே உறங்கும் வேளையில் நான் கண்ணயரும் வரையில் என்னருகே படுத்திருந்து – எனது தலைமயிரை கோதிவிட்டவாறு பாட்டி சொன்ன கதைகள் இவை. இக்கதைகள் பின்பு கனவிலும் வந்திருக்கின்றன. மனதிலும் பதிந்துகொண்டன. அந்தப்பதிவு இங்கு பகிரப்படுகிறது.” என்கிறார்.
கதைகள் பிறந்த கதை
ஆசிரியர் தனது பாட்டியினது இடுக்கண் பொருந்திய வாழ்க்கையையும் அவளது துணிவையும் பரிவையும் இங்கே எடுத்துச்சொல்கிறார். “ யார் உதவியையும் எதிர்பாராமல் தனது உழைப்பையும் ஆத்மபலத்தையுமே நம்பி வாழ்ந்த எங்கள் பாட்டி எமக்கெல்லாம் முன்னுதாரணம்தான்” என்கிறார். ஆசிரியர் எழுதியிருக்கும் இந்த முகவுரை இவருக்கும் இந்தப்பாட்டிக்கும் இடையேயிருந்த பாசப்பிணைப்பை நன்கு உணர்த்தி நிற்கிறது. இந்தப்பாசத்தின் வெளிப்பாடு இந்த நூலின் பெயரிலும் கதைகளிலும் துலங்குவதைக்காணலாம்.
“ பாட்டி சொன்ன கதைகளை எனது பாஷையில் சொல்லியிருக்கிறேன். இந்தக்கதைகளின் சிருஷ்டிகர்த்தா யார் என்று எனக்கும் தெரியாது. எனது பாட்டிக்கும் தெரியாது.”- என்று கூறும் ஆசிரியர் அந்தக்கதைகளை ‘உருவகம்’ என்னும் இலக்கிய வடிவத்திலே சிறைப்படுத்த முயன்றிருக்கிறார்.
இவ்விபரங்கள் எல்லாம் இந்த நூலைப்பற்றிய அறிமுகம். இவை இந்த நூலை நாம் நயப்பதற்குத் துணை நிற்கும். மேலும், இங்குள்ள கதைகள் பாட்டி சொன்ன பாங்கிலிருந்து எவ்வளவு தூரம் விலகிநிற்கின்றன, இந்த உருவகம் என்னும் வடிவம் இந்தக்கதைகளின் நளினத்தையும் ஆத்மாவையும் காண்பதற்கு நமக்கு உதவுகின்றதா? இந்தப்புதிய வடிவத்தில் இது சிறுவர் இலக்கியம் எனக்கொள்ளத்தக்கதா… ? என்னும் நமது தேடலுக்கும் மேலே தரப்பட்ட விபரங்கள் ஆதாரமாயிருக்கும் என நம்புகின்றேன். வீட்டுத்தலைவர், தமது வீட்டுக்கு நண்பரோடு அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். விருந்துக்கு வந்த நண்பர், “ இந்தச்சோறு நல்லாயிருக்கிறது” என்கிறார்.
“ இது எங்கள் வயல் நெல்” என்கிறார் வீட்டுக்காரர். பேச்சு முடிந்துவிட்டது.
அவர், “ சோறு “ பற்றிச்சொல்ல இவர், “எங்கள் நெல்” என்கிறார். விடை சரிதான். ஆனால், அந்த நெல் அப்படியே இந்தச்சோறு ஆனதா? அந்த நெல்லை அவித்து, காயவைத்து, குத்திப்புடைத்து, சமைத்து…. அதன் பின் வந்ததுதான் இந்தச்சோறு. இந்த விபரம் எல்லாம் “எங்கள் வயல் நெல்” என்ற பதிலுக்குள்ளே இருக்கின்றன.
முருகபூபதி இந்த நூலுக்குச்சூட்டிய பெயரும் இப்படியானதுதான். யாரோ எவரோ, எங்கோ, எந்தக்காலத்திலோ ஆக்கிய கதைகள் செவிவழிவந்து, பல தலைமுறைகள் கடந்து, இப்போது ‘உருவகக்கதைகள்’ ஆகியிருக்கின்றன. இந்த நூலினது பெயரின் பொருட்செறிவும் நுட்பமும் இவைதான்.
உருவகம் என்னும் வடிவம்
உருவகக்கதை என்பது சிறுகதை இலக்கியத்தினது ஒரு கிளை. இதற்குச்சில தனித்துவங்கள் உண்டு. இங்கேவரும் பாத்திரங்கள் பெரும்பாலும் படிமங்கள். அத்துடன் பேசாத பொருட்கள். அதனூடு கருத்தொன்று ஊடுநூல் போலப்போகும். கதை திடீரென்று நின்றுவிடும். அந்நிலையில் வாசகர் பெரும்பாலும் மின்வெட்டில் அதிர்வுற்றதுபோல ஒருகணம் திகைப்பார். படைப்பாளியினது சாதுரியமான சித்திரிப்பும் வாசகனது வாசிப்பு கூர்மையும் இணைந்துகொண்டால் இந்தத்திகைப்பு நீங்கி வெளிச்சம் பிறக்கும். இப்படி நிகழாவிட்டால் அந்த உருவகக் கதையை தூக்கி எறிந்துவிட்டுப்போகத்தான் மனம் தூண்டும்.
உருவகக்கதை என்பது ஒரு நிழலாட்டம் போன்றது. நாடக அரங்கில் முன்னணியிலே ஒரு வெண்திரையைக்கட்டி, மேடையின் பின்சுவரிலிருந்து சபையை நோக்கி பிரகாசமான வெளிச்சம் பாய்ச்சி, அந்த வெளிச்சத்துக்கும் திரைக்குமிடையே நடிகர்கள் நின்று தமது அங்க அசைவுகளால் நடித்துக்காட்டினால் முன் திரையிலே அந்த நடிப்பு நிழலாட்டமாகத்தோன்றும். அதிலே நடிப்பைப்பார்க்கலாம். நடிகர்களைப் பார்க்க முடியாது. உருவகக்கதைகளிலும் கருத்துக்கள் வெளிப்படும். அவை சுட்டும் உட்பொருளை நாமே உய்த்துணருதல் வேண்டும். ‘உருவகக் கதைக்கு உரிய இந்த இறுக்கம் இந்த நூலில் உள்ள கதைகளுக்கும் இருக்கும். இவற்றைச் சிறுவர்கள் புரிந்துகொள்ள முடியுமா?’ என்னும் எண்ணத்துடனேயே நான் இந்த நூலைப் படிக்கத் தொடங்கினேன். ஆனால், ஆசிரியர் எனது எண்ணத்தைத் தகர்த்துவிட்டார். இதிலுள்ள உருவகக் கதைகள் தளர்வுள்ளனவாக சிறுவர் படித்து புரியத்தக்கனவாக இருக்கின்றன.
கதைகளின் பொது அறிமுகம்
இந்த நூலிலே விலங்குகளும் பறவைகளும்தான் கதாபாத்திரங்கள். அவற்றிலே ஒன்றிரண்டு இடங்களில் மனிதர்களும் வருகிறார்கள். பாவம் மனிதன். அவனுக்கு இங்கே இரண்டாவது இடம்தான். ஆசிரியர் இந்த ‘அநீதி’ யைச்செய்ததற்குக் காரணம், பிற உயிர்களிடத்தில் அவருக்குள்ள பரிவு என்பது முகவுரையிலேயே காட்டப்பட்டிருக்கிறது. மேலும், உருவகக்கதைகளிலே விலங்குகளையும் தாவரங்களையும் கதாபாத்திரங்களாக்குவதில் படைப்பாளிக்கு பல சௌகரியங்கள் உண்டு என்பதை நாம் அறிவோம்.
இந்நூலில் இடம்பெறும் கதைகள் நீளத்தில் குறுகியவை. கூடுதலாக 4-5 பக்கங்கள். உருவகக்கதைகள் நீண்டால் வாசகனுடைய பொறுமையை சோதிக்கும். இந்தச்சூட்சுமம் நூலாசிரியருக்குத் தெரிந்திருக்கிறது. இவருடைய கதைகள் ஒவ்வொன்றினதும் பாத்திரங்களின் எண்ணிக்கையும் அதிகம் அல்ல. மூன்று, நான்கு அல்லது ஐந்து பாத்திரங்கள்தான். ஐந்து கதைகளிலே பாத்திரங்கள் இவ்விரண்டுதான்.
ஆசிரியர் கதைகளுக்கு அருமையான பெயர்கள் சூட்டியிருக்கிறார். கடுகு போலச்சின்னப்பெயர்கள். ஆனால் அவற்றின் காரம் பெரிதாக இருக்கிறது. அந்தப்பெயர்களில் சில: விதி, மூளை, குணம், தனித்துவம், பலம், அடக்கம், ஞானம், சமர்ப்பணம், உழைப்பு, தகுதி, கறை, மனிதர்கள். யாவும் பண்புப்பெயர்கள். உருவகக் கதைகளின் பெயர்கள் இப்படி இருப்பதுவே சிறப்பு.
நயப்பு
இக்கதைகளிலே ஆசிரியர் சொல்லவிரும்புவது என்ன? அது எவ்வாறு முன்வைக்கப்படுகிறது. கதையை எவ்வாறு வளர்த்துச்செல்கிறார், அதிலுள்ள கலைச்சிறப்பு என்ன? கதையின் உள்ளார்ந்த அர்த்தம் என்ன? ஆகிய அம்சங்களை நோக்க முயல்கிறேன். இவற்றையெல்லாம் ஒவ்வொரு கதையிலும் தேடிக்கொண்டிருத்தல் சாத்தியம் அல்ல.
முதற்கதை விதி. இதிலுள்ள பாத்திர வார்ப்பு, உருவக மறைபொருள் என்பவற்றுக்காக இந்தக்கதையை பார்ப்போம். இதில் வரும் சிங்கராஜா இந்திய சமஸ்தானங்களின் முன்னைய அரசர்களை நினைவுக்கு கொண்டு வருகிறது. அதன் சோம்பேறித்தனம் தனது ‘நாட்டை’ (காட்டை) ப்பற்றிய அக்றையின்மை, வரட்டு அதிகாரம்…. இவையெல்லாம் கதையில் வெளிப்படுகின்றன. அமைச்சர்போல வரும் நரியின் சாகசமான பேச்சும் தந்திரமும் யதார்த்தம். கதையிலே நம்நாட்டுச் சமகால அரசியலின் சாயல் வரக்காணுகின்றோம்.
அடுத்ததாக ‘ குணம்’ என்னும் கதை. அமைதியாக இருந்த ஊருக்குள்ளே ஒருவர் ஒரு நாய் வளர்க்கத்தொடங்க, அந்த ஆசை எல்லோருக்கும் உண்டாகி எல்லோரும் நாய்வளர்க்கத்தொடங்கி, ஈற்றில் ஊரே நாய்மயமான நிலையை வெகுசுவைபடச்சொல்கிறார் ஆசிரியர். கதையின் முடிவு உருவகக்கதைக்குத்தக்க எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இக்கதையிலே ஆசிரியரது கதைவார்ப்பு, மொழி ஆளுமை, கருத்தை உணர்த்தும் பாங்கு என்பன வெகுநன்றாகவே பிரகாசிக்கின்றதைக்காண்கின்றோம்.
அதிசிறந்த கதை
இந்நூலில் உள்ள 12 கதைகளிலே விதி, குணம், அடக்கம், ஞானம், மனிதர்கள், உழைப்பு ஆகியவை மற்றைய கதைகளிலும் பார்க்க தரத்திலே மேம்பட்டு விளங்குகின்றன. இவற்றிலே ‘ஞானம்’ சகல அம்சங்களிலும் சிறப்புற்று, உருவகக்கதை என்பதற்குத் தக்க உதாரணமாக இருப்பதைக்காணலாம். ‘அரசமரத்தடிப்பிள்ளையாருக்கு கோவில் கட்டியெழுப்புவதற்கு ஊர்மக்கள் தீர்மானித்தார்கள்’ -என்று, நீச்சல் வீரன் ஒருவன் தடாகத்தில் பாய்வதுபோல திடீரெனக் கதை தொடங்குகிறது. அவனோடு சேர்ந்து நாமும் அந்த நீச்சல்குளத்தில் விழுந்துவிடுகிறோம். கதை வளர்கிறது. அங்கே கோவில் கட்டிட வேலைகளின் துரிதம் தெரிகிறது. அந்த அவசரத்தினிடையே கலசக்கற்களுக்கும் அத்திவாரக்கற்களுக்குமிடையே அந்த உரையாடல் – கருத்துமோதல் ஒலிக்கிறது. அதிலே தற்பெருமை, அகந்தை, அற்பத்தனம், அடக்கம் என்பன வந்துபோகின்றன. அந்தத்தர்க்கத்தின் அர்த்தபுஷ்டி நமது கருத்துக்கு விருந்தாகிறது. இந்தக்கட்டத்தில் அந்த அரசமரத்தைப்பேசவைக்கிறார் ஆசிரியர். அரசமரம் தனது வேர் பற்றிய தத்துவத்தை விளக்கி, “வேரில் தங்கியிருப்பது மரம். அத்திவாரத்தில் தங்கியிருப்பது கட்டிடம்.” என்று சமாதானம் சொல்கிறது. இந்த இடத்திலே அரசமரத்தடிப் பிள்ளையார், “அரசமரமே, நீ வெறும் மரம் அல்ல, ஞானம் நிரம்பிய மரம்.” என்கிறார். இந்த முத்தாய்ப்பு வாசகர்களாகிய நமக்கு ஒரு சிந்தனைப்பொறியை வீசிவிட்டுப்போகிறது.
இக்கதையின் கரு, அதன் சத்தான வளர்ச்சி, விறுவிறுப்பான உரைநடை, அரசமரம், அது சொன்ன தத்துவம் … இவையெல்லாம் சேர்ந்து ஒரு சிறந்த இலக்கிய விருந்தை உண்ட மனநிறைவைத்தருகிறது. ஆசிரியரது கதைகளிலே வரும் உரையாடல்கள் சகஜமானவையாக எளிமையாக இருக்கின்றன. நாங்கள் படிப்பது கதை அல்ல. ஓர் உண்மை நிகழ்வு- என்னும் எண்ணத்தைத்தருகின்றன. நாங்களும் அந்தக்கதாபாத்திரங்களிடையே சேர்ந்துகொள்கின்றோம். கதைப்புனைவிலே இது படைப்பாளிக்கு வெற்றி. இந்தச்சித்திரிப்பு சில இடங்களில் நமது வாசிப்பைத்தடுத்து நிறுத்தி, வாசித்த அந்தப்பகுதியை மீண்டும் வாசித்து நயக்குமாறு தூண்டுகிறது. அப்படிப்படிப்பது மனதுக்கு ஒரு சுகமான இலக்கிய அனுபவமாகிறது.
கதைகளின் கட்டமைப்பு
இந்தக்கதைகளின் தொடக்கங்களில் நயக்கத்தக்க சிறப்பு இருக்கிறது. அவை ஒரே வீச்சில் நம்மை கதைகளிலே ஈர்த்துக்கொள்கின்றன. ‘பாட்டி சொன்ன கதைகள்’ என்னும் நூற் பெயர், மற்றும் இதிலுள்ள கதைகள் யாவும் , ” ஓர் ஊரிலே ஒரு ராசா இருந்தார்” என்னும் பத்தியில்தான் இருக்கும் – என்னும் எண்ணத்தை நமக்குத்தந்தாலும், உண்மை அப்படி இல்லை. இங்கே ஒரு நலமான பாட்டியை – உருவகக்கதை சொல்லும் பாட்டியை முருகபூபதி நமக்குக்காட்டுகிறார்.
கதைகளின் முடிபுகளிலும் இந்தத் ‘திடீர்கள்’ வருகின்றன. அவை அப்படித்தான் வரவேண்டும். தனித்துவம், உழைப்பு முதலான கதைகளில் இந்தச்சித்திரிப்பு லாவண்யம் நன்கு வெளிப்பட்டு நிற்கிறது. இங்குள்ள கதைகளில் வரும் மூன்றாவது பாத்திரம்தான் கதையை முடித்துவைக்கின்றது. இந்த முடிபுகளிலே கதையின் தத்துவம் முதிர்ச்சிபெறக்காண்கிறோம். இந்த இடங்கள் கதைகளுக்கு முடிபு ஆக இருப்பினும் வாசகனது சிந்தனைக்கு அது ஆரம்பமாகின்றது. இது உருவகம் என்னும் சிறுகதை வடிவத்துக்கு உரிய அமைப்பு. அதைத்திறம்பட நிறைவேற்றியிருக்கிறார் ஆசிரியர். முருகபூபதி, சின்னச்சின்ன விடயங்களிலே சாதாரண நிகழ்வுகளிலே ஒவ்வோர் உண்மையைக்காட்டுகிறார். ஒரு தத்துவத்தை முன்வைக்கிறார். இவ்வாறு சின்ன விடயங்களிலேதான் அவர் தத்துவங்களைக்காட்டல் வேண்டும். ஏனெனில், அவர் கதை சொல்வது சிறுவர்களுக்கு. ஆசிரியர் காட்டும் உண்மைகள் சிறுவர்களுக்குப்பொருத்தமான அறிவுறுத்தல்களாக இருக்கின்றன. ஆயினும் இவை அந்த அளவில் நிறைவுபெறுவனவாக தோன்றவில்லை. இவற்றுக்கு மற்றுமொரு பரிமாணமும் இருப்பது தெரிகிறது. இந்த நூலின் கதைகள் சிறுவர் மாத்திரம் அன்றி வளர்ந்தோரும் படிப்பதற்கு ஏற்றவை. ஆகவே, அவர்கள் படிக்கும் போது தத்தமது அறிவுநிலைக்கு ஏற்றவாறு புதிய உண்மை புலப்படும். தத்துவ விரிவு நிகழும் என எதிர்பார்க்கலாம். இவ்வாறு நோக்கும்போது இந்நூலின் கதைகள் சிறுவர் மாத்திரமன்றி வளர்ந்தோரும் படிப்பதற்கு ஏற்றவை- படிக்க வேண்டியவை என்பது நிதர்சனமாகிறது. உருவகக் கதைகள் எனப்பிறக்கின்ற படைப்புகள் பெரும்பாலும் வரட்டு இலக்கியங்களாக இருப்பதைக் காண்கின்றோம். அந்த ஏமாற்றம் முருகபூபதி தந்த இந்த நூலில் இல்லை. இங்குள்ள கதைகளில் இலக்கிய நறுமணம் கமழ்கிறது. வாசகன் விரும்பத்தக்க – நயத்தகு படைப்பு, , இந்த பாட்டி சொன்ன கதைகள்.
[அமரர் தகவம் வ.இராசையாவின் இக்கட்டுரையினை ஒரு பதிவுக்காக அனுப்பி வைத்தவர் முருகபூபதி அவர்கள். – பதிவுகள்]