நூல் அறிமுகம்: அசோகனின் வைத்தியசாலை

நூல் அறிமுகம்: அசோகனின் வைத்தியசாலைஇலக்கியம் என்பது அனுமானம் ,அனுபவம் மற்றும் அவதானிப்பில் பிறக்கிறது என சொல்வார்கள். இலங்கையில் மதவாச்சி என்னும் பிரதேசத்தில் தொழில் நிமித்தம் வாழ்ந்த காலப்பகுதியில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் அவதானிப்பையும் பின்னணியாக வைத்து உருவாகியது எனது முதல் நாவல் வண்ணாத்திக்குளம். இலங்கை அரசியலில் சாதாரண சிங்கள மக்களின் மனங்களில் இனவாதத்தை தூவிய சிங்கள அரசியல்வாதிகளினாலும் – அதேபோல் தமிழ் இளைஞர்களுக்கு உணர்ச்சியூட்டி கொம்பு சீவிய தமிழ் அரசியல்வாதிகளாலும் ஏற்பட்ட இனநெருக்கடிகளை கோடிகாட்டி எழுதப்பட்ட இந்த நாவல்; ஆங்கிலத்திலும் (Butterfly Lake ),சிங்களத்திலும் ( சமணலவௌ) மொழி பெயர்க்கப்பட்டது. நான் பிறந்த நாட்டில் எனக்கிருந்த அபிமானத்தால் வண்ணாத்திக்குளம் நாவல் எழுதப்பட்டதே அல்லாமல், எழுத்தாளராகவோ அல்லது நாவலாசிரியராகவோ வரவேண்டுமென்ற எண்ணத்தில் நான் அந்த நாவலை எழுதவில்லை. அதன் பின்னர் அவுஸ்திரேலியா நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் நான் பணியாற்றிய மேற்கு சிட்னி பல்கலைக்கழகத்தின் பின்புலத்தில் எழுதிய நாவல் உனையே மயல்கொண்டு. பெண்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த பின்பும் ஏற்கனவே அவர்கள் தமது தாயகத்தில் எதிர்கொண்ட வன்செயலின் பாதிப்புகள் எப்படி தொடர்கிறது என்பதை உளவியல் ரீதியாக சித்திரிக்கும் முயற்சிதான் உனையே மயல்கொண்டு என்ற எனது இரண்டாவது நாவல். குறிப்பிட்ட இரண்டு நாவல்களும் இலங்கைப் பிரச்சினைகளைக் கருவாகக் கொண்டவை. மூன்றாவது நாவலான அசோகனின் வைத்தியசாலை எனது புகலிட வாழ்வில் முக்கிய பகுதியான – சுமார் ஆறுவருடங்கள் மிருகவைத்தியராக தொழில்புரிந்த மெல்பன் வைத்தியசாலையொன்றின் பின்னணியில் புனையப்பட்டது.

இந்த வைத்தியசாலையில் எனக்கேற்பட்ட பல அனுபவங்கள் – அங்கிருந்த செல்லப்பிராணிகளோடு தொடர்புடைய சம்பவங்கள் எனது வாழும் சுவடுகளில் தொகுப்பில் பதிவாகிவிட்டன. எனினும் அசோகனின் வைத்தியசாலை – அங்கு என்னோடு தொழில்புரிந்த மனிதர்களையும் அவர்களின் செய்கைகளையும் பார்த்துப் பெற்ற நேரடி அனுபவங்களிலிருந்தும் அவற்றின் அகப்பின்னணிகளை புரிந்து கொள்ளும் முயற்சியிலும் உருவானது.

இலங்கை – இந்திய கலாச்சார பின்னணியில் இருந்து வந்து புதிய கலாச்சாரம் ஒன்றில் தனித்து விடும்போது – நுண்மையான அவதானிப்புகள் கொண்ட ஒருவனுக்கு இந்த வைத்தியசாலை ஒரு காட்சிச்சாலையாக அல்லது சுயவிசாரணைக்குத்தள்ளிவிடும் பரிசோதனைக்கூடமாகவோ மாறிவிடுகிறது. அதனால் பெற்ற அவதானிப்பும் மற்றும் அனுபவமும் உந்தியதனால் உருவான புனைவுதான் அசோகனின் வைத்தியசாலை.

உலகத்தின் பெரும் நாவல் இலக்கியங்கள் கதாநாயகன் வெளியிடம் செல்வதையோ அல்லது அன்னியன் புதிய இடத்திற்கு வருவதையோதான் கருப்பொருளாக கொண்டிருக்கின்றன. ஹோமரின் ஓடிசியில் இருந்து இராமரது பயணத்துடன் தொடங்கும் இராமாயணமும் இந்தக் கருப்பொருளில் இருந்து உருவாகி – இதிகாசம் ,கற்பனைவாதம், மொடனிசம், போஸ்ட் மொடனிசம் எனக் காலங்களைக் கடந்து பயணித்து வருகிறது.

அசோகனின் வைத்தியசாலையின் கருப்பொருளில் நாயகன் வெளி செல்வதோ அன்னியனாக புதிய இடத்துக்கு வருவதோ என்ற புரிதல் வாசகர்களை சார்ந்தவிடயம் என்பதாக இந்த நாவல் அமைந்துள்ளது.

வழமையான கருப்பொருளைக் கடந்த மனச்சாட்சி என்பது என்ன? அது எப்படி உருவாகிறது என்று பலகாலமாக இருந்த எனது கேள்வி இந்தக் நாவலில் ஆன்மாவாக ஊடுருவுகிறது. இதை மெதுவாக எழுத்தாளர் ஜெயமோகன் தொட்டுச் சென்றாலும் நான் சிறிது விளக்க விரும்புகிறேன். நிக்கலஸ் ஹம்பிரி (Nicholas Humphrey) என்ற பிரித்தானிய உளவியலாளர் மனச்சாட்சி என்று நாம் அழைக்கும் (Consciousness) என்பது உருவாகும் விதத்தை விளக்கியது என்னை மிகவும் கவர்ந்தது.

‘நாங்கள் உருவாக்கிய அரங்கத்தில் நடத்தப்படும் ஒரு விந்தையான நாடகமே மனச்சாட்சி’ என்கிறார்.

Consciousness is a magical mystery show that you lay on yourself and you respond to sensory input by creating a personal response.

.எம்மைச் சுற்றி உள்ள விடயங்களைப் பார்ப்பதாலும் ,கேட்பதாலும் எமக்கு உருவாகும் மனப்பதிவு இந்த மனச்சாட்சி. இக்கால மொழியில் புரோக்கிராம் பண்ணுப்பட்ட கணினியின் மென்பொருள் போன்றது. அப்படியானால் பிறவியிலேயே ஊமையாகவும் குருடாகவும் இருக்கும் ஒருவனுக்கு மனச்சாட்சி உருவாகாதா? மேலும் மனநோயால் பாதிக்கப்பட்டவர்களது நிலை என்ன? அவர்கள் மனச்சாட்சி இல்லாதவர்களா? என எழுப்பிய கேள்விகளின் விளைவுதான் வைத்தியசாலையில் வளரும் கொலிங்வூட் என்ற பூனை.

இந்தப் பூனையின் மனச்சாட்சி அந்த வைத்தியசாலையில் உள்ள மனிதர்களின் சிந்தனை,செயல், பேச்சு என்பதற்கு அமைய உருவாகிறது. அந்தப் பூனை பேசும் போது எப்படி இருக்கும்? அதனது நடத்தையில் எப்படியான அற உணர்வு தெரியும் என்பனவற்றின் அனுமானம் அந்த வைத்தியசாலைக்குரிய அறம் சார்ந்த யதார்த்தமாக (Moral realism)) இந்த கதையில் சொல்லப்பட்டுள்ளது.

இலக்கியம், அறிவுரை முடிவுகளைத் தரக்கூடாது என்பதால் – அவைகள் முடிவுகள் அல்ல: கேள்விகள் மட்டுமே.

மனிதர்களின் உடல் இயக்கம் நின்ற பின்பு ஆன்மா வெளியேறுவதாக நினைக்கிறோம். அந்தச் சிந்தனை மனிதர்களுக்கு எப்படி வந்தது?

கனவுகளில் மனிதர்கள் வெளியிடங்களுக்கு ஏன் வேறு உலகத்திற்கே செல்கிறர்களே! இதனது விளைவுதான் உடலை விட்டு வெளியேறும் ஆன்மா என்ற சிந்தனையின் வரலாறா?

அப்படியென்றால் மனிதர்கள் மரணத்திற்கு பயப்படுவதும் காலம் காலமாக மரணத்தை தள்ளிப் போடுவதற்கான ஒரு முயற்சிதான் மனிதர்களிடம் தெய்வத்தைப் பற்றிய சிந்தனையை உருவாக்கியதா?

நிக்கலஸ் ஹம்ரியின் கூற்றான மனச்சாட்சி என்பது மனிதர்கள் தங்களை பாதுகாத்து வாழ்வதற்கான உணர்வேயாகும.அந்த உணர்வில் உருவாகிய ஆன்மீக உணர்வில் இருந்துதான் ஒட்டுண்ணியாக தெய்வ நம்பிக்கையும் பின்பு மத உணர்வுகளும் எக்காலத்திலும் வாழ்ந்து வருகிறது என்ற கூற்றில் எவ்வளவு உண்மை உள்ளது?

தற்போது அந்த மத உணர்வுகள் தெய்வ நம்பிக்கைள் உருவாக்கிய மனச்சாட்சிகள் தற்காலத்து மனிதர்களது செயல்களை மட்டுமல்ல இனக்கூட்டங்களினதும் அரசுகளினதும் நடவடிக்கைகளை தீர்மானிக்கிறதே.

இந்தக் கேள்விகளுடன் கதைசொல்லியும் அவனுடன் சுந்தரம்பிள்ளையும் மற்றும் கொலிங்வூட் என்ற பூனையும் வலம் வருவதுதான் இந்த அசோகனின் வைத்தியசாலை நாவலில் உள்ள ஆன்மா. வைத்தியசாலையில் நடைபெறும் சாம பேத குரோதம் இந்த நாவலின் உடலாகிறது புலம் பெயர்ந்த கலாச்சாரத்தின் மொத்தப்பதிவு என்பதால் தமிழில் தொடக்க முயற்சி. ஆனால் வெற்றியா தோல்வியா என்பது இதை வாசிப்பவர்கள் சொல்லவேண்டியது.

இந்நாவலை படுக்கையில் இருந்தபடி ஆயிரம் இரவுகளில் மின்விளக்கைப் போட்டு எழுதும்போது என்னை அனுசரித்துச் சென்ற எனது மனைவி சியாமளாவுக்கும், எழுத்துப் பிழைகளைத் திருத்திய எழுத்தாளர் முருகபூபதிக்கும், இந்த நாவல் எனது இணையத்தில் வந்தபோது வாசித்து தனது எண்ணத்தை எழுதி இதை வெளியிட துணை செய்த கவிஞர் கருணாகரன், மற்றும் அறிமுகவுரை எழுதிய எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோருக்கும் மேலும் இணையத்தில் தொடர்ந்து வாசித்து விட்டு உற்சாகம் தந்த தமிழ்நாட்டு எழுத்தாளர் சுப்பிரபாரதிமணியன், இந்த நாவலை பதிவுகள் இணையத்தளத்தில் வெளியிட்ட எழுத்தாளர்  வ.ந. கிரிதரன் இதை வெளியிட முன்வந்த அடையாளம் பதிப்பகத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

uthayam@optusnet.com.au