நூல் அறிமுகம் – சுஜாதாவின் வெள்ளி விழா முன்னுரை: சுப்ரபாரதிமணியனின் “ அப்பா “ ’’ : சிறுகதைத் தொகுப்பிற்கு ( 1987) சுஜாதா எழுதியது

சுஜாதாவின் வெள்ளி விழா முன்னுரை: சுப்ரபாரதிமணியனின் “ அப்பா “  ’’ :  சிறுகதைத் தொகுப்பிற்கு ( 1987)  சுஜாதா எழுதியதுசுதந்திரத்திற்குப் பின் பிறந்தவர்கள் தமிழில் இன்று எழுதும் சிறுகதைகளில் லேசான சோகம், லேசான அவநம்பிக்கை, சிறுகதை வடிவத்தைப் பற்றிய அக்கறையின்மை இவை மூன்றும் இருப்பதைப் பார்க்கிறேன். தமிழில் இலக்கியத் தரமான சிறுகதைகள் இன்று சிறுபத்திரிகைகளில் தான் எழுதப்படுகின்றன என்று சொல்பவர்கள் உண்டு. சில வயசான எழுத்தாளர்கள். நான் எழுதினதுக்கு பிற்பாடு நல்ல கதைகள் நின்றுவிட்டன. தமிழ்ச் சிறுகதை உலகம் எப்படித்தான் பிழைக்கப்போகிறதோ என்று கவலைப்பட்டுக் கொண்டு பல்செட்டை கழற்றி வைக்கிறார்கள். சில ஜாம்பவான்களும் சாம்ராட்டுகளும் நான் எழுதுவதுதான் இலக்கியம் மற்றதெல்லாம் ஊதுவத்தி வியாபாரம் என்கிறார்கள். இந்த வகை அதீத அபிப்பிராயங்கள் எல்லாம் எந்த இலக்கிய சூழ்நிலையிலும் ஒரு காசு பெறாது. இவைகளுக்குக் காரணங்கள் ஒரு புறம் பொறாமை, மற்றொரு புறம் இயலாமை. இவைகளையெல்லாம் நீக்கி விட்டு ஆரோக்கியமாக இன்றைய தமிழ்ச் சிறுகதை உலகைப் பார்த்தால் நம்பிக்கை பிறக்கக்கூடிய தரமான பல கதைகள் இன்றைய காலகட்டத்தில் எழுதப்படுகின்றன. இளைஞர்கள் தத்தம் புதிய புதிய கவலைகளையும் புதிய மன ஓட்டங்களையும் செதுக்கி வைத்தாற்போல வார்த்தைகளில் அவ்வப்போது எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் சிறு பத்திரிகைகளில்தான் எழுதுகிறார்கள். சிலர் பெரிய பத்திரிகைகளிலும் அனுமதி பெறுகிறார்கள்.

 பலர் சொந்தமாகவே கைக்காசை செலவழித்து அழகான புத்தக வடிவில் வெளிவருகிறார்கள். இந்த வகையில் தமிழில் வருஷத்துக்கு நாம் முன் சொன்ன கிழச்சிங்கங்களின் கவலையை மதிக்காது பத்துப் பன்னிரண்டு நல்ல கதைகள் தேறுகின்றன.

 இவ்வாறு நல்ல கதைகள் எழுதும் இவர்கள் பெரும்பாலோர் கவிதையிலிருந்து சிறுகதைக்கு வந்திருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பலர் இன்னமும் கவிதையும் எழுதுகிறார்கள் (சிலர் அதே பெயரில் சிலர் புனை பெயரில்) சிலர் சித்திரங்கள் வரைகிறார்கள். சிலர் வண்ண ஓவியங்கள். இப்படி இவர்கள் தத்தம் உள்ளங்களை வெளிப்படுத்த அவ்வப்போது கிடைக்கும் சந்தர்ப்பங்களையும் சாதனங்களையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த வகையில் சுப்ரபாரதிமணியனும் கவிதைகளும் கதைகளும் எழுதுகிறார். இந்த இரட்டை வேடத்தில் சிரமங்களும் சௌகரியங்களும் இருக்கின்றன. கவிதை மனமும் ஒரு கவிஞனின் உன்னிப்பான பார்வையும் சிறுகதைக்கு மிகவும் உதவும். அதே சமயம் சிறுகதை வடிவமும் கவிதை வடிவமும் வேறு வேறு. அதனால் சிறுகதையல்லாததையெல்லாம் சிறுகதை என்று ஆள்மாறாட்டம் செய்யக்கூடிய அபாயங்கள் கவிஞர்கள் எழுதும் சிறுகதைகளுக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

 நான் மேலே சொன்ன இரண்டு வகைக்கும் சுப்ரபாரதிமணியனின் இந்த தொகுப்பிலிருந்து உதாரணங்கள் காட்டி விளக்குமுன் சிறுகதை பற்றிய செய்திகள்:

 சிறுகதைக்கு மேற்கத்திய இலக்கியத்தில் முக்கியத்துவம் குறைந்து கொண்டு வருவதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். முதல் காரணம் எல்லாக் கதைகளும் எழுதப்பட்டு விட்டன. இனிமேல் புதுசாக சாத்தியக் கூறுகளை ஆராயவேண்டுமெனில் விஞ்ஞான கதைகளில்தான் முடியும் என்று ஒரு சித்தாந்தம் உண்டு.

 தலையணை நாவல்கள் லட்சக்கணக்கில் விற்க சிறுகதைத் தொகுதிகள் மேலைநாட்டில் விற்காததற்கு காரணம் என்னவென்று அவர்கள் கண்டுபிடிக்கவேயில்லை. இருப்பினும் சிறுகதை இலக்கியம் மறுகிக் கொண்டிருப்பது நிஜமே.

 தமிழில் அந்த நிலைமை இன்னும் வரவில்லை. தமிழ் வார மாதப் பத்திரிகைகளில் பெரும் அளவு சிறுகதைகளைப் பதிப்பித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். (அவைகளின் தரம் பற்றி நாம் இப்போது பேசவில்லை.) எண்ணிக்கையில் தமிழில் இப்போது சிறுகதைகள் நிறையவே எழுதப்படுகின்றன. ஆனால் நாவல்கள், கவிதைத் தொகுப்புக்கள் வெளிவரும் அளவுக்கு சிறுகதைத் தொகுப்புக்கள் வெளிவருவதில்லை. இதற்கு காரணம் பதிப்பாளர்கள் சிறுகதைத் தொகுப்புக்கள் அதிகம் விலைபோவதில்லை என்கிறார்கள். இரண்டு பாகம் மூன்று பாகம் என்று ஆயிரக்கணக்கில் பக்கங்கள் கொண்ட உறையூர் ஒற்றர்களைக் கொண்ட சரித்திர நாவல்களை எழுபத்தைந்து ரூபாய் கொடுத்து வாங்கத் தயாராக இருப்பவர்கள் சிறுகதைத் தொகுப்புக்களுக்கு ஆதரவு தராதது தமிழ் நாட்டின் எத்தனையோ சோகங்களில் ஒன்று.

 இதனால் மனசிழந்த நல்ல சிறுகதை எழுத்தாளர்கள் கவிதைக்குத் தாவி விட்டார்களோ என்று எனக்கு சந்தேகம் வருகிறது.

 நம்பிக்கை இழக்காமல் சுப்ரபாரதிமணியன் போன்றவர்கள் விடாப்பிடியாக சிறுகதை எழுதிக்கொண்டிருப்பதை உற்சாகப்படுத்த வேண்டும்.

 ஆரோக்கியமான சிறுகதைகளுக்கு வருவோம். கவிதையிலிருந்து சிறுகதைகளுக்கு வருவதில் உள்ள அவஸ்தைகளையும் ஆனந்தங்களையும் பற்றி சற்று முன் சொன்னேன். உதாரணங்கள் பார்க்கலாம்.

 தமிழில் புதுக்கவிதையின் பல வடிவங்களில் நினைவூட்டும் (Evocative) வகை கவிதைகள்தான் சிறுகதைகளுக்கு அருகே உள்ளன. இந்த வகை கவிதைகளை எல்லாப் புதுக்கவிஞர்களும் எழுதியிருக்கிறார்கள். இரண்டு பேரை உதாரணம் காட்ட விரும்புகிறேன். கலாப்ரியா, கல்யாண்ஜி.

 “ராத்திரியே மார்ஜின் போட்டு
 கடவுள் துணை
 பெயர் வகுப்பு பிரிவு
 எழுதி வைத்த
 பரீட்சை பேப்பருடன்
 எதிர்ப்படும்
 கோயிலிலெல்லாம்
 திருநீறெடுத்து
 ஜியாமெட்ரிபாக்ஸில்
 போட்டுப் போவேன்.”

 “போஸ்ட்மேன் வருகிற
 நடுப்பகல்த் தெருவுக்கு
 அதேயொரு தனிமையுண்டு
 அதே விபசாரப்பெண்
 கோர்ட்டில் கூண்டேறி
 புதுப் பேருக்கு
 அபராதம் செலுத்திவிட்டு
 மாமாவுடன்
 அடிவயிற்று வலியுடன்
 வீடு திரும்புவாள்.
 உச்சி வெயிலில்
 மந்த தகனமாகும்
 தும்பைச் செடியின்
 அதே வாசனை
 நாசி நெருடுகையில்
 போஸ்ட் மேன்
 கைவிரித்துப் போவான்”

இந்தக் கவிதையை சற்றே யோசித்துப் பாருங்கள். இது உங்கள் மனத்தில் ஏற்படுத்தும் வடிவங்கள் என்ன? யார் அந்த பெண்? யார் அந்த போஸ்ட்மேன்? அந்த ஜியாமெட்ரி பாக்ஸ் பையன் ஒரு வேளை நீங்களா?

 உங்கள் மனதில் நீங்கள் பார்த்த போஸ்ட்மேனும் நீங்கள் பார்த்த விபசாரியும் நினைவுக்கு வருகிறதல்லவா, இதைத்தான் நான் ‘இவொக்கேஷன்’ என்கிறேன்.

 கல்யாண்ஜியைப் பார்க்கலாம்.
 “வாகன உதிரிகள்
 கையில் கனக்க
 படித்த ஹைஸ்கூலில்
 நடக்கிற வாலிபால்
 போட்டியை
 காம்பவுண்டுக்கு வெளியே
 கரியும் காக்கியுமான உடுப்புடன் ரசிக்கிற
 ஒர்க்ஷாப் இளைஞன்.”

இந்த வரிகளே லேசாக ஒரு கதை சொல்ல ஆரம்பிக்கின்றன. ஆனால் இதை ரசிக்க முக்கியமாக நீங்கள் உங்கள் ஊரில் இளமையில் காம்பவுண்டு சுவரிலிருந்து வாலிபாலோ புட்பாலோ பார்த்திருக்க வேண்டும். கரியும் காக்கியுமான ஸ்பேர்பார்ட் இளைஞர்களையும் கவனித்திருக்க வேண்டும். இந்த பிம்பங்களையெல்லாம் நம் மனதில் மீண்டும் எழுப்ப இந்த வரிகள் உதவுகின்றன.

 சில சமயம் கவிதை முழுக்கதையும் சொல்லிவிடுவதுண்டு. மறுபடியும் கல்யாண்ஜி:

 “பிச்சையெடுக்க
 கையை உயர்த்தின
 ஊமைப் பையனை
 வேலையில் சேர்த்து
 அளவில் பெரிய
 பழைய பனியனை
 அவனுக்கு மாட்டி
 ஏவிமேய்த்து
 சந்தோஷப்படுகிற
 டீக்கடை பாய்”

இது ஏறக்குறைய கதையே சொன்னாலும் இவொக்கேஷன் என்பது தொள தொள பனியனில் நான் பார்த்த குழந்தைகளால் எனக்குக் கிடைக்கிறது.

 எனவே இவ்வகை கவிதைகளுக்கும் கதை வடிவத்துக்கும் கொஞ்சம் குழப்பமும் மயக்கமும் ஏற்படுவது சாத்தியமே. அதுவும் கவிஞரே கதை எழுதும் போது பின்னோக்கில் Nostaigia என்று சொல்வார்களே பழைய ஆதங்க நினைவுகளை வடித்தெடுப்பதில் இந்த வகை கவிதைகள் மிகவும் பிரசித்தம். கவிஞரின் ஆதங்கங்கள் கவிதை படிப்பவனின் ஆதங்கங்களைத் தூண்டி விடுகின்றன.

 இதே வகையில் சிறுகதையிலும் இன்று பலர் ஆதங்கங்களையும் நினைவுகளையும் சொல்லி வருகிறார்கள்.

 “அப்பாவுக்கு ஆட்டுத் தலைக்கறி பிடிக்கும். தலை வாங்க வரும்போது மொகிதின் சொல்லி வைத்த மாதிரி ஆட்டுக் கால்களையும் தருவார். தீயில் கருக்கின பின்பு ஆட்டுக்கால்களை கழுவி கயிற்றில் கோர்த்து சமையற்கட்டில் அப்பா தொங்க விடுவார்.”

 இந்த வரிகளுக்கும் நாம் முன்பு உதாரணம் காட்டிய கவிதை வரிகளுக்கும் ஒற்றுமையை கவனியுங்கள். இரண்டுக்கும் நோக்கம் ஒன்றே. கவிதை வரிகள் போஸ்ட் மேனையும் கடித எதிர்பார்ப்புக்களையும் டீக்கடை பாய்களையும் நினைவுபடுத்துகின்றன. கதையின் மேற்கோள் வரிகள் சின்ன வயசில் கசாப்புக்கடைக்குச் சென்று ஆட்டுக்காலும் தலையும் தின்றவர்களுக்கு ஒருவிதமான அன்னியோன்னியத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

 மனதில் பிம்பங்களை ஏற்படுத்தும் முயற்சி நவீன தமிழ்ச் சிறுகதைகளுக்கும் கவிதைகளுக்கும் பொதுவாக இருப்பதை நான் கவனிக்கிறேன்.

 கேள்வி: இந்த பிம்பங்களை எழுப்பினால் போதுமா, அது சிறுகதையாகிவிடுமா?

 நான் மேற்சொன்ன ஆட்டுத்தலை உதாரணம் சுப்ரபாரதிமணியனின் ‘ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்’ என்ற சிறுகதையிலிருந்து எடுத்தது. இந்தக் கதை, வடிவத்தில் சிறுகதை தானா என்று ஆராய்வதற்கு முன் இந்தத் தொகுதியிலிருந்து மற்றொரு கதை ‘இன்னொரு முறை மௌனம்’ என்கிற கதையையும் எடுத்துக் கொள்வோம்.

 இரண்டுமே வடிவமைப்பில் ஒரே வகைதான். முதல் கதை சொல்பவன் தன் அப்பாவின் ஆட்டுக்கறி சம்பவங்களை நினைவுபடுத்திக் கொள்கிறான். பின்னதில் கதை சொல்பவன் தன் நண்பனுடன் ஒண்டிக் குடித்தனம் இருந்தபோது எதிர்த்த போர்ஷனில் பார்த்த ஆந்திரப் பெண்ணை நினைவுபடுத்திக் கொள்கிறான்.

 இரண்டுமே ஒரு கையாலாகாத பார்வையாளன் கோணத்திலிருந்து கதையின் சம்பவங்கள் நடந்துபோன பின்னோக்காக சொல்லப்படுபவை. இதில் பின்னது சிறுகதை. முன்னது சிறுகதையல்ல.

 ஏன் என்று சொல்கிறேன்.

 இப்போது சிறுகதை வடிவம் என்ற ஒரு புகையான சமாசாரம் வருகிறது.

 வெறும் ஞாபகங்கள் மட்டும் சிறுகதையல்ல. ஜானகி ராமனின் சிறுகதைகள் சிலவற்றில் குறிப்பாக பிற்கால சிறுகதைகளில் இந்த மயக்கம் ஏற்படும்.

 ராஜகுமாரி கதையில் அப்பா ஆட்டுக்கறி தின்னும் நுணுக்கமான விவரங்கள் சொல்லப்படுகின்றன.

 மௌனம் கதையில் ஆந்திரப் பெண்ணின் உள்பாவாடை வரை விவரமாகச் சொல்லப்படுகின்றன.

 இருந்தும் முன்னதில் கதை வடிவம் இல்லை. பின்னதில் கதை வடிவம் இருக்கிறது.

 இரண்டு கதைகளும், ஏன் சுப்ரபாரதிமணியனின் பெரும்பாலான கதைகள் இந்த வடிவத்தைப் பெற்றிருக்கின்றன. சிறுவயதில், அல்லது சமீபத்திய இறந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களை அல்லது சந்தித்த கதாபாத்திரத்தைப் பற்றி நினைவு கூர்வது அது மோர்க்காரியாக இருக்கலாம், ஆந்திரப் பெண்ணாக இருக்கலாம் அல்லது கதாசிரியரின் அப்பாவாக இருக்கலாம். எப்படியும் கடந்த காலத்து சம்பவத் தொடர்ச்சிகளை உன்னிப்பாக கவனித்த ஒருவன் மிக நுணுக்கமாக நினைவு கூர்வது இந்தக் கதைகளின் பொது அம்சமாகப் பார்க்கிறேன்.

 கிறிஸ்மஸ் தினத்தன்று கறிக்குழம்பும், முந்தின நாள் செய்து வைத்த மீன் குழம்பின் மிச்சமோ காலை பத்துமணிக்கு கண்ணெரிச்சலால் வரும் தூக்கமோ இத்தனை விவரங்கள் தேவைதானா இது கதையா கட்டுரையா பட்டியலா என்று வியக்கவைக்கும் அளவுக்கு அலுப்புத் தரும் விவரங்கள் தரும் பழக்கத்தை தற்கால இளம் எழுத்தாளர்களிடம் மிகுதியாகப் பார்க்கிறேன்.

 இதை (Catalogueing) காடலாகிங் என்று சொல்வார்கள். அமெரிக்க இலக்கியத்தின் ஜேடி சாலிங்கர் இவ்வகை பட்டியலிடுவதில் பிரியர். ஒரு அலமாரியைத் திறந்தால் அதில் உள்ள அத்தனை பொருட்களையும் பட்டியலிட்டு விட்டுத்தான் மேலே கதை நகரும். இந்த ரீதியில் சுப்ரபாரதிமணியனின் கதைகளில் தேவைக்கு அதிகமாகவே விவரங்கள் தென்படுகின்றன.

 “இரண்டாவது உள் அறையில் சமையலுக்கென்று ஒரு பிரிவு ஒதுக்கப்பட்டிருக்கும். மாடியில் பொதுவாக பாத்ரூம் என்று தனியாக இருப்பினும் லெட்ரினுக்கென்று கீழேதான் போகவேண்டியிருக்கும். கீழே படிகளைக் கடப்பதற்கு முன் சீதா வீட்டு ஜன்னல் திறந்து கிடக்கும். லேசான வெளி வெளிச்சம் உள்ளே அடையாளம் காட்டும். உள் சமையல் அறையில் சீதா படுத்திருப்பதும் வெளி அறையில் பத்மா கணவனுடன் படுத்திருப்பதும் கண்ணில்படும்.”

 பத்மா எந்த அறையில் படுத்திருந்தால் என்ன என்று கேட்பவர்களுக்கு ஆச்சரியகரமாக ஒரு விஷயம் சொல்லப் போகிறேன். இந்தக் கதைக்கு இத்தனை நுட்பமான விவரம் தேவைதான். ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் என்ற கதைக்கு தேவையில்லை! ருசியான கறி சாப்பிடுவதைப்பற்றி ஆரம்பித்து இந்தக் கதை சேக் மொகிதீனிடம் அப்பா மட்டன் வாங்க வரும் ஞாபகத்திற்கு தாவுகிறது அங்கிருந்து, அம்மா அடுத்தபாராவில் சந்தனமாய் மிளகு அரைக்கிறாள்.

 அடுத்ததற்கு அடுத்த பாராவில் சின்ன வாணலியில் மிளகும் உப்பும் சேர்ந்து வாங்கி வந்த ஆட்டுத்தலை கறியாகும் பக்குவம். இப்படி ஆற அமர அவசரமே இல்லாமல் இரண்டு பக்கம் கழித்து கோழித்தலைக்கு பழனிவேலுவுடன் சண்டை என்று முதல் சம்பவம் வருகிறது. அதற்கப்புறம் அம்மா கோழிக்கறி சமைப்பதில்லை. கோவிந்தராஜ மாமாவை கல்யாணம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டும் என்று ஆதங்கத்தை தெரிவிக்கிறாள். அம்மாவின் புதைந்த ஆசை ஒன்று வெளிப்பட அந்த ஆசை தொடர்பாக கற்பனை சாத்தியக் கூறுகளுடன் கதை முடிகிறது.

 இந்தக் கதையில் சிறுகதை வடிவம் இருக்கிறதா என்று தீர்மானிப்பதற்கு முன் சிறுகதை வடிவம் என்று நான் எதைச் சொல்கிறேன் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

 எந்தக் கதைக்கும் இந்த மாதிரி விவரங்கள், சூழ்நிலை வர்ணனைகள், பாத்திரப் படைப்புக்கள் எல்லாம் தேவைதான், எதற்கு? அந்தக் கதை மூலம் மனிதர்களுடன் மனிதர்கள் பழகுவதில் உள்ள முரண்பாட்டையோ மேம்பாட்டையோ சொல்வதற்கு. தேவைப்பட்டால்தான் அவைகளுக்கு இடம் அளிக்க வேண்டும் இல்லையெனில் கோழிக்கறி சமைப்பதைப்பற்றியோ சின்ன வெங்காயம் நறுக்குவதைப்பற்றியோ ஒரு கட்டுரை எழுதிவிட்டு போகலாம். ராஜகுமாரிக்கதையில் தலைப்பிலிருந்து கடைசிவரை மறைமுகமாக வெளிப்படுத்த வேண்டிய ஒரு விஷயம் மனசுக்குள் பொதிந்திருந்த ஆசை. அதை கடைசிப் பாராவில் வெளிப்படுத்த இத்தனை விவரங்கள் தேவை இல்லை என்று சொல்வேன் அதே போலத்தான், “சிலவேறு தினங்களில்” என்கிற கதையில் கதை சொல்பவரின் அப்பாவுக்கு கோழிச்சண்டையில் இருந்த பிடிவாதமான ஈடுபாட்டை விஸ்தாரமாக சொல்லி அதனால் அவர் குடும்பப் பொறுப்பு இல்லாமல் திரிந்த விவரங்களையும் சொல்லி தாத்தா இறந்து போனதும் பொறுப்பேற்றுக் கொள்ளாமல் கோழிச்சண்டைக்குப் போவதற்கு பட்சி சாஸ்திரத்தை தேடும்போது அம்மா இதுநாள் வரை படிந்திருந்தவள் ஒரு முதல் எதிர்ப்பாக அந்த புத்தகத்தை எரித்துவிட்ட செய்தி அறிந்து அவளை அடிக்கப்போன கையோடு ஞானோதயம் பெற்று எல்லாவற்றையும் விட்டு ஒழிக்கிறார்.

 இந்த கதைக்கும் ராஜகுமாரி கதைக்கும் ஒற்றுமையான விஷயங்கள் என்ன? ஒரு இந்திய மனைவியின் மௌனமான வாழ்க்கை. என்றாவது ஒருநாள் அவள் தன் எதிர்ப்பையோ ஆதங்கத்தையோ ஆசையையோ தெரிவிப்பது. இதை இன்னும் கொஞ்சம் சிக்கனமாக காட்டியிருக்கலாமே. கோழிச் சண்டையைப் பற்றியும் ஆட்டுக்கறி சமைப்பதைப் பற்றியும் தனக்கு நினைவிருக்கும் அத்தனை சங்கதிகளையும் சொல்லும் போது கதாசிரியர் சிறுகதை வடிவத்தை கோட்டை விடுகிறார்.

 வடிவம் உத்தமமாக அமைந்திருக்கும் கதைகளும் இந்த தொகுதியில் உள்ளன. “இன்னொரு முறை மௌனம்” என்ற கதை இதற்கு முதன்மையான உதாரணம். இதிலும் ஒரு பெண்ணின் அவலம்தான் கதை மையம். சற்று தூரத்திலிருந்து மாடியில் மூன்று போர்ஷன்களில் ஒரு போர்ஷனில் வசிக்கும் ஒரு பிரம்மசாரியின் கோணத்திலிருந்து முதல் போர்ஷனுக்கு குடி வந்திருக்கும் ஒரு குடும்பத்தைப்பற்றிய அன்றாட விவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சொல்லப்படுகின்றன. இந்தக் கதையிலும் மற்ற இரண்டு கதைகள் போல நிறையவே விவரங்கள் இருந்தாலும் அத்தனை விவரங்களும் கதையின் மையக்கவலைக்கு ஏதோ ஒரு விதத்தில் செறிவூட்டுகின்றன. மெல்ல மெல்ல அந்த குடும்பம், அதன் உறவு விவரங்கள் வெளிப்படுகின்றன. இயல்பாக ஏதோ ஒரு பிறப்புபோல ஒவ்வொன்றாக ஒரு கோட்டுச் சித்திரம் மெல்ல மெல்ல வண்ணங்கள் நிரப்பப்பட்டு… முழு ஓவியமாவதுபோல கணவன் மனைவி கணவனின் தங்கை சீதா இப்போது சீதாவின் மேல் கதையின் கவனம் அதிகமாக அவளுடைய சுபாவம், பார்வையில் தாபம், அவளுடன் பேசமுடியாத தெலுங்கு, அவள் துவைக்கும் துணிகள் என்று மேலும் மேலும் அந்த பிம்பம் தீட்டப்படுகிறது. சீதாவின் மேல் ஏற்படும் ஒரு மாதிரியான ஆசைக்கு நம் பிரதிநிதியாக கதை சொல்லுபவன் ஏற்றுக் கொள்கிறான்.

 “தண்ணீர் பிடிக்கிறபோதும் பக்கெட்டைக் கொடுக்கிற போதும் பிற பொருட்களைத் தருகிறபோதும் அவள் கைபடுவதும் ஆடை விஷயத்தில் அசிரத்தையும் எங்கள் அறைப்பக்கமிருக்கும் பாத்ரூமிலிருந்து குலைந்த ஆடைகளுடன் வெளியாவதும் பற்றி தான் கவனித்திருப்பதாய் திருநாத் ஒரு முறை சொன்னான். இது எனக்கே ஆனது என்று மனசுள் வைத்திருந்தேன். இது பொதுவான விஷயமாகப் போய்விட்டது வருத்தமாக இருந்தது.”

 இவ்வாறு மென்மையான எண்ணத் தீற்றல்களை வெளிப்படுத்தி சீதாவின் கதை பையனின் கோணத்திலிருந்து. விலகாமல் திறமையாகச் செல்கிறது. இளம் அண்ணனும், மனைவியும் அத்தனை அருகில் படுத்திருக்கும் போது அருகே இருட்டில் விழித்திருக்கும் திருமணமாகாத பெண்ணின் உள்ளக் கவலைகளை அந்த அறையில் நுழையாமலேயே நம்மால் உணர முடிகிறது.

 சீதாவின் சகோதரன் இறந்துபோய் பத்மா விதவையாகி தம்பி ராமகிருஷ்ணன் வந்து அவர்களை ஜுடிமேட்லாவுக்கு அழைத்துப் போனதும் அவர்கள் நம் பார்வையிலிருந்து விலகுகிறார்கள். அகஸ்மாத்தாக சில மாதங்கள் கழித்து சீதாவை சந்திக்கும்போது அவள் மற்றொரு சகோதரனுடன் முன் மாதிரியே கல்யாண நம்பிக்கையே இல்லாத இன்னம் இளைத்துப் போய் அழகு குறைந்த சீதாவை சந்திப்பதுடன் கதை முடிந்தாலும் அது நம்முள் எழுப்பும் சில எண்ணத் தொடர்ச்சிகள் முடிவதில்லை. ஊருக்கு ஊர் நாம் பார்க்கும் சீதாக்களை மனத்தில் கொண்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் உயிர் வாழ்தலின், பெண் ஜன்மத்தின் நகர வாழ்க்கையின் அநிச்சியம், பிரம்மசாரிகளின் மௌன அதைரிய ஆசைகள் யாவுமே வெவ்வேறு படிமங்களாக வெளிப்படுகின்றன. இவை அனைத்தையும் கொண்டு வருவதற்கு இக்கதையில் இத்தனை விவரங்கள் தேவைதான். சுப்ரபாரதிமணியனின் மற்றக் கதைகளையும் இந்த வடிவம், வடிவமற்ற ரீதியில் விமரிசிக்க முடியும். வடிவம் அமைந்திருக்கிறதா இல்லையா என்ற தீர்மானத்தை இனி நீங்களே ஏற்றுக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

 சுப்ரபாரதிமணியனின் தமிழ் நடையில் ஒரு கவிஞனின் பலங்களும் பலவீனங்களும் உள்ளன. நான் முன்பு குறிப்பிட்ட மாதிரி மெலிதான தீற்றல் போன்ற எண்ணங்களை சொல்ல முடிவது நிறை. “கணிசமான சதவிகிதத்தில் அரக்கனோ குழந்தையோ மென்மையோ நம்முள் உறைந்து போயிருப்பதை நாம் எப்போது முதல் முதலாக உணர ஆரம்பித்தோம் என்பது ஆச்சரியமான விஷயம்.” இது முழுவதும் உங்களுக்கு முதல் படிப்பில் புரிந்தால் நீங்களும் கவிஞர்.

 ஏனெனில் கவிஞர்கள் “செல்லம்மாவை எனக்கு நினைவிருக்கிறது” என்று சொல்லமாட்டார்கள்.

 “புராதன ஓவியம் போல் செல்லம்மா நினைவுக்குரிய விஷயமாக எனக்குள் இன்னும் இருக்கிறாள்” என்று தான் சொல்வார்கள்.

பதிவுகளுக்கு அனுப்பியவர்: சுப்ரபாரதிமணியன் subrabharathi@gmail.com