எழுத்தாளர் தி.ஜானகிராமனைப்பற்றி பலர் பேசும்போதெல்லாம் ஓர் உறுத்தல் எனக்குள்ளே எழும். இன்னும் அவருடைய படைப்பைப் படிக்காமல் இருக்கிறோமே என்ற குற்ற உணர்வு வருத்தும். சென்ற ஆண்டு புத்தகவிழாவில் அவருடைய ஒரு நாவலைப்படித்து விடவேண்டும் என்று எண்ணி வாங்கினேன். வீட்டு நூலகத்தில் உள்ளது. அதற்குள் இங்கு வந்துவிட்டதால் அதையும் தொடமுடியவில்லை. இரண்டு வாரத்திற்கு முன்பு சுவாசுகாங் நூலகத்தில் தி. ஜனகிராமனின் ‘மனிதாபிமானம்’ என்ற சிறுகதைத்தொகுப்பை எடுத்தேன். மூன்றுவாரத்தில் முடித்துவிடவேண்டும் என்ற முயற்சியில் இறங்கினேன். இன்றுதான் முடித்தேன்(13.12.13) பன்னிரண்டு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. அவருடைய மோகமுள், மரப்பசு பற்றி நண்பர்கள் சிலாகித்துப் பேசியது நினைவுக்கு வருகிறது. ஜானகிராமன் என்னை எப்படிக் கவர்கிறார் என்று பார்க்கத்தான் இந்தத்தொகுப்பையே எடுத்தேன். தி.ஜானகிராமன் மனச்சாட்சியோடு எழுதுகிறவர் என்பது தெளிவானது. அவருடைய நடை அப்படியே பேச்சுவழக்கில் அமைந்த நடை. பிராமணர் என்பது எழுத்தின் மொழியில் இருந்தாலும் எழுதும் இதயத்தில் இல்லை என்பது என் முடிவு. இது தற்காலிகமானதா? நிரந்தரமானதா? தொடர் வாசிப்பு பதிலளிக்கலாம்.
(2) “மனநாக்கு” என்ற கதையின் தலைப்பு என்னைக்கவர்ந்தது. ஒரு கவிதையின் தலைப்பாக வைக்கலாமே எனத்தோன்றியது.
“பலசரக்குக் கடைக்காரனுக்கு பைத்தியம் புடிச்சாப்ல ஆயிடுத்து என் புத்தி”
“ தரையிலே கிடந்தவன் பாயில் ஏறினான் என்பார்களே”
“ என் மனைவி அடிக்கடி என் மனசை சென்னை எருமையைத்திருப்புவதுபோல் வழிக்குத்திருப்பிக்கொண்டிருந்தாள்”.
அடுத்து மிக முக்கியம்..
“கேலி என்ன கேலி! எந்தக்கிழவனுக்கு சபலம் இல்லைங்கிறேள்? முடியலை.வேஷம் போடறான்கள். நான் அப்படியில்லை’
“ நான் விளையாடலெ. தற்செயல் . தற்செயலைப்போல் அதிசயமும் கிடையாது, அழகும் கிடையாது”
“சில கிர்ணிப்பழங்களுக்கு வரிகள் இருப்பதுபோல் முகத்திலும் விபூதிப்பட்டை”
இவையெல்லாம் என் மனசில் பதிந்த தி. ஜானகிராமனின் சொற்றொடர்கள். தொகுப்பில் ஒரு கதையைப்பற்றி விரிவாக எழுதவேண்டும் என்பது என் ஆசை. அந்தக்கதையின் தலைப்பு “ சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்”. இந்தக்கதையை முடிக்கும்போது ‘அப்பனுக்குப்புத்திசொன்ன சுப்பையா’ என்ற பாடல்வரியும் நினைவுக்கு வந்தது..“நீ உருப்படமாட்டே, நீ உருப்படவே மாட்டே” இது தந்தை முத்துவின் வாய்மொழி. “நம் பிள்ளையைப்பார்த்து நாற்பது ரூபா சம்பளம் போட்டு சாப்பாடும் போடத்தோன்றிட்டே ஒருவனுக்கு! பணத்தையே தின்று பணத்தையே உடுத்தி , பணத்திலேயே படுத்துப்புரளுகிற கொழுப்பு ஜன்மங்களாய் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் சாப்பாடு போட்டு, துணிமணி வாங்கிக்கொடுத்து நாற்பது (3) ரூபாய் கொடுக்கவாவது” இது அம்மா மீனாட்சியின் மனமொழி. இப்படிப்பெற்றோருக்குப்பிடிக்காத , உதவாத குழந்தையாகக் கருதப்பட்டவன் அக்கணாக்குட்டி. பெயர் சாம்பமூர்த்தி. அக்கணாக்குட்டி மூக்கும் முழியுமாக இல்லாதவன். மூக்கில் வற்றாத ஜலதோஷம். நிமஷத்துக்கு ஒரு உறிஞசல். படிப்பு வரல. மளிகைக்கடையில் விட்டுப்பார்த்தார்கள். சைக்கிள் பழுதுபார்க்கும் கடையில் விட்டார்கள். எங்கேயும் அக்கணாக்குட்டி சரியாக இல்லை. எதற்கும் ஏற்ற குழந்தையில்லை அக்கணாக்குட்டி என்பது அவர்களது முடிவு. இதைக்கேள்விப்பட செட்டியார்வாள் மெட்ராசுக்கு அனுப்பிவைச்சாரு. ஒரு பெரிய மனிஷன் வீட்டுல கூடாட ஒத்தாசையா இருக்கணுமாம். புள்ளிங்கள் பள்ளிகுடத்துக்குப்போகும். கொண்டு விடனும். கடை கண்ணிக்குப்போகனும். சில்லரை வேலைதான். நல்ல கவின்ச்சுவாங்க. வீட்டோடு சாப்பாடு என்ற விவரத்தை முத்துவிடம் சொல்ல காத்துக்கிடந்த முத்துவும் அவருடைய மனைவியும் ஒத்துக்கிட்டாங்க. மெட்ராசுக்குப்போயி அக்கணாக்குட்டி முதல் மாதச்சம்பளத்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டான். பெற்றோருக்கு அதிர்ச்சிஅலந்த அதிசயம். அக்கணாக்குட்டி பணம் அனுப்பியதில் அவர்களுக்கு வியப்பு. வீட்டில் ஒரு கலகலப்பும் குதூகலமும் ஏற்படுகிறது. காவேரியில் குளிக்கப்போன முத்து “ சில்லரை ஏதாவது கொடேன். கிரைத்தண்டு..பாகற்காயின்னு ஏதாவது வாங்கிண்டு வர்றேன். இன்னிக்குக்கூடவா வத்தக்குழம்பும் சுட்ட அப்பளமும்?” என்று கேட்டார் முத்து. ஜானகிராமன் மொழியில் சொன்னால் ..” பணம் வந்தால் இந்த நிமிண்டல்,குழையல் இரண்டுபேருக்கும் சகஜம்.” தொடர்ந்து பணம் வந்துசேர்வதில் தாமதம் ஏற்பட்டது. (4) பெற்றோருக்கு ஒரு பயமும் வந்துவிட்டது . அக்கணாக்குட்டி சம்பாதிச்சு நான் சாப்பிடனுங்கிறதில்லை என்றெல்லாம் முத்து சொல்ல தொடங்கிவிட்டார். இந்த நேரத்தில் ஹைகோர்ட் வக்கில் அண்ணாவைய்யர் மெட்ராசுக்கு அழைத்தார்.
அவருக்கு உடல்நிலை சரியில்லாத்தால் அவருக்கு சமைச்சுப்போட. “பால்லெ பழம் விழுந்தாப்ல ஆயிடுத்து” சென்னை வந்ததும் அக்கணாக்குட்டியைப் பார்க்க வேண்டியதை வக்கீலிடம் தெரிவிக்கிறார் முத்து. “அக்கணாக்குட்டியை பார்த்துவிட்டு உடனே வந்துவிடு. இரவே போகும்படியா இருக்கும் “ என்றார். எவர் சில்வர் டப்பாவில் சர்க்கரைப்பொங்கலைப்போட்டுக்கொண்டு மாம்பலம் பஸ்சில் ஏறினார் முத்து. அக்கணாக்குட்டி இருக்கும் வீட்டை அடைந்து , அதைப்பார்த்து பெருமூச்சு விடுகிறார். அரண்மனைபோன்ற வீடு. அவ்வளவு வசதியான வீடு. அங்கேதான் ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். முகத்தில் கறுப்புக்கண்ணாடி. ஒரு பையன் அவர் பக்கத்தில் நின்று அவருடைய தலையை, கிராப்புத்தலையை வரக்கு வரக்கு என்று சொறிந்துகொண்டிருந்தான்.
“யப்பா “என்று அக்கணாக்குட்டியின் குரல்.
விளக்கின் கறுப்பு மறைவிற்குப்பின்னால் இருந்த அக்கணாக்குட்டி “ எப்பப்பா வந்தே? என்று மூக்கை உறிஞ்சிகொண்டே சிரிக்கிறான். பெரியவர் விசாரிக்கிறாரு. பெரியவர் தோற்றம் அக்கணாக்குட்டியின் அப்பா முத்துவுக்கு பயம்,அதிர்ச்சி, கவலை அனைத்தையும் தந்தது. முத்துவுக்குப் பேச வாய்வரவில்லை. முத்துவுக்கு மேலெல்லாம் அரிப்பது போலிருந்தது.
“ உங்க மாதிரி யார் இருப்பார்? விளக்கேத்திவெச்சேளே என் குடும்பத்துக்கு.! நிஜமாச்சொல்றேன் (5) அக்கணாக்குட்டி அனுப்பிக்கிறானே மாசாமாசம் அதிலேதான் வயிறு ரொம்பறது. யார் செய்வா இந்த மதிரி? இந்தக்காலத்துல!” இதுவெல்லாம் அக்கணாக்குட்டியின் எஜமானரைப்பார்த்து சொல்ல நினைத்த வார்த்தைகள். இப்போது..
“மனதில் பீதி, குமைச்சல், குமட்டல், கோபம். பாவி நீ நல்லாயிருப்பியா?” என்றி அடிவயிற்றிலிருந்து கதறவேண்டும்போலிருந்தது முத்துவுக்கு. ஆனால் அக்கணாக்குட்டி அப்பாவைப்பார்த்து புன்சிரிப்பு சிரித்தான். பெரியவரிடம் தன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. மகனை அழைத்துப்போகவந்தேன் என்றார். பெரியவரும் “சாம்பு அப்பாவோட போறியா?” என்று கேட்டார்.
“பையன் ரொம்ப ஒத்தாசையா இருந்தான்.சுருக்கமா கொண்டுவந்து விடுங்கோ” என்றார்.
வேண்டா வெறுப்பாக பெரியவர் கொடுத்த காபியை கண்ணைமூடி மளமளவென்று விழுங்கினார்.கையும் பையுமாக வந்த சாம்பமூர்த்தி என்கிற அக்கணாக்குட்டி மாறியிருந்தான். தலையை வழவழவென்று சீவிவிட்டிருந்தான். வெள்ளைச்சட்டை,வெள்ளைவேட்டி,முகத்தில் ஊட்டத்தின் பொலிவு . அக்கணா விழுந்து வணங்கி எழுந்து “போயிட்றேன் மாமா ” என்றான். “போயிட்டுவா.லெட்டர் போடு. எப்ப வர்றேன்னு எழுது” என்றார் பெரியவர்.
இருவரும் விடைபெற்றுக்கொண்டுஅவசர அவசரமாக பஸ் ஏறினதும் முத்துக்கு பொறுக்கமுடியாம கொட்டினார்.
“ ஏண்டா மக்கு. இந்தமாதிரி உடம்பு அந்த மாமாவுக்குன்னு ஏன் சொல்லலை? ரொம்ப கரிசனமா தலையை சொறிஞ்சுவிட்டியே. புத்திதான் இல்லை.கண்ணுகூடவா இல்லை?
(6) ‘அது ஒட்டிக்காதப்பா’ என்றான் அக்கணாக்குட்டி.
‘யார் சொன்னது?’ முத்து.
‘அவ்வாத்து மாமி-மாமா,மோகன் எல்லாரும் சொல்லுவாளே. அவாளுக்கு நேரமே கிடையாது.’ அக்கணா.
“உன்னை ஏமாத்தியிருக்காடா எல்லாரும். அசட்டு பொணமே’ முத்து.
“ ஒண்ணுமில்லே. இத பாரு. ஒரு வெள்ளைக்காரப்பெண் யாரோ ஒரு ஆணின் கையைப்பிடித்துத் தடவிக்கொண்டு நிற்கிறாள். கருப்புக்கண்ணாடிக்காரருக்கு இருந்த மாதிரியே கை,மூக்கு எல்லாம். இது யாரு தெரியுமா? வெள்ளைக்கார தேசத்துல ராணி. போனமாசம் ராஜாவோட வந்து எதையும் பாக்காம மாமா மதிரி அங்கே முப்பது நாற்பது பேரு இருக்காலாம். எல்லாரையும் பார்த்து கையெல்லாம் தடிவிக்கொடுத்திருக்காங்க. ஒட்டிக்கும்னா தடவிக்கொடுப்பாங்களா?பேத்தியம் மாதிரி பேசுறியே!”
“பேத்தியம் மாதிரியா? நானா பத்தியம்? அந்தப்படத்தைப்பார்க்க ஆரம்பித்தார் முத்து.
கதை இத்துடன் முடிகிறது.
கதைநெடுக எங்கேயும் என்ன நோய் என்று குறிப்பிடவில்லை.ஆகவே நானும் குறிப்பிடவில்லை. ஒட்டிக்காது என்பதைத்தெரிந்துகொண்ட அக்கணாக்குடி தைரியமாக பெரியவரைத்தொட்டு சொறிஞ்சு விடுகிறான். வெள்ளைக்கார ராஜா ராணிக்கு இருக்கும் உள்ளம்தானே அக்கணாக்குட்டிக்கும் இருக்கிறது. அவர்களுடய நல்ல உள்ளம் விளம்பரத்திற்கு உதவுகிறது. இவனுடைய நல்ல உள்ள நாற்பது ரூபாய் சம்பாதிக்கிறது. பெத்தமனம் தவிப்பதை உணர்கிறோம். எழுதவே கைகூசும்போது பெத்தவன் நேரா பார்த்தா எப்படி அவன் மனம் துடிச்சிருக்கும். அப்பாவையே பைத்தியம் என்கிறான் அப்பாவி அக்கணாக்குட்டி. (7)உயர்ந்த தொண்டைச்செய்ய தெய்வ உள்ளத்தை பெற்றிருக்கிறான் அக்கணாக்குட்டி.. ஒண்ணுக்கும் உதவாதவன் எனக்கருதப்பட்ட அக்கணாக்குட்டி ஓர் அரிய பணியைச்செய்ய படைக்கப்பட்டவன் என்பது புலனாகிறது. எவ்வளவு பணமிருந்தாலும் பெரியவரைக் கவனிக்க அந்த வீட்டில் யாரும் இல்லை. பணம் இருக்கிறது. மனமில்லையே! பெற்றவர்களுக்கு இருக்கவேண்டிய சகிப்புத்தனமை பிள்ளையிடம் இருக்கும் அதிசயம் கதையில் வெளிப்படுகிறது. அறிவுரை கூற தகுதி வயதா? மனமா? எனக் கேட்கத்தோன்றுகிறது. தொண்டு செய்யவும் தகுதியிருந்தால்தான் தொண்டுக்கே பெருமை. மருத்துவருக்கே, செவிலித்தாய்க்கே இருக்க வேண்டிய அந்த உள்ளம் அக்கணாகுட்டிக்கு இருப்பது எதைக்காட்டுகிறது? என்ன இருந்தாலும் யாருக்குத்தான் மனம் வரும்?அக்கணாக்குட்டி விதிவிலக்கா? விதியின் விளக்க?இப்படி அலைபோல் எண்ணங்கள் எழவைத்த கதையிது.