பெப்ருவரி 2014 கவிதைகள்!

ஜனவரி 2014 கவிதைகள்!1. அம்மா

– ஷஸிகா அமாலி முணசிங்க / தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் –

(கைவிலங்கிடப்பட்டு சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்படும் அம்மாவுடன் கதைப்பதற்கு இடமளிக்கப்படாத குழந்தை, நீதிமன்ற வளாகத்தில் சத்தமிட்டு அழுதது – செய்தி)

 இழுத்துச் செல்லப்படுகிறாள் அம்மா
விலங்கிடப்பட்டிருக்கின்றன அவளது கைகள்
இருண்டு பருத்த தொப்பை மனிதர்கள்
அவளை அண்டவிடாமல் காவலிருக்கிறார்கள்

அம்மா
பகல் இரவுகளில் இனிய கதைகள் சொன்னவள்
சோறு கஞ்சி சமைத்து
என் நாவில் ஊட்டியவள்

நிலவு உதித்திருக்கிறது
இரவுத் தங்கத் தட்டின் மீது
இருக்கக் கூடும் நீ ஊட்டும் பால்
பசித்தாலும் கூட நான்
கையேந்த மாட்டேன் அம்மா

வந்துவிடு அம்மா என்னருகே
என் பாற்பற்களால் கடித்துன்
கை விலங்கை உடைக்கட்டுமா அம்மா

mrishanshareef@gmail.com


2. கட்டாயக் கண்ணீர்

ஜனவரி 2014 கவிதைகள்!– மெய்யன் நடராஜ் இலங்கை –  

தெய்வம் கண்ணடைத்துக் கொண்ட
கருணைகளற்றக் காலமொன்றில்
காலனின் கைப்பிடித்துக் கொண்டு
காமுகம் அணிந்து
வெளியே வந்திருந்தது அது
மனுஷம் சிதைக்கும்
மிருகத்துவத்தின் பிரதிநிதியாய்..

தோண்டப்படுகின்ற புதைகுழிகளின்
ஆழத்திலிருந்து வெளியே வருகின்ற
எலும்பு கூடுகளை விதைத்துவிட்டு
சர்வதேச மட்டத்தில்
கொல்லப்பட்ட புறாக்களின்
இறகுகளால் பின்னப்பட்ட
சமாதானத்திற்கான பொன்னாடை
போர்த்திக் கொள்கின்ற சுயநலங்களோடு
சிறகுகள் அடித்துக் கொள்கிறது
அதன் பேராசைகளின் பறவை.

கட்டவிழ்த்து விடப்பட்ட
வன்முறைகளின் கூடாரங்களிலிருந்து
இனப் படுகொலைகளுக்கான
குரோதங்களை குடித்து திளைத்த
ஆணவங்களோடு இன்னும்
சிறைபடுத்தப்பட்ட இயலாமைகளின்
பரிதாபங்களை பந்தாடிக்கொண்டு
அராஜகங்களின் வேர் பரப்பி
ஒரு ஆலமரமாய்
விழுதுகளும் விடத்துடிக்கிறது
அதன் விசுவாசம்.

பல கைகளின்
கூட்டு முயற்சியோடு
தனது கைகளை பலமாக்கிகொண்ட
வல்லமைகளின் முகவரியோடு
இறுமாப்பெய்தி
சனநாயகம் போர்த்தப்பட்ட
சர்வாதிகாரத்துக்குள் நின்று
வேட்டையாடப் பழகிக்கொண்ட
அசிங்கங்களின்
அருவருப்புகளிலான
வெற்றியின் மமதைகள் இன்னும்
நாடகங்களாக ஊடகங்களில்..

தெருக்கோடியில்
நிற்பதற்கும் தகுதியிலா
வரலாறுகளின் சொந்தங்கள்
கோடானு கோடிகளின் சொந்தங்களாய்
நிலைமாற்றம் கொண்ட
கொள்(கை)ளைகளின்மேல்
ஆளுமைகளின் வருணம் பூசப்பட்டு
சுரண்டல் பூங்காக்களில்
அழகாய் சிறகடிக்கின்றது
ஒரு வண்ணத்துப் பூச்சியாய்..

முதுகுகள் நிமிர்த்தும்
தைரியம் தொலைத்த
கோழைத்தனங்களை தூக்கிக் கொண்ட
துணிச்சலோடு
முன்னேற்றங்களின் சின்னங்களை
விலைபோதலுக்கான சபலங்களாய்
மாற்றிக்கொண்ட எதிரணிகளின்
சாதகங்களை மோதகங்களாய்
சுவைக்கப் பழகிக்கொண்ட
ருசி கண்ட பூனைகளின் சாம்ராட்சியத்தில்
சுமைகளின் அடுப்பில்
எரிந்துகொண்டிருக்கின்றது
வாழ்க்கை உலர்ந்த விறகாய்..

அபிவிருத்திகளின் பெயரால் சுய
அபிவிருத்திகளில்
தன்னிறைவு அடைந்திருக்கும்
தலைமைகளின்
தனியுடைமைக் கொள்கைகள்
தாராளமயபடுத்தப்பட்டிருக்கும்
அடங்காப்பிடாரித்தனங்களால்
புதைக்கப் பட்டுப்போன
பொதுவுடைமை என்பது
இனி வருகின்ற காலங்களில்
தேசத்தின் கட்டாயக் கண்ணீர்!

megathoothan001@hotmail.com


3. அப்பாவும் வாலை மரமும்!

– முல்லைஅமுதன் –

ஜனவரி 2014 கவிதைகள்!வாழை குலை
தள்ளி
மகிழ்ச்சியாய்
முற்றத்தில் நின்றது.
கிணற்றடியில்
நின்று வாழையைப்
பார்த்தால்
அப்பாவின் முகத்திலும் மகிழ்வு
பொங்கும்…
உறவுகள்
விரதம் என்று
இலைகளை வெட்டிச் செல்வர்.
தங்கை
கணவனுக்குப் பிடிக்கும்
என்று
பொத்தியை
கொண்டு சென்றாள்.
மிச்சமிருந்த குலையை
மருமக்கள் உரிமையுடன்
பங்கு போட்டனர்.
போதாதற்கு-
வாசிகசாலைக்காரரும்
விளக்கீட்டுக்கென
குத்தியை வெட்டிச் செல்ல
மொட்டையாய்
அந்த வாழை மரம்..
அப்போதும் அப்பா
சிரித்தபடியே இருந்தார்
புகைப்படமாய்…

mullaiamuthan@gmail.com


4. பறவையின் சிறகசைப்பில்…

– முனைவென்றி நா. சுரேஷ்குமார், இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு. –

ஜனவரி 2014 கவிதைகள்!இளைப்பாற இடம்தேடி
ஓர் மரக்கிளையில்
வந்தமர்கிறது
அந்தப் பறவை.

கூரிய அலகால்
கோதிவிடுகிறது
தன் சிறகை…

அப்பறவை அமர்ந்திருந்த
அந்த மரக்கிளை
எப்போது வேண்டுமானாலும்
முறிந்து விழலாம்.

அப்பறவையை படிக்க
வேடனுங்கூட
குறிவைத்து வலை வீசலாம்
விஷம் தடவிய அம்பை
எய்யத் தயாராயிருக்கலாம்

அம்மரத்தில்
ஏற்கனவே குடியிருக்கும்
இன்னபிற பறவைகளால்
துரத்தியடிக்கவும் படலாம்
அந்தப்பறவை…

நச்சுப் பாம்புகளால்
ஆபத்தும் நேரலாம்
அப்பறவைக்கு…

எவ்விதச் சலனமுமின்றி
தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு
சுதந்திரக் காற்றை சுவாசித்தவாறே
சிறகசைக்கத் துவங்குகிறது
அந்தப் பறவை.
 


5. படிகள்

– வேதா. இலங்காதிலகம். ஓகுஸ், டென்மார்க் –

ஜனவரி 2014 கவிதைகள்!சுடரும் புகழின் படிகள்
இடறும் சூறாவளி நொடிகள்,
படரும் பாசிகள், கொடிகளால்,
தொடரும் வாழ்கைப் படிகள்.

பிறப்பு இறப்பெனும் படிகளில்
முதற்படியாம் வளர்படியாளருக்கு
அறிவு தரும் அனுபவப்படி பெரும்
ஆரோக்கியப்படி, நம்பிக்கைப்படி.

ஏறுபடி நோக்கும் அடிகள்
ஊறுபட வரும் மிடிகள்.
மாறுபடா நம்பிக்கைப் பிடிகள்
கூறுபடாது தரும் வெற்றிப் படிகள்.

இறங்கு படியாம் மாடிப்படியின்
கைப்பிடி ஒரு ஆதாரப்படி.
நிலைப்படியின் வாசற்படியால் உட்புக
தலைகுனியும் நிலை தலைக்கனம் இறக்குமாம்.

எடுத்தடி வைக்கும் ஒவ்வோரடியும்
கற்படியோ ஏணிப் படியோ
தப்படியின்றிப் பல படிகள்
எட்டிட வேண்டும் உயர்படிகள்.

இலக்கியப் படிகள் ஆர்வம் தரும்.
ஆய்வுப் படிகள் மகத்துவம் தரும்.
இசைப்படிகள் இனிமை தரும்.
கவிதைப்படியெனக்கு வெளிச்சம் தரும்.

kovaikkavi@gmail.com