– நாடக, திரைப்படக் கலைஞரும், எழுத்தாளருமான கே.எஸ்.பாலச்சந்தினின் மறைவை ஒட்டி எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய இக்கட்டுரையினையினை மீள்பிரசுரம் செய்கின்றோம். அனுப்பிய குரு அரவிந்தனுக்கு நன்றி. – பதிவுகள் –
கே.எஸ்.பாலச்சந்திரன் பற்றி ஏற்கனவே பாரதி கலைக்கோயில் சார்பில் நண்பர் மதிவாசன் வெளியிட்ட நூலின் தொகுப்பாசிரியர் என்ற வகையில் விரிவாக ஒரு அறிமுக உரை எழுதியிருந்தேன். திறமை மிக்கவர்களை எத்தனை தடவை பாராட்டினாலும் தகும் என்பதால், அவரது சாதனைகளைப் பாராட்டி அவருக்குக் கனடாவில் ரொறன்ரோவிலும், மொன்றியலிலும் விழா எடுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒருமுறை அவரைப் பாராட்டி வாழ்த்த விரும்புகின்றேன்.
அண்ணை ரைட் என்ற கணீரென்ற குரல் மூலம்தான் இவர் எனக்கு முதன் முதலாக அறிமுகமானார். அப்பொழுதெல்லாம் பேருந்து சாரதியை மரியாதை கருதி அண்ணை என்றுதான் நடத்துநர்கள் அழைப்பார்கள். அச்சுவேலியில் இருந்து சங்கானைக்கு ஒரு பேருந்து சுண்ணாகம் வந்து, காங்கேசந்துறை வீதிவழியாக மல்லாகம் சென்று, அளவெட்டி வழியாகச் சங்கானைக்குச் செல்லும். அதிலே உள்ள நடத்துநரும் இப்படித்தான் அண்ணைரைட் என்று குரல் கொடுப்பது வழக்கம். பயணிகளில் அனேகமானவர்கள் அவருக்கு அறிமுகமானவர்களாகவே இருப்பர். அவர் வாய் நிறைய வெற்றிலை பாக்குப் போட்டிருப்பார். காக்கித் துணியில் நாலு பைகள் உள்ள மேற்சட்டை அணிந்திருப்பார். வண்டி நின்றதும் அவசரமாக வேலியோரம் சென்று வாயில் குதப்பிய வெற்றிலைச் சாற்றை உமிழ்ந்துவிட்டு வந்து அண்ணைரைட் என்று கம்பீரமாகக் குரல் கொடுப்பார். பாலா அண்ணையின் அண்ணைரைட் நாடகத்தைக் கேட்கும் போதெல்லாம் நேரே பார்க்கும் காட்சிபோல, அந்த நடத்துநரின் ஞாபகம் வரும். நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது தொலைக்காட்சி பிரபலமாகாததால், ஒலியை மட்டும் கேட்கக்கூடிய இலங்கை வானொலிதான் எங்கள் வீட்டிலே உள்ளகப் பொழுது போக்குச் சாதனமாக இருந்தது. இலங்கை வானொலியில் இவரது குரல் பல தடவைகள் ஒலித்தாலும் அனேகமான ரசிகர்களைக் கவர்ந்தது இவர் கதாநாயகன் சோமுவாக நடித்த தணியாத தாகமும், இவரது தனிமனித நாடகமான, பேருந்து நடத்துநராக நடித்த அண்ணை ரைட்டும்தான் (1973) என்றால் மிகையாகாது. அன்றைய காலக்கட்டத்தில், பலரை விம்மி விம்மி அழவைத்த நாடகமாத் தணியாத தாகமும்;, 500 தடவைகளுக்குமேல் மேடையேற்றப்பட்டு, பலரை வயிறு குலுங்கிச் சிரிக்க வைத்த நாடகமாக அண்ணைரைட் நாடகமும் அமைந்திருந்தன.
நாடக, சினிமா நடிகராக, நாடக எழுத்தாளராக, இயக்குநராக இருந்த பாலாஅண்ணா ஒரு எழுத்தாளராக மாறியது ஒன்றும் அதிசயமல்ல. நிறைய வாசிக்கும் பழக்கம் கொண்ட அவரிடம் பன்முக ஆளுமை இருப்பதை நான் அவருடன் உரையாடும்போது பல தடைவ அவதானித்திருக்கின்றேன். அவரது கரையைத் தேடும் கட்டுமரங்கள் என்ற அவரது முதலாவது நாவலை வாசித்துவிட்டு நிச்சயமாக பரிசுக்குரிய ஒரு நாவல் இது என்பதை எனது நூல் ஆய்வுக் கட்டுரையில் முக்கியமாகக் குறிப்பிட்டிருந்தேன். 2009ம் ஆண்டுக்கான அமுதன் அடிகள் இலக்கிய விருது தமிழகத்திலிருந்து அவரது கரையைத் தேடும் கட்டுமரங்கள் என்ற நூலுக்குக் கிடைத்தபோது எனது கருத்தை அவர்கள் உறுதிப்படுத்தியிருந்ததை எண்ணிப் பெருமைப்பட்டேன். அதைத் தொடர்ந்து அவரது நேற்றுப்போல இருக்கிறது என்ற நூலும் வெளிந்து வாசகர்களிடையே சிறந்த பாராட்டைப் பெற்றிருக்கின்றது. இவரது முதல் மேடை நாடகம் 1965ல் நெல்லியடியில் மேடையேறியது. புறோக்கர் பொன்னம்பலம் என்ற நகைச்சுவை நாடகத்தில் தேனீர்கடை முதலாளியாக இவர் நடித்திருந்தார். இலங்கை வானொலியில் விளையாட்டுத்துறை நேர்முக வர்ணனையாளராகவும் கடமையாற்றியிருக்கின்றார். கனடாவில் தமிழர் தகவல் விருது, உதயன் விருது, உலகப் பண்பாட்டு இயக்க விருது, கனடிய கலைஞர் கழக விருது போன்றவற்றை இவர் பெற்றிருப்பது இவரது சாதனைகளை எடுத்துக் காட்டுவதாக இருக்கின்றது.
பாலா அண்ணையைப்பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுவதானால், நல்ல பண்பாளர், பழகுவதற்கு இனிமையானவர், கடுமையான உழைப்பாளர். யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவருடைய இந்த வெற்றிக்கெல்லாம் காரணமானவர்களில் அவரது மனைவி எட்னா கனகேஸ்வரியும் முக்கியமானவர் என்பதை நாங்கள் மறந்துவிடக்கூடாது. பாலா அண்ணாவின் விருப்பத்தை அறிந்து அதற்கேற்ப இசைந்து நடப்பதை பல தடவைகளில் நான் அவரிடம் அவதானித்திருக்கின்றேன். இச்சந்தர்ப்பத்தில் அவரது கலைப்பணி தொடரட்டும் என்று மீண்டும் பாலா அண்ணாவையும் அவரது குடும்பத்தினரையும் நீடூழி வாழ்க எனவாழ்த்தி வணங்குகின்றேன்.
kuruaravinthan@hotmail.com / புகைப்பட உதவி: வடலி