சிறுகதை: மனங்களின் வலிகள்!

navajothy_baylon_4.jpg - 21.10 Kb9.2.2014.- எண்ணங்களாலும், கற்பனைகளினாலும் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பல பெண்கள் அந்த இனிய நினைவுகள் கானல் நீராகும்போது ஏமாந்து துன்பத்தில் மூழ்கிவிடுகிறார்கள். புதிதாக நாட்டுக்கு வந்த புஸ்பா மூலையில் உள்ள கதிரையில் முழுசியபடி உட்கார்ந்து மூளையைப் பிசைந்துகொண்டிருந்தாள். கதவின் மணியோசை கேட்டது. அந்தச் சிறிய அறையினுள் குமைந்திருந்து பேசிக்ககொண்டிருந்த நண்பர்களைக் ‘கொஞ்சம் அமைதியாக  இருந்து கதையுங்கோ’ என்று மகேந்திரன் கேட்டுக்கொண்டான். அகதியாக ஆரம்பத்தில் வந்து அடியுண்டு எழும்பியவாதான் இந்த மகேந்திரன்;. நமது நாட்டில் இருந்து அரசியல் தஞ்சம்கோரி வருபவர்களுக்கு இடவசதி, சாப்பாடு, விசா பெறுவதற்கான ஆலோசனைகள்; என்று அவர்களுக்குத் தேவையான  உதவிகள் செய்யும் மனம் படைத்தவர். பிரான்சின் தலைநகரான பாரீசில் உள்ள ‘றெஸ்ரோரன்ட்’ ஒன்றில் வேலை செய்பவர். அங்கு பலவிதமான வேலை வாய்ப்புக்கள் வரும்போது அவற்றில் அகதியாக வரும் இளைஞர்களை ஈடுபடுத்தும் செல்வாக்கு மிக்கவர். பிரெஞ்சு முதலாளிகள் மத்தியில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் நேர்மையாக வேலை செய்யக்கூடியவர்கள், கடின உழைப்பாளிகள் என்ற நம்பிக்கை நிறையவே இருந்தது.

வாசலில் யாரோ நின்றிருந்தார்கள். வசந்திதான் வந்திருந்தாள். வசந்தியை வரவேற்ற மகேந்திரன் அவளை சிங்கப்பூரிலிருந்து வந்திருக்கும் புஸ்பாவிற்கு அறிமுகப்படுத்தினான். ‘இந்த அறையில் முன்பு என்னோடிருந்த நண்பனின் மனைவி வசந்தி. இவளும் இலங்கையிலிருந்து இங்கு வந்து ஒரு வருடமாகிவிட்டது’ என்றான் மகேந்திரன். ஏக்கங்கள் கலந்த கண்களால் விழித்துப் பார்த்துக்கொண்டிருந்த புஸ்பாவை புன்னகைத்துப் பார்த்தாள் வசந்தி.
  
‘சிங்கப்பூரிலிருந்து  புஸ்பா வந்திருக்கிறாள். ஜேர்மனியில் இருக்கும் எனது அண்ணனிடம் செல்ல இருக்கின்றாள். நாங்கள் இங்கு பொடியங்கள்தானே பனங்கிழங்கு அடுக்கின மாதிரி சேர்ந்து இருக்கின்றோம். உங்களைப் போன்ற பெண்களைக் கண்டால் ஏதாவது மனம் விட்டுக் கதைப்பாள் என்றுதான் உங்களுக்கு ‘போன்’ செய்து வரவழைத்தேன் வசந்தி’ என்றான் மகேந்திரன்.
  
அங்கிருந்த நண்பர்களோடு வெளியே சென்றுவிட்டான் மகேந்திரன். அடைமழை ஓய்ந்தது போன்ற அமைதி நிலவியது அறையினுள்.
  
‘வசந்தி தேனீர் குடிக்கிறியளா?’
  
இரண்டு தேனீர் கோப்பைகளோடு வந்துவிட்டாள் புஸ்பா.
  
‘சிங்கப்பூரிலிருந்து நேராக ஜேர்மனிக்குப் போயிருக்கலாமே புஸ்பா?’
  
‘எவ்வளவோ முயற்சி செய்தும் ஜேர்மனிக்கு விசா கிடக்கவில்லை வசந்தி. பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டுதான் இங்கு வந்து சேர்ந்தேன். ஏதோ ஒரு மாதிரி பாரீசுக்கு விசா கிடைத்துவிட்டது. அது ஒரு பெரிய கதை வசந்தி.’ புஸ்பா தொடர விரும்பவில்லை.
   
தைரியம், கடும் உழைப்பு, உள்ளுணர்வு சூழ்ந்து கடுமையும், பரிவுமாக மாறி மாறி வரும் புஸ்பாவின் முகமாறுதலை வசந்தியால் உணரமுடிந்தது.

‘இலங்கையில் எந்த இடம் புஸ்பா?’ வழமையாக எம்மிடையே எழும் அகழ்வுக் கேள்வியைத் தொடுத்தாள் வசந்தி.
  
‘அனுராதபுரம்.’
  
‘ஓ… அங்கே தமிழர் கனக்கப்பேர் இருக்கினமோ? நான் கொன்வன்ற்றில் படிக்கும்போது அனுராதபுர வலைப்பந்தாட்டப் போட்டிக்கு எனது பாடசாலை மாணவிகளோடு போய் அனுராதபுரப் பாடசாலை ஒன்றில் ஒருசில நாட்கள் தங்கியிருந்து வந்தனான். சிங்கள மாணவிகள் எல்லோரும் மிக அன்பாகப் பழகியிருந்தார்கள். எமது வலைப் பந்தாட்ட ஆசிரியை மிஸ்.கேளியும்  அனுராதபுரத்தைச் சேர்ந்தவள்தான். அவளைப் பார்த்தாலும் சிங்களப் பொம்பிளைமாதிரித்தான் இருப்பாள். அனுராதபுரம் பொல்லாத சிங்களப் பகுதி என்றெல்லோ நினைச்சன். உங்களைப் பார்க்கவும் வித்தியாசமாக சிங்களப் பொம்பிளை மாதிரித்தான் இருக்குது.’

‘நாட்டில் பிரச்சனைகள் பரவலாக நடந்துகொண்டிருந்தவேளை கண்டி பல்கலைக்கழகத்து விரிவுரையாளர் ஒருவரோடு நானும்சேர்ந்து யாழ்ப்பாணத்திலிருந்து கண்டிக்குப் பிரயாணம் செய்துகொண்டிருந்தோம். அனுராதபுர ஸ்ரேஷனுக்குக் கிட்ட வரும்போது ‘யாரோ தபால் பெட்டிக்கை பொம் வைத்திட்டாங்;கள் என்று சந்தேகம் கொண்டுள்ளதாக’ ஒலிபரப்பினார்கள். அத்தோடு அனுராதபுரத்தில் புகையிரதத்தையும் நிற்பாட்டிவிட்டார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த சனங்கள்  அல்லோல கல்லோலப்பட்டு இறங்கி திரும்பி யாழ்;ப்பாணம்போகும் புகையிரதத்தில் ஏறித்திரும்பி போய்விட்டார்கள். என்னுடன் வந்த விரிவுரையாளர் சொன்னார்: ‘பிள்ளை பயப்பிடாதேயும். நான் இருக்கிறன். சாவு வந்தால் எல்லோரும் சாக வேண்டியதுதான். எடுத்த பயணத்தை மேற்கொள்ளுவம். உம்முடைய தந்தையும் கண்டி ஸ்ரேஷனில்; உமக்காகக் காத்துக்கொண்டிருப்பார்’ என்றதும் உயிரைப்பிடித்தபடி பயந்து பயந்து கண்டிவரை அந்த விரிவுரையாளருடன் பயணம் செய்த பயங்கர நினைவு வருகிறது புஸ்பா.

‘எங்கே படித்தனீங்கள் புஸ்பா?’

‘கோன்வென்ரில்’

‘அனுராதபுரக் கொன்வன்ரிலா?’

‘இல்லை. யாழ்ப்பாணத்திலுள்ள கொன்வன்ரில்.’
   
‘நானும் அங்கேதானே கல்வி கற்றேன் புஸ்பா.’ அனுராதபுரத்திலிருந்து வந்து, கன்னியாஸ்திரி மடத்தின் ஆங்கில விடுதியில் தங்கியிருந்து படித்திருந்த புஸ்பாவை இனங்காண முடிந்தது வசந்தியால். யாழ்ப்பாணத்து கத்தோலிக்கப் பாடசாலைகளில்கூட ஆங்கிலவிடுதி, தமிழ்விடுதி என்ற பாகுபாடுகள் இருந்தமையை எண்ணிக்கொண்டாள் வசந்தி. ஆங்கில விடுதிகளில் தங்குபவர்கள் பணம் படைத்தவர்களின் பிள்ளைகள், வசதியாக ஒழுங்குமுறைப்படி படிப்பையே கரிசனையாகக் கொண்டவர்கள். ஆனால் தமிழ் விடுதிகளில் தங்குபவர்கள் ‘அனாதைகள்’ என்ற பரிதாபத்திற்குட்பட்டவர்கள். பெற்றோரை இழந்தவர்கள். குடும்பப் பிரச்சினைகளால் பெற்றோர்களை பிரிந்து பரிதவிவிப்பவர்கள். அத்தகைய பிள்ளைகளை அங்குள்ள கன்னியாஸ்திரிமார்கள் எடுத்து பாராமரிப்பதுண்டு. அதற்குள்ளும் பலவிதமான வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் என்று வசந்தி அறிந்திருக்கிறாள். புஸ்பா வசதி படைத்தவர்கள் தங்கும் விடுதியில்தான் இருந்திருக்கிறாள்.

‘எப்படி ஜேர்மனிக்குப் போகப் போகிறீர்கள்?’ வசந்தி தொண தொணத்துக் கொண்டிருந்தாள்.
  
‘எனது கணவரின் தம்பிதான் மகேந்திரன். அவர்தான் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். எல்லாம் நல்படியாக நடக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. சிங்கப்பூரிலிருந்து எடுத்துக்கொண்ட முயற்சிகளாலே மாதங்கள் உருண்டோடி வருடங்களாகிவிட்டன. எல்லாம் நன்மைக்கென்றே எண்ணிக்கொள்ள முடிகின்றது. எந்தவொரு தோல்விகளும் மாற்றங்களும் ஏற்படும்போது அதனை நன்மைக்கென்றே கருதிவிட வேண்டும். இன்னது இன்னது நடக்கும் என்பதும் ஏலவே திட்டமிட்டு எல்லாமே நடந்துவிடும் என்றும் என் நண்பி அடிக்கடி கூறுவாள். அதில் எவ்வளவு உண்மை கனிந்து கிடக்கிறது..’. புஸ்பாவின் கலங்கிய கண்களை வசந்தி அவதானிக்காமலில்லை.
  
வசந்திக்கு அப்போதுதான் ஞாபகத்தில் வந்தது.
   
சில மாதங்களுக்கு முன்னர் வசந்தியின் வீட்டிற்கு மகேந்திரன் சென்ற வேளை, தனது அண்ணனின் திருமணப் படத்தைக் காட்டி ‘அவர் ஒரு கத்தோலிக்கப் பெண்ணைத் திருமணம் செய்துவிட்டார்;’ என்று கூறியது. தனது வாழ்வைத் தீர்மானிப்பது அண்ணன்தான். நானல்ல. அவரது விருப்பம். சில சமயங்களில் வாழ்க்கை எம்மை அற்புதமாகச் சிந்திக்க வைக்கிறது…    இந்தப் பெண்ணும் கத்தோலிக்கப் பெண்தான். ஆனால் அந்தப் புகைப்படத்தில் பார்த்த பெண்ணின் உருவமாக இந்தப் பெண் இல்லையே? ஏதோ ‘உருவச்சிக்கல்’ எனக்கு என மனதில் எண்ணிக்கொண்ட வசந்தி முகத்தில் மகிழ்ச்சியை மீட்டிக் கொண்டாள்.
   
ஜேர்மனியில் உங்கள் கணவர் நல்ல வீடு வசதிகளோடு இருப்பார் தானே! ஜேர்மனியில்  அகதியாக வந்தவர்களுக்கு நல்ல சலுகைகள் கிடைக்கிறதாம். உங்களுக்கும் அங்கு போய் சேர்ந்துவிட்டால் பிரச்சனைகள் இருக்காதுதானே புஸ்பா.
   
புயல் அடித்துக்கொண்ட புஸ்பாவின் இதயம், வசந்தியின் பேச்சுக்களால் சூறாவளி ஆகிக்கொண்டிருந்தது. இனித்தான் வசந்தி பெரிய பெரிய பிரச்சனைகள் வரப்போகுது.  நீங்கள் திருமணம் செய்துகொண்ட பெண் என்ற முறையில் புரிந்து கொள்வீர்கள்.
   
‘இவ்விடம் நான் வந்ததும் எமது திருமணப்படத்தை அவரின் தம்பி மகேந்திரனுக்குக் காட்டிவிட்டு, இந்த அறையிலுள்ள கண்ணாடி அலுமாரியினுள் வைத்தேன்;. மகேந்திரன் அந்தப் படத்தை வெளியில் வைக்கவேண்டாம் என்று கூறிவிட்டார். எனது கணவர் தெய்வேந்திரனும் நானும் சிங்கப்பூரில் வேலை செய்துகொண்டிருந்த வேளை இவரும் காதலித்து திருமணம் செய்யும் முடிவுக்கு வந்திருந்தோம். பின்னர் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணமும் செய்திருந்தோம். ஆனால் அதேவேளை சிங்கப்பூரில் என்போல் இலங்கையில் இருந்துவந்து வேலை செய்துகொண்டிருந்த வேறு ஒரு பெண்ணுடன்  தொடர்பு கொண்டிருந்தது மாத்திரமன்றி, யாழ்ப்பாணம் சென்று முறைப்படி திருமணம் எல்லாம் செய்துள்ளார். ‘தெய்வேந்திரன் இப்படி எல்லாம் செய்தாரா?’ என்று என்னால் நம்பவே முடியவில்லை வசந்தி. மகேந்திரன் அவர்களது திருமணப்படத்தைக் காட்டியபோது உண்மையில் நான் அதிர்ந்தே விட்டேன். அவளும் கத்தோலிக்கப் பெண்தான். ‘என்னுடன் தெய்வேந்திரன் இணைந்து எடுத்த திருமணப்படத்தை பாருங்கள் வசந்தி’ என்று தமது திருமணாலப் படத்தை உடல் நடுங்கி விம்மலோடு காட்டியபோது…

வாழ்க்கை கதை கதையாய் வண்ணங்கள் காட்டிக்கொண்டிருக்கிறதே! உணர்ச்சிகளின் எல்லைகளை மீறியவர்கள் விரும்பினால் கூட பின்வாங்கிவிட முடிவதில்லை. அவர்கள் நின்று நின்று அதற்காக வருந்தி வருந்தி, மேலும் மேலும் அந்த எல்லைகளை மீறுவதையே இயல்பாகக் கொண்டுவிடுகிறார்கள். அதுவும் திருமண வாழ்வின் எல்லைகளை மீறிக் கால்பதிக்கும் அதிகமானோர் ஆளையே விழுங்கிவிடுகின்றார்களே’ என்ற ஒர் எழுத்தாளனின் கருத்துக்கள் வசந்தியுள் வந்து அமுக்கின… அவள் மனதில் தோன்றிய சிக்கல்கள் தெளிவாகிவிட்டன. புஸ்பாவின் நிலையை எண்ணும்போது வெதுப்பகம்போல் வசந்தியுள்ளம் வெதவெதத்தது.

ஆண்கள் சிலரின் ஆசைகள். மனங்கள் ஏன்தான் இப்படி அலைமோதுகின்றன அவர்களுக்கு. பெண்களை ஏமாற்றுவது மட்டுமல்ல தங்களைத் தாங்களே ஏமாற்றுகின்றார்கள். மனச்சாட்சியில்லாத மனிதப்பிறவிகள். பெண்களின் மன உணர்வுகளை, ஆசைகளை வஞ்சித்து மோசம் செய்பவர்கள். நேர்மை இல்லாத கோழைகள். இத்தகைய ஆண்களைத் தனக்குள் கடுமையாக கடிந்துகொண்டாள் வசந்தி.
    
அடுத்து என்ன செய்யப் போவதாக யோசிக்கிறீர்கள் புஸ்பா? வாழ்க்கையே  பிரச்சனைகள், போராட்டங்கள் நிறைந்தவைதான். நீங்கள்தான் யோசித்து முடிவு எடுக்கவேண்டும்.
    
வசந்தி என்னால் அவரை மனதால்கூட பிரிந்து வாழ முடியவில்லை. என்னையும் அவர் என் உறவுகள்புடைசூழ தாலி கட்டியவர். நானாக தேடிக்கொண்ட வினை என்று குடும்பத்தவர்களும், உறவினர்களும் என்னைப் பரிகசிப்பார்கள். அதோடு அவள் குறைந்த சாதிப் பொம்பிளையாம்.
    
புஸ்பாவின் மனவேதனையைப் புரிந்துகொண்டாள் வசந்தி. இருந்தும்  புஸ்பா தெய்வேந்திரனோடு சேர்ந்து வாழ வேண்டும் என்ற சிந்தனை சற்று வித்தியாசமாக இருந்தது வசந்திக்கு. குறைந்தசாதி, கூடியசாதி இல்லை இப்போ பிரச்சினை. தேய்வேந்திரன் வேறு ஒரு பெண்ணையும் விரும்பித் திருமணம் செய்துவிட்டான். ‘இப்போதும் எம்மினத்தவரிடையே சாதி பேதங்கள் இருக்கத்தான் செய்கின்றன’ மனது வெட்கித்தது வசந்திக்கு.
    
தொழில்களின் அடிப்படையில் சாதிகளுக்கு பெயர்கள் சூட்டினார்கள். எல்லாத் தொழில்களையுமே நாமே செய்யும் தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த நாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நமக்கு நாமே ஜாதிகளைச் சூடிக்கொள்வதுதான் தற்போது பொருந்தும் புஸ்பா.
   
புஸ்பா உங்களுக்குத் தெரியுமே? எமது கொன்வன்ருக்கு அருகில் உள்ள பெரிய கத்தோலிக்க கோயிலில் பெரிய சாதிச் சண்டை நடந்தது. உயர்ந்த சாதிக்காரரும், குறைந்த சாதிக்காரரும் அகதியாகப் பரீசுக்கு வந்து ஒரே விட்டில் அதுவும் சாதி குறைஞ்சவை என்று சண்டைபிடிச்சவர்கள் வீட்டில்; தான் வேலை, வசிப்பிடம் கிடைக்குமட்டும் இருந்தவையாம்.
  
உண்மையாகவா வசந்தி?
  
உண்மைதான் சொல்கிறேன். பிரெஞ்சுக்காரருக்கு எல்லாருமே ஸ்ரீலங்கா தமிழர் என்பதுதான் தெரியும். ஆண்ஜாதி, பெண்ஜாதி இவைதான் ஜாதிகள். ஒருவர் நோக்கும் பார்வையில், மற்றவர் பார்வையும் அமைந்து ஏதோ ஒன்றில் அவர்கள் இணைந்து வாழ்வை அனுபவிக்கும்போது அதில் என்ன தவறு? இதை நான் பொதுவாகத்தான் கூறினேன் புஸ்பா குறை விளங்காதீர்கள்? இப்போ அவர்கள் இருவரும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் நீங்களும் அவருடன்தான் வாழ வேண்டும் என்கிறீர்கள்.
  
என்ன வசந்தி! என்னைஊர் அறிய முறைப்படி தாலி கட்டியவர் வசந்தி. நான் அவருடன் வாழ நினைப்பதில் என்ன தவறு?
  
நினைப்பதில் தவறு இல்லைப் புஸ்பா. ஆனால் நடைமுறைப் பிரச்சனைகளைச் சிந்திக்கவேண்டுமல்லவா? ஜேர்மன் அரசாங்கம் உதவி செய்யலாம். எமது பெண்களின் மனநிலை, விட்டுக்கொடுக்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளதா? பல்வேறுபட்ட  கேள்விகளைத் தொடுத்துக்கொண்டிருந்தாள் வசந்தி…
   
புஸ்பாவின் மனது பனிமலைகள் வெடித்துப் பிளவுபடுவதைப்போல வெடித்து உருகிக்கொண்டிருப்பதை வசந்தியால் உணரமுடிந்தது. என்ன புஸ்பா? என்ன யோசிக்கிறியள்?
   
வசந்தி, மகேந்திரனும் தனது திருமணத்தை எதிர்நோக்கிக்கொண்டு நண்பர்களோடு இங்கு வாழ்ந்துகொண்டிருக்கிறான். எப்படி நான் அதிககாலம் இங்கு தங்கியிருப்பது? பெண்களாகப் பிறந்த எமக்கு குடும்பத்திலும் பிரச்சனை, நாட்டிலும் பிரச்சனை, வாழ்க்கையே பிரச்சனையாகிவிட்டது.
  
பிரச்சனைகளை நாம் எதிர் நீச்சல்போட்டு  வெற்றிகாணவேண்டும். மனதில் நம்பிக்கை வேண்டும்.
  
இவர்கள் இருவரினதும் சம்பாஷனைக்கிடையில் கதவில் மணி அடிக்கும் சத்தம் கேட்கிறது.
  
மகேந்திரன் ஆகத்தான் இருக்க வேண்டும். புஸ்பா வேகமான நடையில் சென்று கதவைத் திறந்தாள்.
  
அண்ணி, நாளைக்கு இரவு எட்டு மணிக்கு ஒரு கார் பரீசிலிருந்து ஜேர்மனிக்குப் போகுதாம். ஒருவர் மட்டும் போவதற்கான வசதி இருக்குதாம். நான் எல்லாம் கதைத்துப்போட்டு வந்திருக்கிறேன். நீங்கள் புறப்படுவதற்கு ஆயத்தப்படுத்துங்கள். அவர்கள் அண்ணனின் விலாசத்திற்கே கொண்டுபோய் விடுவார்களாம். 
  
புஸ்பாவின் மனசு அந்தரப்பட்டு, அங்கலாய்த்து,அமைதியாகி சிந்தனையில் அழத்தொடங்கியதை வசந்தி அவதினத்துக்கொண்டிருந்தாள். பாவம் புஸ்பா! அங்கே போய் என்ன பாடுபடப்போகுதோ! சரி புஸ்பா. நீண்ட நேரமாக இருந்துவிட்டேன். நாளை வந்து நீங்கள் ஜேர்மனிக்குப் புறப்படும் முன்னர் வந்து சந்திக்கின்றேன். வசந்தி அருகில் இருக்கும் தனது வீட்டுக்குப் புறப்பட்டாள். தெய்வேந்திரனின் ஆறுதலா…? ஜேர்மன் அரசாங்கத்தின் ஆறுதலா…? என் எதிர்கால வாழ்க்கை…? சிந்தனையில் மூழ்கத் தொடங்கினாள் புஸ்பா…

navajothybaylon@hotmail.co.uk