“மதமாற்றம்”

நாடக விமர்சனம்: "மதமாற்றம்" - அ.ந.கந்தசாமி -1_kavaloor_rajadurai[ அறிஞர் அ.ந.கந்தசாமியின் ‘மதமாற்றம்’ தயாரிப்பாளரும் , பிரபல எழுத்தாளருமான காவலூர் ராசதுரையின் நாடகம் பற்றிய குறிப்பிது. ஒரு பதிவுக்காக இங்கே மீள்பிரசுரமாகின்றது. – பதிவுகள்]

இலங்கை வானொலியின் ‘கலைக்கோலம்’ என்னும் நிகழ்ச்சிக்காக, தமிழ் நாடக்மொன்றினை விமரிசிக்கும்படி திரு.சீ.வி.ராஹசுந்தரம் ஒரு முறை என்னைக் கேட்டுக் கொண்டார். அதற்கமைய அந்த நாடகத்தை விமரிசித்தபொழுது, இலங்கையில் நாடகத்துறையை வர்த்தக அடிப்படையில் மூலதனம் போட்டு ஸ்தாபனரீதியாகக் கட்டி வளர்த்தல் சாத்தியம் என்ற கருத்தினை வெளியிட்டிருந்தேன். நண்பர் அ.ந.கந்தசாமியுடன் தமிழ் நாடத்துறை பற்றி ஒருநாள் பேசிக் கொண்டிருந்தபொழுது மேற்சொன்ன என் கருத்தை அவரிடம் சொல்லி அவருடைய அபிப்பிராயத்தைக் கேட்டேன். “வர்த்தக ஆற்றலுடையவர்களுக்குக் கலையார்வம் இல்லை; கலையார்வமுள்ளவர்களுக்கு வியாபாரம் செய்யத் தெரியாது’ என்று சொன்ன அவர் , ‘என்னுடைய ‘மதமாற்றத்தை’ உமக்குத்த்தருகிறேன்; பணம் எதுவும் வேண்டாம்; உம்முடைய கருத்துச் சரியானதுதானவென்று பரீட்சித்துப் பார்க்க விரும்பினால் அதை மேடையேற்றும்” என்றார். அவ்வளவுடன் நில்லாது குறிப்பிட்ட ஒரு தொலையை என்னால் புரட்ட முடியுமானால், நாடகத்தை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்குத் தம்மால் இயன்ற சகல் உதவிகளையும் செய்து தருவதாகவும் சொன்னார்.

தமிழ் நாடகத்துறையில் ஈடுபாடுள்ள முத்தையா இரத்தினம், சில்லையூர் செல்வராஜன், லடீஸ் வீரமணி ஆகியோரும் என்னுடைய இந்தப் பரிசோதனைக்கு உதவ முன்வந்தார்கள். நாளடைவில் ஒரு குழுவே திரண்டு விட்டது. ஆயினும் ஏற்கனவே இருப்பதாகச் சொல்லப்படும் எண்ணற்ற நாடக மன்றங்களைப் போல நாமும் ஒரு நாடக மன்றத்தை அமைக்க முற்படவில்லை. எம்முடைய இந்த முயற்சி தமிழ் நாடகத்துறையின் முன்னேற்றம் கருதிச் செய்யப்படும் ஒரு சோதனையே. இந்தச் சோதனை வெற்றி பெற்று, அந்த வெற்றியைக் கண்டு இதைப்போன்ற சிறந்த நாடகங்களை நல்ல முறையில் மேடையேற்ற வேறு மன்றங்களும் முன்வருமானால், அதுவே தமிழ் நாடகத்துறைக்கு நாம் செய்த சேவையென்று மனநிறைவு பெறுவோம்.

நாடகத்தை நடத்துவதற்கு வேண்டிய செலவுகளை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று முன்வந்ததைத் தவிர நான் பிரமாதமாக வேறொன்றும் சாதித்து விடவில்லை. ஆனால் அப்படி முன்வந்தமையால் பெரிய உண்மையொன்றினை நான் உணர்ந்து கொண்டேன்.

கலைத்துறையில் உண்மையான ஆர்வமுள்ளவர்களுக்கு அவர்களை, அவர்களின் திறமைகளை, இனங்கண்டு வழிநடத்தக் கூடிய, அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான , தலைவர் எவரும் இன்று நம் நாட்டில் இல்லையென்பதே அந்த உண்மையாகும். இருந்திருந்தால் இத்தகைய பரிசோதனை எப்பொழுதே நடைபெற்றிருக்கும்.

அனுபவத்திலும் திறமையிலும் மற்றேல்லாவகையிலும் என்னிலும் மேலானவர்கள், பல்வேறு பதவிகளிலும், துறைகளிலும் மன்றங்களிலும் உள்ள சிறந்த நடிகர்கள் என்னை ஒரு பொருட்டாக மதித்து, தங்கள் நேரத்தையும், சொந்தப் பணத்தையும், செல்விட்டு இந்த நாடகத்தைச் சிறப்பிக்க முன்வந்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்னைப் போலவே அவர்களும் தமிழ் நாடகத்துறையின் வளர்ச்சி பற்றி தம்மனவளவில் சிந்தித்து, இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தமையேயாகும். அல்லாவிட்டால் இவ்வளவு திறமைசாலிகளையும் ஒரே குழுவாகத் திரட்ட முடிந்திருக்காது.

இவர்கள் அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். சிறந்த நாடகம் எப்படி அமைதல் வேண்டுமென்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்கத்தக்க வகையில் நம்நாட்டின் திறமை மிக்க நடிகர்கள் ‘மதமாற்றத்தை’ இன்று நடித்துக் காட்டுகிறார்கள். அவர்களையும் என்னையும் பொறுத்தவரையில் இந்நாடகம் ஈழத்து நாடகத்துறையில் ஒரு விழிப்புணர்ச்சி உண்டாவதற்கான முன்னோடியாகும். அந்த நோக்கத்துடன், ஈழத்து நாடக வரலாற்றில் ஒரு முக்கியமான பணியைச் செய்கிறோம் என்ற பணிவுடனும் பிரக்ஞையுடனும் இந்த நாடகத்தை ரசிகப் பெருமக்களாகிய உங்களுக்குச் சமர்ப்பிக்கின்றேன்.

16-5-1967