என்னோடு வந்த கவிதைகள்—2 & 3

என்னோடு வந்த கவிதைகள்- 2 

- பிச்சினிக்காடு இளங்கோ “இட்டதோர் தாமரைப்பூ
 இதழ்விரிந் திருத்தல் போலே
 வட்டமாய்ப் புறாக்கள் கூடி
 இரையுண்ணும்; அவற்றின் வாழ்வில்
 வெட்டில்லை; குத்து மில்லை;
 வேறுவே றிருந்த ருந்தும்
 கட்டில்லை;கீழ்மேல் என்னும்
 கண்மூடி வழக்க மில்ல.”    பாரதிதாசன்

அந்த இளமைப்பரவத்தில் பாடிய இன்னொரு பாடல் உலகநாதர் இயற்றிய, உலக நீதியில் இடம்பெற்ற

“ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
 ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
 வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
 போகவிட்டுப் புறம்சொல்லித் திரிய வேண்டாம்” என்ற பாடல்.

இதுபோன்ற பாடல்களைச் சின்னவயதில் எந்தச்சிந்தனையுமில்லாமல் படித்தகாலம் நினைவுக்குவருகிறது. நீதியை; அறத்தை;வாழ்வியல் உண்மைகளைச் செய்யுளாகப் பாடிய நினைவுகளன்றி கவிதைபற்றிய எந்த ஈர்ப்பும்; நினைப்பும் இல்லாமலிருந்ததுதான் நினைவுக்கு வருகிறது.

 

பக்கத்து ஊரான தாமரன்கோட்டையில் நடைபெறும் சிவன்கோவில் திருவிழாவில் கலந்துகொள்ள நண்பர்களுடன் சென்றபோது நான்மட்டும் சினிமா பாடல் புத்தகம் வாங்கியது நினவுக்குவருகிறது. பாடிப்பழகுவதற்காக என்னைவிடமூத்தவர்கள் சினிமா புத்தகத்தை வாங்கிப்படித்துப் பாடிப்பழகியதும் நினைவுக்கு வருகிறது. ஆனால், நான் பாடல்களுக்காக வாங்கவில்லை; பாடுவதற்காகவும் வாங்கவில்லை. பாட்டுப்புத்தகத்தை கையிலெடுத்து வைத்துக்கொண்டு பாடலாசிரியர் யார்? யார்யார் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள் என்று தேடினேன். யார்யார் கவிஞர்கள் என்றதேடல் இருந்தது. குறிப்பாக “நாடோடி மன்னன்” பாடல்புத்தகத்தில் யார்யார் எழுதியிருக்கிறார்கள்? என்று தேடினேன்.மாடப்புறா பாடல் புத்தகத்தையும் புரட்டினேன். இப்படிக் கவிஞர்களைத் தேடியபோதுதான் கவிதைபற்றிய கவனமும் வந்திருக்கவேண்டும். கவிஞர்களைத்தேட காரணமே அவர்கள் எழுதியபாடல்கள்தான். பாடல்களை வைத்துக்கொண்டு கவிஞர்களையும் கவிஞர்களைவைத்துக்கொண்டு பாடல்களையும் தேடினேன். ஒருகாலத்தில் எனக்குப்பிடித்த கவிஞர்கள் எழுதியிருக்கிறார்களா என்று எதிர்பார்த்ததும் உண்டு. அப்படித்தேடிப்படித்த கவிஞர்களின் பெயர்கள்: உடுமலை நாராயணகவி, மருதகாசி , தஞ்சை இராமையாதாஸ் கவி கா..மு.செரிfபு , கவிஞர் கண்ணதாசன் , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கு.மா.பாலசுப்பிரமணியம், அவினாசி மணி, ஆலங்குடி சோமு, சுரதா, மாயவநாதன், இலட்சுமண வாத்தியார், எஸ்.டி.சுந்தரம், இன்னும் பலர்.

பட்டுக்கோட்டையில் உயர்நிலைப்பள்ளியில் எட்டாவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது தமிழாசிரியராக இருந்தவர் புலவர் பாஸ்கரன். மயிலாடுதுறையைச்சேர்ந்தவர். பாரதியைப்போல் முறுக்கு மீசைவைத்துக்கொண்டு வெண்ணிற ஜிப்பா அணிந்துகொண்டு கம்பீரமாக வகுப்பிற்கு வருவார்.கடுமையானவர். தமிழில் அனைவரும் அதிக மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பாடம் நடத்துவார். மாணவரிடையே உயர்வு தாழ்வு பார்க்காதவர். எல்லோருக்கும் திறமை இருக்கிறது என்ற நம்பிக்கை உடையவர். ஒருநாள் பள்ளியில் பாரதியின் பாடலை ஒப்புவிக்கும் போட்டி அறிவிப்பு வந்தது. போட்டி என்றால் ஒருசிலரே கலந்துகொள்ளும் சூழ்நிலையும் ஒரு சிலரே பரிசுபெறும் நிலையும் இருந்துவந்தது. எங்கள் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் கலந்துகொள்ள வைத்தார். அனைவரும் சென்று பெயர் கொடுத்து போட்டியில் ஒப்புவிக்கும் அந்தப்பாடல்பகுதியைத் தெரிந்துவந்தோம். அனைவரையும் மனப்பாடம் செய்யவைத்தார்.மூன்று நாள்கழித்து அனைவரையும் வகுப்பில் ஒப்புவிக்கச்செய்தார். எப்படிப்பாடலைச் சொல்லவேண்டும் என்று கற்றுத்தார். அவரே பேசிக்காட்டினார். உணர்வோடும்; பாவத்தோடும்;ஏற்ற இறக்கத்தோடும் பாரதியின் பாடலை மேடையில் பேச பயிற்சியும் தந்தார்.

போட்டி நடைபெறும் நாள்வரை வகுப்பில் அனைவருக்கும் பயிற்சி தொடர்ந்தது. போட்டிநாளன்று அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் கலந்துகொண்டோம். அப்போதுதான் ஒரு கவிதையை வாசித்ததும், மனப்பாடம் செய்து ஒப்புவித்ததும் என் வாழ்வில் நிகழ்ந்தது. அதுதான் கவிதைக்கும் எனக்கும் நிகழ்ந்த நேரடித் தொடர்பாகும். பாரதியின் பாடலை நானும் உணர்வோடு ஒப்புவித்தேன். அது ஒரு புதிய அனுபவம். இன்னும்கூட அந்த உணர்வை நான் அடைகாத்துவருகிறேன். அன்றைய போட்டியில் எனக்குப் பரிசில்லை. எனக்குமட்டிமல்ல எப்போதும் பரிசுகளைத் தட்டிச்செல்லும் நண்பர்களுக்கும் பரிசில்லை. வகுப்புக்கு ஒழுங்காக வர இயலாத; படிக்கும்போதே ஓவியராக விளங்கிய; ஒர் ஏழைமாணவனான இராமானுஜத்திற்குக் கிடைத்தது. பாரதியின் பாடலை அவ்வளவு உணர்வோடு, நடிப்புத்திறன்கூட்டி பேசிக்காட்டினான். அனைவரும் பார்த்து ரசித்தனர். ரசித்துச் சிரித்தனர். பரிசுபெற்ற நண்பன் இராமானுஜத்தைக்காட்டிலும் தமிழாசிரியர் பாஸ்கரன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அன்று ஆற்றல்மிகு ஓர் இளைஞனைக் கண்டுபிடித்தார். இன்று அந்த இராமானுஜம் எங்கே? எனக்கு அந்த வாய்ப்பே பரிசுதான். இல்லையெனில் பாரதியின் பாடலைத் தேடிப்படிக்கும் காலம் எனக்கு எத்தனை ஆண்டுகளுக்குப்பின் கிடைத்திருக்கும் என எண்ணிப்பார்க்கிறேன்… அந்த வாய்ப்பைத்தந்தவர் தமிழாசிரியர் பாஸ்கரன்.. போட்டியில் என்னை ஆசிரியர் பாஸ்கரன் கலந்துகொள்ளவைத்ததால் எனக்கும் பாரதியின் கவிதைக்கும் ஓர் அறிமுகம் நிகழ்ந்தது. இன்றைக்கும் அந்தப்பாடலை நினைக்கும்போது; அசைபோடும்போது; சொல்லிப்பார்க்கும்போது ஒரு தனி உணர்வு என்னைக்கவ்விக்கொள்கிறது. இதோ பாரதியின் அந்தப்பாடல்…

பார்: சுடர்ப்பரிதியைச் சூழவே படர்முகில்
எத்தனை தீப்பட் டெரிவன; ஓகோ!
என்னடி! இந்த வன்னத் தியல்புகள்!
எத்தனை வடிவம்!எத்தனை கலவை!
தீயின் குழம்புகள்! செழும்பொன் காய்ச்சி
விட்ட ஓடைகள்!வெம்மை தோன்றாமே
எரிந்திடும் தங்கத்தீவுகள் பாரடி
நீலப் பொய்கைகள் அடடா!நீல
வன்ன மொன்றில் எத்தனை வகையடி!
எத்தனை செம்மை! பசுமையுங் கருமையும்
எத்தனை! கரிய பெரும்பெரும் பூதம்!
நீலப் பொய்கையில், மிதந்திடுந் தங்கத்
தோணிகள்,சுடரொளிப் பொற்கரை யிட்ட
கருஞ்சிக ரங்கள்!காணடி ஆங்கு
தங்கத் திமிங்கிலம் தாம்பல மிதக்கும்
இருட்கடல்!ஆகா எங்கு நோக்கிடினும்
ஒளித்திறள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம்!” 

அன்றிலிருந்து பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற பாடல்களை மதிப்பெண்களுக்க்காக மட்டுமின்றி தமிழ்ச்சுவைக்காக, கற்பனைக்காக,கவிதை நயத்திற்காக கொஞ்சம் கவனித்தேன் என்பதும் நினைவுக்கு வருகிறது. 

                                - பிச்சினிக்காடு இளங்கோ “ஞானமிகுந்த பூசாரிகளை அணுகினேன்
அவர்களின் சடங்குகள் முடியும்வரை காத்திருந்தேன்
கடவுளையும் சாத்தானையும் சந்திக்க
அவர்கள் தத்தம்வழி செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்
என் கேள்விகளால் அவர்கள் சலிப்படைந்தனர்
அவர்கள் அதிகமாய் ஒன்றும் அறிந்திருக்கவில்லை.
அவர்கள் வெறும் நிர்வாகிகள்”   – பாப்லோ நெரூடா

 


கவிதையை எப்போது தேடினேன்? கவிதை எப்போது என்னைத்தேடியது? எப்போது எனக்கும் கவிதைக்கும் நெருக்கம் வந்தது என்பதை மூழ்கி மூழ்கி நினைவுச்சுருளை அவிழ்க்கும்போது அது தூரத்து வானம்போல நீள்கிறது. அலைந்து திரிந்த காலங்களையும் நிலங்களையும் நிலைகளையும் சரியாகப்பதிவுசெய்ய இயலாமல்போகிறது. கையில் எடுக்கமுடியாத நீர்க்குமிழியாகிறது.

“ஒன்றுமே அறியாதவனின் தூய அறிவைப்போன்ற
மங்கலான முதல்வரியை நான் எழுதினேன்” 
என்று சிலி நாட்டுக்கவிஞர் பாப்லோ நெரூடா சொன்னதுபோல் எட்டாவது வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும்போது  அப்படித்தான் மங்கலாக

“ஊரு போற்ற
உம்மைவாழ்த்த
நாடு போற்ற
நம்மை வாழ்த்த”

என்று எழுதியது நினைவுக்கு வருகிறது. எழுதிப்பார்த்துச் சிரித்துக்கொண்டதும் நினைவுக்கு வருகிறது. அங்கிருந்துதான் எழுத்தைத் தொடங்கினேன். ஆனால் தொடரவில்லை. அறிஞர் அண்ணா முதல்வராகப் பதவி ஏற்றபின் வானொலியில் ஆற்றிய உரையைக்கேட்டுவிட்டு அடுத்தநாள் வகுப்பிற்கு வந்த தமிழாசிரியர் புலவர் பாஸ்கரன்  மிகவும் மகிழ்ச்சியோடு” இன்றுதான் நான் ஒரு தமிழாசிரியனாகப் பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார். அண்ணா தன்  உரையில் தமிழகத்தில் ஆங்காங்கே நாளங்காடி,சிற்றங்காடி, சிறப்பங்காடிகள் திறக்கப்படும் என்று குறிப்பிட்டாராம். ‘அங்காடி’ ‘,சிறப்பங்காடி’ போன்ற தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தியதுதான் அந்த மகிழ்ச்சிக்குக் காரணம் என்றார். அவர் காங்கிரஸ்காரராக இருப்பாரோ என்று எண்ணியஎங்களுக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது. பத்தாவது வகுப்பில்  படித்துக்கொண்டிருக்கும்  போதுதான் அண்ணா மறைந்துவிட்டார். நகரங்கள்,கிராமங்கள் ஒரு பெரும் பாதிப்புக்கு ஆளானதைப் பார்க்கமுடிந்தது. அண்ணா வைப்பார்த்ததில்லை. பேச்சைக்கூட முழுமையாகக்கேட்டதில்லை. ஆனால் அவர் என்னையும் பாதித்துவிட்டார். வானொலி,செய்தித்தாள்கள் அண்ணாவைப்பற்றிப் பேசின.பார்த்தவர்களெல்லாம் அண்ணாவின் பெருமைகளைப்பேசினார்கள். வானொலி சோக இசை எழுப்பிக்கொண்டிருந்தது. எங்கும் சோகம். எதிலும் சோகம். அண்ணா நல்லவர், திறமைகளைக்கண்டு பொறாமைப்படாதவர்.தோழமையை வளர்த்தவர்.தமிழ் நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர்வைத்தவ்ர். தம்பி என்று பாசம் இழையோட தொண்டர்களை அழைத்து கழகத்தை வளர்த்தவர்.பேச்சாற்றல் மிக்கவர்.அமெரிக்க சென்று யேல் பல்கலைக்கழகத்தில் திருக்குறள் வகுப்பு எடுத்தவர். கம்ப இராமயணம் பற்றி பட்டிமன்றத்தில் பேசி தழிழறிஞர்களை வென்றவர்.பெரியாரின் சீடர். ஆட்சிக்கு வந்ததும் முதலில் பெரியாரைச் சந்தித்து ஆட்சியை அவருக்கு அர்ப்பணித்தவர். கழகத்தின் தலைவர் இடத்தை காலியாகவைத்திருந்தவர். கறைபடியாத கரத்திற்குச் சொந்தக்காரர், மனிதநேயமிக்கவ்ர், நிறைய படிப்பவர்.  விழித்திருந்து எழுதுபவர். என்றெல்லாம் கேள்விப்பட்டிருந்தேன். என்னால் சும்மா இருக்கமுடியவில்லை.

அவருடைய மரண ஊர்வலத்தில் கலந்துகொள்ளச்சென்ற தொண்டர்கள் கொல்லிடம் பாலத்தில் இறந்ததும் அதிர்ச்சியைத்தந்தது . உலகச்சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற மரணம் அண்ணாவின் மரணம்.ஆம்! 1969 பிப்ரவரி 3, மக்களெல்லாம் கடலென திரண்டு அண்ணா…அண்ணா.. என் அலறி அழுதநாள் அந்த நாள். சுமார் ஒன்றரைக்கோடி மக்கள் சவ அடக்கத்தில் கலந்துகொண்டார்கள் என்று செய்திஊடகம் தெரிவித்தாக ஆர். கண்ணன் எழுதிய “அண்ணா’ என்ற ஆங்கிலப்புத்தகத்தில் குறிப்பிடுகிறார். நானும் எழுதுகோல் எடுத்து எழுதிவிட்டேன். சோகம் ததும்பும் ஒரு நெடியகவிதையை எழுதிவிட்டேன். அவற்றில் ஒருவரிகூட இப்போது என்னிடம் இல்லை. என் நினைவிலும் இல்லை. ஆனால், கலைஞர் அவர்கள் பாடிய இரங்கல் கவிதைபோன்று என் கவிதையும் அமைந்திருந்தது. ஒரு ஒத்த சிந்தனை இரண்டிலும் இருந்தது. சுத்த சுயம்பாக கவிதை பிறந்தது அப்போதுதான். ஒப்பனையில்லாத ஒரு கவிதை எனக்கும் வாய்த்தது. எந்தக் கவிதையும் எந்தக்கவிஞரும் என்னைப்பாதிக்காத சூழலில் பிறந்த கவிதை. நான் எழுதிய கவிதையை மாணவ நண்பர்களிடம் காட்டினேன்.படித்தவர்கள் உடனே வகுப்புஆசிரியரிடம் காட்டிவிட்டார்கள்.. ஆசிரியரின் பெயர் முனியமுத்து.  அண்ணாவின் பற்றாளர். திராவிட இயக்கக்காரர். அவருக்கு ஓர் அடைமொழியுண்டு. அதாவது” முனியமுத்து குனியகுத்து”. நண்பர்கள் என் கவிதையை அவரிடம் காட்டியது ஒரு நப்பாசையில்தான். நிச்சயம் எனக்கு குத்து உண்டு என்பதே அவர்களின் ஆசை. நானும் அதைத்தான் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன். ஆனால்,ஆசிரியர் மவுனமாகிவிட்டார். வகுப்பில் ஒரு மவுனம் குடிகொண்டது. என்ன நடக்கப்போகிறதோ என்று எதிர்பார்த்தவேளையில் “பரவாயில்லையே. நல்லா இருக்கே” என்று பாராட்டிவிட்டார். அவர்தான் முதலில் என் கவிதையைப்பாராட்டியவர். என்கவிதைப்பயணத்தைத் நல்லதமிழில் தொடங்கிவைத்தவர். வழக்கம்போல் முதுகில் குத்தாமல் தட்டிக்கொடுத்து நடைபோட வைத்தவர்; கவிதையில் தடம்போடவைத்தவர். அன்றிரவே பட்டுக்கோட்டையில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கருகில் உள்ள காந்திபூங்காவில் இரவில் நிலவைப்பார்த்து எழுதத் தொடங்கிவிட்டேன். நிலவின் ஒளியில் நான் நனைந்தேன். உணர்ச்சிவயப்பட்டேன். ஏதேதோ எழுதினேன்.  கவிராஜன் என் நினைத்து கர்ஜித்தேன். எதுவும் இப்போது என்னிடம் இல்லை. அடுத்தநாள் மாலை என் கையில்’ கலைஞரின் கருத்துரைகள்’ என்ற சிறிய நூல். சிங்கப்பூரிலிருந்து என் சித்தப்பா மாரியப்பவிசுவராயர் கொண்டுவந்தது. இன்னொரு சித்தப்பா சிவசாமிவிசுவராயர் சிங்கப்பூரில் தி.மு.க வை வளர்த்தவர்களில் ஒருவர். இவர்களால்தான் எனக்குத்  திமுக அறிமுகம். அந்த சிறிய நூலை படித்தேன். சிறிய நூலென்றாலும் என் சிந்தையைக் கிளறிய நூல். இந்திமொழியைத் தாக்கி கலைஞர் எழுதியது என்னைப்பாதித்தது. இந்தியைப்பார்த்து “ கடையேழு வள்ளல்கள் இல்லையடி கள்ளி” என்று ஏசி எழுதியது இன்னும் இருக்கிறது கல்வெட்டாய்.  “கவிதை எழுதுகிறவன் நிறைய படிக்கவேண்டும் “என்று உவமைக்கவிஞர் பின்னாளில் சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது.

அண்மையில்கூட அடையாறில் நடைபெற்ற கவிதைச்சிறகுகள் அமைப்பின் ஆண்டுவிழாவில்(10.10.2010)கவிக்கோ அப்துல் இரகுமான் “ஓராண்டுக்கு எழுதுவதில்லை.படிப்போம் என்று முடிவுசெய்யுங்கள்” என்று சொன்னதையும் நினைவுப்படுத்துகிறேன்.ஆனால் அன்று கவிஞன் என்ற முத்திரை கிடைத்ததால் படிப்பதற்கு நான் கையிலெடுத்த முதல் நூல்; கையில் கிடைத்த் முதல் நூல் ” கலைஞரின் கருத்துரைகள்” என்ற அந்தச் சின்ன நூல்தான். அதுதான் பாடப்புத்தகம் தவிர்த்து நான் தேடியெடுத்த முதல் புத்தகம். அண்ணாவைப்பற்றி நான் எழுதிய கவிதை கிடைக்காத சோகம் இப்போதும்  எனக்கிருக்கிறது. இருந்தாலும் அண்ணாபற்றி பலர் எழுதிய கவிதைகளைப் படித்திருக்கிறேன். அவற்றுள் ஒன்றான கவியரசு கண்ணதாசன் கவிதை இதோ:

“மங்கையர் சிரிப்பி னுள்ளே
வாலிபக் கிளர்ச்சி தேங்கும்
வாணிகர் சிரிப்பி னூடே
வாணிபத் திறமை தேங்கும்
பொங்குமென் அருமை அண்ணாப்
புலவனின் சிரிப்பினுள்ளே
சங்கமுத் தமிழும் நாட்டுச்
சனத்திரள் யாவும் தேங்கும்
கண்படு தூரம் மட்டும்
காளையர் கூட்டம்-என்றும்
மண்படு கடலோ ரத்தில்
வளர்தலைப் பெருக்கம்-அங்கு
பண்படு மொழியான் எங்கள்
பைந்தமிழ் அமுதச் சொல்லான்
தன்படைப் பெருக்கத் தால்இத்
தாரணி சிறுக்கக் கண்டான்!

வீசுமென் தென்றல் போலும்
வெண்ணில வொளியே போலும்
காசறு மலரின் மேவும்
கவின்மலை மணமே போலும்
பாசமும் அறிவும் சேர்க்கும்
பனிமொழி அடுக்கை வாரி
வீசினான்! பலபேர் அஃது
பாட்டென விளம்பிப் போனார்”

(வரும்)

pichinikkaduelango@yahoo.com