காலக்கெடு.
– வேதா. இலங்காதிலகம். ஓகுஸ், டென்மார்க் –
வெளிப்படும் திறமைப்பாடு
நெறியோடு எடுத்தாட
காலக்கெடு, திட்டமிடலின்
வரைகோட்டுக் கட்டுப்பாடு.
வார்த்தையாடு, விளையாடு, முறையீடென
நடைபோடவே உண்டு காலக்கெடு.
காலக்கிரமத்தில் கடமைகள் புரிந்தால்
காலக்கெடுவும் ஒரு மேம்பாடு.
உருப்படும் உளப்பாடுடையோனுக்குக்
காலக்கெடு, கைகொடுக்கும பற்றுக்கோடு.
காலக்கெடுவை மதிக்கும் உளப்பாடு
ஒருமைப்பாட்டின் வெளிப்பாடு.
காலச்சக்கரச் சுழல்வில் பருவங்களிடுகிறது
காலக்கெடு, காலப்பயிர்விளைவிற்கு.
காலக்கெடுவில் கிரகங்கள் நடமாடும்.
காலக்கெடுவுண்டு கல்யாணம், குழந்தை பெற.
காலக்கேடு யார் மதிக்கிறார் இவைகளை!
காலக்கெடுவால் விடுதலையன்றோ வேண்டுகிறார்!
காலக்கெடுவிற்குள் காரியமாற்றுதல்
காலையில் ஒரு அக்கப்பாடு.
காலக்கெடு உருப்படாத ஒரு
சாபக்கேடு என்பான் சோம்பேறி.
பொதுவாகக் கூறினால் காலக்கெடுவும்
ஒரு இலட்சுமணன் கோடு தான்.
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்
26-3-2008.
மாண்பிழக்கும் தமிழினம்
– வே.ம.அருச்சுணன் – மலேசியா –
தமிழ் உயிர் என்பார்
அரைகுறை கற்றோர்
தமிழ் சோறு போடுமா?
மெத்தப் படித்த பஞ்சோந்திகள்
பணத்திற்காகப் பெற்ற தாயைக் கொல்லும்
பாதகர்கள்…….!
தமிழ்ப்படிப்போர் மூடர் என்போர்
தமிழ்த் துரோகிகள்
தமிழ் மாண்பையும் மரபுகளையும்
அழிக்கும் எத்தர்கள்
இவர்கள் கால்பதியும் பூமி
வெந்து போகும் கொடியோர்
விடும் மூச்சுக்காற்று மனித
இனத்தை அழிந்தே தீரும்………..!
மொழியைத் தொலைத்தவன்
இனத்தை அழித்தவன்
தமிழனைக் குழிதோண்டிப் புதைத்தவன்
இவன் படையில்
தமிழ்த் தலைவர்கள்
தொலை நோக்குப் பேராசிரியர்கள்
செல்வச்சீமான்கள்………. உலகை
உருமாற்றம் செய்யும் சிற்பிகள்
என்ன புகழ் பெற்றாலும்
பெற்ற தாயை மறக்கும்
மட்டிகள் வேரை மறப்பது
கேடுகெட்ட தமிழ் இனம் சிதைவது
கருவின் குற்றமா?
கொடிகட்டி வாழ்ந்த தமிழனுக்கு
இயற்கை விட்ட சாபமா?
யார் சொன்னாலும் கேட்க மறுக்கும்
மண்டை கனமா அடங்கா திமிரா?
நாள்கள் எண்ணப்படுவதை
உணரா களிமண்களா?
தமிழ்க்காவலர்களே………!
துணிந்து சொல்லுங்கள்
தறிகெட்டு திரிந்து
தமிழைத்திட்டமிட்டு அழிக்கும்
தறுதலைகளுக்குச் செவினியறைக் கொடுக்கலாமா?
கொத்துக் குண்டுகளால் துளைக்கலாமா?
தமிழ்க்காவலர்களே……..!
உலகின் வழிகாட்டிகளே
நல்ல முடிவுகள் பிறந்திட வேண்டும்
செம்மொழி செழுமையுறத் திடமான
முடிவுகள் இன்றே முன்னெடுக்க வேண்டும்……!
தமிழர்கள் இணைய வேண்டும்
தமிழும் தமிழரினமும்
உரிமையுடன்
குறையின்றி வாழ வேண்டும்
தமிழ் விந்துக்குப் பிறந்த
அனைவரும் சிந்திக்க வேண்டும்……..!
arunveloo@yahoo.com / arunveloo03@gmail.com
முல்லைஅமுதன் கவிதைகள்
1.
அன்பைப்
போதித்தாய்!
அப்பாவிடமிருந்து
அறிவைப்
பெற்றுத் தந்தாய்!!
கருணை,காருண்யம்
பற்றியெல்லாம்
அக்காள் மூலம்
சொல்லவைத்தாய்.
சண்டைகள் வேண்டாம்
அகிம்சையே போதும்
என் அண்ணன் சொல்ல
நீயும் மகிழ்ந்தாய்..
மனிதனாய் இரு என்றாய்.-
நேர்மைதான் மனிதனின்
அச்சாணி
என்றும் சொன்னாய்.
எதையோ சொல்லாமல்
போனதாய் இப்போது
உணர்கிறேன்.
குழிபறிக்கும்
நண்பர் கூட்டம்
பற்றி சொல்லவேயில்லை.
கத்தியுடனும்,
கயமை உணர்வுகளுடனும்
வலம் வரும் எதிரிகளிடம்
எச்சரிக்கையாக இரு
எந்த ஆசானும்
சொல்லவேயில்லை.
சொல்லியிருக்கலாம்.
சொல்லாமல் விட்டதும்
நீ-
படித்த வரலாற்றுத் தவறோ?
உனக்கென்ன
உயர
படமாய்த் தொங்கிகொண்டாய்..
கருனைக்கொலை
செய்ய எந்த மருத்துவம்
கற்றுத் தந்தது?
சொல்லியிருக்கலாம்..
சொல்லாமல்
விட்டுச் சென்றுவிட்டாய்..
நண்பனைப்
புரியாதபடியும்,
எதிரியை இன்னும்
அடையாளம் காணமுடியாதபடியும்
அதே
வரலாற்றுத் தவறு
கற்றுத் தந்திருக்கிறது.
மன்னித்துவிடு..
என் வரலாறு
சொல்ல
என் பிள்ளை பற்றி
சிந்திக்க வேண்டும் நான்..
மன்னித்துவிடு!
2.
அப்பாவின்
மரணம்
என்னை உலுப்பிவிட்டிருந்தது.
யார் யாரோ வந்தார்கள்.
போனார்கள்.
கூட்டமாய்
பெண்கள் அழுதனர்…
ஆண்கள் அப்பா
பற்றிய கதைகளை
தங்களுக்குள்
பேசிக்கொண்டனர்.
தலைவிரி கோலமாய்
அம்மா
அழுதுகொண்டிருப்பது
துல்லியமாய் தெரிந்தது.
அப்பாவின் மரணம்
நிகழ்ந்திருக்கக்கூடாது.
ஆனா
சொல்லித்தந்த விரல்கள்…
அடிக்காடி
தலையில்
வைத்து
நல்லாய் இரு
என்கிற கைகள்..
கட்டியணைத்த படி
தூங்குகையில்
நெஞ்சின் மயிர்க்காட்டை
துளாவியபடி
தூங்கிப்போகிற சுகம்…
கதைகள் பல
சொல்லி
நல்லவளாய் இரு
என்று சொல்லி
மகிழும் அவரின்
புன்னகைத்த முகம்…
கணக்கில்
எப்போது
கேள்வி கேட்டாலும்
அமைதியாய் சொல்லித்தரும்
அப்பாவின்
மரணம்
நிகழ்ந்திருக்கக்கூடாது.
ருதுவான போது
கைகளில்
அள்ளி
என் மகள்
என்று சந்தோசித்த பொழுதுகள்…
நிறையவே பிடிக்கும்…
அவரின் நெருக்கம்
எனி…
யாரோ இருவரின்
சண்டையில்
குறுக்கே வந்த
அப்பாவின்
கழுத்தை
பதம்
பார்த்த அந்த
யாரோவின் கத்தி
என் அப்பாவை
மரணமாக்கியது..
என் அப்பா
எனக்கு வேண்டும்..
யாரும்
அண்ணனாகலாம்..
யாரும்
யாருமாகலாம்.
அப்பா..
என் அப்பா..
mullaiamuthan@gmail.com
கோடியில் ஒருவனின் தேன்வதை
– மெய்யன் நடராஜ் – இலங்கை. –
மழைவரு மென்றுக் குடையினைத் தேடிட
==முகிலென அலையும் கூந்தல்
அழைப்பது போலிமை பிரிவதில் தெரிந்திடும்
==அழகிய விழிகளில் காந்தம்
குழைந்திடும் குறுநகை குளிர்மழை பொழிகிற
==குமரியின் இதழெனும் ஊற்று
கழைதனில் புகுந்து காதினில் இசைதர
==களிப்புடன் தவழ்ந்திடும் காற்று.
இமாலய மிரண்டை எளிதாய் சுமக்கும்
==இடைசோ மாலிய வறுமை.
அமாவா சைதினம் இவள்வெளி வந்தால்
==அதுவே நிலவின் பெருமை.
சுமாரெழி லெல்லாம் இவள்பே ரெழிலால்
==சுருட்டியே வாலினை அடுத்த
விமானத் திலேறி வேறொரு தீவக
==விலாசம் பெற்றிட முனையும்.
கணவரைத் தேடும் கனவறைக் குள்ளே
==கவிதை எழுதிடும் யாரோ
மணவறை வருவதை மனவரை சொல்ல
==மகிழ்வினை பொழிகின் றாளோ?
அணைப்பவ னுக்கே அனைத்து மென்று
==அழகினைப் பதுக்கிய தேவதை
குணமதை அறிந்து குலமக ளாக்கும்
==கோடியி லொருவனின் தேன்வதை.
கழை= மூங்கில்