திரும்பிப்பார்க்கின்றேன்: தொடரும் கனவுலகில் வலி சுமக்கும் நூலக நினைவுகள்

 – யாழ். பொது நூலகம்   இனவாதிகளினால்   1981   மே (31-05-1981) மாதம்  எரிக்கப்பட்டு    முப்பத்திமூன்று   வருடங்களாகின்றன.   அதன் நினைவாக   இந்தப்பதிவு. –

யாழ். பொது நூலகம்   இனவாதிகளினால்   1981   மே (31-05-1981) மாதம்  எரிக்கப்பட்டு    முப்பத்திமூன்று   வருடங்களாகின்றன.   அதன் நினைவாக   இந்தப்பதிவுமுருகபூபதிஎனக்கு     அப்போது    பதினைந்து  வயதிருக்கும்.    நீர்கொழும்பில் எங்கள்   வீட்டிலிருந்து    ஒன்றரை    கிலோ மீட்டர்   தூரத்தில் புத்தளவெட்டு வாய்க்காலும்    (டச்சுக்கார்கள் தமது கோட்டைக்குச்  செல்வதற்காக    தமது   ஆட்சிக்காலத்தில் உருவாக்கியது)    இந்து    சமுத்திரமும்   சங்கமிக்கும்   முன்னக்கரை என்ற    இடத்திற்குச்சமீபமாக    வாழ்ந்த   டேவிட்  மாஸ்டர் என்பவரிடம்    கணிதம்    படிப்பதற்காக  (ரியூசன் வகுப்பு) சென்றுவருவேன். நீர்கொழும்பு   பழைய  பஸ்நிலையத்தை   கடந்துதான் முன்னக்கரைக்குச்செல்லவேண்டும்.    அந்தப்பாதையில்  நீர்கொழும்பு மாநகர    சபையின்    பொது  நூலகம்   அமைந்திருந்தது.   ரியூசன்   முடிந்து வரும்   மாலைநேரங்களில்    என்னை    அறியாமலேயே    எனது   கால்கள்   அந்த    நூலகத்தின்    வாசலை    நோக்கி    நகர்ந்துவிடும்.    அங்கே    குமுதம்  –   கல்கண்டு  –  கல்கி  – ஆனந்தவிகடன்    உட்பட     இலங்கைப்பத்திரிகைகளையும் படித்துவிடுவேன்.     மு.வரதராசனின்     பெரும்பாலான    நாவல்களையும்    அங்குதான்    படித்தேன்.
கல்கி    வெள்ளிவிழாவை    முன்னிட்டு   நடத்தப்பட்ட    நாவல் போட்டியில்    பரிசுபெற்ற    உமாசந்திரனின்    முள்ளும்  மலரும் (பின்னர்  ரஜனிகாந்த் – ஷோபா   நடித்து   பாலமகேந்திராவின் ஒளிப்பதிவுடனும்  மகேந்திரனின்   இயக்கத்திலும்   வெளியான  படம்) ரா.சு.நல்லபெருமாளின்  கல்லுக்குள்    ஈரம்  –     பி.வி.ஆரின் மணக்கோலம்     ஆகியனவற்றையும்     அந்த     நூலகத்தில்தான்   படித்து    முடித்தேன்.    அக்காலம்   முதலே    எனக்கும்    நூலகம்  பற்றிய    கனவு   தொடங்கிவிட்டது.    எங்கள்   வீட்டிலேயே  Murugan Library    என்ற    பெயரில்  ஒரு  நூலகத்தை தொடங்கினேன்.     மாதம்  25   சதம்தான்   கட்டணம்.   எனது  அம்மாதான்    முதலாவது    உறுப்பினர்.    அயலில்   சிலர்  இணைந்தனர்.   அதற்கென   ஒரு Rubber  Stamp  தயாரித்து  சிறிது காலம்    அந்த  நூலகத்தை  நடத்தினேன். ஆனால் –   தொடரமுடியவில்லை.    புத்தகங்களை    எடுத்துச்சென்ற சிலர்    திருப்பித்தரவில்லை.    மனம்  சோர்ந்துவிட்டது.

1971   ஏப்ரில்   கிளர்ச்சியினால்    மாலையில்    ஊரடங்கு    உத்தரவு வந்துவிடும்.     வெளியே    நடமாட  முடியாது.    இப்போது    போன்று அக்காலத்தில்     தொலைக்காட்சியும்    இல்லை.    வீட்டில்    வறுமை தாண்டவமாடியதனால்     வானொலிப்பெட்டியும்    இல்லை.   எனது வாசிப்புப்பழக்கத்திற்கு    மாத்திரம்   வறுமை  வரவில்லை.

சில   நண்பர்களுடன்   இணைந்து   வளர்மதி    நூலகத்தை    வீட்டில் ஆரம்பித்தேன்.     தற்போது    ஜெர்மனியில்   வதியும்  தேவா ஹெரால்ட்  –   பிரான்ஸில்    வதியும்   செல்வா   என்ற  செல்வரத்தினம் கனடாவில்    வதியும்    ந.தருமலிங்கன் – மினுவாங்கொடையிலிருக்கும்    மு.பஷீர்   –   பத்திரிகையாளர்   நிலாம் இன்று     அமரர்களாகிவிட்ட    நீர்கொழும்பூர்    முத்துலிங்கம்  -ரட்ணராஜ்    (சூட்டி)     பவானிராஜா     தற்கொலை   செய்துகொண்ட சந்திரமோகன்    உட்பட   பலர்    வளர்மதியில்  இணைந்தனர்.   1972 இல்  மல்லிகை  நீர்கொழும்பு  பிரதேச   மலரில்   வளர்மதி  நூலகம் பற்றி  சிறிய    கட்டுரையும்    எழுதினேன். வளர்மதி    என்ற   பெயரில்  ஒரு   கையெழுத்து   இதழும் நடத்தினோம்.    நினைவுகளில்   தங்கி    காலத்துள்   கரைந்துவிட்டது அந்த    வளர்மதி   நூலகம்.

தொழில்  –   திருமணம்  –   இடப்பெயர்வு   –  புலப்பெயர்வு    என்று திசைமாறிப்போனோம்.     எனினும்   எனது    வாசிப்பு    பழக்கமும் நூல்கள்  –   இதழ்களை   வாங்கி    சேகரிக்கும்     பழக்கமும் இன்றுவரையில்    குறையவே    இல்லை.    அதற்கு   1972   ஆம்  ஆண்டு முதல்   நான்    எழுதத்தொடங்கியதும்     முக்கிய   காரணம்    என்று நினைக்கின்றேன்.

1981   மே  மாதம்  யாழ்ப்பாணம்   பொது   நூலகம்    பற்றி    எரிகிறது எனக்கேள்விப்பட்டதும்    அங்கிருந்த    பதட்டமான    சூழ்நிலைகளையும் பொருட்படுத்தாமல்   –   வீட்டிலே     தடுத்தபோதும்    கேளாமல் மறுநாளே    யாழ்ப்பாணம்   புறப்பட்டுச்சென்று    மல்லிகை  ஆசிரியர் டொமினிக்   ஜீவாவுடன்   நேரில்    சென்று   அந்தக்கொடுமையை பார்த்தேன். எனக்கு   என்ன   நேரமோ   காலம்கடந்துதான்   (2003 இல்)   மாரடைப்பு வந்தது.    அந்தச்சாம்பர்     மேட்டைப்பார்த்தபோது   வந்த  நெஞ்சுவலியை    பின்னர்    ஒரு    Activist  ஆக மாறியே    போக்கிக்கொண்டேன். யாழ்.பொது  நூலகம்  எரிக்கப்பட்டது  அறிந்து    வண.பிதா   தாவீது அடிகள்    மாரடைப்பால்  காலமான   செய்தி   ஜீவா  சொல்லித்தான் எனக்குத்தெரியும்.    அவரது   படத்தை   மல்லிகை  முகப்பில் பார்த்துள்ளேன்.

யாழ்ப்பாணத்தில்    நாலாதிசையிலும்   நடமாடிக்கொண்டிருந்த மிலிட்டரி    பொலிஸ்காரர்கள்    மக்களை    மிரட்டிக்கொண்டிருந்தனர். அவர்களின் நடமாட்டமே   மிரட்சியை    ஏற்படுத்தியிருந்தது. எரியுண்ட   நூலகத்தின்    கோரக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தபோது   –  அங்கே  நிற்கவேண்டாம்.   அகன்று செல்லவும் –   என்று   ஒரு   மிலிட்டரி  பொலிஸ்  சொன்னபோது,  புத்தகங்கள்   என்ன    குற்றம்   செய்தன  –    என்று    சிங்களத்தில் கேட்டேன்.    அந்த  பொலிஸ்  என்னை    விநோதமாகப்பார்த்தார்.    ஜீவா என்னை    அழைத்துக்கொண்டு    யாழ்ப்பாணம்   புகையிரத நிலையத்திற்கு    வந்துவிட்டார்.    நிலையம்     வெறிச்சோடிக்கிடந்தது. அன்று    மாலை    உரியநேரத்திற்கு   வரவேண்டிய    இரவு    தபால் ரயிலும்     காங்கேசன்துறையிலிருந்து    தாமதமாகவே    புறப்பட்டது.  ஊரடங்கு   உத்தரவு   பிறப்பிக்கப்பட்டுவிட்டதால்   எனக்கு விடைகொடுத்துவிட்டு   ஜீவா    அருகிலிருந்த   தமது வீட்டுக்குச்சென்றுவிட்டார்.     இரவு   பத்துமணிக்குத்தான்    அந்த மெயில்    வண்டி    வந்தது.     விரல்விட்டு    எண்ணத்தக்க   பயணிகளுடன்   பதட்டத்துடனும்     எனக்கு   சிங்களமும் பேசத்தெரியும்    என்ற    தைரியத்துடனும்    அந்தப் பயணத்தை தொடர்ந்தேன்.     கைத்தொலைபேசி    இல்லாத   அந்தக்காலத்தில் நீர்கொழும்பில்    எனது    வீட்டார்    மிகுந்த    பதட்டத்துடனும் பயத்துடனும்    எனது    நல்வரவுக்கு    காத்திருந்தனர்.  நீர்கொழும்பில்    வாழ்ந்த    இனவாதச்சிந்தனையற்ற   சில முற்போக்கு    எண்ணம்கொண்ட   சிங்கள    இளைஞர்களுடன் இணைந்தேன்.     வண.பிதா  திஸ்ஸ   பாலசூரியா    அவர்களின் தலைமையில்    ஒன்றுதிரண்டோம்.   ஏற்கனவே    இந்த   ஆக்கத்தில் குறிப்பிட்டிருந்த    புத்தள   வெட்டு    வாய்க்காலுக்கு  அருகாமையில் ஒரு    சிறிய   கட்டிடத்தில்   சந்தித்து   யாழ். பொது  நூலக  எரிப்புக்கு கண்டனம்    தெரிவித்து    கூட்டம்   நடத்துவதற்கும்    நூல்கள் சேகரிப்பதற்காகவும்    ஒரு   இயக்கத்தை   ஆரம்பித்தோம்.   அச்சமயம்   நீர்கொழும்புக்கு   அருகாமையில்  சீதுவை என்னுமிடத்தில்   வசித்த    பிரபல   சிங்கள   திரைப்பட   நடிகரும் பின்னாளில்    அரசியல்வாதியாக     மாறியவருமான விஜயகுமாரணதுங்காவும்    எம்முடன்    இந்தக்கூட்டத்தில் இணைந்துகொண்டார்.

யாழ்.பொதுநூலக   எரிப்புக்கு   கண்டனம்   தெரிவித்து  ஜி.செனவிரத்தின    உட்பட   சில   மனித  உரிமை   ஆர்வலர்களுடன் இணைந்து     கொழும்பில்   புதியநகரமண்டபத்தில்   ஒரு பொதுக்கூட்டம்    ஏற்பாடுசெய்யப்பட்டது.   இக்கூட்டத்தில்   அச்சமயம் எதிர்க்கட்சித்தலைவராக   இருந்த    அமிர்தலிங்கமும்    பேசுவதாக இருந்தது.     ஏதும்    குழப்பம்   நேரலாம்    என்று    இறுதிநேரத்தில் பொலிசார்    இக்கூட்டத்திற்கு    அனுமதி    வழங்கவில்லை.  நாம்    அரசின்   உளவுப்பிரிவினரால்    கண்காணிக்கப்படுகிறோம் என்பது    தெரியாமலேயே   அந்த   இயக்கத்தை   முன்னெடுத்தோம். அக்காலப்பகுதியில்    நான்   அங்கம்   வகித்திருந்த   நீர்கொழும்பு இந்து    இளைஞர்   மன்றத்தில்    அதன்    அப்போதைய   தலைவர் அ.மயில்வாகன்    தலைமையில்    நீர்கொழும்பில்   நூல்களும்    வர்த்தக    அன்பர்களிடம்   நிதியும்   சேகரித்தோம்.    பின்னர் பம்பலப்பிட்டி    சரஸ்வதி    மண்டபத்தில்   நடந்த   பொதுக்கூட்டத்தில்    நிதியுட்பட     சேகரிக்கப்பட்டவற்றை  கட்டிடக் கலைஞர்  வி. எஸ்.துரைராஜா    முன்னிலையில்   வழங்கினோம்.

1983   இனவாத  வன்செயலினால்   நானும்     குடும்பமும்   உறவினர்கள்    எவருமில்லாத   யாழ்ப்பாணம்     அரியாலைக்கு இடம்பெயர்ந்தபோது    எம்முடன்     எனது    சேகரிப்பிலிருந்த பெருந்தொகையான     நூல்களும்    இதழ்களும்    (சுமார் பத்துப்பெட்டிகள்)    இடம்பெயர்ந்தன. 1984    இல்    தமிழ்நாடு   சென்றபோது    ஏப்ரில்மாதம்    சென்னை ஏ.வி.எம்மின்   ராஜேஸ்வரி   கல்யாண    மண்டபத்தில்   நடந்த இலக்கியச்சிந்தனை   விழாவில்    முன்னணி    எழுத்தாளர் சுஜாதாவை    சந்தித்து    உரையாடினேன்.    அவர்    யாழ். பொது நூலக எரிப்பை     கருவாகக்கொண்டு   இலட்சம்  புத்தகங்கள்   என்ற அருமையான    சிறுகதையொன்றை    படைத்திருந்தார். கேள்விஞானத்தில்    எழுதப்பட்ட   குறிப்பிட்ட    சிறுகதையை    அவர் எழுதிய   பின்னணி    குறித்து   கேட்டறிந்து    பின்னர்    வீரகேசரியில் தமிழகப்பயணம்      பற்றி    எழுதியபோது   பதிவுசெய்தேன்.

 1986   இறுதியில்   நல்லூர்   நாவலர்     மண்டபத்தில்   நடந்த இலங்கை   முற்போக்கு    எழுத்தாளர்    சங்க    மாநாட்டின்போது சந்தித்த   நண்பர்   புதுவை ரத்தினதுரை    கேட்டுக்கொண்டதற்கு இணங்க    யாழ்ப்பாணத்திற்கு   என்னுடன்    இடம்பெயர்ந்த     அனைத்து    நூல்கள்  –   இதழ்களையும்   அவர்களின்   இயக்க நூலகத்திற்குக்கொடுத்தேன்.

 புதுவை ரத்தினதுரையும்     மலரவனும்   ஒரு   வாகனத்தில் அரியாலைக்கு    வந்து   பெற்றுக்கொண்டனர்.     பைண்டிங் செய்யப்பட்ட    கணையாழி  –   தீபம்   இதழ்களின்   தொகுப்பு  மற்றும்  பல    அரியநூல்கள்    தற்போது   எங்கே   எப்படி    இருக்கின்றன  என்பது    தெரியாது.   ஆனால் –   அவை   பற்றிய   நினைவுகள் இன்றும்   என்னுள்    தொடர்ந்தவண்ணம்    இருக்கின்றன.

 1987   இல்   அவுஸ்திரேலியா  வந்தபின்னரும்    விட்ட   குறை    தொட்ட   குறையாக   நூல்கள்  –   இதழ்கள்  படிப்பு   –  சேகரிப்பு குறைந்தபாடாயில்லை.    நீர்கொழும்பில்   நான்   விட்டுவிட்டு    வந்த எஞ்சிய   நூல்கள்   பலவற்றை    எனது   ஆரம்ப   கால    பாடசாலை, விஜயரத்தினம்   இந்து    மத்திய   கல்லூரிக்கு    கொடுத்துவிட்டேன். கடந்த   2011   ஆரம்பத்தில்    வன்னி   சென்றபோது   நாம் அவுஸ்திரேலியாவிலிருந்து    இயக்கும்   இலங்கை   மாணவர்  கல்வி நிதியத்தின்   நிதிக்கொடுப்பனவுகளை   வழங்குவதற்கு முள்ளியாவளை     வித்தியானந்தா     கல்லூரிக்கும்    சென்றிருந்தேன். அவுஸ்திரேலியாவில்     அந்தக்கல்லூரியின்    சில   பழைய மாணவர்கள்    அங்கு    நூல்நிலையத்தை    புனரமைக்கும்    பணிகளை மேற்கொண்டு     வருகிறார்கள்.    இதனை    அறிந்து    சில    நண்பர்கள் ஊடாக     முத்தையன்கட்டு   அன்பு     இல்லத்திற்கும்    வித்தியானந்தா கல்லூரிக்கும்    எனது    சேரிப்பிலிருந்த    சில    நூல்களையும் என்சைக்கிளோபீடியா    பிரிட்டானிக்கா    தொகுப்புகளையும் அனுப்பிவைத்தேன்.

எங்களுக்கோ   இங்கு    கணினி   ஊடாக    கூகுளில்   தேடினால் தகவல்கள்    உடனடியாகக்   கிடைத்துவிடும்.    ஆனால்    அதற்கான வசதி    வாய்ப்புகள்    குறைந்த    வன்னிப்பிரதேச    மாணவர்கள் பயன்படுத்துவதற்கு    அவை    பெரிதும்    உதவும்   என   நம்புகின்றேன்.    இதுவிடயத்தில்     இங்குள்ள    எனது   குடும்ப    நண்பர் கருணாகரன்    என்ற   பொறியிலாளரும்    எமக்கு    உதவினார். நண்பர்கள்    நவரத்தினம்    இளங்கோ   –   சுந்தரமூர்த்தி ஆகியோர்    தாம்    சேகரித்த    பொருட்களுடன்    அந்த   தொகுப்புகளையும்  ஒரு கொள்கலனில்    வன்னிக்கு    அனுப்பிவைத்தனர்.

 1998-99   காலப்பகுதியில்    அவுஸ்திரேலியா    மெல்பனில்   எனக்கு நன்கு    அறிமுகமான    மருத்துவர்   பொன். சத்தியநாதன்   ஒன்றிய தமிழர்   தோழமைக்கழகம்    என்ற    அமைப்பை    தொடங்கினார்.  நாம்   2001    ஆம்    ஆண்டு    முதலாவது    தமிழ்    எழுத்தளார்    விழாவை    மெல்பனில்    நடத்தியதன்    பின்னர்    அதன் அருட்டுணர்வோடு    அவர்    சிட்னி   –   தமிழ்நாடு – மலேசியாவிலிருந்தெல்லாம்    அறிஞர்களை    வரவழைத்து    ஒரு மாநாடு    நடத்தினார்.    அதுதொடர்பாக    முதலில்    நடந்த ஆலோசனைக்கூட்டத்திற்கும்    அழைப்பு   விடுத்து    எனது கருத்துக்களை    கேட்டார்.

  காற்றிலே   பேசிவிட்டுப்போகாமல்    ஏதாவது    உருப்படியான திட்டங்கள்    நடைமுறைப்படுத்தப்படுமானால்   அதற்கு    என்னால் இயன்ற    ஆதரவும்    ஒத்துழைப்பும்   வழங்குவேன். –   என்றேன். மருத்துவக்கலாநிதி    பொன். சத்தியநாதன்   தமிழ்   உணர்வாளர். பற்றாளர்.    கணினியில்   தமிழ்   பற்றிய    சில   பரிசோதனைகளையும்    மேற்கொண்டவர்.     தமிழ்   உலகம்  –  Tamil World     என்ற    இரு மொழிப்பத்திரிகையையும்    சிலமாதங்கள் நடத்தியவர்.     குமுதம்    தீராநதியிலும்    அவரது    நேர்காணல் வெளியாகியிருக்கிறது.      அவருக்கு     மெல்பனில்   ஒரு  தமிழ் நூலகம்    அமைக்கும்   யோசனை    இருந்தது.    அவரிடம்    ஏராளமான நூல்களும்    சேகரிப்பிலிருந்தன.    அவரிடம்   கட்டிடமும்    இருந்தது. நிதிவசதியும்   அப்போதிருந்தது.

 ஏற்கனவே    மெல்பனில்    ஈழத்தமிழ்ச்சங்கம்   கிளேய்டன்  (Clayton) என்னுமிடத்தில்     தொடங்கிய    தமிழ்   நூல்   நிலைய   திறப்பு நிகழ்வுக்கும்    சென்றிருக்கிறேன்.   உள்ளுர்    கவுன்ஸிலர்கள் கலந்துகொண்ட   இந்நிகழ்வு    அளித்த     நம்பிக்கை  –   காலப்போக்கில் அந்நூல் நிலையம்     இயங்காமல்   போனதும்    தளர்ந்துவிட்டது.

 அதன்    பிறகு    நண்பர்    மாவை    நித்தியானந்தன்   தொடக்கிய மெல்பன்   கலை   வட்டம்    மற்றும்    பாரதி   பள்ளி   ஆகியன   இணைந்து    ஓக்லி   (Oakleigh ) என்னுமிடத்தில்    கவுன்ஸில்    நடத்தும் பொது    நூலகத்தில்    தமிழ்ப்பிரிவு   ஒன்று கோலாகலமாகத்தொடங்கப்பட்டது.    இந்நிகழ்விலும் கலந்துகொண்டதோடு    1999   இல்   இலங்கை  சென்று    திரும்பும்போது நண்பர்    மாவை   நித்தியானந்தன்   கேட்டுக்கொண்டதற்கிணங்க    பல புத்தம்   புதிய    நூல்களை   கொழும்பில்    கொள்வனவு  செய்துகொண்டு வந்து    கொடுத்தேன். ( எனக்கு   வீட்டிலே  புத்தகம்   காவி   என்று   ஒரு   பட்டப்பெயர் உண்டு)

 சத்தியநாதன்    நடத்தவிருந்த   மாநாட்டின்   தொடர்ச்சியாக   நூல் நிலையம்    அமைப்பது   தொடர்பாக    அவர்    முயன்றால்   அதற்கு ஒத்துழைப்பு    வழங்கத்தயார்    என்று    வாக்குறுதி   கொடுத்தேன். அதன்    பிரகாரம்   மாநாடு   முடிந்து   சில    மாதங்களில்   அவரது கட்டிடம்    ஒன்றில்    சிறப்பான   முறையில்    நூல்நிலையம்   அவரது தாயாரால்    திறந்துவைக்கப்பட்டது.   பத்து  டொலர்கள் அங்கத்துவப்பணத்துடன்    ஆரம்பமான   இந்நூல்   நிலையத்தில் கணிசமானவர்கள்    உறுப்பினர்களாகச்சேர்ந்தார்கள்.   தினமும்   காலை    முதல்   மாலை   வரையில்   திறந்திருந்த   இந்நூல் நிலையத்திற்கென    ஒரு    அன்பரை   ஊழியராகவும்   நியமித்து அவருக்குரிய    வேதனத்தை    சத்தியநாதன்   வழங்கினார்   என்பது குறிப்பிடத்தகுந்தது.

 இந்த    நாட்டில்   மட்டுமல்ல    எந்தநாட்டிலும்    ஏதாவது   பொது வேலைகளில்    எவராவது   உருப்படியான   யோசனை    சொன்னால் அவரது    தலையிலேயே   அந்த  யோசனைகளை நடைமுறைப்படுத்தும்    பொறுப்பு   சுமத்தப்பட்டுவிடும்   என்பது  நான்    நடைமுறை   வாழ்வில்    கண்டுகொண்ட    உண்மை. சத்தியநாதன்    அவர்களினால்    தொடங்கப்பட்ட    அந்த   நூலகத்தின் செயலாளராக    நான்   தெரிவுசெய்யப்பட்டேன்.    நானும்   நண்பர்கள் சிவானந்தன்  –   பாடும் மீன்   ஸ்ரீகந்தராசா   –   கொர்னேலியஸ்  –   சகோதரி அருண்.விஜயராணி   ஆகியோர்    தொண்டு    அடிப்படையில்   இங்கு நூலகர்களாக   இயங்கினோம்.

 காலம்   சக்கரம்பூட்டாமலேயே   உருண்டோடும்.    வேதனைகளையும்    சோதனைகளையும்   சந்திக்கும்.   காலத்தின் கோலமோ   என்னவோ   சத்தியநாதன்   அவர்கள்   திடீரென்று நூல்நிலையத்திலிருந்த   அனைத்து    நூல்களையும்  வேறும்   சில பொருட்களையும்    ஒரு   கொள்கலனில்    ஏற்றி    வன்னிக்கு அனுப்பிவிட்டார்.  2001-2002   காலப்பகுதியில்   இயங்கிய   அந்த  நூலகம்   எவருமே எதிர்பாராத    நிலையில்   மூடப்பட்டது.   அந்த   நூலகம் அமைந்திருந்த     கட்டிடத்தொகுதியும்    அகற்றப்பட்டு    அங்கே   கார்கள் தரிப்பிடம்  (Car Park)  தோன்றியிருக்கிறது.    குறிப்பிட்ட    வீதியில் அந்த    இடத்தைக் கடக்கும்போது    நெஞ்சைத்தடவிக்கொள்கிறேன்.
சிட்னிக்கு    செல்லும்    சமயங்களில்   அங்கு   தமிழ்    அன்பர்களினால் நடத்தப்படும்   நூலகத்தை   பார்வையிட்டு   ஆறுதலடைவேன்.   எனது நூல்களும்    அங்கிருப்பது   பெருமிதம்   தரும்.

 தற்போது    மெல்பனில்   எனது    வீட்டு    நூலகத்திலிருக்கும்    நான் படித்து    முடித்துவிட்ட    நூல்களை    என்ன   செய்யப்போகிறீர்கள்? என்று    எனது   மனைவி   அடிக்கடி   கேட்டுக்கொண்டிருப்பா. எனக்குப்பிறகு   இங்கே   யார்  படிக்கப்போகிறார்கள்  என்று யோசிக்கும்போது    மீண்டும்   நெஞ்சு   லேசாக   வலிக்கும்.    தற்போது    நண்பர்களுக்கு    கொடுத்துக்கொண்டிருக்கின்றேன்.

 எங்கள்    ஊரிலிருந்து    சற்றுத்தொலைவில்    ஒரு    பிரதேசத்தில் கேசி   தமிழ்   மன்றம்   என்ற   அமைப்பு   கடந்த    சில   வருடங்களாக தைப்பொங்கல்   விழா    உட்பட    சில    தமிழ்    நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றது.    அந்த    அமைப்பைச்சேர்ந்தவர்களுக்கும் அந்தப்பிரதேசத்தில்   ஒரு   தமிழ்   நூலகம்   அமைக்கவேண்டும் என்ற    கனவு    நீண்ட  நாட்களாக   இருக்கிறது.   இதுபற்றி   நண்பர் ஆவூரான் சந்திரன்    என்னிடம்   ஒருநாள்   சொன்னார்.   அந்த அமைப்பின்    செயலாளர்    சிவசுதன்   அவர்களுடன்    தொடர்பை ஏற்படுத்திவிட்டார்.    கணிசமான    புத்தகங்களை   அவர்களுக்கு வழங்கிவிட்டேன்.

 எனது    இந்த    இயல்புகளை    அருகிருந்து அவதானித்துக்கொண்டிருக்கும்   மனைவியுடன்   ஒருநாள்  உரையாடிக்கொண்டிருக்கும்போது   மீண்டும்   எனது    சேகரிப்பு நூல்களை    என்ன    செய்வது    எனக்கேட்டேன்.    அப்போது    தனது கனவொன்றை   அவள்   சொன்னாள்.  இலங்கையில்   ஊரில்   இருக்கும்   தனது   வீட்டை    தனக்குப்பிறகு ஒரு   நூலகமாக்கப்போவதாகவும்     அதற்கு   எனது   சேகரிப்புகள் தேவைப்படும்    என்றும்.   உலகத்திலேயே   அழிக்க   முடியாதது அறிவுதான்.   எனவே   அழிவற்ற   சொத்து   எவருக்கும்   பயன்படும். என்றும்   சொன்னபோது   மனநிறைவேடு நெஞ்சைத்தடவிக்கொண்டேன்.

 எனக்குக்கிடைக்கும்   புதிய   நூல்கள்   பற்றி   அவ்வப்போது   படித்தோம்   சொல்கிறோம்   என்ற    தலைப்பில்  எழுதிவருகின்றேன். சுமார்   பத்து   ஆண்டுகளுக்கும்   மேலாக   இங்கு   வெளியான உதயம்   இதழில்   நூலகம்    பகுதியில்    பல   நூல்கள்  –   இதழ்கள்பற்றிய    அறிமுகக்குறிப்புகள்   எழுதியிருக்கின்றேன்.

 இதனை    எழுதிக்கொண்டிருந்த   வேளையில்    ‘இணையத்தில் ஓர் ஈழத்தமிழ் நூலகம்   www.noolaham.org       என்ற   எண்ணிம ஆவணக்காப்பகம்    நடத்தும்    அதன்    இயக்குநர்களில்   ஒருவரான மேற்கு    அவுஸ்திரேலியாவில்   பேர்த்தில்    வதியும்   நண்பர் கோபியின்    மின்னஞ்சல்    வந்தது.    குறிப்பிட்ட   இணைய  நூலகத்தின்   பணிகள்  –    பயன்கள்  –   சாதனைகள்   பற்றியும்      பதிவுசெய்திருக்கின்றேன்.

letchumananm@gmail.com