பண்டைக் காலத்தில் இருந்தே தேவதாசி முறை வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. தேவதாசி முறைகளை ஒழிக்கப் பலரும் பாடுபட்டுள்ளனர். அவர்களுள் சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பெரிதும் தீவிரம் காட்டியுள்ளனர். சுயமரியாதை இயக்கக் கொள்கைகளில் தேவதாசி ஒழிப்பு முறையும் ஒன்றாகும். 1926-இல் டாக்டர் முத்துலெட்சுமி சென்னை மாகாண சட்டசபையில் அங்கம் வகித்தப்போது இச்சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. டாக்டர் முத்துலெட்சுமி அவர்களால் 1929-ஆம் ஆண்டில் மீண்டும் தேவதாசி ஒழிப்பு முறைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அவ்வாறு தேவதாசி ஒழிப்பு முறைச்சட்டம் குறித்த விவாதங்கள் நிகழ்ந்து வரும் தருவாயில் தேவதாசி ஒழிப்பு முறையைப் பற்றிய நாவல் 1936-ஆம் ஆண்டில் இராமாமிர்தத்தம்மாளின் நாவல் வெளிவந்தது. இந்நாவலில் தேவதாசி ஒழிப்பு முறையைப் பற்றி மிகத் தெளிவாகப் படைத்துள்ளார். இதற்குத் தாசிகளிடம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. அதன் பிறகு தேவதாசிகளும்; இணைந்தே இச்சட்டத்தை முன்னெடுத்துச் சென்ற நிகழ்வுகளைப் பதிவு செய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தேவதாசிப் பொருள் விளக்கம்:
தேவதாசி- தேவடியாள்; தேவ + அடியாள் = தேவடியாள். தேவதாசி, தேவடியாள், கலைப்பெண்டு,விலைமகள், பரத்தை முதலிய பெயர்கள் இவர்களுக்கு உண்டு. “தேவதாசி என்ற சொல்லுக்குத் தெய்வத்துக்கு அடிமை பூண்டவள் என்பது பொருள். தாசி என்பது வட சொல். இதற்கு அடியவர் என்பது தமிழில் பொருள். தமிழில் குறிப்பிடப் பெறும் ‘தேவரடியார்’ என்ற சொல் ‘தேவதாசி’ என்ற வடமொழி சொல்லுக்கு ஒப்பாகும். தேவரடியார் என்பது தேவருக்கு அதாவது இறைவனுக்கு அடியவராக இருந்து பணி செய்பவரைக் குறிக்கும்”.1 என்று தேவதாசி முறைக்கு விளக்கமளிக்கிறார் முருகேசன். மேலும் பொட்டுக் கட்டுதல் என்பதைப் பற்றி, “பொட்டுக் கட்டுவது என்பது ஒரு பெண் தேவதாசியாக மாற்றப்படுவதன் அடையாளச் சடங்காகும். பொட்டு என்பது திரு மாங்கல்யத்திற்கு இணையானதாகும். ஒரு பெண் தேவதாசி ஒருத்திக்குப் பிறந்து விட்டால் மட்டுமே அந்தத் தேவதாசி உரிமையை அவள் பெற்றுவிட முடியாது. முறைப்படி பொட்டுக்கட்டு மூலம் அவளைக் கடவுளுக்கு அர்ப்பணிப்பதன் மூலமே அவள் தேவதாசி ஆகமுடியும்.” 2 என்றும் விளக்கம் அளிக்கிறார்.
தேவதாசிக் குலத்தில் ஆண் அடிமை:
தேவதாசிக் குலத்தில் ஆண் பிறந்தால் அந்த ஆண் தாசிகளுக்கு அடிமையாகத்தான் இருக்க வேண்டும். அவர்கள் சுட்டும் பணிகளைச் செய்து முடிக்க வேண்டும் என்ற கடமை அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. இது குறித்துக் கருணாகரன் குறிப்பதாவது, “தாசி வீட்டில் ஆண் பிள்ளையாய்ப் பிறக்கும் கொடுமைகளையும் தனக்கு வேறு தொழில் செய்யத் தெரியாத நிர்க்கதியையும் ஆண்களுக்குச் சொத்துரிமை இல்லா கொடுமைகளையும், அவர்கள் இஷ்டப்படி நடக்காவிட்டால் சோறு போடாது வெளியில் விரட்டும் கொடுமைகளையும் நினைத்தான். மற்றசாதியில் பெண்ணாய்ப் பிறப்பதைவிட மண்ணாய்ப் பிறக்கலாமென்று சொல்வது போல், இந்தச் சாதியில் ஆண் மகனாய்ப் பிறப்பதை விட மண்ணாய்ப் பிறக்கலாமென்பதை உலகமறியவில்லை போலும் என்று நினைத்துருகி நின்றான்”.3 என்றவாறு தேவதாசியர் குல ஆணின் அடிமை நிலையினைப் பதிவு செய்கிறார். ஆண்கள் இந்தச் சாதியில் சுயமாகச் சிந்திக்கும் திறன் இல்லாமல் முடக்கப்பட்டும் அவர்களின் எண்ணப்படி வாழ வழியில்லாமலும் இருக்கின்றனர். ஆனாலும் இவ்வினத்தில் ஆணுக்குப் பெண்குழந்தை பிறந்தால் தேவதாசித் தொழிலுக்கு அனுமதிப்பதில்லை எனும் வழக்குமுறையினையும் இந்நாவல் புலப்படுத்துகிறது.
வறுமை:
பெண்கள் தாசித் தொழிலுக்கு வருவதற்கு வறுமையும் ஒரு காரணமாக விளக்கியுள்ளது. வறுமையின் காரணமாகத் தாய் தனது குழந்தையைத் தாசியின் வீட்டில் விற்றுவிட நினைக்கிறாள். தாசியிடம் விற்கப்படும் நிலையை அறிந்த அக்குழந்தை தம் தாயிடம் தொடுக்கும் விவாதங்களை இந்நாவல் பின்வருமாறு பதிவு செய்கிறது. “உன் தாயார் ஏழைதானே- உன்னைத் தாசித் தொழிலுக்கு விட வேண்டாமென்றதை நீயேன் தடுத்தாய்? அந்தத் தொழில் இழிவென்று தானே விவாகம் செய்து கொண்டாய்? நீ மாத்திரம் இழி தொழில் செய்யக் கூடாது. நான் மாத்திரம் இந்தத் தொழில் செய்யலாமா? உன்னுடைய இழிவு உனக்குத் தெரிந்ததே ஒழிய உன் தாயின் கஷ்டம் உனக்குத் தெரியவில்லையே யல்வவா? அப்படியே உன் கஷ்டம் எனக்கு எப்படி தெரியும்? உனக்குள்ள மானம் எனக்கில்லையா? மற்ற ஏழைகள் தங்கள் பெண்களைத் தாசித் தொழிலுக்கா விடுகிறார்கள்?””4”
ஆனாலும் தாய் வறுமையின் காரணமாகக் குழந்தையைத் தாசித் தொழிலுக்கு விற்றுவிட்டுச் செல்கிறாள். அந்தத் தாசி அக்குழந்தையை வளர்க்கும் போதே தாசித் தொழிலுக்கான சூழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் சொல்லியும் ஆண்களை எவ்வாறு கவருதல் போன்ற தொழில் அணுகுமுறைகளைச் சொல்லி வளர்க்கிறாள். ஆனால் விவேகவதி என்ற பெண் இந்தத் தொழிலில் ஈடுபடாமல் வீட்டை விட்டு வெளியேறி, தேவதாசி ஒழிப்பு முறைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொள்கிறாள். இது குறித்து நாவல் பதிவு செய்யும் கருத்தொன்று பின்வருமாறு சுட்டுகிறது.
“தாசித்தொழில் செய்வதை அடியோடு ஒழித்து விடுமாறு சில பெண்களைத் திருத்தினாள். தாசி என்ற பெயருக்குக் காரண பூதமான பொட்டு என்ற சின்னத்தை அறுத்துக் குறிப்பிட்ட புருஷர்களைத் திருமணம் புரியும் ஏற்பாடு செய்து வந்தாள். இவைகளைக் கண்ட தாசிகளும் தாசிகளுக்கு அடிபணியும் தாசித் தொழிலுக்கு ஆபத்து வந்துவிட்டாய் விவேகவதியை எதிர்த்தார்கள். ஒன்றும் பலிக்கவில்லை. விவேகவதியின் சீர்திருத்த முறைக்கு இதர சீர்திருத்தக்காரர்களும் உற்சாகத்தை ஊட்டி வந்தார்கள். இரண்டொரு தீவிர சமூகச் சீர்திருத்த நோக்கமுடைய தோழர்களின் உதவியால் பொட்டறுப்புச் சங்கம் ஒன்று காணப்பட்டது. இதன் ஆதரவில் கலப்பு மணங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சில தாசிப் பெண்கள் பொட்டை அறுத்து விட்டுக் கலப்புமணம் செய்ய முன் வந்தனர்.””5”
தாசியின் சொல் உயர்வு ஏழைகளின் சொல் தாழ்வு:
தாசிகளிடம் அழைப்பு வந்ததும் உழைத்தவர்களுக்குக் கூலி கொடுக்க மறுத்து விட்டு உழைப்பைச் சுரண்டும் பார்ப்பனர் தம் நிலையினைக் கீழ்வரும் பதிவு மூலம் நாவல் விளக்கிச்செல்கிறது. “பகல் பூராவும் பட்டினி கிடந்து வேலை செய்த ஆள்கள் என்ன செய்வார்கள்? எஜமானே இன்று கூலி வாங்காது போய் இரவு சாப்பாட்டிற்கு என்ன செய்வோம்? பிள்ளைக் குட்டிகள் பட்டினி கிடக்குமே சாமி! தயவு செய்து ஏதேனும் கூலிகொடுங்கள் ஆண்டே” என்றார்கள். பிள்ளை வாள் காதில் பட்டினி கிடக்கும் ஏழைமக்கள் சொல்ஏறுமா? தடிப்பயல்களே! பறையருக்கெல்லாம் வரவரக் கொழுத்துவிட்டது. ஒருநாள் பட்டினி கிடந்தால் உயிர் போய்விடுமா? நல்ல உயிர் 48நாள் இருக்கமென்பார்கள். கழுதைகளே போங்கள்” என்று சொல்லிவிட்டு ஐயோ நம் காதல் நாயகி நாம் வராவிட்டால் பட்டினி கிடப்பதாய் சத்தியம் செய்து எழுதியிருக்கிறாளே! சீக்கிரம் போக வேண்டும்’ என்று எண்ணினார்”.6 என்ற வரிகள் ஏழைகளை ஏளனப்படுத்தும் தன்மையையும் தாசிகளின் உயர்வுநிலையினையும் விளக்குகின்றன. ஏழையின் உயிர் மதிப்பற்றும், தாசிகளின் உயிர் உயர்வாகவும் மேலும் உழைப்பவருக்குக் கூலிமறுப்பு, உழைக்காதவனுக்குப் பணம் எனும் தொழிலாளி,முதலாளி வர்க்க பேதத்தையும் நாவலாசிரியர் சுட்டுகிறார். பெரும் பெரும் முதவாளித்துவப் பண்ணைகள் தம் உடற்புணர்ச்சிக்காக ஏழைகளைச் சுரண்டுவதையும் அதே வேளையில் தங்களிடம் வரும் ஆண்கள் மீது தாசியர் கொள்ளும் உண்மைக்காதல் உறவு நிலையையும் ஒருசேர உணர்த்துகிறார் நாவலாசிரியர்.
தாசி வீட்டில் பிராமணன் அடிமை:
பிராமணன், பிராமணர் அல்லாதார் உழைத்துப் போட உட்கார்ந்து உண்ண வேண்டும் என்ற நிலையினைப் பின்பற்றும்படிச் செய்தனர். ஆனால் தாசிகளின் வீட்டில் பிராமணர்களின் நிலை வேறு. அவை:
1. தாசிகள் வாயால் வந்தபடிப் பேசுவார்கள்.
2. தங்கள் வீட்டு வேலைகளை அவர்களைச் செய்யச் சொல்வார்கள்.
3. மற்றவர்கள் மோட்சத்தை விரும்பிப் பிராமணர்களுக்குக் கொடுக்கும் தானங்களைத் தாசிகளுக்கும் கொடுத்து விடுவார்கள். அவர்களும் வாங்கிக் கொள்வார்கள்.
4. கோவில்களுக்கு அபிஷேகத்திற்குக் கொடுத்தால் சுவாமிக்கு நைவேத்தியமாவதற்கு முந்தியே கோபம் வந்துவிடுமென்று தாசிகளுடைய வீடுகளுக்கு எடுத்து அனுப்பிவிடுவார்கள்.
5. தாசிகள் தங்கள் பிழைப்பிற்கும் பணியாளர்களாய் பிராமணர்களை ( மாமாக்களாக) நியமித்துக் கொண்டுமிருக்கிறார்கள்.7
தாசிகளுக்கு முதுகெலும்பாய் இருப்பவர்கள் பிராமணர்களே. தாசிகளின் வீட்டில் பிராமணன் ஒரு சமையல் வேலை செய்யும் அடிமையாகவும் இருந்திருக்கிறான். ஜமீன், பிரபு அவர்களுக்குக் கீழ்நிலையில் அதாவது அரசர்,அந்தணர்,வணிகர், வேளாளர் என்ற அடிப்படையில் அரசர்களுக்கு அடுத்த நிலையில் தான் இருந்திருக்கின்றனர் என்பதை,
“நம் வீட்டில் பிராமணர் சமையல் தான்”.8
என்ற வரி மூலம் பிராமணர்கள் தாசிகளுக்கு வேலை பார்ப்பவர்களாக இருந்திருக்கின்றனர் என்பது தெளிவாகின்றது.
தேவதாசிகளின் ஏளனமுறைகள்:
தேவதாசி ஒழிப்பு முறை திட்டத்தைப் பற்றிச் செய்தித்தாளில் வெளிவந்த நிலையில் தேவதாசியான போகச்சிந்தாமணி என்பவள் நாளேடு படிக்கும் வழக்கம் உடையவள். தாசிகளில் ஒருசிலருக்கு மட்டும் வாசிக்கத் தெரியும் அளவிற்குக் கல்வியறிவு பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தாசிகள் கல்வி கற்றதனின் நோக்கமே சீர்த்திருத்தம் தொடர்பான செய்திகள் பத்திரிக்கைகளில் வந்துவிட்டால் அதை வைத்துக் கொண்டு ஏளனம் செய்து கொண்டிருப்பார்கள். இவற்றைப் பற்றி, “நம் ஜாதி முறையைக் கெடுக்க டாக்டர் முத்துலெட்சுமி தோன்றினாள். அவளோடு சில சிறுக்கிகள் சேர்ந்துகொண்டு கூத்தாடுகிறார்கள். இவர்கள் நம் ஜாதியை இழிவாய்ப் பேசுகிறதினால் தானே சில காலிகள் இழிவாய் எழுதுகிறார்கள்”.9 என்று வஞ்சித்துப் பேசினாள். தேவதாசிகள் அன்று கல்வி கற்றவர்களாக இருந்திருந்தனர். இவர்கள் கல்வியால் அவர்களுக்கு வரும் கடிதம், பத்திரிக்கை போன்றவற்றை அவர்களே படித்துத் தெரிந்து கொள்ள முடிந்தது. தேவதாசிகள் தங்கள் விடுதலையைத் தாங்களே முன்னெடுப்பதற்கு அவர்கள் பெற்ற கல்வி துணை நின்றும் வந்துள்ளது.
தேவதாசிக் குலத்தில் பிறந்தவர்கள் சீர்திருத்தக் கொள்கைகளைப் பரப்புதல்:
தேவதாசிக் குலத்தில் பிறந்த குணபூஷணி என்பவள் தேவதாசி முறையை ஒழிக்கப் போராடி அவரிடம் வருபவர்களுக்கு இத்தொழிலில் உள்ள சதித்திட்டங்களைக் கூறி அவர்களை நல்வழிப்படுத்துகிறாள். பிறகு தேவதாசி ஒழிப்பு முறைகளுக்கு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து தேவதாசி முறையினால் ஜமீன், பிரபுக்களுக்கு ஏற்படும் பொருள் இழப்புக்களை எடுத்துக்கூறும் விதமாகத் தெளிவு படக் கூறப்பட்டது. மேலும், தேவதாசி ஒழிப்பு முறை, “டாக்டர் முத்துலெட்சுமியின் தீவிர ஆதரவினால் Dedication Prevention Act 1929 தேவதாசி சட்டம் முன் வடிவு நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து 1947ஆம் ஆண்டின் சட்டம் எண் 31 தேவதாசி ஒழிப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. கோயிலுக்குப் பெண்களை அர்ப்பணிப்பதைக் கர்நாடகம் 1982இல் சட்டம் மூலம் தடைசெய்தது. ஆந்திரபிரதேசமும் 1987இல் இதனைப் பின்பற்றியது”.10 என்று தேவதாசி ஒழிப்புமுறை நடைமுறையில் 1947க்குப் பிறகுதான் தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இந்நாவலில் 1936இல் தேவதாசி ஒழிப்பு முறை பற்றி மிகத்தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது. அதை நிறைவேற்ற 6 தீர்மான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவை: 1. தெய்வங்களின் பேரால்பெண்களுக்குப் பொட்டுக்கட்டும் அர்த்தமற்ற மானக்கேடான வழக்கத்தை நிறுத்தித் தேவதாசி முறையை அடியோடு ஒழிக்க வேண்டும்.
2. இனிமேல் தேவதாசி பெண்கள் எல்லோருக்கும் கல்யாணம் செய்ய வேண்டும். அச்சமூகத்தில் கலியாணமாகாத பெண்களே இருக்கக் கூடாது. சமூக முன்னேற்றங்கருதும் ஏனைய சமூக வாலிபர்கள் இச்சமூகப்பெண்களை மணக்க முன்வர வேண்டும்.
3. இப்போது கோவிலுக்குப் பொட்டுக்கட்டி விட்டிருக்கும் பெண்கள் கலப்புமணம் செய்துகொள்ளல் நலம் மறுமணம் செய்து கொள்ள வேண்டிய நிலையிலுள்ள ஆண்கள் இவர்களையே கலியாணம் செய்து கொள்ள வேண்டும்.
4. தேவதாசிச் சமூகத்தில் பிறந்த ஆண்கள், பெண்கள் எல்லோருக்கும் ஆரம்பக் கட்டாயக் கல்வியும் உயர்தரக் கல்வி வசதியும் ஏற்படுத்த வேண்டும்.
5. கலியாணம் – திருவிழா – விருந்து முதலிய வைபவங்களில் காம உணர்ச்சியை எழுப்புவதற்குக் காரணமான சிங்கார பதங்களோடு கூடிய பரத நாட்டியம் முதலியவற்றிற்கு ஆதரவு அளிக்கக் கூடாது.
மேற்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றி வைக்க தேவதாசிகள் முன்னேற்றச்சங்கம் நிறுவப்படுகிறது என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது”.11
இந்நாவலில் பெண்களில் சிலர் தேவதாசித் தொழிலில் ஈடுபடாமல் இருக்க அவர்களையே கண்காணிப்பு நடத்த ஏற்பாடு செய்தனர் என்பது கூறிப்பிடத்தக்கது.
முடிவுகள்:
• தேவதாசி முறை ஒழிந்து அச்சமூகம் முன்னேற்றம் அடைய வேண்டும். அவர்களால் கூடாஒழுக்கத்தில் ஈடுபட்டுத் தங்கள் வாழ்க்கையை இழப்பதோடு மனைவி மக்களையும் குழந்தைகளையும் திண்டாடச் செய்யும் வாலிபர்களின் வாழ்க்கை சிறந்து விளங்க வேண்டும்,என்ற கருத்து இந்நாவலின் சிறந்த கருத்தாகும்.
• பெண்களைக் கடவுளுக்குப் பொட்டுக்கட்டுதல், விபசாரம் முதலிய அநாகரிக முறையை ஒழிப்பதற்காக உழைத்தவர் டாக்டர் முத்துலெட்சுமி என்று கூறுவதோடு மட்டுமல்லாமல் இந்நாவலின் வழி ராமாமிர்தத்தம்மாளும் தேவதாசி ஒழிப்பு முறையை மக்களுக்கு வழியுறுத்தியுள்ளார்.
• தேவதாசி முறை என்பதைத் தடை செய்ய நினைத்தவர்கள் அந்தக் குலத்தில் பிறந்தவர்கள்தான் பெரும்பான்மையான தேவதாசியர் இப்போராட்டத்தில் ஈடுபட்டுத் தேவதாசி முறையைத் தடை செய்ய நினைக்கின்றனர். அவர்களின் துயரம்தான் இவர்களை அத்தொழிலுக்கு முட்டுக்கட்டைப் போட ஆரம்பித்தது என்று மிகத் தெளிவாக இந்நாவல் முன்வைக்கிறது.
• தேவதாசி ஒழிப்பு முறைக்கு இந்நாவல் தீவிரம் காட்டியுள்ளதை இந்நாவலின் உட்பொதிவுகள் புலப்படுத்துகின்றன.
துணைநூல்கள்:
1. முருகேசன், வரலாற்றில் தேவதாசிகள், ப. 91
2. மேலது, ப. 110
3. இராமாமிர்தத்தம்மாள், மூவலூர்.,தாசிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர், ப. 248
4. மேலது,ப. 245
5. மேலது, ப. 265
6. மேலது,ப. 166
7. மேலது, ப. 77
8. மேலது, ப. 137
9. மேலது, ப. 150
10. முருகேசன், வரலாற்றில் தேவதாசிகள், பக். 130-131
11. இராமாமிர்தத்தம்மாள், மூவலூர்., தாசிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்,பக். 303-304
– அ.அனுடயானா, முனைவர்பட்ட ஆய்வாளர், பெரியார் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி-24. – anudiana.a@gmail.com